- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 12 June 2011

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 4 (இறுதிப்பகுதி)


சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்
சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 2 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்
சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 3 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்

உ) புனையுருவணி (Apostrophe)
இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து அதனோடு பேசுவதற்காக உபயோகிக்கப்படும் உருவகம் “புனையருவணி (Apostrophe) என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தான் எழுதுவதற்கு எவராவது மறுப்பு தெரிவித்தால் அதற்கும் பதிலளிப்பதற்காக அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வுருவகத்தை 1 கொரிந்தியர் 15:36-37 உபயோகித்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.  பவுல் இவ்வசனங்களில்  கற்பனையில் ஒரு எதிரியை உருவாக்கி அவனோடு பேசுகிறார் (15)

சங்கீதங்களில் உயிரற்ற சடப்பொருளோடு பேசுவதற்கும் இவ்வுருவகம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இச்சந்தரப்பங்களில் உயிரற்ற் பொருட்கள் ஒரு நபராக உவமிக்கப்பட்டு, சங்கீதக்காரர்கள் ஒரு நபரோடு பேசுவது போல் பொருட்களுடன் பேசுகிறார்கள் (16) உதாரணத்திற்கு சங்கீதம் 68.16 இல் “உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே ஏன் துள்ளுகிறீர்கள்? என்று சங்கீதக்காரன் கேட்கிறான். சங்கீதம் 114.5-7 சங்கீதக்காரன் கடலுடனும் நதியுடனும் பூமியுடனும் பேசுகிறான். (17) இதேவிதமாக எரேமியா பட்டயத்தடனும் (எரே. 47:6) (18) பேசியுள்ளார். எனவே, இத்தகைய உருவக விபரணங்களை சொல்லர்த்தமாக எடுத்து ஆசிரியர்கள் பைத்தியக்காரத்தனமாக கற்பனைக் கதாபாத்திரங்களடனும் உயிரற்ற பொருட்களுடனும் பேசியுள்ளார்கள் என்று நாம் கருதலாகாது. இது அக்கால இலக்கியங்களில் உபயோகிக்கப்படும் உருவக விவரணத்தின்படியான பேச்சாகவே உள்ளது என்பதை நாம் கருத்திற் கொண்டு இத்தகைய வேதவசனங்களை புரிந்து கொள்ள வேண்டும். 

(ஊ) வஞ்சிப்புகழ்ச்சி (Irony)
உருவக விபரணங்களில் ஒருவனைப் புகழும் வார்த்தைகளில் அவனை இகழ்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “வஞ்சிப் புகழ்ச்சியணி (Irony) என்று அழைக்கப்படுகின்றது. இதனைப் பேச்சுவழக்கில் வார்த்தைகள் உசசரிக்கப்படும் முறையைக் கொண்டு இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். உதாரணத்திற்கு பொய் பேசும் ஒருவனைப் பார்த்து, “இவன் அரிச்சந்திரனுடைய பரம்பரையில் வந்தவன்“ எனறு கூறும்போது இவ்வார்த்தைகள் அவனைப் புகழ்வதாக இருந்தாலும், இவை அவனைப் பரிகசிக்கும் வார்த்தைகளாகவே உள்ளன. இதேவிதமாக வேதாகமத்திலும் புகழும் வார்த்தைகளில் இகழும் கூற்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு தாவீது நடனமாடியதைப் பரிகசிக்கும் அவனுடைய மனைவி, “இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்“ (2 சாமு 6:20) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணி யாகவே உள்ளது(19) இதேவிதமாக 1 ராஜாக்கள் 18:27 இல் எலியா பாகால் தெய்வத்தை எள்ளிநகையாடினான். (20) மேலும், தங்களை ஞானிகளாகக் கருதி யோபுவுக்கு ஆறுதல் அளிப்பதற்காக வந்தவர்களின் வார்த்தைகள் எவ்வித ஆறுதலையும் தராதமையால் யோபு அவர்களிடம் “ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.“ (யோபு 12:2) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணியாகவே உள்ளது. உண்மையில், உருவகவிவரணத்தை இனங்காணாவிட்டால் இகழப்படுபவர் புகழ்பாடுவதாகத் தவறான எண்ணமுடையவர்களாகவே நாம் இருப்போம். 


(எ) மனுவுருவகவணி(Anthroponmorphism) 
வேதாகமத்தில் தேவனையும் அவருடைய தன்மை மற்றும் செயல்களையும் மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவருக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். எபிரேய மொழிவழக்கில் உள்ள இத்தகைய உருவக விபரணம் மனுவுருவகவணி (Anthroponmorphism) என்று அழைக்கப்படுகிறது. கண்களால் காணமுடியாத ஆவியான தேவனை மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவரை இவ்வாறு வர்ணிப்பது எபிரேய மொழிமரபாகும். வேதாகமத்தில் தேவன் மனுவுருவக மொழியில் வர்ணிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் தேவனை அறிந்து கொள்வதற்கு  நமக்கு உதவுகின்றன. உதாரணத்திற்கு “அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன. (2 நாளா. 16:9) என்னும் விபரணம் தேவனுக்குப் பல கண்கள் இருப்பதாகவும், அவை மட்டும் தனியாக பூமியெங்கும் செல்வதாகவும் கூறவில்லை. மாறாக அவர் பூமியில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் அவதானிப்பவராக இருக்கிறார் என்பதையே அறியத் தருகின்றன. இதேவிதமாக தேவனையும் அவருடைய செயல்களையும் நாம் இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக அவருக்கு முகம் (சங். 10:11, எரே 16:17, 2 நாளா 7:16), காதுகள் (சங். 10:17, தானி. 9:18) நாசி (சங். 18:15, யாத். 15:8) வாய் (ஏசா 34:16, மீகா 4:4) கரங்கள் (உபா 11:2, யாத் 33:23, ஏசா. 50:2), முதுகு (ஏசா. 38:17, எரே 18:17), இதயம் ஆத்துமாவும் (ஆதி. 6:6, 2 நாளா. 7:16) பாதங்கள் (யாத் 24:10, ஏசா 60:13) இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விவரணங்களை வியாக்கியானம் செய்து தேவனுக்கு மானிட உருவமும் சரீரமும் நாம் கருதலாகாது. 

(ஏ)  மிருகவுருவகவணி (Zoomorphism)
வேதாகமத்தில் தேவனை வர்ணிக்கும் இன்னுமொரு உருவகமும் உள்ளது. இது “மிருகவுருவகவணி“ (Zoomorphism) என்று அழைக்க்ப்படுகிறது. தேவனுடைய தன்மையை அல்லது அவர் மனிதர்களோடு நடந்துகொள்கின்ற முறையை விளக்குவதற்காக மிருகங்கள் அல்லது பறவைகளின் தன்மை அல்லது அவயவம் அவருக்கு இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து தேவன் சிறகுகளுடனும் செட்டைகளுடனும் இருப்பதாக கருதலாகாது. இவ்வசனத்தில் தேவன் தம்முடைய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிக்கிறார். என்பதை விளக்குவதற்காக தாய்ப்பறவை தன்னுடைய குஞ்சுகளைத் தன்னுடைய செட்டைகளில் மறைத்து வைத்து அவற்றைப் பாதுகாக்கும் முறை உதாரணமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள உருவக விபரணங்களை சரியான விதத்தில் இனங்கண்டு, அவற்றின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, அவை இடம்பெறும் வேத வசனங்களின் அர்த்தத்தைப் பிழையான விதத்தில் வியாக்கியானம் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 



FootNote and References
(14) T.N. Sterrett, How to Understand Your Bible, p 90
(15)  1 கொரிந்தியர் 15:35-36 இல் “ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய  உயிர்க்கமாட்டாதே“ என்று தர்க்கத்தை பவுல் ஆரம்பித்துள்ளார்
(16) R.B. Zuck, Basic Bible Interpretation p. 152
(17) சங்கீதம் 114:5-7 இல் கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப் போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறத ற்கும், உங்களுக்கு என்ன வந்தது? 7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
(18) எரேமியா 47:6 இல் “ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு“ என்று எரேமியா பட்டயத்துடன் பேசுகிறார். 
(19) வேதாகமகாலத்து மக்களின் ஆடைகளைப் பற்றிய அறிவற்ற நிலையில், சில கிறிஸ்தவர்கள் தாவீது நிர்வாணமாக நடனமாடியதாகக் கருதுகின்றனர். ஆனால் இங்கு உள்ளாடைகளை அல்ல, மேல் வஸ்திரத்தைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. 
1 ராஜாக்கள் 18:27 இல் “மத்தியானவேளையிலே எலியா அவாகளைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment