- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 23 November 2012

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்


  1. உலகளாவிய ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான்?
  2. 6ம் அதிகாரத்தில் உள்ள தேவனின் கூற்று 7ம் அதிகாரத்தில் உள்ளவற்றை முரண்படுத்துகின்றதா?
  3. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு வாழ்ந்த நோவா எப்படி உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான்?
  4. இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் கொண்டு போகப்பட்டனவா?
  5. சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா?
  6. நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன?

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்

ஆதியாகமப் புத்தகத்தில் ஒன்றையொன்று முரண்படுத்தும் விபரணங்களாக பலரால்சுட்டிக் காட்டப்படும் பகுதிகளில் ஒன்று உலகளாவிய ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான் என்பதைப் பற்றியதாகும். ஆதி. 6:19-20 இல் தேவன் நோவாவிடம் உயிரனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைக் கொண்டு போகும்படி கட்டளையிடுகின்றார். ஆனால் அடுத்த அதிகாரத்தில் அதாவது ஆதி. 7:2-3 ஒவ்வொன்றிலும் ஏழு சோடிகளைக் கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார். இதனால் தேவன் 6ம் அதிகாரத்தில் கூறியவற்றை 7ம் அதிகாரத்திலுள்ள கூற்று முரண்படுத்துவதாக உள்ளது. இம்முரண்பாட்டைச்சுட்டிக் காட்டுபவர்கள் இவ்விரு அதிகாரங்களும் இரு வேறுபட்ட மரபினரின் குறிப்புகளிலிருந்து  பெறப்பட்ட வித்தியாசமான கதைகள் எனக் கூறுவதோடு பிற்காலத்தில் வெவ்வேறு ஆவணக் குறிப்புகளிலிருந்தும் ஆதியாகமப் புத்தகத்தை தொகுத்தெழுதியவர் “அம்முரண்பாட்டைக் கவனிக்கத் தவறியமையால் இருவேறுபட்ட மரபினரதும் குறிப்புகளையும் ஒன்றாக சேர்த்து எழுதிவிட்டார்“ என விளக்குகின்றனர். 

ஆதியாகமம் நால்வகையான வித்தியாசமான மரபினரின் குறிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதே நவீன வேத விமர்சனக் கல்வியின் தாற்பாரியமாகும்.எனினும் இது ஆதியாகம்ம் எழுதப்பட்டுள்ள முறைபற்றிய சில வேதஆராய்ச்சியாளர்களின் ஒரு ஊகமே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. எனவே ஆதியாகமம் 6ம் 7ம் அதிகாரங்கள் இருவேறுபட்ட வித்தியாசமான மரபுக்கதைகளின் பிற்காலச் சேர்க்கை என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இரு அதிகாரங்களும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன. 6ம் அதிகாரத்தில் தேவன் உலகிலுள்ள சகல உயிரினங்களிலும் ஜலப்பிரளய அழிவுக்குத் தப்புவதற்காக  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்துகின்றார். (ஆதி. 6:19-20) நோவா தேவகட்டளைப்படி சகலவற்றையும் செய்து முடித்தபின் (ஆதி 6:22) தேவன் மறுபடியுமாக நோவாவிற்கு சில அறிவுறுத்தல்களைக் கொடுக்கிறார். ஆரம்பத்தில் சகல உயிரினங்களிலும் ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடியை கொண்டு போகச் சொன்ன தேவன் இப்போது சுத்தமான மிருகங்கள் பறவைகளில் மட்டும் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள் கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார். (ஆதி. 7.2-3) “இக்கட்டளையானது 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படாத மேலதிகமான ஒரு அறிவுறுத்தலாகும்.“ இம்மேலதிக அறிவுறுத்தலுக்கான காரணம் இவ்விடத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும் ஜலப்பிரளயத்தின் பின்னால் அதனை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. ஜலப்பிரளயத்தின் பின் பேழையிலிருந்து வெளியே வந்த நோவா தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காக பலி செலுத்தினான். அவன் சுத்தமான மிருகங்கள் பறவைகள் சிலவற்றைப் பலியாகச் செலுத்தினான் என்பதை ஆதி 8:20 அறியத் தருகின்றது. இதிலிருந்து பலிகளுக்காகவே தேவன் சுத்தமான மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது. உண்மையில், “சுத்தமான உயிரினங்களில் மேலதிகமான மிருகங்கள் இல்லாமலிருந்தால் பலி செலுத்தப்பட்டபின் அவை இல்லாமல் போயிருக்கும்“. எனவே உயிரினத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்திய தேவன் நோவாவுக்குப் பலி செலுத்தும் மிருகங்கள் பறவைகள் அவசியப்படும் என்பதை அறிந்தவராக சுத்தமானவற்றில் மேலதிக எவ்வேழு சோடிகளைக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டுள்ளார். 

பலி செலுத்துவதற்காகவே சுத்தமான மிருகங்கள் பறவைகளில் மேலதிகமாக எவ்வேழு சோடிகள் பேழைக்குள் கொண்டு போகப்பட்டது உண்மையாயினும் உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்னும் விளக்கம் மோசேயின் நியாயப்பிரமாணத்திலேயே அறிவிக்கப்பட்டமையால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு வாழ்ந்த நோவா எப்படி உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான் எனும் கேள்வி நம்முள் எழுவது இயற்கையே. எனினும் மோசேயின் நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் முன்பே சுத்தமான சுத்தமான அசுத்தமான மிருகங்கள் எவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மோசேயின் நியாப்பிரமாணம் உணவாகக் கூடிய சுத்தமான அசுத்தமான உயிரினங்கள் எவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். (பொதுவாக) குறிப்பிட்ட சமூகத்தினரால் சுத்தமாக கருதப்பட்டவை மட்டுமே அச்சமூகத்தினரால் தெய்வங்களுக்குப் பலியாகச் செலுத்தப்பட்டன. அதேசமயம் “சுத்தமானவை அசுத்தமானவை எவை எனபதை வரையறை செய்யும் முறையும் சமுதாயத்திற்கு சமுதாயம் வித்தியாசப்பட்டது. எனவே நோவாவும் தான் வாழ்ந்த சமுதாயத்தில் சுத்தமானவை என கருதப்பட்ட மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு சோடிகளை பலி செலுத்துவதற்காகப் பேழைக்குள் கொண்டு சென்றுள்ளான் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

நோவாவினால் செய்யப்பட்ட பேழைக்குள் கொண்டு போகப்பட்ட உயிரினங்கள் பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் கொண்டு போகப்பட்டனவா? இல்லையென்றால் பெரிய உருவங்களுடைய உயிரினங்கள் பேழைக்குள் கொண்டுப் போகப்படவில்லையா? என்பதாகும். எனினும் தேவன் சகல உயிரினங்களையுமே பேழைக்குள் கொண்டு போகும்படி கட்டளையிட்டார். (ஆதி. 6:18-19) நோவாவும் தேவன் தனக்கு கட்டளையிட்டப்படியெல்லாம் செய்துள்ளதை ஆதி. 6:22 அறியத் தருகின்றது. எனவே உலகிலுள்ள சகல உயிரினங்களையும் பேழைக்குள் கொண்டு போயிருப்பான் என்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. அப்படியானால் சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா? எனும் கேள்வி எமக்குள் எழலாம். ஆதி. 6:15-16 இல் தேவன் கொடுத்திருந்த அறிவுறுத்தல்களின் படி “பேழையானது 450 அடிகள் நீளமும் 75 அடிகள் அகலமும் 45 அடிகள் உயரமும் உள்ளது. இதில் 3 தட்டுக்கள் இருந்தன. நம் தமிழ் வேதாகமத்தில் இவ்விபரம் முற்காலத்தைய முழஅளவுகளிலேயே உள்ளன. (ஆதி. 6:15) எனவே மூன்று தட்டுக்களினதும் பரப்பளவு 101 250 அடிகளாகும். இன்று 40,000 வகையான உயிரினங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவ்வளவு உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடி பேழைக்குள் இருப்பதற்கு போதுதமான இடம் இருந்தமைக்குக்குக் காரணம் “பெரும்பாலான உயிரினங்கள் இளம் சோடிகளாகப் பேழைக்கு கொண்டு போகப்பட்டமையேயாகும்“.

நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் இருந்தன எனக் கூறும்போது அவை ஒன்றோடொன்று சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன எவ்வாறு எனும் கேள்வி நம்முள் எழுவது இயற்கையே. எனினும் ஆதி 9:2 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற் கொள்ளும்போது  உலகளாவிய ஜலப்பிரளயம் வரைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையே இருந்த உறவுமுறையானது ஜலப்பிரளயத்திற்கு பின் மாற்றமடைந்துள்ளதை அறிந்திடலாம். ஆரம்பகாலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் ஆளுகை செய்பவனாக மனிதன் இருந்தான். (ஆதி1:28) இதனால் அக்காலத்தில் உயிரினங்கள் மனிதனுக்கு கீழ்பட்டவையாக இருந்தன. இதனாலேயே நோவாவினால் சகல உயிரினங்களையும் பேழைக்குள் கொண்டு போவதில் சிரமங்கள் இருக்கவில்லை. ஆனால் ஜலப்பிரளயத்திற்குப் பின் மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்குமிடையிலான உறவுமுறை மாற்றப்பட்டது. தேவன்  இதைப்பற்றி நோவாவுக்கு அறிவுறுத்தும்போது “உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்“ (ஆதி. 9:2) என்றார். இப்பயமும் அச்சமும் மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகையின் விளைவாகவே உள்ளது. இது மானிட வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்றாகும். ஜலப்பிரளயத்தின் பின் மிருகங்கள் மனிதருக்கு அபாயகரமானவைகளாயின. மனிதரைப் பற்றிய ஒருவித பயம் அவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டன. மேலும் ஆரம்பத்தில் சகல உயிரினங்களும் தாவர உண்ணியாகவே இருந்தன. (ஆதி. 1:29-30) ஆனால் ஜலப்பிரளயத்தின் பின்னர் மாமிசம் உணவாக அனுமதிக்கப்பட்டது. (ஆதி. 1:29-30) இதனால் உணவுக்காக உயிரினங்கள் கொல்லப்படுவதும் சாதாரண செயலாகிவிட்டது. எனவே. ஜலப்பிரளயத்துக்குப் பின்னர் மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவு முறையும் உயிரினங்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவு முறையும் அதுவரை காலமும் இருந்ததைப் போலல்லாது இன்றிருப்பதைப் போன்று மாற்றமடைந்தது. ஆனால் அதற்கு முன் உயிரினங்களுக்கிடையில் பகையும் பயமும் இல்லாதிருந்தமையால் சகல உயிரினங்களும் மனிதனும் பேழைக்குள் ஒன்றாக இருக்கக் கூடியதாயிருந்தது.   

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய ஆதியாகமம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி)

Monday 12 November 2012

தழும்புள்ள கை


விவிலியம், அவனுக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சமும் கிடையாது.

ஈராண்டுகள் மனைவியுடன் வாழ்ந்தான். அதற்குள் தன் அருமை மனைவியை இழந்தான்;  அவனது அருமைப் புதல்வனும் மரித்துப் போனான்; துயரத்தில் மூழ்கினான்; கடவுளை இகழ்ந்தான்; கடந்த பத்து ஆண்டுகளாக அவன் ஆலயம் போனதே கிடையாது.

பெக்கிப் பாட்டியின் வீடு ஓரிரவு தீப்பிடித்து எரிந்தது. மிகவும் சிரமப்பட்டு பெக்கியைக் காப்பாற்றினர். திடீரென மாடியில் ஒரு அழுகுரல் யாவரையும் கலங்க வைத்தது. ஆம். அது குழந்தை டிக்கி. பெக்கின் பேரன்; தாய் தந்தையற்ற அநாதை. தீயை அணைக்கும் சந்தடியில், தூங்கிக் கொண்டிருந்த டிக்கியை யாவரும் மறந்து விட்டனர். சூழும் நெருப்பு டிக்கியை எழுப்பியது. அவன் கதறினான்.

எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை, மாடிக்குச் செல்லும் படிக்கட்டு எரிந்துவிட்டது. டிக்கி கைவிடப்பட்டான்.

கூட்டத்தின் மத்தியில் வில்லியமும் நின்று கொண்டிருந்தான். குழந்தைக்காக பரிதவித்தான். எப்படியாவது டிக்கிக்கு விரைவில் உதவத் தீர்மானித்தான்.

மாடியில் இருந்து கீழே இறங்கும் இரும்புக் குழாய் ஒன்று அவன் கண்ணில் பட, ஒரே தாவில் தாவி குழாயைப் பிடித்து ஏறினான்.. வாரியெடுத்தான் டிக்கியை; வலது கரம் டிக்கையை அரவணைக்க, இடது கையால் குழாயைப் பிடித்து வழுவி கீழே வந்து சேர்ந்தான். சேர்ந்த சில நிமிடங்களில் குழாயும் மாடியும் சரிந்தன.

டிக்கிக்கு எவ்வித காயமும் சேதமும் இல்லை. ஆனாலும் வில்லியத்திற்கோ, இரும்புக் குழாய் மிகவும் சூடேறியிருந்தால் இடது கை ஆழமாக வெந்துப் போய் இருந்தது.நாளடைவில் காயம் ஆறியபோதிலும், ஆழமான தழும்பு நிலைத்து விட்டது.

இந்த அதிர்ச்சியில் பெக்கிப் பாட்டி சீக்கிரத்தில் மரித்துப் போனாள். டிக்கியைக் கவனிக்க எவருமில்லை. அது குறித்து மூப்பர்கள் கூடி ஆலோசித்தனர்.

டிக்கியை வளர்க்கும் பொறுப்பை ஏற்க இருவர் முன்வந்தனர். கண்ணியமுள்ள ஜேம்ஸ் ஆறுதலளிப்பான் என்று முன்வந்தனர்.

இருவரையும் மூப்பர்கள் பாராட்டினர். உயிரைக் காத்த வில்லியத்துக்கே அதிக உரிமை என்பதை யாவரும் உணர்ந்த போதிலும் வில்லியத்தின் நாத்திகக் கொள்கையால் டிக்கியின் ஆன்மா நட்டமடையுமே என்று வருந்தினர்.

அவர்களால் ஒரு முடிவுக்குக் வரக்கூட முடியவில்லை. இறுதியாக, “நீங்கள் ஏன் இக்குழந்தையை வளர்க்க விரும்புகிறீர்கள்?“ என்று அவர்களாலேயே விளக்கம் கேட்கத் தீர்மானித்தனர்.

ஜேம்ஸ் எழும்பி, “ஒரே மகனை இழந்தோம். வெற்றிடத்தை நிரப்ப டிக்கியை விரும்புகின்றோம். குழந்தையை வளர்க்க ஒரு தாய் வேண்டுமே! வில்லியம் தனியாள் தானே! என் மனைவி குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பாள். கர்த்தருக்கு பயப்படுகின்ற பயத்திலும் அவனை வளர்ப்பாள்.“ என்றார்.

அவருக்குப் பிறகு வில்லியம் முன்னால் வந்தான். ஆனால் அவன் ஏதும் பேசவில்லை. தன் இடது கையின் கட்டுகளை அகற்றினான். ஆழமான தழும்புகளை யாவரும் காணத்தக்கதாக கையை உயர்த்திக் காட்டினான். அமையாய் நின்றான்.

ஒரே அமைதி. கண்கள் கலங்கின. முடிவில் வோட்டு எடுக்கப்பட்டது. வில்லியத்திற்கே அதிக வாக்குகள். அதுவே நீதியான முடிவு என்று யாவரும் மகிழ்ந்தனர். தழும்புள்ள கைகளை விட சிறந்த தகுதியில்லை என்பதை யாவரும் உணர்ந்தனர்.

வில்லியத்தின் வாழ்வில் ஒரு புதுத் திருப்பம், மறுமலர்ச்சி, ஆர்வத்தோடும் கரிசனையோடும் டிக்கியை வளர்ந்தான். தாயும் தந்தையுமாக விளங்கினான்.

டிக்கியும் வில்லியத்தை மிகவும் நேசித்தான். சிறந்த பாலனாக வளர்த்தான். வில்லியத்தின் கதைகளை ஆவலோடும் உணர்ச்சியோடும் கேட்பான். தழும்புள்ள கையை மீண்டும் மீண்டும் முத்தம் செய்வான். “என்னைக் காப்பாற்றிய கை“ என்று அன்பு வார்த்தைகளைப் பொழிவான்.

“அப்பா, ஜேம்ஸ் என்னைக் கொண்டுபோக வருவாரோ“ என்று பயத்துடன் கேட்பான். “வரமாட்டார் மகனே நீ என்னுடையவன்“ என்பான் வில்லியம்.

ஒருநாள் டிக்கியை ஒரு பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றான் வில்லியம். அறையொன்றில் அழகான அநேகப் படங்கள், ஒவ்வொன்றையும் டிக்கிக்கு விளக்கிக் காட்டினான் வில்லியம்.

கடைசியில் ஒரு படம். கீழ் “உன் விரலை இங்கே நீட்டி, என் கைககளைப் பார்.“ என்று எழுதியிருந்தது. டிக்கி அதனை வாசித்தான். மேலும் அறிய விரும்பினான்.

டிக்கி : இந்த கதையை விளங்குங்கள் அப்பா

வில்லி : இந்தக் கதை வேண்டாம் மகனே

டிக்கி : ஏனப்பா வேண்டாம்.

வில்லி : அந்தக் கதையை நான் நம்பவில்லை

டிக்கி : அந்த ஜேக்கதையும்தான் நீங்கள் நம்பவில்லை என்று கூறுகின்றீர்கள். ஆனாலும் சொன்னீர்களே! இதையும் சொல்லுங்கள் அப்பா.

வேறு சாக்குப் போக்குச் சொல்ல முடியாததால், வில்லியம் அந்தக் கதையைச் சொன்னான். தோமாவின் கதையில் தன்னையும், இயேசுவின் இடத்தில் தன் தந்தையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தான் டிக்கி. மிகவும் பொருத்தம் என்று உணர்ந்தான்.    

டிக்கி : உங்களையும் என்னையும் போலவே இருக்கிறதே அப்பா

வில்லி :.இருக்கலாம்
 

டிக்கி : இயேசு துக்கத்தோடு சொல்வது போல் தோன்றுகின்றதே! தோமா நம்பாததால் அப்படியோ!
 

வில்லி : மௌனமாய் இருந்தான்

டிக்கி : நாமும் நம்பாது இருந்திருந்தால் உங்களுக்கு கவலையாக இருந்திருக்கும் அல்லவா?

வில்லி :ஆம் மகனே.

டிக்கி : நானும் தோமாவைப் போல் இருந்திருந்தால், ஜேம்ஸ் என்னைக் கொண்டு போயிருப்பாரோ

வில்லி :இல்லை மகனே! நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் உன்னைக் காப்பாற்றியது நான் தானே!

டிக்கி : அப்பா நான் உங்களை நம்புகிறேன்; உங்களைத் துக்கப்படுத்தவே மாட்டேன்.

மீண்டும் அந்த கதையை சொல்ல வைத்தான் டிக்கி. வில்லியத்தின் சிந்தனைகள் அவனையே குற்றப்படுத்தின. நிம்மதியற்ற நிலையில் நித்திரைக்குச் சென்றான்.  

இரவில் ஓர் கனவு : ஒரு தழும்புள்ள கரத்தை ஒருவர் வில்லியத்திடம் நீட்டுகிறார். “உன் விரலை நீட்டி, என் கைகளைப் பார்“ என்று சொல்கிறார்.

காலையில் டிக்கியின் அன்பான முத்தங்கள் டிக்கியை எழுப்பின. இரவின் கனவுகளும் முந்தின பகலின் உரையாடல்களும் அவனது கடின உள்ளதைக் கலைத்துவிட்டன.

தாமதமின்றி, தனக்காக காயப்பட்ட இயேசுவின் கரங்களில் தன்னை ஒப்புவித்தான். உலகம் தரக்கூடாத சமாதானத்தைப் பெற்றான்.

“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா. 535)

நன்றி  நல்ல சமாரியன்

 

Tuesday 6 November 2012

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை (மத். 16:28)


  
இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் அதிக சர்ச்சைக்குரியதாகவும் நமக்கு அதிக குழப்பதை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் வாக்கியங்களில் ஒன்று அவருடைய ராட்சியத்தின் வருகையைப் பற்றிய அறிவிப்போடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு கூற்றாகும்.. இயேசு கிறிஸ்து தான் ராட்சியத்தில் வருவதைப் பற்றி குறிப்பிட்டபோது (மத். 16:27) இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவரை அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தையே இக்கூற்று ஏற்படுத்துகின்றது. .இக்கூற்றுக்கு முன்னுள்ள வசனங்களை வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து அச்சமயம் தன் சீடர்களுடன்    வார்த்தைககளைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்கள் அனைவரும் முதலாம் நூற்றாண்டிலேயே மரித்து விட்டனர். ஆனால் இயேசுவின் வருகையோ இன்னும் சம்பவிக்கவில்லை. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் அதாவது அவர் ராட்சியத்தில் வரும் வரை சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் எனும் அறிவிப்பு பொய்யானதாக உள்ளதாக சிலர் கருதுகின்றனர் 

இயேசுவின் இக்கூற்று இன்று பொதுவாக, அவரது மறுவருகை பற்றிய அறிப்பாகவே கருதப்படுகின்றது. இயேசுவின் மறுவருகை வரை அவருடைய சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்றே ஆதி சபையினர் இக்கூற்றை விளங்கிக் கொண்டிருந்தனர். (1) இயேசுவின் மறுவருகை விரைவில் அதாவது சீடர்கள் மறுவருகை விரைவில் அதாவது சீடர்கள் மரிப்பதற்கு முன் நடைபெற்று விடும் எனும் நம்பிக்கையுடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சில வேத ஆராய்ச்சியாளர்கள் தர்க்கிக்கின்றர்.(2) எனினும், இயேசுவின் மறுவருகைக்கும் முன்பே சீடர்கள் மரித்து விட்டதினால், அவர் தன் மறுவருகையைப் பற்றியே இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுவதற்கில்லை. “இயேசு தன் மறுவருகையின் காலத்தை அறியாதிருப்பதாக தெரிவித்துள்ளமையால் (மத். 24:36) தான் அறியாத அக்காலம் வரை தன் சீடர்டகளில் சிலர் மரியாமலிப்பார்கள் என்று அவர் கூறியிருக்க மாட்டார்(3)

இன்று பெரும்பாலான வேத ஆராய்சியாளர்கள் இயேசுவின் இக்கூற்றை கி.பி. 70ல் நடைபெற்ற எருசலேம் நகரத்தின் அழிவைப் பற்றிய முன்னறிப்பாகவே கருதுகின்றனர். மத்தேயு 16:27 இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியே கூறுகின்ற போதிலும் அதற்கடுத்த வசனமான சர்ச்சைக்குரிய இயேசுவின் இக்கூற்றும் அவரது மறுவருகையைப் பற்றியே கூறுகின்றது என எண்ணுவது தவறாகும்.(4) எனக் கூறும் இவர்கள் ராட்சியத்தின் வருகையானது ஆசீர்வாதத்தை மட்டுமல்ல நியாயத்தீர்ப்பையும் கொண்டு வருகின்றது அதேசமயம் கி.பி. 70 இல் எருசலேமின் மீது வந்த அழிவு, யூதஜனங்கள் மேசியாவை நிராகரித்தமைக்கான அவர்கள் மீது வந்த தேவதண்டனையாக இருப்பதனால் இச்சம்பவம் மனுஷகுமாரன் வல்லமையோடு தேவராட்சியத்தில் வந்த ஒரு சம்பவமாகவே உள்ளது. (5) என விளக்குகின்றனர். மத்தேயு 24ம் அதிகாரத்தில் எருசலேம் அழிவும் உலக முடிவிலேற்படும் அழிவும் ஒன்றாகச் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது போலவே மத்தேயு 16:27-28 லும் இரண்டும் ஒரே நேரத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளன. (6) என்றும் இக்கருத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

இயேசு கிறிஸ்து கி.பி. 70ல் எருசலேம் நகருக்கு ஏற்பட்ட அழிவையே தான் ராட்சியத்தில் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று இன்று பல தேவ ஆராச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும்  இயேசுகிறிஸ்து ராட்சியத்தில் வருவதானது எவ்வாறு இச்சம்பவத்தைக் குறிக்கின்றது என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் திருப்திகரமானதாக இல்லை. உண்மையில், “எருசலேம் நகரின் அழிவை மனுஷகுமாரன் தம்முடைய ராட்சியத்தில் வருவது எனும் சொற்பிரயோகம் சரியான விதத்தில் விளக்குவதாயில்லை. அத்தோடு கி.பி. 70ல் இயேசு தன் இராட்சியத்தில் வந்ததிற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. (7) மேலும், இயேசு கிறிஸ்துவின் கூற்றில் “இங்கே நிற்பவர்களில் சிலர்“ என்னும் சொற்பிரயோகம் அவர் விசுவாசிகளுக்காக வருவதைப் பற்றிய விவரணமாகவே உள்ளது. எனவே இதை அவவிசுவாசிகளை நியாயந்தீரக்க வருவது பற்றிய முன்னறிவிப்பாக கருத முடியாதுள்ளது. (8)

இயேசு கிறிஸ்து இக்கூற்று லூக்காவிலும் மாற்குவிலும் சற்று வித்தியாசமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன்  என மத்தேயுவில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் லூக்காவில் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும்முன்’ லூக்காவில் “தேவனுடைய ராஜ்யத்தை காணும்முன் என்றும் (லூக். 9.27) மாற்குவில் தேவனுடைய ராஜ்யம் பலத்துடன் வருவதைக் காணும்முன் என்றும் (மாற். 9.1) குறிப்பிடப்பட்டுள்ளது. (9) எனினும் தேவனுடைய ராஜ்யம் வருவதும் மனுஷகுமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருவதும் ஒரே விடயத்தையே குறிக்கின்றன. (10) தேவனுடைய ராட்சியமே மத்தேயுவின் சுவிஷேசத்தில் மனுஷகுமாரனின் ராட்சியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசு இரண்டு சொற்பிரயோகங்களையும் இரு வேறுபட்ட இராட்சியங்களாக குறிப்பிடவில்லை. மனுஷகுமாரனாகிய இயேசுவே தேவனுடைய இராட்சியத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார்(11) இயேசுவினுடைய பிரசங்கங்களில் தேவனுடைய ராட்சியம் (மத்தேயுவில் பரலோக ராட்சியம்) முக்கியமானதும் அடிப்படையானதுமான செய்தியாய் இருந்தது. (மாற். 1:14, லூக். 4:43, 8:1, அப். 1:3) எனினும் தேவனுடைய ராட்சியம் பூகோளரீதியாக ஒரு இடத்தில் இருக்கும் ராட்சியம் அல்ல. மாறாக இது தேவனுடைய ஆளுகையை குறிக்கின்றது.(12) ராட்சியம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “பசிலெயா“ (basileia) எனும் கிரேக்கப் பதம், ஆளுகை, ஆட்சி, ராஜரீகம் எனும் அர்த்தங்களையே கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டிலும், இதன் எபிரேய இணைச் சொல்லான “மல்குத்“ (malkuth) இவ்வர்த்தத்தையே தருகிறது. எனவே தேவனுடைய ராட்சியம் என்பது இயேசு இவ்வுலகில் ஆரம்பிக்க வந்த தேவனுடைய ஆளுகையையே குறிக்கிறது. இயேசு தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்தபோது தேவனுடைய ராட்சியம் சமீபித்திருக்கிறது என்றும் (மாற். 1.14-15) உங்களிடத்தில் வந்திருக்கிறது என்றும் (லூக். 11.20) குறிப்பிட்டார். இயேசுவின் வருகையோடு தேவனுடைய ராட்சியம் இவ்வுலகிற்கு வந்துவிட்டபோதிலும் (13) “அவருடைய ஊழிய காலத்தில் இவ்வரையறைக்கு உட்பட்டதாகவே இருந்தது. இதனால் ராட்சியம் வல்லமையோடு வரவிருப்பதைப் பற்றி முன்னறிவித்ததோடு அதைக் காணுமுன் தன் சீடர்களில் சிலர் மரிக்க மாட்டார்கள் என்றும் முன்னறிவித்துள்ளார். (14)

தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வருவது எதைக் குறிக்கிறது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இயேசுவின் உயிர்த்தெழுதலிலேயே இது நடைபெற்றதாக கருதுகின்றன. “இயேசுவின் மரணம்வரை ராட்சியத்திற்கு இருந்தவரையறை அவரது உயிர்த்தெழுதலில் நீக்கப்பட்டு அது வல்லமையோடு வெளிப்பட்டது.(15) என்பதே இவர்களது விளக்கமாகும். இதற்கு ஆதாரமாக ரோமர் 1:3-4 சுட்டிக் காட்டப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவர் தேவனுடைய குமாரன் என்பதை பலமாய் ரூபித்துள்ளதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனால், “உயிர்தெழுதல் தேவனுடைய ராட்சியத்தை வல்லமையாய் வெளிப்படுத்தியுள்ளது.(16) என்றும், ‘தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்ததை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலேயே காணக்கூடியதாக உள்ளது.(17) என்றும் கூறுகின்றனர் எனினும் சிலர் பெந்தகோஸ்தே நாளிலேயே தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்ததாக தர்க்கிக்கின்றனர். “.இயேசுவின் ஊழிய காலத்தை விட அந்நாளில் தேவ வல்லமை அதிகமாக வெளிப்பட்டதை அவதானிக்க கூடியதாக உள்ளது.(18) என்று இவர்கள் கருதுகின்றனர். அதேசமயம் பெந்தகோஸ்தே நாளின் பின்பே கிறிஸ்தவம் உலகெங்கும் பரவத் தொடங்கியமையால் “சபையிலே தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்தது“(19) என்பது வேறு சிலரது தரக்கமாக உள்ளது. ஒருசில வேத ஆராய்ச்சியாளர்கள் இவையனைத்தையும் ஒன்றாக்கி, தேவனுடைய இராட்சியம் குறிப்பிட்ட தனியொரு சம்பவத்தில் அல்ல மாறாக பல சம்பவங்களின் மூலமாக வந்தாக கருதுகின்றனர்.(20)

தேவனுடைய இராட்சியம் வல்லமையோடு வந்த சந்தர்ப்பங்களாக தேவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதல், பெந்தகோஸ்தே தின சம்பவங்கள், மற்றும் சபையின் வளர்ச்சி  போன்றவை இயேசுகிறிஸ்து குறிப்பிட்ட விதமாக அவருடைய சீடர்களில் சிலர் மட்டுமே கண்ட சம்பவங்களாக இல்லை. யூதாஸ் ஸ்கரியோத்தைத் தவிர இயேசுவின் சீடர்கள் அனைவரும் இவற்றை கண்டமையினால், இவற்றில் எந்த ஒரு சம்பவத்தையும் இயேசு குறிப்பிட்டிருக்க முடியாது. உண்மையில் லூக்கா எழுதின சுவிசேஷத்திலேயே இயேசுகிறிஸ்துவின் இக்கூற்றை விளங்கிக் கொள்வதற்கான குறிப்பு உள்ளது. லூக்கா இயேசுவின் கூற்றை அவரது மறுரூபமாகுதலோடு தொடர்புபடுத்தியுள்ளார். இயேசு இவ்வார்த்தைகளை சொல்லி ஏறக்குறைய எட்டு நாளான பின்பு அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபுவையும் கூட்டிக் கொண்டு தன்னுடைய மகிமையைக் காண்பித்தாக லூக்கா குறிப்பிட்டுள்ளார். (லூக். 9:27-29) இச்சம்பவத்திலேயே மனுஷகுமாரன் தன்னுடைய ராட்சியத்தில் வல்லமையோடு வந்ததை இயேசு குறிப்பிட்டுள்ள விதமாக அவர்களுடைய சீடர்களில் சிலர் அதாவது மூவர் மட்டுமே கண்டனர். மேலும் மூன்று சுவிஷேசங்களிலும் இயேசுவின் இக்கூற்றினைத் தொடர்ந்து அவர் மறுரூபமாகிய சம்பவமே சித்திரிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, மறுரூபமாதலின் அனுபவத்தைப் பற்றி பேதுரு பிற்காலங்களில் குறிப்பிடும்போது, அதை இயேசுவின் மகத்துவத்தையும் வல்லமையையும் வருகையையும் வெளிப்படுத்திய ஒரு சம்பவமாக வர்ணித்துள்ளார். (2 பேதுரு 1.16-18) “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மரணத்தை ருசிபார்ப்பதில்லை“ எனும் வார்த்தைகள் “ஒரு கிழமைக்குள்(21) நடைபெறப் போகும் சம்பவத்தைக் குறிப்பிட உபயோகிப்பது பொருத்தமாக இல்லை(22) என்பது மட்டுமே இக்கருத்திற்கு எதிராக சுட்டிக் காட்டப்படும் ஒரேயொரு காரணமாகும். எனினும், இயேசுவின் இக்கூற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களில் (23) இது ஒன்று மட்டுமே இயேசுவின் வார்த்தைகளுக்கான சரியான விபரணமாயுள்ளது. இயேசு மறுரூபமாகியது தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வருவதை அவரது மூன்று சீடர்களுக்கு முன்னடையாளமாக காண்பித்த சம்பவமாக இருப்பதனால், தன் சீடர்களில் சிலர் மட்டும் மரணத்தின் முன் காணும் சம்பவமாக இயேசு இதனையே குறிப்பிட்டிருக்க வேண்டும். 

Foot note and References 
(1) Craig A. Evens. Luke in International Biblical Commentary, Massachusetts: Hendrickson Publishers, 1993 p. 153, யோவான் 21:21-23லும் இதேவிதமான நிலையை நாம் அவதானிக்கலாம். 

(2) E. Schweizer, The Good News According to Luke, Atlant:John Knox, 1984, p. 158

(3) R.C.H. Lenski, The Interpretation of St. Mathew’s Gospel., Minneapolis: Augsburg Publishing House, 1964, p.158

(4) libd, 649

(5) Donald A Hagner, Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p. 487

(6) lbid 487

(7) Norman Geisler&Thomas Howe, When Critics Ask, Wheaton: Victor Books, 1992, p. 350

(8) lbid, p. 350

(9) இயேசுகிறிஸ்துவின் கூற்று இவ்விதம் வித்தியாசமான முறைகளில் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.  ஒன்று இயேசு ஒரே விடயத்தைப் பற்றி பல இடங்களில் கூறியமையால் அது வித்தியாசமான வார்த்தகளில செவிமடுத்தோருக்கு விளங்கக்கூடிய விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட கூற்றைப் பொறுத்தவரை இவ்விளக்கம் பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் மூன்று சுவிஷேசப் புத்தகங்களிலும் இது சொல்லப்பட்ட சம்பவம் ஒன்றாகவே உள்ளது. இதனால் இயேசு இவ்விடயத்தைப் பற்றி பல இடங்களில் அறிவித்துள்ளார் எனக் கூறமுடியாது. இரண்டாவதாக இயேசு அரமிக் மொழியிலேயே பேசியமையால் அவர் அம்மொழியில் கூறியவற்றை சுவிசேஷ ஆசிரியர்கள் எழுதும்போது கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தே எழுதினர். இத்தகைய மொழிபெயர்ப்பே ஒரு கூற்று வித்தியாசமான முறைகளில் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணமாகும். 

(10) D.A. Carson, Matthew in The Expositor’s Bible Commentary, Grand Rapids:Zondervan Publishing House, 1984, p.380

(11) F.F. Bruce, The Hard Saying of Jesus, London: Hodder & Stoughton, 1995, p. 154

(12) இதனால்தான், இவ்விராட்சியம் ஏற்கனவே இருந்த ஒரு இராட்சியமாகவும் (மத். 8:11, லூக். 13:28) தன் காலத்தில் இருக்கும் இராட்சியமாகவும் (லூக். 17:20-21, மத். 12:28) குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அது இனிமேல் வரவிருக்கும் இராட்சியமாகவும் இயேசுவால் விளக்கப்பட்டுள்ளது. (மத். 6:10)

(13) தேவனுடைய ராட்சியம் என்பது அவருடைய ஆளுகையாக இருப்பதோடு இயேசு அறிவிக்கும் சுவிஷேசத்தை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்வதன் மூலம் மக்கள் அவ்ராட்சியத்தின் குடிமக்களாகின்றனர். 

(14) F.F. Bruce, The Hard Sayings of Jesus p. 153

(15) lbid. P. 154

(16) Robert H. Mounce, Matthew in New International Biblical Commentary, Massachusetts: Hendrickson Publishers, 1993, p. 165

(17) Craig A. Evans, Luke in New International Biblical commentary, p. 149

(18) F.F. Bruce, The Hard Sayings of Jesus p. 154

(19) H.B. Green, Matthew in New Clarendon Bible Commentary, New York: Oxford press, 1975, p. 154

(20) D.A. Carson, Mathew in Expositor’s Bible Commentary. P. 382

(21) லூக்கா “ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப் பின்பு“ என்று குறிப்பிட்டுள்ள போதிலும் (லூக். 9:28) மாற்கு சரியாக ஆறு நாட்களின் பின் என்பதை அறியத் தந்திருக்கிறார். (மாற். 9:2)

(22) Donald A Hagner: Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p486

(23) இயேசு மறுரூபமாதல் உயிர்த்தெழுதல், பரமேறுதல், பெந்தகோஸ்தே, கிறிஸ்தவத்தின் பரம்பல், சுவிஷேசத்தின் உள்ளான வளர்ச்சி, எருசலேம் அழிவு, இரண்டாம் வருகை என்பன இவ்வசனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களாகும். (Alfred Plummer, A Critical and Exegetical Commentary on the Gospel According to Luke, Edinburgh 1928pp. 249-250)

(இவ்வாக்கமான சத்தியவசனம் 2000 சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டதாகும்)
ஆசிரியர்  Dr. M.S. வசந்தகுமார் )