- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 17 June 2011

ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர் பகுதி 2(இறுதிப்பகுதி)

இதன் முதற்பகுதியை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

மரணத்தின் பின்பு மானிட ஆத்துமாவும் அழிந்து போகும் எனும் தங்களது உபதேசத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வசனம் எசேக்கியேல் 18:4 ஆகும். இவ்வசனத்தில் “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மரணத்தின் பின்னர் மனிதனின் எந்த ஒரு பகுதியையும் வாழ்வதில்லை என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர் (34) ஆனால் மானிட சரீரம் மரித்தாலும் அவனில் ஆவிக்குரிய பகுதி அழியாமல் இருக்கும் எனும் உண்மையை இவ்வசனங்கள் முரண்படுத்தவில்லை. ஏனென்றால் எசேக்கியயேலினுடைய காலத்தில் மக்கள் தங்கள் மூதாதையரின் பாவம் தங்களையும் பாதிப்பதாக எண்ணினர். (35) இது யாத்திராகமம் 20:5 ஐ அடிப்படையாகக் கொண்ட அவர்களது நம்பிக்கையாக இருந்தது (36) எசேக்கியேல் 18ம் அதிகாரத்தில் 2ம், 3ம் வசனங்களில் இதைப்பற்றி இஸ்ரவேலில் சொல்லப்பட்டு வந்த பழமொழி இனிமேல் சொல்லப்படுவது இல்லை என்ற தீர்க்கதரிசியின் மூலம் அறிவிக்கும் தேவன் (எசே. 18:2-3) (17) இனிமேல் பெற்றோர்களின் பாவத்திற்காக பிள்ளைகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காக “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்“. (எசே. 18:4)  

இவ்வசனத்தில் ஆத்துமா என்பது முழு மனிதனையுமே குறிக்கின்றது. எனவே, பாவம் செய்கிற மனிதனே அதன் தண்டனையான மரணத்தை அனுபவிப்பான். அவனது பெற்றோரின் பாவத்துக்கு அவன் உத்தரவாதமுடையவனல்ல என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். உண்மையில் “சரீரப்பிரகாரமாக மரணத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது. (38) பாவம் செய்கின்றவன் மரணமடைவான் என்பதே இவ்வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இவ்வசனம் மரணத்தின் பின் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதிக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றியே எதுவும் கூறவில்லை

நாம் ஏற்கனவே பார்த்தப்படி புதிய ஏற்பாட்டிலே மத்தேயு 10:28 மரணத்தின் பின் மானிட ஆத்துமா உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் என்பதை நேரடியாக அறியத் தருகிறது. மேலும், லாசருவையும் ஐசுவரியவானையுத் பற்றி இயேசுக்கிறிஸ்து குறிப்பிடும்போது மரணத்தின் பின்னர் உணர்வுள்ள நிலையில் மனிதர்கள் இருப்பதை அறியத் தந்துள்ளார். (லூக்கா 16:22-28) யெகோவாவின் சாட்சிகள் இதை உருவக விபரணமாக ஒரு உவமையாக கருதுவதோடு, இதை எவ்விதத்திலும் சொல்லர்த்தமான சம்பவமாக விளக்க முடியாது என்று கூறுகின்றனர். இதை சொல்லர்த்தமாக விளக்கினால் தேவனுடைய மக்கள் அனைவரும் எப்படி ஆபிரகாம் எனும் ஒரு மனிதனுடைய மடியில் இருக்க முடியும்? என்றும், மனிதர் வேதனைப்படும் அளவுக்கு அக்கினி ஜூவாலை இருக்கும். இடத்தில் தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட விரல் நுனியின் தண்ணீர் எப்படி ஆவியாகமல் இருக்க முடியும்? என்றும் இந்த ஒரு துளி நீர் எப்படி ஒரு மனிதனுடைய தாகத்தைத் தீர்க்ககூடியதாய் இருக்கும்? என்றும் கேட்கின்றனர். (40) ஆனால் இயேசுக்கிறிஸ்து மரணத்தின் பின்பான நிலையை சொல்லர்த்தமாகவே இவ்வசனங்களில் விளக்கியுள்ளார். (41) யெகோவாவின் சாட்சிகள் கூறுவுதுபோல, ஒரு துளி நீர் தாகத்தைத் தணிக்கும் என்றோ, அக்கினி ஜூவாலையுள்ள இடத்தில் ஒரு துளி நீர் ஆவியாகாமல் இருந்தது என்றோ இயேசுக்கிறிஸ்து கூறவில்லை. ஐசுவரியவானின் வார்த்தைகள் அவனது வேதனையின் புலம்பலாகவே இருக்கின்றன. மேலும் இவ்வுவமையில் ஆபிரகாம் யெகோவா தேவனையும் ஐசுவரியவான்- பரிசேயனையும் லாசரு -இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களையும் மரணம் என்பது இவ்விரு சாராரும் இவ்வுலகில் இருக்கும்போது அவர்களது நிலையில் ஏற்படும் மாற்றத்தையும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது(42)  உவமையில் சொல்லப்படாத விடயங்களையெல்லாம் அதற்குள் புகுத்தும் பிழையான வேதவியாக்கியானமாகவே உள்ளது. உண்மையில் மரணத்தின் பின்பும் மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் இருப்பார்கள் என்பதையும் அச்சமயம் அவர்களால் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும் இயேசுக்கிறிஸ்து இவ்வுவமையின் மூலம் அறிவித்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் மரணத்தின் பி்னர் சரீரமும் ஆத்துமாவும் அழிந்து போகிறது என்று கூறுவது வேதத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது.

மரணத்தின் போது மனிதன் உணர்வுள்ளவானாகவே இருப்பான் என்பதை இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது தம்மோடு சேர்த்துச் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவனுக்கு கூறிய வாரத்தைகளும் அறியத் தருகின்றன. “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள், தான் இயேசுக்கிறிஸ்துவுடன் இருப்பதை அறிந்திடக்கூடிய விதத்திலேயே அவன் பரதீசில் இருப்பான் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. இதனால் யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வசனத்தை “இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்“ என்று மாற்றியுள்ளனர். (43) இதன் மூலம், கள்ளன் அன்றைய தினம் பரதீசிலிருப்பதைப் பற்றியல்ல மாறாக, அவன் எதிர்காலத்தில் பரதீசிலிருப்பதைப் பற்றி அன்றைய தினம் இயேசுக்கிறிஸ்து அவனுக்குக் கூறுவதாக யெகோவாவின் சாட்சிகள் விளக்ககின்றனர். (44) இவர்கள் தங்கள் உபதேசமே சரியானது என்பதை நிரூபிப்பதற்காக வேதவசனங்களையே மாற்றியுள்ளமையால் இவர்களின் போதனைகள் உண்மையானவைகள் அல்ல. 

மரணத்தின் பின்னர் மனிதனின் சடப்பொருள் பகுதியான சரீரம் அழிந்திட ஆவிக்குரிய பகுதி தேவனிடம் செல்வதாக பழைய ஏற்பாடு அறியத் தருகிறது. (ஆதி. 3:19, பிர. 3:20, 12:7) பழைய ஏற்பாட்டில் துன்மார்க்கரின் ஆத்துமா எங்க செல்லும் என்பது பற்றிய முழுமையான வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் மரித்தவர்கள் “பாதாளத்தில் இறங்குவதாகக்“ குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதி. 37:35, 42:29, 44:31, எண் 16:30, யோபு 17:13-16, 24:19-20, சங். 31:17) ஆனால், புதிய ஏற்பாட்டில் நீதிமான்களினதும் துன்மார்க்கரினதும் ஆத்துமாக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதையும், இவ்விரு இடங்களுக்கு இடையில் பாரிய பிளவு இருப்பதையும் அறிந்து கொள்கிறோம். (லூக். 16:22-23) பழைய ஏற்பாட்டில் பாதாளம் என்பது மரித்தோரின் சரீரங்கள் செல்லும் இடமாக இருக்கையில் புதிய ஏற்பாட்டில் பாதாளம் என்பது (46) மரித்த துன்மார்க்கர் செல்லும் இடத்தைக் குறிக்கிறது(47) இதற்குக் காரணம் தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் மூலமொழியில் வித்தியாசமான அர்த்தம்தரும் இருவேறுபட்ட வார்த்தைகளை “பாதாளம்“ என்று ஒரே வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதேயாகும். வெளிப்படுத்தல் 20:14 இல் பாதாளம் (ஹேதீஸ்) அக்கினிக் கடலில் தள்ளப்படுவதனால் அங்கு துன்மாரக்கர் மட்டுமே இருப்பது தெளிவாகின்றது. (48) மரித்த நீதிமான்கள் செல்லும் “ஆபிரகாமின் மடி் என்பது பரதீசுக்கு யூதர்கள் கொடுத்திருந்த பெயராகும். (49) மரணத்தின் பின்பு நீதிமான்களும் துன்மார்க்கரும் செல்லும் இடம் பற்றி வேதாகமம் அறியத் தருவதனால், மரணத்தோடு மானிட ஆத்துமா அழிந்து போகிறது எனும் யெகோவாவின் சாட்சிகளின் உபதேசம் வேதத்திற்கு முரணானது என்பது தெளிவாகின்றது. மரணத்தின் பின்பும் மானிட ஆத்துமா உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் என்பதே வேதம் போதிக்கும் சத்தியம். 

Footnote and Refernace 
 (34)  Anonymous, Reasoning from the Scriptures, p 169

(35) பபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன யூதர்க்ளுக்கே எசேக்கியேல் தீரக்கதரிசனம் உரைத்தார். பாபிலோனிலிருந்த யூதர்கள் தங்கள் மூதாதையருடைய பாவத்துக்கான தண்டனையாகவே சிறையிருப்பு இருப்பதாக கருதினார்கள். (R.H. Alexander, Ezekiel p 823) 

(36) உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்’ என்பது என்று தேவன் அறிவித்தள்ளார். ஒருவனுடைய பாவத்திற்காக அவனது பிள்ளையை தேவன் தண்டிப்பார் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. ஏனென்றால் உபாகமம் 24:16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்“ என்று தேவன் தெரிவித்துள்ளார். உண்மையில் “ஒருவனது பாவம் அவன் பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே யாத்திராகமம் 20:5 அர்த்தமாகும் (F.B. Huey, Exodus Bible Commentary p 87) 
பெற்றோரின் பாவவாழ்க்கைப் பிள்ளைகளும் பின்பற்றுவதால் அவர்களும் தண்டிக்கப்படுகின்றனர்“ என்பதை இவ்வசனம் அறியத்தருகிறது. (W.C. Kaiser, Exodus Expositor;s Bible Commentary vol. p 423)

37) இவ்விரு வசனங்களிலும் பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச் சொல்லுகிறது என்ன? இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

(40) Anonymous, Reasoning from the Scriptures, p 174-175

(41) இயேசுக்கிறிஸ்துவின்  உவமைகள் கற்பனைக் கதைகள் அல்ல. அவை இயேசுக்கிறிஸ்துவினுடைய காலத்தைய யூதசமுதாயத்தில் வழமையாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட விபரணங்களாகவே உள்ளன. “அக்காலத்தைய கிரேக்கர்கள் தரக்கரீதியான விளக்கங்களின் மூலம் போதிக்கும் முறையை உபயோகிக்கையில், யூதர்கள் மானிட வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை விவரணங்களாக்கிப் போதித்தனர்.“ (W.Barclay, And Jesus Said: The parables of Jesus, pp 3-4) இயேசு கிறிஸ்துவின் உவமைகள் இவ்வாறு மானிட வாழ்வுச் சம்பவங்ளை அடிப்படையாகக் கொண்ட போதனைகளாகும். இதனால் “அவர் சொல்லிய உவமைகள் அவர் வாழ்ந்த சமுகத்தைப் பிரதிபலிப்பனவாய் உள்ளன. (D.Wenham, The Parables of Jesus : Pictures of Revolution p. 13)

(42)   Anonymous, Reasoning from the Scriptures, p 175

(43) Ibid pp 287-288 ஆங்கிலத்தில் அரைப்புள்ளியை மாற்றியதன் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் தங்களது கருத்தை இவ்வசனத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது ‘I tell you the truth, today you will be with me in paradise’ என்பதில் truth என்பதற்கு அடுத்துள்ள அரைப்புள்ளியை today என்பதற்குப் பிறகு இடுவதன் மூலம் அதாவது ‘I tell you the truth today, you will be with me in paradise’ என்று மாற்றுவதன் மூலம் தங்களது உபதேசத்திற்கு ஆதாரமாக இவ்வசனத்தை மாற்றியுள்ளனர். 

(44)  Anonymous, Reasoning from the Scriptures, p 287

(45) பாதளம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ஷியொல்“ எனும் எபிரேயப் பதம் பழைய ஏற்பாட்டில் 65 தடவைகள் இடம்பெறுவதோடு, “கல்லறை“ “குழி“ “நரகம்“ “பாதளம்“ என்று பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

(46) மூலமொழியில் “ஹேதீஸ்“ எனும் கிரேக்க பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. சில தமிழ் வேதாகமங்களில் இதை “ஆதீசு“ என்று எழுதியுள்ளனர். 

(47) தமிழ்வேதாகமத்தில் பாதளம் என்பது பழைய ஏற்பாட்டில் ஒரு அர்த்தத்திலும் இருப்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். 

(48) ஹேதீஸ்சில் இருக்கும் துன்மார்க்கரின் ஆத்துமாக்கள், சரீரத்தோடு மறுபடியுமாகச் சேர்க்கப்பட்டு (இதுவே உயிர்த்தெழுதுல்) அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் (இதுவே இரண்டாம் மரணம்) .இது இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் நடைபெறும் என்று வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் கூறுகிறது.

(49) J.Blanchard, Whatever Happened to Hell? P 38

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment