- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 31 August 2011

சபை அங்கத்தினர்களின் தீர்மானங்கள்



  • வாரந்தோறும் தேவாலயத்திற்குச் செல்லத் தீர்மானித்திருக்கிறேன். பிந்தி செல்ல மாட்டேன். நானோ என் குடும்ப அங்கத்தினர்கள் எவருமோ ஆராதனையின்போது பிறருக்கு இடறலாய் கவனத்தைச் சிதறச் செய்கிறவர்களாய் இருக்க மாட்டோம் என தீர்மானித்திருக்கிறேன். 

  • பிரசங்கத்தை ஒழுங்காக கவனித்து குறிப்புகளை எடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். குடும்ப ஜெபத்தில் அந்த நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். பிரசங்கத்தை முதலாவது எனக்கென்றே எடுத்துக் கொள்வேன். பிரசங்கத்தை குறைகூறமாட்டேன். 

  • ஆராதனை, பிரசங்கம், பாடல் ஜெபவேளைகளில் தூங்காமல், பகற்கனவு காணாமல், கண்களை அலையவிடாமல் கவனமாயி ருப்பேன். பாடல்களை கருத்துணர்ந்து பாடுவேன். 

  • சபை தலைமைக்குப் பணிந்து நடக்கத் தீர்மானித்திருக்கிறேன். எளிமையான ஆவியோடு திருத்தங்களை ஏற்றுக்கொள்வேன். தலைவர்களை புறங்கூற மாட்டேன். என் சிக்கல்களுககு அவர்கள் தயவை நாட தயங்கமாட்டேன்.

  • சபையின் உடன் அங்கத்தினருக்கு முன்மாதிரியாக இருக்கத் தீர்மானித்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையைக் குறித்தும் எச்சரிக்கையாயிருப்பேன். எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் நடந்துகொள்வேன். ஆவிக்குரிய தீர்மானங்களில் பிறக்கு எடுத்துக்காட்டாக விளங்குவேன்.

  • சபையில் நல்லுறவு இல்லாத எந்த அங்கத்தினருடனும் உடனே ஒப்புரவாக தீர்மானித்திருக்கிறேன். மேலோட்டமான, மாய்மாலமான உறவுகளைத் தவிர்ப்பேன். சபையில் உற்சாகமாய் பங்கேற்கும் அங்கத்தினராக இருக்கத் தீர்மானித்திருக்கிறேன். சபை தேவைகளில் நான் கூடுமானளவு பங்கெடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். 

  • ஒரு வாரத்தி்ல் குறைந்த பட்சம் ஒரு ஆத்துமாவையாவது ஆதாயப்படுத்தி ஆலயத்திற்கு அழைத்துவர என்னால் முடிந்தளவு முயற்சியெடுப்பேன். நற்செய்தி கைப்பிரதிகளை விநியோகம் செய்வேன். 

  • ஒவ்வொரு வாரமும் கர்ததருக்கென்று காணிக்கை கொண்டுவரத் தீர்மானிக்கிறேன். ஊழியக்காரரின் தேவைக்கும் சபையின் தேவைக்கும், நற்செய்தி ஊழியங்களுக்கும் தாரளமாயக் கொடுப்பேன். 

  • சபைக்காகவும் மேய்ப்பருக்காகவும் நான் ஊக்கமாக ஒழுங்காக தினமும் ஜெபிக்கத் தீர்மானித்திருக்கிறேன். அங்கத்தினர் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்பேன். சபையின் நற்செய்தி ஊழியங்களுக்காகவும் அதன் வளர்ச்கிக்காகவும் ஜெபிப்பேன். சபையின் எழுப்புதலுக்காக மன்றாடுவேன். பாவத்தில் வாழ்பவரைக் குறித்து பேசி அலையாமல் அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்தினருக்காகவும் ஜெபிப்பேன். 

  • சபையின் உடன் சகோதரிகளுக்கு ஆவிக்குரிய உதவிசெய்ய தீர்மானிக்கிறேன். இரகசிய பாங்களைச் சுட்டிக்காட்ட தயங்கமாட்டேன். பயப்படாமல் தனிமையில் அதைக் குறித்து அவர்களோடு ஜெபத்தோடும் அன்போடும் பேசித் திருத்துவேன். 

  • சபையில் வாலிபர். சிறுவர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபிப்பேன். வாலிப் பெண்களுக்குப் புத்தி சொல்லுவேன். சிறுவர்களுக்கு வேதாகமக் கதைகளை போதிப்பேன். ஆவிக்குரிய புத்தகங்களை கொடுத்து உதவுவேன்

  • தேவையிலுள்ள உடன் அங்கத்தினருக்கு வேண்டிய பொருளுதவிகளைச் செய்ய தீர்மானித்திருக்கிறேன். அவர்களது தேவைகளைச் சந்திக்க தியாகம் செய்ய தயங்க மாட்டேன். வீட்டில் என்னால் கொடுக்கக் கூடிய துணிகளையும் பொருட்களையும் கொடுப்பேன். வியாதிப்படுக்கையிலும் துணைபுரிவேன். 

  • ஏனைய திருச்சபை அங்கத்தினரோடு சுமுகமாகப் பழகத் தீர்மானிக்கிறேன். அவர்களை புன்முறுவலோடு வாழ்த்துவேன். அவர்களோடு ஐக்கியம் கொள்ளத் தயங்கமாட்டேன். அவர்களை என் சபை அங்கத்தினராய் மாற்றிவிட முயற்சிசெய்ய மாட்டேன்.

  • கிறிஸ்துவின் சரீரத்தின் ஒருமனப்பாட்டைக் கெடுக்கும் சிறுசிறு காரியஙகளையெல்லாம் விவாதித்து சண்டை போடாதிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். பிற சபைகளின் நம்பிக்கைகளை கோலி செய்யாமல் மதிப்பேன்

  • சிறப்புக்கூட்டங்கள் ஆவிக்குரிய பொதுகூட்டங்கள், புத்தகங்கள். பத்திரிகைகள், வானொலி, ஒலிநாடா ஆகியவற்றின் மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையை நான் வளர்த்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். 

  • நான் கற்றுக்கொள்ளுகிற சத்தியங்களை வேதாகமத்தின் ஊடாக ஆராயந்து அறிந்துகொள்வேன். பொய் உபதேசங்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பேன். மிஷனரி சங்கங்களையும் வேதாகம சங்கங்களையும் இதர உள்ளூர் ஊழியங்களையும் என்னால் இயன்றளவுக்குத் தாங்குவேன். 


Thursday 25 August 2011

ஒரு பென்சிலின் கதையிலிருந்து வேதபாடம்



பென்சில் தயாரிப்பாளர் தான் உருவாக்கிய பென்சிலிடம் இவ்வாறு கூறத் தொ்டங்கினார். “இவவுலகத்திற்குள் நீ செல்வதற்கு முன் உன்னைக் குறித்து முக்கியமான ஐந்து காரியங்களை நீ தெரிந்து கொள்ள வேண்டும். அதனை எப்பொழுதும் நீ ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நீ மிக சிறப்பான பென்சிலாக திகழ முடியும். 


முதலாவது 
உன் வாழ்வில் நீ மிகப் பெரிய சாதனைகளை செய்ய வேண்டுமானால் அதற்கு முதலாவதாக நீ உன்னை இன்னொருவடைய கைகளுக்குள் அடங்கியிருக்க உன்னை அர்ப்பணிக்க வேண்டும். 

இரண்டாவது
காலத்துக்குக் காலம் உன் வாழ்வில் சீவப்படும் பல வேதனையான அனுபவங்களை நீ முகங்கொடுக்க வேண்டியிருக்கும். இது உன்னை தரமிக்க பென்சிலாக மிளிரச் செய்யும். 

மூன்றாவது
சில சமயங்களில் நீ பிழைவிடலாம். ஆனாலும் அதனை சரி செய்ய முடியும் என்பதை நினைவில் கொள். 

நான்காவது 
கர்ச்சிகரமான உன் வெளித்தோற்றத்தின் அழகல்ல. உனக்குள் என்ன இருக்கிறது என்பதே முக்கியமானது. 

ஐந்தாவது 
எந்த பாதமான சூழ்நிலையானாலும் நீ தொடர்ந்து எழுதப்பட வேண்டியது அவசியம். அதில் உனது தனித்துவமான அடையாளத்தை நீ எப்பொழுதும் விட்டுச் செல்ல வேண்டும். 

இவ்வாறு, தன்னை உருவாக்கியவரின் திட்டத்தினையும் நோக்கத்தினையும் புரிந்து கொண்ட பென்சில், தான் அதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்படுவேன் என உறுதியளித்தது.



மனிதா! இப்பொழுது பென்சில் இடத்தில் சற்றே உன்னை வைத்துப்பார். அதற்கு சொல்லப்பட்டதை எப்பொழுதும் உன் நினைவில் கொண்டு செயல்படுவாயானால், நீயும் ஒரு சிறந்த நபராக மாறுவாய் என்பது நிச்சியம். 

ஒன்று
நீ உன்னை ஆண்டவருடைய கரங்களில் முற்றுமாய் ஒப்பக்கொடுத்தால் மட்டுமே, உன்னால் மிகப் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். அப்பொழுது நீ மற்ற மனிதர்களுக்கு பயனுள்ள ஒரு மனிதனாக வாழ முடியும். 

இரண்டு
காலத்துக்கு காலம் நீ பலவிதமான வேதனைகளுக்கூடாகத் தீட்டப்படுவாய்! அது உன்னை ஒரு உறுதியுள்ள மனிதனாக்குவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

மூன்று
தற்செயலாய் நீ தவறுசெய்ய நேரிட்டால் அப்பிழைகளை திருத்திக்கொள்வதோடு, அவற்றினூடாக கற்றுக் கொள்ளவும் வளரவும் கூடும் என்பதை நினைவில்கொள்.


நான்கு
உனக்குள் இருப்பதுதான் உஉஉன்னிலுள்ள சிறப்பு


ஐந்து 
நீ கடந்த செல்லும் உன் வாழ்க்கைப் பாதையில் எப்பொழுதும் அடையாளத்தினை வி்ட்டுச் செல். உன்னுடைய சூழ்நிலை எப்படிப்பட்தாயிருந்தாலும் எப்பொழுதும் உன் ஆண்டவரையே சேவி. 

நாம் ஒவ்வொருவரும் ஒரு பென்சிலே.......
நாம் சிறப்பானதும் தனித்துவமானதுமான ஒரு நோக்கத்திற்காக நம்முடைய சிருஷ்டிகரால் உருவாக்கப்பட்டுள்ளோம். எனவே இதை நாம் எப்பொழுதும் நினைவில் கொண்டவர்களாக, அனுதினமும் ஆண்டவருடன் நல்லுறவு மிக்கவர்களாக நமது வாழ்க்கையைத் தொடர்வோமாக. 

நீ மேலான காரியங்களை செய்யவே உருவாக்கப்பட்டுள்ளாய். 

நன்றி - சத்தியவசனம் (ஜூலை-செப் 2009)


Monday 22 August 2011

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.....(யோவான் 20:23)


இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு, பிழையான வேதப் புரட்டு உபதேசங்களின் உருவாக்கம் என்றால் அது மிகையாகாது. வேதவசனங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதன் மூலமும், தவறாக வியாக்கியானம் செய்வதன் மூமும் பல தவறான விளக்கங்கள் கிறிஸ்தவ உலகில் உருவாகியுள்ளன. அவ்வகையில், யோவான் எழுதியுள்ள சுவிஷேசத்தில உள்ள இயேசுகிறிஸ்துவின் கடினமான கூற்றுக்களில் கடைசியாக உள்ள வசனமும் பாரியதோர் வேதப்புரடடு உபதேசத்தை உருவாக்கியுள்ளது. யோவான்  20:23 இல் இயேசுகிறிஸ்து  “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய  பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் “  என்று அறிவித்துள்ளார். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு ரோமன் கத்தோலிக்க சபையும், சில வேதப்புரட்டு குழுக்களும் தங்களுடைய மதத் தலைவர்களிடம் (குருவானவரிடம் அல்லது பாஸ்டரிடம்) மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி போதித்து வருகின்றன. (1)

இயேசு கிறிஸ்துவின் கூற்றிலுள்ள “மன்னித்தலும்“, “மன்னியாதிருத்தலுமே” மத்தேயுவின் சுவிசேஷத்தில் “கட்டுதலாகவும்“ “கட்டவிழ்க்கப்படுதலாகவும்“ குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தேயு 18:18 இல் இயேசுக்கிறிஸ்து தமது சீடர்களிடம் “ 'பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்“ என்று கூறினார். இதில் “கட்டுதல்“ என்பது மன்னியாதிருப்பதையும், “கட்டவிழ்ததல்“ மன்னித்தலையும் குறிக்கும் உருவக விபரணங்களாக உளளன. (2) யூதமதப் போதகர்கள் மத்தியில் “கட்டுதல்“ “அவிழ்த்தல்“ எனும் பத்ங்கள் ஒரு காரியத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் உபயோகிக்கப்படும் வார்த்தைகளாக இருந்தன. எனினும், ஆரம்பத்தில் இப்பதங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருந்தன. அதாவது, ஒருவனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டினால் அவன் கட்டப்பட்டிருக்கிறான். அல்லது அதிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டுள்ளான் என்று அறிவிக்க இப்பதங்கள் உபயோகிக்கப்பட்டன. (3) மத்தேயு 16:19 இல் பேதுருவிற்குக் கொடுக்கப்பட்ட இவ்வதிகாரம் மத்தேயு 18:18 இலும், யோவான் 20:23 சகல சீடர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “மத்தேயுவில் இக்கட்டளை சபை ஒழுக்க நடவடிக்கை எடுப்பதோடு தொடர்புள்ள அறிவுறுத்தலாக உள்ளது. ஆனால் யோவானில், சீடர்களின் சுவிசேஷப் பணியோடு தொடர்புற்றுள்ளது“ (4)  

இயேசுக்கிறிஸ்துவினுடைய வார்த்தைகள், பாவங்களை மன்னிக்கும் அல்லது மன்னியாதிருக்கும் ஆற்றல் சீடர்களுக்கு அருளப்பட்டுள்ளது என்ற அர்த்தமுடையவைகள் அல்ல. “மக்களுடைய பாவஙகள் மன்னிக்கப்பட்டுள்ளது. அல்லது மன்னிக்கப்படவில்லை“ என்று அறிவிக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது(5) என்பதையே இவ்வசனம் அறியத்தருகிறது. இது சீடர்களின் சுவிசேஷப் பிரசங்கத்தோடு இணைந்துள்ள ஒரு வி்டயமாக இருப்பதனால், இயேசு கிறிஸ்துவின் இக்கூற்றை சுவிசேஷப் பிரசஙகத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சீடர்கள் அறிவிக்கும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷப் பிரசங்கம் மக்களின் பாவ மன்னிப்பையு்ம் உள்ளடக்கிய செய்தியாகவே உள்ளது. இயேசுக்கிறிஸ்துவின் சிலுவைப் பலி மக்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு மெய்வாழ்வை அளிக்கும் நற்செய்தியாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே, சீடர்களின் சுவிசேஷப் பிரசங்கத்திற்கு மக்கள் சரியான விதத்தில் ஏற்றுக்கொண்டு, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, அவற்றுக்கு இயேசுக்கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலமே மன்னிப்புக்கிடைக்கும் என்று விசுவாசிக்கும்போது, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று அறிவிக்கும் அதிகாரத்தையே இயேசுக்கிறிஸ்து சீடர்களுக்குக் கொடுத்துள்ளார். அதேசமயம், ஒருவன் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நிராகரித்தால், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கக்கூடிய அதிகாரம் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டது (6). “சீடர்களின் விருப்பதிற்கும், தீர்மானத்திற்கு் ஏற்றப்படி தேவன் மக்களுடைய பாவங்களை மன்னிக்கிறவரக இருக்கவில்லை. மாறாக, தேவன் மக்களுக்கு அருளும் மன்னிப்பை அறிவிப்பவர்களாகவே சீடர்கள் இருந்தனர். (7) இதனால்தான் சீடர்கள் “என்னில் பாவத்தை மன்னிக்க முடியும்.“ என்று பிரசாரம் பண்ணிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் இயேசுக்கிறிஸ்து அருளும் பாவ மன்னிப்பின் செய்தியையே அறிவித்துக் கொண்டிருந்தார்கள். (8). உண்மையில், “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து, ஏற்றுக்கொள்பவர்களின் பாவங்களை அவர் மன்னிக்கிறார்“ என்று அறிவிக்கும் அதிகாரமே சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. (9). இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷம் மக்களுடைய மன்னிப்பைப் பற்றியதாக இருந்தமையால், தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி அச்செய்தியை ஏற்றுக்கொள்பவர்களை இயேசுக்கிறிஸ்து மன்னிக்கிறார் என்பதை அறிந்திருந்த சீடர்கள் அதை அவர்களுக்கு அறிவிக்கக்கூடியவர்களாக இருந்தனர். (10)

பாவங்களை மன்னிப்பதற்கு மனிதனுக்கும் ஆற்றல்  இல்லை என்பதை வேதாகமம் அறியத்தருகின்றது. தேவனால் மட்டுமே பாவங்களை மன்னிக்கமுடியும் என்பதே வேதாகமம் அறியத்தரும் சத்தியமாகும் (மாற். 2:7) இயேசுக்கிறிஸ்து தேவனாக இருக்கின்றமையால் அவர் மக்களின் பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார். (மத். 9:6) இதனால“ நம்முடைய பாவங்களை இயேசுக்கிறிஸ்துவிடம் அறிக்கையிடும்படியே வேதாகமம் அறிவுறுத்துகிறது. (1 யோவான் 1:9) எனவே, குருவானவர்களுக்கும் பாஸ்டர்மார்களுக்கும் மக்களின் பாவங்ளை மன்னிக்கும் ஆற்றல இருக்கிறது என்ற போதனை வேதப்புரட்டு உபதேசம் ஆகும். மேலும், சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் மனந்திரும்பும் மனிதனுடைய பாவங்களைத் தேவன் மன்னித்துள்ளார் என்று அறிவிக்கும் அதிகாரத்தையே இயேசுக்கிறிஸ்து சீடர்களுக்கும், சுவிசேஷசத்தைப் பிரசங்களிக்கும் ஊழியர்களுக்கும் கொடுத்துள்ளமையால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் மூலம் பாவம் மன்னிப்பைப் பெற்று இரட்சிக்கப்பட்டவன், அதன் பின்னர் தான் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்ப பெறுவதற்காக ஊழிய்காரரிடம் தனது பாவத்தை அறிக்கையிட வேண்டிய அவசியமில்லை. அவன் தன் பாவத்தை நேரடியாக இயேசுக்கிறிஸ்துவிடமே அறிக்கையிட்டு அதற்கான மன்னிப்பைப் பெற்றிடலாம். “இயேசுக்கிறிஸ்துவினுடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7) என்று கூறும் வேதாகமம், நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் (1 யோவான் 1:9) என்னும் சத்தியத்தை அறியத்தருகிறது. “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறமையால் (1 யோவான் 2:1) நாம் அவரிடமே நம் பாவங்களை அறிக்கையிட வேண்டும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இயேசுகிறிஸ்து மட்டுமே மத்தியஸ்தராக இருக்கின்றமையால் (1 தீமோ. 2:5-6) நாம் மனிதர்களிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டால் அவற்றுக்குத் தேவனிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காது. எனவே, தேவன் அருளும் பாவ மன்னிப்பையும் மெய்வாழ்வையும் பெற்றுக்கொள்வதற்கு மனிதர்கள் இயேசுக்கிறிஸ்துவிடமே தங்களுடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும். 

Footnote & Reference
(1) Brown, R. 'The Kerygma of the Gospel According to John : The Johnnie View of Jesus in Modern Studies; in Interpretation p. 391 
ரோமன் கத்தோலிக்க சபையில் பாவ அறிக்கை முக்கயமான விடயமாக உள்ளது. பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்காக, அவற்றை சபையினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குருவானவர்களிடம் அறிக்கை செய்ய வேண்டும் என்பது ரோமன் கத்தோலிக்க சபையின் உபதேசமாகும். அறிக்கையிடப்படும் பாவத்தை செவிமடுக்கும் குருவானவர், அதற்காகச் செய்ய வேண்டிய பரிகாரச் செயல்களையும் அறிவிப்பதற்கு அதிகாரம் உண் என்றும் ரோம சபை கூறுகிறது, (L. Boettner, Roman Catholicism, pp196-197)

(2) J.R. Michaels, John : New International Biblical Commentary, pp-349-359)

(3) G.R.Beasley-Murray, John : World Biblical Commentary Vol. 36, p. 383)

(4) D.A.Carson, John : The Pillar New Testament Commentaries, p 655

(5) L. Morris, John : The New International Biblical Commentary on the New Testament, p. 847)

(6) H.J. Cadbury, 'The Meaning of John 20:23, Mathew 16:10 and Matthew 18:18' in Journal of Biblical Literature, pp 251-254, Mantey, J.R. 'The Mistranslation of the Perfect Tense in John 20:23, Mathew 10:19 and Matthew 18:18; in Journal of Biblical Literature, pp 243-249)

(7) M.C.Tenney, John : The Expositor's Bible Commentary Volume 9, p 193

(8) அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே (இயேசு கிறிஸ்து) பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.(லூக். 24:47) என்று அறிவிக்கப்பட்டபடியே, சீடர்கள் “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களே பாவ மனனிப்பைப் பெறுவார்கள் (அப். 10:43) என்னும் சத்தியத்தை அறிவித்து வந்தனர். 

(9) H.M. Woods, Our Priceless, Heritage, P. 118

(10) W. Barclay, John Volume 2: The Daily Study Bible, P 274.


(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கர்ததரின் வார்த்தைகளில் கடின வரிகள் (யோவான் சுவிசேஷத்திற்கான விளக்கவுரை) எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு இலங்கை வேதாகமக் கல்லூரி)












Wednesday 17 August 2011

இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா?


Did Jesus rise from the dead or did he recover from a state of unconsciousness?


'இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. ஆழ்ந்த மயக்க நிலையிலிருந்து அவர் மீண்டதையே அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் எனக் கூறுகின்றனர்“ என இரு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்ததாக இலங்கை வானொலியி்ல் 27.04.1991 சனிக்கிழமை ஒலிபரப்பட்ட செய்தியிலும் அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தியிலும் குறிப்பிடப்பட்டது அநேக கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வேளையில், கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதாய் இருந்தது. எனினும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. அவர் மயக்க நிலையிலேயே இருந்தார் எனும் இக்கருத்து இன்று உருவான ஒரு புதிய கருத்து அல்ல. கிறிஸ்தவ மார்க்கத்தின் மையமாக இயேசு கிறிஸ்துவின்  உயிர்தெழுதல் அமைந்திருப்பதனால், கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சித்த அனைவருமே இயேசு கிறிஸ்து உயிர்தெழுதலை மறுதலிக்க பலவிதமான கருத்துக்களை காலத்திற்குக் காலம் கூறிவந்துள்ளனர். எனவே, நம்நாட்டின் செய்தியளிப்பு ஊடகங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட இச்செய்தி, ஒரு புதிய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக ஒரு பழைய கண்டத்தின் ஒரு புது அறிவிப்பேயாகும். 

“இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணத்தால் கிறிஸ்து சிலுவையில் உணர்விழந்தார். அவரது தோல் கருமை படிந்திருந்ததையும் அவர் அசைவற்று இருந்ததையும் வைத்து அவர் இறந்துவிட்டாரென்று தவறாக கணிக்கப்பட்டது. இதனால் அவரைச் சுற்றி நின்றவர்கள் அவர் இறந்து விட்டாரென்று நம்பியதில் எதுவித சந்தேகங்களுமில்லை“ என்று லோயா டேவிஸ் என்பவரும் மார்கிரட் என்ற சித்தாந்தவாதியான அவரது மனைவியும் தெரிவித்துள்ளதாக 28.04.91 இல் இதுபற்றி பிரசுரிக்கப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கான போதுமான சான்றுகள் இருக்கும்போது, அவர் இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக சிலுவையில் உணர்விழந்தார் எனக் கூறுவது அறிவீனமானதும் ஆதாரச்சான்றுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையையுமே காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே இயேசு கிறிஸ்து, மயக்கத்திலிருந்து உணர்வடையவில்லை. மாறாக மரணத்திலிருந்தே உயிர்த்தெழுந்தார் என்பதற்கான ஆதாரச் சான்றுகளை ஆராய்ந்தறிவோம். 

(1) இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டார் 


இயேசு கிறிஸ்துவின் மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதொன்றல்ல. அவர் சிலுவை மரத்தில் அறையப்பட்டு மரணமடைந்தார் சிலுவை மரத்தில் ஒருவனை அறைந்து கொலை செய்வது, அக்காலத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முறையாகும். “ஆரம்பகாலத்தில் காட்டுமிராண்டி களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறையி யானது பின்பு, பெர்சியர்களினாலும் அதன் பின்ப கிரேக்கர்களாலும் ரோமர்களினாலும் பின்பற்றப்பட்டது. (The Cross of Christ by John Stott) இது மிகவும் கொடூரமான மரணதண்டனை முறையாகும். சிலுவை உருவில் (+ எனும் உருவில்) அமைக்கப்பட்ட மரத்தில் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவனை தொங்கவைப்பது மூர்க்கமான, ஈவிரக்கமற்ற மரணதண்டனை முறை என்பதை மறுப்பதற்கில்லை. “கி.பி. 315 இல் ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டன்டைன் மரணதண்டனை முறையை மாற்றியமைக்கும் வரை இம்முறையே பின்பற்றப்பட்டு வந்தது. “ (Crucifixion by D.H.Wheaton in New Bible Dictionary) இயேசு கிறிஸ்துவும் ஒரு குற்றவாளியைப் போல் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார். (மத். 27:35-56, மாற் 15:24-41, லூக் 23:33-49, யோவான் 19:18-30)

ரோமர்கள் குற்றவாளியை சிலுவையில் அறைந்து மரணதண்டனையை நிறைவேற்றும்முறை இயேசு சிலுவையில் மயக்க நிலையில் இருக்கவில்லை. மாறாக, மரித்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. அக்காலத்தில் ஒருவனுக்கு மரணதண்டனை எனும் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அவனை ஒரு தூணில் கட்டிவைத்து, ஆடைகளை அகற்றி, தோல் கிழிந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடும்வரை அவனை சாட்டையால் அடிப்பது வழமை. இவ்வாறு குற்றவாளியை அடிப்பதற்கு ரோமர்கள் உபயோகித்த சாட்டையானது கூரிய பற்களைக் கொண்ட எலும்புத் துண்டுகளும், ஈயத் துண்டுகளும் பொருத்தப்பட்ட, தோலினால் செய்யப்பட்ட பல வார்களைக் கொண்ட சாட்டையாகும். இத்தகைய சாட்டையால் ஒருவனை அடிக்கும்போது அவனது தோல் கிழிந்து, நாடி நாளங்கள் உடைபட்டு, இரத்தம் வழிந்தோடும். “குற்றவாளி மரிக்கும்நிலையை அடையும் வரை அவனை சாட்டையால் அடிப்பது உரோமர்களது வழக்கமாகும். (Crucifixion of Jesus by C. T.Davis) இதை மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான இயூசிபியசும் உறுதிப்படுத்தியுள்ளார். (Trials and crucifixion of Christ by Eusebius) இயேசு கிறிஸ்து இவ்வாறு அடிக்கப்பட்டார் என வேதம் கூறுகிறது. (யோவான் 19:1, மாற்கு 15:15, மத்தேயு 27:26)உண்மையில் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் இவ்வாறு அடிக்கப்பட்டது அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே மரிக்கக்கூடிய நிலையை அடைந்து விட்டதை காட்டுகிறது. 

அக்காலத்தில் மரணதண்டனை என குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட இடத்திலிருந்து தண்டனை நிறைவேற்றப்டும் இடம்வரை குற்றவாளியே தன்னுடைய சிலுவையை எடு்த்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதனால் இயேசுவை அடித்த போர்வீரர்கள் அவரை நிந்தித்து, சிலுவை அவர் மீது வைத்து, அதை சுமந்துவரும்படி அவரைப் பணித்தனர். ஆனாலும் இயேசு கிறிஸ்து  நன்றாக அடிக்கப்பட்டு மரிக்கக்கூடிய நிலையை அடைந்திருந்தமையால், அவரால் அதை சுமக்க முடியாமல் இருந்தது. “குற்றவாளி தன்னுடைய சிலுவையை சுமக்க முடியாது பலவீனமாக இருந்ததால், ரோமப் போர்வீரர்கள் தம் கண்ணில் தென்படும் ஒரு உள்ளூர்வாசியை சிலுவையை சுமந்து வரும்படி பலவந்தப்படுத்துவர் (The Daily Study Bible : Matthew by William Barclay) இதனால் அவ்வழியே வந்த சீமோன் எனும் மனிதனை இயேசுவின் சிலுவையை சுமந்து வரும்படி செய்தனர். (மத். 27:32, மாற்கு 15:21)  உண்மையில்.  இயேசுவால் தன்னுடைய சிலுவையைக் கூட சுமக்க முடியாமல் இருந்தமைக்குக் காரணம், அவர் மரிக்கக்கூடிய வண்ணம் பலவீனமான நிலையிலேயே இருந்தமையே என்பதை மறுப்பதிற்கில்லை.

சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு குற்றவாளி வந்து சேர்ந்ததும் அவனது கைகளும் கால்களும் சிலுவை மரத்தில் பிணைக்கப்பட்டு, ஆணிகள் அடிக்கப்பட்டு, தொங்கவிடப்படுவான். இயேசுவை “கொல்கொதா“ என்னுமிடத்தில் இவ்விதமாக ரோமப் போர்வீரர்கள் சிலுவையில் அறைந்தனர். (மாற். 15:22-24, மத். 27:32-35) அவர் ஆறு மணித்தியாலங்கள் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபின் மரணமடைந்தார். (மாற். 15:24-26 உடன் மத். 27:46-50 ஒப்பிடவும்) இயேசு கிறிஸ்து சாட்டைமயினால் நன்றாக அடிக்கப்ப்டு மரிக்கக்கூடிய நிலையில் இருந்தமையினாலேயே சிலுவையில் அறையப்பட்டு ஆறு மணித்தியாலங்களில் மரணமடைந்தார். (மத். 27:50, மாற்கு 15:37, லூக். 23:46) அவர் மயக்க நிலையில் இருக்கவில்லை. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்தமையினாலேயே அவருடைய காலெழும்புகள் முறிக்கப்படவில்லை. (யோவான். 19:32-33) ரோமர்கள் யாரையாவது சிலுவையில் அறைந்தால், அவனை அப்படியே சிலுவையில் இருந்து மரிப்பதற்கு விட்டுவிடுவார்கள். சில சமயங்களில் குற்றவாளிகள் நாட்கணக்கில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் யூதர்கள் தண்டிக்கப்பட்ட நாளிலேயே அடக்கம் ப்ண்ணவேண்டும் எனும் தேவகட்டளையின்படி வாழ்ந்தனர். (உபா. 2:22-23) மேலும் ஓய்வு நாளானது சரீரங்கள் மரத்தில் தொங்கவிடக்கூடாது என்பதனால் அவர்கள் சிலுவையில் அறையப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்காக அவர்களது காலெலும்புகளை முறிக்கும்படிக்கும் சரீரங்களை எடுத்துக் கொண்டு போவதற்கும் பிலாத்துவிடம் அனுமதி கேட்டனர். (யோவான் 19:31) 'சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பவனை உடனடியாக மரிக்க வைக்க வேண்டுமானால் அவனது காலெழும்புகள் முறிக்கப்படும். (The Resurrection factor by Josh McDowell) பிலாத்து சரீரங்களை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தமையால் போர்வீரர்கள் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவ்களின் காலெழும்புகளை முறித்தனர். ஆனால் இயேசுவின் காலெழும்புகளை முறிக்கவேண்டியதாயிருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே மரித்திருந்தார். (யோவான் 19:32-33) இயேசு கிறிஸ்து சிலுவையில் மயங்கிய நிலையில் இருந்திருந்தால் அவரைது காலெழும்புகள் முறிக்கப்பட்டிருக்கும். அவர் மரித்திருந்தமையினாலேயே அவரது காலெழும்புகள் முறிக்கப்படவில்லை. மேலும் பிலாத்து, இயேசு கிறிஸ்து மரித்ததை உறுதிப்படுத்தியபின்பே சரீரத்தை யூதர்களிடம் கொடுத்தான். (மாற். 15:43-45) அத்தோடு அவரை சிலுவையில் அறைந்த ரோமப் போர்வீரர்கள் மய்ககத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறியாதவ்கள் அல்லர். அவர் மரித்திருந்தமையினாலேயே அவரது சரீரத்தை யூதர்களிடம் கொடுத்தனர். 


இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் ஈட்டியினால் குத்தப்பட்ட அவரது விலாவில் இருந்து புறப்பட்டு வந்த இரத்தமும் தண்ணீருமாகும். (யோவான். 19:34) “இச்சமயம் இயேசு சிலுவையில் மரிக்காமல் இருந்திருந்தால் அவருடைய விலாவில் போர்ச்சேவகன் ஈட்டியால் குத்தியபோது இரத்தம் மட்டுமே வந்திருக்கும். ஆனால் அவருடைய சரீரத்திலிருந்து தண்ணீரும் வந்தது. அவர் மரித்திருந்ததையே காட்டுகிறது. (The Day Death Died by Michael Green) “இதய வெடிப்பால் மரித்த சடங்லங்களைப் பரிசோதித்த வைத்தியர்கள் அச்சடலங்களில் இதயத்தைச் சூழவுள்ள பகுதியில் உறைந்த நிலையில் இரத்தமும் தண்ணீர் போன்ற திரவமும் இருப்பதற்கு அத்தாட்சிகளாய் உள்ளனர். (Did Jesus Die of a Broken Heart by Stuart Bersma) “மரிக்க்கூடிய நிலையில் மிகவும் பலவீனத்தோடு இரு கரங்களும் இருபாகத்திலும் நீட்டப்பட்டு, சிலுவை கிடைக்கம்பத்தின் இரு ப்ககத்திலும் பிணைக்கப்பட்ட நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தமையால் அவரது இருதயம் வெடித்து அவர் மரித்துள்ளார். (The Daily Study Bible : John by. W. Barclay) அவருடைய விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்ததாக வேதம் கூறுகிறது. (யோவான் 19:34) எனவே இயேசு கிறிஸ்து உண்மையிலேயே சிலுவையில் மரித்திருந்தார் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. 

(2) இயேசு கிறிஸ்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார். 


இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. அவர் மய்ககநிலையிலேயே இருந்தார் எனும் பத்திரிகை செய்தியில “இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு நிலத்தில் வைக்கப்பட்டதும் இரத்த ஓட்டம் மீண்டும் ஏற்பட்டது. இயேசுவுக்கு உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் அவரை எடுத்துச் சென்று பராமரித்தனர் என்று லண்டனிலுள்ள ரோயல் கல்லூரி மருத்துவ சஞ்சிகையில்  வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினகரன் 28.04.91) ஆனால் அவர் இரு கரங்களும் சிலுவை மரத்தின் கிடைகம்பத்தில் நீட்டப்பட்ட நிலையில் பிணைக்கப்பட்டிருந்தமையால் இதயம் இழுக்கபட்ட கிழிந்து மரித்தார் என்று பார்த்தோம். இயேசு கிறிஸ்து மரித்ததை உறுதிப்படுத்திய பின்பு அவருடைய சரீரத்தை பிலாத்து யூதர்களிடம் கையளித்தான் (மாற்கு 15:43-45) அதன் பின்பு அவருடைய சரீரம் யூத முறையின்படி அடக்கம் பண்ணப்பட்டது. (மத். 2757-60, மாற். 15:42-47, லூக். 23:50-55, யோவான் 19:38-42) இயேசு கிறிஸ்து உண்மையிலேயே மரித்திருந்தமையினாலேயே அவருடைய சரீரம் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது. 

இயேசு கிறிஸ்துவின் சரீரம் யூத முறையின்படி அடக்கம் பணணப்பட்டமையினால் (யோவான். 19:40) அவர் சிலுவையில் மயக்க நிலையில் இருந்திருந்தால், மரண சடங்குகள் அவரை மயக்கத்திருந்து எழுப்பியிருக்கும். ஏனென்றால், “அவர்கள் மரித்த சரீரத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு அதை கல்லினால் செய்யப்பட்ட ஒரு மேசையின்மேல் வைத்து,, இளஞ்சூடான நீரினால் கழுவுவார்கள். (Belief Rites and Customs of the Jews Connected with Death Burial and mourning by A.P. Bender) இயேசு கிறிஸ்து உண்மையில் மரிக்காமல் இருந்திருந்தால் இவ்வாறு அவரைக் கழுவிய போது அவர் மயக்கம் தெளிந்து எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடககவில்லை. “சரீரம் கழுவப்பட்டதன் பின் வாசனைத் திரவியங்கள் போடப்பட்டு சீலைகளினால் சுற்றப்பட்டு கல்லறைக்குள் வைக்கப்படும் (Ibid) காலிலிருந்து கழுத்து வரையும் முதலில் சீலைகள் சுற்றப்படும். பின்பு தலை தனியாக சுற்றப்படும். “சீலைகளை இலகுவாக சரீரத்திலிருந்து பிரித்தெழுக்க முடியாத வண்ணம் ஒட்டுந் தன்மையுடைய வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு சீலைகள் சரீரத்தை சுற்றி சுற்றப்படும். (Homilies of St. John by. J. Chrysostom) இயேசு கிறிஸ்துவின் சரீரமும் இவ்வாறு வாசனைத் திரவியங்களுடன் சீலைகளினால் சுற்றப்பட்டு கல்லறையொன்றுக்குள் வைக்கப்பட்டது. (யோவான் 19:41-43, லூக். 23:53)

இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல் புரட்டி வைக்கப்பட்டதோடு (மத். 27:60) சரீரத்தை எவரும் களவெடுத்துக் கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக காவலும் போடப்பட்டு அதற்கு அரசின் முத்திரையும் இடப்பட்டது (மத். 27:65-66) எனவே சரீரம் அக்கல்லறைக்குள் இருந்தது என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. 

“இயேசுவின் கல்லறையில் போடப்பட்ட ரோம மு்த்திரையானது அவரது சரீரம் அங்கு இருக்கிறது என்பதை ரோம அரசு உறுதிப்படுத்து்ம் செயலாக உள்ளது. (The Resurrection Factor by Josh McDowell) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தமையினாலேயே அவருடைய சரீரம் கல்லறைக்கள் வைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து கல்லறையில் அவருடைய சரீரம் அடக்கம் பண்ணப்பட்டமையினால் அவர் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தார் என கூறுவதற்கில்லை வேதாகமம் தெளிவாக குறிப்பிடுவது போல அவர் மரணத்திலிருந்தே உயிர்த்தெழுந்தார்)

(நன்றி சத்தியவசனம், 1991, கட்டுரையாசிரியர் சகோ. எம்.எஸ் வசந்தகுமார்)


Saturday 13 August 2011

அசாதரண ஜெபவீரர்


“புகழ்பெற்ற மனிதர்“ என்ற பெயரை ஈட்டுவதற்கு ஒருவர் செல்வந்தவராகவோ அல்லது அநேகரால் அறியப்பட்டவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வுண்மையை வேதாகமம் சிலரது வாழ்க்கை மூலமாக விளக்குகிறது. இம்மனிதர்களைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்வ வல்லவரின் கரத்தில் தங்களை அர்ப்பணித்தவுடன் இவர்களது வாழ்வில் கிடைத்த உயர்வுகளும் சிறப்புகளும் இவர்களை வியத்தகு சாட்சிகளாக மாற்றிவிட்டன. அத்தகைய மனிதர்களில் ஒருவர்தான் யாபேஸ்

சத்திய வேதத்தின் இரு நாளாகம பத்தகங்களும் இஸ்ரவேலரின் வரலாற்றை விளக்கும் காலக் குறிப்பேடுகளாகத் திகழ்கின்றன எனக் கூறுவது மிகையாகாது. 1 நாளா. 4:9 வரையுள்ள வம்ச அட்டவணையில் சுமார் 425 மனிதர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளும், சிறப்புக்களும் அதி்ல குறிப்பிடப்படவில்லை. இப்பட்டியலின் நடுவே 9,10 ம் வசனஙக்ளில் யாபேஸ் என்பவரது ஜெபம் காணப்படுகின்றது.

யாபேஸ் செல்வந்தர் அல்லர்; பெரும் பதவியை வகிகத்தவரும் அல்லர். ஆயினும் இவர் செய்த இச்சிறு ஜெபம் இவரை புகழ் ஏணியின் உச்சிக்குக் கொ்ண்டு சென்றது எனலாம். “யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய் : நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி : “தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்க என்னைத் துக்கப்படுத்தாத படிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்“ என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.“ என்று தேவனோடும் மனிதனோடு்ம் போராடி மேற்கொண்ட கோத்திரப் பிதா யாக்கோபு வேண்டியதுபோலவே யாபேஸ் ஜெபத்தில் ஆசீர்வாதத்திற்காகப் போராடினார். “அவர் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார்“

யாபேஸ் தன் சகோதரரைப் பாரக்கிலும் கனம் பெற்றவராயிருந்தார். இவ்வதிகாரத்தின் வம்சவரலாற்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர் எவரும் தாழ்ந்தவர்களோ இழிவானவர்களோ இழிந்தவர்களோ அல்லர். அவர்களைப் பற்றிய மோசமான குறிப்புகளும் இங்கு தரப்படவில்லை. ஆயினும் தம்மைக் கனபப்டுத்துகிறவர்களை உயர்த்தும் தேவன், யாபேஸின் ஜெபத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டு, அவரைக் கனப்படுத்துகிறவர்களை உயர்த்தும் தேவன், யாபேஸின் ஜெபத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டு அவரைக் கனப்படுத்தியிருக்கின்றார். தேவன் உள்ளீடாக அருளியதை யாபேஸ் தனது ஜெபத்தில் வெளியீடாக தந்தார். நம் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதவசனம் கூறுகிறது. இக்கருத்தினை மாபெரும் ஊழியக்காரரான ஹட்சன் டெய்லர் ஒரு வாலிபர் கூடுகையில் செயல் விளக்கமாக காட்டினார். அவர் உரையாற்றுமிடத்தில் ஒரு மேஜையில் நீர் நிரம்பியிருந்த பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தனது சொற்பொழிவின் நடுவே அவர் அம்மேஜையை அடிக்கடி தட்டினார் அந்த அதிர்வில் பாத்திரத்திலிருந்த நீர் வெளியே சிந்தியது. “பாத்திரத்தின் உள்ளே என்ன இருக்குமோ அதுவே வெளியே வரும்“ என்பதை அழகாக வாலிபர்களுக்கு புரிய வைத்தார். 

யாபேஸின் ஜெபத்திலிருந்து அவரது இருதயத்தின் நினைவுகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதையே இயேசுக்கிறிஸ்துவும் “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.“ லூக். 6:45  இல் விள்க்கியுள்ளார். யாபேஸ் தன் சகோதரனைப் பார்க்கிலும் கனம் பெற்றவராய் இருந்தார். சிறந்த குணசீலர். ஆயினும் அவர் துக்கமுடையவராய்க் காணப்படுகிறார். யாபேஸ் என்ற சொல்லுக்கு துக்கம் என்று பொருள். அவருடைய தாயார், “நான் துக்கத்தோடே இவனைப் பெற்றேன்“ என்று கூறினதாக நாம் வாசிக்கிறோம். ஒருவேளை பிரசவத்தின்போது அதிக வேதனையையும் வலியையும் அவர் அனுபவித்திருக்கக் கூடும். ஆயினும் துக்கத்தோடே அவர் பெற்ற அம்மகன் ஜெபத்தினால் விலையேறப்பெற்ற மகனாக மாறினான். 

வம்சவரலாறு அட்டவணையில் இடம்பெற்ற நுற்றுக்கணக்கானவர்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளவர் இவரே “ஸ்த்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருககும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்“ (யோவான் 16:21) என்று இயேசு கூறினார். இந்தப் பிரசவவேதனையை அனுபவிக்கின்றவள் தனது சிசுவைக் கையில் ஏந்தியவுடன்  அவளது துக்கம் சந்தோஷமாக மாறிவிடுகிறது. ஆர்வத்துடன் காத்திருக்கும் உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். நமது வாழ்விலும் பல நிகழ்வுகள் துக்கத்தில் ஆரம்பமானாலும் சந்தோஷத்தில் முடிவுறுவதை அறிவோம். யாபேசின் வாழ்க்கை துக்கத்தில் ஆரம்பமானாலும் அது வெகுவிரைவில் மகிழ்ச்சியாக மாறினது. நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவும் ஸ்திரியின் வித்தாக இவ்வுலகில் வந்து பாடனுபவித்து நம்மை மீட்கும் இரட்சகராகி மகிமையடைந்தாரே.

பழைய ஏற்பாட்டு நூலில் நீதிமானாகிய நோவா முதல் அநேக பக்தர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்டதாக நாம் வாசிக்கிறோம். இவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் தேவனோடு நெருங்கி உரையாடும் உறவை பெற்றிருந்தார்கள்.இவ்வரிசையில் யாபேசும் ஒருவர். இவர் சிறந்த பண்பாளராகத் திகழ்ந்தாலும் இவரது ஜெபமே அனைத்திலும் மகுடமாக அமைந்துள்ளது. இவரது ஜெபம் கேட்கப்படுவதற்கு இவரது குணமும் முக்கியக் காரணமாகும். 

பிரியமானவர்களே உங்களது ஜெபமானது கேட்கப்படவேண்டுமானால் உங்களுடைய வாழ்வு செம்மையாயிருத்தல் அவசியமாகும். “பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லை“ என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே நம்முடைய தனிப்பட்ட வாழ்வு ஒழுங்க்கமானதாகவும் தேவனிடம் நெருங்கி உறவாடும் நிலையையும் கொண்டிருத்தல் வேண்டும். யாபேசின் ஜெபம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. என்னை ஆசீர்வதியும்
ஆசீர்வாதத்தை விரும்பி யாபேஸ் இந்த ஜெபத்தை ஏறெடுத்துள்ளார். தேவன் உங்களை ஆசீர்வதிக்கக்கேட்டு நீங்கள் ஜெபித்ததுண்டா? இவ்வாறு கேட்பது சரியா? தேவன் வாக்குப்பண்ணாததை அவர் கேட்கவில்லை. தேவன் வாக்களித்த தேனும் பாலும் ஓடு் தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்துவிட்டனர். ஆனால் அங்கே வசித்துவந்த கானானியரைத் துரத்தி விட அவர்களால் இயலவில்லை. ஆகவே யாபேஸ் தேவன் ஆணையிட்ட அக்காரியத்தை நிறைவேற்ற வஞ்சித்தார். மேலும், தேவனுடைய ஆசீர்வாதம் தனக்கு இல்லையெனில் தானும் வெற்றிபெற இயலாது என்பதை யாபேஸ் அறிந்திருந்தார். எனவேதான். “தேவனே நீர் கட்டளையிட்ட பணியை நான் நிறைவேற்ற என்னை ஆசீர்வதியும்“ என ஜெபித்தார் நாமும் கூட நமது முயற்சியில் வெற்றியடைய வேண்டுமெனில் நமககு தேவ ஆசீர்வாதம் தேவை என்பதை ஒத்துக் கொள்ள அதற்காக ஜெபிக்க வேண்டும். 

2. என் எல்லையை பெரிதாக்கும். 
அநேகர் “இது செழிப்பினை விரும்புவதாயும் சுயநலத்தை வெளிப்படுத்துவதாயும் உள்ளது“ ஆகவே இவ்வாறு நாம் ஜெபிப்பது தவறு எனக் கூறுகின்றனர். ஆனால் இவ்வாக்கியத்தை நாம் ஆராய்வோமானால் இது வெளிப்படுத்தும் கருத்து வேறு என்பதை நாமறிந்து கொள்ளலாம். “உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,“ (உபா 19:9) ஆனால் இதனை இஸ்ரவேலில் தனது இனத்தார்களோ, சகோதரர்களோ நிறைவேற்ற இயலாததால்தான் யாபேஸ் முயற்சிசெய்ய எண்ணினார். அதிக நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் மண்ணாசையில் இதனை அவர் கேட்கவில்லை என்பது தெளிவு.

3. தேவரீர் என்னோடிரும்
தேவனே எனக்கு அதிக செல்வத்தையும் தாரும் என்று எவரேனும் ஜெபித்தால் அவரது குணத்தை நாம் சந்தேகிக்கிறோம். ஆனால் வசனம் 9 இல், யாபேஸின் குணநலத்தையும் வசனம் 10ல் அவரது நோக்கத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம். மேலும், தேவரீர் என்னோடு இரும் என்று யாபேஸ் விண்ணப்பிக்கிறார். முதலாவது தேவனுடைய ஆசீர்வாதத்தையும் இரண்டாவது செழிப்பையும் மூன்றாவது தேவனுடைய பிரசன்னத்தையும் நாடுகிறார். இன்று அநேக விசுவாசிகள் தேவனுடைய ஆசீர்வாதத்தை மட்டும் தேடுகிறார்களேயன்றி அவரது பிரசன்னத்தையோ விரும்புவதில்லை. ஆனால் யாபேஸோ “தேவனே, இஸ்ரவேல் மக்களுக்கு நீர் கொடுத்த ஆணையை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். இது என்னால் கூடாத காரியம். ஆகவே, தேவரீர் என்னோடு கூட இருந்து என் கரத்தைப் பிடித்து வழிநடத்தும்.“ என்று கெஞ்சுகிறார்

தேவன் எம்மோடிருக்கிறார் என்ற வேதவசனம் நமக்கு ஆறுதலை அளிக்கிறது. “போ“ மற்றும் செய் என்று தேவன் நமக்கு கட்டளையிட்டுவிட்டு அவர் பரலோகத்தில் ஓய்வு எடுப்பதில்லை. “இதோ, உலகத்தின் முடிவுப்பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.“ என்று அவர் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார். தேவன் நமக்கு முன்னே செல்கிறார். (ஏசா. 48:17) நமக்கு பின்னே இருக்கிறார் (ஏசா 30:1) அவருடைய நித்திய புயங்கள் நமக்குக் கீழே ஆதாரமாய் உள்ளது. (உபா. 33:27) தேவனுடைய ஆவி எனக்குள்ளே இருக்கிறது. (1 கொரி. 3:16) மேலே, கீழே, வலது, இடது, முன்னே, பின்னே எங்கு சென்றாலும் தேவனை நம்மோடு அழைத்துச் செல்கிறோம். அவர் விரும்பாத எந்த இடத்திற்கும் நாம் செல்லக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

அநேகர் நாம் விரும்பிக் கேட்கும் காரியத்தை தேவன் தர மறுத்துவிடுவார் என அஞ்சி சிலர் அவற்றை கேட்பது கிடையாது. நாம் தேவனிடத்தில் கேட்பதனால் அவரை நிர்ப்பந்திப்பது இல்லை. “தேவனே என்னைக் காப்பாற்றும்“ என்பதற்கும் “தேவனே, நான் இன்று செல்கிற பிரயாணத்தில் என்னைக் காப்பாற்றும்“ என்பதற்கும் வித்தியாசம் உண்டு். இரண்டாவது ஜெபம் குறிப்பிட்டுக் கேட்கும் ஜெபமாகும். அதேபோல் “எனக்கு வாழ்க்கைத் துணையைத் தாரும்“ என ஜெபிப்பது வேறு. எனக்கு இன்னாரைத் தாரும் என ஜெபிப்பது வேறு. நம்முடைய தேவைகளை நமது பரலோகப் பிதாவினிடத்தில் கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர் அவ்விதமான பதிலை தரவேண்டும் என அவரை நிர்ப்பந்திக்கக் கூடாது. 

பவுல் உரோமாப்புரியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதும் நிருபத்தில் ஜெபத்தை குறிப்பிடுகிறார். “எவ்விததிலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.“ தனது சூழ்நிலையில் தேவன் கிரியை செய்தற்கு பவுல் தன்னை அர்ப்பணிக்கிறார். இங்கு அவரது ஜெபம் தேவனை நிர்ப்பந்திக்காத முறையிலேயே உள்ளது. 

4. தீங்கிற்கு என்னை விலக்கிக் காத்துக் கொள்ளும். 
இங்கே, யாபேஸ் சொல்லும் தீங்கு சரீரத்தின் தீங்கைக் குறிக்கிறது. தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆணையிட்ட தேசத்தைதச் சுதந்தரிக்கும் முயற்சியில் அநேக தீங்குகள் நேரிடலாம். அத் தீங்கிலிருந்து தேவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும். தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பான வேலி போடப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். 

இஸ்ரவேல் தேசத்து மேய்ப்பர்கள் தங்கள் மந்தையைப் பாதுகாக்கும் முறை சற்று வித்தியாசமானது. அவர்கள் மந்தைகளைக் காவல் காப்பற்கு நாய்களை வைத்துக் கொள்வது கிடையாது. ஆனால் இரவில் அனைத்து ஆடுகளையும் அவர்கள் பட்டிக்குள் அடைத்துவிடுவார்கள். அதற்குள்ளேயே சென்றுவர ஒரேயொரு வாசல்தான் உண்டு. மேய்ப்பன் அந்த வாசலில் படுத்துக் கொள்வான். அவன் அறியாமலோ அவனைத் தாண்டியோ எந்த ஒரு ஆடு் வெளியே செல்ல முடியாது. அவ்வாறே, வேறு எந்த மிருகமும் அவனைக் கடந்து சென்று அடுகளுக்குத் தீங்கும் செய்ய முடியாது. இவ்விதமான பாதுகாப்பையே யாபேஸ் தேவனிடம் வேண்டுகிறார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தமது சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் இப்பாதுகாப்பை “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதபடிக்கு தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.“ என்று கேட்கக் கூறுகிறார். 

யாபேஸின் வரலாற்றிலிருந்து அவரது சகோதரர்களிடமில்லாத பல நற்பண்புகளை அவர் பெற்றிருப்பதாக நாம் அறிந்து கொள்கிறோம். யாபேஸ் தேவனை நன்கு அறிந்திருந்தார். நீங்களும் நானும் தேவனை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். தேவாதி தேவனை அறிந்து கொள்ள நாம் சத்திய வேதத்தை நன்கு வாசித்து தியானித்து ஆராய வேண்டும். அப்பொழுது நாமும்கூட தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற நம்மை அர்பணித்து ஜெபிக்கமுடியும். நாம் வேண்டிக் கொள்வதையும் தேவன் நமக்கு அருளுவார். 


(ஆதாரம் :  சத்தியவசனம் April-June 2009, கட்டுரையாசிரியர் - டாக்டர் உட்ரோ குரோல்) 



Monday 8 August 2011

கள்ளப் போதகர்களின் செயலும் செய்தியும்


1. பக்தியில்லாதவர்கள் 
தேவனைப் பற்றிய பயமோ விசுவாசமோ, அவரது நாமத்திற்குக் கீழ்படிய மனமோ விசுவாசமோ அவரது நாமத்துக்குக் கீழ்படிய மனமோ இல்லாதவர்கள். தங்கள் இருதயத்தில் சிறிதேனும் கர்த்தருக்கு முன் பக்தியுள்ள பரிசு்த்தமுள்ள மனிதராய் வாழ வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்கள். தேவ பக்திக்குரிய இரகசியம் யாவரும் ஒப்புக்கொள்ளும்படி மகா மேன்மையுள்ளது. ஆனால் இவர்களுடைய பக்தி யாவராலும் ஒப்புக் கொள்ள முடியாது. தேவ பக்தியை மகா மேன்மையுள்ளதாய் இவர்கள் நினையாதவர்கள். (யூதா 4)

2. இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பவர்கள்
இயேசு, கிறிஸ்து அல்ல என்றும் தேவ குமாரன் இல்லை என்றும் மறுதலிப்பவர்கள். இயேசுவின் கன்னிப்பிறப்பு, அவரின் மரணம், உயிர்தெழுதல், பரமேற்றுதல் இவைகளை முழுவதுமாக மறுக்கிறவர்கள். இயேசுவை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள். (1 யோவான் 2:22) 

3. இயேசுவை அறிக்கை பண்ணாதவர்கள் 
மாம்சத்தில் வந்த இயேசுவை ஒருபோதும் அறிக்கை பண்ணாதவர்கள். இயேசுவின் நாமத்தில் எதையும் பிதாவினிடத்தில் கேட்கமாட்டார்கள். பேசும்போதும், பிரசிங்கிக்கும்போதும். ஜெபிக்கும்போதும் இயேசு கிறிஸ்துவே என்று தங்கள் வாயினால் அறிக்கை செய்ய மாட்டார்கள். இயேசு ஒருவரே வழி என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் அவரை அறிக்கை பண்ண மாட்டார்கள். மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாதவர்கள் அந்திக்கிறிஸ்துவும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களுமாய் இருக்கின்றனர் என்று வேதம் கூறுகின்றது. (1 யோவான் 4:2,3; யோவான் 7) 

4. கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுகிறவர்கள் 
தேவன் ஒருவரே மெய்தேவனாவார். அவர் மூன்று நிலைகளில் கிரியை செய்கிறார். பிதா, குமாரன். பரிசுத்தஆவி என்னும் மூன்று பேரும் ஒருவரே என்ற திரித்துவக் கோட்பாட்டை இவர்க்ள் அசட்டை செய்வார்கள். திரித்துவத்தின் மகிமையை விசரமாய்ப் பேசுவார்கள். இயேசுவையும் ஆவியானவரையும் இகழ்வார்கள். தேவத்துவத்தை அவமதித்து பரிகசிப்பார்கள். (2 பேதுரு 2 :10)

5. சுவிஷேசத்தைக் களங்கப்படுத்துகிறவர்கள். 
இயேசு பாவிகளுக்காய் இந்த உலகத்தில் வந்தார். பாவத்திற்காய் இரத்தம் சிந்தி மரித்தார். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அவர் திரும்பவும் வருவார் எனும் நற்செய்தியின் முக்கிய நிகழ்ச்சிகளை இவர்கள் மறுத்து மாற்றி திரித்துக் கூறுவார்கள். சுவிசேஷத்தைத் தவறாயப் பிரசங்கித்து, இரட்சிப்பின் வசனத்தைத் தவறாய்ப் போதிப்பார்கள். சரியான உண்மையான செய்திகளை அப்படியே மறுத்து மாற்றிக் கூறுவார்கள். (கலா. 2:7)

6. வேறே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்கள். 
வேறே சுவிசேஷம் என்பது பிசாசின் செய்தியாகவும், அவர்களது தலைவர்களின் அறிவுப்பூர்வமான செய்தியாகவும், மனித மூளையிலிருந்து பெற்ற செய்தியாகவும் இருக்கும். ஆனால் அவைகள் தேவ வசன அடிப்படையில் இருக்காது. நல்ல பிரசங்கிமார்களைப் போல நல்ல செய்திகளை அவர்கள் பிரசங்கிப்பார்கள். முடிவு அது இயேசுவின் நற்செய்தியாயிராமல் சாத்தானின் துர்உபதேசமாகவே இருக்கும்.  (கலாத்தியர் 1:8,9) 

7. நானே கிறிஸ்து என்பவர்கள் : 
இப்படிப்பட்ட இயக்கங்களின் தலைவர்களை அந்த கூட்டத்தின் மக்களிடம் தாங்களே வரப்போகும் மேசியா என்றும், கிறிஸ்து என்றும் அறிவிப்பார்கள். அவைகளைக் குறித்து எழுதுவார்கள். சில தலைவர்கள் தங்கள் வார்த்தைகளாலே, தாங்கள் கிறிஸ்து என்றும் அறிவிப்பார்கள். இவர்களை நம்பும் மக்களுக்கும் அப்படியே சொல்லுவார்கள். அதற்காகவே உழைப்பார்கள். (மாற். 13:6)

8. நல்ல ஆடுகளைப் போல் நடிப்பவர்கள். 
இவர்கள் ஓநாய்கள். ஆனால் ஆடுகளைப் போல வேடமிட்டு வருபவர்கள். ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி அவர்களைத் தங்கள் துர்உபதேச வலையில் விழத்தள்ளுவார்கள். வெளியில் இவர்களை மக்கள் விசுவாசிகள் என்று நினைப்பார்கள். உள்ளத்திலோ இவர்கள் விசுவாசத் துரோகிகள். (மத். 7:15)

9. மக்களைக் குழப்புகிறவர்கள். 
இவர்களுக்கும் வேதாகமம் நன்றாய் தெரியும். வேதத்தை வைத்துக் கொண்டே இவர்களின் சொந்தக் கருத்துக்களை சொல்லித் திரிவார்கள். இவர்கள் வேதத்தைப் படிப்பது ஆத்துமாவின் வளர்ச்சிக்கல்ல. மக்களிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு இவர்களுடைய “தவறான பதில்களை“ செல்லுவதற்காகவும், வாக்குவாதங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகவுமே வசனத்தைப் படிப்பார்கள். இந்த துர்உபதேசக் கூட்டத்தார் தெளிந்த தண்ணீராய் இருக்கும். ஆத்துமாக்களின் மனதைக் குழப்பும் குழப்பவாதிகள்

10. மனசாட்சியில்லாத பொய்யர்கள். 
மனசாட்சியின்றி எல்லாக் காரியங்களிலும் பொய்யாய் நடந்கொள்ளும் எத்தர்களாயிருப்பார்கள். தாங்கள் பேசவதும் செயல்படுவதும் வேதத்தின்படி சரியானதாவென்று நிதானிக்க மாட்டார்கள். பொய்யைப் போதகத்தோடு போலி வாழ்க்கையும் வாழ்வார்கள். உள்ளதை உள்ளபடி சொன்னால் அதற்கு சத்தியம் என்று பெயர். இவர்களோ இருக்கிறதை இல்லாத்தாகவும் இல்லாததை இருக்கிறதாயும் சொல்லுவதால் இவர்களுக்கு பொய்யர் என்று பெயர் ( 1தீமோ 4:13)

11. வஞ்சம் நிறைந்தவர்கள். 
பேசுவதும் பழகுவதும் உண்மையான அன்பைப் போலவும் அல்லது அதைவிட அதிகமாகவும் இருக்கும். உதவி செய்தவற்குத் தயங்கமாட்டார்கள். எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய முன்வருவார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலின் பின்னாலும் வஞ்சம் இருக்கும். பிறரை எப்படியாவது அவர்களின் கூட்டத்தில் சேர்த்துவிட எதையும் செய்யும் நண்பர்களாய் பழகுவார்கள். (மாற். 13:5)

12. பக்கவழியாய் வருபவர்கள் 
மேய்ப்பனில்லாதபோது ஆடுகளைக் கொள்ளையடிக்கும் பழக்கமுள்ளவர்கள். ஆவிக்குரிய நல்ல திருச்சபைகளுக்குச் செல்ல மாட்டார்கள். விசுவாசிகளின் ஐக்கியத்தில் பங்கு வைத்துக் கொள்வது அந்நியோந்நியத்திலும் அப்பம் பிட்குதலிலும் கலவாது இருப்பார்கள். இவர்கள் எங்கேயிருந்து எப்படி செயல்படுகிறார்கள என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் குறுக்கு வழியே வந்து சபையின் ஆத்துமாக்களை கெடுத்துப் போடுவார்கள். வாசல் வழியே வராது வேறு வழியே ஏறிவருவதால் இவர்கள் கள்ளர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் (யூதா 4 ; யோவான் 10:1)

13. இழிவான ஆதாயத்தை இச்சிக்கின்றவர்கள்
தங்களுக்கு ஏதாகிலும் இலாபம் வருமென்றால் எதையும் செய்யத் துணிபவர்கள். எல்லாவற்றிலும் உதவி செய்து தாங்குபவர்கள்; நமது தேவைகளை சந்திப்பவர்கள் என்ற எண்ணத்தை போலியாக உண்டு பண்ணுபவர்கள். பணமும் வெளிநாட்டு உறவும் கிடைக்கமென்பதற்காக என்ன சொன்னாலும் செய்யக்கூடிய இழிவான ஆதாயத்தை இச்சிப்பவர்கள். (தீத்து 1:11)

14. உல்லாசமாய் வாழ்பவர்கள்
தானும் தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் நன்றாய் வாழந்தால் போதும் என்ற எண்ணமுடையவர்கள். வசதியற்ற ஏழைகளை நாடிப் போக மாட்டார்கள். ஏழ்மையில் அவதிப்படுவோரைக் கண்டு மனம் பதறுவதுபோல் காண்பிப்பார்கள். கிறிஸ்தவர்களையே சுற்றி சுற்றி வருபவர்கள். இதர மதமக்களோடு அதிக உறவு கொள்ளார்கள். இவர்கள் சுயநலமாய் வாழும் உல்லாசப் பயணிகள் (2பேதுரு 2:13; தீத்து 1:11) 

15. விபசாரம் செய்பவர்கள் 
இவ்வித மக்கள் மத்தியல் பொதுவாகக் காணப்படுவது விபச்சாரமே. இவர்களுக்கு விபச்சாரம் பாவமாகத் தோன்றாது. இவர்களுடைய கொள்கையி்ல இதுவு்ம் ஒன்றாய் இருக்கும். ஒரு புருஷன் ஒரு மனைவி என்ற வேதநியமனத்தை ஏற்றுக் கொள்ளாது பலருடனும் வாழ்க்கை நடத்துவார்கள். அதைப் பாவமாகப் போதியாதவர்கள். ஆணும் பெண்ணும் இதற்கு இணங்கி வாழ்வார்கள். விபர்சசார மயக்கத்தால் நிறைந்தவர்கள். அசுத்த இச்சைகளோடு மாம்சத்திற்கேற்றப்படி நடந்த சுய்ககட்டுப்பாடின்றி வாழ்பவர்கள். வேதம் விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் கண்டிப்பதால் வேதத்தையும் பரிசுத்தமுள்ள புத்தகமாக இவர்கள் அங்கீகரிப்பதில்லை. (2 பேதுரு 2:14, 10; யூதா 4)

16. இவர்களும் ஊழியம் செய்வார்கள்
நல்ல ஊழியர்களைப் போலவே இவர்களும் பிரசங்கிப்பார்கள். இவர்களின் பிரசங்கங்களும் போதனைகளும் நலமாயிராது. சாத்தானின் உபதேசமாய் இருக்கும். இவர்களுடைய கனிகளைக் கொண்டே இவர்கள் எப்படிப்பட்டவர்களென நாம் அறிந்து கொள்ளலாம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்க வேண்டியது வேத கட்டளை மனந்திரும்பாத இவர்கள் எப்படி நல்ல கனிகளைக் கொடுக்க முடியும்.? எனவே இவர்களின் ஊழியம் கனியற்ற ஊழியமாய் இருக்கும் வேதபுரட்டர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ( கலா. 1:9; 2 பேதுரு 3:16)

மேலே சொல்லப்பட்ட அத்தனை செயல்களும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த செய்திகளல்ல. துர்உபதேசத்தைப் போதிக்கும் பல இயக்கங்களின் செயல்களும் செய்திகளும் இதில் அடங்கும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இப்படிப்படட மக்களோடு கிறிஸ்தவர்கள் எவ்வளவு கவனமாய் இருக்க வேண்டுமோ அவ்வளவு கவனமாயும் எச்சரிப்போடும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஜாக்கிரதையாயில்லையென்றால் இவ்வித ஓநாய்களிடம் அகப்படுவது நிச்சயம். 

(இவ்வாக்கமானது சகோ. அன்ரூ பிரபுக்குமார் அவர்கள் எழுதிய “துர்உபதேசங்கள்” எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

Saturday 6 August 2011

பரலோகத்திலேயே பூரண பரிசுத்தம்



பிரசங்கிகளின் பிரபு எனப் புகழப்பட்ட சார்ள்ஸ் ஸ்பேர்ஜன் என்பார் (1834-1892) ஒரு தடவைபூரணமான பரிசுத்தவான்எனத் தன்னை அழைத்துக் கொண்ட ஒரு மனிதனை சந்தி்த்தார். . தன்னில் ஒரு பாவமும் இல்லை எனக் கூறிக் கொண்ட அம்மனிதனின் வார்த்தையைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஸ்பேர்ஜன் அவரைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.

பூரண பரிசுத்த மனிதனான அவருக்கு ஸ்பேர்ஜன் தன் வீட்டில் அருமையான விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். விருந்துண்ணும்போதும் அம் மனிதன் தன் பூரண பரிசுத்த வாழ்வுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அம்மனிதன் சொல்பவைகள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்பேர்ஜன் கடைசியில், மேசையிலிருந்த தண்ணீர் கோப்பையை எடுத்து அம்மனிதன்னின் முகத்தில் வீசினார். உடனே அம்மனிதன் கோபங் கொண்டு ஸ்பேர்ஜனைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினான்.

அப்போது ஸ்பேர்ஜன் அம்மனிதனிடம்உன்னுடைய பழைய மனிதன் மரணமடையவில்லை. அவன் மயங்கியே இருந்திருக்கின்றான். இதனால் கொஞ்சம் தண்ணீர்பட்டதும் அவன் மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டான்என்று கூறினார்.

பூரண பரிசுத்த வாழ்வு பரலோகத்திலேயே நமக்கு கிடைக்கும். இவ்வுலகில் வாழும் நாட்களில் நாம் பாவ சரீரத்திலேயே வாழ்கிறோம். இதனால் கிறிஸ்தவர்களது வாழ்வில் ஆவிக்கும் மாம்சத்திற்குமிடையிலான போராட்டம் எப்போதும் ஏற்படுகின்றது. (கலா. 5:17) பல சந்தர்ப்பங்களில் நாம் செய்ய விரும்பாதவைகளைச் செய்துவிடுகிறோம். (ரோமர் 7:14-20)

நம்மில் பாவமே இல்லை - நாம் பூரணமான பரிசுத்தவான்கள் எனக் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அது சுய புகழ்ச்சிக்காகவும் வீண் பெருமைக்காக மட்டுமே இருக்கும். தேவனோடு நெருங்கி வாழ்பவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் பாவத்தில் விழுந்துள்ளதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உள்ளன. இதனால்தான் வேதாகமம்நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:10)  என்று கூறுகிறது. எனவே நாம் பூரணமானவர்கள் என நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

(நன்றி : சில சம்பங்களில் சில சத்தியங்கள்)