(இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கு வேதப்புரட்டர்களால் சுட்டிக்காட்டப்படும் வசனங்களில் இதுவும் ஒன்று. இவ்வசனம் நமக்குப் போதிப்பது என்ன? மூலமொழியில் இதற்கு எவ்வித அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன )
வெளிப்படுத்தல் 3:14 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயுமிருக்கிறவர்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை “தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருக்கிறவர்“ என்று வியாக்கியானம் பண்ணும் யெகோவாவின் சாட்சிகள். இவ்வாக்கியம், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாய் இருப்பதாகக் தர்க்கிக்கின்றனர்(31) இயேசுக்கிறிஸ்து தேவனால் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதனாலேயே, அவர் தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருப்பதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் என்பது யெகோவா சாட்சியினரின் தர்க்கமாகும். (32) இவ்வாக்கியத்தில் “ஆதி“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் (arche) (33) “ஆரம்பிப்பவர்“ என்றல்ல மாறாக “ஆரம்பம்“ என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகிறனர்(34) அதாவது இயேசுக்கிறிஸ்து “முதலாவது சிருஷ்டிப்பாக“ இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும்.
இவ்வசனத்தில் “ஆதி“ எனறு மொழிபெயர்க்கப்பட்டள்ள பதத்தை “ஆரம்பம்“ என்றும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மையாயினும் (35) இதற்கு “ஆரம்பிப்பவர்“ “ஆரம்ப ஸ்தானம்“ “தோற்றுவாய்“ “முதல் காரணம்“(36) என பல அர்த்தங்களும் உள்ளன.(37) வெளிப்படுத்தல் 3:14 இல் இப்பதம் “முதல்காரணம்“ எனும் அர்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (38) எனவே இப்பதம் சிருஷ்டிப்புக்குக் காரணர் யார் என்பதையே அறியத்தருகிறது. (39) உண்மையில், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிப்பின் காரணராய். சிருஷ்டிப்பை ஆரம்பித்தவராய் இருப்பதையே இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது (40) கி.பி 4ம் நூற்றாண்டிலிருந்து இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலி்த்து அவரை சிருஷ்டிக்கப்பட்டவராகக் கருதும் வேதப்புரட்டர்கள் இப்பதத்தை “ஆரம்பம்“ என்று மொழிபெயர்த்து இயேசுக்கிறிஸ்துவின் ஆரம்பத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது என்று வாதிட்டு வந்துள்ளபோதிலும(41) இப்பதம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது. ஏனென்றால் வெளிப்படுத்தல் புத்தகத்தின் ஏனைய வசனங்களில் இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (42) எனவே இதை முரண்படுத்தும் விதத்தில் வெளிப்படுத்தல் 3:14 இல் அவர் நித்தியமற்றவர், சிருஷ்டிக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. மேலும் வெளிப்படுத்தல் 5:13 இல் தேவனும் இயேசுக்கிறிஸ்துவும் வழிபாட்டுக்கு உரியவர்களாகவும் (43) ஏனைய சிருஷ்டிகள் அனைத்தும் இவர்களை வழிபடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதும் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. (44) அத்தோடு, வெளிப்படுத்தல் 19:10 இல் சிருஷ்டிக்கபட்டவைகளை வழிபடுவது தடைசெய்யப்பட்டிருப்பதும் வெளிப்படுத்தல் 5:13 இல் சிருஷ்டிக்கப்பட்டவைகள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதும், அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல வழிபாட்டுக்கு உரிய தெய்வம் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது.
(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் எழுதிய யொகோவாசின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி)
Footnote and References
(31) Let God be True, p 200
(32) Anonymous, Should You Believe in the Trinity p. 14
(33) மூலமொழியில் “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதம்
(34) Anonymous, Should You Believe in the Trinity p. 14
(35) “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதத்தை செயற்பாட்டுவினையில் (passive voice) மொழிபெயர்த்தாலே இத்தகைய அர்த்தம் வரும்
(36) “அர்க்கே“ (arche) எனும் பதம் செய்வினையில் (active voice) இத்தகைய அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
(37) S. Zodhiates, The Complete Word Study Dictionay, P 260
(38) W.F. Arndt & F.W. Gingrich, A Greek-English Lexicon of the New Testament and other Early Literature, p112
(39) S. Zodhiates, The Complete Word Study Dictionay, P 261
(40) “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதத்திலிருந்தே “ஆர்க்கிடெக்“ (architect) அதாவது “கட்டிட கலைஞர்“ எனும் பதம் உருவாயுள்ளது. இயேசுக்கிறிஸ்து சகலவற்றையும் சிருஷ்டித்த கலைஞராயிருப்பதையே இதுவும் சுட்டிக் காட்டுகிறது, (யோவான். 1:3, கொலோ. 1:16, எபி. 1:2)
(41) கி.பி. 4ம் நூற்றாண்டில் ஏரியசும் அதன் பின்னர் அவரைப் பின்பிற்றியவர்களும் இவ்விதமாகவே வசனத்தை வியாக்கியானம் செய்தனர்.
(42) வெளிப்படுத்தல் 1:18 இல் தாம் “சதாகாலங்களிலும் உயிரோடிருப்பதாக“ இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். அவர் எப்போதுமே இருப்பவர் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும் வெளிப்படுத்தல் 1:17 இலும் 22:13 இலும் “அல்பாவும் ஒமேகாவும்“ (கிரேக்க அரிச்சுவடியில் முதலும் கடைசியுமான எழுத்துக்கள்) எனும் விபரணத்து்டன் சேர்த்து இயேசுக்கிறிஸ்து “ஆதியும் அந்தமுமாகவும்“இ “முந்தினவரும் பிந்தினவருமாகவும்“ இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்பதையே அறியத் தருகிறது. (R.L. Thomas, Revelation 1-7 : An Exegetical Commentary, p.111) பழைய ஏற்பாட்டில் தேவன் நித்தியமானவர் என்பதைக் குறிக்கும் விவரணமே வெளிப்படுத்தலில் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.
(43) யெகோவா சாட்சிகள் இதையும் மறுதலித்து, இயேசுக்கிறிஸ்து மரியாதைக்குரியவராய் இருப்பதாகவும், தேவனு வழிபாட்டுக்குரியவராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
(44) வெளிப்படுத்தல் 5:13 இல் அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.“ என்று யோவான் தான் கண்ட தரிசனத்தை எழுதியுள்ளார். இவ்வசனத்தில் தேவனும் இயேசுகிறிஸ்துவும் சமமான நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இருவரையும் சகல சிருஷ்டிகளும் வழிபடுகின்றன. எனவே இவர்களிருவரும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றத. இவ்வசனத்தில் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பவர் தேவன் என்பதையும் ஆட்டுக்குட்டியானவர் இயேசுகிறிஸ்து என்பதையும் புத்தக விடயங்கள் அறியத் தருகின்றன.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment