- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 29 April 2011

ஏரியஸ் vs அத்தானாசியஸ் - திரித்துவ வரலாறு (3)

திரித்துவ வரலாறு முன்னைய பகுதிகளை வாசிக்க இங்கு அழுத்துங்கள்.

திரித்துவ வரலாறு பகுதி 1
திரித்துவ வரலாறு பகுதி 2

இனி பகுதி 3.........

இக்காலக்கட்டத்தில் ஒரிகன் உடைய கல்லூரியின் மாணவரினால் உருவாக்கப்பட்ட பதியதோர் நிசேயக் குழு தோன்றியது. உண்மையில் இவர்கள் தேவார்த்தையை சரியான விதத்தில் வியாக்கியானம் செய்யத் கற்றதற்கு அத்தனாசியசின் இற்கும் நிசேய விசுவாசப் பிரமாணத்திற்கும் (Nicene Creed) கடன்பட்டவர்கள். இவர்களுள் Basil the great, Gregory of Nyssa , Gregory of Nazianz  எனும் மூன்று Cappadocians முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் OUSIA என்பதற்கு சாரம் – Essence)  PRESOPON என்பதற்கும் (நபர் – Person) hypostasis எனும் பதத்தை உபயோகிப்பதால் ஏற்படும் தவறை / புரிந்து கொள்ளுதலை கண்டு கொண்டனர். இதனால் இப்பத்த்தின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டனர். தங்களுடைய இறையியலை அத்தினாசினைப் போல் தேவனுடைய தெய்வீக சாரத்திலிருந்து ஆரம்பிக்காமல் தேவனில் மூன்று நபர்கள்(Hypostasis) இருப்பதில் தொடங்கி இம்முன்றையும் தெய்வீக சாரத்தின் கீழ் கொண்டுவர எத்தனித்தனர். தேவத்துவத்தின் நபர்களுக்கிடையேயுள்ள உறவை மூன்று நபர்கள் இருப்பதற்கு இவர்கள் கொடுத்த முக்கியத்துவம் நிசேய உபதேசம் வலிமை பெறவும், கள்ளப்போதனைகளின் பிழைகள் புலப்படவும் காரணமாய் அமைந்தது மட்டுமல்ல வார்த்தையின் (Logos) ஆள்தத்துவமும் பேணப்பட்டது. அதே சமயத்தில் இவர்கள் வேதத்துவத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்தினர். 
இக்காலக்கட்டம் வரை தூயஆவியைப் பற்றிய கருத்துக்கள் இறையியல் வட்டங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குமாரனால் சிருஷ்டிக்க்ப்பட்ட முதல் வஸ்துவே (Being) பரிசுத்த ஆவி என ஏரியஸ் போதித்தார். ஒரிகனும் இதே கருத்துடையவராகவே இருந்தார். அத்தினாசிஸ் இவைகளை மறுத்து தூய ஆவியும் பிதாவினுடைய தன்மையுடையவர் என வலியுறுத்தினார். எனினும் நிசேய விசுவாசப் பிரமாணம் பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன் எனும் பிரமாணத்தை மட்டுமே சேர்த்துக் கொண்டது.  Cappadocians உம் அத்தனாசின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தூயஆவியின் Homoousios (Same Essence) (பிதாவினுடைய அதே தன்மையுடையவர்) வலியுறுத்தினார். . மேலைத்தேய Poitiers ஐச் சேர்ந்த Hilary தூய ஆவியானவர் தேவனுடைய ஆழங்களை ஆராய்கின்றபடியால் தெய்வீக தன்மைக்கு அந்நியராய் இருக்க முடியாது என வாதிட்டார். கொனஸ்தந்திநோபிளின் சபைத் தலைவரான Nacedoniue  தூயாவியானவர் குமாரனை விடவும் தாழ்வான சிருஷ்டி என கருதினார். எனினும் இவருடைய உபதேசம் பிழையானது என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு இவரது கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் தூயாவியைப் பற்றி தீமையானவைகளைப் பேசுபவர்கள் என அழைக்கப்பட்டனர்.

கி.பி. 381 கொனஸ்தந்திநோபிளில் பொதுவான சங்கம் கூடியபோது Gregory of Nazianz இன் வழிநடத்துதலின் கீழ் நிசேய விசுவாசப் பிரமாணத்திற்கு அனுமதியளித்தது. பரிசுத்த ஆவியைப் பற்றி பின்வருமாறு விசுவாசப் பிரமாணத்தில் எழுதப்பட்டது. கர்த்தரும் ஜீவனைக் கொடுக்கிற வரும், பிதாவினின்று புறப்பட்டவரும் பிதாவுடன் குமாரனோடும் கூடத் தொழுது ஸ்தோத்தரிக்கப்பட்ட வேண்டியவரும் தீர்க்கதரிசிகளினூடாகப் பேசுகின்றவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன்.

இரு காரணங்களின் நிமித்தமாக கொனஸ்தந்திபோபிள் சங்கத்தின் பிரமாணம் திருப்பதியற்றதாயிருந்து. (1) Homoousios சஙகத்தின் எனும் வார்த்தை உபயோகிக்கப்படாதமையால் தூய ஆவியானவர் பிதாவோடே ஒரே தன்மை பொருந்தியவர் என்பது வலியுறுத்தப்படவில்லை. (2) தூய ஆவிக்கும் மற்ற இருவருக்குமிடையேயுள்ள உறவுமுறை விளக்கப்படவில்லை. தூய ஆவியானவரை பிதாவிலிருந்து புறப்படுகிறவர் என குறிப்பிடப்பட்டிருப்பினும் அவர் குமாரனிலிருந்து  புறப்படுவதைப் பற்றி வலியுறுத்தவோ அன்றி மறுத்துரைக்கவோ இல்லை. அவ்விடயம் எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறியமுடியாமலுள்ளது. தூய ஆவியானவர் பிதாவிலிருந்து மட்டும் புறப்படுகின்றவர் என்று கூறுவதானது குமாரனுக்கும் பிதாவுக்கும் இடையேயுள்ள ஒருமைத் தன்மையை மறுதலிப்பதாகவுள்ளது. தூய ஆவி குமாரனிலிருந்து வந்தவர் என கூறும்போது சார்ந்திருக்கும் நிலையை அவருக்கு கொடுப்பதைப் போன்றும் அவருடைய தேவத்துவத்திற்கு களங்கம் விளைவிப்பதாயும் உள்ளது. Athanasius, Basil, Gregory of Nyssa  என்போர் தூய ஆவியானவர் குமாரனிலிருந்து புறப்பட்டவர் என்பதை எவ்வித்த்திலும் எதிர்க்காத முறையில் அவர் பிதாவிலிருந்து புறப்பட்டவர் என வலியுறுத்தினர். 

மேலைத்தேய இறையியலாளர்கள் பிதாவிலும் குமாரனிலுமிருந்து புறப்பட்டவரே தூயஆவியானவர் என்பதை ஏற்றுக் கொண்டனர். கி.பி 589 இல் கூடிய Toled சங்கம் இவ்வுபதேசத்திற்கு முக்கியமானது கீழைத்தேய சபைகளைப் பொறுத்தவரை திரித்துவ உபதேசத்தின் இறுதியான கருத்தமைப்பு தமஸ்குவிலிருந்த John என்பரால் கொடுக்க்ப்பட்டது. இவருடைய கருத்துப்படி ஒரு தெய்வீக சாரமே உள்ளது. ஆனால் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். இவை தெய்வீக வஸ்துவில் உள்ள நிஜங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் மூன்று மனிதர்களுக்கிடையேயான உறவு முறையின் சம்பந்த முறையைப் போன்றதாகக் கருதப்படக் கூடாது. அவர்கள் சகலவற்றிலும் ஒன்றானவர்களாக இருக்கும் நிலையில் மட்டுமே வேறுபட்டவர்கள். மூவரும் ஒருவரை விட மற்றவர் தாழ்வானவர்கள் அல்ல என வாதிட்டாலும் பிதாவினால் குமரன் மூலமாக புறப்பட்டவரே தூய ஆவியானவரே என கருதினர். இக்கருத்து இன்றும் கூட ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர் எனும் எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதாகவுள்ளது.

Augustine இனுடைய பிரமாண்டபமான படைப்பான De Tunicate  இலேயே மேலைத்தேய திரித்துவ உபதேசம் தனது பூரணத்துவத்தை பெற்றது. அவர் தெய்வீகச் சாரம் தன்மை என்பவைகளின் ஒருமைத் தன்மையும் நபர்களின் பன்மைத் தன்மையையும் வலியுறுத்தினர். மூன்று மானிட நபர்களைப் போன்றவர்கள் அல்ல (அதாவது பொதுவான மானிட தன்மையின் பகுதிகளைக் கொண்டிருத்தல்) மாறாக தெய்வீக நபர்களுக்கிடையேயான உறவுமுறை ஒருவரில்லாமல் மற்றவர் இருக்கமுடியாத நிலையாகும். அவர்களுக்கிடையேயான சம்பந்தம் அந்நியோன்யமானது. Augustine ஐப் பொறுத்தவரையில் தூய ஆவியானவர் பிதாவிலிருந்து மட்டுமல்ல குமாரனிலிருந்தும் புறப்படுகின்றவர். ஆனால் மூவரும் சம்மானவர்கள், ஒருவரை விட மற்றவர் எந்தவிதத்திலும் தாழ்வானவர் அல்ல என்பதை வலியுறுத்தினார்.

இதன்பின் திரித்துவ உபதேசத்திற்கு மேலதிகமாக எதுவும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனினும் இந்நிலையில் இருந்து பிழையான உபதேசத்திற்கு இறையிலாளர் செல்வதும் மற்றவர்கள் சரியான சத்தியத்தை அறியவும் உதவியாயிருந்தது.. சிலர் மூன்று கடவுள்கள் இருப்பதாக கருதினர். சிலர் தேவனின் மூவகைக் குணவியல்புகளாக நபர்களாகக் கருதினர். இன்னும் சிலர் தேவனின் மூவகை நிலைகளைக் குறிப்பதாக எண்ணினர். Thomas Acquaints   இன் எழுத்துக்களில் நாம் திரித்துவ உபதேசத்தின் வழமையான விளக்கத்தைக் காணலாம். சபை சீர்த்திருத்தக் காலத்தில் John Calvin திருமறையில் அடிப்படையில் திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்தினார்.

சீர்த்திருத்த காலத்தில் திரித்துவ உபதேசத்தின் மேலதிகமான அபிவிருத்தியொன்றையும் நம்மால் காணமுடியாது. எனினும் பழைய கள்ளப் போதகங்கள் மறுபடியும் புதிய போர்வைகளின் கீழ் வந்தமையும் அவற்றை எதிர்த்து சரியான உபதேசத்தை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளையும் சபை சரித்திரத்தில் காணலாம். 

Reference 
J.N.D. Kelly, Early Christian Doctrines (London: Adams & Charles Black, 1968, 1972)
G. Bray,  Creeds, Councils and Christ (Leicester:  Inter Varsity Press, 1984)
H. Bateson, Documents of the Christian Church (London : Open university press, 1963)
எம்.எஸ். வசந்தகுமார், இறையியல், (இலங்கை வேதாகமக் கல்லூரி, 2003) 
கிறிஸ்தவம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, தரம் 13 (இலங்கை கல்விநிறுவகம், 2010)





Tuesday 26 April 2011

Arius vs Athanasius திரித்துவ வரலாறு (2)


பகுதி 1 ஐ இங்கு வாசிக்க 

இக்குழு ஏரியசின் கொள்கைச் சார்புடையதாய் இருந்தமையால் குமாரனும் பிதாவினுடைய சாரத்தையும் தன்மையையும் உடையவர் என்ற கருத்தை (Homoousios) எதிர்த்தது. எனினும் இக்குழு Eusebiue  இனால் முன்பு எழுதப்பட்ட பிரமாணத்தை இச்சங்கத்தில் சமர்ப்பித்த்து. இப்பிரமாணம் அத்தனாசினுடைய மற்றெல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொண்ட போதிலும் மேற்சொன்ன Homoousios (same Essence) உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக Homoiousios (Similar Essence) எனும் பதத்தை உபயோகித்தது. அதாவது பிதாவும் குமாரனும் ஒரு தன்மையுடையவர்கள் அல்ல. மாறாக பிதாவைப் போன்ற தன்மையுடையவரே (Similar Essence) குமாரன் என கூறினார். வாக்குவாதங்கள் முடிவின்றி தொடர்ந்தமையால் அரசன் இவ்விவதகாரத்தில் தலையிட்டு தனக்கிருந்த அதிகாரத்தைக் கொண்டு சமத்துவத்தை உருவாக்க எத்தனித்தான். எனினும் அரசனுடைய முடிவு அத்தினாசின் பக்கத்திற்கு வெற்றியாக அமைந்த்து. இதனால் இச்சங்கம் “குமாரன் உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர். பிதாவோடே ஒரே தன்மை பொருந்தியவர்“ எனும் முடிவுரையைக் கொடுத்த்து. நிசேய சங்கத்தின் முடிவு அரசனின் தலையீட்டினாலும் அவனுடைய வல்லமையினாலும் ஏற்பட்டமையால் அது சபையினரிடையே பூரண திருப்தியைப் பெற்றுக் கொள்ளவில்லை. இம்முடிவு அரசனால் பலவந்தமாக திணிக்கப்பட்டதென்று கருதினர். அத்தனாசிஸ் கூட தான் வெற்றியடைந்தாலும் சபையின் விவகாரங்கள் அரசாங்கத்தின் தலையீட்டினால் தீர்க்கப்படுவதை விரும்பவில்லை. தன்னுடைய வாக்குவத்தினாலும் வேதாகம சத்தியத்தினடிப்பைடையிலும் ஏரியசினுடைய குழுவினருக்கு தன் நிலையை உறுதிப்படுத்தியிருக்கலாம் என எண்ணினார். பிற்காலத்தில் இத்தகு நிலைமை ஏற்பட்டதையும் நாம் சரித்திரத்தில் அவதானிக்கலாம்.

பிற்காலத்தில் சபை ஏரியசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. எனினும் ஏரியசின் முழுக்கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் Semi-Arians என அழைக்கப்பட்டனர். அரசர்களும் பெரும்பான்மையினர் பக்கமே சார்ந்தனர். இதனால் அத்தனாசியஸ் உலகத்திற்கு எதிரானவராகவே கருதப்பட்டார். ஐந்து முறை நாடுகடத்தப்பட்ட இவர் சுயபுகழுக்காக பதவியிலிருப்பவர்களால் பதவியை இழந்துவிட்டார். 


நிசேய சங்கத்தினது முடிவுரையின் எதிர்ப்பு இருவகைப்பட்டது. ஏரியஸ் குழுவில் துணிகரமிக்கவர்கள் குமாரன் பிதவைவிட வேறானத் தன்மை உடையவர் (Heteroousios) என கூறினர். இன்னும் சிலர் அதாவது Semi-Arians என அழைக்கப்படுவோர் பிதாவைப் போன்ற தன்மையுடையவர். ஆனால் அதே தன்மையல்ல (Homoiousios) என வாதிட்டனர். எனினும் அனைவருமே நிசேய சங்கத்தினது முடிவான ஒரே தன்மையுடையவர் (Homoousios – Same Essence ) என்பதை ஏகமனதாக எதிர்த்தனர். குமாரனுடைய முழுமையானதும் உண்மையானதுமான தேவத்துவத்தை இவர்கள் எதிர்த்தமையால் நிசேய சங்கமுடிவை எதிர்த்தனர். 

இப்பொதுச்சங்கங்களின் ஒழுங்குகள் சட்டங்கள் பற்றி எடுத்த தீர்மானங்கள்

1. ஏரியசையும் அவரது முக்கிய சீடர்களையும் சபையிலிருந்து வெளியேற்றல்.

2. மனம்வருந்திய பகிரங்கப் பாவிகளை திருச்சபை மீண்டும் ஏற்றுக்கொள்ளல்.

3. வேதபோத கருத்துடையவர்களை மீண்டும் திருச்சபையில் சேர்க்கும்போது மீண்டும் திருமுழுக்கு அளிப்பது தேவையற்றதென்பதாகும்.

4. பாஸ்கு விழா பற்றி உரிய திகதியொன்றை உறுதி செய்தல்.

5. குருக்களுக்கான ஒழுக்க சட்டங்களை விதித்தல்.

6. வழிபாடுகள், திருப்பலி நடாத்துதல் பற்றி தேவையான சட்டதிட்ட விதிகளை முன்வைத்தல்.

7. உரோமை, அந்தியோக்கியோ, அலெக்சாந்திரியா போன்ற மூன்று நகரங்களினதும் ஆயர்களுக்கு விசேட ஆட்சி அதிகாரங்களை ஒப்படைத்தல்.

8. எருசலேம் ஆயருக்கு விசேட கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தல். 

எனினும், ஆரிய வாதம் முடிவுறவில்லை. ஆரியசுக்கு உதவியளித்த அவரின் சீடர்கள் திருச்சபையில் பேதகங்களை ஏற்படுத்தி பேரரசினுள் பல சிக்கல்களை ஏற்படுத்தினர்  அதனால், இந்த பேதகங்களை அடித்தளமாகக் கொண்டு மீண்டும் ஒருமுறை பொதுச்சங்கமொன்று கி.பி. 381ஆம் ஆண்டு நடைபெற்றது.

Semi-Arians  கீழைத்தேய சபைகளிலேயே வெற்றியாளர்களாக இருந்தனர். மேலைத்தேய சபை நிசேய சங்க முடிவிற்கு விசவாசமாயிருந்தது, இதற்க்கு காரணம் கீழைத்தேய சபைகள் Origen சபைகள் Tertullian இன் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தமையினாலாகும். 

எனவே மேலைத்தேய சபைகள் Tertullian உடைய உபதேசத்தின் அடிப்படையில் அமைந்த இறையியலைக் கொண்டிருந்தது. இது அத்தனாசிஸ் இறையியல் போலவே அமைந்திருந்தது. மேலும் ரோமுக்கும் கொனஸ்தந்தினோபிலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்று. கீழைத்தேய சபைகளில் இருந்து அந்தனேசிஸ் துரத்தப்பட்ட பின் மேலைத்தேய சபைகள் அவரை ஏற்றுக் கொண்டது, கி.பி 341 இல் கூடிய ரோம சங்கமும் 334 இல் கூடிய  சன்டிகா (Sandica) சங்கமும் அத்தனாசிஸின் உபதேசத்தை முழுமனதாக ஏற்றுக் கொண்டது.  



எனினும் நிசேய இறையியலில் வெற்றியளராக கருதப்பட்ட Ancyra  ஐச் சேர்ந்த Marcellus அதிகாரத்திற்கு வந்தமை அத்தனாசிஸின் இறையியல் நிலையை பலவீனமடையச் செய்தது. இவன் தேவனோடிருந்த வார்த்தையின் நித்தியம் ஆள்த்ததுவமற்ற தன்மை எனும் வேறுபடுத்தப்பட்ட பழைய இறையியலாளர்களின் கருத்தைத் தழுவினான். இதனால் வார்த்தை மாம்சமாகிய போதே ஆள்த்த்துவமுடையதாக மாறியது எனும் கருத்தைக் கொண்டிருந்தான். வார்த்தை மாம்சமாவதற்கும் முன் இருந்தது என்பதைக் குறிப்பதை மறுதலித்து மாம்சமாகிய வாரத்தைக்கு தேவனுடைய குமாரன் எனும் நாமத்தைக் கொடுப்பதை மட்டுப்படுத்தி மானிட வாழ்வின் முடிவிலேயே வார்த்தையானது, உலகிற்கு முன்பான பிதாவுடனான உறவுக்கு திருப்பியது. இவ்வுபதேசம் உடைய கொள்கையை நியாயப்படுத்துவதற்காக அமைந்த்தோடு கீழைத்தேய மேலைத்தேய சபைகளுக்கு கிடையேயிருந்த இடைவெளியை மேலும் பெரிதுபடுத்தும் காரணியாயும் அமைந்த்து.



கீழைத்தேய மேலைத்தேய சபை இடைவெளியை நீக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தியோக்கியாவில் கூடிய சங்கம் நிசேய முடிவை அங்கீகரித்தாலும் இரண்டு முக்கிய அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குமாரன் பிதாவைப் போன்ற தன்மையுடையவர் (Homoiouios) என்பதையும் அவருடைய ஜெனிப்பிக்கப்படுதலையும் (Generation) பிதாவினடைய சிதத்த்திற்கான செயல் எனக் கூறினர். இது மேலைத்தேய சபைகளை திருத்திப்படுத்துவதாய் அமையவில்லை. இதனைத் தொடர்ந்து பல சங்கங்கள் கூடின. இவைகளின் கொள்கையை பின்பற்றியவர்கள் அந்தனாசிஸின் இடத்தை மேலைத்தேய சபைகளிலிருந்து அகற்றுவதன் மூலமாக தம் கொள்கைளை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகள் யாவும் வியர்தமாகின. எனினும் கொன்ஸ்டன்டைன் சக்கரவத்தியாகும்வரை இவர்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றியளிக்கவில்லை. ஆனால் கொன்ஸ்டன்டைன் சர்வ்வல்லைமை பொருந்திய சக்கரவர்தியாகிய பின் மேலைத்தேய சபைத் தலைவர்கள் அனைவரையும் இக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வைத்தான். இம்முயற்சி கி.பி 355 இல் கூடிய Arles சங்கத்திலும் Milan சங்கத்திலும் நடைபெற்றது. 

பிழையான காரணத்திற்காக ஏற்பட்ட இணைவு அபாயகரமானது என்பது மறுபடியும் நிருபணமாகியது. உண்மையில் நிசேய குழுவின் எதிர்ப்புக்குழு பிரிவடையும் நிலைக்கான அறிவிப்பாகவே அது அமைந்தது. காரணம் நிசேய குழுவை எதிர்ப்பதற்காக மட்டுமே வேறுப்பட்ட கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் யாவும் ஒன்றிணைந்தன. வெளிப்புற அழுத்தங்கள் (Eternal pressure) குறைவடைந்த பின உள்ளக ஒன்றுமையின்மை வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. Arius க்கும் Semi-Arius  சில விடயங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. 

கி.பி. 357 இல் கூடிய Sirmium சங்கம் சகல குழுவினரையும் இணைக்க முற்பட்ட Ousia, Homoousios, Homoiousios போன்ற பதங்கள் மானிட அறிவுக்கு அப்பாற்பட்டவைகள் என கூறி அவைகளை இறையியல் கலந்துரையாடல்களில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

எனினும் இத்தகு முறையில் ஐக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் குழுக்கள் இருக்கவில்லை. உண்மையான ஏரியசும் தான் யார் என்பதைக் காட்டத் தொடங்கியதோடு, பழைமை Semi-Arians அனைவரயும் நிசேய குழுவின் பக்கம் துரத்தி விட்டார்

                                                                        (அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Thursday 21 April 2011

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46)



நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி


இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்று யெகேவாவின் சாட்சிகள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே தேவனாய் இருந்திருந்தால் அவர் இவ்வாறு பிதாவை நோக்கி “தேவனே“ என்று அழைத்திருக்க மாட்டார் என்பதே இவர்களின் தர்க்கமாகும்.(40). எனினும், உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. (41). இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே எத்தகைய நிலையில் இருந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவரது இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2). இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (42)

பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (43) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (44) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (45) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக.  இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Footnote & Reference
(39) இயேசுக்கிறிஸ்துவின்  இவ்வார்த்தைகள் அவர் பேசிய அரமிக் மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தேயு 27.46 இல் ”ஏலி, ஏலி லாமா சபக்தானி” என்னும் வாக்கியம் எபிரேய மற்றும் அரமிக் மொழிச் சொற்கள் கலந்த ஒரு கூற்றாக உள்ளது. “ஏலி“ எனும் வார்த்தை எபிரேய மொழியில் தேவனை “என் தேவனே“ என அழைப்பதாகும். “லாமா சபக்தானி“ என்பது அரமிக்மொழி வார்த்தைகளாகும். ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று மாற்குவில் அரமிக் மொழியில் மட்டுமே உள்ளது. இதனால்தான் மாற்குவில் ஏலி என்பதற்குப் பதிலாக “எலோயி“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு அரமிக் மொழியிலேயே பேசியிருக்க வேண்டும் என்றும் மத்தேயுவே தேவன் எனும் வார்த்தையை எபிரேய மொழியில் குறிப்பிட்டிருக்க வேண்டும்“ என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். (D.A. Hagner, Matthew : The World Biblical Commentary, p 844)

(40) Anonymous, Reasoning with the Scriptures, p 212

(41) J. Moltmann, The Crucified God: Cross of Christ as the Foundation of and Criticism of Christians Theology P 149

(42) P. Green, Studies in the Cross, p 101

(43) J. Marsh, The Fullness of Time p 100

(44) L. Morris, The Gospel According to Matthew, p. 722

(45) J.V.L. Casserley, Christian Community p 14

Wednesday 20 April 2011

Arius vs Athanasius திரித்துவ வரலாறு

 
COUNCIL_OF_NICEA. new
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒரு தெய்வக் கொள்கையுடையோராய் (Monotheistic) இருந்தமையினால் கிறிஸ்தவ சபைக்குள்ளும் இக்கருத்தின் முக்கியத்துவத்தினை கொண்டு வந்தனர். இதன் காரணமாக தேவனின் பன்மை நிலையை முற்றிலும் மறுதலிப்பவர்களாகவும் குமாரனினதும், தூயஆவியினதும் தேவத்துவத்தை சரியான விதத்தில் ஏற்ற்றுக் கொள்ளாதவர்களாகவுமே இருந்தனர்
ஆதிச்சபை பிதாக்கள் திரித்துவத்தைப் பற்றிய சரியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. சிலர் ஆள்தன்மையற்றிருந்த தெய்வீக வார்த்தை (Logos) சிருஷ்டிப்பின்போதே ஆள்தத்துவமுடைய நபராகியது என்று கருதினர். வேறு சிலர் குமரன் ஆள்தத்துவம் உடையவராகவும், பிதாவைப் போலவே நித்தியராகவும் தெய்வீகத் தன்மையுடையவராய் இருந்தார் என கருதிய போதிலும் பிதாவைவிட சற்று தாழ்மையானவராகவே அவரைக் கருதினர். அக்கால கட்டத்தில் தூயஆவியனவரைப் பற்றிய எண்ணம் இறையியல் கருத்துப் பரிமாறல்களில் இடம்பெறவில்லை. தூயஆவியானவர் விசுவாசிகளின் இருதயத்தில் இரட்சிப்பு சம்பந்தமாக கிரியை செய்பவர் என்று மட்டுமே கருதினர். சிலர் தூயாவியை பிதாவுக்கு மட்டுமல்ல குமாரனுக்கும் கூட தாழ்வானதொன்றாகவே கருதினர்.
“மூவொருமை“ எனும் பொருளுடைய திரித்துவம் எனும் சொல்லை இறையியலில் புகுத்தி திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்த ஓரளவு முயன்றவ Tertullian என்பவர். கூட திரித்துவ உபதேசத்தை சரியான முறையில் விளக்கவில்லை. இவரே முதன் முதலில் தேவனில் மூன்று ஆள்த்த்துவங்கள் உள்ளதென்றும் அவர்களின் ஐக்கியத்தைப் பற்றியும் வாதிட்டவர்
Tertullian உடைய காலத்தில் Monarchianism எனும் உபதேசம் தேவனின் ஒருமைத் தன்மையை வலியுறுத்தியதோடு குமாரனுக்கும் உண்மையான தேவத்துவத்தை கொடுத்த்து. எனினும் மூவொருமை என அர்த்தந்தரும் திரித்துவத்தின் உண்மையான கருத்தை இவ்வுபதேசம் மறுதலிப்பதாயிருந்தது. Tertullian உம் Hippolytus ம் இவ்வுபதேசத்தை பிழையென நிருபித்தனர். இவர்கள் மேலைத்தேய சபைகளில் இப்பிழையான உபதேசம் பரவுவதைத் தடுத்தனர். Origen என்பார் கீழைத்தேய சபைகளில் இவ்வுபதேசத்திற்கெதிராக வாதட்டார். இவர்கள் அப்போஸ்லருடைய விசுவாசப் பிரமாணத்தில் குறிப்பிட்டபடி திரித்துவ உபதேசத்தைப் போதித்தனர்.
Origen உடைய திரித்துவ உபதேசம் திருப்திகரமானதொன்றாகயில்லை. பிதாவும் குமாரனும் தேவத்தன்மை பொருந்திய சமமானவர்கள் என்பதை அவர் சரியாக விளக்கவில்லை. எனினும் நித்திய பரம்பரை (Eternal Generation) எனும் கருத்தினடிப்படையில் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவை முதன் முதலில் விளக்கியவர் இவரே. (Divine Essence) பிதாவைவிட குமாரன் தாழ்வானவர் என்பதையே அவர் நித்திய ஜனனம் என்பதன் மூலம் விளக்கினார். இரண்டாந்தர தெய்வீக உயிர் அணுவையே பிதா குமாரனுக்கு கொடுத்தார். இதனால் குமாரன் ஒர கடவுள் (a God) என கூறப்படலாமே தவிர கடவுள் (The God) என கூறமுடியாது அவர் சில சமயங்களில் குமாரனை இரண்டாம் கடவுள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே Origen இன் உபதேசத்தின் மிகப்பெரிய பிழையாகவும் பிற்கால கள்ளப்போதகமான ஏரியனிஸம் தோன்ற காரணமாயமைந்த்து. மேலும் தூயஆவி குமாரனிலும் தாழ்வானதாக கருதியது மட்டுமல்ல குமாரனால் சிருஷ்டிக்கப்பட்டதொன்றாகவும் கருதினர்.

திருத்துவ உபதேசத்தைப் பற்றிய மிகப்பெரிய தர்க்கம் கி.பி. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த Arius உடன் சம்பந்தப்பட்டது. ஏரியஸ் என்ற குரு கி.பி.310ஆம் ஆண்டளவில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர் இவர் ஒரு தெய்வ கொள்கையை (Monotheism) ஆதரித்தவராதலால் தேவத்துவம் ஒரு நித்திய ஆளில் தான் அடங்கியிருக்கிறது என்று வாதிட்டார். தேவனோடிருந்த வார்த்தை (Logos) தெய்வீக வல்லமையே (Divine energy) என தெரிவித்தார். இவ்வல்லமையே கடைசியில் மாம்சமாகியது என போதித்தார். இவரது கருத்துப்படி குமாரனுக்கு ஆரம்பம் ஒன்றுண்டு. அவர் பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டவர் என்று ஏரியஸ் கூறினாலும் அதன் அர்த்தம் குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதேயாகும். குமாரன் உலக சிருஷ்டிப்புக்கு முன் ஒன்றுமில்லாததிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர் (Created out nothing) எனவே அவர் நித்தியராகவும் தெய்வீகத் தன்மை உடையவராகவும் இருக்க முடியாது என வாதிட்டார். கிறிஸ்து இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தும் நடுநிலையானவர் மட்டுமே எனவும் எடுத்துரைத்தார் மேலும், அவர் திரித்துவத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை முன்வைத்தார் அவரின் மறை எதிர்ப்புக் கருத்துக்களின்படி திரித்துவம் அறிவுசார் கொள்கை மட்டுமே.
 
Athanasius and arius new
குமாரனே முதலாவதாக சிருஷ்டிக்கபட்ட மிகப்பெரிய வஸ்து (being) அவர் சிருஷ்டிக்கப்பட்டதன் காரணம் இவரினூடாக உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்காகவே. எனவே அவர் மாற்றமடைபவர். (Mutable) எனவே இவருடைய புண்ணியங்களை தேவன் முன்னறிந்தமையால் (foreseen Merits) தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு எதிர்கால மகிமையின் அடிப்படையில் தேவனுடைய குமாரன் என்ற அழைக்கப்படுகின்றார். அவர் குமாரனாக சுவீகரிக்கப்பட்டமையால் (adopted) வணக்கத்திற்குரியவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிதாவை விட குமாரன் தாழ்வானவர் என்பது போல் தென்படும் வேதவசனங்களை ஏரியஸ் தன்னுடைய உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகித்தார். (நீதி 8:22, மத் 28:18, மாற் 13:32, லூக் 18:19,யோவான் 5:19, 14:28, 1 கொரி 15:28)

ஏரியஸ் இக்கருத்தை ஒவ்வொரு இடங்களிலும் போதித்தாரே ஒழிய அதை அவர் எழுத்தாக்கம் செய்யவில்லை. இருப்பினும் பிற்காலத்தில் இவை நூல் வடிவம் பெற்றதோடு அவற்றில் மிஞ்சியிருப்பது தலேய்ய (Thaleia) என்ற பெயரில் அறிமுகமாகும் பாடல்களின் சில பகுதிகள் மட்டுமே. மகனின் நீதியின் நிமித்தம் இறைமகன் என்ற பெயர் அவருக்கு அளிக்கப்பட்டது எனவும், அவர் திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயினும் தந்தையைப் போல் முடிவில்லாதவர் அல்லர் எனவும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் கிறிஸ்தவ விசுவாச உண்மைகளை சீர்குலைக்கச் செய்தது. கிறிஸ்துவின் இறைத்துவம் மறுக்கப்பட்டால் அவர் உலகிற்குப் பெற்றுக்கொடுத்த விடுதலை அர்த்தமற்றுப் போய்விடும். எனவே, தொடக்கத்திலிருந்தே அலெக்சாந்திரிய ஆயர் தூய சிறில் ஏரியசின் கொள்கைகளைப் பேதகங்கள் எனக்கூறி மறுத்து வந்தார் எனினும், நிக்கமேடியாவின் ஆயரான எயுசேபியுசின் உதவியோடு இப்பேதகம் மேலைத்தேயங்களில் பரவியது.

இவர் குமாரனுடைய உண்மையான தெய்வத்துவத்தையும் நித்திய ஜனனத்தையும் (Eternal Generation) வலியுறுத்தியவர். எனினும் அலெக்சாந்திரியாவின் Archdeacon Athanasius என்பவரே ஏரியஸின் கொள்கைகளின் எதிரியாகத் திகழ்ந்தார். இவர் உறுதியான எதற்கும் வளைந்து கொடுக்காத, சத்தியத்திற்காக போராடிய இறையியலாளர்.
கி.பி. 295இல் அலெக்சாந்திரியாவில் பிறந்த இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாவர் முதலில் கிறிஸ்தவக் கல்வி கிடைக்காதபோதும் சிறுவயதிலிருந்தே துறவற வாழ்வில் பற்றுக் கொண்டிருந்தார் எனினும் கற்ற அறிவுள்ள ஒருவராக இருந்தமையால் கி.பி. 325இல் அலெக்சாந்திரியாவின் ஆயரின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இப்பதவியில் இருந்தமையால் நிசேயா திருச்சங்கத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இத் திருச்சங்கத்தில் ஆரிய பேதகத்துக்கு எதிராக இவரால் பேசுவதற்கு முடிந்தது. இவருடைய வாழ்க்கையில் அதிக காலத்தை ஆரிய பேதகத்துக்குக்கு எதிராகப் போராடியதால் அத்தனாசிஸ் பற்றிக் கூறுகையில் ஆரிய பேதகத்தை மறக்க முடியாது. கி.பி. 328இல் அலெக்சாந்திரியாவின் ஆயருக்குப் பின் அத்தனாசிஸ் புதிய ஆயராக நியமனம் பெற்றார். பொதுநிலையின், துறவறத்தோர் என இருபாலாரும் விரும்பியதால் அத்தனாசிஸ் எகிப்து, லிபியா உள்ளடக்கப்பட்ட பரந்த மாகாணத்துக்கு பேராயராக நியமனம் பெற்றார் அன்று தொடக்கம் ஏழு வருடங்கள் தனது பிரதேசத்தில் பயணம் செய்து மக்களைத் தைரியப்படுத்திப் பாரிய பணியாற்றினார். அடிப்படைவாதிகளின் பயமுறுத்தலிலிருந்து பிரதேசத்தைக் காப்பாற்றுவதே அவரது ஒரே நோக்கமாயிருந்தது.
„துறவற மடங்களில் வாழ்ந்த காலத்தில் இவர் விசேட செயலில் ஈடுபட்டார். அதாவது, அனேக நூல்களை எழுதி திருச்சபைக்கு வழங்கினார். இவை மிகவும் எளிய கட்டுரைகளாகும். இவற்றில் அனேகமாக ஏரியஸின் தத்துவத்திற்கு எதிராக எழுதப்பட்டவையாகும். இந்நூல்களில் திருவிவிலியத்துக்கு எழுதப்பட்ட அரும்பத விளக்க நூல் (அரும்பத விளக்கம்) எஞ்சியிருந்தது. திருவிவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 27 நூல்களை உள்ளடங்கியதாக முதன்முதலில் வெளியிட்டவர; புனித அத்தனாசிஸ் ஆவார். இவருடைய நூல்களின் விசேட தன்மையானது, எப்பொழுதும் உட்பொருளுடன் முன்வைப்பதாகும். இவர் திருவிவிலியத்தை கிறிஸ்துவை மையமாகக் கொண்ட தொனிப்பொருளில் அறிமுகப்படுத்துகிறார்

கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுவது தேவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதை மறுதலிப்பதாக உள்ளது என வாதிட்டார். இவர் தேவத்துவத்தின் ஒருமைத்துவத்தை வலியுறுத்திய அதேசமயம் அதன் மூவொருமை (Tri-unity) திரித்துவதிற்கு எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் தனது இறையியல் கருத்தை வெளியிட்டார். பிதாவும், குமாரனும் தெய்வீக தன்மையுடையவர்கள் எனினும் தேவனில் பிரிவுகளோ அல்லது வேறுபாடுகளோ இல்லை இதனால் இரண்டாம் கடவுள் (Theos Devteros) என்று குமாரனைக் குறிப்பிடுவது தவறு எனத் தெரிவித்தார். தேவனுடைய ஒருமைத் தன்மையை முக்கியப்படுத்திய அதேவேளையில் அவர்களில் மூன்று நபர்கள் (Three hypostases) இருப்பதையும் கண்டுகொண்டார். குமாரன் சிருஷ்டிக்கப்பட்ட ஆரம்ப்மொன்றையுடையவர் என்பதை ஏற்றுக்கொள்ளாத அவர் குமாரனும் ஆரம்பங்களற்ற நித்தியமானவர் என தெரிவித்தார். குமாரன் எதையும் சார்ந்திராதவரும், தாமாகவே இருப்பவரும் என போதித்தார். மூன்று ஆள்கள் அல்லது ஆள்தத்துவங்கள் தேவனில் இருப்பதென்பது எவ்வித்த்திலும் தேவனில் பிரிவுகள் இருப்பதாக கருதப்படக் கூடாதென வாதிட்ட அவர் மூன்று கடவுள்கள் தேவத்துவத்தில் இல்லை என்று வாதிட்டார். மூவரும் சாரத்தில் (Essence) ஒன்றானவர்கள் என அவர் கூறினார். அத்தனாசிஸின் இறையியல் அடிப்படையான நம்பிக்கையே திரித்துவத்தின் உபதேசத்திற்காக போராட அவரை ஏவியது. தேவனுடனான உறவை அல்லது ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதே இரட்சிப்பின் அத்திவாரம் என அவர் நம்பினார். எனவே எந்தவொரு உயிரினமும் அல்ல. தேவனால் மட்டுமே நமக்கு இந்த உறவை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என விசுவாசித்தார். எனவே கிறிஸ்து தேவனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என கருதிய அவர், குமாரனுக்கு முழுமையான வேதத்துவத்தை கொடுக்காத ஏரியசின் கொள்கைகளை எதிர்த்தார்.

ஏரியஸ் இற்கும் அத்தனாசின் குழுவினருக்குமிடையே வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Caesarea எனுமிடத்தைச் சேர்ந்த Evsetive எனும் சபை சரித்திர ஆசிரியரின் தலைமையில் மூன்றாவது குழுவொன்று இரண்டிற்கும் நடுவில் வந்தது. அக்குழுவிவே பெரும்பான்மையினரைக் கொண்டிருந்தது. இது Origenist Portly என்று அழைக்கப்பட்டது. காரணம் Origen உடைய நியதிகளில் இக்குழு ஊக்கப்படுத்தப்பட்டிருந்தது.
(வளரும்)

நாம் எப்பொழுது ஜெபிக்க வேண்டும்?

prayer ஜெபத்தைப்பற்றி நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு காரியம் நம்முடைய ஜெப நேரத்தைப் பற்றியது. அதாவது எப்பொழுது ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். எனினும், நாம் எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும் என வேதாகமம் குறிப்பிட்ட ஒரு காலத்தை வரையறை செய்யவில்லை வேதாகம காலத்தில் மனிதர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவிதத்தில் ஜெபிக்கும் நேரத்தை வைத்திருந்தனர். இதனால் சிலர் காலையில் ஜெபித்தனர். (சங். 5:3, 108:, 119:147, 143: மாலையில் சிலர் ஜெபித்தனர்.(சங். 141:2) சிலர் நள்ளிரவிலும் ஜெபித்தனர். (சங். 119:62). சிலர் நாளொன்றுக்கு ஏழுதடவைகள் ஜெபிப்பவர்களாவும் இருந்தனர் (சங். 119:164( நெருக்கடியான காலங்களில் மனிதர்கள் நாள் முழுவதும் ஜெபித்து வந்தனர்.
சங்கீதம் 55:17 “அந்தி சந்தி மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்“ என்று தாவீது குறிப்பிட்டுள்ளான். தாவீதின் கூற்றில்“அந்தி“ மாலைநேரத்தையும் “சந்தி“ காலை வேளையையும், “மத்தியானம்“பகற்பொழுதையும் குறிக்கின்றது. (யூதர்களுடைய நாட்கணிப்பீட்டு முறையின்படி மாலை 6.00 மணிக்கே புதிய நாள் ஆரம்பமாவதனாலேயே இவ்வசனத்தில் இவ்வசனத்தில் முதலில் மாலைவேளைளையும் அதன் பின்னர் காலையும் பகலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாக புத்தகத்தில் ஒருநாளின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.) ஆதியாகம புத்தகத்தில் ஒருநாளின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிப்பிட “சாயங்காலமும் விடியற்காலமுமாகி“ என்னும் சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டிருப்பதும் யூதர்களின் நாட்குறிப்பீட்டு முறையை அறியத் தருகிறது. (ஆதி 1:5,8, 13, 19, 23, 31). இதனால் தாவீது நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிப்பவனாக இருந்தான் என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டே தானயேலும் நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் பழக்கத்தை உடையவனாக இருந்தானென்று கருதப்படுகின்றது. (தானி. 6:10) எருசலேமின் பக்கமாக இருந்து ஜெபிக்கும் பழக்கம் சாலமோனுடைய காலத்திலிருந்து இயேசுவின் காலம்வரை இருந்தது. (2 நாளா. 6:34-39, யோவா. 4:20-24) எனினும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில், காலையும் மாலையுமாக நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிக்கும் பழக்கமே மக்கள் மத்தியில் இருந்துள்ளதை 1 நாளாகமம் 23:30 அறியத் தருகிறது. உண்மையில் கிறிஸ்துவுக்குப் பின் 2ம் நூற்றாண்டிலேயே நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் பழக்கம் யூதமார்க்கத்தில் உத்தியோகபூர்வமாக கட்டளையாக்கப்பட்டது. “மிஷ்னா’ (Mishnah) என்னும் யூத மத நூலில் “பெரேக்கா“ Berakah 4:1 என்னும் பகுதியில் இத்தகைய கட்டளையுள்ளது. அக்காலத்தில் கிறிஸ்தவர்களும், யூதர்களின் முறையைப் பின்பற்றிய நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “டிடாக்கி“ Didache 8:3 இல் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கீதம் 55:17, “அந்தி சாயும் மத்தியானம்“ என்னும் சொற்பிரயோகங்கள், நாளொன்றில் மூன்று தடவைகள் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தையல்ல “நாள் முழுவதும் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தைப் பற்றிய குறிப்பாகவே உள்ளது. எனவே தாவீது நெருக்கடியான சூந்நிலையில் நாள்முழுவதும் ஜெபிப்பவனாகவே இருந்துள்ளதை இவ்வசனம் அறியத்தருகிறது. ஏனைய நாட்களில் அவன் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஜெபிப்பவனாக இருந்திருக்க வேண்டும். வயோதிப காலத்தில் தாவீது அந்த நியாயப்பிரமாண கட்டளையை அடிப்படையாகக் கொண்டு ஆலயத்தில் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளமையால் ( 1 நாளா. 23:1,20 யாத். 29:38-39, எண் 28:3-8 இக்கட்டளைக் கொடுக்கப்பட்டுள்ளன) இதுவே இதுவே அவனுடைய தனிப்பட்ட பழக்கமாகவும் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மனிதர்கள் தாம் விரும்பி நேரங்களில் ஆலயத்தில் சென்று ஜெபிக்க கூடியதாக இருந்தாலும், காலையில் ஒன்பது மணியும் மாலையில மூன்று மணியுமே அவர்களுடைய ஜெப நேரங்களாக இருந்தன. (அப். 2:15, 3:1). யூதர்கள் சூரிய உதயத்திலிருந்தே நேரத்தை கணிப்பிட்டதினால் அப். 2:15ல் “பொழுது விடிந்து மூன்றாம் மணிவேளை“ காலை ஒன்பது மணியையும், அப் 3:1ல் ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணிநேரம“ மாலை மூன்று மணியையுமே குறிக்கின்றது.
சில கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகாலை நேர ஜெபமே தேவனால் கேட்கப்படும் என்றும், அதிகாலை ஜெபத்துக்கே வல்லமை அதிகம் என்றும் எண்ணுகின்றனர். நாம் ஒவ்வொரு நாளையும் ஜெபத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் ஏனைய நேரங்களில் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் கேட்கப்படமாட்டாது என்றோ, அல்லது அவைகளுக்கு வல்லமை குறைவு என்றோ எண்ணுவது தவறாகும். நாம் எந்த நேரத்தில் ஜெபித்தாலும் தேவன் நம்முடைய ஜெபங்களை கேட்கிறவராகவே இருக்கிறார். காலையிலேயே வேலைக்கு செல்பவர்களும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றவர்களும் அந்நாளுக்கான உணவினை காலையிலேயே தயாரிக்கவேண்டிய நிலையில் இருப்பவர்களும் காலை நேரத்தில் அதிக நேரம் ஜெபிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். இதனால் இவர்கள் காலையில் சிறியதொரு ஜெபத்துடன் அந்த நாளை ஆரம்பித்து பின்னர் மாலையில் வேதாகமத்தை வாசித்து, ஜெபிப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்கி வைத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை.ஜெபிப்பற்கு நேரம் முக்கியமானதல்ல. நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
வேதாகம கால மக்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிப்பதை தம் பழக்கமாகக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய வாழ்வின் சூழ்நிலைக்கேற்றவிதத்தில் ஏனைய நேரங்களிலும் ஜெபிப்பவர்களாக இருந்தனர். எனவே, ஜெபிப்பதற்கு என்று நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தாலும், ஏனைய நேரங்களிலும் நாம் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.
“நாம் மிகவும் அதிகமாக நேசிக்கும் ஒருவரோடு பிரயாணம் செய்யும்போது எப்படி நாம் அவரோடு எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்போமோ அவ்விதமாகநாம் எப்பொழுதும் தேவனோடு பேசுகின்றவர்களாக இருக்க வேண்டும்“ஜெபம் தேவைகளுக்கான மன்றாடுதலாக இராமல், தேவனோடு தினம் உறவாடுவதாக இருப்பதனால். நாம் வீட்டில் மற்றவர்களுடன் எப்படிப் பேசுகின்றோமோ,. அவ்விதமாகவே தேவனோடும் பேவேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடுமப அங்கத்தினர்களுடன் பேசுவதற்காக ஒதுக்கி வைத்திருப்போம். எனினும் சிலநேரங்களில் இதையும் மீறி சில விஷயங்களைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவோம். சில நேரங்களில் சுருக்கமாக ஒரு சில நிமிடங்களில் மாத்திரமே பேசுவோம். நாம் ஜெபிக்கும் நேரமும் இவ்விதமாக நாளுக்கு நாள் வித்தியாசப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும். அதிகளவு நேரம் கிடைக்கும் நாட்களில் நாம் அதிக நேரம் ஜெபிக்கலாம். எனினும், நாம் அன்றாடம் வேதம் வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பலநாட்கள் அல்லது பல மாதங்கள் ஜெபிக்காமலே இருந்து விடுவோம். “நம்மால் எப்பொழுதும் ஜெபிக்கக்கூடியதாயிருந்தாலும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிப்பதற்கென்று குறிப்பிட்ட நேரம் நமக்கு இருக்க வேண்டும்.
சோர்ந்து போகாகமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள் (லூக். 8:1) என்றும், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் ( 1தெச. 5:17, கொலோ. 4:2) என்றும் வேதாகமம் கூறுகின்றது. நாம் ஜெபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஜெபித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது இக்கட்டளைகளின் அர்த்தம் அல்ல. நாம் ஒருநாள் ஜெபித்துவிட்டு மறுநாள் ஜெபிப்பதை கைவிடுபவர்களாக இருக்கக் கூடாது என்பதையே இக்கட்டளைகள் அறியத் தருகின்றது. மேலும், நாம் ஜெபிப்பதற்கு ஒதுக்கி வைத்துள்ள நேரத்தில் மாத்திரம் ஜெபிப்பவர்களாக இராமல், ஜெபம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் விதத்தில் நம்முடைய அன்றாட வாழ்வின் சகல காரியங்களிலும் ஜெபத்தை உள்ளடக்கியவர்களாக நாம் வாழ வேண்டும். ஜெபிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் வார்த்தைகள் வெளிப்படும் விதததில் ஜெபிக்கும் நாம் ஏனைய நேரங்களில் மனதிற்குள் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும். உண்மையில் “நம்முடைய வாழ்வு ஒவ்வொரு நிமிடமும் தேவனிலேயே சார்ந்திருக்கின்றது என்பதையும், நம்முடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவாகவே இருக்கின்றது என்பதையும் உணர்கின்ற விதத்தில் எப்பொழுதும் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.“. இதனால் நாம் நாள் முழுவதும் நம்முடைய வாழ்வின் சகல காரியங்களையும் குறித்து தேவனோடு பேசுகின்றவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், “எந்த நேரமும் ஜெபத்திற்கு ஏற்ற நேரமாகவே இருக்கிறது“
 
 
நாம் எங்கிருந்து ஜெபிக்க வேண்டும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் ஜெபிக்க வேண்டுமென்ற வரையறை வேதாகமத்தில் இல்லாத்துபோலவே குறிப்பிட்ட இடத்திலிருந்து ஜெபிக்க வேண்டும் என்னும் கட்டளையும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரேல் மக்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்களுடைய் ஜெபம் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மையமாகக் கொண்டிருந்தது. அக்காலத்தில் உடன்படிக்கைபெட்டி தேவனுடைய பிரசன்னத்திற்கான அடையாளமாக இருந்தமையால் இப்பெட்டி இருந்த ஆசரிப்புக் கூடாரத்திலும், அதன் பின்னர் ஆலயத்திலும் மக்கள் ஜெபிப்பதற்காக கூடிவந்தார்கள். தேவனுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்தை விட்டு தூரமான இடங்களில் இருந்தவர்கள் ஆலயம் இருக்கும் அத்திசையை நோக்கியவாறு ஜெபித்தனர். ஆனால் ஜெருசலேம் ஆலயத்தை மையமாகக் கொண்ட ஜெபமுறை இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு முற்றுப்பெற்றது.அதன்பின்னர் மனிதர் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கக்கூடிய நிலைஏற்பட்டது. இயேசு இதைப்பற்றிக் கூறும்போது நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.“(யோவா. 4:21) என்று தெரிவித்தார். இத்தகைய காலம் இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு வந்தது. இதைப் பற்றி பழைய ஏற்பாட்டு கால தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்திருந்தனர். (செப். 2:11, மல். 1:11) எனவே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கக் கூடியதாகவுள்ளது.
தம்முடைய நாமத்தில் பக்தர்கள் எவ்விடத்தில் கூடி வந்தாலும், அவ்விடத்தில் தாம் இருப்பதாக இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார். (மத். 18:20) எனவே, நாம் ஜெபிப்பதற்காகச் சிறப்பான இடங்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. தற்காலத்தில் சிலர் ஜெபிப்பதற்காக சிறப்பான மண்டபங்களைக் கட்டிவைத்து , மக்களை அவ்விடத்தில் வந்து ஜெபிக்கும்படியும், அவ்விடத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபத்திற்கு தேவன் பதிலளிப்பாரென்றும் கூறி மக்களை வஞ்சித்து வருகின்றனர். நாம் இத்தகைய தவறான வழிநடத்துதல்களைக் குறித்து மிகவும் கவனமாயிருந்து, நாம் இருக்கும் இடங்களிலிருந்து அன்றாடம் ஜெபிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இதனால்தான் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பதிலளிப்பார். (மத் 6:6) என்று இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் “அறைவீடு“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் “தாமியொன்“ (tameion) என்னும் கிரேக்கச் சொல்லானது அக்காலத்தில் வீட்டின் உள் அறை“ பொருட்களை சேகரித்து வைக்கும் அறை“, “படுக்கையறை“ என்பவற்றைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டது மத்தேயு 12:26 24:26, லூக்கா 12:3, 12:24 போன்ற வசனங்களில் “வீட்டின் உள்அறை“ என்றும் லூக்கா 12:24 ல் “பொருட்களை சேகரித்து வைக்கும்அறை“ என்றும் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் ஏசாயா 26:20, 2 ராஜா 4:33 போன்ற வசனங்களில் “படுக்கை அறை“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெரும்பாலான மக்களுடைய வீடுகளில் ஒரேயொரு அறை மாத்திரம் இருந்தமையால் இயேசுக்கிறிஸ்து பொருட்களை சேகரித்து வைக்கும் அறை பற்றியே இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளதாக வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவ்வசனத்தில் அறையானது தனிமையிலும் இதயத்திலும் ஜெபிப்பதை குறிப்பிடும் உருவக விவரணமாக இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
அறைவீட்டுக்குள் பிரவேசித்து“ “கதவைப் பூட்டி“ எனும் சொற்பிரயோகங்கள்,வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறையைப் பற்றியே இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளாரென்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அக்காலத்தில் வீட்டுக்குள் கதவுடன் இருக்கும் ஒரேயொரு அறை பொருட்களைச் சேகரித்து வைக்கும் அறை மட்டுமே. இதுவே எவருக்கும் தெரியாமல் இரகசியமாக தனிமையில் ஜெபிக்க்க்கூடிய இடமாக இருந்தது. எனவே நம்முடைய வீட்டில் எந்த அறை அல்லது எந்த இடம் ஜெபத்திற்குப் பொருத்தமான என்பதை கண்டறிந்து, அந்த இடத்திலிருந்து அனுதினமும் ஜெபிக்க வேண்டும்.
நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கலாம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே தேவனை ஆராதிக்கலாம் என்று கருதலாகாது. தற்காலத்தில் சிலர் தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் ஆலயத்திற்கு செல்ல வேண்டியதில்லை என எண்ணுகின்றனர். ஆனால் கிறிஸ்தவராகிய நாம் சபையாகக் கூடி தேவனை ஆராதிப்பது அவசியம். இதனால்தான் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.(எபி. 10:25) என வேதாகமம் கூறுகிறது. கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நேசித்து, ஆவிக்குரிய பிரகாரம் வளர்வதற்கு ஒருவருவருக்கொருவர் உற்சாகமும் தைரியமும் அளித்து, ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதால் (எபி 10:24) சபை கூடிவருதலைக் கைவிட்டு வீடுகளிலேயே இருப்பவர்கள் தேவனுடைய கட்டளைகளை அவமதிப்பவர்களாகவே செயற்படுகின்றனர். நாம் சபை ஐக்கியத்தை தவிர்த்து கிறிஸ்தவ அன்பை நம்மால் அனுபவிக்க முடியாது. எனவே, நாம் இருக்கும் இடங்களிலிருந்த வண்ணம் அன்றாடம் ஜெபித்து வந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சபையாகக் கூடிவந்து தேவனை ஆராதிக்க வேண்டும்.
(நன்றி : சத்தியவசனம்)

Monday 18 April 2011

நியாயப்பிரமாணம்


நியாயப்பிரமாணம் என்பது  நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள் மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும் . வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு சிறந்த நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றின்நோக்கம்..

1. கர்த்தரைஆராதனை செய்வதற்கும்,

2.கர்த்தருடன்  தொடர்பு கொள்வதற்கும்

3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்

மோசேயின் நியாயப்பிரமாணமானது மற்ற நாட்டு நியாயப்பிரமாணங்களை விட பல விதங்களில் வித்தியாசமானது.மேசேயின் நியாயப் பிரமாணம் முலாவதாக அதன்தோற்றத்திலேயே வித்தியாசமானது.  அதாவது இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, நீதியானது, சிறந்தது. இவைகள கர்த்தரால் சீனாய் மலையில்வைத்து இஸ்ரவேல் மக்களுக்காக் கொடுக் கப்பட்டவையாகும். இந்த நியாயப்பிரமாணங்கள் மக்களை ஒன்றிணைத்தது, அவர்கள் இறைவனால் ஆதரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக  இந்த நியாயப்பிமாணங்கள் உலகமயமானது, இந்த நியாயப்பிரமாணமானது கர்த்தரின் அன்பின் வெளிப்பாடாகும். இந்த உடன்படிக்கையை கைக்கொள்பவர்கள் யாவரும் கர்த்தருடைய சொந்த ஜனமாவார்கள்.( யாத். 19:5-6)

இஸ்ரவேலில் செய்யப்படும் சகல குற்றங்களும்  கர்த்தருக்கு விரோதமான வையாகும்.(1.சாமு. 12: 9-10) அவர் தனது பிள்ளைகள் தன்னையே நேசிக்கவும் சேவிக்கவும் வேண்டுமென்று விரும்புகிறார்.( ஆமோஸ் 5: 21-24) தன்னுடைய நியாய ப்பிரமாணங்களை மீறுபவர்களை அவர் நியாயாதிபதியாகவிருந்து தண்டித்து ஒழுங்குபடுத்துவார்.( யாத். 22: 21-24, உபாக. 10: 18, 19:17) அந்ததேசத்தார் அல்லது அந்த சமூகத்தாரே நியாயப்பிரமாணத்தை நடப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களாகும்.(உபா. 13: 6-10, 17:7, எண் 15: 32-36)


நாமறியாத வழிகளில் வரும் பதில்


பர்மிய நாட்டில் மிஷனரியாக பணியாற்றிய அடோனிராம் ஜட்சன் மரிக்கும் தருவாயில் இருக்கும்போது, பர்மிய நாட்டில் தனக்கேற்பட்ட பாடுகளையும் உபத்திரங்களையும் பற்றிய சரிதையை வாசித்த துருக்கி நாட்டில் இருந்த சில யூதர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

“இது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது“ என தன் தன் மனைவியிடம் கூறிய அடோனிராம் “இது ஒரு நல்ல செய்தி. நான் இளைஞனாயிருந்தபோது எருசலேமிலிருக்கும் யூதர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் மிஷனரியாக என்னை அனுப்பும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் என்னை பர்மாவுக்கே அனுப்பினார். அங்கு நான் கடுமையான உபத்திரங்களுக்கும் கொடுமையான சித்திரவதைகளுக்கும் உட்பட்ட போதிலும், இப்போது எனது சித்திரவதைகளினதும் சிறையிருப்புகளினதும் மூலம் தேவன் துருக்கியிலுள்ள சில யூதர்களை இரட்சித்துள்ளார்“ என்றார்.


நம் ஜெபங்கள் நாம் அறியாத அற்புதமான முறைகளில் பதிலளிக்கப்படுவதற்கு இச்சம்பவம் சிறந்த விபரணமாக உள்ளது. யூதர்களின் இரட்சிப்புக்காக ஜெபித்த அடோனிராம் ஜட்சனின் ஜெபம், அவரது வேண்டுதலின்படி அவரை யூதர்களிடம் அனுப்பியதன் மூலமாக அல்ல. மாறாக, பர்மிய நாட்டில் அவருக்கேற்பட்ட உபத்திரங்களைப் பற்றிய சரிதையின் மூலம் யூதர்களைத் தேவன் இரட்சித்துள்ளதன் மூலம் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பலான சந்தர்ப்பங்களில் தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் முறை நமது எண்ணத்திற்கும் அப்பாற்பட்டதாகவே உள்ளது. அதாவது நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மேலாக அற்புதமான முறையில் அவர் பதிலளிக்கிறவராக இருக்கிறார்.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரே. 33:3) என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாய் உள்ளது.

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Friday 15 April 2011

இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(இயேசுவை சிருஷடிக்கப்பட்டவராக காட்டுவதற்கும் அவர் தேவன் இல்லை என மறுப்பதற்கும் யெகோவா சாட்சிகளினால் சுட்டிக் காட்டப்படும் விடயங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் (தமிழ்) ஏப்ரல்-ஜூன் 2010 இதழிலும் இவ்விபரம் காணப்படுகின்றது இக்கட்டுரையாசிரியர் இதற்கு அப்பாலும் சென்று இது உண்மையானது தானா என வேத வசனங்களுடன் ஆராய்ந்துள்ளார்)


தேவனால் முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகக் காண்பிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் வேதவசனம் தானியேல் 10:13 ஆகும். இவ்வசனத்தில் “மிகாவேல்“ எனும் தேவதூதன் “பிரதான அதிபதிகளில் ஒருவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனத்தையும் தானியேல் 10:21, 12:1 ஐயும் ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்து மனிதனாக வருவற்கு முன்பு. அவர் பிரதான தூதன் மிகாவேலாக இருந்ததாகக் கூறுகின்றனர். தானியேல் 12:1 இல் மிகாவேல் எழும்புவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் 1914 இல் இயேசுக்கிறிஸ்து பரலோக சிங்காகனத்தில் ராஜாவாக முடிசூட்டப்படதைப் பற்றியது(80) என்று கருதும் யெகோவாவின் சாட்சிகள் இவ்வசனத்தில் “எழும்புதல்“ எனும் பதததை.“அதிகாரத்தைக் கைப்பற்றி ராஜாவாய் அரசாளுதல்“ என்று விளக்குகின்றனர். (81)

தானியேல் 10:13 இல் மிகாவேல் “அதிபதிகளில் ஒருவன்“ என்றே குறிப்பிடப்பட்டுள்ளான் எனவே, மிகாவேலைப் போன்று இன்னும் பல தூதர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. ஆனால் தானியேல் 10.21 இல் “உங்கள் அதிபதி“ என்றும் 12:1 இல் “பெரிய அதிபதி“ என்றும் மிகாவேல் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் 1தெசலோனிக்கேயர் 4:16 இல் “பிரதான தூதன்“ எனும் பதம் சுட்டுச் சொல்லுடன் ஒருமையில் இருப்பதனாலும் மிகாவேல் என்பவன் மட்டுமே பிரதான தூதன் என்று யெகாவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (82) ஆனால் தெசலேனிக்கேயர் 4:16 இல் சுட்டுச்சொல்லும் ஒருமையும் ஒரேயொரு பிரதான தூதன் மட்டுமே இருக்கிறான் என்பற்கான ஆதாரம் அல்ல. பிரதான தேவதூதர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்லுவதற்காகவே இவ்விரு இலக்கணக் குறிப்புகளும் உள்ளன. (83) தானியேலின் புத்தகத்தில் முதல் தடவை மிகாவேல் “அதிப்திகளில் ஒருவன்“ என்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளமையால் (தானி 10:13) அதன்பின்னர் அவனைப் பற்றிக் கூறும்போது, பிரதான தூதர்கள் பலர் இருப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மிகாவேலைப போன்று ஏழு பிரதான தூதர்கள் இருக்கிறார்கள் என்பதே அக்காலத்தைய யூதர்களது நம்பிக்கையாக இருந்த்து(84) எனவே மிகாவேல் தனித்துவமானவனாக இல்லை. ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ தனித்துவமானவராக என்று யோவான் 3:16 கூறுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, இவ்வசனத்தில் “ஒரேபேறான குமாரன்“ என்பதற்கு மூலமொழியில் தனித்துவமானதுமான தன்மையை சுட்டிக் காட்டுகிறது. (85) அதாவது “பலரில் ஒருவர் என்பதல்ல, ஒரேயொருவர்“ என்பது இதன் அர்த்தமாகும். மேலும், இயேசுக்கிறிஸ்து வேதத்தில் “பிரதான அதிபதி“ என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் யெகோவாவின் சாட்சிகளின் விளக்கம் தவறானது என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. இயேசுக்கிறிஸ்து பிரதான அதிபதியாக அல்ல, முழுமையான அதிகாரமும் ஆளுகையும் கொண்ட “ராஜாதிவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கிறார். (வெளி. 19:16)

உண்மையில் இயேசுக்கிறிஸ்துவை தேவதூதன் என்று கூறுவது முழுமையான வேதப்புரட்டாகும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து தேவதூதர்களை விட மேலானவர் என்பது வேதாகமத்தின் தெளிவான போதனையாக உள்ளது. எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் முதலாம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் 18ம் வசனம் வரை தேவதூதர்களைவிட இயேசுக்கிறிஸ்து மேலானவர் எனும் சத்தியம் விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியானது, இயேசுக்கிறிஸ்து இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.“ என்று ஆரம்பமாகின்றது. (எபி. 1.4) இயேசுக்கிறிஸ்து தேவதூதரை விட மேலானவர்(86) என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது. (87) மேலும் இவ்வசனத்தில் “நாமம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பெயர், பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், நபர் என்று பலவித அர்த்தங்க்ளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் தேவனைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்ட இப்பதம் பிற்காலத்தில் யூத கிறிஸ்தவர்களால் இயேசுக்கிறிஸ்துவினுடைய பெயராகக் கருதப்பட்டது. (88) எனவே 1:4 இல் இயேசுக்கிறிஸ்து “விசேஷித்த நாம்முடையவராய்“ இருக்கிறார் எனும்போது அவர் தேவனாய் இருக்கிறார் எனும் அர்த்த்த்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (89) “இயேசுக்கிறிஸ்து தேவதூதரைவிட மேலான அந்தஸ்தும், அதிகாமும், ஆளுமையும் உடையவராய் இருப்பதையே இவ்வசனங்கள் அறியத் தருகின்றன. (90) எனவே அவரைத் தூதன் என்ற கூறுவது மிகப் பெரிய தவறாகவே உள்ளது.

இயேசுக்கிறிஸ்துவைத் தம் குமாரன் என்று கூறிய தேவதூதரை இவ்வாறு அழைக்கவில்லை என்றும் (எபி 1:5) அவர்கள் தேவனுடைய ஊழியக்கார்ர்களாகவே இருக்கிறார்கள் என்றும் (எபி. 1:7) எபிரேயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுக்கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருப்பதனாலும், தூதர்களைத் தேவன் தம் குமாரன் என்று அழைக்காதமையினாலும் மிகாவேல் எனும் தேவதூதன் இயேசுக்கிறிஸ்து அல்ல என்பது தெளிவாகின்றது. (91) மிகாவேல் தேவதூதனே இயேசுக்கிறிஸ்து என்றால் இவ்விரு வசனங்களிலும் தேவன் கூறியவை பொய்யாகவே இருக்க வேண்டும். மேலும், தேவதூதர்கள் யாவரும் தம் குமாரனை வழிபட வேண்டும். என்று தேவன் கட்டளையிட்டதாகவும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (எபி. 1:6) வேதாகமத்தில் தேவனை வழிபடுவதற்கு உபயோகிக்கப்பட்ட பதமே இவ்வசனத்தில் தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதைப் பற்றிய தேவகட்டளையிலும் உள்ளது. தேவதூதர்கள் மட்டுமல்ல பிசாசுக்களும இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக விழுந்து அவர் தேவனுடைய குமரன் என்று அறிக்கையிட்டன. (மாற். 3:11) தேவன் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவராய் இருப்பதனால் (மத். 4:10) தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதானது அவர் தேவதூதர்களைவிட மேலானவராய இருப்பது மட்டுமல்ல “அவர் தேவனாய் இருப்பதையும் அறியத் தருகிறது. (92) மேலும், பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்காரும் சிலாக்கியம் இயேசுக்கிறிஸ்துவுக்கு கிடைத்த்து போல தேவதூதர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் எபிரேயர் நிருப ஆசிரியர் சுட்டிக் காட்டுவதும் (எபி. 1:13) தேவதூதர்களை விட இயேசுக்கிறிஸ்து மேலானவராய் இருப்பதற்கான ஆதாரயமாய் உள்ளது. மலும், தேவதூதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பதும் (கொலோ. 1.16)(93) தேதூதர்களைவிடவும் மேலான நிலையில் அவர் இருப்பதை அறியத் தருகிறது.

மிகாவேலும் இயேசுக்கிறிஸ்துவும் ஒருவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் 1 தெசலோனிக்கேயர் 4:16 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், இயேசுக்கிறிஸ்துவின் சத்தமே இவ்வசனத்தில் பிரதான தூதனுடைய சத்தமாக வர்ணிக்கப்பட்டுள்ளது(97) கூறுகின்றனர். எனினும் 2 தெசலேனிக்கியேர் 1:8 இன்படி இயேசுக்கிறிஸ்து தமது மறுவருகையில், வல்லமையின் தூதர்களோடு வருவதனால், பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்ற 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் குறிப்பிடப்பட்டிருப்பது அவரோடு பிரதான தூதன் மிகாவேலும் வருவான் என்பதையே அறியத்தருகின்றது. எனவே இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தூதன் எனக் கூறுவது தவறாகும்.

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பு மட்டுமல்ல மரித்து உயிர்தெழுந்த பின்பும் மிகாவேல் எனும் தேவதூதனாகவே இருக்கிறார் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். மாம்சத்தில் மரித்த இயேசுக்கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்பதே இவர்களது போதனையாகும. (98) எனவே “உயிர்த்தெழுதலின் பின்னர் அவர் சரீரமற்ற ஆவியாகவே இருந்தார் (99) என்று போதிக்கும் யெகோவாவின் சாட்சிகள் “மனிதர்களை மீட்பதற்காக்கத் தம் சரீரத்தை மீட்கும் பொருளாக்க் கொடுத்த இயேசுக்கிறிஸ்து மறுபடியும் தன் சரீரத்தை எடுத்துக் கொள்ளவில்லை (100) என்றும் அவரால் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்த்து எனவும் விளக்குகின்றனர்(101) மேலும் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது சரீரம் தேவனால் அழிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறுகின்றனர். (102) உயிர்த்தெழுந்த பின்னர் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாமல் ஆவியாக மட்டுமே இருக்கின்றார்“ எனும் தங்களது வேதப்புரட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வேதவசனம் 1 பேதுரு 3:18 ஆகும். (103) இவ்வசனத்தின் இறுதிப்பகுதியில் “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவ்வசனம் யெகோவாவின் சாட்சிகள் தர்கிப்பது போல இயேசுக்கிறிஸ்து சரீரமற்ற ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்று கூறவில்லை. மூலமொழியில் இவ்வாக்கியத்தின் இலக்கண அமைப்பு முறையை அடிப்படையாக்க் கொண்டு “ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ (104) என்றும் ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார்(105) என்றும் இருவிதமாக மொழிபெயர்க்கலாம். எனினும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல் “சரீரம் இல்லாமல் வெறும் ஆவியாக உயிர்ப்பிக்கப்பட்டார்(106) என்று இவ்வசனத்தை எவ்வித்த்திலும் மொழிபெயர்க்க முடியாது.
இயேசுக்கிறிஸ்து ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார் என்று கூறும்போது அவர் சரீரமற்ற நிலையில் ஆவியாக இருந்தார் என்பது அர்த்தமல்ல. உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்து தமது சரீரத்தை இழந்தவராக அல்ல, மாறாக மகிமையடைந்த சரீரத்துடனேயே உயிர்தெழுந்தார் தம்மை ஒரு ஆவி என்று நினைத்துப் பயந்த சீடரிடம் “நான் தான் என்ற அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள் என்னைத் தொட்டுப் பாருங்கள் நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்கு காண்பித்தார். (லூக். 24:37-40) உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவே தாம் ஆவியல்ல என்றும் தமக்கு மாம்சமும் எலும்பும் இருப்பதாகவும் அறியத்தந்துள்ளமையால் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கம் உண்மைக்கு மாறான விளக்கமாகவே உள்ளது.

உண்மையில் கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழிந்து போகவில்லை. “அவருடைய மாம்சம் அழிந்து போகாது என்று தீர்க்கதரிசிகளினால் முன்னறிவிக்கப்பட்டது போலவே அவர் சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்தார் என்பதை அப்போஸ்தலர் 2:31 அறியத் தருகின்றது (107) இயேசுக்கிறிஸ்துவும் தமது சரீரம் மூன்று நாளைக்குப் பின் உயிர்த்தெழும என்பதை முன்னறிவித்திருந்தார் (யோவா. 2:19-22) (108) சரீரப்பிரகாரமாக உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் மகிமையடைந்த நிலையில் இருந்தமையால் அவர் சடுதியாகத் தோன்றி மறையக்கூடியவராகவும் பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் வந்து போகக்கூடியவராகவும் இருந்தார்(லூக். 24:31, 24:36) உயிர்த்தெழுந்த பின்பு அவர் சரீரத்தில் இருந்ததை அவரது சீடர்கள் தொட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது (மத். 28:9, லூக் 24:39, யோவா. 20:17) இயேசுக்கிறிஸ்து மரிக்கும்போது அவரது சரீரத்தில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் உயிர்த்தெழுந்த பின்பும் இருந்தன. (யோவா 20:25-27)(109).. எனவே உயிர்த்தெழுந்த பின்னர் அவர் சரீரமில்லாமல் ஆவியாக இருந்தார் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இயேசுக்கிறிஸ்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்த்தை மறுதலிக்க யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் இன்னுமொரு வேதப்பகுதி 1 கொரிந்தியர் 15:44-50 ஆகும். 44ம் வசனத்தில் “ஜென்ம சரீரம் விதைக்கப்படும் ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். எனும் வாக்கியத்தை சுட்டிக் காட்டும் இவர்கள் இயேசுக்கிறிஸ்து ஆவியாவே உயர்த்தெழுந்தார் என்று கூறுகின்றனர். மேலும் 50ம் வசனத்தில் “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜியத்தை சுதந்தரிக்க மாட்டாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாத நிலையில் ஆவியாகவே உயிர்தெழுந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் (110) உண்மையில் யெகோவாவின் சாட்சிகள் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள விடயத்திதைக் கருத்திற் கொள்ளாதவர்களாக தங்களது உபதேசத்துக்கு ஆதாரமாக இவ்வதிகாரம் இருப்பதாக எண்ணுகின்றனர். கொரிந்து சபையில் மரித்தோரின் உயிர்த்தெழுதலை மறுதலித்த ஒரு குழுவினர் இருந்தனர். (111) இதனால் மரித்தோர் சரீரப்பிரகாரமாக உயிர்தெழுவார்கள் என்பதையும் (1 கொரி. 15:12-23) உயிர்தெழுதலில் தற்போதைய மாமிசசரீரம் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்பதை ( 1 கொரி. 15.35-50) பவுல் விபரமாக விள்க்கியுள்ளார். உயிர்த்தெழுதலில் மாம்ச சரீரம் “ஆவிக்குரிய சரீரமாக“ இருக்கும். என்று இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சரீரம் இல்லாமல் ஆவி மட்டும் இருக்கும் என்று கூறவில்லை (1 கொரி. 15:44-46) உண்மையில் நாம் இப்போது இருக்கும் சரீரத்தில் அல்ல மாறாக மகிமையடைந்த ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்தில் இருப்போம் என்பதையே “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை“ எனும் வாக்கியத்தின் மூலம் பவுல் அறியத் தந்துள்ளார்.

உயிர்தெழுதல் சரீரமற்ற ஆவியில் வருவது என்று 1 கொரி. 15ம் அதிகாரத்தின் எந்த ஒரு வசனத்திலும் குறிப்பிடப்பட்வில்லை. உயிர்த்தெழுந்த நிலையில் நமக்கு ஆவிக்குரிய சரீரம் இருக்கும் என்றே இவ்வதிகாரம் அறியத் தருகிறது. (1 கொரி. 15:44) பவுலினுடைய நிருபங்களில் “சரீரம்“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்படப்டுள்ள பதம் (somma) (113) மாம்சபிரகாரமான சரீரத்தையே குறிக்கின்றது. பவுல் இவ்வர்த்தத்திலேயே எல்லா இடங்களிலும் இப்பதத்தை உபயோகித்துள்ளார். (114) எனவே 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலின் பின்னர் உள்ள ஆவிக்குரிய சரீரம் தற்போது தமக்கிருக்கும் மாம்சரீரத்தின் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்றே பவுல் அறியத்தந்துள்ளார். இவ்விதமாகவே, உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரமும் மகிமையடைந்த நிலையில் இருந்ததாக வேதம் கூறுகிறது.

Footnote and References 
(80) Anonymous, Your will be Done Earth, pp 310, 313
(81) Ibid p 311

(82) Anonymous, Aid to Bible Understanding, p 1152 ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக உபயோகிக்கப்படுவதே சுட்டுச் சொல்லாகும். “அந்த“, இந்த“ எனும் பதங்கள் தமிழ்மொழியில் உள்ள சுட்டுச் சொற்களாகும். வேதாகமத்தின் மூலமொழிகளில் வசனங்களின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு இவை பெரிதும் உதவுகின்றது.

(83) F. Dickason, Angles : Elect and Evil p68

(84) அவர்களது பெயர்கள் யுராயல் (Uriel), ரஃபாயல் (Raphael) ராகூல் (Raguel) , மிகாவேல் (Michael), சாரியஸ் (Sariel), காபிரியல் (Gabriel), ரெமியேல்(Remiel), (தொபித். 12.15) 4எஸ்றா 20.1-7) இல் Remiel எனும் பிரதான தூதனின் பெயரே Jeremiel என்று உள்ளது. (F.F. Bruce, 1&2 Thessalonians : Word Biblical Commentary Vol 45, p 100) இப்பிரதான தேவதூதர்களே வெளிப்படுத்தல் 8.2 இல் தேவனுக்கு முன்பாக நிற்கின்ற ஏழு தூதர்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் காபிரியல் மிகாவேல் என்போரின் நம் வேதாகமத்தில் உள்ளன.

(86) இவ்வசனத்தில் “மேலானவர்“ எனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் க்ரீசன் (Kreisson) புதிய ஏற்பாட்டில் 19 தடவைகள் இடம்பெற்றாலும் எபிரேயர் நிருபத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நிருபத்தின் மையக் கருத்தை அறியத் தரும் பதமாயுள்ளது. (1:4, 6:9, 7:7, 7:19, 7:22, 8:6, 9:23, 11:16, 11:35, 11:40, 12:24, 10:34)

(87) இவ்வசனத்தில் “சுதந்தரித்துக் கொண்டார்.““மேன்மையுள்ளவரானார்“ எனும் சொற்பிரயோகங்கள் இயேசுக்கிறிஸ்து தம்மிடம் இல்லா ஒன்றைப் பெற்றுக் கொண்டார் எனும் அர்த்தம் உடையது அல்ல எபிரேயர் நிருப ஆசிரியர், மனிதராக இவ்வுலகிற்கு வந்த இயேசுக்கிறிஸ்து மானிட வாழ்வின் பின் எத்தகைய நிலையை அடைந்தார் என்பதையே இப்பகுதியில் சுட்டிக் காட்டுகிறார் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இதற்கு முன் உள்ள வசனத்தில் இயேசுக்கிறிஸ்து மானிட பாவத்துக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டதிலிருந்து இதை நாம் அறிந்து கொள்கிறோம். (L. Morris, Hebrew : Expositor’s Commentary, p 15) இயேசுக்கிறிஸ்து மானிட வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதராக வந்த போது “தேவதூதரை விட சிறியவராக்கப்பட்டு (எபி. 2:9) மானிட பாவத்தைப் பரிகரிப்பதற்காகச் செய்யவேண்யவற்றை (எபி. 2.17) செய்து முடித்தபின்னர் அவர் தேவதூதரை விட உயர்வான நிலைக்குச் சென்றுள்ளார் என்பதை அறியத் தருவதற்காகவே எழுதப்பட்டுள்ளது.

(88) அப்போஸ்தலர் 3:16, 4:7, 4:10, 16:18, 19:13 எபேசியர் 1:20, பிலிப்பியர் 2:9-11 போன்ற வசனங்களில் “நாமம்“ என்பது இயேசுக்கிறிஸ்துவைக் குறிக்கும் பதமாய் இருப்பதைக் காணலாம்.

(89) R. Longenecker, The Christology of Early Jewish Christianity, pp 41-46

(90) G.H. Guthrie, Hebrews : The NIV Application Commentary, p. 50

(91) R.Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p 178

(92) G.H. Guthrie, Hebrews : The NIV Application Commentary, p. 69

(93) கொலோசேயர் 1:16 இல் “சிங்காசனங்கள்“, “கர்த்த்த்துவங்கள், துரைத்தனங்கள், அதிகாரங்கள்“ என்பவை தூதர்களையே குறிக்கின்றன. அக்கால யூத இலக்கியங்களில் இச்சொற்பிரயோகங்கள் தூதர்களைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டுள்ளன. (2 ஏனோக்கு 20:1, ஜூபிலி 2:2) புதிய ஏற்பாட்டில் ரோமர் 8:38, 1 கொரிந்தியர் 15:24, எபேசியர் 1:20, 6:12, 1 பேதுரு 3:22 இலும் இத்தகைய விபரணத்தை நாம் அவதானிக்கலாம்

(97) Anonymous, Aid to Bible Understanding, p1152

(98) Anonymous, Let God be True, p40

(99) Ibid. p 41

(100) Anonymous, Let your Name be Sanctified, p. 266

(101) Anonymous, You can Live Forever in Paradise on Earth, p 143

(102) Anonymous : Things in which it is Impossible for God to Lie, p. 354. The Watchtower, 1 August 1975, p 479

(103) Anonymous, Rezoning with the Scriptures, p 334

(104) ஆங்கிலத்தில் New International Version மற்றும் Authorized Version மொழிபெயர்ப்புகளில் இவ்விதமாகவே இவ்வாக்கியம் உள்ளது.

(105) பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு மொழிபெயர்ப்பதே சிறந்த்து என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். (W.Grudem, 1 Peter : Tyndale New Testament Commentaries, p 156; A.Blum 1,2 Peter : Expositor’s Bible Commentary Vol 12, p 242) இதன்படி மாம்சபிரகாரமான வாழ்வில் மரித்து, ஆவிக்குரிய நிலைக்கு உயிர்த்தெழுந்தார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும். J,R. Michaels, 1 Peter : Word Biblical Commentary Vol 49, pp203-205), அதாவது மானிட வரையறைகளுக்கு உட்பட்டவராக இருக்கும்போது மரித்த இயேசுக்கிறிஸ்து இவ்வரையறையைக் கடந்து ஆவிக்குரிய நிலையில் உயிர்த்தெழுந்தார்

(106) Anonymous, Let God be True, p 272

(107) சங்கீதம் 16:10 இல் முன்னறிவிக்கப்பட்ட இவ்விடயம் இவ்வசனத்திலும் அப்போஸ்தலர் 13 இயேசுக்கிறிஸ்து35 இலும் இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழியாது என்பதைச் சுட்டி காட்ட உபயோகிக்கப்பட்டுள்ளது.

(108) யோவான் 2ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள் மூன்று நாளைக்குள்ளெ இதை எழுப்புவேன்“ என்று கூறினார். இது அவர தமது சரீரத்தைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனம் என்பதை 21ம், 22ம் வசனங்கள் அறியத் தருகின்றன.

(109) இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்த்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, மரிக்கும்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களைக் தான் பார்க்க வேண்டும் என்று தோமா கூறியபோது, இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயேசுக்கிறிஸ்து தம்முடைய கைகளை அவனுக்குக் காண்பித்தார்

(110) Anonymous : Aid to Bible Understanding p1395: Anonymous : Your Will be Done on Earth, p. 50.

(111) M.L. Sodards, 1 Corinthians : New International Biblical Commentary pp 314-317 ; C. Blomberg, 1 1 Corinthians : The NIV Application Commentary, p 295

(112) L.Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentary, p 227

(113) சோமா (somma) எனும் கிரேக்க பதம்

(114) R. Gundry, Soma in Biblical Theology, p 168

இயேசு மரித்தது சிலுவையிலா? மரத்தூணிலா?





இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை மாறாக மரத்தூண் ஒன்றிலே கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார் என்பது யெகோவா சாட்சிகளின் போதனையாகும். (Source : The Watchtower 15 August 1987, p27) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. என்று கூறும் இவர்கள் (Awake, 8 November 1972, p28) சிலுவை என்பதற்கு வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் நேரான தூண் எனும் அர்த்தமுடையது என்று விளக்குகின்றனர்.(Anonymous, Reasoning from the Scriptures, p89)ஆனால் சிலுவை என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள Stauros எனும் கிரேக்கப் பதம் T + X I எனும் மரத்தினால் செய்யப்பட்டவைகளைக் குறிக்கும். எனவே அப்பதத்தை மட்டும் ஆதாரமாக் கொண்டு இயேசுகிறிஸ்து I வடிவமரத் தூணில் மரித்தார் என்று கூறமுடியாது. (Source : R.M. Bowman, Understanding Jehovah’s Witnesses, p.143) மேலும் இயேசுக்கிறிஸ்து நேரான மரத்தூணில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தால் மத்தேயு 27:37 குறிப்பிட்டுள்ளதுபோல் “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவரது சிரசுக்கு மேலாக அதை வைத்திருக்க முடியாது. மாறாக அவரது கைகளுக்கு  மேலாகவே வைத்திருக்க முடியும். எனவே யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இயேசுக்கிறிஸ்துவின் கைகளிரண்டும் ஒன்றாக கட்டப்பட்டு அவர் மரத்தூணில் கட்டித் தொடங்கவிடப்பட்டார் என்னும் விளக்கம் தவறானதாகவே உள்ளது. (Source : R.Rhodes, Reasoning from the Scriptures with the Jehovah’s Witness, pp-397-398)ஆரம்பகாலத்தில்   யெகோவா சாட்சிகள் இயேசுக்கிறஸ்து சிலுவையில் மரித்தார் என்று கூறுகின்றபோதிலும் (R.Reed, Index of Wachtower Errors, p 73;The Watchtower 1 January 1891, p 1277, Anonymous, Creation pp161, 265, 336) பிற்காலத்தில் இவர்கள் தங்கள் கருத்தை மாற்றியுள்ளதோடு சிலுவையை வைத்திருப்பதும் அதைப் புனிதமாகக் கருதுவதும் விக்கிரக வழிபாடு எனப் போதிக்கத் தொடங்கினர். (Anonymous, Reasoning from the Scriptures, p 92)