- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 30 March 2014

வேதமும் விளக்கமும் அப்சலோமிற்கு 2 சாமு18:18 -குமாரன் இல்லை- 2 சாமு. 14:27- மூன்று குமாரர்கள் எது சரி?

29. 2 சாமுவேல் 18:18   அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2 சாமுவேல் 14:27 இல் அப்சலோமிற்கு மூன்று குமாரர்கள் பிறந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளதே? (டி. நவமணி ஆபேல். நெய்வேலி, இந்தியா)
 
இதற்கு இருவகையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் அபச்லோமின் மூன்று பிள்ளைகளும் இளவயதிலேயே மரணமடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களில் எவரும் அப்சலோமின் பெயரை நினைக்கப்பண்ணும்படியாக அவனுடைய பிள்ளைகளாக இருக்க விருப்பமற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். இவ்விரு விளக்கங்களில் முதலாவது விளக்கமே இன்று பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  
 
 2 சாமுவேல் 14:27 
27. அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்

Wednesday 26 March 2014

வேதமும் விளக்கமும்-தேவன் பார்வோனின் இதயத்தைக் பல தடவைகள் கடினப்படுத்தியது ஏன்?

யாத்திராகமப் ’புத்தகத்தில் பல தடவைகள் தேவன் பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. தேவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்யலாமா? (ஆர். ரவீந்திரன், கொழும்பு)

தேவனைப் பற்றிய விவரணங்களில் கிறிஸ்தவர்களை அதிகமாகக் குழப்பியுள்ள விடயம் அவர் பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தினார் எனும் விளக்கமாகும். யாத்திராகமம் 4 முதல் 14 வரையிலான அதிகாரங்களில் 20 தடவைகள் பார்வோனின் இதயம் கடினப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10 தடவைகள் தேவனே பார்வோனின் இதயத்தைக் கடினப்படுதியதாக எழுதப்பட்டுள்ளது.

பார்வோன் தன் இதயத்தைக் கடினப்படுத்துவான் என்றும் தேவன் முன்னறிவித்தார். (யாத். 4:21, 7:3) இவை எதிர்காலத்தில் தேவன் செய்யவிருப்பதைப் பற்றிய முன்னறிவித்தலாகும். எனினும், தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே அவன் தன் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். எகிப்தின் மீதான் வாதைகளில் முதல் 5 வாதைகளின்போது பார்வோன் 10 தடவைகள் தன் இதயத்தைக் கடினப்படுத்தியுள்ளான். (யாத். 7:13,14,22, 8:15,19,329:7,34,35, 13:5) அவ்வாதைகளின்போது இஸ்ரவேல் தேவனாகிய கர்த்தரே உண்மையான தெய்வம் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாதவனாக பார்வோனே தன் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். பார்வோனின் மந்திரவாதிகள் இது தேவனுடைய விரல் என்று அறிக்கையிட்டும் அவன் அதை அலட்சியப்படுத்தியவிட்டான். எகிப்தின்மீது வந்த வாதைகள் இஸ்ரவேல் மக்களது தேவனே உண்மையான தெய்வம் என்பதை எகிப்தியரில் அநேகருக்கு உணர்த்தியிருந்தமையால் இஸ்ரவேல் எகிப்தை விட்டு வெளியேறியபோது அவர்களும் இஸ்ரவேலரோடு சென்றுள்ளனர். (யாத். 12:38) ஆயினும் அவ்வாதைகள் பார்வோனின் இதயத்தை அசைக்கவில்லை முதல் 5 வாதைகளின் போதும் பார்வோன் தன் இதயத்தைக் கடினப்படுத்தியபடியால் அதன் பின்னரர் அவனுடைய இதயக்கடின நிலையிலேயே அவன் இருக்கும்படி அவனது இதயத்தை தேவன் கடினப்படுத்தினார். இதன் மூலம் (யாத். 9:1210:20,2711:1014:4) பார்வோன் தன் இதயத்தைக் கடினப்படுத்தியதைத் தேவன் உறுதி்படுத்தியுள்ளார். 

தேவன் பார்வோனின் சுயசித்தத்திற்கு முரணாக அவனது இதயத்தைக் கடனப்படுத்தினார் என்று நாம் கருதுவது தவறாகும் தேவன் மோசேயைப் பார்வோனிடம் அனுப்புவதற்கும் முன்பே நான் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன் என அவர் மோசேிடம் கூறியது உண்மையாயினும் தேவனுடைய இத்தகைய முன்னறிவிப்புகள் நிபந்தனையுடனான தீர்க்கதரிசன வகையைச் சேர்ந்தனவையாகும்அழிவையும் நியாயத்தீர்ப்பையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எப்போதுமே நிபந்தனையையும் கொண்டிருப்பதையும் நாம் வேதாகமத்தில் அவதானிக்கலாம். அதாவது ஒரு மனிதனை அல்லது தேசத்தை அழிப்பதாக தேவன் அறிவித்தால் அதனோடு,“மனந்திரும்பாதுபோனால்” எனும் விடயமும் சேர்க்கப்பட்டிருக்கும். மக்கள் மனந்திரும்பினால் தேவன் வரவிருப்பதாகச் சொல்லும் அழிவு வராது என்பதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உள்ளன. இன்னும் 40 நாட்களில் அழிவு வரும் என்று நினிவே நகர மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. யோனாவின் செய்தியில் மனிந்திரும்புதல் பற்றிய கூற்று இடம் பெறாத போதிலும் பாவத்திலிருந்து மனந்திரும்பினால் அழிவு வராது என நினைத்த மக்கள் மனந்திரும்பினார்கள். இதனால் தான் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீர்ப்பைக் குறித்து மன்ஸ்தாபப்ப்ட தேவன், அவ்வாறு செய்யாதிருந்தார். (யோனா. 3:10) இதேவிதமாக, பார்வோனும் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்திருந்தால் தேவன் அவன் இருத்யத்தைக் கடினப்படுத்தியிருக்க மாட்டார். ஆனால் பார்வோன் தேவனுடைய செயல்களைக் கண்டும் 10 தடவைகள் தன் இருதயத்கை் கடினப்படுத்தியபடியால் அதன்பின் தான் சொல்லயிருந்தபடியே தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார். எனவே பார்வோனின் இதயத்தைகத் தேவன் கடினப்படுத்த காரணமாயிருந்தது பார்வோனே தவிர தேவன் அல்ல. 
யாத். 4:21 
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான். 
யாத். 7:3
நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
யாத். 7:13,14,22, 
13. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

14. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

22. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான். 
 யாத் 8:15,19,32
15. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

19. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

32. பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.
யாத் 9:7,34,35 
7. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.

34. மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

35. கர்த்தர் மோசேயைக் கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
 யாத். 12:38
அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று. 
 யோனா. 3:10
அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். 

Sunday 23 March 2014

வேதமும் விளக்கமும் -பிரசங்கி புத்தகம் எல்லாம் மாயை எனும் விரக்தி மனப்பான்மையில் எழுதப்படட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

பிரசங்கி புத்தகம் எல்லாம் மாயை எனும் விரக்தி மனப்பான்மையில் எழுதப்படட்டுள்ளமைக்கான காரணம் என்ன? (ஆர் தேவபாலன், யாழ்ப்பாணம்)
 
பிரசங்கியின் புத்தகம் மானிட வாழ்வை இரு கோணங்களில் அவதானித்துப் பார்த்து, இரு முக்கிய விடயங்களை நமக்குஅறியத் தருகின்றது. இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கும்போது பிரசங்கி கூறும் இரண்டுவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் அறிந்திடலாம். ஒன்று சூரியனுக்கு கீழான இவ்வுலக வாழ்வு இது மாயையானது என பிரசங்கி கூறுகின்றது. மற்றது தேவனுடனான இவ்வுலக வாழ்வு இது மகிழ்ச்சிகரமானது என பிரசங்கி அறியத்தருகின்றது. எல்லாம் மாயை எனும் பிரசங்கியின் கூற்றை நாம் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. புத்தகத்தின் பல இடங்களில் மாயை எனும் வார்த்தை சூரியனுக்குக் கீழே எனும் சொற்பிரயோகத்துடன் சோர்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம். உண்மையில் சூரியனுக்குக் கீழே எனும் சொற்பதம் மானிட வாழ்வை மானிட கோணத்திலிருந்து அவதானித்து அறிவிப்பதையே குறிக்கின்றது. இது தேவனை அறியாத ஒரு மனிதனுடைய உலக நோக்கு எப்படிப்பட்டது காண்பிக்கின்றது. தேவனை அறியாத இவ்வுலகத்தினால் மட்டுப்படுத்தப்பட்டமானிட வாழ்வு மாயையானது என்றே பிரசங்கி கூறுகின்றார். எனினும் மறுபுறத்தில் பிரசங்கி தேவனை அறிந்த ஒரு மனிதனுடைய வாழ்வு எப்படிப்பட்டது என்றும் அறியத் தருகின்றார். மனித வாழ்வில் தேவன்  இருக்கும்போது அது மகிழ்ச்சிகரமானதாக இருப்பதனால், வாழ்வை அனுபவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்
 
தேவனுக்குப் பயந்து அவருடைய கற்பனையின்படி வாழ்வதே மகிழ்ச்சியின் இரகசியம் என்பதனாலேயே, வாலிப காலத்திலேயே சிருஷ்டிகரை நினைக்கும்படியும் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழும்படியும் கட்டளையிட்டுள்ளார். எனவே, அப்புத்தகம் எல்லாம் மாயை என்றுமட்டும் கூறவில்லை. தேவனற்ற வாழ்வை மாயையானது என்று கூறும் பிரசங்கி, இவ்வுலக வாழ்வைத் தேவனோடு அனுபவிக்கும்படி அறிவுறுத்துகிறார். உண்மையில் பிரசங்கி என்பததற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள“கொஹெலெத்” எனும் பதம் உத்தியோகபூர்வமாக சபையைக் கூட்டி ஒரு கலந்துரையாடலைக ஆரம்பிப்பவனைக் குறிக்கும். இவன் ஒரு விடயத்தை சபைக்கு அறிமுகப்படுத்தி அதைப் பல்வேறு கோணங்களிலும் விமர்சித்து நடைமுறை ரீதியான ஒரு முடிவிற்கு வருவான். பிரசங்கி புத்தக ஆசிரியரும் இதேவிதமாக சூரியனுக்கு கீழான மானிடவாழ்வை இரு கோணங்களில் ஆராய்ந்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இவ்வுலகில் தேவனற்ற வாழ்வு மாயையானது தேவனுடனான வாழ்வு மகழ்ச்சிகரமானதுஎன்பதே பிரசங்கியின் முடிவாகும். 

Tuesday 18 March 2014

உவமைகளின் உண்மைகள்


இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில் உள்ளச் சிறப்பம்சங்களில் ஒன்று அவர் சொல்ல முற்படும் விடயங்களை உவமைகள் மூலம் போதித்தமையாகும் இலகுவாகக் கிரகிக்க முடியாதக் கடினமான விடயங்களையும் சாதாரணப் பாமர மக்களும் புரிந்து கொள்வதற்காகவே இயேசு உவமைகள் மூலம் போதித்தார் என்பதே பொதுவாகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் கருத்தாகும் “இயேசு பரலோகக் கதைகள் மூலம் பரலோக காரியங்களைக் கற்பித்துள்ளார்” (1) என்பதும் “கண்களால் காணமுடியாத ஆவிக்குரிய உலகின் விடயங்களைக் காணக்கூடிய இவ்வுலக விபரங்கள் மூலம் இயேசு அறியத் தந்துள்ளார்”(2) என்பதும் உவமைகளுக்குக் கிறிஸ்தவர்கள் பொதுவாகக் கொடுக்கும் விளக்கமாகும். பெரும்பாலான வேதஆராய்ச்சியாளர்கள் இவற்றை “இலகுவான உதாரண விபரணங்கள்”(3) என்றே கருதுகின்றனர். “இயேசுவின் உவமைகளைச் செவிமடுத்தோர் அவர் அதன் மூலம் சொல்லும் விடயத்தை இலகுவாகப் புரிந்து கொண்டனர்.(4) எனக் கிறிஸ்தவர்கள் கருதுகின்றபோதிலும் “ஏன் மக்களோடு உவமைகள் மூலம் பேசுகின்றீர் எனக் கேட்டபோது இயேசு கூறிய விடயம் உவமைகள் மூலம் அவர் போதித்தவற்றை மக்களால் புரிந்துகொள்ள முடியாமலிருந்த தையே சுட்டி காட்டுகின்றது. அதுமட்டுமல்ல மக்கள் தான் சொல்வதனைப் புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இயேசு உவமைகள் மூலம் போதித்துள்ளார் என்பதையும் அறிந்து கொள் கூடியதாகவுள்ளது. ஏனென்றால் இயேசு சீடர்களிடம் “ “பரலோக இராட்சியத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. அவர்களுக்கோ அருளப்படவில்லை” (மத். 13:11, மாற்கு 4:11, லூக்கா 8:10) என்று தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் “உங்களுக்கு’ எனும் பதம் இயேசுவின் சீடர்களையும்அவர்களுக்கு” என்பது அவரது உவமைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சாதாரண மக்களையும் குறிக்கின்றது.(5) மேலும் இயேசு தன் சொல்லிய உவமைகளின் கருத்தை விளக்கிய போதே சீடரகளும் அவரது உவமையின் போதனைகளைப் புரிந்து கொண்டனர். (மாற். 7:17, லூக். 8:9-10) அதுவும் இயேசு தன் சீடர்களோடு தனித்திருந்த போதே தனது உவமைகளின் கருத்தை அவர்களுக்கு விளக்கினார். (மத். 13 : 36) இதிலிருந்து தான் சொல்லும் விடயங்கள் சீடர்களுக்கு மட்டுமே விளங்க வேண்டும் என்பதற்காகவே உவமைகள் மூலம் இயேசுகிறிஸ்து போதித்துள்ளார் எனும் முடிவிற்கே வர வேண்டியுள்ளது, 



உவமைகள் மூலம் போதித்த போது தனது உபதேசங்களை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதும், தன் சீடர்கள் தவிர ஏனையவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தான் உவமைகள் மூலம் போதித்தாக இயேசு குறிப்பிட்டுள்ள போதிலும் மாற்கு 4:32 இயேசுவின் கூற்றையே முரண்படுத்தும் விதத்தில் உள்ளது.  “அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லூக். 10:25-37, மத்தேயு 21:45 போன்ற வசனங்கள் இயேசுவால் சொல்லப்பட்ட உவமைகளை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதைச் சுட்டி காட்டுகின்றன. இவ்வசனங்கள் உவமைப் போதனைகளின் நோக்கம் பற்றி இயேசு கூறியவற்றை முரண்படுத்துவதாக உள்ளது. உண்மையில் மாற்கு 4:32 ஐ அடைப்படையாகக் கொண்டே மக்களுக்கு இலகுவாக விளங்குவதற்காக இயேசு உவமைகளின் மூலம் போதித்தார் என்னும் கருத்து கிறிஸ்தவ உலகில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆனால் மத்தேயு 13:11 மாற்கு 4:11 லூக்கா 8:10 இல் இதை முரண்படுத்தும் விதத்தில் சீடர்கள் தவிர வேறு எவரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே உவமைகளின் மூலம் போதித்துள்ளதாக இயேசு குறிப்பிட்டுள்ளார். இதனால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனம் இயேசுவினால் சொல்லப்பட்டதல்ல என்றும் இது ஆதிச்சபையினரால் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட வார்த்தை என்றும் கருதுகின்றனர்.(6) இதற்கு முன் உள்ள வசனத்தில் இடம் பெறும் “சீடர்களின் கேள்வி, இயேசுவின் உவமையைக் கேட்டவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே சுட்டி காட்டுகின்றது.(7)

மக்களால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் இயேசு ஏன் உவமைகள் மூலம் போதிக்க வேண்டும் என்பதற்கு, சில இறையியலாளர்கள் இரட்சிப்புக்காகத் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு(8) மட்டும் விளக்குவற்காகவே இயேசு பொதுவாக எல்லா மக்களாலும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் உவமைகளின் மூலம் போதித்துள்ளார் என விளக்குகின்றனர்.(9) எனினும் எவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உவமைகள் சொல்லப்படுகிறதோ அவர்கள் நிச்சயமாய்ச் சொல்லப்படும் உவமைகளின் கருத்தைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூற முடியாது. உதாரணத்திற்கு நாத்தான் தீர்க்கதரிசி கூறிய உவமை தன்னைப் பற்றியது என்பதை அறியமுடியாதவனாகவே தாவீது இருந்தான். (2 சாமு 12:1-7) உண்மையில் “விளக்கம் கொடுக்கப்படாத உவமை, எவராலும் புரிந்து கொள்ள முடியாத விதத்திலேயே இருக்கும்.”(10) சீடர்களுக்கு இயேசு விளக்கம் கொடுத்த பின்பே அவர்கள் அவரது உவமையின் கருத்தைப் புரிந்து கொண்டார்கள். சீடர்கள் இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் இருப்பதனால் இயேசுவின் உவமைகளைத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் எனும் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகவே உள்ளது. அவர்களுக்கும் உவமைகளின் கருத்து விளக்கப்பட வேண்டியுள்ளது. உவமையை மட்டுமல்ல “தேவனுடைய எந்தவொரு செய்தியையும் புரிந்துகொள்வதற்கு அவரது கிருபை மக்களுக்கு அவசியம்.”(11) இதனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு ஆவியின் அருள் கிடைப்பதனால் அவர்களால் உவமையின் கருத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது” எனச் சிலர் விளக்குகின்றனர்.(12) 

உண்மையில் இரட்சிப்புக்காகத் தேவன் மக்களைத் தெரிந்து கொள்வதைப் பற்றிய உபதேசத்துக்கு இவ்வசனத்தை ஆதாரமாக எடுப்பதில் அர்த்தமில்லை. தேவ இராட்சியத்தின் இரகசியங்களை அறியக்கூடிய கிருபை தன் சீடர்களுக்கு அருளப்பட்டுள்ளதைப் பற்றி மட்டுமே இயேசு இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் எனினும் இயேசுவின் வார்த்தைகள் “சத்தியத்தை மறைப்பது அல்லது அதை மறைமுகமான விதத்தில் அறிவிப்பது”(13) என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. எனினும் இயேசு மக்களுக்கு மறைபொருள்களாகச் சொல்லிய உவமைகளைத் தன் சீடர்களுக்கு விளக்கியும் மாற்கு 4:34 இல் குறிப்பிட்டுள்ளபடி சில சந்தர்ப்பங்களில் சாதாரண மக்களுக்கும் விளங்கக் கூடிய விதத்தில் உவமைகளில் போதித்தும் உள்ளார். உண்மையில், இயேசுவின் கூற்றைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு “உவமை” எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் எத்தகைய அர்த்தம் உடையது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் “பரபோலெ” (parabole) எனும் பதமே உவமையைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது. (14) இதனர்த்தம் “ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுக் காட்டிப் போதிக்கும் முறையாகும்.”(15) எனினும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் உவமைகள்  அனைத்தும் இத்தகைய தன்மையுடையவை எனக் கூறுவதற்கில்லை. இயேசு கூறிய “கடுகுவிதை” “புளித்தமா” போன்ற உவமைகளே இவ்வாறு ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுக்காட்டிப் போதிக்கும் உவமைகளாக உள்ளன. பெரும்பாலான உவமைகளில் இத்தகு தன்மை இல்லை. இதற்குக் காரணம் உவமையைக் குறிக்கும் கிரேக்கப் பதம் இயேசு பேசிய அரமிக் மொழியில் உவமை என்பதற்கு அவர் உபயோகித்த சொல்லின் சகல அர்த்தங்களையும் கொண்டிராதமையாகும். 

இயேசு பேசிய அரமிக் மொழியில் “மேத்தால்” (methal) எனும் பதம் கிரேக்கத்தில் “பரபோலெ” (உவமை) என எதைக் கருதுகிறதோ அதை மட்டும் குறிக்காமல் அதைப் போன்ற பலதரப்பட்ட போதனை மற்றும் பேச்சு வழக்கு முறைகளையும் குறிக்கும் பதமாகவுள்ளது இப்பதம் “பழமொழி, மரபுத்தொடர், உருவகவிபரணம், ஒப்புவமை, உவமானம், புதிர் எனும் பலதரப்பட்ட மொழிவழக்குகளையும் குறிக்கும் பதமாகும். (16) இயேசு இவையனைத்தையும் குறிக்க “மேத்தால்” எனும் பதத்தினையே உபயோகித்துள்ளார். (17) எனினும் எவ்விடத்தில் எதைக் குறிக்க இப்பதத்தை அவர் உபயோகித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் கிரேக்கத்தில் உபயோகிக்கப்பட்ட “பரபோலி” எனும் பதம் உள்ளது. ஏனென்றால் அது  ஒப்பிட்டுக்காட்டி உவமிப்பதை மட்டுமே குறிக்கின்றது. இதனால் இயேசுவின் வித்தியாசமான போதனை முறைகள் அனைத்தும் நீண்டகாலமாகக் கிறிஸ்தவர்களால் உவமை என்றே கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது வேதத்தின் மூலமொழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் காரணமாக உவமை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அதன் கிரேக்க அர்த்தத்தை அல்ல, மாறாக இயேசு பேசிய அரமிக் மொழியில் இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.”(18)

இயேசுவின் உவமைகளாகப் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில், “நீங்கள் உலகத்திற்கு உப்பாயிருக்கிறீர்கள்” போன்றவை உருவக விபரணங்களாகும்.புளித்தமா”, “கடுகுவிதை” போன்றவை ஒப்புவமைகளாகும். மேலும் இவற்றில் ஒரு கதையின் மூலம் ஒரு சத்தியத்தைக் கற்பிக்கும் “உவமைக் கதைகள்” உள்ளன. “நல்ல சமாரியன் “கெட்ட குமாரன்” போன்ற ஆரம்பமும் முடிவும் உள்ள கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். அதேபோல் மறைபொருள் கொண்ட கதைகளும் உள்ளன. “விதைப்பன் பற்றிய உவமை” “தானியம் களை பற்றிய உவமை” இத்தகைய மறைபொருள் கதைகளாகும். உவமைக் கதைகளில் ஒரு சத்தியம் மட்டுமே விளக்கப்பட்டிருக்கையில் மறைபொருட்கதைகளில் அவற்றின் விபரணம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.(19) மறைபொருள் கதைகளில் உள்ள மறைபொருள் அர்த்தங்கள் இயேசுவால் சீடர்களுக்கு விளக்கப்பட்டுள்ளதையும் நாம் சுவிஷேசப் புத்தகங்களில் நாம் அவதானிக்கலாம்.  உண்மையில் இயேசு மறைபொருள் கதைகளை உவமைகளாகக் கூறுகையில் அவை சாதாரண மக்களுக்கு விளங்காமல் சீடர்களுக்கு மட்டும் விளங்கும் விதத்தில் கூறியுள்ளார் அப்படியிருந்து சீடர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமையினால் அவர்கள் தனித்திருந்தபோது அவற்றின் அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். எனவே இயேசுவின் கூற்றானது அதாவது எவரும் புரிந்துகொள்ளக் கூடாது எனும் நோக்கோடு அவர் போதித்தவைகளைப் பற்றிய குறிப்பானது, மறைபொருள் கதைகளாக உள்ள உவமைகளைக் குறிக்க மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

இயேசு தேவராட்சியத்தின் இரகசியங்களையே சீடர்கள் மட்டும் புரிந்து கொள்வதற்காகப் பகிரங்கப் பிரசங்கங்களில் மறைபொருள் கதைகளாக உவமைகளாக போதித்ததோடு அவர்கள் தனித்திருந்தபோது அவை பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூறினார். (மத். 13:34-36) இதைப் பற்றி மாற்கு எழுதும்போது “உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. அவர் தம்முடைய சீடரோடு தனித்திருக்கும்போது எல்லாவற்றையும் விபரித்துச் சொன்னார். இதற்குக் காரணம் தேவ இராச்சியத்தைப் பற்றிய தனது செய்தியை முழு உலகிற்கும் அறிவிப்பதற்காக அவர் அந்தப் பன்னிரு சீடர்களையும் தெரிவு செய்திருந்தமையாகும். உண்மையில் இயேசுவிற்கு அநேகச் சீடர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் அவர் பன்னிருவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு அப்போஸ்தலர்(20) என்று பெயரிட்டு, அவர்களை எப்போதும் தன்னோடு வைத்திருந்தார். இந்தப் பன்னிரு அப்போஸ்தர்களுமே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பன்னிரு சீடர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர். இயேசு இவ்வுலகில் அவர்களோடு வாழ்ந்த காலத்தில் தேவராட்சியத்தைப் பற்றிய பல விடயங்களை வெளிப்படுத்தியதோடு, தான் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் வரவிருக்கும் பரிசுத்த ஆவியானவர் ஏனைய விடயங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் வாக்களித்தார். (லூக். 6:13-16, மாற்கு 3:13-15, 4:10-1, லூக்கா 24:25-27,44 அப். 1:3, யோவான் 16:12-13, மத். 28:19-20, அப். 1:8) உண்மையில் இவர்களே முழு உலகிற்கும் இயேசுவின் செய்தியை அறிவிக்கும் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையால் இயேசு மற்றவர்களுக்குப் போதித்ததைவிட அதிகமான விடயங்களை அவர்களுக்குக் கற்பித்தார். இதனால் அவர் சில சந்தர்ப்பங்களில் மறைபொருள் கதைகளான உவமைகள் மூலமாக அவர்களுக்குத் தேவ இராட்சியத்தின் இரகசியங்களைப் போதித்துள்ளார். 

இயேசு இவ்வசனத்தில் “தேவ இராட்சியத்தின் இரகசியங்கள்” என எதைக் கருதியுள்ளார் என்பது பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அக்கால யூதர்கள் தேவனுடைய பெயரை உச்சரிப்பதைத் தவிர்த்து வந்தமையால்(21) மாற்குவிலும் லூக்காவிலும் இடம்பெறும் தேவராட்சியம் என்பது மத்தேயுவில் பரலோக ராட்சியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது(22). தேவ ராட்சியம் அல்லது ரலோக ராட்சியம் என்பது “பூலோக ரீதியாக ஒரு இடத்தில் இருக்கும் இராட்சியத்தை அல்ல மாறாக தேவனுடைய ராஜரீக ஆளுகையையே குறிக்கின்றது.(23) எனவே மானிட வாழ்வில் தேவனுடைய ஆளுகையோடு சம்பந்தமான இரகசியங்களையே இயேசு தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். “இரகசியம்” என்னும் பதம் பவுலினுடைய நிருபங்களில் சிறப்பான அர்த்தமுடையது. மத்தேயு இவ்விடத்தில் மட்டுமே இப்பதத்தினை உபயோகித்துள்ளார். பவுலின் நிருபங்களில் இரகசியம் என்பது யூதரும் புறஜாதியினரும் உடன் சுதந்திரத்தாரராக தேவனுடைய இராட்சியத்தில் இருப்பதைப் பற்றிய சத்தியமாகும். இது இயேசு சிலுவையில் செய்த செயலை அடிப்படையாகக் கொண்டது என்றும், இவ்விடயம் ஆதியிலே தேவனால் திட்டமிடப்பட்டிருந்தும் பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் இதைப் பற்றி முழுமையாக அறியாதிருந்தனர் என்றும் இப்பொழுது தேவனுடைய அப்போஸ்தலருக்கு இத்தெய்வீக இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பவுல் விளக்கியுள்ளார். (ரோமர் 16:24-26, எபே. 3:1-12) அதாவது மானிட இரட்சிப்பைப் பற்றிய தேவனுடைய சுவிஷேசம் இதுவாகும். இதை முழு உலகிற்கும் அறிவிப்பதற்காக இயேசு தன் சீடர்களுக்கு அதன் இரகசியங்களை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தியுள்ளார். (மத். 16:17, லூக். 10:21, 23-24, 12:32) இதனாலேயே தேவ இராட்சியத்தைப் பற்றி அறியும்படி அவர்களுக்கு அருளப்பட்டுள்ளதாக இயேசு குறிப்பிட்டுள்ளார். தேவ இராட்சியத்தின் சில இரகசியங்களை மறைபொருட்கதைகளான உவமைகளின் மூலம் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். 

Reference and Footnotes 
(1) William Barclay, And Jesus Said: The Parables of Jesus p. 4 எனினும் இயேசுவின் சகல உவமைகளையும் கதைகள் எனக் கூறமுடியாது. பெரும்பாலான உவமைகளில் ஒரு கதையின் அம்சங்கள் இல்லை. அத்தோடு அநேகமான உவமைகளில் பரலோக சத்தியங்கள் அல்ல. மாறாாக பூலோக வாழ்வுக்கு அறிவுறுத்தல்கள் உள்ளன. 

(2) Warren W. Wiersbe, Meet Yourself in the Parables p. 10

(3) F.V.Filson, Harper’s New Testament Commentaries: Gospel According to St. Mathew p.160
(4) Ibid p. 5 யூதர்கள் மத்தியியில் உமைகள் மூலம் போதிக்கும் முறை இருந்தமையால் அது கூறுகின்றனர். (William Barclay, And Jesus Said: The Parables of Jesus p. 1-4)

(5) “அவர்களுக்கு” என்பது மாற்குவில் “புறம்பே இருக்கிறவர்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (மாற் 4:1, லூக். 8:10) இச்சொற்பிரயோங்கள் அனைத்தும் இயேசுவின் சீடர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராதவர்களையே குறிக்கின்றது.

(6) Pointed out in David Wenham, The Parables of Jesus p. 240

(7) D. Patte. The Gospel According to Mathew: S Structural Commentary on Mathew’s Faith. Philadelphia, Fortress 1987 p. 186 

(8) இரட்சிப்பிற்காகத் தேவன் மக்களைத் தெரிந்து கொண்டுள்ளார் என்பது வேத்தின் தெளிவான போதனையாகும். எனினும் இத்தெய்வீக தெரிந்து கொள்ளுதல் எதை அடிப்படையாகக் கொண்டது என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இறையியலாளர் ஜோன் கால்வினுடைய உபதேசத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், தேவன் தனது சித்தத்தின்படி உலகத்தோற்றத்திற்கும் முன்பே இரட்சிப்புக்காகக் குறிப்பிட்ட மக்களைத் தெரிந்தெடுத்துள்ளார் என நம்புகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை தேவனால் தெரிந்து கொள்ளப்படாதவர்கள் அவரால் கைவிடப்பட்டவர்கள் ஆவார்.(Louis Berkhof, Systematic Theology p. 109-125) இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆர்மினியஸ் எனும் இறையியலாளரது கருத்தின்படி உலக மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருப்பதால் தேவன் இவ்வாறு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிந்தெடுத்து மற்றவர்களைக் கைவிட்டிருக்க மாட்டார் என தர்க்கிக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சகலமுமறிந்த தேவன் எவர்கள் விசுவாசிப்பார்கள் என்பதை முன்னறிந்து (ரோமர் 8:29) அவர்களை இரட்சிப்பிற்காகத் தெரிந்து கொண்டுள்ளளார். (Henry Thiesen, Introductory Lectures in Systematic Theology, p. 157) 

(9) John Calvin, A Harmony of the Gospels: Mathew, Mark & Luke Volume II p. 64)

(10) Leon Morris, The Gospel According to Mathew p. 339

(11) Donald A. Hanger, Word Biblical Commentary Mathew p. 372

(12) William Hendriksen New Testament Commentary Mathew p. 553

(13) D.A. Carson, The Expositor’s Bible Commentary Mathew p. 307

(14) இக்கிரேக்கச் சொல்லிலிருந்தே உவமையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான parable எனும் பதம் வந்துள்ளது. 

(15) Lawrence O. Richards, Expository Dictionary of Biblical Words p. 477

(16) F.Brown S.R. Driver & C.A. Briggs, Hebrew-English Lexicon of the Old Testament, 1965 p. 605

(17) Gordon D.Fee& Douglas Stuart, How to read the Bible for all its worth. P.124-125

(18) David Wenham, The parables of Jesus p. 225

(19) இத்தகைய கதைகளின் மூலம் இயேசு ஒரு குறிப்பிட்ட சத்தியத்தையே விளக்கியுள்ளார். எனினும் ஆதிச்சபைப் பிதாக்கள் கிரேக்க மற்றும் லத்தீன் மொழி வேதாகமங்களையே உபயோகித்தமையால் அவர்கள் இயேசு பேசியி அரமிக் மொழியில் உவமையைக் குறிக்கும் பதத்திற்குள்ள பல்வகைப்பட்ட அர்த்தங்களையும் கருத்திற்கொள்ளாதவர்களாக, மறைபொருட் கதைகளைப் போலவே ஏனைய உவமைகளையும் வியாக்கியானம் செய்துள்ளனர். உதாரணத்திற்கு “நல்ல சமாரியன்” உவமையின் மூலம் இயேசு, தன்னிடத்தில் கேள்வி கேட்ட நியயாஸ்திரிக்குப் “பிறன் யார்? என்பதைக் காண்பித்துள்ளார். என்பதை அறியாமல், கதையின் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்களைக் கொடுத்துள்ளார். இவ்வுவமையைப் பற்றி இன்றுவரை பிரபல்யமாயிருக்கும் இத்தகைய விளக்கமுறை கி.பி. 3ம் நூற்றாண்டில் ஒரிகன் என்னும் சபைப் பிதா கொடுத்த விளக்கமாகும். 

(20) “அப்பொஸ்டொலொஸ்” எனும் கிரேக்க பதமே தமிழில் “அப்போஸ்தலன்” என எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் “அனுப்பப்பட்டவன்” அல்லது “செய்தியாளன்” என்பதாகும் எனவே, இயேசுவின் அப்போஸ்தல்கள் அவரைப் பிரதிநிதித்துவம் வகிக்கும் அவரது செய்தியாளர்களாய் இருந்தனர். 

(21) யூதர்கள் பபிலோனிய சிறையிருப்பின் பின்னர் நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். “உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணில் வழங்காதாயிருப்பாயாக” என்னும் இரண்டாம் கற்பனையைக் கைக்கொள்வதற்காக அவர்கள், தேவன் என்னும் பெயரை உச்சரிப்பதையும் தவிர்த்து வந்தனர். “பரலோக ராட்சியம் என்பதில் பரலோகம் என்பது தேவனை மரியாதையுடனும் பக்தியுடனும் அழைப்பதைக் குறிக்கிறது. (Leon Morris, The Gospel According to Mathew p. 53)
(22) Joel Marcus, ‘Entering into Kingly Power of God” in the Journal of Biblical Literature. Vol 107 107. P. 663-675



கட்டுரையாசிரியர் Dr. M.S. வசந்தகுமார்.
நன்றி - சத்தியவசனம் 
  


Sunday 16 March 2014

வேதமும் விளக்கமும்-ஆதியாகமம் 30:14-16 தூதாயீம் எத்தகைய கனி


26. ஆதியாகமம் 30:14-16 தூதாயீம் என்றொரு கனி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது எத்தகைய கனி? (ஆர். ரேவதி. கொழும்பு-10)
 
இது மத்தியத்தரைக் கடற்கரைப் பகுதிகளில் வளரும் ஒரு வகையான செடியின் கனியாகும். இச்செடித் தண்டுகள் அற்றதும் நீள்வட்ட இலைகளை உடையதுமான தாவரமாகும். இச்செடியின் மலர்கள் ஊதா நிறமுடையதாகவும், பழுத்த கனிகள் செம்மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும். அதிக வாசனையுடைய இப்பழங்கள் (உன். 7:13) பாலுணர்வைத் தூண்டுபவையாகவும் கருத்தரிப்பதற்கு உதபவுபவையாகவும் இருப்பதாக மத்தியதரைக் கடல் பிரதேசங்களிலுள்ள நாடுகளில நம்பப்பட்டு வந்துள்ளது. இதனால் இக்கனிகள் பாலுணர்வுக் கனிகள் என்றும் காதற் கனிகள் என்றும் அழைக்கப்பட்டலாயிற்று. ஆதியாகமம் 30 ஆம் அதிகாரத்தில் பிள்ளையில்லாது மலடியாயிருந்த ராகேல் இக்கனிகளை விரும்பியதற்கு காரணம் அவை கருத்தரிப்பதற்கு உதவுபவை எனும் அக்கால மக்களது நம்பிக்கையாகும். எனினும் இன்றைய மருத்துவத்துறை இக்கனிகளுககு கருத்தரிக்க வைக்கும் சக்தி எதுவும் இல்லை என்பதைக் கண்டுபிடித்துள்ளது. இக்கனியை அதிகமாகச் சாப்பிட்டால் ஒருவித மயக்க நிலை சரீரத்திற்கு ஏற்படும் என்பதையும் அறியத் தந்துள்ளது. அத்தகைய மக்கநிலையே பாலுணர்வுத் துண்டுதலுக்கான காரணமாக கருதப்பட்டிருக்கலாம்.
 
 
 
 
 ஆதியாகமம் 30:14-16 
14. கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

15. அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

16. சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான். 
 
உன்னதப்பாடு. 7:13
13. தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன். 

Wednesday 12 March 2014

வேதமும் விளக்கமும்-1 சாமுவேல் 16:14தேவன் பொல்லாத ஆவிகளை அனுப்பி மனிதனை கலங்கப் பண்ணுவாரா?

25. 1 சாமுவேல் 16:14 இன்படி கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப் பண்ணிக் கொண்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் பொல்லாத ஆவிகளை அனுப்பி மனிதனை கலங்கப் பண்ணுவாரா? (ஜோன் டிக்சன், கெங்கல்ல, இலங்கை)
 
பொல்லாத ஆவியை அனுப்பி தேவன் எவரையும் கலங்கப் பண்ணுபவரல்ல. வேதாகம ஆசிரியர்கள், அனைத்தும் தேவனுடைய ஆளுகையின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் இருப்பதை அநிந்திருந்தமையில், அவர் அனுமதிப்பவைகளையும் அவரால் செய்யப்பட்டவைகளாகவே குறிப்பிட்டுள்ளனர். மத்தேயு 8ஆம் அதிகாரத்தில் மனிதனுக்குள் இருந்த பிசாசுக்கள் பன்றிகளுக்குள்ள செல்ல இயேசுவிடம் அனுமதி கேட்டபோது இயேசு கிறிஸ்து போங்கள் என்று கட்டளையிட்டார். (மத். 8:31-32) இதனால் இயேசுவே பிசாசுக்களைப் பன்றிக்குள் அனுப்பினார் என நாம் எண்ணலாம். எனினும் பிசாசுக்கள் பன்றிக்குள் செல்வதற்கு இயேசு கிறிஸ்து நேரடியாக் காரணமாக இருக்கவில்லை. பிசாசுக்கள் என்ன செய்ய விரும்பினவோ அதைச் செய்வதற்கே இயேசு கிறிஸ்து அனுமதி கொடுத்துள்ளார. இதேவிதமாகத்தான் சவுலைக் கலங்கப் பண்ணிய பொல்லாத ஆவியும் தேவனால் அனுமதிக்கப்பட்டதொன்றாக இருக்கின்றதே தவிர அவரால் நேரடியாக அனுப்பப்பட்டதொன்றாக இல்லை தேவனுடைய ஆவி சவுலில் இருக்கும்வரை பொல்லாத ஆவியால் அனை அணுகமுடியவில்லை. ஆனால் சவுல் பல தடவைகள் கர்த்தருடைய வார்த்தையை மீறி நடந்தமையால் தேவதண்டனை அவன் மீது வந்தது. கடைசியில் கர்த்தருடைய ஆவியினவர் அவனை விட்டுச் சென்றபின் அவன் தேவனடைய ஆளுகையின் கீழ் இராதமையால் பிசாசினால் அவனை இலகுவாகத் தாக்கக் கூடியதாக இருந்தது. சவுலைத் தாக்க கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட பொல்லாத ஆவியையே 1 சாமுவேல் புத்தக ஆசிரியர் கர்த்தரால் வரவிடப்படட ஆவி எனக் குறிப்பிட்டுள்ளது. 
 
இதை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ள யோபுவின் சரிதை பெரிதும் உதவுகின்றது. பிசாசு தேவனின் அனுமதியுடன் யோபுவைத் தாக்கினான். யோபுவின் துயர நிலைக்குக் காரணம் பிசாசே. யோபைத் தாக்கத் தேவன் பிசாசுக்கு அனுமதி மட்டுமே கொடுத்திருந்தார். அப்படியிருந்தும் யோபு தன் துயர நிலையைப் பற்றிக் கூறும்போது கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் என்று தனது துயரத்திற்கு காரணம் தேவனே என கூறினான். ஆனால் யோபினுடைய செல்வங்கள் அனைத்தையும்அவனிடமிருந்து எடுத்தது கர்த்தரல்ல பிசாசே அனைத்தையும் எடுத்தான். இதேவிதமாகத்தான் கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட சவுலைக் கலங்கப் பண்ணிய பொல்லாத ஆவி கர்த்தரால் விரட்டப்பட்ட ஆவி என சொல்லபபட்டுள்ளதை தவிர தேவன் பொல்லாத செயல்களைச் செய்பவர் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. யாக்கோபு முதல் அதிகாரம் 13ம் வசனத்தில் 13. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. என்ற உண்மையை அறிந்திடலாம்
 
 
1 சாமுவேல் 16:14 
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. 
 
மத். 8:31-32
31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது, பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின. 

Monday 10 March 2014

வேதமும் விளக்கமும் - அந்நிய பாஷையில் பேசுவது என்பது என்ன?

அந்நிய பாஷையில் பேசுவது என்பது என்ன? அந்நிய பாஷையில் பேசுகிறவர்கள் அது சாத்தானுக்கு விளங்காது. தேவனுக்கும் பேசுகிறவர்களுக்கும் மட்டும்தான் புரியும் என்று சொல்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் மேல் வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்த 120 பேர் பேசிய அந்நிய பாஷை மற்றவர்களுக்கு விளங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (7 முதல் 1 வரையிலான வசனங்கள்) எனவே இது பற்றி விளக்கம் தாருங்கள் (திருமதி. பி.நடரைாஜா, மாத்தளை)
 
அந்நிய பாஷையில் பேசுவதைப் பற்றி நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வேதப் பகுதிகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதேசமயம் அந்நிய பாஷை பற்றி பலவிதமான கருத்து முரண்பாடுகள் இன்று கிறிஸ்தவர்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது. சிலர் அந்நிய பாஷை மானிட மொழி என கருதுகின்றனர். அதாவது இவ்வுலக மனிதர் பேசும் மொழி. ஆனால் பேசுபவர் அம்மொழியை அறியாதவர். அவர் ஆவியானவரின் அருளினால் தான் அதுவரையில் அறிந்திராத வேறு ஒரு மொழியில் பேசுகிறார். அதுவே அந்நிய பாஷை என்பதே இவர்களது கருத்தாகும். இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாக அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தையே சுட்டிக்காட்டுவர். இதற்குக் காரணம் பெந்தகோஸ்தே தினத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்படப்டவர்கள் ஆவியானவர் தங்களுக்குத்கு தந்தருளின வெவ்வேறு பாஷைகளிலே பேசினபோது அவ்விடத்திற்கு வந்திருந்த வெவ்வேறு பாஷைக்காரர்கள் தங்கள் பாஷைகளிலியேயே அவர்கள் பேசுகிறதைக் கேட்டார்கள். இதிலிருந்து அந்நிய பாஷை உலகில் பேசப்படும் மானிட மொழி என்பதை அறிந்துக் கொண்டாலும் இந்த சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுக்க முடியாது. 
 
1 கொரிந்தியர் 14:2இல் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். என்று அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்நிய பாஷை மனிதர்களுக்கு விளங்காத பாஷை என்பது தெளிவாகின்றது. அப்போஸ்தலர் 2இன் அந்நியபாஷை மற்றவர்களுக்கு விளங்கிக்கூடிய ஒரு மொழியாக இருக்கையில் 1 கொரிந்தியர் 14இல் அந்நிய பாஷை தேவனைத் தவிர வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாத அந்நிய பாஷையாக உள்ளது. மேலும் 1 கொரிந்தியர் 13:1 இல் பவுல் தேவர்களின் பாஷைகளைப் பேசுவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது அந்நியபாஷை வரம் என்பது மானிட மொழிகளையும் மனிதர்களுக்கு எவ்விதத்திலும் புரியாத ஆவியின் ஏவுதலால் பேசப்படும் வார்த்தைகளையும் உள்ளடக்கியதொன்றாகவே உள்ளது என்பதை அறிந்திடலாம் அந்நியபாஷையில் பேசும் சிலர் இன்னுமாரு மானிட மொழியில் பேசுகின்றனர். வேறுசிலர் எவருக்கும் புரியாத மொழிகளைப் பேசுகின்றனர். இவ்விருவதும் பேசுவது ஆவியானவர் அருளும் அந்நிய பாஷையின் வரமாகவே இருக்கின்றது. இதனால்தான் 1 கொரிந்தியர் 12:10 இல் அந்நியப்பாஷை வரத்தைப் பற்றி குறிப்பிடும்போது “பற்பல பாஷைகளைப் பேசுதல்” என்று என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். 
 
1 கொரிந்தியர் 13:1  
 1. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 
 
 
1 கொரிந்தியர் 12:10  
10. வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 

Thursday 6 March 2014

வேதமும் விளக்கமும்-யோவான் 2:4 இல் இயேசு தன் தாயாரை ஸ்திரியே என்றழைப்பதன் காரணம் என்ன?

யோவான் 2:4 இல் இயேசுகிறிஸ்து தன் தாயாரை ஸ்திரியே என்று அழைக்கிறார். யோவான் 8:10 பாவியான பெண்ணையும் அதேவிதமாக ஸ்திரியே என்றே அழைக்கிறார். இதன் அர்த்தம் என்ன? (எம்.எக்ஸ்.ஜெரால்ட், ஊட்டி, இந்தியா)

 இயேசுகிறிஸ்து தன்னுடைய பகிரங்க ஊழிய காலத்தில் பெண்களை இவ்விதமாகவே அழைத்துள்ளார். மத்தேயு 15:28 இலும் லூக்கா 13:12 இலும் பிசாசின் பிடியிலிருக்கும் தன் மகளை விடுவிக்கும்படி கேட்ட கானானியப் பெண்ணையும் யோவான் 4:21 இல் சாமாரியப்பெண்ணையும், யோவான் 20:15 இல் மகதலேனா மரியாளையும் யோவான் 2:4 மற்றும் 19:26 இல் தன் தயாயாரையும் ஸ்திரியே என்றே அழைத்துள்ளார். எனினும் ஸ்திரியே என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் மரியாதைக் குறைவான பதம் அல்ல.அப்பதம் மரியாதையுடனும் பண்புடனும் பெண்ணை அழைப்பதற்கு அக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட பதமாகும். அக்கால யூத சமுதாயம் பெண்களைத் தாழ்வானவர்களாகக் கருதிய போதிலும் இயேசு கிறிஸ்து பெண்களைப் பற்றி அவ்விதமான எண்ணங் கொண்டிருக்கவில்லை. இதனால் எல்லோரையும் மரியாதையுடனும்“ பண்புடனும் அவர் அழைத்துள்ளார். 
இயேசு கிறிஸ்து பெண்களை அழைக்க உபயோகித்த பதம் மூலமொழியில் மரியாதைமிக்க ஒரு பதமாயினும் மகன் தாயை அழைப்பதற்கு அப்பதம் பொருத்தமற்றது. இயேசு கிறிஸ்து இவ்வாறு தன் தாயாரை அழைக்க காரணம், அவர் தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் தனக்கும் மரியாளுக்கு இடையே அதுவரை காலமும் இருந்த உறவுமுறை மாற்றபப்பட்டமையாகும். உண்மையில் இயேசு கிறிஸ்து தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை மரியாளை அம்மா என்றே அழைத்திருக்க வேண்டும். ஆனால் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் மரியாளையும் மற்றப் பெண்களைப் போல் ஸ்திரியே என்றே அழைத்தார். அதன் பின்னர் அவர் மரியாளின் மகனாக அல்ல மாறாக தேவனுடைய குமாரனாகவே செயல்பட்டார். அதுவரை காலமும் தன்பூலோக பெற்றோருக்’கு கீழ்படிந்து வாழ்ந்தவர், பகிரங்க ஊழிய காலத்தில் பரலோகப் பிதாவின் சித்தத்தின்படியே செயல்பட்டார். இயேசு கிறிஸ்து தன்னுடைய பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் அதுவரை காலமும் மரியாளுக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த உறவு முறை மாற்றப்பட்டமையினால் அவர் அது வரைகாலமும் மரியாளை அழைத்தவிதமாக அவளை அழைப்பதை நிறுத்திக் கொண்டார். 
 
யோவான் 2:4 
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
 
யோவான் 8:10 
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். 
 
 மத்தேயு 15:28 
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். 
 
லூக்கா 13:12 
இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
 
 
யோவான் 20:15
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
 
யோவான் 2:4 
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 
 
 யோவான் 19:26 
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 
 
 
 
 
 மேலதிக விளக்கத்திற்கு இந்த தொடுப்பினைப் பார்க்கவும்

Monday 3 March 2014

வேதமும் விளக்கமும் - 1 சாமுவேல் 28:6 - ஊரீம் தும்மீம் என்பது என்ன?


1 சாமுவேல் 28:6 இல் சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது கர்த்தர் அவனுக்கு சொப்பனங்களினாலாவது ஊரீமினாலாவது தீர்க்கதரிசனங்களிலாவது மறு உத்தரவு அருளவில்லை என்று வாசிக்கிறோம். இங்கு ஊரிம் என்று சொல்லப்பட்டிருப்பது யாது? (அ.ராயப்பன், திருவரம்பூர், இந்தியா)
பழைய ஏற்பாட்டுக்காலத்தி்ல் பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும்போது அணியும் நியாயவிதி மார்பகத்தில் ஊரீம் தும்மீம் என்பவைகள் இருந்தன. இதைப்பற்றி யாத்திராகமம் 28:30 நாம் வாசிக்கலாம். ஊரீம் தும்மீம் என்பவைகள் தேவனுடைய சித்தத்தை அறிந்து சொள்வதற்காக உபயோகிக்கப்படட புனித பொருள்களாகும்.மனிதனின் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பது இவற்றின் பணியாகும். 1 சாமுவேல்23:9-12, 28:6, 30:7-8, 14:36-37 போன்ற வசனங்களில் ஊரீம் தும்மீம் என்பவை உபயோகி்ப்பட்டுள்ளதை நாம் காணலாம். அக்காலத்தில் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்புபவர்களுக்கு தேவன் இவற்றின் மூலம் தனது சிதததத்தை அறிவித்தார். எனினும், தாவீதினுடைய காலத்திற்குப் பிறகு இவை உபயோகிக்கப்பட்டது பற்றி வேதாகமத்தில் எவ்வித குறிப்பும் இல்லை. இஸ்ரவேலில் தீர்க்கதரிசிகளின் பணி வளர்சியுற்ற காலத்தில் இவற்றின் உபயோகம் இல்லாமல் போய் விட்டது. 
யாத்திராகமம் 28:30  
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும். 
 1 சாமுவேல் 23:9-12,
9. தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

10. அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

11. கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

12. கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். 
 1 சாமுவேல் 14:36-37 
36. அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

37. அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.