- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 22 March 2012

இதயங்களை மாற்றும் வேதம்


பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்தைகளைக் கொண்டதாயிருக்கும் என்றால் அது வாசிப்போரை மாற்றக் கூடியதாய் இருக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின் ஜீவ வசன வார்த்தைகளினால் தங்கள் இருதயம் மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணி முடியாதது. பரிசுத்த மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணி முடியாதது. பரிசுத்த வேதாகமம் ஜீவனுள்ள வார்த்தை களைக் கொண்டிருப்பதனால் யார் வேண்டுமானாலும் திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் அதை வாசிக்கும்போது மாற்றப்படு வார்கள். 

இங்கிலாந்து தேசத்திலே பிராங் மாரிசன் என்ற ஒரு வழக்கறிஞர் இருந்தார் இவர் ஒரு நாத்தீகர். இவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கவில்லை என்ற ஒரு புத்தகம் எழுதி நிரூபித்தால் கிறிஸ்தவத்தி்ன் அஸ்பதிபாரங்கள் அசைக்கப்படும் என்று திட்டமிட்டார். புத்தகத்தை எழுதவும் உட்கார்ந்தார். புத்தகத்தை எழுதுவதற்காய் பரிசுத்த வேதாகமத்தை திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் வாசித்த அவர் விசுவாசியாக மாற்றப்பட்டார். 

இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கவில்லை என எழுத ஆரம்பித்த இவர் இயேசுகிறிஸ்து மெய்யாவே உயிர்த்தெழுந்தார்  இயேசு  கிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் என எழுதி முடித்தார். இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் Who moved the stone? அதாவது “கல்லைப் புரட்டியது யார்? என்பதாகும். இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் 'The Book that refused to be written'  “நான் எழுத மறுத்த புத்தகம்“ என தலைப்போடு ஆரம்பமாகின்றது. வேதத்தின் ஜீவ வார்த்தைகள் நாத்திகரான பிராங் மாரிசனை மாற்றி இயேசு கிறிஸ்து உயரித்தெழவில்லை என்று எழுத ஆரம்பித்த அவரை “இயேசு கிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்“ என்று எழுதும்படி செய்தது. 

பிராங் மாரிசனை மாற்றிய பரிசுத்த வேதாகமம் உங்களையும் மாற்ற வல்லது. வாசித்துப் பாருங்கள். பரிசுத்த வேதாகமத்தை திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் வாசியுங்கள். Oxford University இல் இரண்டு அறிஞர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். Gilbert West, Lord Littleton என்ற இவர்களிருவரும் வழக்கறிஞர்கள். கிறிஸ்தவம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் மேலும், பவுல் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்ட பின்பு சபைகளை ஸ்தாபித்தான் என்ற கருத்தின் அடிப்படையிலும்தான் கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டும் சம்பவிக்கவில்லை என்று ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி நிரூபித்தால் அது கிறிஸ்தவத்திற்கு பேரிடியாகும் என்று இவர்களிருவரும் தீர்மானித்தனர். 

Gilbert West இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று எழுதுவதற்கான குறிப்புகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.  Lord Littleton  பவுல் கிறிஸ்தவராக மாறவில்லை என ஆராய்ந்து எழுத ஆரம்பித்தார். வேதத்தை வாசித்து தனித்தனியே ஆராய்ச்சி செய்து சில காலம் கழித்து இருவரும் தங்கள் தங்கள் ஆராய்ச்சி குறிப்புகளோடு ஒருவரையொருவர் சந்தித்தனர். Gilbert West ஆராய்ச்சி செய்து எழுதிக் கொண்டு “இயேசு கிறிஸ்து மெய்யாகவே உயிர்தெழுந்தார்“ என்று. Lord Littleton எழுதிக் கொண்டு வந்திருந்தார் “பவுல் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டு உண்மையாகவே சபைகளை ஸ்தாபித்தான்“ என்று. Gilbert West எழுதிய புத்தகத்தின் பெயர் Observation of the History and evidence of Resurrection of Jesus Christ' அதாவது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரித்திரமும் அதற்கான ஆதாரங்களும் என்பதாகும். Lord Littleton  எழுதிய புத்தகத்தின் பெயர் Observation on the conversion and Apostleship of St. Paul அதாவது பவுலினுடைய மனமாற்றமும் அப்போஸ்தல ஊழியமும்“ என்பதாகும்.

திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் வேதத்தை வாசித்த Gilbert West உம் Lord Littleton  உம் மாற்றினார்கள். இவர்களை மாற்றிய பரிசுத்த வேதாகமம் உங்களையும் மாற்ற வல்லது. 

அநேகர் அறிந்த நாத்திகரான இங்கர்சால் ஒரு சமயம் இரயிலில் சென்ற கொண்டிருந்தபோது Lew Wallace என்ற வழக்கறிஞரை சந்தித்தார். இருவரும் கிறிஸ்தவத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிக்கொண்டு வந்தனர். அப்போது இங்கர்சால் Lew Wallace னிடம் இயேசு கிறிஸ்து தேவன் அல்ல. அவர் சாதாரண மனிதனே என்று நிரூபிக்கும் ஒரு புத்தகம் எழுதும்படி கேட்டுக் கொண்டார். அப்படியே அவரும் வேதத்தை வாசித்து ஆராய்ச்சி செய்து இயேசு தேவனல்ல என்று கிறிஸ்தவத்திற்கு எதிராக ஒரு புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். 

தனது புத்தத்தின் நான்கு அத்தியாயங்களை எழுதி முடித்த நிலையில் Lew Wallace பரிசுத்த வேததகமத்தின் வார்த்தைகளால் தொடப்பட்டார். புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோதே ஒருநாள் இயேசுவே தேவனுடைய குமாரன் என்று உணர்த்தப்பட்டார். தனது மேசையின் முன்பாக முழங்காற்படியிட்டார். தனது வாழ்க்கையில் முதன் முறையாக ஜெபித்தார். 50 வயதான அவர் தம் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்து கிறிஸ்தவராக மாறினார். தான் எழுதிய “இயேசு கிறிஸ்து தேவனல்ல அவர் சாதாரண மனிதனே“ என்று ஆரம்பத்தில் எழுதத் தீர்மானித்தவர் மாற்றப்பட்டவராய் இயேசு கிறிஸ்து தேவனே என்று எழுதி முடித்தார். 

அவர் எழுதி புத்தகம் இலட்சக்கணக்கான மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டும் திரைப்படமாய் ஓடியதுமான Benhur ஆகும். Lew Wallace மாற்றிய வேதாகமம் உங்களையும் மாற்ற வல்லது. திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் அதை வாசித்துப் பாருங்கள். 

(இவ்வாக்கமானது சகோ. தாயப்பன் எழுதிய அரிய வேதம் அறிய வேண்டிய வேதம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்) 

Wednesday 14 March 2012

கிறிஸ்தவத்தில் இருக்கும் கிறிஸ்து

இந்தியாவின் பிரபல கிறிஸ்தவ பணியாளரான சாது சுந்தர்சிங் என்பார், இந்து மதக் கல்லூரியொன்றுக்கு விஜயம் செய்தபோது, உலக மதங்கள் பற்றிய பாடத்திற்கான விரிவுரையாளர் ஒருவர் அவரிடம், “உமது பழைய மதத்தில் இல்லாத எதனை நீர் கிறிஸ்தவத்தில் கண்டு கொண்டீர்? எனக் கேட்டபோது, “அங்கு கிறிஸ்து இருக்கிறார்“ என்று பதிலளித்தார்


சாது சுந்தர்சிங்கின் பதிலைக் கேட்ட அவ்விரிவுரையாளர், “அது எனக்குத் தெரியும். முன்னர் உம்மிடம் இல்லாத அல்லது நீர் அறியாதிருந்த எதனை கிறிஸ்தவத்தில் கண்டீர்? எனக் கேட்டார். “கிறிஸ்வத்தில் நான் கண்டு கொண்டது இயேசுகிறிஸ்துவையே“ என சாதுசுந்தர் சிங் பதிலளித்தார். 


இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார் எனக் கருதும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் இக்காலத்தில் சாது சுந்தர்சிங்கின் அனுபவரீதியான பதில், கிறிஸ்வத்தில் மட்டுமே இயேசுகிறிஸ்து இருக்கிறார் எனும் உண்மையை உறுதிப்படுத்துகிறது. 

“நான் கர்த்தர் இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்“. (ஏசா. 42:8) எனத் தெரிவித்துள்ள தேவன், விக்கிரக வழிபாடுகளுள்ள மதங்களில் எல்லாம் தன்னைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறுவது உண்மைக்கு முரணாகவே இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 




Tuesday 6 March 2012

இயேசுகிறிஸ்துவின் மரணம்



இயேசுகிறிஸ்துவின் பூலோக ஊழியத்தின் இறுதியானதும் முக்கியமானது மான அம்சம் அவருடைய மரணமே. அவ் தன்னுடைய உயிரை மக்களுக்காக கொடுப்பதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். (மத். 20:28 ; மாற். 10:45) எவரும் அவருடைய உயிரை அவரிடமிருந்து எடுக்கவில்லை. மாறாக அவரே அதை விரும்பிக் கொடுத்தார். (யோவான். 10:18)

இயேசுகிறிஸ்துவின் மரணம் கிறிஸ்தவ மார்க்கத்தின் உபதேசத்தில் மிகவும் முக்கியமானதொன்று. இன்றைக்கு அநேகர் இயேசுவின் மரணத்தை மறுதலித்து வருவதனால் இதன் இறையியில் விளக்கங்களை பார்க்கமுன் இதற்கான ஆதாரங்களை ஆராய்வோம். இதற்காக ஆசிரியர் எழுதிய “இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா, இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா? சத்தியவசனம் July-August 1991 வாசிக்கவும். 

இயேசுகிறிஸ்துவின் மரணம் கிறிஸ்தவ இறையியலோடு சம்பந்தப்பட்டதொன்றாகையால் இதைபற்றிய மூன்று கேள்விகளுக்கு பதிலை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். 

1. இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார்?

இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப் பற்றி பலதரப்பட்ட விளக்கங்கள் இறையியலில் உலகில் தோன்றியுள்ளன. இயேசுகிறிஸ்துவின் மரணத்தை அவசியமாக்கியது எது? அவர் ஏன் மரிக்க வேண்டும்? அவர் மரிக்காமலேயே அதாவது கொடூரமாமான ஒரு மரணத்தை தேவன் அவசியமற்றதாக்கி மக்களை வேறுவழியில் இரட்சித்திருக்கக்கூடாதா எனும் கேள்வி ஆரம்பகாலம்முதல் கிறிஸ்தவ இறையியலாளர்களை குழப்பி வந்துள்ளது. இதனால் அவர்கள் தத்தமது கருத்துக்களை காலத்துக்காலம் தெரிவித்து வந்துள்ளனர். அவற்றை சுருக்கமாக பார்ப்போம்

(அ) பிசாசை திருப்பதிப்படுத்துவதற்காக இயேசுகிறிஸ்து மரித்தார்

இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தை அவசியமாக்கியது பிசாசு என்பதே ஆதி சபைப்பிதாக்களின் கருத்தாக இருந்து. வீழ்சியின் காரணமாக மக்கள் பாவத்துக்கு மட்டுமல்ல பிசாசுக்கு அடிமைகளாயிருந்தனர். இவர்களை இவ்வடிமைத்தனத்திருந்து மீட்பதற்காகவெ இயேசு மரித்தார் என அவர்கள் கருதினர். எனினும் “தேவனே பிசாசைத் திருப்பதிப்படுத்தும் அளவுக்கு அவன் மக்கள்மீது அதிகாரம் உடையவனாய் இருந்தான் எனும் ஒரு தவறான கருத்துக்கு இடம் வகுக்கின்றது“ (ஜோ.எஸ்)

பிசாசைத் திருப்திப்படுத்தவே தேவன் இயேசுவை சிலுவையில் மரிக்க கொடுக்க வேண்டியிருந்தது என ஆதிசபையினர் கருதியமையால், இயேசுவின் சிலுவை மரணம் பிசாசிற்கும் தேவனுக்குமிடையே ஏற்பட்ட ஒரு பரிமாற்றமாக,  அதன் அடிமைத்தனத்தில் இருப்பவர்களை விடுவிப்பதற்காக பிசாசு கேட்ட கிரயத்தை தேவன் செலுத்துவதற்காகவே இயேசுவை சிலுவையில் பலியாக கொடுத்தாக கருதப்பட்டது. 

பிசாசிற்கும் தேவனுக்கும் நடைபெற்ற இந்த பரிமாற்ற செயலில் பிசாசு ஏமாற்றமடைந்தான் என்றும சபைப்பிதா ஒரிகன் போதித்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலை அறியாதிருந்த பிசாசு, அவரைத் தன்னிடமாய் வைத்திரு்கக முடியாதவனாய் போனமையால் அவன் ஏமாற்றமடைந்தான் என்பதே இவரது கருத்தாகும் மக்களை அதுவரை காலமும் ஏமாற்றி வந்தவன் இப்போது ஏமாந்து வி்ட்டான் என அவர்கள் கருதினர். 

இக்கருத்தில் ஒருசில உண்மைகள் இருந்தாலும் கூட(அதாவது பாவிகள் பிசாசுக்கு அடிமைகளாயிருப்பது) “பிசாசைத் தேவன் திருப்பதிப்படுத்தும் அளவுக்கு அவன் மனிதர் மீது ஆதிக்கமுடையவனாக இருந்தமையால் கிறிஸ்துவின் மரணம் அவசியமானதாகியது என கூறுவதற்கில்லை. (ஜோ.எஸ்) “ஆதிசபையில் பிரபல்யமாயிருந்த இக்கருத்து போதிய ஆதாரமற்றுக் காணப்பட்டமையால் காலப்போக்கில் இல்லாமற் போய்விட்டது. (லூபே)


(ஆ) தேவபிரமாணத்தை திருப்பதிப்படுத்துவதற்காக இயேசுகிறிஸ்து மரித்தார். 

தேவனுடைய பிரமாணம் ரத்துச் செய்யப்பட்ட முடியாததொன்று. பிரமாணம் மீறப்படும்போது அதற்கான தண்டனை கிடைப்பதை தவிர்க்க முடியாது. பாவிகள் தேவனுடைய பிரமாணத்தை மீறியமையால் அப்பிரமாணத்தைத் திருப்பதிப்படுத்துவதற்கான அத்தண்டனையை இயேசு பெற்றுக்கொள்வதற்காக மரித்தார். 

இக்கருத்தை விளக்க தானியேல் 6அம் அதிகார சம்பவம் உபயோகிக்கப்படுவதுண்டு. தீரியுவின் பிரமாணம் மாற்றப்பட முடியாததாயிருந்தது. இதனால் தானியேலை சிங்கங்களின் குகையில் போடுவதைத் தவிர வேறு வழியற்றவனாக அவன் இருந்தான். அவனால் தானியேலைத் தப்புவிக்க விரும்பியும் முடியாதிருந்தது. அவன் தான் வகுத்த பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவனாக இருந்தான். அதேபோலவே நம்மை நேசித்து நம்மை மீட்க விரும்பும் தேவன் வகுத்த பிரமாணத்தை மீறி நம்மை மீட்க முடியாது. பிரமாணத்தின்படியான தண்டனை கொடுக்கப்படல் வேண்டும். இதனால் இயேசுவின் சிலுவை மரணம் அவசியமாகியது. இங்கு பிரமாணத்தின்படியான தண்டனை கொடுக்கப்பட்டு பிரமாணம் திருப்பதிப்படுத்தப்பட்டது. “மீறப்படும்போது தகுதியான தண்டனை கொடுபடாத பிரமாணம் ஒரு பிரமாணமாக இருக்க முடியாது. (ஹெ.வே) தேவன் தான் ஏற்படுத்திய பிரமாணங்களை நீக்காதவர் என்பதனால் அதை மீறிய பாவிகள் மீட்படைய பிரமாணத்தை திருப்திப்படுத்தும் செயல் அவசியமாகியது என்பதே இக்கருத்தின் தாற்பாரியமாகும். (கலா. 3:10, 13 ஒப்பிடுக)

நான்காம் நூற்றாண்டில் அம்புரூஸ், ஹிலரி எனும் சபைப்பிதாக்கள் தேவனுடைய பிரமாணத்தை ரோம அரச சட்டத்திற்கு ஒப்பிட்டு இக்கருத்தை வலியுறுத்தினர். 16ம் நூற்றாண்டு சீர்த்திருத்தவாதிகளும் இயேசு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படிந்தது மட்டுமல்ல அது மீறப்பட்டதற்கான தண்டனையையும் தானே பெற்று அதை மீறியவர்களே அதன் தண்டனையிலிருந்து மீட்பார் என்பதே இவர்களது போதனையாயிருந்தது. 


இக்கருத்திலும் ஓரளவு உண்மையிலிருந்தாலும் தேவனுடைய பிரமாணங்களை நாட்டின் சட்டங்களுக்கு சமமானவைகளாக அல்லது இயற்கை நியதிகளுக்கு ஒப்பானவைகளாக கருதி தரியுவைப்போல தேவனும் தான் ஏற்படுத்திய சட்டத்தினால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு வந்தமையினாலேயே இயேசுவை சிலுவைக்கு அனுப்ப வேண்டியிருந்து என கூறமுடியாது. 


(இ) தேவனுடைய கனத்தை திருப்பதிப்படுத்த இயேசுகிறிஸ்து மரித்தார்

ஆரம்ப கிரேக்க சபைப் பிதாக்கள் பிசாசைத் திருப்பதிப்படுத்த அவனுக்கு கொடுத்த கிரயமே இயேசுவின் சிலுவைமரணம் என்றும் லத்தீன் சபைப்பிதாக்கள் தேவனுடைய பிரமாணத்தைத் திருப்பதிப்படுத்து வதற்காகவே இயேசு மரிக்க வேண்டியிருந்தது என்றும் போதித்தனர். 11 ஆம் நூற்றாண்டில் அன்சலம் என்பார் தேவனுடைய பாதிக்கப்பட்ட கனத்தை திருப்திப்படுத்துவற்காகவே இயேசு மரித்தார் என போதித்தார். 

அன்சலம் தன்னுடைய இறையியலில் இயேசுவின் மாம்சாவதாரத்திற்கும் சிலுவைப்பலிகளுக்குமிடையேயுள்ள தொடர்பை சிறப்பான முறையில் விளக்கினார். பிசாசு மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் ஆதிச்சபையின் கருத்தை இவர் ஏற்றுக்கொண்டாலும் கூட தேவன் தண்டனையைத் தவிர வேறெதையும் பிசாசுக்கு கொடுக்க வேண்டியிருக்கவில்லை என அறியத்தந்தார். அதேசமயம் மனிதனே தேவனுக்கு அவருக்குரியதை கொடுக்க வேண்டியவனாயிருந்தான் என்றும் இவர் கூறினார். பாவம் செய்வது என்பது தேவனுககுரியதை மனிதன் எடுத்துக்கொள்வது என கூறிய இவர் பாவம் செய்பவன் தேவனை கனவீனம் கண்ணுகிறான் என்றார். மேலும் நாம் மற்றவர்களை மன்னிப்பதுபோல் தேவனும் நம்மை மன்னிப்பார். என எண்ணுபவன் பாவத்தின் பாரதூரமான தன்மையை அறியாதவனாயிருக்கின்றான். தேவசித்தத்தை மீறும்போது அது அவரை அவமானப்படுத்தி நிந்திக்கும் செயலாகும். இதனால் அவன் தான் தேவனிலிருந்து எடுத்துக் கொண்ட கனத்தை அவருக்கு திருப்பிக்கொடுக்க வேண்டியவனாயிருக்கிறான். தேவனும் தனது கௌரவத்தையும் கனத்தையும் விட்டுக் கொடுக்காதவராக இருக்கிறார். இதனால் மனிதன் அதை அவருக்கு செலுத்த வேண்டியவனாயிருக்கிறான். எனினும் மனிதனால் இது செய்ய முடியாததொன்றாக இருக்கின்றது என்று அன்சலம் போதித்தார். 

மனிதனால் செய்யமுடியாத இதை தேவனால் மட்டுமே செய்யமுடியும். எனினும் இதை மனிதனே செய்ய வேண்டும். இதனால் தேவ மனிதராக இருக்கும் ஒருவராலேயே செய்ய முடியும் என அன்சலம் கருதினார். தேவனுடைய கனத்தை திருப்பதிப்படுத்தக்கூடியவர் முழுமையான மனிதனாகவும் அதேசமயம் முழுமையான தேவனாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தேவமனிதனாக தேவகனத்தை இயேசுகிறிஸ்து திருப்திப்படுத்தினார். மரிக்க வேண்டியிராத பாவமற்ற அவர் தன்னையே மரிக்க கொடுத்து தேவனைக் கனப்படுத்தினார். பாவம் காரணமாக தேவனைவிட்டு அகன்று சென்றவர்கள், அவரைத் திருப்பதிப்படுத்த அவரிடம் தன்மையே அர்ப்பணிக்க வேண்டும். இயேசுகிறிஸ்து மரண பரிந்தியம் தன்னை அர்ப்பணித்தார். இதனால் பாதிக்கப்பட்ட தேவனுடைய கனம் திருப்தியடைந்தது என்பதே அன்சலமின் போதனையாகும். 


தேவனுக்கு முழுமையாக கீழ்படியவேண்டிய மக்கள் கீழ்படியாமல் போனமையால் தேவகௌரவத்திற்கு ஏற்பட்ட நிந்தையை நீக்கி அவரைத் திருப்பதிப்படுத்த இயேசுகிறிஸ்து அவருக்கு முழுமையாக கீழ்பப்படிந்து தேவகௌரவத்தை திருப்பதிப்படுத்தினார் எனும் அன்சல்மின் போதனை தேவன் தன்னுடைய கௌரவத்தையும் கனத்தையும் மட்டுமே கருத்திற் கொண்டவர் எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இது அக்காலத்தைய அரசர்கள் தமது கௌரவத்திற்காக செயல்பட்ட விதத்தை பிரதிபலிப்பாகவே உள்ளது. 



(ஈ) தேவனுடைய அன்பைக் காட்டுவதற்கு இயேசுகிறிஸ்து மரித்தார்

அன்சலமினுடைய காலத்தில் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டு தத்துவஞானியும் இறையியலாளருமான பீட்டர் அபலார்ட் (1079-1102) இயேசுகிறிஸ்துவின் மரணம் தேவ அன்பைக் காட்டும் செயல் என்று போதித்தார். இயேசுகிறிஸ்துவின் மரணம் மக்களின் பாவத்துக்கான மரணம் என்பதை வன்மையாக எதிர்த்த இவர், இது கொடியதும் தீமையானதுதான செயல் என வாதிட்டார். பாவத்துக்கான பிராயசித்த பலியாக அல்ல. மாறாக தேவனுடைய அன்பு எந்த அளவுக்கு பெரியது என்பதைக் காட்டவே இயேசு மரித்தார் என போதித்தோடு சிலுவையில் வெளிப்பட்ட அன்பைக் காணும்போது நாமும் தேவனை நேசிக்கத் தூண்டப்படுகிறோம் இதனால் மனந்திரும்பி வருகிறோம் என்றார். இயேசுவின் சிலுவை மரணம் இதற்காக மட்டுமே என கூறமுடியாது. அத்தோடு தேவ அன்பைக் கண்டு நாம் அவரை நேசிக்கத் தூண்டப்பட்டு அவரை நேசிக்கும்போது மன்னிப்பைப் பெறுகிறோம் என்பது தேவவத்திற்கு முரணான கருத்தாகும். இதன்படி நாம் தேவன்மீது வைககும் அன்பே நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அடிப்படையாயுள்ளது என கூற முடியாது. 

12ம் நூற்றாண்டில் உருவான இக்கருத்து நீண்டகாலத்திற்கு பிறகே அதாவது 19ம் நூற்றாண்டிலேயே பிரபல்யமடையத் தொடங்கியது. தேவன் அன்பானவர் மனிதன் அவரிடம் வர பயப்படத்தேவையில்லை. தேவனைப் பற்றி பயமடைந்திருந்தவனுக்கு தேவ அன்பைக் காட்டவே இயேசு மரித்தார் எனும் கருத்து இன்று அநேகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மை நேசித்து நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்கான காரியங்களை சிலுவையில் செய்தார் என கூறாமல், இப்போதனையானது, சிலுவையில் செய்யப்பட்ட செயல் நம் உள்ளத்தில் அன்பைப் தூண்டுவதனால், நாம் அவரிடம் வருகிறோம். அவர் பாவத்தை எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறது“ (ஜோ.எஸ்) தேவன அன்பு வெளிப்பட்டதன் காரணத்தை மறுதலிக்கும் வண்ணம் இயேசுவின் மரணத்தை நம்மால் விளக்க முடியாது. தேவ அன்பின் காரணத்தை அறியாத நிலையி்ல் அவரை நம்மால் நேசிக்க முடியாது என்பதையும் நாம் மறக்கலாகாது. பாவிகள் பெறவேண்டிய தண்டனையை சிலுவையில் இயேசுகிறிஸ்து பெற்றமையினாலேயே தேவஅன்பை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. 

(உ) தீமையின் மீது வெற்றியீட்டுவதற்காக இயேசுகிறிஸ்து மரித்தார்

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தமை அவர் தீமையோடு போரிட்டு அதை வெற்றியீட்டியதைக் காட்டுவதாக குஸ்டால் அயூலன் என்பார் தெரிவித்தார். எனினும் அக்கருத்து மக்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட்டதைப் பற்றி எதுவும் கூறாது வெறுமனே பிசாசின் மீதான வெற்றியாகவே இயேசுவின் சிலுவை மரணத்தை கருதுகிறது. மேலும், இயேசுகிறிஸ்து தீமையை மேற்கொண்டார் என்று கூறும் இக்கருத்து இன்றைய உலகில் தீமை அதிகரித்திருப்பதை முரண்படுத்துவதாக உள்ளது

(ஊ) மனிதனுடைய சரீர உபாதைகளுக்காக இயேசுகிறிஸ்து மரித்தார்

இயேசுகிறிஸ்து மனிதனுடைய பாவங்களுக்காக மட்டுமல்ல வியாதிகளுக்காகவும் மரித்தார் எனும் போதனை அண்மைக்காலத்தில் பிரபல்யம் பெற்று வருகிறது. மானிட வீழ்ச்சி சரீர வியாதிகளுக்கு காரணம் என்பதை அடிப்படையாகக் கொண்டே இக்கருத்து உருவானது வீழ்ச்சியினால் ஏற்பட்ட சாபங்களுள் வியாதியும் ஒன்று என கருதப்படுகி்றது. “வியாதியின் ஆரம்பம் ஆவிக்குரிய காரணியாய் இருப்பதனால், ஆவிக்குரிய பிரகாரமே சரீரப்பிரகாரமான வியாதி குணப்பட வேண்டும். இயேசுவின் சிலுவைப்பலி வியாதிகளில் இருந்து கிட்டும் மீட்பையும் உள்ளடககியுள்ளது. (ஏ.சி)

(வளரும்)

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய கிறிஸ்தியல் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி)