- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 24 July 2013

திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்

திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்
வில்பிரட் கர்ட் ,  பக்கங்கள், 76
தமிழ்நாடு நற்செய்தி பட்டதாரிகள் ஐக்கியம்
குரு மெடிக்கல் ஹால், திருச்சி 600 010

இந்நூலாசிரியரான வில்பிரட் கர்ட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் பாப்திஸ்து திருச்சபை ஊழியத்தில் செலவிட்டார். தெளிவான. அடிப்படை விதிகளைப் பயன்படுத்தி, வேதத்தைத் தமிழ் கிறிஸ்தவர்கள் முறையாக அறிந்துகொள்ள வேண்டும், என்ற இவரது அடங்காத் தாகத்தின் விளைவே இந்நூல் 1977 இல் வெளிவந்த திருமறை விளக்கம் வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசியமான விதிகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்குகின்றது. 
 
 
திருமறையை சரிவரப் படித்து, வாழ்வில் கைக்கொள்ளாது, எவருமே கிறிஸ்துவில் அன்பு செலுத்தவோ, தம்வாழ்வில் நன்மையடையவோ முடியாது. அவ்வாறு திருமறையை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதை விளங்கிக் கொள்ள அவசியமான வேதத்தில் காணப்படும், பல விதிமுறைகளை நாம் கவனத்தோடு அவதானித்து, அவற்றைப் பயன்படுத்தி, வேதப்பகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். வேதத்தைப் படிக்கும்போது மற்ற சாதாரண புத்தகங்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் விதிகளைப் பயன்படுத்தல் அவசியம். இலக்கணம், எழுதப்பட்ட சந்தர்ப்பம், சொற்பிரயோகங்கள், படிக்கும்பகுதி சரித்திர சம்பவமா? உவமானமா? அல்லது போதனையா? என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். பலர், இன்று இவ்விதிமுறைகளைக் கருத்தில் எடுக்காது தாம் நினைத்த விதத்தில் வேதவிளக்கமளிக்க முற்படுகின்றனர். இது திருமறையையும் அதை நமக்குத் தந்த தேவனையும் அவமதிக்கும் செயலாகும். 
 
 
வில்பரட் கர்ட் தமிழ்மக்கள் மத்தியில் பல வருடங்கள் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. வேதத்தை தவறான முறையில் விளக்குவதற்கு உதாரணமாகத், தமிழ்நாட்டில் தான் ஒரு கூட்டத்தில் கேட்டப் பிரசங்கத்தை அவர் ஓரிடத்தில் இவ்வாறு விளக்குகிறார். “ஆன்மீகக் கூடாரம்” என்ற தலைப்பில் அக்கூட்டத்தில் பேசிய அருளுரையாளர் வேதத்தில் எங்கெங்கு “கூடாரம்” என்ற வார்த்தை காணப்படுகின்றதோ அப்பகுதியெல்லாம் பயன்படுத்தி, அவற்றுக்கு ஆன்மீக விளக்கமளித்ததாகக் கூறுகிறார். இது சொல்லாகரதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு.  இவ்வருளுரையாளர் இச்சொற்கள் காணப்படும் சந்தர்ப்பத்திற்கேற்ற விதத்தில் அவற்றைப் பயன்படுத்தத் தவறிவிட்டார். அதுமட்டுல்லாது வெறும் தலைப்பை மட்டும் முதலில் தேடிப் பின்னால் அத்தலைப்புக்கேற்ற பேச்சுப்பொருளைத் தேடமுயன்றதால் அவர் வேதத்தைத் தவறான விதத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. 
திருமறையை விளக்கும்போது நான்கு அடிப்படை விதிகளை நாம் அவதானித்தல் அவசியம் என்கிறார். 
 
  1. வேதப்பகுதிகளை விளக்கும்போது, அப்பகுதிகளை, அவற்றில் காணப்படும் வார்த்தைகளின் சாதாரண அர்த்த்தின்படியும், இலக்ணத்தின்படியும் விளக்க வேண்டும். 
  2. எந்தவொரு வேதப் பகுதியும், அது காணப்படும் உடனடிச் சந்தர்ப்பத்திற்கேற்ப (Immediate Context) விளக்கப்பட வேண்டும்
  3. அத்தோடு அவ்வேதப்பகுதி அமைந்துள்ள முழுப்பகுதியின் (Large Context) அமைப்பிற்கேற்ற முறையிலும் அது விளக்கப்பட வேண்டும்
  4. அவ்வேதப்பகுதி திருமறையின் பொதுவான போதனைகளுக்கேற்பவும் அவற்றிற்கு முரண்படாத வகையிலும் விளக்கப்பட வேண்டும்.
       ஏனெனில் வேதமே வேதத்தை விளக்குகின்றது. வேதம் வேததத்தோடு ஒப்பிட்டுப் விளக்கப்பட வேண்டும். 
 
தீர்க்கதரிசனங்கள், முன்னடையாளங்கள், உவமானங்கள், உவமானங்கள், உருவகங்கள், எபிரேய பாடல்கள், அக்காலத்து கலாச்சாரம், நாகரிகம் போன்றவை எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் இந்நூலில் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். முக்கியமாக தீரக்கதரிசனங்கள் எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்ற பகுதி இன்றைய சூழ்நிலையில் அக்கறையோடு படிக்க வேண்டிய ஒரு பகுதி. தமிழில் இத்தகைய நூல்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்துள்ள ஆசிரியருக்கு தமிழ்கிறிஸ்தவர்கள் நிச்சியம் கடமைப்பட்டுள்ளார்கள். 
1983ல் இந்நூல் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இலகுவான ஆங்கிலத்தில் எல்லோரும் புரிந்துகொள்ளும் படியாக அதனையும் ஆசிரியரே எழுதியுள்ளார். 
 
கேட்பவர்கள் உணர்ச்சிவசப்படும்படி கதை சொல்லுதல், சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வேத விளக்கமளித்தல் என்ற பாணியில், பொதுவாக பிரசங்கங்களும் போதனைகளும் அமைந்திருக்கும் இந்நாட்களில் அருளுரையாளர்களும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களும், கிறிஸ்தவர்கள் அனைவருமே தவறாது வாங்கி பயனடைய வேண்டிய புத்தகமிது. வேத்த்தின் மூலமாக மட்டுமே கர்த்தர் இன்று நம்மோடு பேசுவதால் அவருடைய வார்த்தையைத் தெளிவாக சந்தேகமில்லாமல் புரிந்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?
 
(நன்றி : திருமறைத் தீபம்)

உள்ளடக்கங்கள்
 
 அத்தியாயம் 1 – அமைப்படை உண்மைகள்
 
அத்தியாயம் 2 – இலக்கணம் இன்றியமையாததே
 
அத்தியாயம் 3 – முன்பின் கவனிக்க
 
அத்தியாயம் 4 – சூழ்நிலையும் நோக்கமும்
 
அத்தியாயம் 5 – முழுக்கருத்தையும் மறவாதீர்
 
அத்தியாயம் 6 – உருவகமொழி
 
அத்தியாயம் 7 – உவமைகள்
 
அத்தியாயம் 8 – முன்னடையாளங்கள்
 
அத்தியாயம் 9 – தீர்க்கதரிசனம் -I
 
அத்தியாயம் 10 – தீர்க்கதரிசனம் –II

அடுத்த வாரம் முதல் தொடர்ந்து வாரம் ஒருமுறை பதிக்க திட்டமிட்டுள்ளேன். இக்காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். 

Thursday 18 July 2013

என் மேல் விழுந்த கடமை


சீஷத்துவத்தில் மற்றவர்களை வழிநடத்துவதில் பெயரெடுத்த “நேவிகேட்ஸ்” என்னும் ஊழிய ஸ்தாபனத்தை ஆரம்பித்த டோசன் ட்ரோட்மன் என்பவரும், அவரது சிறிய குழுவும் வேதவசனத்தை மனனம் செய்யவும் ஜெபிக்கவும் சாட்சி சொல்லவும் உறுதியான அர்ப்பணத்துடன் இருந்தனர். அவர்களின் சாட்சியைக் குறித்த அர்ப்பணம் என்னவென்றால், “ஒருநாளைக்கு ஒரு ஆத்துமாவைத் தேவனுக்காகக் தொடு” என்பதே. இது அவர்களது உறுதியான தீர்மானமாக இருந்தது. ஒருநாளைக்கு ஒருவருக்காகவது இயேசுகிறிஸ்துவைப் பற்றி கூற வேண்டும் அவர்கள் அப்படியே செய்தனர். 

ஒருநாள் இரவு டோசன் நித்திரை செய்வதற்காக கட்டிலில் ஏறியபோது அன்றைய தினம் தான் ஒருவருக்காகவாவது இயேசுவைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை உணர்ந்தார். நாளை இவருக்குச் சொன்னால் என்ன என்று முதலில் யோசித்தார். ஆனால்,அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. எழுந்து தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு பல மைல் தூரம் சென்றார். அப்பொழுது அவர் ஒருவரைக் கண்டார். அந்த நபர் தான் செல்லவேண்டிய ரயிலைத் தவற விட்டவர். அவருக்குத் தனது வாகனத்தில் இடம்கொடுத்தார் டோசன். தன்னை அறிமுகப்படுத்திய பின்பு பின்வருமாறு கூறினார். “நான் சொன்னாலும் நீங்கள் நம்பாமல் கூட இருக்கலாம். நான் இங்கு வருவதற்காக படுக்கையிலிருந்து எழுந்து வந்தேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதமான காரியத்தை நான் ஒவ்வொருநாளும் யாரிடமாவது பகிர்ந்து கொள்வேன். நான் ஒருது கிறிஸ்தவன்” என்று சொல்லத் தொடங்கினார். அந்த நபரும் தேவனைத் தேடிக் கொண்டிருந்த ஒருவராக இருந்தார். சுவிஷேசத்தைக் கேட்டு இரட்சிப்படைந்தார். 

ஒருநாளைக்கு ஒருவருக்காவது சுவிஷேசத்தை அறிவிப்பது என்ற டோசனின் தீர்மானம் ஏதோ ஒரு சட்டத்துக்குக் கீழ்படியும் ஒரு காரியம்போல எமக்குத் தோன்றலாம். ஆனால், அன்றிரவு அப்படிப் போகாமல் அடுத்தநாள் போயிருந்தால் தேவனைத் தேடிக்கொண்டிருந்த அந்த மனிதரைத் சந்தித்திருக்க முடியாது. டோசனின் வாழ்வு மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டுவரும் வாழ்வாக இருந்தது. அவருடைய மரணம்கூட, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோதே நேர்ந்தது.  

இந்த டோசன் மரித்தாலும் பல டோசன்கள் எழும்ப வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகின்றார். சுவிஷேசம் அறிவிப்பது நம் கடமை. அந்த அன்பின் செய்திதானே நமக்கு ஜீவனைத் தந்தது. அதை நாம் பிறருக்குக் கொடுக்கலாம் அல்லவா? 

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! (1 கொரிந்தியர் 9:16) 




Monday 15 July 2013

ஸ்திரியே எனக்கும் உனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லை (யோவான் 2:4)



இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே கிரகித்துக் கொள்ள முடியாமலிருக்கும் வார்த்தைகள் அவர் தமது தாயாகிய மரியாளை அழைத்து முறையாகும். அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனது தாயை “அம்மா” என்று அழைத்ததாகச் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்படாதமையால் அவர் தமது தாயை மதிக்காதவராக அவளோடு கடுமையாக நடந்து கொண்டுள்ளதோக பலர் கருதுகின்றனர். யோவான் எழுதிய சுவிஷேசத்தில் “கானா”(1) என்னும் ஊரில் நடைபெற்ற திருமண விருந்தின்போதும் சிலுவையில் மரிக்கும்போதும் இயேசுகிறிஸ்து தமது தாயை “ஸ்திரியே” என்றே அழைத்துள்ளதை யோவான் 2:4 இலும் 19:26 இலும் நாம் அவதானிக்கலாம். மேலும் அவர் இவ்விதமாகவே ஏனைய பெண்களையும் அழைத்துள்ளதையும் சுவிஷேசப் புத்தகங்கள் அறியத் தருகின்றன. (மத். 15:28, லூக். 13:12, யோவான் 4:21, 20:15) இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின்னர் மரியாளைப் பராமரித்து வந்த யோவான் தனது சுவிஷேசப் புத்தகத்தில் அவளது பெயரைக் கூட குறிப்பிடாமல் மரியாதையாக “இயேசுவின் தாய்” என்று எழுதியிருக்கும்போது (யோவான் 2:1) இயேசுகிறிஸ்து தமது தாயை “ஸ்திரியே” என்று அழைத்தது உண்மையிலேயே பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தற்காலத்தில் “ஸ்திரீ” என்னும் வார்த்தை ஒரு பெண்ணை அழைப்பதற்குச் சற்று தரக் குறைவாகத் தென்பட்டாலும் (3) மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “குனெய்” (gunai) என்னும் கிரேக்க பதமானது மரியாதைக் குறைவான வார்த்தை அல்ல(4) மேலும் இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதும் இவ்விதமாகவே தன் தாயை அழைத்துள்ள போதிலும் “அச்சந்தர்ப்பத்தில்  அவளோடு அவர் கடுமையாக பேசவில்லை”(5) “கிரேக்கத்தில் இது மரியாதையுடனும் பாசத்துடனும் ஒரு பெண்ணை அழைக்க உபயோகிக்கப்படும் வார்த்தையாகும்”(6) அக்காலத்தில் பாசமுள்ள கணவன் தன் மனைவியை அழைப்பதற்கு இவ்வார்த்தையை உபயோகிப்பது வழமை(7) கிரேக்க இலக்கியங்களிலும் அதனை நாம் அவதானிக்கலாம்.(8) உண்மையில் இது மரியாதையுடனும் அன்புடனும் ஒரு பெண்ணை அழைக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தையாகும்(9) ஆனால் ஒரு மகன் தனது தாயை அழைப்பதற்கு இது பொருத்தமான வார்த்தை என்று கூற முடியாது. “யூதர்களோ அல்லது கிரேக்கர்களோ தங்களுடைய தாயை அழைக்க இவ்வார்த்தையை ஒருபோதும் உபயோகித்ததில்லை. (10)

இயேசுகிறிஸ்து தமது தாயை மரியாதைக் குறைவாக அழைக்காத போதும் தமக்கும் அவளுக்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தை அதாவது ஒரு தொலைவை (அல்லது இடைவெளியை) அவளை “ஸ்திரி” என்று அழைப்பதன் மூலம் காண்பித்துள்ளார். அதாவது அதுவரை காலமும் மரியாளின் மகனாகச் யெற்பட்ட இவர் ப்போது தேவகுமாரனாகச் செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டதை மரியாளுக்கு உணர்த்துவதற்காக தமது பகிரங்க ஊழியக் காலத்தில் அவர் மற்ற பெண்களை அழைத்த விதமாகவே தமது தாயையும் அழைத்துள்ளார். இதை அவரது வார்த்தைகளே அறியத் தருகின்றன. ஏனென்றால் “எனக்கும் உனக்கும் என்ன?” என்னும் அடுத்து வரும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் “இரு நபர்களுக்கிடையிலான உறவில் ஒரு இடைவெளி அல்லது தொலைவு இருப்பதைச் சுட்டிக் காட்ட அக்கால யூதர்கள் உபயோகிக்கும் ஒரு சொற்பிரயோகமாகும்”(11) எனினும் அது உச்சரிப்பின் முறையை அடிப்படையாக்க் கொண்டு கடுமையாக அல்லது மென்மையாகச் சொல்லப்படலாம். பிசாசுக்கள் இயேசுகிறிஸ்துவோடு பேசும்போது இச்சொற்பிரயோகத்தை கடுமையாகப் பிரயோகித்துள்ளதை மத். 8.29, மாற்கு 1.24, 4.7, லூக்கா 4.34, 8.28 போன்ற வசனங்களில் நாம் அவதானிக்கலாம். இயேசுகிறிஸ்து மரியாளோடு கடுமையாகப் பேசியிருந்தால் அவரது வார்த்தைகள் “தமது அலுவல்களில் தலையிடாமல் இருக்கும்படியும் தமது விருப்பம்போல செயற்படத் தம்மைவிட்டுவிடுபடியும் கூறுவதாகப் பொருள்படும்.(12) ஆனால், மென்மையாக உபயோகிக்கும்போது இச்சொற்பிரயோகம் கடிந்து கொள்ளுதலை அல்ல. மாறாக, தவறாகப் புரிந்துக் கொள்ளப்ப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டும்”(13) இயேசுகிறிஸ்து மரியாளைக் கடிந்துக் கொள்ளாமல், மரியாதையுடனும் பாசத்துடனுமே பேசியுள்ளமையால், அவர் தமக்கும் மரியாளுக்கும் இடையிலான உறவை அவள் தவறாகப் புரிந்துகொண்டிருந்த்தைச் சுட்டிகாட்டுவதற்காக இவ்வாறு கூறியுள்ளார் “அதுவரை காலமும் மரியாளின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து வாழந்த இயேசுகிறிஸ்து (லூக். 2:51) அவளது அதிகாரத்திற்குத் தாம் உட்பட்டிருந்த காலம் முடிவடைந்துவிட்டதைச் சுட்டிக் காட்டுவதற்காக அவளை இவ்வாறு ழைத்துள்ளார்.”(14) எனவே மரியாள் இனிமேல் தம்மை அவளுடைய மகனாக மட்டும் பார்க்காமல், தன்னுடைய கர்த்தராகவும் பார்க்கும்படியாக அவளை இவ்வாறு அழைத்துள்ளார். (15)

தமது தாயை “ஸ்திரீயே” என்று அழைத்து, தமக்கும் அவளுக்கும் இடையிலான உறவின் தன்மையை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை அவளுக்குச் சுட்டிக் காட்டிய இயேசுகிறிஸ்து “என் வேளை இன்னும் வரவில்லை”. (யோவான் 2:4) என்றும் கூறினார். யோவானுடைய சுவிஷேசத்தில் இயேசுகிறிஸ்துவின் இக்கூற்று ஐந்து தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு (2:4, 7:6, 7:8, 7:30, 8:20) மூன்று தடவைகள் “என் வேளை வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். (12:23, 13:1, 17:2) தாம் மரிக்கும் நேரம் நெருங்கிவரும் போதே “என் வேளை வந்துவிட்டது” என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ளமையால், “அவரது வேளை” சிலுவை மரணம் என்பது தெளிவாகின்றது.(16) சிலுவையில் தம்மைப் பலியாகக் கொடுப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தமையால், அப்பணியினைச் செய்வதற்காகவே தாம் வந்துள்ளதை ஆரம்பத்திலேயே தமது தாயாருக்கு உணர்த்துவதற்காகவே, தமக்கும் அவளுக்கும் இடையிலான உறவின் தன்மையை சுட்டிக்காட்ட அவர் தமது தாயை “ஸ்திரியே” என்று அழைத்துள்ளார். இயேசுகிறிஸ்து மேசியாவாகச் செயற்பட ஆரம்பித்தபோது அவருக்கும் மரியாளுக்கும் இடையிலான உறவில் ஒரு மாறுதல் ஏற்பட்டதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, இங்கு எவ்விதர மரியாதைக் குறைவும் அவமதிப்பும் இல்லை. இதனால், சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை “தாயே” என்று மாற்றியுள்ளது போல மாற்றுவதில் அர்த்தமும் இல்லை.(17). கிறிஸ்து மனிதராகப் பிறப்பதற்கு தேவன் மரியாளை உபயோகித்தது உண்மை என்றாலும் அவளும் மற்ற பெண்களைப் போலவே இருக்கின்றாள் என்பதை நாம் மற்க்கலாகாது. (18)



குறிப்புகள்
(1) கானா என்பது பலஸ்தீனாவின் கலிலேயாவிலிருந்த சிறிய பட்டணமாகும். யோவானுடைய சுவிஷேசத்தில் நான்கு தடவைகள் இப்பட்டணம் “கலிலேயிவிலுள்ள” என்னும் அறிமுகத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. (யோவான்2:1, 2:11, 4:46, 21:2) பழைய ஏற்பாட்டிலும் “கானா” என்னும் பெயரில் ஒரு பிரதேசம் இருப்பதனால் (யோசு. 16:8, 19:28), அதிலிருந்து இப்பட்டணத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே யோவான் நான்கு தடவைகளும் தான் குறிப்பிடும் “கானா” கலிலிலேவில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். (A.C. Myers, ed., The Eerdmans Bible Dictionary, p. 185) பழைய ஏற்பாட்டுக் கானா ஆசேர் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட பட்டணங்களில் ஒன்றாக உள்ளது. (யோசு 19:24-28) தற்காலத்திலும் இப்பட்டணம் இதே பெயரில் “தீரு” என்னும் பட்டணத்திற்கு தென்கிழக்கில் 7 மைல்கள் தொலைவில் உள்ளது. (M.H.Woudstra, Joshua: The New International Commentary on the Old Testament, p. 289) யூதவரலாற்றாசிரியர் ஜோசீப்பஸ் என்பவர் ஒரு தடவை தான் கலிலியாவிலுள்ள “கானா“ என்னும் ஊரில் இருந்ததாகவும் குறிப்பிட்ட போதிலும் இப்பெயர் வேறு புராதன இலக்கியங்களில் இடம்பெறதாதமையால், இப்பட்டணம் பிரபலமற்ற ஒரு பிரதேசமாகவே அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். (L. Morris, John: The New Internatinal Commentary o the New Testament, p.177) “கலிலேயாவிலுள்ள” என்னும் அறிமுகத்துடன் யோவான் இப்பட்டணத்தைக் குறிப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும். புதைபொருள் ஆராய்சியாளர்கள். தற்போது இஸ்ரவேல் நாசரேத் என்னும் நகரத்திற்கு 9 மைல்கள் வடக்கில் சிதைவடைந்த நிலையில் இருக்கும் கிர்பத் குஆனா (Khirbet Qnana) என்னும் இடமே புதிய ஏற்பாட்டுக்கால “கானா” எனும் ஊர் என்பதைக் கண்டுபிடித்துள்ளார். (D.A.Carson, John: The Pillar New Testament Commentary, p. 168) இவ்விடத்தில் இயேசுகிறிஸ்துவின் காலத்தைய மட்பாண்டத் துண்டுகளும் நாணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. E.M. Blaiklock & R.K. Harrison, ed., The New International Dictionary of Biblical Archaeology, p.116) “நாசரேத்” என்னும் நகரத்திற்கு நான்கு மைல்கள் வடகிழக்கில் திபேரியாவிற்குச் செல்லும் வழியில் இருக்கும் “கெர்ஃப் கீனா” (Kefr Kenna) என்னும் பட்டணமே புதிய ஏற்பாட்டுக்கால “கானா” என்னும் ஊர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இதனால், கிரேக்க மற்றும் ரோம ஆலயங்கள் இப்பட்ணத்தில் கட்டப்பட்டுள்ளதோடு கிரேக்க ஆலயத்தில் இயேசு கானா ஊரில் செய்த அற்புத்ததில் உபயோகித்தாகக் கூறப்படும் ஒரு சாடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உல்லாசப் பிரயாணகளினால் இலகுவாக வந்து போக்க் கூடிய இடமாக இருப்பதினாலே இவ்விடத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டு, இவ்விடமே புதிய ஏற்பாட்டுக்கால கானா என்று கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. இதேபோல, ஆதிச் சபையின் வரலாற்றாசிரியர் இயூசிபியஸ் பழைய ஏற்பாட்டுக்கால கானாவே புதிய ஏற்பாட்டுக்கால கானா என்று குறிப்பிட்டுள்ளதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. (G.W. Bromiley, The International Standard Encyclopedia Volume 1, pp-584-585) மேலும் நாசரேத்திலிருந்து ஒன்றரை மைல்கள் தொலைவில் தாபோருக்குச் செல்லும் வழியில் இருக்கும் “அய்ன்குஆனா” என்னும் இடமே புதிய ஏற்பாட்டுக் கானா என்னும் சிலரது கருத்துக்கு (S.W. Sandy, Sacred Site if the Gospels, p. 24) எவ்வித ஆதாரமும் இல்லை. 

(2) இயேசுகிறிஸ்துவை “மரியாளின் மகன்” என்று குறிப்பிடாமல், மரியாளை “இயேசுகிறிஸ்துவின் தாய்” என்று யோவான் குறிப்பிட்டுள்ளதை நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். இயேசுகிறிஸ்துவின் முக்கியத்துவம் மரியாளிடமிருந்து வரவில்லை. மாறாக, மரியாளின் முக்கியத்துவம் இயேசுகிறிஸ்துவிடமிருந்து அவளுக்குக் கிடைத்துள்ளதை யோவானின் வார்த்தைகள் அறியத் தருகின்றன. (G.L.Borchert, Hohn 1-11: The New American Commentary, pp. 154-155)

(3) வேதாகமத்தின் புதிய இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் “ஸ்திரியே” என்பதற்குப் பதிலாக பெண்ணே” என்னும் வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. 

(4) புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டமையால் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் முழுமையான அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு மூலமொழியான கிரேக்கத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

(5) R.C.H. Lenski, The Interpretation of St. John's Gospel. P.189

(6) H.G. Liddell & R.Scott, A. Greek-English Lexicon

(7) F. Josephus, The Antiquities of the Jews 17.4.74

(8) உதாரணத்திற்கு “ஹேமா” என்னும் இலக்கியத்தில் “ஒடீசியெஸ்” என்பவன் தான் மிகவும் அதிகமான நேசித்த மனைவியை இவ்விதமாகவே அழைத்துள்ளான். அதேபோல, ரோம சக்கரவர்த்தி ஒகஸ்ட்டஸ் என்பவன் “கிளியோபத்ராவை” அழைக்க உபயோகித்த வார்த்தையும் இதுவேயாகும். 

(9) W. Barclay, John Volume one: The Daily Study Bible, p. 98

(10) L. Morris, Expository Reflections on the Gospel of John p. 73

(11) D.A. Carson , John: The Pillar New Testament Commentary, p. 170, நியாதிபதிகள் 11:12 1 ராஜாக்கள் 17:18, 2 ராஜாக்கள் 3:13, 2 நாளாம்ம் 35:21, ஓசியா 14:28 போன்ற வசங்களிலும் இத்தகைய சொற்பிரயோகத்தைக் நாம் அவதானிக்கலாம்

(12) N. Turner, Grammatical Insights into the New Testament, p. 47

(13) W. Barclay, John Volume 1: The Daily Study Bible p. 98

(14) L. Miorris, John: The New International Commentary on the New Testament, p. 158

(15) W,. Hendriksen, New Testament Commentary: John, p. 115 இயேசு கிறிஸ்துவின் பகிரங்க ஊழியம் அவரது குடும்ப உறவினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.(யோவான் 7:3-9, மாற்கு 4:31-35) இதில் அவருடைய தாயினாலும் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதை இயேசுகிறிஸ்து தமது தாயை ஸ்திரியே என்று அழைப்பதன் மூலம் சுட்டிகாட்டியுள்ளார். மேலும், இயேசுகிறிஸ்து சொல்கின்ற விதமாக செய்யும்படி மரியாள் வேலைக்கார்ர்களிடம் கூறுவது, அவள் அவரது அதிகாரத்தின் கீழ் செயற்பட ஆரம்பித்துள்ளதையே அறியத் தருகின்றது. (G.L. Borchert, John 1-11: The New American Commentary, P. 155-156)

(16)  F. Salvoni ; Nevertheless, My Hour Has Not Yet Come" in Restoration Quarterly, pp.236-241

(17) அண்மையில் வெளிவந்த வேதாகமத்தின் புதிய மொழிபெயர்ப்பான திருவிவிலியத்தில் “ஸ்திரி” என்பது “அம்மா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள போதிலு “அம்மா” எனும் சொல் தாய் என்னும் பொருளில் அல்ல. பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் பொருளில் இங்கு கையாளப்படுகின்றது எனும் விளக்கம் அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் New International Version “அன்பான பெண்ணே” (Dear Woman) என்னும் அர்த்தத்தில் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை மொழிபெயர்த்துள்ளது. ஆனால், “அன்பான” என்னும் பதம் மூலமொழியில் இல்லை என்பதை நாம் மறக்கலாகாது. Good New Bible ஸ்திரியே என்னும் வார்த்தையை மொழிபெயர்க்காமல் விட்டுள்ளது. இதனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள முக்கியமான விடயத்தை இம்மொழிபெயர்ப்பை வாசிப்பவர்களினால் அறியமுடியாதுள்ளது. (B. Newman & E.Nida, A. Translator's Handbook in the Gospel of John, p. 57)

(18) இதனால்தான் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருந்தவர்களில் மரியாளும் இருந்தாள். (அப். 1:14). ஆதி சபையில் மரியாள் மற்ற பெண்களைப் போல சாதாரணமான ஒரு பெண்ணாகவே இருந்தாள் என்பதை இது அறியத்தருகின்றது. ஆனால் கி.பி. 431இல் எபேசு பட்டணத்தில் கூடிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் “தேவதாய்” என்றும் பெயர் மரியாளுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கி.பி. 451 இல் “சால்சிடோன்” என்னுமிடத்தில் கூடிய ஆலோசனைச் சங்கத்தில் எழுதப்பட்ட “சால்சிடோனிய விசுவாசப் பிரமாணத்திலும் மரியாள் தேவதாய் என்னும் விடயம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. கி.பி. 553 இல் கொனஸ்தாந்திநோபிள் என்னும் இடத்தில் கூடிய சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் மரியாள் மரிக்கும் வரை கன்னிப்பெண்ணாகவே இருந்தாள் என்னும் உபதேசம் கொண்டுவரப்பட்டது. மரியாள் உலகில் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு பாவமும் செய்யவில்லை என்று சபைப்பிதா ஒகஸ்டீன் (கி.பி. 354-430) தர்க்கித்து வந்தார். இதனால், பிற்காலத்தில் மரியாள் பாவசுபாவமற்றவளாகவே பிறந்தாள் என்னும் உபதேசமும் உருவானது. இது சர்சபைக்குரிய உபதேசமாக இருந்துவந்த போதிலும் 1854இல் சரியான உபதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதேசமயம், மரியாள் மரணமடையாமல் பரலோகத்திற்குச் சென்றாள் என்பதும் ரோமன் கத்தோலிக்க சபையின் உபதேசகமாக உள்ளது. (E. iller & K.R. Samples, The Cult of the Virgin, pp19-76; L.Boettner, Roman Catholicism, pp 72-167; W.Webster, The Church of Rome at the Bar of History, pp. 72-89) ஆனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் ரோமன் கத்தோலிக்க சபை மரியாளைப் பற்றி உருவாக்கியுள்ள உபதேசங்களை முரண்படுத்தும் விதத்திலேயே உள்ளது.     

(இவ்வாக்கமானது Dr.M.S. வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)




Sunday 7 July 2013

தேவனுடைய இரு சாட்சிகள் (வெளி. 11:3-13)

வெளிப்படுத்தல் புத்தகத்தில் இன்று அதிக சிக்கலை ஏற்படுத்தியுள்ள விடயங்களில் ஒன்று உபத்திரக்காலத்தில் பணிபுரியும் தேவனுடைய இரு சாட்சிகளும் யார் என்பது பற்றிய சர்ச்சையாகும். 'என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.“ (வெளி. 11:3-4) என யோவானுக்கு அறிவிக்கப்பட்டது.  இந்த இரு சாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாக கருதும் கிறிஸ்தவர்களில் ஒருசாரார் உபத்திரக்காலத்தில் பணிபுரியும் தேவனுடைய சாட்சிகளாக எலியாவும் ஏனோக்கும் வருவார்கள் எனக் கூறும் மறுசாரார் எலியாவும் மோசேயுமே உபத்திரக்காலத்து தேவ சாட்சிகள் எனக் கருதுகின்றனர். 

இன்று பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள் இருசாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாக கருதுவதில்லை. இருசாட்சிகளும் சபையைப் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் என்றே இவர்கள் கருதுகின்றனர்.(01) இவர்களில் சிலர் இரு சாட்சிகளும் “சபையின் அரச மற்றும் ஆசாரியப் பணிகளைக் குறிக்கின்றனர்”(02) என்றும் சிலர் சபையின் தீர்க்கதரிசனப் பணியில் உள்ளவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்(03) என்றும் ஏனையவர்கள் “சபையின் இரத்தசாட்சிகளை உருவகிக்கின்றனர்(04) எனவும் விளக்குகின்றனர். இருசாட்சிகளும் “சபையிலுள்ள யூதர்களும் புறஜாதியாரும்(05) என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள் பொதுவாக, சபை உபத்திரக்காலத்திலும் உலகில் இருக்கும் என நம்புவதினால் இருசாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாகக் கருதாமல் சபையின் பல்வேறு அம்சங்களுக்கான விவரணமாக அவர்கள் இருப்பதாக விளக்குகின்றனர். எனினும் சபை உபத்திரக் காலத்திற்கு முன்பே எடுத்துக் கொள்ளப்படுவதனாலும், இருசாட்சிகளும் உபத்திரக் காலத்தில் பணிபுரியும் இரு நபர்களாகவே வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாலும் இவர்களைச் சபைக்கான உருவகமாக விளக்க முடியாது. “இருசாட்சிகளும் மரித்து உயிர்த்தெழுவதும் இவர்கள் இருவரும் உண்மையான இரு மனிதர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. (06)

இருசாட்சிகளில் ஒருவராக எலியா வருவார் என்ப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதற்ககு காரணம் பழைய ஏற்பாட்டின் கடைசித் தீரக்கதரிசனம் இதைப்பற்றி முன்னறிவித்தள்ளமையாகும். “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.“ எனும் தீர்க்கதரிசனம் மல்கியா 4:5 குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்த்தருடைய நாள் வருவதற்கு முன் எலியா வருவார் என்பது தெளிவாகின்றது. சில கிறிஸ்தவர்கள், எலியாவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகனில் நிறைவேறியுள்ளதாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேவனுடைய இருசாட்சிகளில் ஒருவராக எலியா இருக்க முடியாது எனத் தர்க்கிக்கின்றனர். இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நாகனைப் பற்றிக் குறிப்பிடும்போது “எலியா வந்தாயிற்று” எனக் கூறியது உண்மையாயினும் (மத். 17:11-12) மல்கியாவின் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நாகனுடைய வாழ்வில் பகுதியளவிலேயே நிறைவேறியது. இதனால்தான் யோவானின் பிறப்பை பற்றிய அவனுடைய தகப்பனுக்கு தேவதூதன் அறிவித்தபோது “அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்“ என்று அறிவித்தான். (லூக். 1:17) உண்மையில் யோவான் ஸ்நானகன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் இருந்தானே தவிர அவன் எலியா அல்ல. இதனால் தான் அவன், “நான் எலியா அல்ல” என அறிக்கையிட்டான். (யோவான். 1:21)

இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானகனை வருகின்றவனாகிய எலியா (மத். 11:14) எனக் குறிப்பிடும்போது, எலியா மறுபடியும் வந்துவிட்டான் என்ற அர்த்தத்தில் அல்ல, மாறாக “கர்த்தருடைய நாளுக்கு முன்பாக எலியா செய்ய வேண்டிய பணியை யோவான் ஸ்நானகன் செய்துள்ளதையே அறியத் தருகின்றார்.(07) மேலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் கர்த்தருடைய நாள் குறிப்பிட்ட ஒருநாளில் வரும்விதமாக முன்னறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் நிறைவேறுதல் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது அது கர்த்தருடைய இரட்சண்ய நாளையும் கோபாக்கினையின் நாளையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விரு அம்சங்களும் இயேசுவின் இருவருகையிலும் நிறைவேறுகின்றது. கர்த்தருடைய இரட்சண்யநாள் இயேசுவின் முதல் வருகையில் நிறைவேறியுள்ளது. ஆனால் கோபாக்கினையின் நாள் அவரது இரண்டாவது வருகையின்போதே வரும்(8) எனவே எலியாவின் வருகையைப் பற்றி மல்கியாவின் முன்னறிவிப்பும் இயேசுவின் இவ்விரு வருகையிலும் நிறைவேறும் தீர்க்கதரிசனமாக உள்ளது. இயேசு முதல் தடவை வந்தபோது யோவான் ஸ்நானகனில் பகுதியளவில் நிறைவேறிய  இத்தீரக்கதரிசனம் அவரது மறுவருகையில் முழுமையாக எலியா வருவதன் மூலம் நிறைவேறும். உண்மையில் “யோவான் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்இந்தபோதிலும் அவன் எலியாவைப் போல பணிபுரியவில்லை“(9). எலியா அநேக அற்புதங்களைச் செய்தார் ஆனால் யோவான் ஒரு அற்புதமும் செய்யவில்லை. வெளிப்படுத்தலில் இரு சாட்சிகளினதும் பணிகளில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எலியா செய்தவிதமான அற்புதங்களை அதாவது மழையை நிறுத்தவும் அக்கினையைக் கொண்டுவரவும் கூடியதான காரியங்களைச் செய்வது, வரவிருக்கும் இருவரில் ஒருவர் எலியா என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

தேவனுடைய இரு சாட்சிகளில் மற்றவர் மோசே என்று நம்பப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இரு சாட்சிகளும் செய்யும் ஏனைய அற்புதங்களான தண்ணீரை இரத்தமாக மாற்றுதல், வாதைகளைக் கொண்டு வருதல் போன்றவை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே செய்தவையாகும். (வெளி. 11:6) இரு சாட்சிகளும் யார் என்பதைக் கண்டு கொள்வதற்கு வெளிப்படுத்தலில் இவர்கள் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அற்புதச் செயல்களை பழைய ஏற்பாட்டில் எவர்கள் செய்துள்ளார்களோ அவர்களே வரப்போகிறவர்கள் என எண்ணுவது சரியா என நாம் கேட்கலாம். தேவ வல்லமையைப் பெற்ற வேறு எவராலும் இவற்றைச் செய்ய முடியாதா? என்றும் நாம் வினவலாம். ஆனால் நாம் இவ்விடத்தில் கருத்திற் வேண்டிய முக்கியமான அம்சம் யாதெனில் இவ்விரு சாட்சிகளினதும் ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதாகும். (வெளி. 11:8) எனவே இஸ்ரவேல் மக்களால் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அவர்களிடத்திற்கு  அனுப்ப்படுவார்கள். யூதர்களுடைய பாரம்பரியத்தின்படி மோசேயும் எலியாவுமே பழைய ஏற்பாட்டைப் பிரதிநிதித்தும் வகிப்பவர்களாவர். எனவே தேன் இவர்கள இருவரையும் தன் வார்த்தையை அறிவிப்பதற்காக யூதர்ளிடம் அனுப்புவார். மேலும், இயேசு மறுரூபமாகியபோது மோசேயும் எலியாவுமே அவரோடு இருந்ததும் (மத். 17:1-5) உபத்திரக்காலத்தில் வரும் தேவனுடைய இரு சாட்சிகளும் இவர்களே என்பதற்கான ஒரு ஆதாரமாயுள்ளது. ஏனென்றால் “மறுரூப மலை நிகழ்வானது இயேசுவின் இரண்டாவது வருகைக்கான முன்னடையாளமான சம்பவமாக இருப்பதனால், அங்கு இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மேசேயும் எலியாவுமே அவரது வருகைக்கு முன்பாக இருசாட்சிகள் என்பதை அறியத் தருகின்றது.((16)

சில கிறிஸ்தவர்கள் மோசே அல்ல மாறாக எலியாவும் ஏனோக்குமே வரவிருக்கும் இருசாட்சிகள் எனும் கருத்துடையவர்களாயிருந்தனர். இதற்கு சுட்டிக்காட்டப்படும் ஆதாரம் இவர்கள் இருவரும் மற்றவர்களைப் போல மரணமடையாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகும். எபிரேயர் 9:27 இன்படி “ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டுள்ளது.” என்பதைச் சுட்டிக் காட்டும் இவர்கள், மோசே ஏற்கனவே மரித்து விட்டதால், அவர் மறுபடியும் வரமாட்டார் என்றும், மரிக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்குமே மறுபடியும் உலகிற்கு வந்து மரிப்பார்கள் என்றும் தர்க்கிக்கின்றனர். எனினும் எபிரேயர் 9:27 எலியாவுக்கும் ஏனோக்குக்கும் மட்டுமல்ல இயேசுவின் வருகையின் போது எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்களுக்கும் பொருத்தமற்றதாகவே உள்ளது. அவர்களும் எபிரேயர் 9:27 இல் சொல்லப்பட்டுள்ளதற்கு முரணாக மரணமடையாமல் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். (1 கொரி. 15:52-58, 1 தெச 4:13-18) 'ஏனோக்கு மரணத்தைக் காணக்கூடாது என்பதற்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டார். (எபி. 11:5) ஆனால் வரவிருக்கும் இரு சாட்சிகளும் மரிப்பார்கள். (வெளி. 11:7-12) எனவே மரணத்தைக் காணுதல் ஏனோக்கிற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது.(16) உண்மையில் மோசேயும் எலியாவுமே உபத்திரக்காலத்தில் எருசலேமில் பணிபுரியும் தேவனுடைய இரு சாட்சிகள் என்பதை மறுப்பதற்கில்லை. 

குறிப்புகள்
(1) Henry B.Swete, The Apocalypse of St. John The, New York : Macmillan Publisher, 1906. P.132

(2) F.F. Bruce 'The Revelation to John in A New Testament commentary; Grand Rapids: Zondervan Publishing House, 1969, p. 649

(3) Alan F. Johnson, Revelation in The Expositor's Bible Commentary; Grand Rapids: Zondervan Publishing House, 1981, p. 504

(4) Leon Morris, Revelation in Tyndale New Testament Commentary; Leicester: Inter Varsity Press, 1988 p. 143

(5) Mathias Rissi, 'The Kerygma of Revelation to John' in Interpretation, Vol 22(January 1996). P.16

(6) John F. Walvoord, Revelation in The Bible Knowledge Commentary : New Testament, Wheaton:  Victor Books, 1983, p. 955

(7) Donald A. Hanger, Mathew in The World biblical Commentary, Dallas: Word Books, 1993, p. 308

(8) இதனால்தான் நாசரேத் என்னும் ஊரின் ஜெபாலயத்தில் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை வாசித்து இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று எனக் கூறியபோது அவர்தான் வாசித்த அதிகாரத்தை முழுமையாக வாசிக்காமல் இடையில் நிறுத்திவிட்டார். அவர் வாசித்த பகுதி கர்த்தருடைய நாளின் இரு அம்சங்களையும் கொண்டிருந்தமையால், அவர் தனது முதல் வருகையின்போது கர்த்தருடைய இரட்சண்ய நாள் லூக்கா 4:19 இல் கர்த்தருடைய அநுக்கிர வருஷம்) வந்துவிட்டதை அறிவித்தார். அச்சமயம் கர்த்தருடைய நாளின் அடுத்த பகுதியான கோபாக்கினையின் நாள் வராதமையால் அவர் அதைப்பற்றி தீர்க்கதரிசனத்தை வாசிக்கவில்லை. 

(9) Tim Lahaye, Revelation illustrated and Made Plain, Puna: Word of Life Publication, 1994, p. 151

(10) John F. WalVoord, in Revelation in Bible Knowledge Commentary, p. 956 

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய வெளிப்படுத்தல் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)






Monday 1 July 2013

உனக்கடுத்தவனைச் சிநேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். (மத். 5:43)

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு விளக்கம் கொடுக்கையில், 'உனக்கடுத்தவனைச் சிநேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். (மத். 5:43)என்று குறிப்பிட்டார். எனினும் பழைய ஏற்பாட்டில் இத்தகைய கட்டளைகள் கொடுக்கப்படாதமையால் இயேசு தேவ கட்டளையை மாற்றியுள்ளார் என்றும் அவர் முழுமையான தேவ அறிவற்றவராகவும் இருந்துள்ளார் என்றும் சிலர் கருதுவதோடு, இதன் மூலம் பழைய ஏற்பாட்டைப் பற்றி ஒரு தவறான கருத்தைப் பரப்பியுள்ளார் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். 


உண்மையில் இயேசு கிறிஸ்து மத்தேயு 5:43 இல் பழைய ஏற்பாட்டுக் கட்டளையை குறிப்பிடவில்லை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வுண்மையை அறியாதவர்களே இயேசுவின் பழைய ஏற்பாட்டு அறிவைப் பற்றித் தவறான கருத்துடையவர்களாக உள்ளனர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் மக்கள் யூதமதப் போதகர்களின் உபதேசங்களுக்கும் பாரம்பரியக் கருத்துக்களுக்கும“ முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். யூதமதப் போதகர்கள் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களுக்கு தமது அறிவுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாவறு விளக்கம் கொடுத்து வந்தனர்.(1) அத்தகைய ஒரு யூதமார்க்க யூதமார்க்கத்து விளக்கத்தையே இயேசு மத்தேயு 5:43 இல் குறிப்பிட்டுள்ளார். 

மத்தேயு 5ம் அதிகாரத்தில் 21ம் வசனத்திலிருந்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு விளக்கம் கொடுத்துவரும் இயேசு, பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளைக் குறிப்பிடும்போது “பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது” அல்லது “உரைக்கப்பட்டது“ என்று அறிமுகப்படுத்தியுள்ளதை நாம் அவதானிக்கலாம். (5:21,27,31,33,38)ஆனால் 43ம் வசனத்தில் மட்டும் இத்தகைய அறிமுக வார்த்தைகளை இயேசு உபயோகிக்கவில்லை. ..“ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். என்றே குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அவ்வசனத்தில் அவர் குறிப்பிடும் விடயம் பழைய ஏற்பாட்டில் தேவனால் உரைக்கப்படாத வார்த்தைகளாய் இருப்பதேயாகும். 

பழைய ஏற்பாட்டில் “உன்னில் நீ அன்பு கூறுவதுபோல் பிறனிலும் அன்பு கூருவாயாக (லேவி. 19:18) என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். அயலவனை நேசிக்கும்படியான இக்கட்டளையை யூத மதப் போதகர்கள் “உனக்கடுத்தவனை சிநேகிப்பாயாக“ என்று போதித்தனர். எனினும் யூதர்கரைப் பொறுத்தவரை உனக்கடுத்தவன் அல்லது அயலான் என்பது இன்னொரு யூதனாகவே இருந்தான்“(2) பிறன் என்ற பதம் யூதர்களை மட்டுமல்ல புறஜாதியாரையும் குறிக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “புறஜாதியாரை அவர்கள் எதிரிகளாகவே கருதினார்கள்“(3) இதனால் அவர்கள் “உன் சத்துருவைப் பகைப்பாயாக“ என்று போதிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் சங்கீதக்காரனுடைய கோப வார்த்தைகளையே தமது உபதேசத்திற்கு ஆதாரமாய்க் காண்பித்தனர். பழைய ஏற்பாட்டிலுள்ள சில சங்கீதங்களில், சங்கீதக்காரன் தன் எதிரிகளை சபிப்பதையும் அவர்களைத் தன்னுடைய பகைஞராக வர்ணிப்பதையம் நாம் அவதானிக்கலாம். (சங். 26:5, 137:8-9, 139:21-22) எனினும் இவ்வார்த்தைகள் சங்கீதக்காரனின் மனைக்குமறலின் வெளிப்பாடாகவே உள்ளன. இவை தேவன் மக்களுக்கு கொடுத்த கட்டளைகள் அல்ல. மாறாக சங்கீதக்காரன் தேவனோடு பேசுகின்ற, தன் கோப உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளாகவே உள்ளன(4) எனவே, அவற்றைத் தேவ கட்டளைகளாக்க் கருத முடியாது. ஆனால் யூதமதப் போதகர்கள், சங்கீதக்காரனின் இத்தகைய வார்த்தைகளை அடிப்படையாக்க் கொண்டு சத்துருவைப் பகைப்பாயாக என்று போதித்து வந்தனர். இதையே இயேசு கிறிஸ்து மத்தேயு 5:43 இல் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் போதித்த விதமாகவே(5) பழைய ஏற்பாட்டிலும் சத்துருக்களை நேசிக்கும்படியே தேவன் கட்டளையிட்டுள்ளார். லேவியராகமம் 19:33-34 இல்  “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக;“ என்று அறிவுறுத்தியுள்ள தேவன் யாத்திராகமம் 23:4-5 சத்துருக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார். இவ்வசனங்களில்  ்உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீதிமொழிகள் 25:21   “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.’ என்று சொல்லப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். அவர் பன்னிரு வயதுடையவராயிருக்கும் போதே அவரது வேத அறிவு அக்கால பழைய ஏற்பாட்டு வேதவல்லுநர்களையே ஆச்சரியப்பட வைத்தது. (லூக். 2:46-47) அவருடைய வேதம் பழைய ஏற்பாடாகவே இருந்தது. அவர் அதைத் தன் வாழ்விலும் ஊழியத்திலும் அதிகமாக உபயோகித்தார். இயேசுவின் காலத்தைய யூதமதப் போதகர்கள் பழைய ஏற்பாட்டுச் சட்டங்களுக்கு மேலதிகமாக 613 கட்டளைகளைச் சேர்த்திருந்தனர். ஆனால் இவற்றில் ஒரு கட்டளையையும் இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை.(6) “பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களைத் தவிர அவர் வேறு எந்த ஒரு கட்டளையையும் தேவ கட்டளையாக அங்கீகரிக்கவில்லை.(7)


குறிப்புகள்
(1) ஆரம்பத்தில் வாய்மொழி மூலமாகக் கொடுக்கப்பட்ட இப்போதனைகள் கி.மு.. இரண்டாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்று “மிஷ்னா“ என்றழைக்கப்படுகின்றது. ஆறு பகுதிகளைக் கொண்ட மிஷ்னாவில் விவசாயம், பண்டிகைகள், திருமணம், மற்றும் சமூக கலாச்சார குற்றவியல் பற்றிய சட்ட திட்டங்கள் உள்ளன. பிற்காலத்தில் இச்சட்டங்களுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளும் இதனோடு சேர்க்கப்பட்டன. இவ்விளக்கவுரை “கமரா“ என்றழைக்கப்படுகின்றது. “மிஷ்னா“, “கமாரா“   என்னும் இவ்விரு நூல்களும் யூதர்களுடைய போதனை நூலாக இருப்பதோடு “தல்மூட்“ என்றழைக்கப்படுகின்றது. 

(2) Donald A. Hagner, Mathew 1-13 in word biblical commentary vol 33A ed., Ralph P. Martin Dallas: Word Books Publishers, 1993, p.134

(3) Ibid p. 134 இயேசுவின் நல்ல சமாரியன் உவமை யூதர்களுக்கு அவர்கள் எதிரிகளாகக் கருதிய சமாரியனும் அயலவனாக இருக்கின்றான் என்பதைச் சுட்டிக் காட்டும் பாடமாக உள்ளது. (லூக். 10:25-37)

(4) தனது இன்பங்களையும் துன்பங்களையும் மட்டுமல்ல தன் கோப உணர்வுகளையும் சங்கீதக்காரன் தேவனிடமே வெளிப்படுத்தியுள்ளான். அவன் தன் கோபத்தை மனிதர்களிடத்தில் காட்டாமல் தேவனிடத்தில் காண்பித்துள்ளான். சங். 12, 35, 58, 69, 70, 83, 109, 137, 140 ஐ பார்க்கவும். 
சத்துருக்களைப் பற்றிய இயேசுவின் போதனை மத்தேயு 5:44 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர் களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

(5) மாற்கு 7:1-13 இல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. 

(6) Brian H. Edwards, Nothing but the Truth, Durham: Evangelical Press, 1993, p. 59

நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - Dr.M.S. வசந்தகுமார்.