- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 22 June 2014

யோவான் 14:2 இன் விளக்கம் என்ன?

யோவான் 14:2 இன் விளக்கம் என்ன? (எஸ். ஜோர்ஜ் விக்டர், ஜம்முகாஷ்மீர், இந்தியா)

'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்'. என்று இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் தன் சீடர்களி்டம் கூறினார். பரலோகத்தையே இயேசுகிறிஸ்து பிதாவின் வீடு என்று குறிப்பிட்டுள்ளார். வாசஸ்தலங்கள் என்பதற்கு மூலமொழியில உபயோகிக்ப்பட்டுள்ள கிரேக்கப் பதத்தின் அர்த்தம் நிரந்தரமான இருப்பிடங்கள் என்பதாகும். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும்  தேவனோடு இருக்கக்கூடிய அளவு பரலோகத்தில் இடமிருப்பதையே இயேசுகிறிஸ்து நமக்கு அறியத் தருகிறார். எனினும், கிறிஸ்தவ்களுக்கான இருப்பிடத்தை பற்றி ஆயத்தம் செய்யும் செயல் எத்தகையது என்பது பற்றி இயேசுகிறிஸ்து எதுவும் கூறவில்லை. இயேசுகிறிஸ்து தனது சிலுவை மரணத்திற்குச் சற்று முன்பே இவ்வாறு கூறியமையால், அவரது மரணம் உயிர்தெழுதல் என்பன மீட்கப்பட்ட ஜனங்களுக்குப் பரலோகத்தில் இருப்பிடத்தை ஆயத்தம் செய்யும் செயலாகக் கருதப்படுகின்றது. இயேசுகிறிஸ்து சிலுவையில் செய்த செயலே ஒருவன் பரலோகத்திற்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியமையால் பரலோகத்தில் நமக்கு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணும் செயலாக அவருடைய மரணம் உயிர்தெழுதல் என்பவைகள் உள்ளன.

Sunday 15 June 2014

வேதமும் விளக்கமும் -பெரிய வெள்ளி மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. அது ஏன்?

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25ம் திகதி தவறாமல் வருகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து மரித்த தினமான பெரிய வெள்ளி மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. அது ஏன்? ஏன் இந்த மாற்றம். பிறந்த நாளும் இறந்தநாளும் ஒவ்வொரு நாளும் ஒரே நாளில் தானே வர வேண்டும்? (W.அல்பிரட் கோதாவாரி கிழக்கு, இந்தியா)

இயேசுவின் பிறப்பை டிசம்பர் மாதம் 25ம் திகதி நினைவு கூறும் கிறிஸ்தவ சபை ஒவ்வொரு வருடமும் அவது மரணம் வெள்ளிக்கிழமையும், உயிர்தெழுதல் ஞாயிற்றுக்கிழமையும் வரும்விதமாக நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, அச்சம்பவங்களை நினைவு கூர்வதற்கான நாட்களை தெரிவு செய்கின்றது. இயேசுவின் மரண தினம் ஒவ்வொரு வருடமும் வெள்ளிக்கிழமை வருகின்றமையே திகதி வித்தியாசப்படுவதற்கான காரணமாகும்.

Sunday 8 June 2014

வேதமும் விளக்கமும் சங்கீதம் 19:6 - உண்மையில் சூரியன் சுற்றுகின்றதா?

வேதாகமத்தில் சில வசனங்களை வாசிக்கும்போது சூரியன் சுற்றுவதாக வேதாகமம் கூறுவதாக தெரிகின்றது. உண்மையில் சூரியன் சுற்றுகின்றதா? (ஆர். ஸாம் ஜெயபால், சோத்துப்பாறை, இந்தியா)





சங்கீதம் 19:6 இல் சூரியன் வானங்களின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகின்றது. அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. புவிச் சுற்றுகையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சங்கீதம் 19:6 இல் சூரியன் சுற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என வாதிட்டனர். ஆனால் அண்மைக்காலத்தில் சங்கீதக்காரனின் கூற்று புதுவடிவம் பெற்றது. சூரியனானது கோள்மண்டலத்துடன் சேர்ந்து அண்டவெளியில் சுற்றுகின்றது என்று சமீபகால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம்முடைய சூரியக்குடும்பமானது மணிக்கு 72,000 மைல்கள் வேகத்தில் செல்கின்றது என்றும் இதன் சுற்றுவட்டம் பூர்த்தியடைய இரண்டு மில்லியன் நூற்றாண்டுகள் தேவை என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. 

Thursday 5 June 2014

வேதமும் விளக்கமும்நெகேமியா 9:3 - 1 ஜாமம் தற்போதைய மணியில் கிட்டத்தட்ட எவ்வளவு மணித்தியாலம்?

நெகேமியா 9:3 இல் கூறப்பட்டுள்ள 1 ஜாமம் தற்போதைய மணியில் கிட்டத்தட்ட எவ்வளவு மணித்தியாலம்? (ஜோசப், சுவிட்சர்லாந்து)

அக்காலத்தைய நேரக்கணிப்பீட்டில் ஒரு ஜாமம் 3 மணித்தியாலங்களைக் கொண்டிருந்தது. அக்கால மக்கள் பகலை 4 ஜாமங்களாகவும் இரவை 4 ஜாமங்களாகவும் பிரித்திருந்தனர். எனவே, ஒரு ஜாமம் என்பது ஒரு பகலின் அல்லது இரவின் நான்கின் ஒரு பகுதியாகும். இதனால் புதிய வேதாகம மொழி பெயர்ப்புகளில் இவ்வசனத்தில் ஜாமம் என்பது, பகலில் நான்கில் ஒரு பங்கு நேரமளவும் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நெகேமியா 9:3 (பழைய மொழிபெயர்ப்பு)
3. அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

நெகேமியா 9:3 (திருவிவிலியம்)
3 ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர். 

Sunday 1 June 2014

வேதமும் விளக்கமும் பிரசங்கி 1:7 இற்கான விளக்கம் என்ன?

பிரசங்கி 1:7 இற்கான விளக்கம் என்ன? எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். என்று சொல்லப்பட்டுள்ளது. (ஜெரால்ட் ஜோர்ஜ், ஊட்டி, இந்தியா)

பிரசங்கி முதல் அதிகாரத்தில் 4 முதல் 1 வரையிலான வசனங்களில் மனிதன் வாழ்ந்திடும் உலகம் மாயையானது என்பதற்கு மூன்று காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவது காரணம் 4 முதல் 7 வரையிலான வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனங்களில் உலகம் மாற்றமடையாமல் எப்போதும்போல, ஒரே விதமாக இயங்கிக் கொண்டிருப்பதனால் உலகம் மாயையானது என்பதை நிரூபிப்பதற்காக 4 உதாரண விடயங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மூன்றாவது விடயமே 7ம் வசனத்தில் உள்ளது. பிரசங்கி இவ்வசனத்தில் நீரின் சுற்றுவட்டத்தை அறியத் தருகின்றார். இது விஞ்ஞான ரீதியாக இன்று கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. பூமியிலுள்ள நீரே ஆவியாகி மேலே சென்று பின்னர் பூமியின் மீது மழையாக பொழிகிறது என்பதை நாம் அறிவோம். இதைத்தான் பிரசங்கி 1:7 இல், எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது. தாங்கள் உற்பத்தியான இடத்திற்கு நதிகள் மறுபடியும் திரும்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோபு 36:27 இலும் இதைப் பற்றி நாம் வாசிக்கலாம். “அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.” என அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நதிகள் கடலிலே தண்ணீரைக் கொட்டினாலும் கடல் ஒருநாளும் நிரம்பாது. கடல் நீர் ஆவியாகச் சென்று நதிகள் உற்பத்தியாகும் இடங்களில் மழையாக பொழிகிறது என்ப பிரசங்கி 1:7இன் விளக்கமாகும்.