இந்த அதிகாரம் நான் உங்களுக்கு அளிக்கும் ஒரு தனிப்பட்ட செய்தியாகும். மூன்று வகையான மக்களுக்காக இந்த செய்தி அளிக்கப்படுகின்றது.
1. தவறான வழிபாட்டு குழுக்கள் அல்லது தவறான கொள்கைக் கூட்டங்களின் அங்கத்தினர்களால் போதிக்கப்பட்டு, அவர்களது நிர்பந்தத்தினாலே ஏறக்குறைய அவர்களது போதனைகளைப் பின்பற்றத் தீர்மானித்து விட்டவர்கள்.
2. இப்படிப்பட்ட தவறான வழிபாட்டுக் குழுக்களின் வலையில் ஏற்கனவே சிக்கி, இப்பொழுது தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டோம். வஞ்சிக்கப்பட்டுப் போனோம் என்ற உணர்விற்கு வர ஆரம்பித்திருப்பவர்கள்.
3. இவ்விதமான தவறான வழிபாட்டுக் குழுக்களில் சிக்கிக் கொண்டவர்களை நண்பர்களாகவோ உறவினர்களாகவோ உடையவர்களாயிருந்து எப்படியாவது அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிக்க வழிவகைகளைத் தேடுபவர்கள்.
இவ்விதமான போலியான கொள்கைக்காரரின் கூட்டங்களுக்குள் நாம் கவர்ந்திழுக்கப்படுவதற்குச் சில காரணங்கள் உண்டு. இது எப்படி நடைபெறுகிறது. வேதத்தின் சத்தியத்தை ஒருகாலத்தில் அறிந்து, விசுவாசித்த பிறகும் நாம் இவ்விதமான விசுவாச பேதங்களில் சிக்கி கொள்வது எப்படி? இதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்
1. திருப்பதியற்ற திருச்சபை வாழ்க்கை
நீங்கள் அங்கம் வகிக்கும் திருச்சபை ஒருவேளை வேதத்தின் கோட்பாடுகளின்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் குளிர்ந்து உயிரற்றதாக காணப்படலாம். ஆராதனைகள் ஏதோ கடன்முறைக்காகச் செய்யப்படுவது போல் நடத்தப்படலாம். திருச்சபையின் செயற்பாடுகளில் ஈடுபட உங்களுக்கு எவ்விதத் தருணமும் அளிக்கப்படாமல் இருக்கலாம். ஆவிக்குரிய ஆகாரத்திற்காக தேவனுடைய வார்த்தைக்காக நீங்கள் ஏங்குகிறீர்கள். - ஆனால் உங்களுக்கு கிடைப்பதோ வெறும் தவிடுதான். அல்லது ஒருவேளை உங்கள் போதகர் நவீன இறையியல் கொள்கைகளில் நாட்டமுள்ளவராயிருந்து, வேதம் தேவனால் கொடுக்கப்பட்ட அவருடைய வார்த்தை என்பதை மறுத்து, தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்குப் பதிலாக தமது சுயஉரைகளை நிகழ்த்துபவராக இருக்கலாம். நாளடைவில் இதெல்லாம் உங்களுக்குச் “சலித்துப் போகிறது“ ஆலயத்திற்குப் போவதால் ஒரு பயனுமில்லை என்ற முடிவுக்கு வருகிறீர்கள். இந்த மாதிரி வேளைகளில் தான் யாரை வஞ்சிக்கலாம் என்று வகை தேடிச் சுற்றித்திரிகிற தவறான கொள்கைக்காரர்களுக்கு வளமான நிலமாகி. வசமாக மாட்டிக் கொள்கிறீர்கள்.
2. சுயம்
ஒருவேளை திருச்சபையெல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது. ஆனால் உங்களுக்குள் தான் பிரச்சினை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஐக்கியத்திற்குள் கட்டுப்பாட்டு்டன் கீழ்பபடிந்து இருக்க விரும்பாமல் உங்களது ஒப்புக்கொடுக்கப்படாத சுயம் உங்களை ஆட்டிப் படைக்கலாம். அதேவேளையில், தவறான கொள்கை அல்லது வழிபாட்டுக் கூட்டத்தினருடன் நீங்கள் ஈடுபடுகையில் சாத்தான் (மறைமுகமாகத்தான்) அந்தச் சிறிய கூட்டத்தில் உங்களுக்குப் பேரும் புகழும் கொண்டு வரலாம். - நீங்கள் நாடுவதும் அந்தப் பேழையும் புகழையும் தானே!
3. ஆரோக்கியற்ற நாட்டம்.
வேதம் வெளிப்படுத்துகின்ற சத்தியத்தின் அதிகாரத்திற்குக் கீழ்படிய மறுக்கும் மனப்பான்மையோடு கூட, இதுவரையும் யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத புதிய புதிய கருத்துக்களையும் போதனைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்வமும் சேர்ந்து கொள்ளக் கூடும். இது தவறான ஆரோக்கியமற்ற நாட்டமாகும். கூடவே பெருமையின் ஆவியின் விளைவுமாகும். இது சகல விதமான போலிக் கொள்கைகளுக்கும் தன்னைத் திறந்து கொடுப்பதாகும். ஒருவேளை நீங்கள் இன்று இருக்கும் இந்தக் குழப்பமான நிலைக்குக் காரணமே இப்படிப்பட்ட நாட்டமாக இருக்கலாம்.
4. சந்திக்கப்படாத ஆவிக்குரிய தேவை.
சில வேளைகளில் நமக்கு ஆழமான ஓர் ஆவிக்குரிய தேவை இருக்கலாம். அதை நாம் ஒத்துக்கொள்ளாதபடி தேவன் ஏற்படுத்தி வைத்துள்ள விசுவாசம் மற்றும் கீழ்படிதலின் பாதையில் அதை ஆண்டவரிடம் எடுத்துச் செல்லாதபடி இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரமிக்கப் பண்ணும் அனுபவங்கள் எனும் குறுக்குப் பாதைகள் ஏதும் அகப்படாதா என்று நாடித் தேடலாம். இது சாத்தானை மூலகர்த்தாவாகக் கொண்ட வேதத்திற்குப் புறம்பான அனுவங்களுக்கு நேராக தம்மை நடத்தி விடக்கூடும். நீங்கள் இவ்விதமான சூழலில் இப்பொழுது இருப்பீர்களென்றால், இயேசு “நீங்கள் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்“ என்று கூறினாரே. அந்த விடுதலை உங்களுக்கு அவசியம்.
5. பகுத்தறியப்படாத பாதிப்பு
ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் பற்றிக் கவலையேபடாத ஒருவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பெரிதும் பாராட்டும் பெரிதும் மதிக்கும் ஏதோ ஒரு தனிநபர் இந்தத் தவறான கொள்கைக்காரர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பதனாலே, அவர் உங்களையும் அதே வழியில் நடத்த நீங்கள் அனுமதித்திருக்கலாம் அவரால் கவரப்பட்டு, என்ன செய்கிறோம் இதன் விளைவுகள் என்னவென்றெல்லாம் நிதானித்து அறியாதபடி அவர் பின்னே சென்றுவிட்டு காலங்கடந்த பின்னர் நொந்து கொண்டிருக்கிறீர்கள்.
.இன்றைய உங்களது ஆவிக்குரிய குழப்பத்திற்கு மேற்கூறியவற்றில் எது காரணமாயிருந்தாலும் சரி, நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூற விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இதிலிருந்து நீங்கள் வெளிவர வழி உண்டு! இயேசு சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று சொன்னார். அவரை நீங்கள் உங்கள் முழு மனதோடும் தேடும்போது அவர் உங்களை நிச்சயமாகவே விடுவிக்க முடியும்.! விடுவிக்கவும் செய்வார். சாத்தானுடைய வஞ்சகத்தின் நிமிததினின்றும் உங்கள் வாழ்க்கையின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கத்தினின்றும் விடுபட்டு, ஆவிக்குரிய விடுதலையைப் பெறவும், அந்த வெற்றியைக் காத்துக் கொள்ளவு்ம் உதவும் சில எளிய வழிமுறைகளை இதோ தருகிறேன். ஒவ்வொன்றையும் படிக்க படிக்க அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேதாகமக் குறிப்பை எடுத்து வசனத்தை வாசித்து, அந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடி ஜெபியுங்கள்.
1. உங்களுடைய குழப்பத்தையும் ஆவிக்குரிய தேவையையும் ஒப்புக் கொள்ளுங்கள். (1 யோவான். 1:7)
2.கள்ளத் தீர்க்கத்தரிசிசளையும் அவர்களுடைய போதனைகளையும் உதறித் தள்ளி விடுங்கள்
3. உங்கள் கைவசமுள்ள எல்லா விசுவாச பேதங்கள் சம்பந்தமான இலக்கியங்களையும் எரித்து விடுங்கள். (அப். 19:17-20)
4. தேவனுடைய மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் நாடுங்கள் (1 யோவான் 1:9)
5. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் வழி நடத்தலுக்கும் உங்களை ஒப்புக் கொடுங்கள்
6. உங்களுடைய சுயகௌரவம், உங்கள் தனிப்பட்ட வாழ்வின் பேராசை இவற்றை ஆணடவருக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படுத்துங்கள். (கலா. 2:20)
7. உண்மை விசுவாசிகளுடன் ஐக்கியம் கொ்ண்டு வாழுங்கள். அவர்களோடு சேர்ந்து தேவனுடைய வசனத்தைப் படியுங்கள். (எபே. 3:14-21)
8. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் அவன் மீண்டும் உங்கள் மேல் ஆளுகை செலுத்த வழிதேடுவான். (யாக்கோபு 4:7)
9. ஆலய ஆராதனைகளில் ஒழுங்காக பங்கு பெறுங்கள். (எபி. 10:25)
10. கற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடனும் ஜெபத்துடனும் அனுதினமும் வேதத்தை படியுங்கள். அதன் முழுப் போதனையையும் கருத்திற் கொண்டு வசனத்தை வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனத்தை எடுத்துப் புரட்டாதபடி நமது “சொந்தக் கருத்துக்களை“ வசனங்களுக்குள் புகுத்தி வாசிக்காதபடி மனத் தாழ்மையுடன் படியுங்கள். மற்றவர்களை விட நான் மேலானவன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய கருத்துக்களை நடாதிருங்கள். “தேவனுக்கு முன்பாக உத்தமானக் காணப்பட வேண்டும் என்பதென்றே வேதத்தைப் படிக்கையில் உங்கள் முழு நோக்கமாக இருக்கட்டும்.
(இவ்வாக்கமானது கலாநிதி தியோட்டர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதிய கொள்கைக் குழப்பங்கள் – கடைசிகால அடையாளங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – திருமறைப் போதனை ஊழியங்கள்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment