- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 17 April 2012

காவலிலுள்ள ஆவிகள் (1 பேதுரு 3:18-20)



இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்தின் பின் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் இருந்த இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை விடுவித்து, அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார் எனும் உபதேசத்திற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டப்படும் வேதப்பகுதிகள் 1 பேதுரு 3:18-20 எபேசியர் 4:8-10 என்பனவைகளாகும். ஆனால், இவ்வேதப்பகுதிகளை ஆராய்ந்து பார்த்தால், ஆவிகளின் இடமாற்றம் பற்றிய உபதேசத்தில் உள்ள விஷயங்கள் எதுவும் இல்லை என்பதை அறிந்திடலாம். இவற்றைத் தவிர அப்போஸ்தலர் 2:27, ரோமர் 10:6-7 என்னும் வசனங்களும் இயேசுகிறிஸ்து பாதாளத்திற்குச் சென்றார் என்னும் உபதேசத்திற்கு ஆதாரமாகக் காண்பிக்கப்படுவதுண்டு. ஆனால் இவ்விரு வசனங்களிலும் பாதாளம் என்னும் சொல் கல்லறையையே குறிப்பிடுகின்றது. ஏனெனில், இவ்விரு வேதப்பகுதிகளிலும் பாதாளம் என்னும் சொல் இடம்பெறும் வசனங்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டவைளாகவே உள்ளன. (5) எனவே, இவ்வசனங்கள் இயேசுகிறிஸ்து மரித்தோரின் ஆத்துமாக்கள் இருந்த பாதாளத்திற்குச் சென்றார் என்று கூறவில்லை. 1 பேதுரு 3:18-20 இல் குறி்ப்பிடப்பட்டுள்ளது.


ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். (1 பேதுரு 3:18-20)

வேதாகமத்திலே அதிக சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இவ்வசனங்களில் (6) பாவிகளாகிய நம்மைத் “தேவனிடம் சேர்ப்பிப்பதற்காக அநீதியுள்ளவர்களான நமக்காக நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்து பாடுபட்டதாக“ 18ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (7) இயேசுகிறிஸ்துவின் பாடுகளும் உயிர்த்தெழுதலும் எப்படிப்பட்டவை என்பதை விளக்குவதற்காக, இவ்வசனத்தில் “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (3:18) என்றும் பேதுரு குறிப்பிடப்பட்டுள்ளார். மாம்சத்திலே கொலையுண்டு என்னும் சொற்பிரயோகம் இயேசுகிறிஸ்து சரீரப்பிரகாரமாகக் கொல்லப்பட்டு (சிலுவையில் அறையப்பட்டு) மரித்ததை அறியத் தருகிறது., ஆனால், “ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். என்னும் சொற்பிரயோகம் மூலமொழியின் இலக்கண அமைப்புமுறையின்படி “அவருடைய உயிர்தெழுதல் ஆவிக்குரியது“ என்னும் அர்த்தமுடையது. (8) அதாவது, சரீரப்பிரகாரமாக மானிட வரையறைக்குக் உட்பட்டவராக இருந்த இயேசுகிறிஸ்து, இவ்வரையறைகள் நீக்கப்பட்ட நிலையில் ஆவிக்குரிய பிரகாரம் உயிர்த்தெழுந்தார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும். (9). இவ்வசனத்தில், சரீரப்பிரகாரமான வாழ்வுக்கும் உயிர்த்தெழுந்த நிலைக்கும் இடையிலுள்ள வேறுபாடே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(10) இதனால், புதிய மொழிபெயர்ப்பான திருவிவிலியத்தில் இவ்வாக்கியம் மூலமொழிக்கு ஏற்றவிதத்தில் “ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர்ப்பெற்றெழுந்தார்.“ என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுகிறிஸ்து சரீரத்திலேயே இருக்கின்றபோதிலும், இச்சரீரம் மாம்ச சரீரத்தின் வரையறைகள் எதுவும் இல்லாத ஆவிக்குரிய சரீரமாக உள்ளது. இதனால்தான், இயேசுகிறிஸ்து உயிர்ததெழுந்த பின்னர் கதவுகள் மூடியிருந்த அறைக்குள் செல்லக்கூடியவராகவும், மனிதருடைய கண்களுக்குத் தென்படக்கூடிய விதத்தில் தோன்றி பின்னர் மறைக்கூடியவராகவும் இருந்தார். (யோவான் 20:19, 20:26) உண்மையில், அவர் மனிதனாக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பிருந்த ஆவிக்குரிய நிலையில் மகிமையடைந்த சரீரத்துடன் இப்பொழுது இருக்கிறார். எனவே 19ம் வசனத்தில் “அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.“ என்னும் கூற்றில் “அந்த ஆவியிலே“ என்பது, அவர் ஆவிக்குரிய நிலையி்ல் பிரசங்கித்தத்தைப் பற்றிய குறிப்பாகவே உள்ளது. (11) இதனால்தான் பரிசுத்த பைபிளில் இவ்வசனம் மூலமொழிக்கு ஏற்றவிதத்தில் “இந்த ஆவி நிலையிலேயே சென்று பிரசங்கித்தார்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய பிரகாரம், அதாவது ஆவிக்குரிய நிலையில் செய்த பிரசங்கத்தைப் பற்றியே 19ம் வசனத்தில் பேதுரு குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும், இயேசுகிறிஸ்து எக்காலத்தில் எவ்வாறு பிரசங்கம் பண்ணினார் என்பதைப்பற்றி வேத ஆராய்சியயாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சில ஆதிச்சபைப் பிதாக்களினதும் பாரம்பரிய சபைகளினதும் உபதேசத்தின் செல்வாக்கு காரணமாகத் தற்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள், இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் செய்த பிரசங்கத்தைப் பற்றியே பேதுரு குறிப்பிட்டுள்ளதாகக் கருதுகின்றனர். (13) ஆனால், மாம்சத்தில் கொலையுண்டு ஆவியில், அதாவது ஆவிக்குரிய பிரகாரம் உயிர்ப்பிக்கப்பட்ட இயேசுகிறிஸ்து “ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்“ என்று 18ம் 19ம் வசனங்கள் கூறுகின்றனவே தவிர, அவர் தம்முடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கு் இடைப்படட காலத்தில் பிரசங்கித்தார் என்று இவ்வசனங்களில் குறிப்பிடப்படவில்லை. மேலும், இத்தகைய உபதேசத்திற்கு வேதாகமத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவருடைய சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது. (லூக். 23:52-53) ஆனால் அவரது ஆவியோ பரலோகத்தில் தேவனிடம் இருந்தது. (லூக். 23:46) எனவே, அக்காலத்தில் அவருடைய ஆவி பிரசங்கிக்கச் சென்றது என கூறமுடியாது. உண்மையில் “இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்திற்கும் உயி்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தி்ல் ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்“ என்னும் கருத்து வேதாகம ஆதாரமற்றதாகவே உள்ளது. (15) மேலும் இயேசுகிறிஸ்து பிரசங்கித்த ஆவிகள் “நோவாவின் காலத்தில் கீழ்ப்படியானமற்போனவைகள்“ என்று 20ம் வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதனால், இவற்றைப் பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்களின் ஆவிகள் என்று எவ்விதத்திலும் கூறமுடியாது. (16) உண்மையில் பரிசுத்தவான்களின் ஆவிகளைக் கீழ்ப்படியாமற்போனவைகள் என்று கூறுவது அர்த்தமற்றது.

இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், மரித்த பழைய எற்பாட்டுக் கால பரிசுத்தவான்களின் ஆவிகள் இருந்த இடத்திற்குச் சென்று பிரசங்கிக்கவில்லை என்றால், பேதுரு எதைப் பற்றி கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆவிக்குரிய பிரகாரம் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணியதைப் பற்றியே 19ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதினால், தற்காலத்தில் பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள், இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் பின்னர் நடைபெற்ற ஒரு சம்பவமாகவே இதைக் கருதுகின்றனர். அதாவது, மாம்சத்தில் கொலையுண்டு ஆவிக்குரிய பிரகாரம் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து, அதன்பின்பே காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்ததாக இவர்கள் கூறுகின்றனர். இவர்கள், வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத யூதர்களுடைய நூல்களை ஆதாரமாகக் கொண்டு(17) “காவலிலுள்ள ஆவிகள்“ விழுந்து போன தூதர்களான பிசாசின் ஆவிகள் என்றும்(18) இயேசுகிறிஸ்து இவ்வாவிகளுக்குப் பிரசங்கித்ததைப் பற்றியே 1 பேதுரு 3:18-20 குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வாதிடுகின்றனர். (19) ஆனால், வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத நூல்களின் கதைகளை வேதாகமத்திற்குள் புகுத்துவதும் அவற்றை சத்தியமாக அறிவிப்பதும் தவறாகும்.(20). மேலும், காவலிலுள்ள ஆவிகள் “பூர்வகாலத்தில் நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோட காத்திருந்தாபோது கீழ்ப்படியாமற்போனவைகள்“ என்று 20ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால், இந்த ஆவிகளை விழுந்து போன தூதர்களாக கருதமுடியாது. (21) ஏனெனில் தூதர்களுடைய வீழ்ச்சி நோவாவின் காலத்தில் அல்ல, அதற்கும் முன்பே, குறிப்பாக ஆதாமும் ஏவாளும் பாவத்தில் விழுவதற்கும் முன்பு நடைபெற்றுள்ளது. மேலும் 20ம் வசனத்தில் இறுதியில் “அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள்“ என்றும் பேதுரு கூறுவதனால் பேழையில் காப்பற்றப்படடவர்களுக்கும் அக்காலத்தில் கீழ்ப்படியாமற்போனவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தையே பேதுரு சுட்டிக்காட்டியுள்ளார் என்பது தெளிவாகின்றது. எனவே, பேதுரு குறிப்பிடும் ஆவிகள் “மனிதர்களுடைய ஆவிகளாகவே உள்ளன.“(22) எனினும் பேதுரு இந்நிருபத்தை எழுதும்போது நோவாவின் காலத்தில் கீழ்பபடியாமற் போனவர்கள் உயிருடன் இராததினால் அவர்களைக் காவலிலுள்ள ஆவிகள்“ என்று பேதுரு வர்ணித்துள்ளார். (23) பரிசுத்தவான்களின் ஆவிகளை இவ்வாறு காவலிலுள்ள ஆவிகள் என வர்ணிப்பது  பொருத்தமற்ற விபரணமாகவே உள்ளது.

நோவாவின் காலத்தில் கீழ்ப்படியாமற் போனவர்களுக்கு செய்யப்பட்ட பிரசங்கத்தைப் பற்றியே பேதுரு குறிப்பிட்டுள்ளார் என்றால், உயிர்தெழுந்த இயேசுகிறிஸ்து எப்படி இவர்களுக்கு பிரசங்கித்திருக்க முடியும் என கேட்கலாம். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் பிரங்கித்தார் என்று 19 வசனம் கூறவில்லை. நாம் ஏற்கனவே பார்த்தபடி (மூலமூமொழியின் இலக்கண அமைப்பு முறையின்படி) இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய நிலையில் பிரசங்கித்ததாகவே 19ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, (24) இவ்வசனத்தில் “அந்த ஆவியிலே“ என்பது 18ம் வசனத்தின்படி “ஆவிக்குரிய நிலையையே குறிக்கின்றது. இத்தகைய நிலையில் அவர் பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகளுக்கு ஊடாகப் பிரங்கித்தார் என்பதைப் பேதுரு தன்னுடைய நிருபத்தின் முதலாம் நிருபத்தின் முதலாம் அதிகாரத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளார். (1 பேதுரு 1:10-11)(25) நோவாவும் தன்னுடைய கால மக்களுக்குத் தேவனுடைய வார்த்தையே அறிவிப்பவராக இருந்ததினால் (2 பேதுரு 2:5) நோவாக்கூடாக இயேசுகிறிஸ்து பிரசங்கித்ததைப் பற்றியே 1 பேதுரு 3:18-20 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. (26) எனவே, இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்தி்ற்கும் உயிர்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில். அல்லது உயிர்த்தெழுந்த பின்னர் ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்று 1 பேதுரு 3:18-20 ஐ வியாக்கியானம் செய்வது, வேதாகமத்தில் சொல்லப்படாத ஒரு காரியத்தை அதற்குள் புகுத்தும் செயலாகவே உள்ளது.

Footnote and Reference
(5) அப்போஸ்தலர் 2:27 இல் சங்கீதம் 16:10 உம் ரோமர் 10:6-7 உபாகமம் 30:13 உம் உபயோகிக்கப்பட்டுள்ளது.

(6) இதனால் இவ்வசனங்களுக்குப் பலதரப்பட்ட விளக்கஙகள் கொடுக்கப்பட்டுள்ளன.

(7) சில வேதாகமங்களில், பரிசுத்த ஆவியானவர், இயேசுகிறிஸ்துவை உயிர்ப்பித்தார் என்னும் அர்த்தத்தில் இவ்வாக்கியத்தை “ஆவியினாலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ என்று மொழிபெயர்த்துள்ளனர். (NIV, KJV, NKJV) ஆனால் NRSV, NASV என்னும் வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விதமாக, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்பதே இவ்வாக்கியத்திற்குப் பொருத்தமானதாகவும் இலக்கண முறைக்கு ஏற்றதாகவும் உள்ளது. இங்கு மாம்சப் பிரகாரமான வாழ்விற்கும் ஆவிக்குரிய பிரகாரமான வாழ்விற்கும இடையிலான வேறுபாட்டையே பேதுரு சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் மாம்சத்தில் கொல்லப்பட்டார் எனும் கூற்றுக்கு ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்பதே பொருத்தமான எதிர்ச்சொல்லாக உள்ளது. இத்தகைய முறையிலேயே ரோமர் 1:5 இலும் 1 தீமோத்தேயு 3:16 இலும் இயேசுகிறிஸ்துவின் வாழ்வின் மாம்சப்பிரகாரமான வாழ்வும் ஆவிக்குரிய பிரகாரமான வாழ்வும் சுட்டிக்காட்டப்பட்டு்ள்ளது.
(Kittel, Theological Dictionary of the New Testament Volume 6, pp. 417, 447; E.A. Blum, 1,2 Peter: Expositor's Bible Commentary, p. 242)

(9) N.Hillyer, 1 and 2 Peter : New International Biblical Commentary, pp, 113-114.

(10) J.R. Michaels, 1 Peter : Word Biblical Commentary, Volume 49, p.204

(11) W.Grudem, 1 Peter : Tyndale New Testament Commentary Volume 49, p. 206; J.N.D. Kelly, Epistles of Peter and Jude : Black's New Testament Commentary, p. 152

(12) ராஜரீகம் என்பவருடைய மொழிபெயர்ப்பிலும், இத்தகைய அர்த்தத்துடன், அந்த ஆவி நிலையில் அவர் காவலிலுளள ஆவிகளிடம் போய் உரையாற்றினார்“ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(13) B.Reicke, The Disobedient Sprits and Christian Baptism, pp 116-118; E.Best, 1 Peter : New Century Bible Commentary, p. 140

(14) C.E.Cranfield, I&II Peter: : Torch Bible Commentary, p. 91

(15) இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடைப்படட காலத்தில் மரித்தோரின் ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்று கூறுபவர்கள் முன்பின் கருத்து முரண்பாடு உடையர்களாகவும் வேதாகம சத்தியத்தை முரண்படுத்தும் உபதேசங்களைப் போதிப்பவர்களாகவும் இருகின்றனர். வேதாகம சத்தியத்தின்படி, மரணத்தின் பின்னர் மனந்திரும்புவதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்பதை, லாசருவையும் ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் இயேசுகிறிஸ்து தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். (லூக். 16:26) மேலும், மனிதர் ஒரு தரம் மரிப்பதும்  பின்பு நியாயத்தீர்ப்படையவதும் நியமிக்கப்பட்டிருக்கிறது என்றே வேதாகமம் கூறுகின்றது. (எபி. 9:27) இதனால், மரணத்தின் பின் மனந்திரும்புவதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடைப்படட காலத்தில் மரித்தோரின் ஆவிகளுக்குப் பிரசங்கம் பண்ணினார் என்று கூறுபவர்கள் “மரித்தவர்கள் மனந்திரும்புவதற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்து அவர்களுக்கு பிரசங்கித்தார் என்று கருதுகின்றனர். (C.Pinnock, A Wideness in God's Mercy, p. 168; J.W.C. Wand, Epistles of Peter and Jude : Westminster Commentaries, pp. 11-112) மனிதர்களுக்கு மட்டுமல்ல விழுந்துபோன தூதர்களுக்கும் மனந்திரும்புவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த்ததாகவும் சிலர் கூறுகின்றனர். (A.T.Hanson, 'Salvation Proclaimed : 1 Peter 3:18-22' 100-115) எனினும் சிலர் இதைப் பூமியில் வாழ்ந்த காலத்தில் கடுமையான பாவங்களைச் செய்யாதவர்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளனர். (Cyril of Alexandria, 1-2 Peter : Ancient Christian Commentary on Scripture, pp. 107-108)  பூமியில் வாழ்ந்த காலத்தில் சுவிசேஷத்தைச் சரியாகக் கேட்டகாதவர்களுக்கும் மரணத்தின் பின்னர் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமாகச் சிலர் இதைக் கருதுகின்றனர். (J. Lange, The First Epistle General of Peter, pp. 66-67) ஏனையவர்கள், இத்தகைய சந்தர்ப்பம் நோவாவின் காலத்தில் மனந்திரும்பாமற்போனவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். (C.E.B. Cranfield, 'The Interpretation of 1 Peter iii. 19 and iv 6' pp. 369-372) இவ்வாறு ஒன்றையொன்று முரண்படுத்தும் விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை முரண்படுத்துகிறைவகளாகவே உள்ளன.

(16) நோவாவின் காலத்தில் கீழ்ப்படியாமற் போனவர்களின் ஆவிகளுக்கே  இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணினார் என்று 20ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், சில வேத ஆராய்ச்சியாளர்கள் இதை முரண்படுத்தும் விதத்தில் இயேசுகிறிஸ்து  பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்குப் பிரசங்கித்ததாக கருதுகின்றனர். (Ignatius, Letter to Magnesians, 9:2, Justin, Dialogue with Trypho, 72:4) இதன்மூலம் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை இயேசுகிறிஸ்து விடுவித்தார் என்று இவர்கள் கூறுகின்றனர். (J.Calvin, Catholic Epistles, p. 114), இயேசுகிறிஸ்து பரதீசுக்கு சென்று அங்கிருந்த பரிசுத்தவான்களுக்கு சத்தியத்தை முழுமையாக அறிவித்தார் என்பதே இவர்களின் விளக்கமாக உள்ளது. (E.C.S. Gibson, Thirty-Nine Articles of the Church of England, p. 159)

(17) வேதாகமத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத யூதர்களுடைய நூல்களின் செல்வாக்கினாலேயே இத்தகைய விளக்கம் உருவாக்கப்பட்டுள்ளதினால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளுக்குப் பிரசங்கித்தது இயேசுகிறிஸ்து அல்ல என்றும், ஏனோக்கே இப்பணியைச் செய்தவர் என்றும் கூறுகின்றனர். (E.J. Godspeed, 'Some Greek Notes; pp. 91-92) ஏனெனில் வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத நூல்களில் ஏனோக்கே இப்படி பணியைச் செய்துள்ளதாக ஒரு கற்பனைக் கதை உள்ளது. ஆரம்பகால வேதாமப் பிரதிகளில் 1 பேதுரு 3:19 ஏனோக்கின் பெயர் இருந்தாக இவர்கள் கூறினாலும் இதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. இதுவும் கி.பி. 18ம் நூற்றாண்டளவில் உருவாக்கப்பட்ட ஒரு கதையாகவே உள்ளது. (B.M. Metzger, Chapters in the History of New Testament textual Criticism, pp. 158-159)

(18) ஆதியாகமம் 6:2 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவகுமாரரைத் தேவதூதர்களாகவும், இத்தூதர்கள் மானிடப் பெண்களை இச்சித்து அவர்களைத் திருமணம் முடித்ததே தூதர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். இதுவே தூதர்களின் வீழ்ச்சி  நடைபெற்ற காலம் என்றால், இதன் பின்பே பாவம் உலகத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால், முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் மாத்திரம் இவ்வுலகில் இருந்த காலத்திலேயே பாவம் உலகத்தில் வந்துவிட்டதினால், பிசாசினதும், அவனைச் சேர்ந்த தூதர்களினதும் வீழ்ச்சி 3 ம் அதிகாரத்திற்கு முன்பே நடைபெற்றுள்ளது. மேலும், 6ம் அதிகாரத்தில் விழுந்துபோன தூதர்களையே பேதுரு காவலிலுள்ள ஆவிகள் என குறிப்பிட்டுள்ளார் என்றால், இந்த ஆவிகளுக்குப் பிரசங்கிக்கப்பட்ட சம்பவத்தை விழுந்துபோன சகல தூதர்களுக்கும் அறிவிக்கப்பட்ட செய்தியாக இவர்கள் விளக்குவது அர்ததமற்றதாகவே உள்ளது. இதனால் சில வேதஆராய்ச்சியாளர்கள், விழுந்துபோன தூதர்களுக்கும் மானிடப் பெண்களுக்கும் பிறந்த இராட்சதர்களே பிசாசுக்கள் என்றும் இந்தப் பிசாசுக்களுக்கே இயேசுகிறிஸ்து பிரசங்கித்தார் என்றும் கூறுகின்றனர். (J.R. Michaels, 1 Peter : Word Biblical Commentary, pp. 205-211) இவ்வாறு வேதாகமத்தில் சொல்லப்படாத காரியங்களை நாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலும், தூதர்களில் ஆண் பெண் வேறுபாடோ, பாலியல் செயற்பாடுகளோ இல்லாததினால்(மத். 22:30) அவர்கள் மானிடப் பெண்களை இச்சித்தார்கள் என்று ஆதியாகமம் 6ம் அதிகாரத்தை வியாக்கியானம் செய்வதும் தவறானதாகவே உள்ளது. இதுவும் வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத யூதர்களின் கற்பனைக் கதைகள் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விளக்கமாகவே உள்ளது.

(19) D.E. Hiebert, 'The Suffering and Triumphant Christ : An Exposition of 1 Peter 3:18-22' pp. 146-158; A.J.Bandstra, 'Making Proclamation to the Sprits in Prison : Another Look at 1 Peter 3:19' pp. 120-121; W.J. Dalton, 'The Interpretation of 1 Peter 3:19 and 4:6: Light from 2 Peter' pp.547-555

(20) வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத யூதர்களுடைய நூல்களில் ஒன்றான “முதலாம் ஏனோக்கு“ என்னும் புத்தகத்தில், மானிடப் பெண்களை இச்சித்து அவர்களுடன் உறவு கொண்டதினால் விழுந்துபோன தூதர்களின் மீதான தேவ தண்டனையை அறிவிப்பதற்காக அவர்கள் இருக்குமிடத்திற்கு ஏனோக்கு சென்றதாகவும், ஏனோக்கின் பிரசங்கத்தைக் கேட்டு  விழுந்துபோன தூதர்கள் மனந்திரும்பியபோதிலும், ஏனோக்கு அவர்களுடைய மனந்திரும்புதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் கதையு்ள்ளது, (1 ஏனோக்கு 13:1-2)

(21)  விழுந்துபோன தூதர்களுக்கு இயேசுகிறிஸ்து பிரசங்கித்ததைப்பற்றியே பேதுரு குறிப்பிட்டுள்ளதாகக் கருதுபவர்கள், இத்தூதர்கள் யார்? இயேசுகிறிஸ்து எவ்விடத்தில் எக்காலத்தில் இவர்களுக்கு பிரசங்கம் பண்ணினார்? என்னும் விஷயங்கள் கருத்துமுரண்பாடுடையவர்களாக உள்ளனர். சிலர், இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் மரித்தோர் இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்த நோவாவின் காலத்தில் விழுந்துபோன தூதர்களுக்குப் பிரசங்கித்ததாகக் கூறுகின்றனர். (W.W.Wierbe, Be Hopeful : An Exposition of 1 Peter, p. 92) ஆனால் நோவாவின் காலத்தில்  விழுந்துபோன தூதர்களும் மரித்தோரும் ஒரே இடத்தில் இருப்பதாகக் கூறும் இவ்விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஆனால் பிசாசின் தூதர்கள் இருந்த இடத்திற்கே இயேசுசுகிறிஸ்து சென்றதாகவும் ((J. MacArthur, The MacArthur Bible Commentary, p. 1915) அங்கிருந்த விழுந்துபோன ஆவிகளுக்கு அவர் இரட்சிப்பைப் பற்றி பிரசங்கித்ததாகவும் கூறுகின்றனர்.  (E.Best, 1 Peter: The New Century Bible Commentary, p 140-146)  இயேசுகிறிஸ்து மரித்தோரின் ஆவிக்கள் இருந்த ஹேதீசுக்குச் சென்று அங்கிருந்தவர்கள்மீதான தேவனுடைய தண்டனையையும், பிசாசின் மீதான தமது வெற்றியையும் அறிவித்தாகச் சிலர் கூறுகின்றனர். (F. Loofs, 'Desent to Hades(Christ's)' in Encyclopedia of Religion and Ethics Vol. 4 pp. 656-657) எனினும் பெரும்பாலான வேதஆராய்ச்சியாளர்கள்  இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் நடைபெற்ற சம்பவமாகவே இதை விள்ககியுள்ளனர். (E.G. Selwyn, The First Epistle of St. Peter, pp 197-198; J.N.D. Kelly The Epistles of Peter and Jude: Black's New Testament Commentary, p. 152; P.H.Davids, 1 Peter: The New International Commentary, p. 138) இவர்களில் சிலர்  இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம் மகதலேனா மரியாளுககுக் காட்சி கொடுத்த பின்னர் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். (W.J. Dalton, Proclamation to the Spirts, pp. 185-186) ஆனால் ஏனையவர்கள்  இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் பரமேறுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அல்லது அவர் பரமேறிச்சென்றபோது நடைபெற்ற சம்பவமாக இதை விளக்குகின்றனர். (M.Eaton, 1 Peter : Preaching Through The Bible, pp. 82-83; T.R. Schreiner, 1, 2 Peter, Jude: New American Commentary, p. 188-190)


(22) F.W. Beare, 1 Peter : Greek Text with Introduction and  Notes, p. 172

(23) ஆவிகள் என்னும் சொல் தூதர்களைக் குறிப்பிடுவதற்கே பொருத்தமானது என்னும் தர்க்கத்திலும் உண்மை இல்லை. வேதாகமத்தில் மனிதர்களுடைய ஆவிகளைக் குறிப்பிடுதற்கும் இச்சொல்லே உபயோகிக்கப்பட்டுள்ளது, எனவே, காவலிலுள்ள ஆவிகள் மரித்த மனிதர்களின் ஆவிகளாகவே உள்ளன. மேலும், இவ்வதிகாரத்தின் கடைசி வசனத்தில் தூதர்களைக் குறிப்பிட்ட தேவதூதர்கள், அதிகாரங்கள், வல்லமைகள் என்னும் வார்த்தைகளைய பேதுரு உபயோகித்துள்ளதினால், ஆவிகள் என்னும் சொல்லை அவர் தூதர்களைக் குறிப்பிட உபயோகித்துள்ளார் என்று கூறமுடியாது. பவுலினுடைய நிருபங்களிலும் தூதர்கள் இவ்விதமாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

(24) இவ்வதிகாரத்தின் கடைசி வாசனத்தில் “போய்“ என்னும் வார்த்தை  இயேசுகிறிஸ்து பரத்திற்குச் சென்றதைக் குறிப்பதனால், “அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்“ என்னும் வாக்கியத்திலும் “போய்“ என்னும் சொல்  இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குச் சென்றதையே குறிப்பதாகச் சிலர் வாதிடுகின்றனர். (T.R. Schreiner, 1,2 Peter, Jude: The New American Commentary, p. 186) ஆனால் இவ்வதிகாரத்தின் கடைசி வசனத்தில் “போய்“ என்னும் வார்த்தைக்கு முன்னர் பரலோகத்திற்கு என்னும் சொல் உள்ளது. இதைப் போல, எங்கு போனார் என்பதைக் குறிப்பிடாமல் “போய்“ என்று மட்டும் உள்ள சொல்லைப் பரலோகத்திற்குப் போனார் என்று விளக்க முடியாது. (E.Best, 1 Peter, New Century Bible Commentary, p. 141)

(25) 1 பேதுரு 1:10-11 இல் உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(26) J.S. Feinberg, '1 Peter 3:18-20 Ancient Mythology and the Intermediate State' pp. 303-336; W.Grudem, 1 Peter: Tyndale New Testament Commentary, pp. 155-161, 203-239; J.K. Skelton, 'A Glance at Some Old Problems in First Peter' pp. 1-9; R.M. Raymer, 1 Peter: The Bible Commentary New Testament, p. 851; W.Kelly, Preaching to the Sprits in Prison, pp. 3-89; P. Patterson, A Pilgrim Priesthood: An Exposition of First Peter, pp. 134-146, 195-199


(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் அவர்கள் எழுதிய மரணத்தின் மறுபக்கம் (விரிவுபடுத்தப்பட்ட 3ம் பதிப்பு) எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி)










(18)

Saturday 14 April 2012

ஜெருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது இயேசுநாதரின் கல்லறையா?

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுகின்றன. மனிதனின் ஆராய்ச்சிக் களங்கள் பெரும்பாலும் மண், விண், கடல் ஆகியவற்றோடு தொடர்புடையனவாகவே இருக்கின்றன. விண்ணகப் பரப்பிலும் மண்ணின் அடியிலும் அளவில்லாத ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், தற்போது ஆன்மீக இறைநிகழ்வுகள் சம்பந்தமான விடயஙகளையும் விட்டுவிடவில்லை.


இஸ்ரேலில் இருக்கின்ற ஜெருசலேம் நகரத்தில் மிகப் பழைமையான ஒரு கல்லறையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கல்லறை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 



இக்கல்லறை ஜெருசலேம் நகரத்தில் ஒரு நவீன மாடிக் கட்டிடத்தின் அடியில் காணப்பட்டிருக்கின்றது. இது கி.பி. 70 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் இதனை இயேசுநாதரின் ஆரம்பகால சீடர்கள் அமைத்திருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. கல்லறைக்கு உள்ளே சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் “புனித ஜெகோவா விழித்தெழு“ என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை “தொலைதூரக் கட்டுப்பாட்டு புகைப்படக் கருவி“ மூலமாக கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் போலவே மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் ஒரு மனிதன் சிக்கியுள்ளதைப் போன்ற உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது பைபிள் கூறப்பட்டிருக்கும் யோனா என்கிற தேவ மனிதரின் கதை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 

பைபிளின்படி இந்தக் கதையில் யோவாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம் பிற்பாடு அந்த மனிதனை விட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லறைப் பெட்டியில் காணப்படுகின்ற மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது அது யோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது கண்டறியப்பட்டது. கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை கிறிஸ்தவ நம்பிக்கையாகிய “உயிர்த்தெழுதல்“ தெய்வீக அதிசய நிகழ்வைக் குறிப்பிடுவதாக உள்ளது என 'Live Science' என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதைப்போன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் யோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கம்தான் என்றபோதிலும் இம்மாதிரியானவை எதுவும் மிகத் தொன்மையாக முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்தாக இருக்கப்பெறவில்லை. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த  இந்தக் கல்லறை கண்டுபிடிப்புகளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் “பைபிளும் விளக்கமும்“ என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 


புதிதாக வெளியிடப்படும் இயேசுவின் கல்லறை பற்றிய கண்டுபிடிப்பு மற்றும் தகவல்களை இணையத்தில் சேர்ப்பது மிகப் பெரிய சர்ச்சையை உண்டுபண்ணக் கூடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள். 1981 ஆம் ஆண்டிலேயே ஜெருசலேத்தின் இந்தக் கல்லறைக் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுவி்ட்டபோதிலும், யூதக் குழுக்கள், கல்லறைகளைத் தோண்டுவதையும் ஆய்வு செய்வதையும் எதிர்த்தால், தோண்டி எடுக்கப்பட்ட கல்லறை  அதே இடத்தில் மீண்டும் சீலிடப்பட்டு புதைக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்களும் அஙகிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

தற்போது சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவர் தபோரும் அவரது சகாக்களும் கல்லறையை தோண்டுவதற்கு அனுமதி பெற்றனர். ஆயினும் யூத அமைப்புக்களின் கடும் எதிர்பைப் முன்னிட்டும் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கு பதிலாக தொலைதூரக் கட்டுப்பாட்டின் மூலம் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : “ஆசீர்வாதம்“ மாத சஞ்சிகை  - April 2012  கட்டுரையாசிரியர் அ. ஆராக்கியராஜ்.








Thursday 12 April 2012

எதிரியையும் நேசிக்கும் அன்பு

1883 ஆம் ஆண்டு இரட்சண்ய சேனையின் மிஷனரியாக இலங்கைக்கு வந்த வில்லியம் கிலாட்வின்  கொழும்பில் பல இடங்களில் திறந்தவெளிக் கூட்டங்களை நடத்தி வந்தார். இரட்சணிய சேனையின் ஆரம்ப காலக் கூட்டங்களுக்கு மக்கள் கல்லெறிவதன் மூலமே தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

ஒரு தடவை, தன் மீது கல்லெறிந்தவன் யார் என்பதைக் கண்டு கொண்ட வில்லியம் கிலாட்வின், அவனது கரங்களைப் பற்றிப் பிடித்து “சகோதரனே இந்த கையினால் தானே நீ என் மீது கற்களை வீசினாய்?“ எனக் கூறி, அக்கரத்தை முத்திட்ட்டார். பிற்காலத்தில் அவன் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சண்யசேனை சபையின் அங்கத்தினனாகினான்.

எதிரிகளை நேசிப்பதே கிறிஸ்தவ அன்பின் தன்மையாகும். வில்லியம் கிலாட்வின் அத்தகைய அன்புள்ளம் கொண்டவராக இருந்தார். கிறிஸ்தவர்களாகிய நாமும், நமக்கு எதிராய் செயற்படுகிறவர்களையும் நேசிக்க கடமைப்பபட்டுள்ளோம்

இயேசு இதைப் பற்றி அறிவுறுத்தும் போது “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;  என்றார்.

(நன்றி சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Wednesday 4 April 2012

இயேசுகிறிஸ்துவின் மரணம் (2)


முடிவுரை -



இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் என்பதற்கு காலத்துக்கு காலம் பல பதில்கள் இறையியலாளர்களால் கொடுக்கப்பட்டுள்ளதை மேற்கண்ட 6 கருத்துக்களும் அறியத்தருகி்ன்றன. ஒவ்வொன்றிலும் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. எனவே எந்த ஒரு கருத்தையும் நம்மால் முற்றாக நிராகரிக்க முடியாது. அதேசமயம் எல்லாவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனவே வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு இவற்றை நாம் ஆராய்ந்து இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து சிலுவை மரணம் பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தனித்தனியே மேற்கண்ட விளக்கங்கள் அறியத் தருகிறது. 

இயேசுகிறிஸ்து வியாதிகளுக்காக மரித்தாரா இல்லையா? என்பது இன்று பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது. சிலர் இயேசு மனிதனுடைய பாவத்துக்காக மட்டுமே மரித்தார்  என வாதிடுகையில், மற்றவர்கள் அவர் மனிதனுடைய வியாதிகளுக்காகவும் மரித்தார் என தர்கிக்கின்றனர். நாம் முதலில் இயேசுகிறிஸ்து வியாதிகளுக்காக மரிக்கவில்லை எனும் கருத்துடையவர்களின் தர்க்கங்களைப் பார்ப்போம். 

1) இயேசுகிறிஸ்து மனிதர்களுடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதே வேதத்தின் பொதுவான போதனையாகவுள்ளது.

2) இயேசுகிறிஸ்து நம் பாவங்களை சிலுவையில் சுமந்து பாவமில்லாத அவர் நமக்காக பாவமானாரே தவிர, அவர் மானிட வியாதிகளை எல்லாம் தன் மீது சுமந்து சிலுவையில அவர் வியாதியஸ்தராகவில்லை.

(3) இயேசுகிறிஸ்துவிடம் எத்தகைய பாவிகளும் வந்தால் உடனடியாக பாவமன்னிப்பைப் பெறுவது போல் அவரிடம் வரும் எல்லா வியாதியஸ்தர்களும் உடனடியாக சுகம் பெறாதமையால் அவர் வியாதியஸ்தர்களுக்காக மரிக்கவில்லை என்பதைக் காட்டும். 

(4) மத்தேயு ஏசாயா 53:4 ஐ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு அல்ல. சுகமாக்கும் ஊழியத்திற்கே உபயோகிக்கின்றார். (மத். 8:16-17) ஆனால் ஏசாயா 53:4 இயேசுகிறிஸ்து பாவங்களுக்கு பலியாவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் என்பதனால் மத்தேயுவின் உபயோகம் பிழையானது என்றும் அநேகர் கூறுகின்றனர். 

இயேசுகிறிஸ்து பாவத்திற்கு மரித்தார் என்பது உண்மையாயினும் அவருடைய சிலுவைப் பலியில் பாவத்தின் விளைவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வியாதியும் பாவத்தின் விளைவுகளில் ஒன்று என்பதனால் அவருடைய சிலுவையில் மானிட வியாதிக்கான பரிகாரத்தையும் கொண்டுள்ளது. எனவே,  இயேசுகிறிஸ்து மானிட வியாதிகளுக்காக மரிக்கவில்லை என கூறுவோர் கருத்துக்களை வேதாகமத்தின் அடிப்படையில் ஆராய்வோம். 

இயேசுகிறிஸ்து மனிதருடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதே வேதத்தின் பொதுவான போதனையாயிருப்பினும் அவரது சிலுவைப் பலியில் வியாதிகளுக்கும் பரிகாரமுள்ளது. வியாதிக்கு மூலகாரணம் பாவமே. மனிதனுடைய வீழ்ச்சி அவனுடைய ஆவிக்குரிய நிலையை மட்டுமல்ல சரீரத்தையும் பாதித்தது. இதனால் அவனுடைய சரீரம் வியாதிப்படக்கூடிய நிலையை அடைந்தது. எனவே இயேசு பாவத்திற்கு விடுதலையைக் கொடுக்கும் ஒரு பலியாக, வியாதிகளுக்கான பரிகாரத்தையும் உள்ளடக்கியதொன்றாகவே உள்ளதெனலாம். 

மனித பாவத்திற்கும் வியாதிக்குமிடையே தொடர்பு இருப்பதை வேதம் தெளிவாக காட்டுகிறது. சில சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் மறைமுகமாகவும் பாவமே வியாதியின் காரணமாக அமைகிறது. (1 கொரி. 11:17-30) உடன் கலா. 4 ஐயும் யோவான் 5 உடன் 9 ஐயும் ஒப்பிடவும்) நேரடியான தொடர்பு இருக்கும்போது பாவம் மன்னிக்கப்படாவிட்டால் வியாதி குணமடையாது. எனினும் எல்லா வியாதியுமே நாம் செய்யும் பாவத்தினால்தான் என கூற முடியாது. “நாம் பாவ சரீரத்தில் இருப்பதனாலேயே வியாதிகள் எமக்கு வருகிறது. (காசன்) பரலோக வாழ்வில் வியாதியோ துன்பமோ இருக்காது. (வெளி. 21:4, 22:3) 


இயேசுகிறிஸ்து பாவத்தை மட்டுமல்ல அதன் சாபங்கள் அனைத்தையுமே சிலுவையில் சுமந்தார். இற்றுள் வியாதியும் ஒன்று. . எனவே, சிலுவையில் நமக்காக பாவமானவர் வியாதியஸ்தராகமையினால் வியாதிகளுக்கான பரிகாரம் சிலுவைப்பலியில் இல்லை எனக் கூற முடியாது. “இங்கு நோய்களை சுமந்தார்“ என்பதில் சுமந்தார் என்பது நோய்வாய்ப்பட்டார் என்று மட்டுமல்ல நோய்களை நீக்கினார் என அர்ந்தந்தரும் மத்தேயுவின் அர்ததம் இரண்டாவதே. (பிரான்ஸ்) “இயேசுகிறிஸ்துவிடமிருந்து நாம் பெறும் நன்மைகளை அவருடைய சிலுவைப்பலிக்கு அப்பால் பெற முடியாது. தெய்வீக சுகம் இயேசுவின் சிலுவைப்பலியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமையினாலேயே இன்று அநேகருக்கு தெய்வீக சுகம் கிடைக்கிறது.“(காசன்)

இயேசுகிறிஸ்துவிடம் பாவமன்னிப்பைப் பெறவருகின்றவர்கள் அனைவரும் பாவமன்னிப்பைப் பெறுவதுபோல, எல்லா வியாதியஸ்தர்களும் குணமடையமலிருப்பது (2 கொரி. 12:7-9, தீமோ. 4:20 ஒப்பிடுக) இயேசுவின் சிலுவைப் பலியில் வியாதிகளுக்கான பரிகாரம் இல்லை என்பதற்கான ஆதாரமாகாது. ஏனென்றால் இயேசுவின் சிலுவைப்பலியில் மூலம் கிட்டும் எல்லா நன்மைகளையும் நாம் இப்போதே அனுபவிப்பதில்லை. உதாரணமாக “உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் இயேசுவின் சிலுவைப்பலியின் மூலமே நமக்கு கிடைப்பதொன்றாயினும் அது இப்பொழுதே நமக்கு கிடைப்பதில்லை. அதுபோலவே வியாதிகளிலிருந்து கிட்டும் விடுதலையும் தற்போது இடைக்கிடையே நமக்கு கிடைத்தாலும் பரலோக வாழ்விலேயே முழுமையான விடுதலை கிடைக்கும் (காசன்)

ஏசாயா 53 ஆம் அதிகாரம் இயேசு மக்களுடைய பாவங்களுக்காக மரிப்பதைப் பற்றிய தீரக்கதரிசனம் என்பதை மறுப்பதிற்கில்லை. மத்தேயு உட்பட புதிய ஏற்பட்டு ஆசிரியர்கள் அனைவருமே இதை இயேசுவின் சிலுவை மரணத்திற்கான தீர்க்கதரிசனமாகவே உபயோகித்துள்ளனர். (மத். 28 : 28 , 27:57 ; அப். 8:32-33 1 பேதுரு 2 :24) ஆனால் மத்தேயு 8:16-17 இல் அவர் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை இயேசுவின் குணமாக்கும் ஊழியத்திற்கே உபயோகிக்கிறார். வியாதிக்கும் பாவத்திற்கும் இடையே தொடர்பிருப்பதை நாம் மறக்கலாகாது. “இயேசுவின் ஊழியத்தில் அவருடைய குணமாக்கும் செயல்கள் சிலுவை மரணத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டமையால், அது ஏசாயா 53 இன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் செயலாக உள்ளது(காசன்) இயேசுவின் குணமாக்கும் ஊழியம் சிலுவை மரணத்திற்கு முன்பானது என்றாலும் மத்தேயு சிலுவை மரணத்திற்கு பின்பே இதை எழுதியுள்ளார். மேலும், மரணத்திற்கு முன்பும் இயேசு பாவங்களை மன்னித்துள்ளார். இவை நடைபெறவிருக்கும் சிலுவைப் பலியை எதிர்பார்த்து செய்யப்பட்டவைகளாகும். எனவே மத்தேயு ஏசாயா 53 ஐ பிழையாக உபயோகித்தார் என கூற முடியாது. 

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் எனும் தீர்க்கதரிசனம் ஆவிக்குரிய சுகத்தைப் பற்றியதாயினும் இதில் சரீரப்பிரகமாரமான சுகமும் உள்ளடக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இயேசுகிறிஸ்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை மட்டும் மீடக்கவில்லை. நம்முடைய சரீரத்தையும் மீட்டுள்ளார். (ரோமர் 8:23 ; 1 கொரி. 6:20) “இரட்சிப்பு ஆவிக்கு மட்டுமல்ல. சரீரத்திற்கும் கிட்டும் ஒன்று. (மொரிஸ்) (மத். 9:21-22 உடன் லூக் 7:50 ஒப்பிடவும்) இயேசுவின் சிலுவைப் பலியின் மூலமாகவே ஆன்மீக இரட்சிப்பு கிடைப்பதாலும் இயேசு நம் சரீரத்தையும் மீட்டுள்ளமையினாலும், சரீரப்பிரகாரமான சுகமும் அவரது சிலுவைப்பலியில் உள்ளடக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. (மொரிஸ்)