- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 11 July 2011

துர்உபதேசங்களின் தன்மைகள் பகுதி 2

பகுதி 1 வாசிக்க இங்கு அழுத்துங்கள்


9.  மூலஉபதேசங்களை மாற்றுதல்
வேதாகமம் கூறியுள்ள உபதேசங்கள் அடிக்கடி மாறக்கூடிய உபதேசங்கள் அல்ல. அது என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரே தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் துர்உபதேசக் கூட்டத்தோரோ தங்கள் செய்திகளையும் வியாக்கியானங்களையும்,  உபதேசங்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் எவரும் மக்களை ஒரே நோக்கத்தற்காக வழி நடத்துவது கிடையாது மறுவாழ்க்கையின் நிச்சியம் இவர்கள் எல்லாரிடத்திலும் ஒரே விதமாக இல்லை. இவர்கள் ஒரு வெளிப்பாட்டிலிருந்து இன்னொரு வெளிப்பாட்டிற்கு அடிக்கடி தாவும வழக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். 

யெகோவா சாட்சிகள் கூடடத்தார் ஆண்டவர் இயேசுவின் பகிரங்க வருகை 1874 இல் இருக்குமென அறிவித்தார்கள். அறிவித்தபடி நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன் இக்கூட்டாத்தார் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இப்பொழுதோ அதை நிறுத்திவிட்டார்கள். முன்பெல்லாம் இக்கூட்டத்தாருக்கு பரலோகம் செல்லும் நம்பிக்கையிருந்தது. இப்பொழுதோ 1,44,000 பேர் மட்டுமே கிறிஸ்துவோடு செல்லுவார்கள் என்று கூறுகின்றனர். 

ஒரே கொள்கையும் ஒரே உபதேசமும் இப்படிப்பட்ட கூட்டத்தைச் சார்ந்த எவருக்கும் இல்லை. தலைவர்கள் மாறும்போது போதனைகளும் இவர்கள் காலத்திற்கேற்றவாறு தங்களையும் தங்கள் கொள்கைகளையும் மாற்றிக் கொளளக் கூடியவர்களாயிருக்கின்றனர். 

மோர்மன் சபையாரும் வெகு சாதாரணமாய் தங்கள் செய்தியை மாற்றிக் கொள்ளுகிறவர்கள். ஒரு செய்தியை அறிவிப்பார்கள். சில நாட்களுக்குப் பின் தாங்கள் அறிவித்தவைகளேயே மாற்றிக் கூறுவார்கள். அல்லது கைவிடுவார்கள். ஆகவே இவர்களும் இவர்களைப் பின்பற்றுவோரும் நிகழ்காலத்து விசுவாசமோ எதிர்காலத்து நம்பிக்கையோ இல்லாமல் காற்றில் அடிப்பட்டு அலையும் மேகம் போல் புறப்பட்ட இடம் தெரியாமலும் போய்ச் சேரும் இடம் அறியாமலும் இருக்கின்றனர். 

10. வலுவான தலைமைத்துவம்
துர்உபதேசக் இயக்கங்களின் ஸ்தாபகர்களும் அதனை முன்னின்று நடத்தும் தலைவர்களும் தங்களைப் பிரசித்தி பெற்ற தேவனுடைய அறிவிப்பார்களென்றும் தேவனுக்கும் மனிதருக்குமிடையே தோன்றிய அவதாரமென்றும் மக்களை நம்பவைக்கின்றனர். இவர்கள் தேவனுக்கு விசேஷித்தவர்களாகவும் தேவ வெளிப்பாடு பெற்றவர்களாகவும் இம்மக்களால் கருதப்படுகின்றனர். இவ்வியக்க தலைவர்கள் பல்வேறு திறமைகளில் கைத்தேர்ந்தவர்கள். 

இந்தத் தலைவர்கள் கூறும் அனைத்தையும் அவர்களுக்குக் கீழிருக்கும் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்.இவர்களில் சிலர் தங்களையே மேசியாகவும் வெளிக்காட்டிக் கொள்வதால் வசதிபடைத்த மக்களும் இவர்களைப் பின்தொடர முன்வருகிறார்கள். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church), அகில உலக வழி (The way Intrnational) உலகளாவிய தேவசபை (World Wide Church of God) போன்ற இயக்கங்களின் தலைவர்கள் இதற்கு உதாரணம். 

தலைவர்கள் தங்களின் வழி நடப்போருக்கு தங்களின் நம்பிக்கைகளையும் தங்களின் உபதேசங்களையும் வியாக்கியானங்களையும் சொல்லி அவர்களை அதன்படி நடக்க வைக்கிறார்கள். வேதத்தை தங்களுக்கேற்றற்போல படித்து அதற்கு சுயமாக விளக்கங்களையும் எழுதுகின்றனர். ஒருவேளை தங்கள் தலைவர் ஏதோ ஒன்றில் தவறிப் போய் விட்டாரானால் அதற்கும ஒரு நல்ல காரணம் காட்டி தலைவரின் தவறுகளை மூடி மறைத்து விடுகிறார்கள். 

இவ்விதத் தலைவர்களின் வீட்டிலும் அலுவலகங்களிலும் நடக்கும் காரியங்கள் வெளிஉலகிற்குத் தெரிவதில்லை. மிகப்பெரிய திடங்களெல்லாம் இரகசியமாகவே நடக்கும். இவர்களில் சிலர் அடிக்கடி தாங்கள் கூடும் இடங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை சுலபமாக இவர்கள் தங்கள் இரகசியங்களை வெளியிடுவதில்லை. இரகசிய திட்டங்களுக்குப் பின்னே அக்கூட்டத்தின் பணியாளர்கள் செயல்படுகிறார்கள். கடவுளின் பிள்ளைகள் (Childern of God) இயக்கம் இதற்கு ஓர் உதாரணம்


11. கிரியையினால் இரட்சிப்பு
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்கிறது தேவனுடைய வார்த்தை. ஆனால் எல்லா துர்உபதேசக் கூட்டங்களுமே இந்த வசனத்தை மறைத்து இவ்வசனத்தோடு ஏதாவது கூட்டியோ குறைத்தோ தவறுதலாகப் போதித்து வருகின்றன. 

“கிருபையினால் இரட்சிப்பு“ என்ற சத்தியத்தை இவர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை. கிரியைகள் செய்வதே இரட்சிப்பு யாரையாவது பின்பற்றுதலே இரட்சிப்பு. ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே இரட்சிப்பு. சுவிசேஷத்திற்கும் நியாயப்பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவதே இரட்சிப்பு என்றெல்லாம் சத்தியத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். 

ஹெர்பட் W. ஆம்ஸ்ராங் (Founder of the World Wide Church of God) என்பவர் “இரட்சிப்பு என்பது ஒரு தொடர் செயல்முறை. ஆனால் எந்தச் செயலும் செய்யாமல் இயேசுவை மட்டுமே ஏற்றுக் கொண்டால் போதுமானதொன்று இந்த உலகத்தின் தேவனானவன் உங்களையெல்லாம் வஞ்சித்து உங்கள் கண்களைக் குருடாக்கப் பார்க்கிறான். ... ஆனால் இதுவரை யாருமே இரட்சிக்கப்படவில்லையென்று வேதம் சொல்லுகிறது.” என்று தன் உபதேசத்தில் கூறுகிறார் (Herbert W. Armstrong, Why were you Born? p.11)

இரட்சிப்பு எதற்காகவென்றால் சரியான மனித வாழ்க்கை வாழவும் உரிமையோடும் செழிப்போடும் இந்த பூமியில் வாழ்வதற்காகவுமே.... உண்மையான, சரியான மதிப்புள்ள மனித வாழ்க்கை இப்போதும் இப்பூமியில் நமக்கு காத்திருக்கின்றது. என்று யெகோவா சாட்சிகள் கூட்டத்தார் கூறுகின்றனர். (Let God be True, 1952, p 114-116)

இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால், விசுவாசத்தால் மட்டுமே இரட்சிப்பு வருகின்றதென்பதை மறுக்கின்ற எவருமே இரட்சிக்கப்படாதவர் என்பதே பொருள். இரட்சிக்கப்படாதவர் எவருமே நரகம் செல்வர் என்பதே வேத போதனை. இயேசுவை மறுப்போர் அவரின் இரட்சிப்பை மறுப்போர். பரலோகத்தை இழப்பர் என்பது உறுதி. 

12. கள்ளத் தீர்க்கதரிசனம். 
கள்ள உபதேச இயக்கங்களில் அதிகப்படியாக இடம் பெறுவது பொய் தீர்க்கதரிசனமே . இந்த இயக்கங்களின் தலைவர்கள் தங்களை தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாகவும் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றவர்களாகவும் சொல்லிக் கொள்கின்றனர். இவர்கள் உலகத்தில் நடக்கப் போகின்ற காரியங்களை முன்னறிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் முன்னறிவிக்கின்ற ஒன்றும் நடந்ததாகவே தெரியவில்லை. எந்த ஒரு தீர்க்கதரிசனமும் சொல்லியபடியே நடக்கவில்லையேல் அது பொய்த் தீர்க்கதரிசனம் தானே?

Charles T. Russell என்பவர் யெகோவா சாட்சிகள் கூட்டத்தின் ஸ்தாபகரும் முதல் தலைவருமாவார். இவர் தன்னை தேவனுடைய தீர்க்கதரிசயாக அழைத்துக் கொண்டார். அவரை தேவவெளிப்பாடு பெற்ற தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவர் பின்னால் சென்றனர். சார்ல்ஸ் ரசல் 1914 ம் ஆண்டு உலகம் முடிந்து விடும் என்று முன்னறிவித்தார். ஆனால் சொன்னவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. உலகமோ அப்படியே இருக்கிறது. 

இப்படி அவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் நி்றைவேறுவதில்லை. இயேசுவின் இரண்டாம் வருகையை நாள், மாதம், வருடத்தோடு உரைத்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. உலகத்தின் முடிவையும் கூறுகிறார்கள். அப்படியும் நடப்பதில்லை. காரணம் இவர்கள் தங்கள் சொந்த ஏவுதலினால் வேதத்திற்குப் புறம்மாக தீரக்கதரிசனம் உரைத்தவர்கள். இவர்கள் கூறுவது நடவாதபடியால் இவர்களைக் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்றே அழைக்க வேண்டியிருக்கிறது. 

13. வளமான பொருளாதாரம்
எந்த ஒரு துர்உபதேசக் கூட்டத்திற்கும் பணம் ஒரு பிரச்சினை அல்ல. போதுமான அல்லது தேவைக்கு மிஞ்சிய பணம் அவர்களுக்கிருக்கிறது. இவர்கள் பணத்தை வைத்து ஜனத்தைப் பிடிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த இயக்கங்கள் தங்கள் அங்கத்தினர்களை பணம் கொடுக்கும்படி கேட்பதால் எல்லோரும் தாராளமாக கொடுக்கின்றனர். தங்களுடைய சேமிப்புகளையும் வீடுகளையும் சொத்துக்களையும் இயக்கத்திற்கும் கொடுப்பதற்கும் அங்கத்தினர்கள் உள்ளனர். 

இயக்கத்திற்குப் பணத்தையும் பொருளையும் கொடுப்பவர்கள் தேவனுடைய ஊழியத்திற்காக கொடுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இயக்கங்களின் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் நல்ல வசதியான சுபகோ வாழ்க்கையே வாழ்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வீடும், வாகனமும், இதரச் செலவுகளுக்குப் பணமும் கொடுக்கப்படுகின்றது. சிலருக்கு உணவு, உடை, உறைவிடம் கூட இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது. 

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கின்றது. போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகந்த ஆதாயம் என்ற வேதம் சொல்கிற. ஆனால் .இவ்வித இயக்கங்களுக்குப் பண ஆசையும் பொருளாசையும், சுகபோகப்பிரியமும், வீண்ஆடம்பரமும் அதிகம். இந்தப் பூலோக வாழ்வை சிற்றின்பத்துடன் மற்ற உலக இன்பத்தோடும் அனுபவிக்கப் பணம் இவர்களுக்கு உதவுகின்றது. பலர் பணத்தின் மேல் ஆசை வைத்து பல இன்பங்களையும் வசதிகளையும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இவ்வியக்கங்களுடன் இணைகின்றனர். பணமில்லா ஏழைகளும் பணத்திற்காக இவ்வியக்கங்களில் சிக்கிவிடுவது பரிதாபத்திற்குரியது. 

இவ்வித துர்உபதேசக் கூட்டத்தாரின் சொல்லும் செயலும் விசுவாச வாழ்விற்கு முரண்பாடாகவே இருக்கின்றன. இவர்கள் கூறும் புது சத்தியம் தவறான வியாக்கியானம் ஆகியவை ஆத்துமாக்களை பாதிக்கின்றது.

நல்ல ஆவிக்குரிய திருச்சபைகளை இவர்கள் புறக்கணிப்பதால் தவறான கோட்பாட்டிற்கும் போதனைக்கும் தங்கள் மக்களை வழிநடத்தி செல்கின்றனர். பாவத்தையும் பணத்தையும் சார்ந்து கொள்வதால் விசுவாசத்தை அப்பியாசிக்க முடியாது வாழ்கின்றனர். இவர்களின் கனிகளைக் கொண்டே இவர்களின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment