- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 14 June 2011

ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர்


நூல் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் – சகோ. வசந்தகுமார்
வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி

முன்னுரை
மானிடவாழ்வின் இறுதிநிலை பற்றி யெகோவா சாட்சிகள் போதிக்கும் விடயங்களும் வேதாகம உபதேசத்தை முரண்படுத்தும் வேதப்புரட்டாகவே உள்ளது. மரணத்தோடு மானிட வாழ்வு முற்றுப்பெறுவதாகக் கூறும் இவர்கள், மனிதனில் ஆத்துமா என்ற அழைக்கப்படும் அழியாத நித்திய ஆவிக்குரிய பகுதி இருப்பதை மறுதலிக்கின்றனர். (1) மனிதன் மரிக்கும்போது அவனது சரீரம் அழிவதுபோல ஆத்துமாவும் அழிந்துபோகிறது (2) என்று போதிக்கும் இவர்கள் மரணத்தின் பின்பும் மனிதன் உணர்வுடன் இருப்பதையும், துன்மார்க்கர்கள் உயிர்தெழுந்து நித்திய காலமாக நரகத்தில் துயரப்படுவார்கள் என்பதையும் மறுதலிக்கின்றனர். மேலும் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவார்கள் என்று கூறும் இவர்கள் தங்களில் 144000 பேர் பரலோகத்திலும் ஏனையவர்கள் பூமியிலும் நித்திய காலமாக வாழ்வார்கள் என்றும் விளக்குகின்றனர். மானிட வாழ்வின் இறுதிநிலை பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் இத்தகைய வேதப்புரட்டு உபதேசங்கள் இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.


மானிட ஆத்துமாவைப் பற்றிய யெகோவா சாட்சிகளின் உபதேசம் வேதத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது. ஏனென்றால், இவர்கள் மானிட ஆத்துமாவின் அழியத் தன்மையை மறுதலிக்கும் வேதப்புரட்டர்களாய் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை மானிட உயிரே வேதாகமத்தில் ஆத்துமா என்று அழைக்கப்படுகின்றது. (3) தேவன் முதல் மனிதனான ஆதாமை சிருஷ்டித்தபோது  அவன் “ஜீவிக்கிற ஜீவாத்துமாவானான்“ (ஆதி. 2:7) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால், “ஆத்துமா என்பது மனிதனுடைய உயிர் என்று யெகோவா சாட்சிகள் கருதுகின்றனர்.(4) இயேசுவிற்கு கூட அழியாத ஆத்துமா இருக்கவில்லை என்று  கூறும் இவர்கள் அவர் மரித்தபோது, அவரது ஆத்துமாவும் மரித்தது என்று வாதிடுகின்றனர். (5) மனிதன் மரிக்கும்போது அவனது சரீரம் அழிவது போலவே அவனது ஆத்துமாவும் அழிந்து போகிறது(6) எனும் இவர்களது போதனை, சரீர மரணத்தின் பின்பும் மானிட ஆத்துமா உணர்வுடன் நித்திய காலமாய் இருக்கும் எனும் வேதாகம உபதேசத்திற்கு எதிரானதாகவே உள்ளது. மரணத்தின் பின்பு ஆத்துமாவுக்கு உணர்வுள்ள வாழ்வு இல்லை என்பதே இவர்களது போதனையாக உள்ளது(7) 

திரித்துவ உபதேசத்தைப் போலவே, மானிட ஆத்துமாவின் அழியத்தன்மை பற்றிய போதனையும் சாத்தானால் உருவாக்கபட்டது என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றன. விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் நீங்கள் சாவீர்கள் என்று தேவன் கூறியிருந்தார். ஆனால் சாத்தானோ அதைப் புசித்தால் மரணம் சம்பவிக்காது என்று சொல்லியும், அதைப் புசித்த ஆதாமும் ஏவாளும் பிற்காலத்தில் மரணமடைந்தார்கள் என்பதைச் சுட்டிக் காட்டும் இவர்கள் (ஆதி. 3) மானிட ஆத்துமா சாகாது என்னும் பொய்யைச் சாத்தான் இவ்விதமாகக் கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவந்துள்ளான் என்று கூறுகின்றனர். (8) இதைப் போலவே நரகம் பற்றிய கிறிஸ்தவப் போதனையும் சாத்தானால் உருவாக்கப்பட்டது என்பதே யெகோவா சாட்சிகளின் கருத்தாகும் (9) இவர்களைப் பொறுத்தவரை கல்லறையே வேதத்தில் நரகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (10)

உண்மையில்  ஆத்துமா என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு “உயிர்“ எனும் அர்த்தம் மட்டுமே உள்ளது என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுவது பெருந்தவறாகும். இவர்கள் கூறுவதுபோல ஆதியாகமம் 2 :7 .இல் ஆத்துமா எனும் பதம் மானிட உயிரையே குறிக்கின்றது என்பது உண்மையென்றாலும் வேதாகமத்தில் இப்பதம் பலவிதமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. மூலமொழியில் ஆத்துமா என்பதற்கு “நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயப் பதமும் புதிய ஏற்பாட்டில் “சூகே“ (psuche) என்னும் கிரேக்க பதமும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இவை மனிதனின் ஆவிக்குரிய பகுதியின் (Spiritual part) (11) பல்வேறு அம்சங்களையும் குறிக்கும் பதங்களாகும். பழைய ஏற்பாட்டில் மனிதனின் ஆவிக்குரிய பகுதி “உள்ளான மனிதன்“ (inner self) என்றும் சடப்பொருள் பகுதி “வெளித்தோற்றம்” (outer appearance) என்று கருதப்படுவதோடு (12) 754 தடவைகள் உள்ளான மனிதனைக் குறிப்பிட “நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயப் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. (13) எனினும் இவற்றில் 110 தடவைகள் மட்டுமே இப்பதத்தை “ஆத்துமா“ என்று மொழிபெயர்க்கலாம் (14) இதனால் தான் தற்கால ஆங்கில வேதாகமங்களில் இப்பதம் ஆத்துமா என்று மட்டுமல்ல உயிர்/ஜீவன் (Life) சுயம்(self) இதயம்(Heart) நபர்(being)  என பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (15) இதேவிதமாக பதிய ஏற்பாட்டிலும் “சைக்கி“ எனும் பதம் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் இடம் பெற்றாலும் 19 தடவைகள் மட்டுமே ஆத்துமா என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (16) ஆனால் நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமத்தை தழுவிய மொழிபெயர்ப்பாய் இருப்பதனால் (17) பழைய ஏற்பாட்டில் 400 இறகும் அதிகமான தடவைகளும் புதிய ஏற்பாட்டில் 39 தடவைகளும் ஆத்துமா என்னும் பதம் உள்ளது. இப்பதம் சில இடங்களில் மானிட உயிரை அல்லது முழு மனிதனையும் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய இடங்களில் உள்ளான மனிதனின் பல்வேறு அம்சங்களையும் குறிக்கின்றன. (18) ஆதியாகமம் 2:7 இல் மண்ணினால் தாம் செய்த மானிட சரீரத்திற்குள் தேவன் ஜீவசுவாசத்தை ஊதியபோது அவன் “ஜீவாத்துமாவானான்“ எனும் வாக்கியம் மூலமொழியின்படி தேவனுடைய சுவாசம் மனிதனுக்கு உயிரைக் கொடுத்தது.” என்றே கூறுகிறது (19) மூலமொழியில் “ஜீவாத்துமா” எனும் பதமே ஆதியாகமம் 1:20, 2:19, 9:9 இல் ஏனைய உயிரினங்களின் ஜீவனைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளமை இதை உறுதிப்படுத்துகி்னறது. (20)

ஆதியாகமம் 2:7 நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயபதம் மானிட உயிரையே குறித்தாலும், இது மனிதனில் அழியாத ஆவிக்குரிய பகுதி இருப்பதை மறுதலிக்கவில்லை. நாம் ஏற்கனவே பார்த்தபடி, மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் உயிரை மட்டும் குறிக்கும் பதம் அல்ல. (21) மனிதனின் ஆவிக்குரிய பகுதியே அதாவது உள்ளான மனிதனே வேதத்தில் பொதுவாக ஆவி/ஆத்துமா எனும் பதத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது (22) அக்காலத்தைய யூதர்களும் கிரேக்கர்களும் சரீரத்திலிருந்து ஆத்துமா  பிரிவடைவதையே மரணமாகக்க் கருதினார்கள்.(23) மானிட சரீரம் மரித்த பின்பும் அதாவது சரீரத்தை விட்டு பிரிந்த பின்பும் ஆத்துமா அழியாமல் இருக்கும் என்று மத்தேயு 10:28 இல் இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார்.  ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் எனும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒருவனது சரீரம் மரித்தாலும் அவனது ஆத்துமா அழியாது என்பதை அறியத்தருகிறது. “மரணத்தின் பின்பும் உயிரோடிருக்கும் மானிடப் பகுதியையே இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் ஆத்துமா என்று குறிப்பிட்டுள்ளார். (24) மரணத்தின் பின்னர் மானிட ஆத்துமாக்கள் உயிருடன் இருப்பதினால்தான் வெளிப்படுத்தல் 6:9-10 இல் இரத்தசாட்சிகளாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை யோவான் பலிபீடத்தின் கீழ் கண்டது மட்டுமல்ல அவை தேவனோடு பேசுவதையும் கேட்டார்(25) இவ்விரு வசனங்களும் யெகோவா சாட்சிகளின் உபதேசத்திற்கு முரணாக, மானிட சரீரம் மரித்த பின்பும், ஆத்துமா உயிரு்டனும் சுய உணர்வுடனும் இருக்கும் என்பதை அறியத் தருகி்ன்றன. 

மரணத்தின் பின்னர் உணர்வுள்ள நிலையில் மானிட ஆத்துமா இருக்காது எனும் தங்களது கருத்தை நிரூபிப்பதற்கு யெகோவா சாட்சிகள் சங்கீதம் 146:4, பிரசங்கி 9:5, எசேக்கியேல் 18:4 எனும் வசனங்களைச் சுட்டிக் காட்டுவது வழமை. சங்கீதம் 146:6 இல் “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு மரணத்தின் பின் மனிதனுடைய யோசனைகள் அழிந்து போவதினால் அவன் உணர்வுள்ளவாய் இருக்க மாட்டான் என்று யெகொவா சாட்சிகள் கூறுகின்றனர். (26) ஆனால், மரணத்தின் பின் மனிதன் எவ்வித சிந்தனையும் அற்றவனாக இருப்பான் என்று கூறவில்லை. ஏனென்றால் இங்கு “யோசனைகள்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மனிதனுடைய “திட்டங்கள்“ “நோக்கங்கள்“ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள்“ என்பவற்றையே குறிக்கின்றது (27) இரு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூலொன்றில் இவ்வித அர்த்தத்துடனான கூற்றை நாம் அவதானிக்கலாம். (28) எனவே, “மனிதன் மரிக்கும்போது அவன் போட்டிருந்த திட்டங்களும் அழிந்து போகின்றன“(29) என்று இவ்வசனம் கூறுகிறதே தவிர அவன் உணர்வற்றவனாக இருப்பான் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. 

பிரசங்கி 9:5 இல் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால், மரணத்தின் பின் மனிதன் எவ்வித உணர்வும் அற்றவனாகிவிடுவான் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (30) ஆனால் இவ்வசனத்தில் “மரித்தவனுக்கு இவ்வுலக அனுபவங்கள் எதுவும் இருக்காது“ (31) என்பதையே பிரசங்கி சுட்டிக்காட்டுகிறார். ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் உயிரோடிருப்பவனுக்கும் மரித்தவனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டைச் சுட்டிக் காட்டும் பிரசங்கி, இவ்வசனத்தின் ஆரம்பப்பகுதியில், உயிரோடிருக்கிறவன் அறிந்திருக்கும் விடயத்தை மரித்தவனால் அறியமுடியாது என்று கூறுவதோடு, உயிரோடிருக்கிறவன் தனக்கும் ஒருநாள் மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்திருக்கிறான் என்றும், மரித்தவனுக்கு இவ்வித அறிவு இல்லை என்று கூறுகிறாரே தவிர யெகோவாவின் சாட்சிகள் சாட்சிகள் கூறுவது போல், மரி்த்தவனுக்கு எவ்வித உணர்வும் இல்லை என்று கூறவில்லை. மேலும், “மரணத்தை விட உயிரோடிருப்பதே மேலானது எனும் தர்க்கத்திற்கு ஒரு ஆதாரமாகவே இவ்விடயத்தை பிரசங்கி இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். (32) எனவே, இவ்வசனத்தை மரணத்தின் பின்பான மானிட வாழ்வு பற்றிய உபதேசமாகக் முடியாது. மேலும், புதிய ஏற்பாட்டிலேயே மரணத்தின் பின்பான வாழ்வு பற்றிய முழுமையான வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டுள்ளமையால், இத்தகைய வெளிப்படுத்தல் அற்ற காலத்தில் பிரசங்கி கூறியதை ஆதாரமாகக் கொண்டு மரணத்தின்பின் மனிதன் எவ்வித உணர்வும் அற்றவனாகவே இருப்பான் என்று கூறுவது தவறாகும் (33)
(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Foot note and References
(1) Anonymous, Let God be True, p. 69
(2) Ibid pp 74-75
(3) A. Hoekema, The Four Major Cults p.265
(4) Anonymous, Let Your Name be Sanctified, p. 44
(5) Anonymous, Let God be True, p. 200;
(6) Anonymous, Reasoning from the Scriptures, pp 383-384
(7) Anonymous, You can Live Forever in Paradise on Earth. p. 88
(8) Anonymous, Reasoning from the scriptures, pp 101; Anonymous, Let God be True p. 75 
(9) Anonymous, Reasoning from the scriptures, pp 175; Anonymous, Let God be True p. 68
(10) Anonymous, You can Live Forever in Paradise on Earth. p. 83
ஆனால் நரகம் என்பது தேவனை நிராகரிப்பவர்கள் நித்தியகாலமாய் வேதனைப்படும் என்பதை மத்தேயு 8:11-12, 13:42, 13:50, லூக்கா 13:28, 16:19-31, வெளிப்படுத்தல் 14:9-11, 9:20 போன்ற வசனங்கள் அறியத் தருகின்றன. 
(11) வேதாகமப் போதனையின்படி மனிதனில் சடப்பொருள் பகுதி, ஆவிக்குரிய பகுதி என்று இரு பகுதிகள் உள்ளன. சடப்பொருள் பகுதியில் மானிட சரீரத்தின் மாமிசம், எலும்பு, இரத்தம் போன்றவை உள்ளன. ஆவிக்குரிய பகுதியில் ஆவி, ஆத்துமா, மனம், சிந்தை போன்றவை உள்ளன. இவற்றில் சடப்பொருள் பகுதி சரீரம் என்றும் ஆவிக்குரிய பகுதி ஆவி/ஆத்துமா என்றும் அழைக்கப்படுகின்றது
(12) W.E. Vine, M.F. Unger & W. White ed. Vine’s Expository Dictionary of Biblical Words, p. 238 
(13) H.W. Wolff, Anthropology of the Old Testament, pp 10-25
(14) இது NIV ஆங்கில மொழிபெயர்ப்பின்படியான கணிப்பீடு KJV மொழிபெயர்ப்பில் 28 வித்தியாசமான வார்த்தைகள் இப்பதத்திற்கு உபயோகிக்கப்பட்டிருந்தாலும் 419 தடவைகள் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் KJV  மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் 400 இற்கும் அதிகமான தடவைகள் ஆத்துமா எனும் பதமே உள்ளது
(15) W.E. Vine, M.F. Unger & W. White ed. Vine’s Expository Dictionary of Biblical Words, p. 237
(16)  உண்மையில் “சூகே“ எனும் கிரேக்க பதிய ஏற்பாட்டில் 11 விதமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. (Ibid pp. 588, 569)
(17) நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டபோது ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமமே உபயோகத்தில் இருந்தமையால், தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும்போது மூலமொழிக்கும் ஜேம்ஸ் அரசனது ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருந்ததால் தமிழ்மொழிபெயர்ப்புக் குழு ஜேம்ஸ் அரசனது ஆங்கிலமொழிபெயர்ப்பையே (KJV) பின்பற்ற வேண்டும் என சென்னை வேதாகமச் சங்கம் நிபந்தனை விதித்திருந்தது. இதனால் நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமத்தின் தழுவலாகவே உள்ளது. (மேலதிக விபரங்களுக்கு ஆசிரியரின் புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு எனும் நுலினை பார்க்கவும்)
(18) W.F. Arndt & G.F. Wilbur, A Greek-English Lexicon of the New Testament and other Early Christian Literature, pp 674-675, 893-894, F. Brown, S.R. Driver, and C.A. Briggs, A Hebrew English Lexicon of the Old testament, pp 659-661, 924-925
(19) W.W.Wiersbe, Be Basic : An Old Testament Study – Genesis 1-11, p 167
(20) G.J. Wenham, Genesis 1-15: World Biblical Commentary Vol, p. 60
(21) F.Brown, S.R. Driver & C.A. Briggs, A Hebrew and English Lexicon of the Old Testament p 659
(22) வேதத்தில் ஆவியும் ஆத்துமாவும் ஒத்தக்கருத்துள்ள சொற்களாக உபயோகிக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்திற்கு மரணத்தின்போது சரீரத்தைவிட்டு ஆவி பிரிவடைந்து செல்வதாக பிரசங்கி 12:7   கூறுகையில் ஆதியாகமம் 35:18 இல் ஆத்துமா பிரிவடைந்தது செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் மரித்தவர்கள் ஒன்றில் “ஆத்துமாக்கள்“ என்றோ (வெளி 6:9) அல்லது ஆவிகள் என்றோ (எபி. 12:23, 1 பேதுரு 3:19) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர் அதேபோல் யோவான் 12:27 இல் இயேசுகிறிஸ்து தனது ஆத்துமா கலங்குவதாகக் கூறுகையில் இதை அவர் ஆவியில் கலங்கியதாக யோவான் குறிப்பிட்டுள்ளார். (யோவான் 13:21) இதைவிதமாக மனிதனும் ஒன்றில் “சரீரமும் ஆவியும்“ என்று (1 கொரி. 5:5) அல்லது “சரீரமும் ஆத்துமாவும்“ (மத் 10:28) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். 
(W.Grudem, Systematic Theology An Introduction to Biblical Doctrine, pp 473-477)
(23) R.Gundry, The Use of the Testament in St. Mathew’s Gospel, p 197
(24) L. Morris, The Gospel According to Mathew: The Pillar New Testament Commentary, p 262
(25) யோவான் இதைப்பற்றி எழுதும்போது  அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். 10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.“ என்று குறிப்பிட்டுள்ளார். 
(26) Anonymous, Reasoning from the Scriptures, p 383
(27) L. Harris, ed, Theological Word Book of the Old Testament Vol. 2, p 1056
(28) ‘Today he may be high in honour, but tomorrow there will be no trace of him, because he will have returned to the dust and all his schemes come to nothing’ (1 Maccabess 2:63)
(29) W.A. VanGemeren, Psalms, Expositor’s Bible Commentary Val 5, p 865
(30) Anonymous, Reasoning from the Scriptures, p 169
(31) M.A. Eaton, Ecclesiastes : Tyndale Old Testament Commentaries, p 126 
(32) R.Murphy & E.Huwiler, Proverbs, Ecclesiastes Songs of Songs : New International Biblical Commentary p. 208
(33) வேதாகம உபதேசங்கள் புதிய ஏற்பாட்டிலேயே முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பகுதியளவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் புதிய ஏற்பாட்டில் முழுமையான விளக்கங்களுடன் உள்ளன. எனவே பழைய ஏற்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு உபதேசத்தை உருவாக்குவது தவறாகும். புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே பழைய ஏற் பாட்டை வியாக்கியானம் செய்வதற்கான அடிப்படை விதிமுறையாகும் இதிலிருந்து பழைய ஏற்பாடு தவறானது என்று நாம் கருதலாகாது. தேவன் தம்மைப் பற்றி மக்களுக்கு வெளிப்படுத்தும்போது ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்தாமல் பகுதி பகுதியாகவே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் ஆரம்பமான தேவனது வெளிப்படுத்தல் புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தலிலேயே நிறைவு பெற்றது. எனவே, முழு வேதாகமத்தையும் அடிப்படையாக்க் கொண்டே ஒரு உபதேசம் உருவாக்கப்பட வேண்டும் வேதாகமத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலை மட்டும் அடிப்படையாக்க் கொண்டு ஒரு உபதேசத்தை உருவாக்குவது தவறாகும். தேவன் படிப்படையாகவே தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதே எபிரேயர் 1:1-2 அறியத் தருகிறது. “1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்“ என்னும் வசனத்தில் பங்குபங்காகவும்“ என்பது மூலமொழியின்படி “பகுதி பகுதியாக“ அல்லது “கொஞ்சமாக கொஞ்சமாக என்றும் வகைவகையாக என்பது வித்தியாசமான முறைகளில் என்றும் பொருள்படும். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

3 comments:

  1. ஆத்துமா​வை குறித்து மிக அரு​மையான விளக்கம்,
    ​தொடர்ந்து JW's-ன் கள்ள உப​தேசத்திற்க்கான விளக்கத்தி​னை எழத ​வேண்டுகி​றேன்--- ச​கோ,ஜார்ஜ்

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே. விரைவில் யெகோவா சாட்சிகள் பற்றிய தொடரை எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவுகள்

    ReplyDelete