கிறிஸ்தவ வாழ்க்கையானது பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் ஊடாகச் செல்லும் ஒரு வாழ்வாக இருந்தாலும், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதலையும் மனச் சமாதானத்தையும் தருகின்றவராக இருக்கின்றார். (2 கொரி. 1:4; யோவான் 14:27). நாம் நம்முடைய உள்ளத்தின் வேதனைகளை அனைத்தையும் ஜெபத்தில் தேவனிடம் தெரிவிக்கும்போது நமக்கு மன ஆறுதலும் சமாதானமும் கிடைக்கின்றது. (பிலிப்பியர் 4:6-7)
13வது சங்கீதமானது இதனை அனுபவரீதியாக காண்பிக்கின்றது. இச்சங்கீதத்திலே மனக் கவலையுடன் இருந்த தாவீது (சங். 13:1-2) தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடுகின்றான். (சங்கீதம் 13:3-4). இது அவனுடைய உள்ளத்தில பெரியதோர் மாறுதலை ஏற்படுத்தியது. மனக்கவலையுடன் இருந்த அவன் மன ஆறுதல் அடைந்தவனாக, தேவன் தன்னை விடுவிப்பார் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் தேவனை மகிமைப்படுத்திப் பாடுகின்றான். (சங். 13:5-6) ஜெபம் மனிதனின் உள்ளத்தின் நிலையை மாற்றுகின்ற என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.
1. தாவீதின் மனக்கவலை (சங். 13:1-2)
தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்னும் எண்ணத்தோடு தாவீது இருந்தான். தேவன் அவனை இஸ்ரவேலின் அரசனாக்குவதாக வாக்களித்திருந்தாலும், அவன் இன்னும் அரசனாக முடிசூட்டப்படவில்லை. சவுல் தாவீதைக் கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பியிருந்தான். தாவீது உயிருக்குப் பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்திருந்தான். இதனால், தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்னும் எண்ணம் தாவீதுக்கு ஏற்பட்டது.
13.:1 “முகத்தை மறைத்தல்“ என்பது தேவனால் கைவிடப்பட்டதையும் தேவனுடைய சாபத்திற்குட்படுவதையும் குறிப்பிடுகின்றது. (சங்கீதம் 30:7; 44:24 ; 88:14) முகத்தைப் பிரகாசிக்கச் செய்வது ஆசீர்வாதத்தை எடுத்துக் காட்டுகின்றது. (எண். 6:25-26; சங்கீதம் 4:6; 31:16; 67:1,2; 80:3,7,19) தேவன் வாக்களித்த பாதுகாப்பு, கிருபை, சமாதானம் என்னும் ஆசீர்வாதங்கள் (எண். 6:25-26) எங்கே என்று தாவீது அங்கலாய்ப்பவராக இருந்தான்.
தேவன் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய எதிரியின் கைகள் ஓங்கும்படி செய்வதினால் அவர் தன்னைக் கைவிட்டு விட்டார் என்றே தாவீது எண்ணினான். தான் நன்மை செய்தும் தேவன் தன் பக்கம் இராமல், தீமை தன்னுடைய எதிரியின் பக்கம் இருப்பதாக அவன் நினைத்தான். இத்தகைய நிலைமை எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பதே தாவீதின் கேள்வியாக இருந்தது. நெருக்கடியான சூழலில் இருந்து நாம் ஜெபித்தும் தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்காவிட்டால் அவர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். மனிதர்கள் நம்மைக் கைவிட்டு நாம் தனிமைப்படும்போதும், இத்தகைய உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. தேவன் தன்னை உதாசீனப்படுத்துவாகவும், அவர் தன்னை நிரந்தரமாக கைவிட்டுவிட்டார் என்றும் தாவீது நினைத்தார்.
13:2 தனிமைப்பட்ட நிலைமையில், எவ்வளவு காலத்திற்கு சவுலின் கைக்கு எப்படி தப்பலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டிருப்பது என்று கேட்கிறான். எதிரியை சமாளிப்பதற்குத் தாவீது பல்வேறு விதமான திட்டங்களைத் தீட்ட வேண்டியவனாக இருந்தான். எவ்வளவு காலத்திற்கு் தன் எதிரி தன்னை இவ்வாறு துரத்திக் கொண்ருப்பான் என்று தாவீது விரக்தியடைந்தான்.
தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்று தாவீது உணர்ந்ததற்கோ அவன் உயிருக்குப் பயந்து ஓடிப்போக வேண்டியிருந்ததற்கோ பாவம் காரணமாக இருக்கவில்லை. இச்சங்கீதத்தில், பாவத்தைப் பற்றியோ மனந்திரும்புதலைப் பற்றியோ எவ்வித குறிப்பும் இல்லை. மேலும் தேவன் தாவீதைக் கைவிடவில்லை. (எபி. 13:5, மத். 28:20; ஏசா. 43:2) தாவீதே தன்னுடைய நெருக்கடியான சூழ்நிலையில் இத்தகைய உணர்வுடன் இருந்தான்.
2. தாவீதின் மன்றாடல் (சங். 13:3,4)
சவுலினுடைய மனிதர் எப்படியும் தன்னைக் கொன்று விடுவார்கள் என்னும் எண்ணத்துடன் இருந்த தாவீது (1 சாமு 27:1) தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினான். ஆபத்தான சூழ்நிலைகளில் ஆண்டவரை நேக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை என்பதை தாவீது அறிந்திருந்தமையால் அவன் மனித உதவியை நாடாமல், தன் உயிரைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினான்.
13:3 தேவன் தன்னைப் பார்க்காமல் தம்முடைய முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருப்பதாக எண்ணிய தாவீது (13:1) தன்னை நோக்கிப் பார்க்கும்படி தேவனிடம் மன்றாடுகின்றான்.
“எனக்குச் செவிகொடுத்தருளும்“ என்னும் கோரிக்கை, முதலிரு வசனங்களிலும் அதாவது “எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்திருப்பீர்?“ என்னும் கேள்விக்கு பதிலளிக்கும்படியான விண்ணப்பமாக உள்ளது.
“கண்களைத் தெளிவாக்கும்“ துயரம் காரணமாக எதைப் பற்றியும் தெளிவாகப் பார்க்கவும் சிந்திக்கவும் முடியாதவனாக தாவீது இருந்தான். சரீரம் பலவீனப்படும்போது கண்கள் மங்குவதாகவும், சரீரம் பலமும் புத்துணர்ச்சியும் அடையும்போது கண்கள் தெளிவடைவதாகவும் கூறுவது எபிரேய மரபு. (1 சாமுவேல் 14:27,29); எஸ்றா 9:8) தாவீது சரீரப்பிரகாரமாக பலவீனமாகவும், வியாதிப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
13:4 - தன்னுடைய மரணம் தன் எதிரிக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதனால், அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது என்னும் எண்ணத்தில் தாவீது தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடினான். (சங்கீதம் 35:19-21; 38:16-17). இது சுயநலமான கோரிக்கை அல்ல. தேவனுடைய கனத்தைக் கருத்திற் கொண்டு ஏறெடுக்கப்பட்ட ஜெபமாகும். தேவனை நம்பி வாழும் மனிதனுக்கு ஏற்படும் தோல்வியை தேவநாமத்திற்கு ஏற்படும் கனவீனமாகத் தாவீது எண்ணினான். மோசேயும் இதே விதமாக ஜெபித்துள்ளார். (எண். 14:15-16)
3. தாவீதின் மனமகிழ்ச்சி (சங். 13:5-6)
தன்னுடைய நிலைமையைத் தேவனிடம் தெரிவித்து தனனைக் காப்பாற்றும்படி ஜெபித்த தாவீது, அதுவரை காலமும் இருந்த மனக்குழப்பம் நீங்கியவனாக நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைந்தான். நம்முடைய மனப்பாரத்தை, பிரச்சினையைத் தேவனிடம் தெரிவிக்கும்போது, தேவன் நமக்கு மனஆறுதலையும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறவராக இருக்கின்றார். தேவன் தாவீதின் சூழ்நிலையை அல்ல, தாவீதின் உள்ளத்தின் நிலையை மாற்றினார்.
13:5 - கிருபை என்பது மூலமொழியில் அன்பு என்றே உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவன் தன்னை நேசிக்கிறார் என்பதைத் தாவீது அறிந்திருந்தான். தேவன் தன்னை நேசிப்பதனால் அவர் தன்னை நிச்சயம் சவுலின் மனிதர்களிடமிருந்து விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆரம்பத்தில் தேவன் தன்னை கைவிட்டுவிட்டார் என்று புலம்பிய அவன், தன்னுடைய மனக்குமறலைத் தேவனிடம் தெரிவித்த பின்னர் அவர் தன்னை நேசிக்கிறார்; தன்னை விடுவிப்பார் என்பதை அறிந்துகொண்டான்.
தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான். 4:8) தேவன் பவுலை நேசித்ததுபோல (ரோமர் 8:36-39) நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவன் தன்னைக் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடுகிறான். தேவன் செய்தவைகளை நினைவுகூருவது தேவன் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஆகவே தமது நிலைமையை் தேவனிடம் தெரிவிப்போம்!. அவரால் மட்டுமே நம்முடைய நெருக்கடியான சூழ்நிலைகளை மாற்ற முடியும் அந்த விசுவாசத்தோடு நாம் ஜெபங்களை ஏறெடுப்போமாக.
(நன்றி சத்தியவசனம் - ஜூலை-ஆகஸ்ட் 2010 கட்டுரை ஆசிரியர் - எம்.எஸ். வசந்தகுமார்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment