- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 24 February 2012

சிலுவை மரம்


நேராகவும் கிடையாகவும் இரு மரங்கள் ஒன்றன் மேல் ஒன்று வைக்கப்பட்டு இறுக்கமாகப் பிணைக்கப்படம்போது அது “சிலுவை“ என அழைக்கப்பட்டது. அதேசமயம், அந்நாட்களி்ல் மரணமும் பலவிதங்களில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றில் குற்றவாளி அந்த மரத்திலே கட்டித் தொங்கவிடப்படுவான்; அல்லது ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்படுவான். இப்படிப்பட்ட ஒரு சிலுவையில்தான் இயேசுவும் ஆணிகளால் அறையப்பட்டு, சாவிற்காக தொங்கவிடப்பட்டார். எந்தவிதத்தில் தொங்கவிடப்படாலும், சிலுவையில் தொங்கும் ஒருவன் மூச்சுவாங்க முடியாமல், தனது சரீரத்தின் பாரத்தைத் தாங்கமுடியாமல், விலா எலும்புகள் நோவெடுக்க, தசைநார்கள் புடைப்பெடுக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தே மரிப்பான். 

இயேசுகிறிஸ்து உலகில் வாழ்ந்த அந்தக் காலப் பகுதியில் ஆட்சியிலிருந்த ரோம சாம்ராஜ்யத்தில் இந்தச் சிலுவை மரம் மரணதண்டனை நிறைவேற்றப்படவென்றே செய்யப்பட்டது. அதிலும் சாதாரண குற்றவாளிகளையல்ல மிகப் பயங்கர குற்றத்தில் ஈடுபட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள், சமுதாயத்திலே வெகு இழிவான குற்றவாளிகள் என்று கருதப்பட்டவர்கள்.. இப்படிப்பட்டவர்களுக்கே சிலுவை மரணத் தீ்ர்ப்பு வழங்கப்பட்டது. மொத்தத்தில் சிலுவை ஒரு அவமானச் சின்னம், சிலுவை மரணத் தீர்ப்பு ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் அவனில் யாருமே கருணை காட்ட மாட்டார்கள். அத்தனை இழிவானது இந்தச் சிலுவை மரணம், அந்தச் சிலுவை மரணம்தான் இயேசுவுக்கும் தீர்ப்பானது. 

இன்று இந்தச் சிலுவையின் நிலைமையே மாறிவிட்டது. பெண்களின் கழுத்தில் தொங்கிய சிலுவை, இன்று ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் காதிலும் மூக்கிலும்கூட தொங்குகிறது. ஆனால் வேதாகமம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும் சிலுவை அதுவல்ல. வேதாகமம் நமக்குக் காட்டிய சிலுவை, அது இயேசு சுமந்த சிலுவை, நமது பாவம் தீர்க்கப்பட்ட சிலுவை, இது வெறும் கையால் செய்யப்படட ஒன்றோ அல்லது ஒரு அலங்காரப் பொருளோ அல்லது வெறும் சின்னமோ அல்ல. அன்று ரோமப் பேரரசுக்கு முன் இயேசு சுமந்துசென்ற சிலுவை, மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்ற வெறும் மரமாக இருந்தது. ஆனால், இன்று நமக்கு அப்படி இல்லை. அது வெறும் மரச்சிலுவை அல்ல; நமது பாவங்களினிமித்தம் இயேசு சிலுவை சுமந்து மரித்து, பின்னர் உயிர்த்ததால், அந்தச் சிலுவை இன்று நமக்கு ஒரு விடுதலையின் சத்தியத்தைத் தந்திருக்கின்றது. அது நம் வாழ்வில் நம்மோடு ஒன்றிக்க வேண்டும். இன்று கிறிஸ்தவர்கள் என்று சொன்னவுடன் நம்முன் சிலுவையையும் உலகம் இணைத்துததான் பார்க்கிறது.சிலுவை கிறிஸ்தவர்களின் ஒரு சின்னமாக மாறிவிட்டிருப்பது ஒரு துக்கத்திற்குரிய காரியமே. ஏனெனில் ஏராளமான கிறிஸ்தவர்களின் வாழ்வில் அந்தச் சிலுவையும் இல்லை; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் இல்லை. 

இயேசுவின் முதல்வருகை இன்றைய காலகட்டத்தில் நடைபெற்றிருந்தால் சிலுவை நமது வாழ்வில் இடம் பெற்றிருக்குமா? ஆனால், இயேசு வந்த காலம் தேவனுடைய காலம். அது தேவனால் நியமிக்கப்பட்ட காலம். அதை யாராலும் மாற்ற முடியாது. “காலம் நிறைவேறியபோது....“ (காலத்தியர் 4:5) என்று பவுல் எழுதியது. இதனைத்தான். சிலுவை மரணம் மிக இழிவான ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில்தான் இயேசு வந்தார். மிக இழிவானவன் என்று உலகம் கருதக்கூடிய ஒருவனைக் கூட இழந்துவிடக் கூடாது என்பதுதான் பிதாவின் சி்த்தம். பரிசுத்தராகிய இயேசு சிலுவையிலே தொங்கியதால் இழிவென்று கருதப்பட்ட சிலுவைக்கும் மேன்மை கிடைத்தது. இதுதான் உண்மை. இதுவரையிலும் வெறுக்கப்பட்ட அந்த இழிவான சிலுவை, இப்போது பாடுகளின் சின்னமல்ல; பாடுகளின் மத்தியிலும் மகிழ்ச்சியின் சின்னமாயிற்று இதுவரையிலும் அருவருக்கப்பட்ட சிலுவை இப்போது அன்பின் அடையாளமாயிற்று.

அதற்காக சிலுவையின் கோரமான கோலம் மறக்கப்பட்டலாமா? சிலுவையின் தார்ப்பாரியம் மாற்றமடையுமா? சிலுவையின் தார்ப்பரியம் மாற்றமடையுமா? சிலுவையில் செய்யப்பட்ட பரிகாரத்தின் மேன்மை வேறுபடுமா? நாம் அவற்றை மறந்த பாடுகள் வேண்டாம். இயேசு தரும் சுகஜீவியம் மாத்திரம் போதும் என்றால் அது தகுமா? பாவமற்றவர் சுமந்த அந்தப் பாரச்சிலுவை. மாசமற்றவர் மரித்த அந்த தூய சிலுவை, நான் மீட்படைய நிமிர்த்தப்பட்ட அந்த மீட்பின் சிலுவை; இதை மறந்து மனம்போனபடி வாழலாலாமா? அது, சிலுவையிலறையப்படட இயேசுவையே மறுதலிப்பதுபோல ஆகாதா? இதை உணருகின்ற எவனும் இயேசு சுமந்த சிலுவையும் அத்துடன் தான் சுமக்கவேண்டிய சிலுவையையும் ஒருபோதும் பறக்கணியான். 

(இவ்வாக்கமானது இலங்கை சத்தியவசனம் வெளியிட்ட என் சிலுவையை எடுத்து எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். நூலாசிரியர் சாந்தி பொன்னு

Wednesday 8 February 2012

வேதாகமத்திற்கு வெளியில் ...(4)ஊ) வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் (யோவான் 5:39)


பிறமத நூல்களிலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல்கள் இருக்கின்றன என்பதற்கு ஆதாரமாக சில கிறிஸ்தவர்கள் யோவான் 5:39 ஐயும் உபயோகின்றனர். இவ்வசனத்தில் “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்“ என்று கூறிய இயேசுகிறிஸ்து “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே“ என்று தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் “வேதவாக்கியம்“ என்னும் பதம் பன்மையில் “வேதவாக்கியங்கள்“ என்று இருப்பதனால் இயேசுகிறிஸ்து யூதர்களுடைய வேதமான பழைய ஏற்பாட்டை மட்டுமல்ல, ஏனைய மதநூல்களைப் பற்றியும் இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று சிலர் கருதுகின்றனர் (92) எனினும், யோவான் ஐந்தாம் அதிகாரத்தில் 17ம் வசனத்திலிருந்து இயேசுகிறிஸ்து தம்மை எதிர்த்த யூதர்களிடமே பேசுவதை நாம் அவதானிக்கலாம். இயேசுகிறிஸ்து யூதர்களைப் பார்த்தே “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்“ என்று கூறினார். உண்மையில், யூதர்களுடைய வேதம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தமையினாலேயே இயேசுகிறிஸ்து “வேதவாக்கியங்கள்“ என்று அவற்றைப் பன்மையில் குறிப்பிட்டுள்ள மைக்கான காரணமாகும். யூதர்களின் வேதமான நமது பழைய ஏற்பாடு, “தோரா“ (நியாயப்பிரமாணம்), “நபிம்“ (தீரக்கதரிசிகளின் ஆகமங்கள்) “கெத்துபிம்“ (எழுத்தாக்கங்கள்) என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. லூக்கா 24:44 இல் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டை இவ்வாறு மூன்று பகுதிகளாகக் குறிப்பிட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். பழைய ஏற்பாட்டில் தம்மைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர் “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம்“ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்தில் “எழுத்தாக்கங்கள்“ என்பதே தமிழில் “சங்கீதங்கள்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் யூதர்களின் வேதாகமம் இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகவே யூத மதநூல்களிலும் (93) யூத வரலாற்றுக் குறிப்புகளிலும் (94) குறிப்பிடப்பட்டுள்ளது (95) இதனால் யூதர்கள் தங்களது வேதத்தைப் பன்மையில் வேதவாக்கியங்கள் என்று குறிப்பிட்டனர் (96) இதை அறியாமல் வேத வாக்கியங்கள் என்னும் பன்மைச் சொல் உலக மதநூல்கள் அனைத்தையும் குறிக்கின்றது. என்று கூறுவது எவ்வித அர்தமுமற்ற ஒர் விளக்கமாகவே உள்ளது.

 “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்“ என்னும் இயேசுகிறிஸ்துவின் கூற்றில் “பாருங்கள்“ என்னும் பதம் மூலமொழியில் “பார்க்கிறீர்கள்“ என்றே உள்ளது. (97) அதாவது, யூதர்கள் அக்காலத்தில் செய்து கொண்டிருந்த செயலையே இயேசுகிறிஸ்து இங்கு சுட்டிக் காட்டுகிறார். யூதர்கள் தங்களது வேதத்தை ஆராய்ந்து படிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். இயேசுகிறிஸ்து யூதர்களுடைய இச்செயலை மட்டுமல்ல, அவர்களின் நமபிக்கையைப் பற்றியும் இவ்வசனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், “ அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யோவான் 5:39) உண்மையில் வேதவாக்கியங்களை படிப்பதனால் நித்திய ஜீவன் கிடைக்கும் என்பது அக்கால யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. பிரபல யூதமதப் போதகரான “ஹிலெல்“ என்பார் “நியாயப்பிரமாணத்தை அதிகமாகப் படிப்பதால் அதிகமான ஜீவன் கிடைக்கும்“ என்றும் “நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ஒருவன் பெற்றுக்கொள்ளும்போது வரவிருக்கும் உலகத்திற்கான ஜீவனைப் பெற்றுக் கொள்கிறான்“ என்று போதித்து வந்தார்(98) அதேபோல “அக்கிபா“ என்னும் யூத மதப் போதகரும், “வேதவாக்கியமே உனது ஜீவன். நீ அதைப் பிரயாசைப்படும்போது அது உன்னுடைய ஜீவனாகிறது.“ என்று அறிவுறுத்தினார். (99). இதனால் இயேசுகிறிஸ்துடைய காலத்தைய யூதர்கள், வேதவாக்கியங்களை ஆராய்ந்து படிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும், “ஆராயந்து பார்க்கிறீர்கள்“ என்பதற்கு இயேசுகிறிஸ்து உபயோகித்துள்ள பதம், யூதர்கள் வேதவாக்கியங்களைப் படிப்பதைக் குறிக்க பொதுவாக உபயோகிக்கும் வார்த்தையாகும் (100) எனவே இயேசுகிறிஸ்து அக்காலத்தில் யூதர்கள் மத்தியில் இருந்த ஒரு பழக்கத்தையே இங்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்பது தெளிவாகின்றது. எனினும் அக்கால யூதர்கள் தங்கள் வேதவாக்கியங்களாகக் கருதிய புத்தகங்களை மட்டுமே நித்திய ஜீவனைப் பெறுவதற்காக ஆராய்ந்து படித்தனர். அவர்கள் வேறு மதநூல்களை அதற்காக ஆராயவில்லை. யூதர்கள் பழைய புதிய ஏற்பாடுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தங்கள் இனத்தவர்களினால் எழுதப்படட புத்தகங்களைக் கூட வேதவாக்கியங்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. (101) எனவே அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்காகப் பிறமத நூல்களை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் என்று கூறுவது எவ்வித அர்த்தமும் ஆதாரமும் அற்ற ஒரு விளக்கமாகவே உள்ளது.

“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் ... என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.“  என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடும்போது அவர் பழைய ஏற்பாட்டில் தமமைப் பற்றி எழுதியுள்ளவற்றைக் கருத்திற் கொண்டவராகவே பேசினார். இதனால் சீடர்களுக்கு இதைப்பற்றி விளக்கும்போது, பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் தம்மைப் பற்றி எழுதப்பட்டுள்ளவற்றையே லூக்கா 24:26-27,44 அவர் விபரித்துக் காண்பித்தார். பழைய ஏற்பாட்டையே எப்பொழுதும் உபயோகித்து வந்த இயேசுகிறிஸ்து “பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளவற்றைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. (102) வேறு எந்த நூலையும் தெய்வீக அதிகாரம் கொண்ட நூலாக கருதவில்லை. “அவர் பழைய ஏற்பாட்டையை தம்முடைய பிரசங்கங்களிலில் வேதவாக்கியமாக அறிமுகப்படுத்தினார். (103) இயேசுகிறிஸ்து வேறு மத நூல்களைப் பற்றி குறிப்பிடாதமையால், அவற்றில் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று தர்கிப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை. “உண்மையிலேயே வேறு மத நூல்களில்  இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தல்கள் இருந்திருந்தால் சகலமுமறிந்த தெய்வமான அவர் அதுபற்றி நிச்சியம் குறிப்பிட்டிருந்திருப்பார். (104) அதேபோல, ரோம ராஜ்யமெங்கும்  இயேசு கிறிஸ்து பற்றி அறிவித்த அவருடைய சீடர்கள் யூதர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்போது பழைய ஏற்பாட்டை உபயோகித்த விதமாக, புறஜாதி மக்களுக்கு அவர்களுடைய மத நூல்களை உபயோகித்து  இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கவில்லை. (105) முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த  இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா (106) இந்திய மக்களுக்கு இந்து மத நூல்களிலிருந்து  இயேசுகிறிஸ்துப் பற்றி அறிவிக்கவில்லை. அதேபோல எத்தியோப்பிய மந்திரிக்கு அவனது மத நூலிலிருந்து அல்ல, பழைய ஏற்பாட்டிலிருந்தே பிலிப்பு  இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தார். (அப். 8 :30-35) (107)  இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்த பின்னர் எழுதப்பட்ட பிற மத நூல்களில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்ட போதிலும் (108) அதற்கு முன்னர் வெளிவந்த நூல்கள் பழைய ஏற்பாட்டைத் தவிர வேறு எந்த ஒரு மத நூலிலும் அவரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டவில்லை. (109)

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல்கள் யூதர்களிடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள என்பதை ரோமர் 3:1-2 நேரடியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது.  விசேஷித்த மேன்மை.“ என்பதை பவுல் இவ்வசனங்களில் அறியத் தருகிறார். “இவ்வசனத்தில் முழுப் பழைய ஏற்பாடுமே தேவனுடைய வாக்கியங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (110). இவை “மானிட இரட்சிப்பைப் பற்றிய இவை மானிட இரட்சிப்பைப் பற்றி தேவனுடைய வார்த்தையாகும். (111) உபாகமம் 4:8 லும் சங்கீதம் 147:19-20 இலும் இத்தகைய தேவனுடைய வார்த்தைகள் “உலகில் வேறு எந்த ஒரு ஜாதிக்கும் கொடுக்கப்படவில்லை. என்னும் உண்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையில், யூதர்களே தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தலான தேவதாகமத்தைப் பெற்று அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். உபாகமத்திலும் சங்கீதத்திலும் உள்ள வசனங்களைப் பார்க்கும்போது “யூத ஜனங்களுக்கும் தேவனுக்குமிடையே இருந்தது போன்ற உறவு அக்காலத்தில் வேறு எந்த ஒரு மதத்தினருக்கும் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (112) இதனால் ரோமர் 9:4 இல் “புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே“  என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையில் ஏசாயா 2:3, மீகா 4:2 போன்ற வசனங்கள் அறியத்தருவதுபோல “சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்“ இதிலிருந்து தேவனுடைய வெளிப்படுத்தல்கள் யூதர்களிடைமே ஒப்புவிக்கப்பட்டன எனபதும், இரட்சிப்பின் செய்தி அங்கிருந்தே ஏனைய பிரதேசங்களுக்கு சென்றுள்ளது என்பதும் தெளிவாகின்றது. (113) எனவே வேறு இடங்களில் உருவான மத நூல்களில் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தல்கள் இருப்பதாகக் கூறுவது வேதத்தையே முரண்படுத்தும் தர்கக்மாகவே உள்ளது.

இயேசுகிறிஸ்துப் பற்றி தெய்வீக வெளிப்படுத்தல்கள் வேதாகமத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ரோமர் 1:4 இல் இயேசுகிறிஸ்துக் குறித்துத் தேவன் தம்முடைய தீரக்க்தரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிஷேசத்தைப் பற்றி வாக்குத் தத்தம் பண்ணியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் “பரிசுத்த வேதாமங்கள்“ பழைய எற்பாட்டையும், “தேவனுடைய தீர்க்கதரிசிகள்“ பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை(114) எழுதிய தேவ மனிதர்களையுமே குறிக்கின்றது. (115) பழைய ஏற்பாட்டைத் தவிர பவுல் வேறு மத நூல்கள் எதையும் இவ்வசனத்தில் குறிப்பிடாதமையினால், இயேசுகிறிஸ்துப் பற்றி வெளிப்படுத்தல்கள் வேறு மத நூல்களில் இல்லை என்பது தெளிவாகின்றது. உலக மக்களுக்கான தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்குச் சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளதை வேதத்தில் நாம் அவதானிக்கலாம். உலக இரட்சகர் உலகத்திற்கு வருவதற்கான ஊடகமாக அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனால். இரட்சிகராகிய இயேசுகிறிஸ்துப் பற்றிய தெய்வீக வெளிப்படுத்தல்களும் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. “இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (யோவான் 4:22) என்னும் இயேசுகிறிஸ்துவின் கூற்றும் இதை உறுதிப்படுத்துகிறது. “அவர்கள் ஊடாக இரட்சிகர் வந்தது மட்டுமல்ல, மானிட இரட்சிப்பைப் பற்றிய தெய்வீக வெளி்ப்படுத்தல்களும் அவர்கள் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. (116) இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகததி்ற்கும் முன்பு பழைய ஏற்பாட்டில் மட்டுமே தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது வருகைக்குப் பின்பான தேவவெளிப்படுத்தல்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளது. எனவே, இவ்விரு ஏற்பாடுகளையும் கொண்டுள்ள பரிசுத்த வேதாகமத்தி்ற்கு வெளியில் தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல்கள் இருப்பதாகக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. (117)

Footnote & References
(92) தமிழ்ப் பிரசங்க ஒலிநாடா ஒன்றில் கேட்டது. இன்று இந்துமத நூல்களில் இயேசுகிறிஸ்துப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக சுடடிக்காட்டப்படும் வசனங்களில் ஒன்றாக இது உள்ளது. ((E.Sargunam, Religious Toleration and Social Harmony, p. 49)

(93) பாபிலோனிய தல்மூட்“ என்று அழைக்கப்படும் யூத மத நூலில் இது பற்றி உள்ளது. (F.F. Bruce, The Canon of Scripture, pp. 29-30)

(94) யூத வரலாற்றாசிரியர் ஜோசீப்பஸ் என்பாரின் குறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது. (F.Josephus, Against Apion 1.38-41)

(95) பிரபல தத்துவ ஞானியான பைலோவும் இதேவிதமாகவே யூத வேதத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

(96) சிலர் லூக்கா 24:44 இலும் இயேசுகிறிஸ்து இந்து மத நூல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகத் தர்க்கித்து வருகின்றனர். இவர்கள் இந்து மத நூல்களையும் “சுவிசேஷப் புத்தகம்“ என்று குறிப்பிடுவதோடு, உலகத்தின் பாவத்திற்காக தம்மையே பலியாக்கும் தெய்வத்தைப் பற்றி அவை கூறுவதாகவும் விளக்குகின்றனர். (S.Chellappa, Is Christianity Necessary?[Tamil], p. 142) “இவ்வசனம், எபிரேய வேதத்தை மட்டுமல்ல இயேசுகிறிஸ்துப் பற்றி எழுதப்பட்டுள்ள ஏனைய உலக மத நூல்கள் அனைத்தையுமே குறிக்கின்றன“ என்பதே இவர்களின் தர்க்கமாகும். (K.Abraham, Prajapathi : The Cosmic Christ : p. 32) ஆனால், இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

(97) இதனால் புதிய தமிழ் மொழிபெயர்ப்புகளில் இவ்வாக்கியம் இவ்விதமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(98) Cited in D.A. Carson, John : Pillar New Testament Commentary, p. 263

(99) Cited in G.R. Basely-Murray, John : Word Biblical Commentary, pp. 78-79

(100) D.A. Carson, John: The Pillar New Testament Commentary, p. 263

(101) மேலதிக விபரங்களுக்கு ஆசிரியரின் “புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு“ என்னும் நூலைப் பார்க்கவும் (பக்கங்கள் 69-73)

(102) B.H. Edwards, Nothing but the Truth, pp. 58-59. இயேசுகிறிஸ்து எழுதியிருக்கிறது. “வேதவாக்கியம்“. “நியாயப்பிரமாணம்“ “தீர்க்கதரிசிகளும் நியாயப்பிரமாணமும்“ “தீர்க்கதரிசிகள்“ என்னும் சொற்பிரயோகங்களைப் பழைய ஏற்பாட்டைக் குறிப்பிடவே உபயோகித்துள்ளார்.

(103) P.Ch. Marcel, 'our Lord's Use of Scripture' in Revelation and the Bible p. 121

(104) K.Daniel 'Is Christ in Hindu Vedas' in the Defender of Faith. p. 30

(105) அப். 13:32-33, 17:1-3, 18:28 போன்ற வசனங்களில் யூதர்களுக்குச் சவிசேஷத்தை அறிவிப்பதற்கு அப்போஸ்தலர்கள் பழைய ஏற்பாட்டு வேதவசனங்களை உபயோகித்துள்ளதை நாம் அறிந்திடலாம். சில வேதஆராய்ச்சியாளர்கள் அப். 17:28 ஐ ஆதாரமாகக் கொண்டு, அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு புறமத நூல்கள் உபயோகித்துள்ளதாக கூறினாலும், இவ்வசனத்தில் பவுல் எல்லா மனிதர்களும் தேவனால் சிருஷ்டிக்கபட்டடவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே கிரேக்கப் புலவர்களின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயேசுகிறிஸ்துவையும் அவரது சிலுவைப் பலியையும் பற்றி குறிப்பிட அவர் பழைய ஏற்பாட்டையும் தேவன் தனக்கு நேரடியாக வெளிப்படுத்திய விடயங்களையும் உபயோகித்தாரே தவிர வேறு மத நூல்களை உபயோகிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவைப் பற்றி பவுல் குறிப்பிடும்போது “ தீர்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். (அப். 26:23). மேலும், தனது சுவிசேஷம் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களின்படியான என்பதைப் பவுல் 1 கொரிந்தியர் 15:1-4 லும் குறிப்பிட்டுள்ளார்.

(106) A.M. Mundadan, History of Christianity in India Vol. 1 : From the Beginning up to the Middle of the Sixteenth Century, p. 60-61; J.C. England, The Hidden History of Christianity in Asia, p. 69

(107) பிலிப்பு பழைய ஏற்பாட்டிலுள்ள ஏசாயா தீர்க்கதரிசியினுடைய புத்தகத்திலிருந்தே எத்தியோப்பிய மந்திரிக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றி அறிவித்தார்.

(108) உதாரணத்திற்கு இஸ்லாமிய மதநூலில் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்ப்புலவர் பாரதியாரும் இயேசுகிறிஸ்துவைப் பற்றி பாடலொன்றை எழுதியுள்ளார். ஆனால், இவைகள் இயேசுகிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு வந்த பின்னர் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பிபுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவைகளாகும். இவை பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் போல தேவனால் வெளிப்படுத்தப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்ட முன்னறிவிப்புகள் அல்ல.

(109) இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு “சத்தியவசனம்“ சஞ்சிகையில் வெளிவந்த ஆசிரியரின் “இந்து மதநூல்களில் இயேசுகிறிஸ்து இருக்கிறாரா? என்னும் கட்டுரையையும் (ஜூலை-ஓகஸ்ட் பக்கங்கள் 9-20), Dharma Deepika (July-December, pp 5-20) எனும் ஆங்கில இதழில் வெளிவந்த ஆசிரியரின் 'Prajapath's Sacrifice and the Crucifixion of Jesus Christ' என்னும் கட்டுரையைப் பார்க்கவும்.

(110) J.R.W.Stott, Romans : The Bible Speaks Today, p. 96

(111) J. Fitzmyer, Romans : Anchor Bible Commentary, p. 326

(112) J.A. Thompson, Deuteronomy : Tyndale OT Commentaries, p. 103

(113) J.N. Oswalt, The Book of Isaiah Chapters 1-39. pp. 117-118

(114) ரோமர் 1:4 இல் “பரிசுத்த வேதாகமங்கள்“ என்று பன்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “க்ரஃபே(graphe) என்னும் கிரேக்க பதம் சொல்லர்த்தமாக “எழுதப்பட்டவை“ என்று அர்த்தம் தரும். ஆங்கிலத்தில் பொதுவாக Scripture என்று ஒருமையில் அல்லது Scriptures என்று பன்மையில் இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள போதிலும் பவுலினுடைய நிருபங்களில் 14 தடவைகள் இடம்பெறும் இப்பதம் தமிழில் பல்வேறுவிதமான முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (ரோமர் 1:4, 4:3, 9:17, 10:11, 11:2, 15:4, 16:25, கலா. 3:8, 3:22, 4:30 1 கொரி. 15:4, 1 தீமோ. 5:5:18, 2 தீமோ. 3:16) எனினும் “க்ரஃப்பே“ என்னும் கிரேக்கப் பதத்தின் அர்த்தம் “எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை“ என்பதாகும். இப்பதம் பொதுவாக ஒருமையினலேயே கிரேக்க வேதத்தில் உபயோகிக்கப்பட்டிருப்பதனால், தமிழில் பன்மையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை ஆதாரமாகக் கொண்டு, இது பழைய ஏற்பாட்டை மட்டுமல்ல வேறு மத நூல்களையும் குறிக்கின்றது என்பது கருதுவது தவறாகும். ஏனென்றால் யூதர்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களை மட்டுமே எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

(115) இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சுவிஷேசம் பழைய ஏற்பாட்டிலிருந்து வருவதாகவே பவுல் இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அக்கால யூதர்கள் எவ்வாறு தங்களுடைய வேதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்களோ அதேவிதமாகவே பவுல் பழைய ஏற்பாட்டைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். (J. Fitzmyer, Romans : Anchor Bible Commentary, p. 233)

(116) D.A. Carson, John : Pillar New Testament Commentary, pp. 223-224

(117) வேதாகமத்திற்கு வெளியில் வேறு நூல்களில் தேவ வெளிப்படுத்தல்கள் இருக்கின்றது என்றால் அவற்றையும் நாம் வேதாமத்திற்கு சமமான அதிகாரம் கொண்ட தெய்வீகப் பத்தகங்களைாகக் கருதவேண்டும். ஆனால் வேதாகமம் மற்ற மதநூல்களைவிட வித்தியாசமானதும், தனித்துவமானதுமான புத்தகம் என்பதனால் இக்கருதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Thursday 2 February 2012

வேதசித்தத்திற்கு முழுமையாய் அர்ப்பணித்தல்



கி.பி. 16ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் திருச்சபையில் சீர்த்திருத்தம் ஏற்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பரவலாக யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் சீர்திருத்தவாதி ஜோன் கால்வின் (John Calvin 1509-1564) பாரீசிலிருந்து ஸ்டிராஸ்பேர்க் எனுமிடத்திற்குச் செல்கையில் ஜெனீவா நகரின் ஒருநாள் இரவு தங்கவேண்டியதாயிற்று. அன்றிரவு ஜோன் கால்வின் இன்னுமொரு சீர்த்திருத்தவாதியான வில்லியம் ஃபெரெல் என்பாரைச் சந்தித்தார்.


புரட்டஸ்தாந்து சபையில் குருவானவராக இருந்த வில்லியம் ஃபாரெல், தன்னுடன் தங்கியிருந்து தனது பணிகளுக்கு உதவிசெய்யும்படி ஜோன் கால்வினிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜோன் கால்வின் அவ்வேண்டுகோளுக்குச் சம்மதிக்கவில்லை. இதனால் இவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

கடைசியில் வில்லியம் ஃபெரெல் சற்று கடுமையான குரலில் “நீ உன்னுடைய விருப்பப்படி செயல்படுகிறாய். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நாமத்தில் நான் இன்று உனக்கு சொல்வது யாதெனில், இந்நகரில் நான் செய்யும் கர்த்தருடைய பணிக்கு நீ உதவி செய்யாவிட்டால் நீ தேவனுடைய வேலையை செய்யாமல் உன்னுடைய வேலையை செய்ய முற்படுவதனால் அவர் உன்னைச் சபித்துவிடுவார்.” என்று கூறினார்.

வில்லியம் ஃபெரெலின் இவ்வார்த்தைகள் ஜோன் கால்வினுடைய மனதைக் கடுமையாக தாக்கியமையால், அவர் தன் மரணம் வரை ஜெனீவா நகரில் தனது சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். வில்லியம் ஃபெரெலின் வார்தைகளைப் பற்றி பிற்காலத்தில் ஜோன் கால்வின் எழுதும்போது “நான் என்னுடைய வழியில் செல்வதைத் தடுக்கப் பரலோகத்தின் தேவன் தன் கரத்தின் என்மீது வைத்தது போல உணர்ந்தேன். இதனால் நான் எனது பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ வாழ்க்கை வேதசித்தத்திற்கு அடிபணிந்து வாழும் ஒரு வாழ்க்கையாகும். நமது சித்தத்தை முற்றிலுமாய் அகற்றிவிட்டு தேவசித்தத்திற்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும். இதனால்தான் “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்“.(எபே. 5:17) என்று வேதமும் நமக்கு அறிவுறுத்துகின்றது.



(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)