- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 27 July 2011

என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55)

(என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. (யோவான் 6:55) இவ்வசனத்தினை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்கர்களும் சில கிறிஸ்தவ பிரிவினரும் இயேசு திருவிருந்தை ஏற்படுத்தியுள்ளார்; அதனை நினைவு கூறவேண்டும் எனும் கருத்துடையவர்களாய் இருப்பதோடு, அதனை திருபலியிலும் / ஆராதனைகளிலும் கடைபிடிக்கிறார்கள். இவ்வசனம் நமக்கு உண்மையில் என்ன போதிக்கிறது. இயேசு திருவிருந்தை ஏற்படுத்தினாரா? இக்கட்டுரை அதனை விளக்குகின்றது)

இயேசு ஐந்து அப்பங்களையும இண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின்னர், அவர் தம்மை ஜீவ அப்பமாக வெளிப்படுத்தினார் (யோவா 6:1-35) (1) மக்கள் சரீர உணவான அப்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவர் ஆவிக்குரிய அப்பத்தைப் பற்றி விளக்கிக் கூறியதோடு 'என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது'  என்று யோவான் 6:55 இல் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் இது “கடினமான உபதேசம்“ என்று கூறியதோடு (யோவான் 6:60) “இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான்" என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள் (யோவான் 6:52) அன்று யூதர்கள் மத்தியில் உருவான வாக்குவாதம் இன்றைய கிறிஸ்தவ உலகிலும் உள்ளது. இயேசுக்கிறிஸ்துவன் வார்த்தைகள் அதாவது, “தமது மாம்சம் மாம்சம் மெய்யான போஜனம் என்றும் தமது இரத்தம் மெய்யான பானம்“ என்றும் அவர் கூறும்போது, அவர் என்ன அர்த்ததோடு இவ்வாறு சொன்னார் என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சிரமமாயிருப்பதனால். இது பற்றி வித்தியாசமான கருத்துக்கள் இன்றைய கிறிஸ்தவ உலகில் உருவாகியுள்ளன. 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் யோவான் ஆறாம் அதிகாரத்திலுள்ள இயேசுக்கிறிஸ்துவின் பிரசங்கத்தைத் “திருவிருந்து பற்றிய அருளுரையா கவே“ கருதுகின்றனர்.(2) இதன்படி இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைப் பானம் பணணுவதும் திருவிருந்தைப் பற்றிய அறிவுறுத்தலாக விளக்கப்படுகின்றன. இதனால் “யோவான் 6ம் அதிகாரத்தில் 51 முதல் 58 வரையிலான வசனங்கள் திருவிருந்தின் வார்த்தைகளாகவே உள்ளன. (3) என்றும் கூறப்படுகின்றன.  இயேசுக் கிறிஸ்துவின் கடைசி .இராப்போஜனத்தைப் பற்றி யோவான் குறிப்பிடாத மையால் (4) அதைப் பற்றிய இயேசுக்கிறிஸ்துவின் அருளுரைகளை யோவான் 6ம் அதிகாரத்தில் எழுதியுள்ளார் என்று அநேகர் கருதுகின்றனர்.  இன்று பிரபலமாயிருக்கும் இவ்விளக்கம் சபை சரித்திரத்தின் ஆரம்பகாலத்தில் முக்கியத்துவம் பெறாத ஓர் விளக்கமாக இருந்துள்ளதோடு (5) ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால், “இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சத்தைப் புசி்த்தல்“, “இரத்தத்தைப் பானம் பண்ணுதல்“ என்னும் சொற்பிரயோகங்கள் திருவிருந்தை நினைவூட்டுகின்ற வார்த்தைகளாக உள்ள போதிலும் அதாவது, திருவிருந்தின்போது உபயோகிக்கப்படுகின்றவைகளாக உள்ள போதிலும், யோவான் ஆறாம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே விளக்கியுள்ளார் என்று கூறுவதற்கில்லை. “இயேசுக்கிறிஸ்துவின் உபதேசம் திருவிருந்தைப் பற்றியது“ என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இவ்வதிகாரத்தில் இல்லை. (6)

இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே யோவான் ஆறாம் அதிகாரத்தில் விளக்குகிறார் என்று கூறுபவர்களில் சிலர். ஒருவன் இரட்சிப்படைவதற்குத் திருவிருந்து அவசியமானது என்றும் தர்க்கிக்கின்றனர். (7). ஏனென்றால் 53ம் வசனத்தில் “நீங்கள் மனுகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் மாமிசத்தை புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதன் மூலம் ஒருவனுக்கு ஜீவன் கிடைப்பதனால், திருவிருந்து இத்தகைய ஜீவனைக் கொடுக்கின்றது. என்னும் முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனர். இதனால்., “திருவிருந்தின்போது ஜீவனளிக்கும் கிறிஸ்துவின் ஆவி பெறப்படுவதனால் இரட்சிப்புக்கு திருவிருந்து அவசியமானது. (8) என்று கூறும் வேத ஆராய்ச்சியாளர்கள் “இவ்வுலக வாழ்வுக்கும் இனி வரவிருக்கும் உலகிற்கான வாழ்வுக்கும் அவசியமான ஜீவன் திருவிருந்தின் “அப்பம்“ பானம்“ என்பவற்றின் மூலம் ஒருவனுக்குள் செல்கிறது. (9) என்றும் விளக்குகின்றனர். எனினும் திருவிருந்தின் மூலம் இரட்சிப்பு கிடைக்கும் என்பதற்கு வேதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாததால் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாக உள்ளது. 

யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இயேசுக்கிறிஸ்து எருசலேமில் திருவிருந்து முறையை ஏற்படுத்தியபோது ஆற்றிய பிரசங்கம் அல்ல. அவர் திருவிருந்தை உருவாக்குவதற்கும் ஒரு வருடத்திற்கும் முன்பே இவ்வாறு கூறியுள்ளார். (10) உண்மையில், கலிலேயாவில் தமது அற்புதத்தை கண்டமையால் அடுத்த நாளும் தங்களுக்கு உணவு கிடைக்கும என்னும் எண்ணத்தோடு வந்தவர்களுக்கு (யோவான் 6:26) இயேசுக்கிறிஸ்து கூறியவைகளே யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் திருவிருந்து பற்றிய ஆழமான ஆவிக்குரிய விடயத்தைப் புரிந்து கொள்ளும் அல்லது ஏற்றுக் கொளளும் மனநிலையில் இருந்தவர்கள் அல்ல.இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் கப்பர்நகூமிலுள்ள ஜெபாலயத்தில் வைத்து கூறப்பட்டவை என்று 59ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை இது எருசலேமில் திருவிருந்தை உருவாக்கியபோது அது பற்றி கொடுக்கப்பட்ட விளக்கம் அல்ல என்பதை அறியத் தருகிறது. இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்களில் அநேகர் அவரது உபதேசம் கடினமானது என்று கூறி அவரை வி்ட்டுச் சென்று விட்டனர். (யோவான். 6:60) (11) எனவே இத்தகைய மக்களுக்கு இயேசுக்கிறிஸ்து பற்றிய உபதேசத்தை விளக்கினார் என்று கூறுவது அர்த்தமற்றது. (12)

யோவான் 6ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியே விளக்கியுள்ளார் என்று கருதினால் திருவிருந்தின் மூலம் நித்திய ஜீவன் கிடைக்கும் என்னும் தவறான உபதேசத்தேயே உருவாக்கும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் என்றே 53ம் 54ம் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் திருவிருந்து ஒரு மனிதனில் இத்தகைய விளைவை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், ஏற்கனவே ஜீவனைப் பெற்றவர்களே “தமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயான ஐக்கியத்திற்கு அடையாளமாக திருவிருந்தில் பங்கேற்கின்றன (13) மேலும், ஜீவனானது இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகக் கிடைப்பது என்பதை இவ்வதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து பல தடவை சுட்டிக் காட்டியுள்ளார். (யோவான் 6:35, 40, 47) இதிலிருந்து இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதும், அவரது மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதும் மனிதனில் ஒரே விளைவையே ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்கிறோம். உண்மையில் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியல்ல ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றியே யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது வார்த்தைகள் “அக்கால யூதக் கலாசாரத்தின் சொற்பிரயோகங்களாகவே உள்ளன (14) அதாவது “புசித்தல் குடித்தல்” என்னும் சொற்பிரயோகம் “ஒருவனுக்குள் எடுத்தல்“ என்னும் அர்த்தத்துடன் அக்காலத்தில் உபயோக்கப்பட்ட ஒரு மொழிவழக்காகும். (15) உபதேசங்களை அல்லது போதனைகளை ஒருவன் தனக்குள் எடுப்பதற்கும் யூதர்கள் இவ்வித சொற்பிரயோகத்தையே அக்காலத்தில் உபயோகித்துள்ளனர். (16) இத்தைகைய அர்த்தத்தில் வேதத்திலும் தேவனுடைய வார்த்தையை புசிக்கும்படியான அறிவுறுத்தல்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் (எரே. 15:16, எசே. 3:1-3, வெளி. 10:9-10) 

இயேசுக்கிறிஸ்துவும் இத்தகைய அர்த்ததுடனேயே தம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உட்கொள்வதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனவே, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து அவரை எமக்குள் எடு்ப்பதே இங்கு அவரது மாம்சத்தைப் புசிப்பதும் இரத்தத்தைப் பானம் பண்ணுவதுமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இயேசுக்கிறிஸ்துவை நம் உள்ளான வாழ்விற்குள் கொண்டு வருவதே நமக்கு ஆவிக்குரிய ஜீவனைக் கொடுக்கும் செயலாகவுள்ளது. இதைத்தான் இயேசுக்கிறிஸ்து “ என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு“ என்று யோவான் 6:54 இல் குறிப்பிட்டுள்ளார். யோவான் சுவிசேஷத்தின் ஏனைய பகுதிகளில் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிக்கும் விடயமே இங்கு இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சத்தைப் புசிப்பதாகவும் இரத்தத்தைப் பானம் பண்ணுவதாகவும்“ உள்ளது. மேலும் இவ்வதிகாரத்தில் “புசித்தல்“ குடித்தல்“ என்னும் பதங்கள் மூலமொழியில் “ஒருதரம் மட்டும் செய்யும் செயலைக் குறிக்கும் விதத்திலேயே உள்ளது. (17) அதாவது “இயேசுக்கிறிஸ்துவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் ஒருதரம் உட்கொள்வதனால் கிடைக்கும் விளைவே 53ம் 54ம் வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது. (18) எனவே, இதை பலதடவைகள் நாம் பங்கேற்கும் திருவிருந்தாகக் கருதமுடியாது. மேலும், பதிய ஏற்பாட்டில் “இயேசுக்கிறிஸ்துவின் மாம்சம்“ என்னும் சொற்பிரயோகம் திருவிருந்தைக் குறிக்கும் பதம் அல்ல. “இயேசுக்கிறிஸ்துவின் சரீரம்“ என்னும் சொற்பிரயோகம் திருவிருந்தில் உபயோகிக்கப்பட்டுள்ளதும் (19) “மாம்சம்“ என்னும் பதத்தை உபயோகித்துள்ள யோவான் 6ம் அதிகாரம் திருவிருந்தைப் பற்றியல்ல என்பதற்கான ஆதாரமாயுள்ளது. (20)


யோவான் 6ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜீவஅப்பம் பற்றிய அருளுரை இயேசுக்கிறிஸ்து உலக மக்களுக்காகத் தம்மையே பலியாகக் கொடுப்பதைப் பற்றியும் அவரை விசுவாசித்து அவரை நமக்குள் எடுத்துக் கொள்ளப்படுவதனால் நமக்குக் கிடைக்கும் ஆவிக்குரிய வாழ்வைப் பற்றியுமே விளக்குகிறது. ஜீவ அப்பமாகத் தம்மை உருவகிக்கும் இயேசுக்கிறிஸ்து 51ம் வசனத்தில், “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே“ என்று குறி்ப்பிடப்பட்டுள்ளார். இது அவரது மரணத்தையே குறிக்கிறது. ஏனென்றால் அவர் சிலுவையிலேயே உலக மக்களின் ஜீவனு்ககாகத் தம்மையே பலியாக கொடுத்தார். இதனைத் தொடர்ந்துவரும் வசனங்களில் தம் மாம்சத்தைப் புசித்து இரத்தத்தைப் பானம் பண்ணுவதன் மூலம் நித்திய ஜீவன் கிடைப்பது பற்றியும் இயேசுக்கிறிஸ்து விள்ககியுள்ளார். இதில் உபயோகிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் திருவிருந்தைப் பற்றியது போல் இருந்தாலும் இயேசுக்கிறிஸ்து திருவிருந்தைப் பற்றியல்ல. ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றியே இங்கு விளக்கியுள்ளார். அவரைப் புசிப்பதன் மூலம், அதாவது அவரை நமக்குள் எடுப்பதன் மூலம் நமக்கு ஆவிக்குரிய வாழ்வு கிடைக்கிறது என்பதையே அவர் அறியத் தருகிறார். 

Footnote & References 
(1) “ஜீவ அப்பம் நானே“ என்னும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்கான விளக்கத்திற்கு ஆசிரியரின் “இயேசுக்கிறிஸ்து யார்? எனும் நூலினைப் பாரக்கவும். 

(2) O. Cullmann, Early Christian Worship, P 93

(3) W. Barclay, Jesus As They Saw Him, p 261

(4) திருவிருந்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் புறஜாதியார் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக யோவான் இதைப் பற்றி குறிப்பிடவில்லை. (J Jeremias, The Eucharistic Words of Jesus p 73) என்பது சிலரது கருத்தாய் உள்ளது. எனினும், முதல் மூன்று சுவிஷேச புத்தகங்களிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமையால் கடைசி இராப்போஜனத்தின்போது நடந்த, அது சமயம் ஏனைய சுவிஷேசங்களில் குறிப்பிடாத விடயங்களை யோவான் 13ம் அதிகாரத்தில் எழுதியுள்ளார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமாக உள்ளது. 

(5) M.F.Wiles, The Spiritual Gospel : The Interpretation of the Four Gospel in the Early Church. p52. ஆதிச்சபை பிதாக்கள் யோவான் 6ம் அதிகாரத்தைத் திருவிருந்து போதனையாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும் இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் உள்ள போதிலும் ஒரு சில சபைப் பிதாக்கள் மட்டுமே இத்தகைய கருத்துடையவர்களாக இருந்தார்கள் எனனும் உண்மையை அநேகர் அறியாதிருக்கின்றனர். இயேசுக்கிறிஸ்துவே ஜீவ அப்பம் என்பதை ஏற்றுக் கொண்டிருந்த சபைப் பிதாக்கள், ஜீவ அப்பமாகிய அவர் மாம்சமாகி இவ்வுலகிற்கு வந்த நமக்காக மரித்தார் என்றே விசுவாசித்தார்கள். (D. Waterland, A. Review of the Doctrine of the Eucharist. p. 123)

(6) J. Marsh, The Gospel of St. John, p 281

(7) A. Richardson, An Introduction to the Theology of the New Testament p 377

(8) Ibid, p 327

(9) W. Barclay, Jesus As They Saw Him, p 261

(10) யோவான் 6ம் அதிகாரச் சம்பவம் பாஸ்கா பண்டிகையின் காலத்திலேயே நடைபெற்றுள்ள போதிலும் அவ்வருட பாஸ்காவின் போதல்ல. அதற்கு அடுத்த வருடத்திலேயே திருவிருந்து உருவாக்கப்பட்டது. 

(11) இவர்கள் மோசேயின் காலத்தில் 40 வருடங்களாக இஸ்ரவேல் மக்களுக்கு வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்பட்டதையே பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தனர். (யோவான் 6:31) உண்மையில் இவர்களுடைய பார்வையில் மோசே இயேசுக்கிறிஸ்துவை விட பெரியவராக இருந்தார். ஏனென்றால் மோசே 40 வருடங்களாக மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுத்துள்ளார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ ஒருநேரச் சாப்பாட்டை மட்டுமே கொடுத்திருந்தார். எனவே, அவர்களுக்கு இயேசுக்கிறிஸ்து செய்த அற்புதம், அதாவது ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது பெரிய காரியமாக தென்படவில்லை. இத்தகைய மனநிலையில் இருந்தவர்கள் ஒரு வருடத்திற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திருவிருந்தைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்னும் எதிர்ப்பார்ப்பில் இயேசுக்கிறிஸ்து அவர்களுக்கு அதைப்பற்றி விளக்கினார் எனறு கூறுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. உண்மையில் “மேசியாவாக வருபவர் மோசேயைப் போல வானத்திலிருந்து மன்னாவை மறுபடியும் கொண்டுவருவார் என்று அக்கால மக்கள் எதிர்பார்த்தனர். இதுவே அவர் மேசியா என்பதற்கான அடையாளமாக இருக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. (G.H. Macgregor, The Gospel of John, pp 142-143)

(12) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 312

(13) P.Enns, The Moody Hand Book of Theology, p 362 

(14) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 312

(15) H. Odeberg, The Fourth Gospel, p 239

(16) தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அப்பமாகவும், அதன் வார்த்தைகளை ஒருவன் தனக்குள் எடுப்பதை புசித்தலாகவும் யூத மதப் போதகர்கள் குறிப்பிட்டுள்ளனர். (L. Morris, Jesus is the Christ : Studies in the Thelogy of John, P 30)

(17) அதாவது மூலமொழியில் aorists tense இல் உள்ளது

(18) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 335

(19) ஆதிசபையில் இயேசுக்கிறிஸ்துவின் “மாம்சம்“ என்னும் சொற்பிரயோகம் அவர் மனிதராக வந்ததைக் குறிக்கவே பொதுவாக உபயோகிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவிருந்தில் இயேசுக்கிறிஸ்துவின் “சரீரம்“ என்னும் வார்த்தைகளையே உபயோகித்துள்ளனர். (L. Morris. Expository Reflections on the Gospel of John, p. 238)

(20) L. Morris. John : The New International Commentary on the New Testament, p 333



இவ்வாக்கமானது 
நூல் தலைப்பு :- கர்த்தரின் வார்த்தையில் கடின வரிகள்,  நூலாசிரியர் :- சகோ. எம்.எஸ்.வசந்தகுமார், வெளியீடு :- இலங்கை வேதாகமக் கல்லூரி 
பெறப்பட்டதாகும்




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment