- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 30 October 2010

காயீனின் காணிக்கை (ஆதி 4:2-5)

நூல் : ஆதியாகமம்

ஆசிரியர் : சகோ. எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் –இலங்கை)


வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி



(காயீனின் காணிக்கை தேவனால் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கு அநேக விளக்கங்கள் தரப்பட்டுகின்றன. இக்கட்டுரை ஆசிரியர் கிறிஸ்தவ உலகில் நிலவிவரும் பல வித்தியாசமான கருத்துக்களையெல்லாம் வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து எழுதியுள்ளார். இவற்றுள் எது சரியான விளக்கமாக இருக்கும்?....)


ஆதியாகமப் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களில் அதிக சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்று முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் என்போரது பிள்ளைகள் தேவனுக்கு செலுத்திய காணிக்கையோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஆதாம் ஏவாளின் பிள்ளைகளில் காயீன் ஆபேல் என்போர் கர்த்தருக்கு செலுத்திய காணிக்கைகளில் ஆபேலினுடைய காணிக்கை மட்டும் தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காயீனின் காணிக்கை அவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (ஆதி 4:2-5) எனினும் காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கான காரணம் பற்றி எதுவும் ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படாதமையால் அதற்கான காரணத்தை கண்டறிய முற்பட்டவர்கள் தமது ஊகங்களினால் பலவிதமான விளக்கங்களை உருவாக்கியுள்ளனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத வரலாற்றாசிரியரான ஜோசீப்பாஸ் என்பார் “மானிட முயற்சியினால் வளர்க்கப்படுவதை விட தானாக வளருவதே தேவனுக்கு உகந்தவைகள்” (01) என்னும் கருத்தினடிப்படையில் “காயீனின் காணிக்கை மானிட முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலத்தின் கனிகள் என்பதால் அவை தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை(01) எனக் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தைய யூத தத்துவஞானி பைலோ என்பார் காயீனின் காணிக்கை “முதற்பலன்“ அல்ல என்பதால் (ஆதி 4:2) ஆபேல் செலுத்திய மந்தையின் “முதற்பலன்“ (ஆதி 4:4 இல் மந்தையின் தலையீற்று என்று உள்ளது) காயீனுடைய காணிக்கையை விட மேலானதாய் உள்ளது.” (02) என விளக்கியுள்ளார். சில வேதவியாக்கியானிகள் மனிதன் ஓரிடத்தில் தங்கியிராமல் பூமியெங்கும் பரந்து வாழ வேண்டும் என்பதே தேவனின் நோக்கம் என்றும் பயிர்செய்கையானது மனிதனை பூகோள ரீதியாக குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வைத்திருப்பதனால் தேவன் காயீனின் பயிர்செய்கையை அங்கீகரிக்கவில்லை(03) என கூறுகின்றனர். வேறுசிலர் “ஆபேலின் காணிக்கை பலியாக செலுத்தப்பட்டபோது அதன் மணம் தேவனுக்கு சுகந்த வாசனையாய் இருந்தமையால் அவனது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது”(04) என விளக்குகிறனர். “காயீனின் காணிக்கை தேவனால் சபிக்கப்பட்ட நிலத்திலிருந்து பெறப்பட்டமையால் இருந்தமையினாலேயே அவை தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை”(05) என கருதுபவர்களும் நம் மத்தியில் இருக்கின்றனர். எனினும் பெரும்பாலான காயீனின் காணிக்கை இரத்தபலியாய் இராதபடியினாலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கருதுகின்றனர்.

சிருஷ்டிப்பு இடைவெளி

நூற்தலைப்பு ஆதியாகமம்

ஆசிரியர் – எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் – இலங்கை)


வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி



ஆதியாகம புத்தகத்தின் படைப்பு குறித்து பல விதமான சர்ச்சைகள் கிறிஸ்தவ உலகில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சிருஷ்டிப்பு இடைவெளி பற்றியது. இக்கட்டுரை பிரபலமாக இருக்கும் கருத்துக்களை (நேர் மற்றும் எதிர் கருத்துக்களை) வேதாகம சத்தியத்தில் ஆராய்கின்றது. 



சிருஷ்டிப்பு இடைவெளி



பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்கள் பற்றிய இன்றைய கிறிஸ்தவ உலகில் இருக்கும் ஒரு சர்ச்சை இவ்விரு வசனங்களுக்குமிடையே நீண்டகால இடைவெளி இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றியதாகும். சிருஷ்டிப்பின் கால இடைவெளியாகக் கருதப்படும் இவ்விரு வசனங்களுக்கிடையிலான கால இடைவெளி பற்றிய கருத்து, ஸ்கொட்லாந்துநாட்டைச் சேர்ந்த தோமஸ் சாள்மர் என்பவரினால் 1814 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ’இக்கருத்து இறையியல் காரணங்களுக்காக அல்ல. மாறாக அக்காலத்தைய புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புக்களின் நிமித்தம் உருவாக்கப்பட்ட ஒரு விளக்கமாகும்” (01) நாம் வாழும் பூமி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது எனும் அக்காலத்தைய விஞ்ஞான கண்டுபிடிப்புடன் ஒத்துப்போக வைப்பதற்காக, அதாவது பூமி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழையானதுயானது என்றே வேதாகமும் கூறுகின்றது என்பதைக் காண்பிப்பதற்காக தோமஸ் சாள்மர் ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களுக்குமிடையே நீண்டகால இடைவெளி இருக்கின்றது என்னும் புதிய விளக்கத்தை உருவாக்கி, அக்காலத்திலேயே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்ற மாற்றங்கள் பூமியில் ஏற்பட்டன என கூறினார். இவரது கருத்து 1876 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பெம்பர் என்பார் எழுதிய ”புவியின் ஆரம்பகால யுகங்கள்” என்னும் தலைப்பிலான ஆங்கில நூலில் விரிவுபடுத்தப்பட்டன. அதன் பின்னர் 1917 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த ஸ்கோஃபீல்ட் வேதாகமக் குறிப்புகளில் இக்கருத்து சேர்க்கப்பட்டமையால், இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான ஒரு கருத்தாக மாறிவிட்டது.