- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday, 19 May 2011

சங்கீதங்களின் உருவகங்கள்


நூல் : - சங்கீதங்களின் சத்தியங்கள்
ஆசிரியர் : - சகோ. வசந்தகுமார்
வெளியீடு : -  இலங்கை வேதாகமக் கல்லூரி


இஸ்ரவேல் மக்களுடைய பாடல் புத்தகத்திலுள்ள சங்கீதங்கள் மூலமொழியில் கவிதை நடையிலேயே எழுதப்பட்டுள்ளமையால் இவற்றில் பலதரப்பட்ட உருவக விபரணங்கள் உள்ளன. இதனால் சங்கீதங்களை வாசிக்கும்போது அவற்றில் உபயோகிக்கப்ட்டுள்ள உருக விபரணங்களைக் கருத்திற்கொள்ளாவிட்டால் அவற்றை நாம் பிழையான வித்ததிலேயே விளங்கிக் கொள்வோம். உண்மையில் சங்கீதங்களில் மட்டுமல்ல, வேதாகமத்தின் ஏனைய பகுதிகளிலும் பலதரப்பட்ட உருவகங்கள் உள்ளன. சிலர் உருவக விபரணங்களுக்கும் சொல்லர்த்தமான விளக்கம் கொடுப்பதனால், வேதாகமத்தை முரண்படுத்தும் குழப்பமான பல உபதேசங்கள் உருவாகியுள்ளன. உதாரணத்திற்கு “மோர்மன் (Mormon) என்று அழைக்கப்படும். வேதப்புரட்டுக் குழுவினர் தேவனுக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக உருவகிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, தேவன் ஆவியாய் இருக்கின்றார். (யோவா. 4:24) என்னும வேதாகம சத்தியத்தை முரண்படுத்துகிறவர்களாக பரலோகத்தில் தேவன் மாம்ச சரீரத்துடன் உருவத்துடனும் இருக்கிறார்  என்று போதித்து வருகின்றனர். (1) இதுபோல் கடைசி இராப்போசனத்தின் போது இயேசுக்கிறிஸ்து அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உவமிக்கும் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரோமன் கத்தோலிக்க சபையினர் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, திருவிருந்தின்போது ஆசீர்வதிக்கப்படும் அப்பமும் இரசமும் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகவும் இரத்தமாகவும் மாற்றமடைகின்றது என்று போதிக்கின்றனர். (2) மறுபுறத்தில் சில கிறிஸ்தவ இறையியலாளர்கள் வேதாகமத்தில் சொல்லர்த்தமாக சொல்லப்பட்டவைகளை உருவக விபரணங்களாக வியாக்கியானம் செய்து வேதாகமத்தின் சில உபதேசங்களை மறுதலித்து வருகின்றனர். உதாரணத்திற்கு இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, உயிர்தெழுதல் என்பவற்றை மறுதலிப்பவர்கள் வேதாகமத்தில் இவற்றைப் பற்றி சொல்லப்பட்டவைகள் உருவக விபரணங்களாக இருப்பதாக கூறி இவை வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள விதமாக சொ்ல்லர்தமாக நடைபெற்ற சம்பவங்கள் அல்ல என்று கூறி வருகின்றனர்(3). இதைப்போலவே வேதவசனங்களில் மறைபொருள் அர்த்தங்கள் இருப்பதாக கருதுபவர்களும் சரித்திர சம்பவங்களை ஆவிக்குரிய அர்த்தங்கள் கொண்ட கதைகளாக மாற்றி அவை நிஜமாக நடைபெற்ற சம்பவங்களாக இருக்கும் உண்மையை மறுதலி்த்து வருகின்றனர். இதனால் வேதாகமத்தில் உருவக விவரணங்களைச் சரியான விதத்தில் இனங்கண்டு வேதாகம வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது மட்டுமே அவற்றைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியும். 


சஙகீதங்களை மட்டுமல்ல வேதாகமத்தின் ஏனைய பகுதிகளை வியாக்கியானம செய்யும்போதும். வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் எவ்விதமாக உபயோகிக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் இரண்டு விதமான முறைகளில் உபயோகிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வார்த்தைகள், மொழியில் அவ்வார்த்தைகளுக்கு இருக்கும் இயற்கையான அர்த்ததிலும், ஏனையவை உருவகமாகவும் உபயோகிக்கப்பட்டுள்ளன. வேதாகமத்திலுள்ள சில உருவகங்களை இலகுவாக இனங்கண்டு கொள்ளக கூடிய விதத்தில் அவற்றோடு “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு முதலாம் சங்கீதத்தில நீதிமான் எப்படிப்பட்டவன் என்பதைக் விளக்குவதற்காக அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான் (சங்கீதம் 1:3) என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது. “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ள உருவங்கள் “ஒப்புவமை“ அல்லது “உவமையணி“ (Simile)  என்று அழைக்கப்படுகின்றது. எனவே, “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகளும் வாக்கியங்களும் உருவக விபரணங்கள் என்பதைக் கருத்திற் கொண்டவர்களாக நாம் அவற்றை சொல்லர்த்தமாக அல்ல உருவக விபரணமாகவே வியாக்கியானம் செய்ய வேண்டும். 

வேதாகம உருவகங்களுக்கு “போல“ என்னும் பதம் சேர்க்கப்ப்ட்டுள்ள போதிலும், சில உருவகங்கள் மட்டுமே இத்தகைய முறையில் உள்ளன. இதனால் ஏனைய உருவகவிபரணங்களை இனங்கண்டுகொள்வதற்கு நாம் வேதவசனங்களை மிகவு்ம் கருத்தோடு ஆராயந்து பார்க்க வேண்டும். முதலில் நாம் வேதப்பகுதியின் சகல வார்த்தைகளும் அவற்றிற்கு சாதாரண மொழியில் உள்ள அர்த்தத்தின்படியே விளக்க வேண்டும். அப்பொழுது குறிப்பிட்ட ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் அது இடம்பெறும் வசனத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தால், அது உருவகமாக உபயோகிக்ப்பட்டுள்ளது என்பதை அறிந்திடலாம். உதாரணத்திற்கு வெளிப்படுத்தல் 7:13-14 இல் அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.  அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு வசனங்களையும் புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் இவற்றில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் சாதாரணமாக மொழியில் அவற்றிற்குள்ள அர்த்தத்தின்படியே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது “அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்“ முரண்பாடுடையதாக தென்படும். ஏனெனில் இரத்தத்தில் தோய்க்கும் செயல் ஆடைகளை வெண்மையாக அல்ல சிவப்பாகவே மாற்றும். எனவே, அங்கிகளை இரத்தத்தில் தோய்த்து “வெளுக்க“ முடியாது என்பதனால் இவ்வாக்கியம் உருவக விபரணமாக இருப்பதை அறிந்து கொள்கிறோம். இவ்விதமாக வேத வசனங்களில், மொழியில் உள்ள அர்த்தத்தின்படி உள்ள வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் எவை என்பதையும், உருவகமாக உபயோகிக்கப்பட்டுள்ளவை எவை என்பதையும் நாம் இனங் கண்டு கொள்ள வேண்டும். 

நாம் வாசிக்கும் வேதப் பகுதியில் உள்ள உருவகங்கள் எவை என்பதைக் கண்டு கொண்ட பின்னர் “ அவை எதற்கான உருவகம்?“ என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அவை எவற்றை உருவகிக்கின்றன என்று நாம் கண்டுகொள்ள வேண்டும். இதற்கு அவ்வுருவகம் இடம்பெறும் வசனத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு சங்கீதம் 92:12  இல் ”நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” என்பதில் “பனை“, ”“கேதுரு“” என்பன நீதிமானை வர்ணிக்கும் உருவகங்களாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக, உருவகமாக உள்ள ஒவ்வொரு வார்த்தையு்ம் (அல்லது வாக்கியம்) இடம்பெறும் வசனத்தை ஆராய்ந்து பார்த்து, ஒவ்வொன்றும் எதற்கான உருவகம் என்பதை நாம் கண்டறிய வேண்டும். எனினும் சில சந்தர்ப்பங்களில் உருவகம் இடம்பெறும் வசனத்தின் மூலம் அது எதற்கான உருவகம் என்பதை அறிந்துகொள்ள முடியாதிருக்கலாம். இத்தகைய சந்தரப்பத்தில் குறிப்பிட்ட உருவகம் உள்ள வசனத்திற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை ஆராயந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு யோவான் 7:38 இல் இல் “ஜீவத்தண்ணீருள்ள நதிகள்“ பரிசுத்த ஆவியானவருக்கான உருவகம் என்பதை அதற்கு அடுத்த வசனத்தின் மூலமே அறியக்கூடியதாக உள்ளது. இதைப்போல் யோவான் 4:32 இல் இயேசுக்கிறிஸ்து “போஜனம்“ என்னும் உருவகத்தை எதனை விளக்க உபயோகித்துள்ளார் என்பதை 34ம் வசனமே அறியத் தருகிறது. இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது“ என்று தெரிவித்துள்ளார். இதனால் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு உருவகம் எதற்கானது (அதாவது எதனை உருவகிக்கின்றது?) என்பதை அறிந்து கொள்வதற்காக இவ்வுருவகம் இடம்பெறும் வசனத்தை மட்டுமல்ல. அவ்வசனம் இடம்பெறும் முழுப்பகுதியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது..

உருவகத்தை இனங்கண்டு அது எத்தனை உருவகம் என்பதை அறிந்து கொண்ட பின்னர் நாம் அது எத்தகைய அர்த்தத்துடனான உருவகம் என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு குறிப்பிட்ட உருவக விபரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஏசாயா 1.30 இல் “நீஙகள் தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்” என்னும் வாக்கியத்தில் “தண்ணீர் இல்லாத தோப்பு” என்பது உருவக விவரணமாக உள்ளது. எனவே தண்ணீரில்லாத தோப்பு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் தண்ணீரில்லாத தோப்பு செழிப்பற்றதாகி, காய்ந்து வறண்டு போகும் எனவே, “நீங்கள் தண்ணீரில்லாத தோப்பை போலிருப்பீர்கள்” என்று தீர்க்கதரிசி கூறும்போது உங்களுடைய வாழ்வு வறண்டு செழிப்பற்றதாகப் போகிறது என்பதை தெரிவித்துள்ளார். இதேபோல, ஒவ்வொரு உருவக விவரணத்தையும் ஆராய்ந்து பார்த்து அதனுடைய அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். எனினும் இவ்விடத்தில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயம் உள்ளது. அதாவது ஒரு உருவக விவரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு வசனத்தில் இருக்கும் அர்த்தமே அவ்வுருக விவரணம் உபயோகிக்கப்பட்டிருக்கும் சகல வசனங்களிலும் இருப்பதாக கருதுவது தவறாகும். ஏனெனில் ஒரு வசனத்தில் குறிப்பிட்ட ஒரு அர்த்தத்துடன் உள்ள உருவக விவரணம், இன்னுமொரு வசனத்தில் வேறு ஒரு அர்த்தத்துடன் உபயோகி்க்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு மாற்கு 1:10 இல் “புறா” பரிசுத்த ஆவியானவருக்கான அடையாளமாக இருப்பதனால் வேதாகமத்தில் “புறா என்னும் பதம் இடம்பெறும் இடங்களில் எல்லாம் இப்பதம் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது என்று கருதுவது தவறாகும். ஏனெனில் ஓசியா 7:11 இல் புறா “மதியீனத்திற்கான” உருவகமாகவும் உன்னதப்பாட்டு 2:14 இல் மேவாப் தேசத்தில் குடியிருப்பவர்களைக் குறிக்கும் விபரணமாகவும் ஏசாயா 38:14 இல் அழுதுபுலம்புவதற்கான உருவகமாகவும் வித்தியாசமான அர்ததங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. 
                                                                                                                            (இன்னும் வரும்)

Footnote and Reference
1. இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் மோர்மன் குழுவினருக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலினை பார்க்கவும்
2. இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் கத்தோலிக்க சபையினருக்கு குழுவினருக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலினை பார்க்கவும்
3. இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு சத்தியவசனம் சஞ்சிகையில் ஆசிரியர் எழுதிய “இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு கற்பனையா? (நவம்பர் –டிசம்பர் 1988, ஜனவரி-பெப்ரவரி 1989) “இயேசுக்கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மையா? இயேசுக்கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா (ஜூலை-ஓகஸ்ட் 1991) என்னும் கட்டுரைகளைப் பார்க்கவும். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment