- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 13 August 2011

அசாதரண ஜெபவீரர்


“புகழ்பெற்ற மனிதர்“ என்ற பெயரை ஈட்டுவதற்கு ஒருவர் செல்வந்தவராகவோ அல்லது அநேகரால் அறியப்பட்டவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வுண்மையை வேதாகமம் சிலரது வாழ்க்கை மூலமாக விளக்குகிறது. இம்மனிதர்களைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்வ வல்லவரின் கரத்தில் தங்களை அர்ப்பணித்தவுடன் இவர்களது வாழ்வில் கிடைத்த உயர்வுகளும் சிறப்புகளும் இவர்களை வியத்தகு சாட்சிகளாக மாற்றிவிட்டன. அத்தகைய மனிதர்களில் ஒருவர்தான் யாபேஸ்

சத்திய வேதத்தின் இரு நாளாகம பத்தகங்களும் இஸ்ரவேலரின் வரலாற்றை விளக்கும் காலக் குறிப்பேடுகளாகத் திகழ்கின்றன எனக் கூறுவது மிகையாகாது. 1 நாளா. 4:9 வரையுள்ள வம்ச அட்டவணையில் சுமார் 425 மனிதர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளும், சிறப்புக்களும் அதி்ல குறிப்பிடப்படவில்லை. இப்பட்டியலின் நடுவே 9,10 ம் வசனஙக்ளில் யாபேஸ் என்பவரது ஜெபம் காணப்படுகின்றது.

யாபேஸ் செல்வந்தர் அல்லர்; பெரும் பதவியை வகிகத்தவரும் அல்லர். ஆயினும் இவர் செய்த இச்சிறு ஜெபம் இவரை புகழ் ஏணியின் உச்சிக்குக் கொ்ண்டு சென்றது எனலாம். “யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய் : நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி : “தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்க என்னைத் துக்கப்படுத்தாத படிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்“ என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.“ என்று தேவனோடும் மனிதனோடு்ம் போராடி மேற்கொண்ட கோத்திரப் பிதா யாக்கோபு வேண்டியதுபோலவே யாபேஸ் ஜெபத்தில் ஆசீர்வாதத்திற்காகப் போராடினார். “அவர் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார்“

யாபேஸ் தன் சகோதரரைப் பாரக்கிலும் கனம் பெற்றவராயிருந்தார். இவ்வதிகாரத்தின் வம்சவரலாற்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர் எவரும் தாழ்ந்தவர்களோ இழிவானவர்களோ இழிந்தவர்களோ அல்லர். அவர்களைப் பற்றிய மோசமான குறிப்புகளும் இங்கு தரப்படவில்லை. ஆயினும் தம்மைக் கனபப்டுத்துகிறவர்களை உயர்த்தும் தேவன், யாபேஸின் ஜெபத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டு, அவரைக் கனப்படுத்துகிறவர்களை உயர்த்தும் தேவன், யாபேஸின் ஜெபத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டு அவரைக் கனப்படுத்தியிருக்கின்றார். தேவன் உள்ளீடாக அருளியதை யாபேஸ் தனது ஜெபத்தில் வெளியீடாக தந்தார். நம் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதவசனம் கூறுகிறது. இக்கருத்தினை மாபெரும் ஊழியக்காரரான ஹட்சன் டெய்லர் ஒரு வாலிபர் கூடுகையில் செயல் விளக்கமாக காட்டினார். அவர் உரையாற்றுமிடத்தில் ஒரு மேஜையில் நீர் நிரம்பியிருந்த பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தனது சொற்பொழிவின் நடுவே அவர் அம்மேஜையை அடிக்கடி தட்டினார் அந்த அதிர்வில் பாத்திரத்திலிருந்த நீர் வெளியே சிந்தியது. “பாத்திரத்தின் உள்ளே என்ன இருக்குமோ அதுவே வெளியே வரும்“ என்பதை அழகாக வாலிபர்களுக்கு புரிய வைத்தார். 

யாபேஸின் ஜெபத்திலிருந்து அவரது இருதயத்தின் நினைவுகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதையே இயேசுக்கிறிஸ்துவும் “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.“ லூக். 6:45  இல் விள்க்கியுள்ளார். யாபேஸ் தன் சகோதரனைப் பார்க்கிலும் கனம் பெற்றவராய் இருந்தார். சிறந்த குணசீலர். ஆயினும் அவர் துக்கமுடையவராய்க் காணப்படுகிறார். யாபேஸ் என்ற சொல்லுக்கு துக்கம் என்று பொருள். அவருடைய தாயார், “நான் துக்கத்தோடே இவனைப் பெற்றேன்“ என்று கூறினதாக நாம் வாசிக்கிறோம். ஒருவேளை பிரசவத்தின்போது அதிக வேதனையையும் வலியையும் அவர் அனுபவித்திருக்கக் கூடும். ஆயினும் துக்கத்தோடே அவர் பெற்ற அம்மகன் ஜெபத்தினால் விலையேறப்பெற்ற மகனாக மாறினான். 

வம்சவரலாறு அட்டவணையில் இடம்பெற்ற நுற்றுக்கணக்கானவர்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளவர் இவரே “ஸ்த்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருககும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்“ (யோவான் 16:21) என்று இயேசு கூறினார். இந்தப் பிரசவவேதனையை அனுபவிக்கின்றவள் தனது சிசுவைக் கையில் ஏந்தியவுடன்  அவளது துக்கம் சந்தோஷமாக மாறிவிடுகிறது. ஆர்வத்துடன் காத்திருக்கும் உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். நமது வாழ்விலும் பல நிகழ்வுகள் துக்கத்தில் ஆரம்பமானாலும் சந்தோஷத்தில் முடிவுறுவதை அறிவோம். யாபேசின் வாழ்க்கை துக்கத்தில் ஆரம்பமானாலும் அது வெகுவிரைவில் மகிழ்ச்சியாக மாறினது. நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவும் ஸ்திரியின் வித்தாக இவ்வுலகில் வந்து பாடனுபவித்து நம்மை மீட்கும் இரட்சகராகி மகிமையடைந்தாரே.

பழைய ஏற்பாட்டு நூலில் நீதிமானாகிய நோவா முதல் அநேக பக்தர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்டதாக நாம் வாசிக்கிறோம். இவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் தேவனோடு நெருங்கி உரையாடும் உறவை பெற்றிருந்தார்கள்.இவ்வரிசையில் யாபேசும் ஒருவர். இவர் சிறந்த பண்பாளராகத் திகழ்ந்தாலும் இவரது ஜெபமே அனைத்திலும் மகுடமாக அமைந்துள்ளது. இவரது ஜெபம் கேட்கப்படுவதற்கு இவரது குணமும் முக்கியக் காரணமாகும். 

பிரியமானவர்களே உங்களது ஜெபமானது கேட்கப்படவேண்டுமானால் உங்களுடைய வாழ்வு செம்மையாயிருத்தல் அவசியமாகும். “பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லை“ என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே நம்முடைய தனிப்பட்ட வாழ்வு ஒழுங்க்கமானதாகவும் தேவனிடம் நெருங்கி உறவாடும் நிலையையும் கொண்டிருத்தல் வேண்டும். யாபேசின் ஜெபம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. என்னை ஆசீர்வதியும்
ஆசீர்வாதத்தை விரும்பி யாபேஸ் இந்த ஜெபத்தை ஏறெடுத்துள்ளார். தேவன் உங்களை ஆசீர்வதிக்கக்கேட்டு நீங்கள் ஜெபித்ததுண்டா? இவ்வாறு கேட்பது சரியா? தேவன் வாக்குப்பண்ணாததை அவர் கேட்கவில்லை. தேவன் வாக்களித்த தேனும் பாலும் ஓடு் தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்துவிட்டனர். ஆனால் அங்கே வசித்துவந்த கானானியரைத் துரத்தி விட அவர்களால் இயலவில்லை. ஆகவே யாபேஸ் தேவன் ஆணையிட்ட அக்காரியத்தை நிறைவேற்ற வஞ்சித்தார். மேலும், தேவனுடைய ஆசீர்வாதம் தனக்கு இல்லையெனில் தானும் வெற்றிபெற இயலாது என்பதை யாபேஸ் அறிந்திருந்தார். எனவேதான். “தேவனே நீர் கட்டளையிட்ட பணியை நான் நிறைவேற்ற என்னை ஆசீர்வதியும்“ என ஜெபித்தார் நாமும் கூட நமது முயற்சியில் வெற்றியடைய வேண்டுமெனில் நமககு தேவ ஆசீர்வாதம் தேவை என்பதை ஒத்துக் கொள்ள அதற்காக ஜெபிக்க வேண்டும். 

2. என் எல்லையை பெரிதாக்கும். 
அநேகர் “இது செழிப்பினை விரும்புவதாயும் சுயநலத்தை வெளிப்படுத்துவதாயும் உள்ளது“ ஆகவே இவ்வாறு நாம் ஜெபிப்பது தவறு எனக் கூறுகின்றனர். ஆனால் இவ்வாக்கியத்தை நாம் ஆராய்வோமானால் இது வெளிப்படுத்தும் கருத்து வேறு என்பதை நாமறிந்து கொள்ளலாம். “உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,“ (உபா 19:9) ஆனால் இதனை இஸ்ரவேலில் தனது இனத்தார்களோ, சகோதரர்களோ நிறைவேற்ற இயலாததால்தான் யாபேஸ் முயற்சிசெய்ய எண்ணினார். அதிக நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் மண்ணாசையில் இதனை அவர் கேட்கவில்லை என்பது தெளிவு.

3. தேவரீர் என்னோடிரும்
தேவனே எனக்கு அதிக செல்வத்தையும் தாரும் என்று எவரேனும் ஜெபித்தால் அவரது குணத்தை நாம் சந்தேகிக்கிறோம். ஆனால் வசனம் 9 இல், யாபேஸின் குணநலத்தையும் வசனம் 10ல் அவரது நோக்கத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம். மேலும், தேவரீர் என்னோடு இரும் என்று யாபேஸ் விண்ணப்பிக்கிறார். முதலாவது தேவனுடைய ஆசீர்வாதத்தையும் இரண்டாவது செழிப்பையும் மூன்றாவது தேவனுடைய பிரசன்னத்தையும் நாடுகிறார். இன்று அநேக விசுவாசிகள் தேவனுடைய ஆசீர்வாதத்தை மட்டும் தேடுகிறார்களேயன்றி அவரது பிரசன்னத்தையோ விரும்புவதில்லை. ஆனால் யாபேஸோ “தேவனே, இஸ்ரவேல் மக்களுக்கு நீர் கொடுத்த ஆணையை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். இது என்னால் கூடாத காரியம். ஆகவே, தேவரீர் என்னோடு கூட இருந்து என் கரத்தைப் பிடித்து வழிநடத்தும்.“ என்று கெஞ்சுகிறார்

தேவன் எம்மோடிருக்கிறார் என்ற வேதவசனம் நமக்கு ஆறுதலை அளிக்கிறது. “போ“ மற்றும் செய் என்று தேவன் நமக்கு கட்டளையிட்டுவிட்டு அவர் பரலோகத்தில் ஓய்வு எடுப்பதில்லை. “இதோ, உலகத்தின் முடிவுப்பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.“ என்று அவர் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார். தேவன் நமக்கு முன்னே செல்கிறார். (ஏசா. 48:17) நமக்கு பின்னே இருக்கிறார் (ஏசா 30:1) அவருடைய நித்திய புயங்கள் நமக்குக் கீழே ஆதாரமாய் உள்ளது. (உபா. 33:27) தேவனுடைய ஆவி எனக்குள்ளே இருக்கிறது. (1 கொரி. 3:16) மேலே, கீழே, வலது, இடது, முன்னே, பின்னே எங்கு சென்றாலும் தேவனை நம்மோடு அழைத்துச் செல்கிறோம். அவர் விரும்பாத எந்த இடத்திற்கும் நாம் செல்லக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

அநேகர் நாம் விரும்பிக் கேட்கும் காரியத்தை தேவன் தர மறுத்துவிடுவார் என அஞ்சி சிலர் அவற்றை கேட்பது கிடையாது. நாம் தேவனிடத்தில் கேட்பதனால் அவரை நிர்ப்பந்திப்பது இல்லை. “தேவனே என்னைக் காப்பாற்றும்“ என்பதற்கும் “தேவனே, நான் இன்று செல்கிற பிரயாணத்தில் என்னைக் காப்பாற்றும்“ என்பதற்கும் வித்தியாசம் உண்டு். இரண்டாவது ஜெபம் குறிப்பிட்டுக் கேட்கும் ஜெபமாகும். அதேபோல் “எனக்கு வாழ்க்கைத் துணையைத் தாரும்“ என ஜெபிப்பது வேறு. எனக்கு இன்னாரைத் தாரும் என ஜெபிப்பது வேறு. நம்முடைய தேவைகளை நமது பரலோகப் பிதாவினிடத்தில் கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர் அவ்விதமான பதிலை தரவேண்டும் என அவரை நிர்ப்பந்திக்கக் கூடாது. 

பவுல் உரோமாப்புரியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதும் நிருபத்தில் ஜெபத்தை குறிப்பிடுகிறார். “எவ்விததிலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.“ தனது சூழ்நிலையில் தேவன் கிரியை செய்தற்கு பவுல் தன்னை அர்ப்பணிக்கிறார். இங்கு அவரது ஜெபம் தேவனை நிர்ப்பந்திக்காத முறையிலேயே உள்ளது. 

4. தீங்கிற்கு என்னை விலக்கிக் காத்துக் கொள்ளும். 
இங்கே, யாபேஸ் சொல்லும் தீங்கு சரீரத்தின் தீங்கைக் குறிக்கிறது. தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆணையிட்ட தேசத்தைதச் சுதந்தரிக்கும் முயற்சியில் அநேக தீங்குகள் நேரிடலாம். அத் தீங்கிலிருந்து தேவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும். தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பான வேலி போடப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். 

இஸ்ரவேல் தேசத்து மேய்ப்பர்கள் தங்கள் மந்தையைப் பாதுகாக்கும் முறை சற்று வித்தியாசமானது. அவர்கள் மந்தைகளைக் காவல் காப்பற்கு நாய்களை வைத்துக் கொள்வது கிடையாது. ஆனால் இரவில் அனைத்து ஆடுகளையும் அவர்கள் பட்டிக்குள் அடைத்துவிடுவார்கள். அதற்குள்ளேயே சென்றுவர ஒரேயொரு வாசல்தான் உண்டு. மேய்ப்பன் அந்த வாசலில் படுத்துக் கொள்வான். அவன் அறியாமலோ அவனைத் தாண்டியோ எந்த ஒரு ஆடு் வெளியே செல்ல முடியாது. அவ்வாறே, வேறு எந்த மிருகமும் அவனைக் கடந்து சென்று அடுகளுக்குத் தீங்கும் செய்ய முடியாது. இவ்விதமான பாதுகாப்பையே யாபேஸ் தேவனிடம் வேண்டுகிறார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தமது சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் இப்பாதுகாப்பை “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதபடிக்கு தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.“ என்று கேட்கக் கூறுகிறார். 

யாபேஸின் வரலாற்றிலிருந்து அவரது சகோதரர்களிடமில்லாத பல நற்பண்புகளை அவர் பெற்றிருப்பதாக நாம் அறிந்து கொள்கிறோம். யாபேஸ் தேவனை நன்கு அறிந்திருந்தார். நீங்களும் நானும் தேவனை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். தேவாதி தேவனை அறிந்து கொள்ள நாம் சத்திய வேதத்தை நன்கு வாசித்து தியானித்து ஆராய வேண்டும். அப்பொழுது நாமும்கூட தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற நம்மை அர்பணித்து ஜெபிக்கமுடியும். நாம் வேண்டிக் கொள்வதையும் தேவன் நமக்கு அருளுவார். 


(ஆதாரம் :  சத்தியவசனம் April-June 2009, கட்டுரையாசிரியர் - டாக்டர் உட்ரோ குரோல்) 



தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

1 comment: