- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 31 May 2011

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 3

சங்கீதங்களின் உருவங்கள் என்னும் இத்தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க 


சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்


சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 2 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்



பின்வரும் விடயங்கள் இவற்றில் ஆராயப்படும்
(அ) உயிருருவகவணி (Personification) 
(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy) 
(இ) பிரதியீட்டணி (Synecdoche)
(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole) 
(உ) புனையுருவணி (Apostrophe) 
(ஊ) வஞ்சிப்புகழ்ச்சியணி (Irony)
(எ) மனுவுருவகவணி (Anthropomorphism)
(ஏ) மிருகவுருவகவணி (Zoomorphism) 


(அ) உயிருருவகவணி (Personification)
கவிதைகளில் சில சந்தர்ப்பங்களில் சாதாரண விபரணங்களிலும்) உயிரற்ற பொருட்களையும் பண்புப் பெயரால் குறிப்பிடப்படுகின்றவைகளையும் உயிருள்ள ஜீவிகளாகவும் நபர்களாகவும் வர்ணித்து எழுதும்போது உபயோகிக்கப்படும் உருவகங்கள் உயிருருவகவணி (Personification) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு “மலர்கள் சிரித்தன“ “நிலவு பேசியது“ “தென்றல் தொட்டது“ என்று கூறும்போது உயிரற்ற பொருட்கள் உயிருள்ள நபர்களாக வர்ணிக்கப்படுகி்னறன. சங்கீதங்களில் “ஆறுகள் கைகொட்டுவதாகவும்“ பர்வதங்கள் பாடுவதாகவும் (சங். 98:8) மலைகள் துள்ளுவதாகவும் (சங். 114:4) ஏசாயா 42:12 இல் மலைகள் கம்பீரமாக முழங்குவதாகவும்“ “மரங்கள் கைகொட்டுவதாகவும்“ ஏசாயா 35:1 இல் “வானந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்வதாகவும்“ எரேமியா 46:10 இல் பட்டயம் வெறித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், வேதாகம ஆசிரியர்கள் உண்மைக்கு மாறான விதத்தில் எழுதியுள்ளதாகவே எண்ணத் தோன்றும். ஆனால் அவர்கள் உயிருவருவத்தின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள சூழல அவ்வாறு வர்ணித்துள்ளனர். 

வேதாமத்தில் உள்ள உயிருருவகங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்வது பிழையான உபதேசங்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில்  “ஞானம்“ உயிருருவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதிச்சபைப் பிதாக்கள் சொல்லர்த்தமாகக் வியாக்கியானம் செய்ததன் விளைவாக இயேசுக்கிறிஸ்துவின்  தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டு உபதேசம் உருவானது.. நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் ஞானம் கூப்பிடுவதாகவும், சத்தமிடுவதாகவும் (8:5-11) பேசுவதாகவும் (8:5-11) மனிதர்களை நேசிப்பதாகவும் (8:17-20) குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆதிச்சபை பிதாக்கள் இவ்வசனத்தில் உயிருருவகத்தில் ஞானம் வர்ணிக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், இவ்வசனங்களை உண்மையான ஒரு மனிதனைப் பற்றிய விபரணமாக எடுத்து, இவை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விவரணம் என்று கூறியமையால், பிற்காலத்தில் வேதப்புரட்டர்கள் இவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சில வேதப்புரட்டு உபதேசங்களை உருவாக்கியுள்ளனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் நீதிமொழிகள் 8:22 இல் “ஞானம் சிருஷ்டிக்கப்பட்டுள் ளதாகக்“ குறிபபிடப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு (6) கி.பி. 4ம் “ஏரியஸ்“ என்பவர் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என போதித்தார். இப்பிழையான போதகத்தின் செல்வாக்கு தற்காலத்தில் “யெகோவா சாட்சிகளுடைய“ உபதேசத்தில் உள்ளது(7). இதனால், வேதாகமத்தில் உயிருருவகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள  பகுதிகளை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதப்புரட்டு உபதேசங்கள் உருவாகுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. 




(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy)
 ஒரு வார்த்தைகக்குப் பதிலாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இன்னுமொரு வார்த்தையை உபயோகிக்கும் போது அது ஆகுப்பெயரணியாக (Metonymy) உள்ளது. உதாரணத்திற்கு கீரை விற்பவரை “கீரை“ என்று கூபபிடும்போது கீரை எனும் பதம் கீரையை அல்ல கீரை விற்பனை அழைக்கும் பதமாகவே உள்ளது. இதேவிதமாக லூக்கா 16:29 இல் அவர்களுக்கு “மோசேயும் தீர்க்கதரிசளும் உண்டு“ எனும் கூற்று, புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் மோசேயும் தீர்க்கதரிசிகளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவ்வாக்கியம் ஆகுபெயரணியாக, மோசேயும் ஏனைய தீர்க்கதரிசளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. இவ்வாக்கியம் ஆகுபெயரணியாக மோசேயும் ஏனைய தீர்க்கததரிசிகளும் எழுதிய வேதவாக்கியங்களை குறிப்பிடும் விபரணமாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது. சங்கீதப்புத்தகத்தில் “கை“ என்னும் பதம் செயலைக் குறிப்பிடுவதற்கும் (சங். 7:3) (8 ) “நாமம்“ என்னும் பதம் தேவனைக் குறிப்பிடுவதற்கும் (சங். 9:10) “வாய்“ என்னும் பதம் பேச்சைக் குறிப்பிடுவதற்கும் (சங். 5:9) ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. (9) நாம் இத்தகைய உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், ஒன்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை அது எதைக் குறிப்பிடுகிறது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், குறிப்பிடட வசனத்தில் சங்கீதக்காரன் சொ்ல்லும் விடயத்தைத் தவறாகவே புரிந்து கொள்வோம். 

(இ) பிரதியீட்டணி (Synecdoche)
பொருளின் ஒரு பகுதிக்குப் பதிலாக அதை முழுமையாக அல்லது அதன் முழுமைக்குப் பதிலாக அதன்ஒ ர பகுதியைக் கறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள உருவகம் பிரதியீட்டணி (Synecdoche) என்று அழைக்கப்படுகின்றது. (10) அதாவது தனின். ஒரு பகுதியைக் குறிப்பிட முழு மனிதனைக் குறிப்பிட மனிதனின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் முறை இதுவாகும். உதாரணத்திற்கு ஆதியாகமம் 42:38 இல்,  “நரைமயிர் பாதாளத்தில் இறங்குவதாக“ குறிப்பிடப்பட்டிருப்பது, நரை மயிர் மட்டும் பதாளதாதிற்கு செல்வதைப் பற்றி அல்ல, மாறாக, முழு மனிதனும் பாதாளத்திற்குச் செல்வதைக் குறிப்பிட அம்மனிதனின் ஒரு பகுதியை “நரைமயிர்“ மட்டும் இவ்வசனத்தில் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது(11) இதேபோல் நீதிமொழிகள் 1:15-16 இல் “கால்கள்“ ரோமர் 16:4 இல் “கழுத்து(12)“ சங்கீதம் 35:10 இல்“எலும்புகள்“ என்னும் பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் பிரதியீட்டணியாகவே உள்ளது. மேலும், சங்கீதங்களில் “ஆத்துமா” என்னும் பதம் பல இடங்களில் முழு மனிதனையும் குறிப்பிட்டும் பிரதியீட்டணியாகவே இருப்பதனால் மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் உபதேசங்களுக்கு இவ்வசனங்களை உபயோகிக்கும்போது, சங்கீதக்காரன் சொல்லும் விடயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. (13)பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு அதை முழுமையாக்க குறிப்பிடுவது உண்டு. உதாரணத்திற்கு லூக்கா 2:1 இல் “உலகமெங்கும்“ என்பது முழு உலகத்தையும் அல்ல, அக்கால “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்பதைக் குறிக்கும் பிரதியீடடணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிக்கும் ரோம சக்கரவர்த்தி அக்காலத்தில் ரோம இராட்சியத்திலேயே குடித்தொகை கணிப்பீட்டைச் செய்தான். இதனால் புதிய ஆங்கில வேதாகமங்களில் இவவ்சனத்திலுளள பிரதியீட்டணி “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்று விளக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதேவிதமாக யோசுவா 7:11 இல் “இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள்“ என்பது, இஸ்ரவேல் மக்களில் பாவம் செய்த ஆகான் என்னும் ஒருவனைக் குறிப்பிட (யோசு. 7:1) ஒரு பகுதியைக் குறிப்பிட அதன முழுமையை உபயோகிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது. இதேவிதமாக சங்கீதங்களிலும் ஒரு பகுதியைக் குறிப்பிட அதன் முழுமையையும் முழுமையைக் குறிப்பிட அதன் ஒரு பகுதியையும் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டிருப்பதனால், நாம் இவற்றைக் கருத்திற் கொள்ளாது சங்கீதத்தின் வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது சங்கீதக்காரர்கள் சொல்லும் விடயங்களைச் சரியான விதத்தில் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும். 


(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole)
ஒரு விடயத்தை முக்கியப்படுத்திக் கூறுவதற்கு மிகைப்படுத்திக் சொல்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “உயர்வுநவிற்சசியணி“ (Hyperbole) என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய உருவகங்களை உருவக விவரணமாக விளக்காமல் சொல்லர்தமாக எடுத்தால், குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பொய்யாகவே இருக்கும். ஆனால், இது மக்களை வஞ்சிப்பதற்காகச் சொல்லப்படும் பொய் அல்ல. ஆனால், சொல்லப்படும் விடயத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் அதை முக்கியப்படுத்துவதற்காகவும் மிகைப்படுத்திச் சொல்லும் ஒரு முறை சாதாரண மொழிவழக்கில் உள்ளது. உதாரணத்திற்கு விபத்தில் அகப்பட்ட வாகனம் பாரிய அளவில் உடைந்துபோனதைப் பற்றி குறிப்பிட வாகனம் “சுக்குநூறாக உடைந்துவிட்டதாக“ கூறுவதும் மக்கள் படுகாயமடைந்து கிடப்பதைச் சுட்டிக் காட்ட அவர்கள் “இரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும்“ கூறும்போது இவற்றைச் சொல்லர்த்தமாக அல்ல உயர்வுநவிற்சியாகவே சொல்லுகிறோம். வேதாகம ஆசிரியர்களும் இத்தகைய உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு பெருந்திரளான மக்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றிச் சென்றதை குறிப்பிட்ட பரிசேயர்கள் “இதோ உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே“ என்று கூறினார்கள்.(யோவான் 12:19) உண்மையில் உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் போய்விட்டார்கள் என்று சொல்லர்த்தமாக இக்கூற்றை வியாக்கியானம் செய்தால் அது பொய்யாகவே இருக்கும். இவ்வாறு கூறிய பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை. மேலும், அச்சமயம் எருசலேமைத் தவிர வேறுபிரதேசங்களில்  இருந்தவர்களில் எவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் செல்லவில்லை. அப்படியிருந்தும் பரிசேயர்கள் “உலகமே அவர் பின்சென்றது“ என்று கூறுவதற்குக் காரணம், பெருந்திரளான மக்கள் அவர் பின்னால் சென்றதேயாகும். இதேவிதமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட மிகவும் அதிகமான காரியங்களை இயேசுக்கிறிஸ்து செய்தார் என்பதை அறியத் தரும்போது “அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் கொள்ளாது (யோவான் 21:25) என்று உயர்வுநவிற்சியணியில் தெரிவித்துள்ளார். 

சங்கீதங்களை எழுதியவர்களும் தாங்கள் சொல்வதை வலியுறுத்துவதற்கும் முக்கியப்படுத்துவதறகும் உயர்வுநவிற்சியணி என்னும் உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு, சங்கீதக்காரன் அதிகமாக அழுததைக் குறிப்பிட “என் கண்களிலிருந்து நீர்த்தரைகள் ஓடுகின்றன” (சங். 119:136) என்றும் “இராமுழுவதும் என் கண்ணீரால் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன் (சங். 6:6) என்றும் எழுதியுள்ளான். இதைப்போன்ற உயர்நவிற்சியணிகள் பல சங்கீதங்களில் உள்ளன. இவற்றை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், சங்கீதக்காரன் சொல்வதை தவறாகவே புரிந்து கொள்வோம். சிலநேரங்களில் அவன் பொய் சொல்வதாக கூட நாம் நினைக்கலாம். ஆனால் உயர்வுநவிற்சியணி உபயோகிக்கப்படும்போது சொல்லப்படுவதை உருவகமாகவே நாம் எடுக்க வேண்டும். எனவே, உயர்வுநவிறசியணி என்னும் உருவகத்தை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதவசனங்களுக்கு பிழையான அர்த்தம் கற்பிக்க்க கூடாது. 
(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Footnote and References.
(6) மூலமொழியின்படி இவ்வசனத்தின் இறுதிப்பகுதி நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிரு்ப்பது போல, “ஆதியாய் கொண்டிருந்தார்” என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். 

(7) மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் யெகோவா சாட்சிகளுக்கு 
கிறிஸ்தவனின் பதில்கள் என்னும் நூலினை பார்க்கவும் (பக். 100-103)

(8 ) 1 சாமுவேல் 22:17 2சாமுவேல் 3:12, 14:19 என்னும் வசனங்களிலும், “கை“ என்னும் பதம் ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது.

(9) உதாரணத்தி்ற்கு “யுத்தம்“ என்பதற்குப் பதிலாக பல இடங்களில் “பட்டயம்“ என்னும் பதத்தை வேதாகமம் ஆகுப்பெயரணியாக உபயோகித்துள்ளது. (யாத். 5:3, ஏசா 1:20, எரே. 14:12-13, 14:15-16)

(10) R.B. Zuck, Basic Bible Iterpretation p.151)

(11) பழைய ஏற்பாட்டில் பாதாளம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “ஷியொல்“ என்னும் எபிரேயப் பதம் “புதைகுழி“ அல்லது கல்லறை“ என்னும் அர்த்தமுடையது

(12) ரோமர் 16:4 இல் பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் தன் பிராணனுக்காகத் “தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்“ என்று பவுல் குறிப்பிட்டு்ளளார். இவ்வசனத்தில் பிராணன் என்று மொழிபெயர்க்க்பபட்டுள்ள பதம் “ஆத்துமா“ எனும் அர்த்தமுடையது. எனவே, இவ்வசனத்தில் “ஆத்துமா“ என்னும் பதமும் முழுமனிதனைக் குறிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது. 

(13) கிறிஸ்தவ உலகில் ஆரம்பத்திலிருந்தே, மனிதன் இரண்டு பகுதிகளாகவா அல்லது மூன்று பகுதிகளாகவா இருக்கின்றான் எனனும் சர்ச்சை இருந்து வந்துள்ளது. சில கிறிஸ்தவர்கள் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் என்று மூன்று பகுதிளாக வேதாகமம் பிரித்து்ளதாகக் கூறுகின்றனர். எனையவர்கள் இதை மறுதலித்து, மனிதனை இரண்டு பகுதிகளாகவே பிரிக்க முடியும் என்று கருதுகி்ன்றனர். ஆனால் வேதாகமத்தில் மனிதனுடைய பல பகுதிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சில பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் விதத்தில் பிரதியீட்டணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வசனங்களை ஆதாரமாகக் கொ்ண்டு மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிப்பது தவறாகும். வேதகமம் மனிதனைப் பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளாக அல்ல. முழுமையானவனாகவே பார்க்கிறது. 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment