- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 29 May 2013

கிருபை வரம்


கிளடிஸ்  ஐவோஸ் என்ற பெண் 26 வயதில் இரட்சிக்கப்பட்டு சுவிஷேச ஊழியத்தில் ஈடுபட்டாள். கிறிஸ்துவை அறியாத சீனருக்கு கிறிஸ்துவை அறிவிக்கப் பாரங்கொண்டு, ஒரு மிஷனரி சங்கத்துக்கு விண்ணப்பித்தாள். அவளுக்கு இறையியில் பட்டம் இல்லையென்றால், அவளால் அந்த மொழியைத் திறம்பட கற்க இயலாதென்றும் நினைத்த அந்தச் சங்கம் அவள் விண்ணப்பத்தை நிராகரித்தது. ஆனால், அவளோ சீனாவுக்குப் போவதில் உறுதியாக இருந்தாள். வயதுமுதிர்ந்த மிஷனரிக்கு உதவியாக ஒருவர் தேவையென அறிந்து, அங்கு போய் வயது முதிர்ந்த மிஷனரியுடன் ஊழியஞ் செய்தாள். 


சீனருடைய உடையை அணிந்து. சீன உணவை உண்டு, அவர்களில் ஒருத்தியாக சுவிசேஷத்தை அறிவிக்க முற்பட்டாள். வயதுசென்ற மிஷனரி மரித்த பின்பு, தனியாக ஊழியஞ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு சிறிய வேலை செய்து அதன் மூலம் தன் பணத்தேவையைச் சந்தித்துக்கொண்டு ஊழியம் செய்தாள். அநேகர் கிறிஸ்துவை அறிந்து ஆராதனைக்காக கூடிவந்தனர். பெற்றோரால் புறக்கணிப்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனாதைப் பிள்ளைகளுக்கு ஆதரவளித்தாள். காலப்போக்கில் அவளுடைய பொறுப்பில் 100 பிள்ளைகள் இருந்தனர். கலவரம் ஏற்படவே ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தான். அந்த மனிதனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. ஆளுநர் கிளடிஸ்சை அனுப்பினார். அவள் பயத்துடன் போய், அவனைச் சாந்தப்படுத்தினாள். பின்பு காயப்பட்டவர்களுக்கு உதவியதுடன், கைதிகளுக்கு வேலை கொடுக்கும்படியும், அதற்குக் கூலி கொடுக்கும்படி ஆளுநரிடம் கூறினாள். தொடர்ந்து கைதிகளுக்குக் சுவிஷேசத்தைப் பகிர்ந்து பகிர்ந்து கொண்டாள். 


ஜப்பான் போர்வீரர்களின் ஆக்கிரமிப்பில் காயப்பட்ட கிளடிஸ், அதனைப் பொருட்படுத்தாமல், காயப்பட்டவர்களுக்கு உதவினாள். ஜப்பானிய வீரர்கள்  இவளையும் தாக்க முற்படுவதை அறிந்த மக்கள் அவளை வேறு இடத்திற்கு பிரியாவிடை வைபவம் நடத்தினர். அப்போது அந்த எஜமான் எல்லோருக்கும் முன்பாக, கிளடிஸ்சின் தேவனில் தான் கண்ட எல்லாவற்றின் விளைவாக தானும் கிறிஸ்தவனாக விரும்புவதாக அறிவித்தான். கிளிடிஸ்சின் சரீரநிலை காரணமாக இங்கிலாந்துக்கு திரும்பும்படி நிர்ப்பந்திக்கப்பட்டாள். அங்குபோய் சீன மக்களின் நிலைபற்றி எடுத்துரைத்தவள். 1957 இல் தாய்வானுக்குப் போய் அங்கே மரித்தாள். கிளடிஸ்க்குக் கிடைத்த தேவ கிருபை நமக்கும் அளிக்கப்பட்டுள்ளது.. நமது காரியம் என்ன?

நன்றி : அனுதினமும் தேவனுடன் (சத்தியவசன தியான சஞ்சிகை)


Monday 27 May 2013

என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். (மத்தேயு 15:13)



இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் கடுமையான வார்த்தைகளாகத் தென்படுவதும், கிறிஸ்தவர்களால் வித்தியாசமான முறைகளில் விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பதுமான வாக்கியங்களில் ஒன்று மத்தேயு 15:13 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில்  “என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார். மத்தேயுவினுடைய சுவிஷேசத்தில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வாக்கியத்தில், பரமபிதா நடாத நாற்றாக இயேசு யாரைக் கருதியுள்ளார் என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 

சில தேவ ஆராய்ச்சியாளர்கள், இயேசுகிறிஸ்து தானியத்தையும் களைகளையும் பற்றி கூறிய உவமையை ஆதாரமாகக் கொண்டு, இரட்சிக்கப்படாதவர்கள் அதாவது அவிசுவாசிகளே பிதாவால் நடப்படாத நாற்றுகள் என விளக்குகின்றனர். இயேவின் உவமையில் (மத். 13:24-30) தானியம் ராட்சியத்தின் புத்திராகளையும், களைகள் சத்துருவினால் விதைக்கப்பட்ட பொல்லாங்கனுடைய புத்திரர்களையும் குறிக்கின்றது. (மத். 13:25,38) இதன்படி பிதாவினால் நடப்பட்டவர்கள்அவருடைய வசனத்தின்படி வாழும் மெய் விசுவாசிகள்“ என்றும், “அவரால் நடப்படாதவர்கள், மனிதர்களுடைய உபதேசங்களைப் பின்பற்றும் விசுவாசமற்றவர்கள்“ என்றும் கருதப்படுகின்றது. மனிதனுடைய இரட்சிப்பில் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலுக்கு(2) முக்கியத்துவம் கொடுக்கும் இறையியலாளர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களே அவரால் நடப்பட்டவர்கள் என்றும், தெரிந்து கொள்ளப்படாதவர்களையே இயேசு பிதாவினால் நாட்டப்படாதவர்கள் என்க குறிப்பிட்டுள்ளார் என்றும் விளக்குகின்றனர்.(3) இவர்களைப் பொறுத்த வரையில் “பிதாவினால் நடப்படாதவர்கள் சாத்தானால் நடப்படப்பட்டவர்கள், அவர்கள் வேரோடு பிடுங்கப்பட்டு அக்கினியில் வீசப்படுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.“(4) 


இயேசு கிறிஸ்துவின் தானியத்தையும் களையையும் பற்றிய உவமை தேவராட்சியத்தின் புத்திரர்களையும் இவ்விராட்சியத்திற்குட்படாத அவிசுவாசிகளையும் பற்றிய விபரணமாயுள்ள போதிலும் (மத். 13:37-43) அவர் மத். 15:13 இல் இந்த உவமையை அடிப்படையாகக் கொண்டே பிதாவினால் நடப்படாதவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுவதற்கில்லை. ஏனென்றால் இயேசு இங்கு சீடர்கள் தன்னிடம் தெரிவித்த ஒரு விடயத்திற்கான பதிலாகவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.(5) மத்தேயு 15ம் அதிகாரத்தில் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதற்காகப் பரிசேயர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். ஆனால் இயேசுவோ, தன் சீடர்களின் செயலை நியாயப்படுத்தியோது, பரிசேயர்கள் மானிட பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய கட்டளைகளை அவமதிக்கின்றார்கள் என்று அவர்களைக் கடிந்து கொண்டார். (மத். 15:1-9) இயேசுவின் வார்த்தைகள் பரிசேயருக்கு இடறலாயிருப்பதைப் பற்றி சீடர்கள் தெரிவித்தபோதே அவர் “என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். (7) தேவனுடைய ராட்சிய
தைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கும் நியாயப்பிரமாணத்தின் போதகர்களாகத் தாம் இருப்பதாக்க் கூறி வந்த பரிசேயர்கள் “தேவனுடைய ராட்சியத்திற்குள் இல்லை“(8) எனும் உண்மையை இயேசு இக்கூற்றின் மூலம் அறியத் தருகின்றார். பரிசேயர்களின் இத்தகைய நிலை ஏற்கனவே மத்தேயுவின் சுவிஷேசத்தில் 3:9, 8:11-12 போன்ற வசனங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு பரிசேயர்களை அல்ல மாறாக அவர்களது உபதேசத்தையே பிதாவினால் நடப்படாத நாற்றாக வர்ணித்துள்ளார் எனக் கருதுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை “பிழையான உபதேசங்கள் தேவனிடத்திருந்து வருபவை அல்ல. அவற்றை நாம் பிடுங்கி எறிய வேண்டும் என்று இயேசு இவ்வசனத்தில் அறிவுறுத்துகின்றார்(9) எனினும் இயேசு உபதேசத்தை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. பிழையான உபதேசங்களைக் கொண்டு வருபவர்களையும் சேர்த்துத்தான் இவ்வாறு கூறியுள்ளார். பரிசேயர்களின் உபதேசம் பிழையாதாகாகவே இருந்தது. இதனால் அவர்கள் தேவனால் நடப்படாதவர்கள் எனும் உண்மையை இயேசு வெளிப்படுத்தியுள்ளார். இயேசுவைப் போல் பரிசேயர்கள் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். இயேசுவைப் போல் அவர்களால் தேவனைப் பிதா(10) என்று அழைக்க முடியாது(11) அவர்கள் இயேசுவை விசுவசிப்பதன் மூலமே தேவனுடைய பிள்ளைகளாக முடியும். (யோவான் 1:12) எனினும் இயேசுவின் வார்த்தைகளால் பரிசேயர்கள் இடறலடைந்தார்கள் என சீடர்கள் தெரிவித்தமை (மத். 15:12) அவர்கள் இயேசுவை நிராகரித்த்தையே சுட்டிக் காட்டுகின்றது. ஏனென்றால் இயேசுவிடம் இடறலடைதல் எனும் சொற்பிரயோகம் இத்தகைய அர்த்ததுடனேயே புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது. (12) பரிசேயர்கள் தேவனுடைய ராட்சியத்திற்குள் மக்களைக் கொண்டு செல்லும் இயேசுவை நிராகரித்தமையால், பிதாவினால் நடப்படாதவர்களாக இருந்தனர். அவர்கள் வேறோடே பிடுங்கப்படுவார்கள் என இயேசு குறிப்பிட்டது “அவர்களுக்கு ஏற்படும் அழிவைப் பற்றிய விவரணமாயுள்ளது”(13) எனவே பரிசேயர்களைப் போல அழிந்து போகாதபடி நாம் இன்றே இயேசுவை விசுவசித்து தேவனுடைய பிள்ளைகளாக மாறுவோம். 

குறிப்புகள்
(1) R.C.H. Lenski, The Interpretation of St. Mathew’s Gospel, Minneapolis: Augsburg Publishing House, 1961, p. 590

(2) இரட்சிப்புக்காக தேவன் மக்களைத் தெரிந்து கொண்டுள்ளார் என்பது வேதத்தின் தெளிவான ஒரு போதனையாகும். எனினும்இத் தெய்வீகத் தெரிந்து கொள்ளுதல் எதை அடிப்படையாக்க் கொண்டது என்பது பற்றி கிறிஸ்தவர்களிடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இறையியலாளர் ஜோன் கல்வினுடைய உபதேசத்தைப் பின்பற்றும் கிறிஸ்வர்கள்  தேவன் தனது சித்த்த்தின்படி உலகத் தோற்றத்திற்கும் முன்பே இரட்சிப்புக்காக குறிப்பிட்ட மக்களைத் தெரிந்தெடுத்துள்ளார் என நம்புகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, தேவனால் தெரிந்து கொள்ளப்பமாதவர்கள் அனைவரும் அவரால் கைவிடப்பட்டவர்கள் ஆவர். (Louis Berkhof systematic Theology, Edinburgh: The Banner of Truth Trust1, 109-125) இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆர்மீனியஸ் எனும் இறையிலாளரது கருத்தின்படி உலக மக்கள்ட அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருப்பதனால், தேவன் இவ்வாறு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிந்தெடுத்து மற்றவர்களை கைவிட்டிருக்க மாட்டார் எனத் தர்கிக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சகலமுமறிந்த தேவன் எவர்களை விசுவாசிப்பார்கள் என்பதை முன்னறிந்து (ரோமர் 8:29) அவர்களை இரட்சிப்புக்காக தெரிந்து கொண்டுள்ளார். (Henry C. Thiessen Introductory Lectures in systematic Theology, Grand Rapids: Eerdmans Publishing company, 1949, p. 157)

(3) John Calvin, A Harmony of the Gospels: Mathew, Mark & Luke Vol. II pp. 163-164

(4) William Hendriksen, New Testament commentary: The Gospel of Matthew, Edinburgh: The Banner of Trust, 1982, p. 617\

(5) வேத வசனங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ள முற்படும்போது குறிப்பிட்ட அவ்வாக்கியம் இடம் பெறும் சந்தர்ப்பத்தைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது மட்டுமே குறிப்பிட்ட அவ்வசனத்தின் அர்த்த்தை சரியான வித்த்தில் அறிந்து கொள்ள முடியும். 

(6) Donald A. Hagner, Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p. 436

(7) மத்தேயு 15:13 அதற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்கள் இரண்டும், பிதாவினால் நடப்படாத நாற்று என்ற இயேசு பரிசேயர்களைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

(8) Leon Morris p. 398

(9) J.C. Ryle, Expository Thoughts on Mathew, Edinburg: The Banner of Truth Trust, 1986, p. 176

(10) சுவிசேஷப் புத்தகங்களில் மொத்தம் 44 தடவை தேவன் பிதா என அழைக்கப்பட்டுள்ளார். இயேசு தேவனைத் தன்னுடைய பிதா என அறிமுகப்படுத்தியது அவருக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள அந்நியோன்னிய உறவை வெளிப்படுத்துகின்றது. 

(11) H.N. Ridderbos, Mathew in Bible Students Commentary, Grand Rapids: Zondervan Publishing House, 1987, p. 284

(12) Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 151

(13) L. Morris Ibid 396




Thursday 23 May 2013

வல்லமையுள்ளோருக்கு சாட்சி



மெதடிஸ்த எழுதப்புதலின் தலைசிறந்த தலைவரான ஜோன் வெஸ்லி அவர்கள் (1703-1791) ஓக்ஸ் சர்வகலாசாலை மாணவராக இருந்தபோது அங்கிருந்த ஒரு வேலையாள் ஒருவரோடு உரையாடினார். அதன் மூலம் தான் உள்வாங்காத ஒன்று சமயத்தில் உண்டு என்று கண்டு கொண்டார். அந்த நபருக்கு சொந்தமாக ஒரே ஒரு மேல் ஆடை மாத்திரமே இருந்தது. அன்றைய தினம் உண்பதுக்குக் கூட உணவில்லை. சாப்பிட ஏதுமில்லா நிலையிலும் வெறும் நீரை மட்டுமே பருகிவிட்டு, முழுமனதோடு ஆண்டவருக்கு நன்றி சொல்லும் மனதோடு இருந்தான். அவனைப் பார்த்து வெஸ்லி கூறினார், 'உனக்கு உடுத்த ஏதுமில்லாத நிலையிலும் உண்ண எதுவுமற்ற நிலையிலும் நீ ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறாய்.! நீ எதன் நிமித்தம் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறாய்? அந்த வேலைக்காரன் பதிலளித்தான், அவர் எனக்கு ஜீவன் அளித்தார். ஜீவனோடு வைத்திருக்கிறார். அவர் மீது அன்பு செலுத்தும் இதயத்தை தந்திருக்கிறார். அவருக்கு ஊழியம் செய்யும் தீர்மானத்தை எனக்குத் தந்துள்ளார்இந்த வார்த்தைகள் வெஸ்லியை சிரமப்படுத்திற்று. இத்தனைக்கும் அவர் இறையியல் கற்கும் மாணவனாக இருந்தும் அப்படி ஒரு சாட்சியை சொல்லக் கூடிய தேவ அனுபவம் அற்றவராக இருந்தார். ஆயினும் ஆண்டவரை அநேக வருடங்களின் பின் அனுவமாகக் கண்டு ஏற்றுக்கொண்ட பின் பிரித்தானியாவை சுவிசேஷத்தால் பற்றிய எரியச் செய்தார்.

எப்படி இத்தகைய பிரபல மனிதர் வாழ்வில், மிகவும் சாமான்யமானவர்கள் செல்வாக்குச் செலுத்திட முடியும் என சிலர் அதிசயப்படலாம். ஆயினும் வரலாறு, மிகப் பிரபல்யமான கிறிஸ்தவர்களைக் கிறிஸ்துவண்டைக்கு வழி நடத்த முன்பின் தெரியாத கிறிஸ்தவர்களைப் பல தடவைகள் ஆண்டவர் பயன்படுத்தியுள்ளமையைக் காட்டுகின்றது

Monday 20 May 2013

அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் (மாற்கு 2:26)


இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் புரிந்து கொள்வதற்குச் சிரமானதாக இருக்கும் இன்னுமொரு வாக்கியம் அவர் தாவீதின் காலத்தில் எருசலேமில் இருந்த பிரதான ஆசாரியனைப் பற்றி குறிப்பிட்ட விடயமாகும். மாற்கு 2:26 இல் தாவீதைப் பற்றி இயேசு கிறிஸ்து குறிப்பிடும்போது “அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். இயேசு கிறிஸ்து இவ்வசனத்தில் குறிப்பிடும் சம்பவம் பழைய ஏற்பாட்டில் 1 சாமுவேல் 21:1-6 இல் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அச்சம்பவத்தில் தாவீதின் காலத்தில் “அகிமெலேக்கு“ என்பவனே பிரதான ஆசாரியனாக இருந்த்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இயேசுவோ “அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில்“ என்று கூறியுள்ளார். இதனால், இயேசு  பழைய ஏற்பாட்டை சரியாக அறியாதவராக, அறிவீனமான முறையில் தவறான தகவல்களைத் தந்துள்ளார் என அநேகர் தர்கித்து வருகின்றனர். 

இயேசு கிறிஸ்து தாவீதைப் பற்றி குறிப்பிடும் இச்சம்பவம் மத்தேயுவிலும் லூக்காவிலும் இடம்பெற்றுள்ளபோதிலும் இயேசுவின் கூற்றிலுள்ள பிரதான ஆசாரியனைப் பற்றிய விடயம் இச்சுவிஷேசங்களில் இடம்பெறவில்லை. (மத். 12:1-8, லூக். 6:1-5) இதனால் மாற்கு தவறுதலாக இயேசுவின் கூற்றை எழுதியுள்ளார் என சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.(1) ஆனால், வேதாகம ஆசிரியர்கள் தேவனுடைய ஆவியின் வழிநடத்துதலினால் தம் புத்தகங்களை எழுதியுள்ளமையால்(2) இயேசு கிறிஸ்து கூற்றை மாற்குவின் தவறுதலால் உருவானதாக்க் கருதமுடியாது. அதேசமயம் இன்று இருக்கும் மாற்கு சுவிசேஷத்தின் பெரும்பாலான கையொழுத்துப் பிரதிகளிலும் பிரதான ஆசாரியனுடைய பெயர் குறிப்பிடப்படாதமையி னால்(3) மாற்குவின் சுவிசேஷத்தில் உள்ள ஆசாரியனின் பெயர் பிற்காலத்தில் வேதத்தைப் பிரதி பண்ணியவர்களினால்(4) ஏற்படுத்தப்பட்ட ஒரு தவறுதல் என்பது சிலரது தரக்கமாயுள்ளது(5)

இயேசு கிறிஸ்து கூற்றுக்கும் அவர் குறிப்பிடும் சம்பவம் இடம்பெறும் 1 சாமுவேல் புத்தகத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வேத ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான முறைகளில் விளக்கியுள்ளனர். தாவீது அகிமெலேக்கிடம் வந்தபோது பிற்காலத்தில் ஆசாரியனாக நியமிக்கப்பட்ட அவனது மகன் அபியத்தாரும் அங்கிருந்தான் என்றும், இவர்கள் இருவரும் சேர்ந்தே தேவசமுகத்து அப்பங்களைத் தாவீதுக்குக் கொடுத்தனர் என்றும் சிலர் கருதுகின்றனர். (6). இதன்படி 1 சாமுவேல் புத்தகத்தை எழுதியவர், அச்சமயம் ஆசாரியனாயிருந்த அகிமெலேக்கின் பெயரைக் குறிப்பிட இயேசு அச்சமயம் அங்கிருந்து, அபியத்தாரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இச்சம்பவம் நடைபெற்றபோது அபியத்தார் அகிமெலேக்குடன் இருந்தது பற்றியோ இல்லையென்றால் இருவரும் சேர்ந்து அப்பங்களை தாவீதுக்கு கொடுத்து பற்றியோ சாமுவேல் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. (1 சாமு 21:1-10) மேலும் “எழுதப்பட்டதை நீங்கள் வாசிக்கவில்லை?“ என இயேசு கேட்பதிலிருந்து, அவர் சாமுவேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விடயத்தையே குறிப்பிட்டுள்ளது தெளிவாகின்றது. எனவே, இயேசு சாமுவேலில் எழுதப்படாத விடயத்தை மாற்குவில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறமுடியாது. 

பழைய ஏற்பாட்டில் அகிமெலேக்கும் அபியத்தாருக்கும் இடையேயுள்ள உறவு முறை வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தகப்பனுக்கும் மகனுக்கும் இவ்விரு பெயர்களும் இருந்தன என்றும்(7) இதனால், ஒருவரே இருபெயர்களால் சாமுவேலிலும் மாற்குவிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்றும் சில வேத ஆராய்ச்சியாளர்கள் தர்க்கிக்கின்றனர்.(8) 2 சாமுவேல் 8:7, 1 நாளாகமம் 18:16, 24:3,6,31 இல் அகிமெலேக் அபியத்தாரின் மகன் எனக் குறிப்பிடப்பட்டிருக்கையில்,  1 சாமுவேல் 22:20, 23:6, 30:7 போன்ற வசனங்கள் அகிமெலேக்கின மகனே அபியத்தார் எனக் கூறுகின்றன. ஆனால் தகப்பனும் தகனும் ஒரே பெயருடையவர்களாய் இருந்தார்கள் எனும் கருத்து சாமுவேலுக்கும் மாற்குவுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை விளக்குவதாய் இல்லை. மேலும், அக்காலத்தில் தகப்பன் தன் பெயரை மகனுக்கு கொடுக்கும் பழக்கம் அல்ல மாறாக “ஒருவன் தன் மகனுக்குத் தன்னுடைய தகப்பனின் பெயரைக் கொடுக்கும் முறையே இருந்துள்ளது(9) எனினும் இது அபயித்தாருக்கும் அகிமெலேக்குக்குக்கும் இடையிலான உறவு பற்றி பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்தை விளக்குவதாய் உள்ளதே தவிர, மாற்குவிலுள்ள இயேசுவின் சிக்கலைத் தீர்ப்பதாய் இல்லை.

மாற்கு 2:26 குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் கூற்று மாற்கு 12:26 ஐப் போன்ற ஒரு வாக்கியமாகும் என சில தேவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களுடைய கருத்தின்படி மாற்கு 12:26ல் “முற்செடியைக் குறித்துச் சொல்லிய இடத்தில் மோசேயின் ஆகமத்தில் அவனுக்கு சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?” என இயேசு கேட்பதைப் போலவே மாற்கு 2:26ல் உள்ள இயேசுவின் கூற்றும் அபியத்தார் எனும் பிரதான ஆசாரியனைப் பற்றிய இடத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும்(10) அக்கால வேதாமகங்களில் அதிகார வசனப் பிரிவுகள் இராதமையால் “ஒரு வேதப் பகுதியைக் குறிப்பிட அப்பகுதி யாரைப் பற்றி சொல்கின்றதோ, அவருடைய பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதே வழக்கமாயிருந்தது,(11) இதனால் இயேசு அபியத்தாரைப் பற்றிய இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தையே மாற்கு 2:26ல் சுட்டிக் காட்டியுள்ளார். என்பது இவர்களது தரக்கமாயுள்ளது.(12) ஆனால் அபியத்தாரின் பெயர் இயேசு குறிப்பிடும் 1 சாமுவேல் 21ம் அதிகாரத்தில் இடம்பெறவில்லை. அக்கால இலக்கியங்களில், ஒருவரைப் பற்றிய பகுதியில் அவரது பெயர் அப்பகுதியின் ஆரம்பத்திலேயே இடம் பெறும். எனவே அபியத்தாரின் பெயர் 1 சாமுவேல் 22:20 லேயே முதல் தடவையாக இடம் பெறுவதனால் 21ம் அதிகாரத்தை அபியத்தாரைப் பற்றிய பகுதியாகக் கருத முடியாது. மேலும் மாற்கு 2:26ஐப் போல மொழியாக்கவும் முடியாது என்பதை மூலமொழியில் இவ்வசனத்தின் வாக்கிய அமைப்பு அறியத் தருகின்றது.(13) இயேசுவின் கூற்றில், “எப்பி அபியத்தார் அரக்க்கிரெயொஸ்“ (Epi Abiathar archiereros) எனும் கிரேக்கச் சொற்பிரயோகம் “பிரதான ஆசாரியனாகிய அபியத்தாரின் காலத்தில்” எனும் அர்த்தமுடையது. இதை, மாற்கு 12:26 ஐப் போல, “பிரதான ஆசாரியனாகிய அபியத்தாரைப் பற்றி சொல்லிய இடத்தில்“ என மொழிபெயர்க்க முடியாது(14) ஏனென்றால், கிரேக்க மொழி இலக்கணத்தின்படி “எப்பி” (Epi) எனும் பதம் இயேசுவின் கூற்றில் உள்ளதைப் போல “ஜெனிட்டிவ்” எனும் வேற்றுமையுறுப்புடன் சேர்ந்து வரும்போது “காலத்தில்“ என்றே அர்த்தம் தரும். (15) எனவேஇதை “இடத்தில்” என மொழிபெயர்க்க முடியாது.

உண்மையில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கவனமாக அவதானித்துப் பார்த்தால் அவரது கூற்றை சரியான விதத்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். “அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில்“ எனும் இயேசுவின் சொற்பிரயோகம், “அபியத்தார் வாழ்ந்த காலத்தைக் குறிக்கின்றதே தவிர அது அவன் பிரதான ஆசாரியனாய் பணியாற்றிய காலத்தைக் குறிக்கவில்லை”(16) வேதாகமத்தின் சில கையெழுத்துப் பிரதிகளில் இத்தகைய அர்த்ததைத் தரும் விதத்தில் இயேசுவின் கூற்று “பிற்காலத்தில் பிரதான ஆசாரியனாகிய அபியத்தாரின் காலத்தில் என எழுதப்பட்டுள்ளது.”(17) இன்று ஆங்கில உலகில் பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும் புதிய சர்வதேச மொழிபெயர்ப்பும் (NIV) இத்தகைய அர்த்த்த்தையே தருகின்றது. 1 சாமுவேல் 21ம், 22ம் அதிகாரங்களை வாசிக்கும்போது, தாவீது பிரதான ஆசாரியனாகிய அகிமெலேக்கிடமிருந்து தேவசமுகத்து அப்பங்களை வாங்கி புசித்த பின்னர் (1 சாமு 21:1-6), சவுல் அகிமெலேக்கைக் கொன்று விடுகிறான். (1 சாமு 22:17-19) அச்சமயம் அகிமலேக்கின் மகன் அபியத்தார் மட்டுமே சவுலின் சேவகருக்குத் தப்பி தாவீதிடம் ஓடிப்போகிறான். (1 சாமு 22:20) அதன் பின்னர் அபியத்தாரே பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டான். அத்தோடு, அகிமெலேக்கைவிட அபியத்தாரே தாவீதின் காலத்தைய பிரதான ஆசாரியனாகப் புகழடைந்தவன். (1 சாமு 26:6,9, 30:7, 2 சாமு 8:17) இதனால் தாவீதின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட காலம் அபியத்தாரின் காலமாகவே கருதப்பட்டது. எனவே இயேசு, “அகிமெலேக்கிடமே தாவீது தேவசமுகத்தப்பங்களை வாங்கிச் சாப்பிட்டபோதிலும், அச்சமயம் அபியத்தாரும் உயிரோடிருந்தமையால், அதை அபியத்தாரின் காலத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். (18) இதிலிருந்து இயேசு அறியாமையிலோ இல்லையென்றால் அறிவீனமாகவோ எதுவும் கூறவில்லை என்பது தெளிவாகின்றது. 


குறிப்புகள்

1. Keil and Delizsch, Commentary on the Old Testament, p. 218

2. வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டுள்ளது“ “தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள்“ எனும் வசனங்களின் அர்த்தம், வேதாகம ஆசிரியர்கள், தேவனுடைய பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக, ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழிருந்து, ஆவியானவரின் வழிடத்துதல் மூலம் வேத வசனங்களை எழுதினார்கள் என்பதாகும். 

3. Mark in The Expositor’s Bible Commentary, p. 638

4. வேதாகமானது மோசேயின் காலம் முதல் கி.பி. 15ம் நூற்றாண்டில் அச்சியத்திரம் கண்டுபிடிக்கப்படும் வரை கைகளால் பிரதி பண்ணப்படுவதன் மூலமே மேலதிகப் பிரதிகள் தயாரிக்கப்பட்டன. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆசிரியர் எழுதிய “புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு என்னும் நூலைப் பார்க்கவும் 

5. Vincent Taylor, The Gospel According to St. Mark, London, 1953, p. 217

6. William Hendrickson, New Testament Commentary, The Gospel of Mark p. 107

7. Archibald T. Robertson, Word Pictures in the New Testament Vol 1 : Nashville : Boardman Press, 1930, p. 273

8. R.C.H. Lenski, The Interpretation of St. Mark’s Gospel, p. 127

9. Ronald F. Youngblood, 1 & 2 Samuel in The Expositor’s Bible Commentary, p 911

10. J.W. Wenham, Mark 2:26 in Journal of Theological Studies, Vol:1 [1950], p 156

11. James A. Brooks, Mark in The American Commentary, Nashville : Boardman Press, 1991

12. William L. Lane, The Gospel of Mark in The New International Commentary on the New Testament Grand Rapids”: Eerdmans Publishing Company, 1974, p. 116

13. Robert A. Guelich, Mark in Word Biblical Commentary. P. 122

14. ----

15. W.F. Arndt and F.W. Gingrich A. Greek-English Lexicon of the New Testament, Chicago : University of Chicago, 1957, p. 286

16. Norman, Geisler & Thomas Howe, when Critics Ask p. 370

17. Walter W. Wesel Mark in The Expositor’s Bible Commentary, p. 638 

நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - DR. M.S. வசந்தகுமார்.

Friday 17 May 2013

பழையதை எறிதலும் புதியதை ஏற்றுக்கொள்ளுதலும் (மாற்கு 2:18-22)


இயேசுகிறிஸ்து புதிய ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்தார். இது பாவிகளான மாந்தர் தங்களுடைய பாவ வாழ்க்கையை முழுமையாகக் கைவிட்டு, அவர் தரும் பரிசுத்தமான புதிய வாழக்கை முறைக்குள் வருவதாகும். “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின (2கொரி.5:17).   


(1).  யூதமார்க்கத்தவரின் கேள்வி (மாற்.2:18)

யோவானுடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் உபவாசம் பண்ணாதிருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டனர். யோவான் ஸ்நானகன் இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக மக்களை  ஆயத்தப்படுத்துவதற்காகத் தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் (யோவா.1:6-8). ஆனால் சிலர் யோவானே வரவிருக்கும் மேசியா என்னும் எண்ணத்துடன் இருந்தனர். 

பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் இருந்த யூதமார்க்கத்  தலைவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் மக்காபியருடைய புரட்சிக் காலத்தில் அதாவது கி.மு.168ல் உருவானவர்கள். பரிசேயர் என்னும் வார்த்தை “வேறுபிரிக்கப்பட்டவர்கள்” என்னும் அர்த்தமுடையது. இவர்கள் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கைக்கொள்வதற்காக ஏனைய அலுவல்களிலிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டவர்கள். யூதமார்க்கத்தில் வேறு மதம் மற்றும் கலாசாரங்களின் செல்வாக்கு ஏற்படுவதை கடுமையாக எதிர்த்தவர்கள். கி.பி.66-70ல்  யூதேயா அழிவுற்ற பின்னர் யூதமார்க்கத்திற்குப் புத்துயிர் கொடுத்து, அது இன்றுவரை நிலைத்திருப்பதற்குக் காரணமாயிருந்தவர்கள் பரிசேயர்களே.  

பரிசேயர்களுக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் இடையில் மார்க்கம் சம்பந்தமான பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இங்கு உபவாசம் பற்றிய சர்ச்சை உள்ளது. நியாயப்பிரமாணச்  சட்டத்தின்படி வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே உபவாச நாளாக இருந்தது (லேவி.16:29-30). இதைத்தவிர யூதமார்க்கச் சட்டம் மூன்று விதமான உபவாசங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. ஒன்று, தேசியரீதியான அழிவுகளுக்காகப் புலம்பும் காலத்திலும் (சக.7:3-4, 8:19), இரண்டு, யுத்தம் வாதை வறட்சி பஞ்சம் போன்ற நெருக்கடியான காலத்திலும், மூன்று சுயவிருப்பத்தின் அடிப்படையில் விரும்பிய காலங்களிலும் செய்யும் உபவாசம். பரிசேயர்கள் கிழமையில் இரண்டு நாட்கள் அதாவது திங்களும் வியாழனும் உபவாசமிருந்தார்கள்.  

இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் மார்க்க சம்பந்தமான அர்ப்பணிப்புக்கு அடையாளமாக உபவாசம் இருந்தமையால், அவருடைய சீடர்கள் உபவாசம் பண்ணாமல் இருந்தது, அவர்களுடைய மார்க்கப் பற்றின் மீது சந்தேகத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியது.   


(2). இயேசுகிறிஸ்துவின் பதில் (மாற்.2:19-20)     

உபவாசத்தைப் பற்றிய கேள்விக்கு இயேசுகிறிஸ்து, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு உதாரணத்தைக் காண்பிக்கின்றார். யூதத் திருமணங்கள் ஒருவார காலத்திற்கு விருந்துண்ணும் மகிழ்ச்சிகரமான வைபவங்களாக இருந்தன. இவ்வசனத்தில் மணவாளனின் தோழர் திருமணவிருந்துக்கு வந்தவர்களாகவே உள்ளனர். எனவே, இவர்கள் திருமண வீட்டில் ஆடல் பாடலுடன் புசித்து குடித்து சந்தோஷமாக இருப்பார்களே தவிர, அக்காலத்தில் உபவாசம் இருந்தவர்கள்போல அழுது புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள். 

இயேசுகிறிஸ்து தம்முடைய இவ்வுலக ஊழிய காலத்தைத் திருமண விருந்துக்கு ஒப்பிட்டுள்ளார். இது மகிழ்ச்சியோடு செய்யப்படும் பணியாக உள்ளது. இயேசுகிறிஸ்து யார் என்பதைப் பரிசேயர் அறிந்திருந்தார்கள் என்றால், அவரோடு இருக்கும் காலம் உபவாசத்துடன் அழுது புலம்பும் காலம் அல்ல, அது விருந்துண்டு மகிழும் காலம் என்பதை அறிந்துகொண்டிருப்பார்கள்.       உபவாசம் தேவையில்லை என்று இயேசுகிறிஸ்து இங்கு போதிக்கவில்லை. தம்முடைய சீடர்கள் உபவாசிக்கும் காலம் வரும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  



(3). இயேசுகிறிஸ்துவின் விளக்கம் (மாற்.2:21-22)     

இயேசுகிறிஸ்து தாம் சொல்வதை இரு உவமைகளில் விளக்கியுள்ளார். ஒன்று பழைய ஆடையில் இருக்கும் கிழிசலை அல்லது ஓட்டையை மறைப்பதற்குப் புதிய துணி உபயோகப்படாது. இவ்வாறு செய்தால் ஏற்கனவே இருக்கும் கிழிசல் அல்லது ஓட்டை பெரிதாவது மட்டுமல்ல, புதிய துணியையும் துண்டு போட்டு வீணாக்கப்படும். 21ம் வசனத்தில் “கோடித்துண்டு”  என்பது “சுருங்கக்கூடிய புதிய துணித்துண்டு” ஆகும். 

22ம் வசனத்தில் “துருத்தி” என்பது “தோலினால் செய்யப்பட்ட போத்தல்கள்” ஆகும். புதிய தோற்குடுவைகள் இழுபடக்கூடியவைகளாக இருப்பதனால் புதிய திராட்சை ரசத்தில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் அவற்றைப் பாதிக்காது. ஆனால் பழைய குடுவைகளில் தோலானது காய்ந்துபோன நிலையில் இருப்பதனால், திராட்சை ரசத்தில் ஏற்படும் இரசாயன மாற்றம் அவற்றை வெடிக்க வைத்துவிடும். இதனால் தோற்குடுவை வீணாவது மட்டுமல்ல, ரசமும் வீணாகிப்போகும்.  

இவ்விரு உவமைககளின் மூலம் இயேசுகிறிஸ்து, தமது மார்க்கத்தைப் பற்றிய முக்கியமான காரியத்தை அறியத்தருகின்றார். அவர் இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தது புதியதோர் மார்க்கம். நம்முடைய பழைய மார்க்கத்திலிருக்கும் கிழிசல்களையும் ஓட்டைகளையும் மறைப்பதற்கு இயேசுகிறிஸ்துவின் புதிய மார்க்கத்திலிருந்து சில துண்டுகளை வெட்டியெடுத்து நம்முடைய பழைய மார்க்கத்திற்கு ஒட்டுப் போடமுடியாது. கிழிந்துபோன நம்முடைய பழைய ஆடையை  முழுமையாக வீசிவிட்டு, அவர் தரும் புதிய ஆடையை நாம்  அணிந்துகொள்ளவேண்டும். பழையதையும் வைத்துக்கொண்டு புதியதில் நமக்கு விருப்பமானவைகளை மட்டும் வெட்டியெடுத்துக் கொண்டு இரண்டுடனும் வாழமுடியாது.  

இரண்டாவது உவமையில், இயேசுகிறிஸ்துவின் மார்க்கம் என்னும் புதிய ரசத்தை, நம்முடைய பழைய மார்க்கங்களுக்குள் வைத்திருக்க முடியாது. அதற்கு அவர் தரும் புதிய பாத்திரம் தேவை. நம்முடைய பழைய மார்க்கங்களுக்குள் இயேசுகிறிஸ்துவின் புதிய ரசத்துளிகளை வைத்திருக்க முற்படுவது அறிவீனமானது.   

நாம் பழையதையும் புதியதையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது. இரண்டுமே பிரயோஜனமற்றதாகிவிடும். பழையதை எறிந்துவிட்டு புதியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இருப்பதை மேம்படுத்தும் புதிய ஒட்டாக இயேசுகிறிஸ்து வரவில்லை. அவர் நமது பழைய வாழ்க்கை முறையை ஒட்டுப்போடுகிறவர் அல்லை. மேலும், ஏற்கனவே இருக்கும் அமைப்புகளுக்குள் அவரைக் கொண்டு வரமுடியாது. நாம் பழையதை எறிந்துவிட்டு அவர் தரும் புதியதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  

இயேசுகிறிஸ்து பழையதை சீர்திருத்துவதற்காக அல்ல, புதியதை சிருஷ்டிப்பதற்காக வந்தவர். 

அப்போஸ்தலர் 19:18-20, 1தெசலோனிக்கேயர் 1:9, எபேசியர் 4:22-24. 

கட்டுரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்
நன்றி : தமிழ் வேதாகம ஆராய்சி மையம்

Monday 13 May 2013

எவராவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் (மத். 12:32)



இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அநேகரால் கிரகித்துக் கொள்ள முடியாமலிருக்கும் வாக்கியம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவதைப் பற்றி அவர் குறிப்பிட்ட விடயமாகும். 'எந்தப் பாவமும் எந்தத் தேவ தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும் ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை“ என்று தெரிவித்த இயேசு “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை“ (மத். 12:31-32) என்று விளக்கினார். (1) இயேசுவின் இக்கூற்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளையும் வியாக்கியானங்களையும் உருவாக்கியுள்ளது. 

பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவது பாரதூரமான ஒரு குற்றம் என்பதைச் சகல கிறிஸ்தவர்களும் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இத்தகைய பாவத்தைச் செய்தவன் மனந்திருப்பினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்காதா? அல்லது இப்பாவத்தை மன்னிக்கக்கூடிய சக்தி இயேசுவின் சிலுவைப் பலிக்கு இல்லையே? என்பது ஒரு சாராரது கேள்வியாயிருக்கையில், மறுசாரார் மனுஷகுமாரனுக்கு விரோதமான பாவம் மன்னிக்கப்படும் எனக் கூறிய இயேசு, ஆவியானவருக்கு விரோதமான பாவம் மன்னிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தமையால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விட மேலானவரா? திரித்துவ நபர்கள் சம்மானவர்கள் என்றல்லவா? திரித்துவ நபர்கள் சமமானவர்கள் என்றல்லவா வேதம் போதிக்கின்றது. இயேசு இதை மறுதலிக்கின்றாரே எனக் குழப்பமடைந்துள்ளனர். 

உண்மையில் இயேசுவின் இக்கூற்றை சரியான வித்ததில் நாம் விளங்கிக் கொள்வதற்கு, இவ்வாக்கியம் எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அவரால் சொல்லப்பட்டது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்(2) இதற்கு இக்கூற்று இடம்பெறும் வேதப்பகுதியை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உண்மையில் இயேசு பிசாசுக்களைத் துரத்தியபோது மக்கள் மத்தியில் அவரைப் பற்றி ஏற்பட்ட உயர்வான அபிப்பிராயங்கள் பரிசேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இயேசு பிசாசுக்களின் தலைவனின் உதவியுடன் பிசாசுக்களைத் துரத்துகின்றார் எனக் கூறத் தொடங்கினார்கள் (மத். 12:22-24) ஆனால் இயேசுவோ தான் தேவனுடைய ஆவியினாலேயே பிசாசுக்களைத் துரத்துவதை அவர்களுக்கு அறிவித்தார்.(மத். 12:28)(3) உண்மையில் இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் செய்த செயலைப் பரிசேயர்கள் பிசாசினால் செய்யப்பட்டதாக தூற்றினர். இதனாலேயே இயேசு, ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார்(மத். 12:31-32) இதிலிருந்து ஆவியானவருடைய செயலைப் பிசாசின் செயல் எனக் கூறுவதே ஆவியானவருக்கு எதிரான பாவம் என தெளிவாகின்றது. 31ம் வசனத்தில் தேவதூஷணம் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 'ப்ளஸ்ஃ பீமியோ“ எனும் கிரேக்கப் பதம் “எதிராகப் பேசுதல்” என்னும் அர்த்தமுடையது. “ஒருவருக்கு கேடும் தீங்கும் அபகீர்த்தியும் அவமானமும் ஏற்படும் விதமாகப் பேசுதல், தூற்றுதல், இகழிதல் எனும் அர்த்தங்களை இப்பதம் கொண்டுள்ளது.“(4) இதனால்தான் ஆவியானவருக்கு விரோதமாக தூஷணம் என்பதை அடுத்த வசனத்தில் இயேசு பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசுதல்” எனக் குறிப்பிட்டுள்ளார். (மத். 12:32) எனவே, ஆவியானவரின் செயலை நிந்தித்து அதைப் பிசாசின் செயல் என அவருக்கு விரோதமாகப் பேசுதலே இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவமாக இயேசுவால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், இயேசுவின் இக்கூற்றானது, “பரிசேயர்களது குற்றச்சாட்டுக்கான பதிலாகவே சொல்லப்பட்டுள்ளது. (5)“ 

ஆவியானவரின் செயலை பிசாசின் செயல் எனக் கூறுவதே ஆவியினாவருக்கு விரோதமாக பேசுதல் என்பது உண்மையாயினும் இத்தகைய செயலை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவம் என இயேசு கூறியது நமக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம்.இயேசுவின் இக்கூற்றை பரிசேயர்களின் குற்றச்சாட்டை, அடிப்படையாகக் கொண்டே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசும் ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புகாக மன்றாடுகையில் அவனது பாவங்கள் நிச்சியமாக மன்னிக்கப்படும். ஆனால் இங்கு ஆவியானவருக்கு விரோதமாகப் பேசப்படும குறிப்பிட்ட ஒருவிதமான பேச்சைப் பற்றியே இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.(6) இதை அறியாத நிலையில் இயேசுவின் கூற்றை நிலையில் இயேசுவின் கூற்றை சரியான வித்த்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. 

உண்மையில் பிசாசுக்களை துரத்தும் இயேசுவின் செயலானது தேவனுடைய இராட்சியம் வந்துவிட்டது என்பதற்கான வெளிப்படையான அடையாளமாய் இருந்தது. (மத். 12:28)(7) பரிசேயர்கள் இயேசுவின் செய்தியை அதாவது தேவனுடைய இராட்சியம் வந்து விட்டது எனும் தேவ செய்தியை ஏற்றுக் கொள்ளாத்தோடு, அச்செய்தியை உறுதிப்படுத்தும்அவரது செயல்களை பிசாசின் செயல்களாகக் கருதி  அவரை நிராகரித்தனர். இதனால் அவர்களது விமர்சனமானது அதாவது அவர் பரிசுத்த ஆவியினால் செய்த செயலை பிசாசின் செயல் எனக் கூறியது, அவர்கள் தேவராட்சியத்தையே நிராகரிக்கும் செயலாக உள்ளது. அத்தோடு அவர்களது விமரச்சனமானது “அறியாமையினாலோ இல்லையென்றால் அவிசுவாசத்தினாலோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல(8) பரிசேயர்கள் இயேசுவை நிராகரிக்க வேண்டும் எனும் உறுதியான தீர்மானத்தோடேயே எதிர்த்து வந்தனர். இயேசுவினால் செய்யப்பட்ட செயல்கள் தேவராட்சியம் வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திய போதிலும் அவரை மேசியாகவாக ஏற்றுக் கொள்ள மனமற்றவர்களாகவே பரிசேயர்கள் இருந்தனர். பரிசேயர்களின் இத்தகைய மனப்பாங்கை யோவான் 9ம் அதிகாரம் தெளிவாய்க் காண்பிக்கின்றது. பிறவிக்குருடனை இயேசு குணப்படுத்திய செயல் அவர் தேவன் என்பதற்கு உறுதியான அடையாளமாயிருந்த்து.( 9:32-33). ஆனால் பரிசேயர்கள் இயேசு யார் என்பது பற்றி ஏற்கனவே தங்களுக்கிருந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள மனமற்றவர்களாக, அவர் எத்தகைய செயலைச் செய்தாலும் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனும் பிடிவாத்த்துடன் இருந்தனர். (9:13-41) இத்தகைய மனப்பாங்குடனேயே பரிசேயர்கள் இயேசு கிறிஸ்து ஆவியானல் செய்த செயலைப் பிசாசின் செயல் எனக் கூறினர். இயேசுவின் செயலை நிராகரித்து அதைப் பிசாசின் செயல் எனப் பரிசேயர்கள் கூறியது, தேவனுடைய ராட்சியத்தையே நிராகரிக்கும் செயலாய் இருந்தமையால்(9) அவர்களது பாவம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத நிலையில் இருந்தது

இவ்வசனத்தில் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இன்னுமொரு விடயம். இயேசு தனக்கு விரோதமாகப் பேசப்படுகனிறவைகள் மன்னிக்கப்படும் எனக் கூறியமையாகும். (10) இரட்சகரான இயேசுவுக்கு விரோதமாகப் பேசப்படுபவை மன்னிக்கப்படுகையில், ஆவியானவருக்கு விரோதமான விமர்சனம் மட்டும் எவ்விதத்தில் மன்னிக்கப்படமுடியாத பாவமாக இருக்கின்றது என்பது நம்முள் இயற்கையாகவே எழும் கேள்வியாக உள்ளது. உண்மையில் இயேசு இவ்வுலகில் இருந்த காலத்தில் அவரைப் பற்றிய முழுமையான அறிவு மக்களுக்கு இருக்கவில்லை. அவரைப் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்தன. “இயேசு உண்மையிலே யார் என்பது அக்காலத்தில் ஒரு மறைபொருளாகவே இருந்தது. (11) ஆனால் பரிசேயர்களினால் விமர்சிக்கப்பட்ட இயேசுவின் செயல், அதாவது அவர் தேவ ஆவியினால் பிசாசுக்களைத் துரத்தியமை தேவனுடைய ராட்சியம் வந்துவிட்டதற்கான வெளிப்படையான அடையாளமாக, எவராலும் மறுக்க முடியாத செயலாக இருந்தது. மக்கள் “அக்காலத்தில் இயேசுவுக்கெதிராகப் பேசியவைகள் அவர்கள் அறியாமையில் செய்தவைகளாக, அதாவது அவர் உண்மையிலேயே யார் என்பதை அறியாத நிலையில் இருந்தமையால் அவை மன்னிக்கப்படக் கூடிய பாவமாகவே இருந்தன. ஆனால் ஆவியானவரின் செயல் அப்படிப்பட்டதாயிருக்கவில்லை. அவை தேவன் செயல்படுவதற்கான வெளிப்படையானதும் தெளிவானதுமான அடையாளமாய் இருந்தன. இதனால் அவருக்கு விரோதமாகப் பேசப்பட்டவை, அறிந்து செய்யும் பாவமாக, தேவனை நிராகரிக்கப்பவையாக இருந்தன. இதனால் இவை மன்னிக்கப்படமுடியாதவை“ (12) என இயேசு தெரிவித்தார்.



குறிப்புகள்
(1) இயேசுவின் இக்கூற்று வேத்ததில் இடம்பெறாத தோமாவின் நற்செய்தி நூலிலும் உள்ளது. (44ம் கூற்று)

(2) இன்று வேதவசனங்களைத் பலர் தவறாகப் புரிந்து கொண்டு குழப்பங்களைப் போதித்து வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தாம் உபயோகிக்கும் வேதவசங்களின் சந்தர்ப்ப அமைப்பை, அதாவது குறிப்பிட்ட வேதவசனம் எந்த சந்தர்ப்பத்தில் எதற்காகச் சொல்லப்பட்டது என்பதை அறியாமலும், அறிந்து கொள்ள முற்படாமலும் இருப்பதாகும். 

(3) லூக்காவின் சுவிஷேசத்தில் தேவ ஆவியினாலே என்பது தேவனுடைய விரலினாலே என்று உள்ளது. “வல்லமை தேவனிடத்திலிருந்து வந்துள்ளதை இவ்விரு சொற்பிரயோகங்களும் சுட்டிக் காட்டுகின்றன. (Leon Morris, Gospel According to Matthew, p. 316) தேவனுடைய செயலை அவருடைய விரலினால் செய்யப்படுவதாக கூறுவது யூதர்களின் பேச்சு வழக்க முறையாகும். (யாத். 8:19, 31:18) John Calvin, A Harmony of the Gospels, Volume : 2, p. 43)

(4) Colin Brown, Dictionary of New Testament Theology Volume 3. P. 341

(5) Donald A. Hugner, Mathew 1- 13 p. 347

(6) Leon Morris, The Gospel According to Mathew, p. 318

(7) இயேசு கிறிஸ்து இவ்வசனத்தில் நான் வேனுடைய ஆவியினால் பிசாசுக்களைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கின்றதே எனக் குறிப்பிட்டுள்ளார். 

(8) D.A. Carson Mathew, p. 291

(9) இது தேவனருளும் இரட்சிப்பை அனுபவிப்பதையே நிராகரிக்கும் செயலாக உள்ளது. (Word p. 347)

(10) தன்னை மறுதலித்து சபித்த பேதுருவை இயேசு மன்னித்த செயல் இதற்கான ஆதாரமாயும் உள்ளது. 

(11) Word, p. 347

(12) Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 119


நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் :- Dr. M.S. வசந்தகுமார்.