- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 18 March 2014

உவமைகளின் உண்மைகள்


இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில் உள்ளச் சிறப்பம்சங்களில் ஒன்று அவர் சொல்ல முற்படும் விடயங்களை உவமைகள் மூலம் போதித்தமையாகும் இலகுவாகக் கிரகிக்க முடியாதக் கடினமான விடயங்களையும் சாதாரணப் பாமர மக்களும் புரிந்து கொள்வதற்காகவே இயேசு உவமைகள் மூலம் போதித்தார் என்பதே பொதுவாகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் கருத்தாகும் “இயேசு பரலோகக் கதைகள் மூலம் பரலோக காரியங்களைக் கற்பித்துள்ளார்” (1) என்பதும் “கண்களால் காணமுடியாத ஆவிக்குரிய உலகின் விடயங்களைக் காணக்கூடிய இவ்வுலக விபரங்கள் மூலம் இயேசு அறியத் தந்துள்ளார்”(2) என்பதும் உவமைகளுக்குக் கிறிஸ்தவர்கள் பொதுவாகக் கொடுக்கும் விளக்கமாகும். பெரும்பாலான வேதஆராய்ச்சியாளர்கள் இவற்றை “இலகுவான உதாரண விபரணங்கள்”(3) என்றே கருதுகின்றனர். “இயேசுவின் உவமைகளைச் செவிமடுத்தோர் அவர் அதன் மூலம் சொல்லும் விடயத்தை இலகுவாகப் புரிந்து கொண்டனர்.(4) எனக் கிறிஸ்தவர்கள் கருதுகின்றபோதிலும் “ஏன் மக்களோடு உவமைகள் மூலம் பேசுகின்றீர் எனக் கேட்டபோது இயேசு கூறிய விடயம் உவமைகள் மூலம் அவர் போதித்தவற்றை மக்களால் புரிந்துகொள்ள முடியாமலிருந்த தையே சுட்டி காட்டுகின்றது. அதுமட்டுமல்ல மக்கள் தான் சொல்வதனைப் புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இயேசு உவமைகள் மூலம் போதித்துள்ளார் என்பதையும் அறிந்து கொள் கூடியதாகவுள்ளது. ஏனென்றால் இயேசு சீடர்களிடம் “ “பரலோக இராட்சியத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. அவர்களுக்கோ அருளப்படவில்லை” (மத். 13:11, மாற்கு 4:11, லூக்கா 8:10) என்று தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் “உங்களுக்கு’ எனும் பதம் இயேசுவின் சீடர்களையும்அவர்களுக்கு” என்பது அவரது உவமைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சாதாரண மக்களையும் குறிக்கின்றது.(5) மேலும் இயேசு தன் சொல்லிய உவமைகளின் கருத்தை விளக்கிய போதே சீடரகளும் அவரது உவமையின் போதனைகளைப் புரிந்து கொண்டனர். (மாற். 7:17, லூக். 8:9-10) அதுவும் இயேசு தன் சீடர்களோடு தனித்திருந்த போதே தனது உவமைகளின் கருத்தை அவர்களுக்கு விளக்கினார். (மத். 13 : 36) இதிலிருந்து தான் சொல்லும் விடயங்கள் சீடர்களுக்கு மட்டுமே விளங்க வேண்டும் என்பதற்காகவே உவமைகள் மூலம் இயேசுகிறிஸ்து போதித்துள்ளார் எனும் முடிவிற்கே வர வேண்டியுள்ளது, 



உவமைகள் மூலம் போதித்த போது தனது உபதேசங்களை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதும், தன் சீடர்கள் தவிர ஏனையவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தான் உவமைகள் மூலம் போதித்தாக இயேசு குறிப்பிட்டுள்ள போதிலும் மாற்கு 4:32 இயேசுவின் கூற்றையே முரண்படுத்தும் விதத்தில் உள்ளது.  “அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லூக். 10:25-37, மத்தேயு 21:45 போன்ற வசனங்கள் இயேசுவால் சொல்லப்பட்ட உவமைகளை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதைச் சுட்டி காட்டுகின்றன. இவ்வசனங்கள் உவமைப் போதனைகளின் நோக்கம் பற்றி இயேசு கூறியவற்றை முரண்படுத்துவதாக உள்ளது. உண்மையில் மாற்கு 4:32 ஐ அடைப்படையாகக் கொண்டே மக்களுக்கு இலகுவாக விளங்குவதற்காக இயேசு உவமைகளின் மூலம் போதித்தார் என்னும் கருத்து கிறிஸ்தவ உலகில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆனால் மத்தேயு 13:11 மாற்கு 4:11 லூக்கா 8:10 இல் இதை முரண்படுத்தும் விதத்தில் சீடர்கள் தவிர வேறு எவரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே உவமைகளின் மூலம் போதித்துள்ளதாக இயேசு குறிப்பிட்டுள்ளார். இதனால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனம் இயேசுவினால் சொல்லப்பட்டதல்ல என்றும் இது ஆதிச்சபையினரால் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட வார்த்தை என்றும் கருதுகின்றனர்.(6) இதற்கு முன் உள்ள வசனத்தில் இடம் பெறும் “சீடர்களின் கேள்வி, இயேசுவின் உவமையைக் கேட்டவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே சுட்டி காட்டுகின்றது.(7)

மக்களால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் இயேசு ஏன் உவமைகள் மூலம் போதிக்க வேண்டும் என்பதற்கு, சில இறையியலாளர்கள் இரட்சிப்புக்காகத் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு(8) மட்டும் விளக்குவற்காகவே இயேசு பொதுவாக எல்லா மக்களாலும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் உவமைகளின் மூலம் போதித்துள்ளார் என விளக்குகின்றனர்.(9) எனினும் எவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உவமைகள் சொல்லப்படுகிறதோ அவர்கள் நிச்சயமாய்ச் சொல்லப்படும் உவமைகளின் கருத்தைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூற முடியாது. உதாரணத்திற்கு நாத்தான் தீர்க்கதரிசி கூறிய உவமை தன்னைப் பற்றியது என்பதை அறியமுடியாதவனாகவே தாவீது இருந்தான். (2 சாமு 12:1-7) உண்மையில் “விளக்கம் கொடுக்கப்படாத உவமை, எவராலும் புரிந்து கொள்ள முடியாத விதத்திலேயே இருக்கும்.”(10) சீடர்களுக்கு இயேசு விளக்கம் கொடுத்த பின்பே அவர்கள் அவரது உவமையின் கருத்தைப் புரிந்து கொண்டார்கள். சீடர்கள் இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் இருப்பதனால் இயேசுவின் உவமைகளைத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் எனும் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகவே உள்ளது. அவர்களுக்கும் உவமைகளின் கருத்து விளக்கப்பட வேண்டியுள்ளது. உவமையை மட்டுமல்ல “தேவனுடைய எந்தவொரு செய்தியையும் புரிந்துகொள்வதற்கு அவரது கிருபை மக்களுக்கு அவசியம்.”(11) இதனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு ஆவியின் அருள் கிடைப்பதனால் அவர்களால் உவமையின் கருத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது” எனச் சிலர் விளக்குகின்றனர்.(12) 

உண்மையில் இரட்சிப்புக்காகத் தேவன் மக்களைத் தெரிந்து கொள்வதைப் பற்றிய உபதேசத்துக்கு இவ்வசனத்தை ஆதாரமாக எடுப்பதில் அர்த்தமில்லை. தேவ இராட்சியத்தின் இரகசியங்களை அறியக்கூடிய கிருபை தன் சீடர்களுக்கு அருளப்பட்டுள்ளதைப் பற்றி மட்டுமே இயேசு இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் எனினும் இயேசுவின் வார்த்தைகள் “சத்தியத்தை மறைப்பது அல்லது அதை மறைமுகமான விதத்தில் அறிவிப்பது”(13) என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. எனினும் இயேசு மக்களுக்கு மறைபொருள்களாகச் சொல்லிய உவமைகளைத் தன் சீடர்களுக்கு விளக்கியும் மாற்கு 4:34 இல் குறிப்பிட்டுள்ளபடி சில சந்தர்ப்பங்களில் சாதாரண மக்களுக்கும் விளங்கக் கூடிய விதத்தில் உவமைகளில் போதித்தும் உள்ளார். உண்மையில், இயேசுவின் கூற்றைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு “உவமை” எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் எத்தகைய அர்த்தம் உடையது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் “பரபோலெ” (parabole) எனும் பதமே உவமையைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது. (14) இதனர்த்தம் “ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுக் காட்டிப் போதிக்கும் முறையாகும்.”(15) எனினும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் உவமைகள்  அனைத்தும் இத்தகைய தன்மையுடையவை எனக் கூறுவதற்கில்லை. இயேசு கூறிய “கடுகுவிதை” “புளித்தமா” போன்ற உவமைகளே இவ்வாறு ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுக்காட்டிப் போதிக்கும் உவமைகளாக உள்ளன. பெரும்பாலான உவமைகளில் இத்தகு தன்மை இல்லை. இதற்குக் காரணம் உவமையைக் குறிக்கும் கிரேக்கப் பதம் இயேசு பேசிய அரமிக் மொழியில் உவமை என்பதற்கு அவர் உபயோகித்த சொல்லின் சகல அர்த்தங்களையும் கொண்டிராதமையாகும். 

இயேசு பேசிய அரமிக் மொழியில் “மேத்தால்” (methal) எனும் பதம் கிரேக்கத்தில் “பரபோலெ” (உவமை) என எதைக் கருதுகிறதோ அதை மட்டும் குறிக்காமல் அதைப் போன்ற பலதரப்பட்ட போதனை மற்றும் பேச்சு வழக்கு முறைகளையும் குறிக்கும் பதமாகவுள்ளது இப்பதம் “பழமொழி, மரபுத்தொடர், உருவகவிபரணம், ஒப்புவமை, உவமானம், புதிர் எனும் பலதரப்பட்ட மொழிவழக்குகளையும் குறிக்கும் பதமாகும். (16) இயேசு இவையனைத்தையும் குறிக்க “மேத்தால்” எனும் பதத்தினையே உபயோகித்துள்ளார். (17) எனினும் எவ்விடத்தில் எதைக் குறிக்க இப்பதத்தை அவர் உபயோகித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் கிரேக்கத்தில் உபயோகிக்கப்பட்ட “பரபோலி” எனும் பதம் உள்ளது. ஏனென்றால் அது  ஒப்பிட்டுக்காட்டி உவமிப்பதை மட்டுமே குறிக்கின்றது. இதனால் இயேசுவின் வித்தியாசமான போதனை முறைகள் அனைத்தும் நீண்டகாலமாகக் கிறிஸ்தவர்களால் உவமை என்றே கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது வேதத்தின் மூலமொழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் காரணமாக உவமை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அதன் கிரேக்க அர்த்தத்தை அல்ல, மாறாக இயேசு பேசிய அரமிக் மொழியில் இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.”(18)

இயேசுவின் உவமைகளாகப் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில், “நீங்கள் உலகத்திற்கு உப்பாயிருக்கிறீர்கள்” போன்றவை உருவக விபரணங்களாகும்.புளித்தமா”, “கடுகுவிதை” போன்றவை ஒப்புவமைகளாகும். மேலும் இவற்றில் ஒரு கதையின் மூலம் ஒரு சத்தியத்தைக் கற்பிக்கும் “உவமைக் கதைகள்” உள்ளன. “நல்ல சமாரியன் “கெட்ட குமாரன்” போன்ற ஆரம்பமும் முடிவும் உள்ள கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். அதேபோல் மறைபொருள் கொண்ட கதைகளும் உள்ளன. “விதைப்பன் பற்றிய உவமை” “தானியம் களை பற்றிய உவமை” இத்தகைய மறைபொருள் கதைகளாகும். உவமைக் கதைகளில் ஒரு சத்தியம் மட்டுமே விளக்கப்பட்டிருக்கையில் மறைபொருட்கதைகளில் அவற்றின் விபரணம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.(19) மறைபொருள் கதைகளில் உள்ள மறைபொருள் அர்த்தங்கள் இயேசுவால் சீடர்களுக்கு விளக்கப்பட்டுள்ளதையும் நாம் சுவிஷேசப் புத்தகங்களில் நாம் அவதானிக்கலாம்.  உண்மையில் இயேசு மறைபொருள் கதைகளை உவமைகளாகக் கூறுகையில் அவை சாதாரண மக்களுக்கு விளங்காமல் சீடர்களுக்கு மட்டும் விளங்கும் விதத்தில் கூறியுள்ளார் அப்படியிருந்து சீடர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமையினால் அவர்கள் தனித்திருந்தபோது அவற்றின் அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். எனவே இயேசுவின் கூற்றானது அதாவது எவரும் புரிந்துகொள்ளக் கூடாது எனும் நோக்கோடு அவர் போதித்தவைகளைப் பற்றிய குறிப்பானது, மறைபொருள் கதைகளாக உள்ள உவமைகளைக் குறிக்க மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

இயேசு தேவராட்சியத்தின் இரகசியங்களையே சீடர்கள் மட்டும் புரிந்து கொள்வதற்காகப் பகிரங்கப் பிரசங்கங்களில் மறைபொருள் கதைகளாக உவமைகளாக போதித்ததோடு அவர்கள் தனித்திருந்தபோது அவை பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூறினார். (மத். 13:34-36) இதைப் பற்றி மாற்கு எழுதும்போது “உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. அவர் தம்முடைய சீடரோடு தனித்திருக்கும்போது எல்லாவற்றையும் விபரித்துச் சொன்னார். இதற்குக் காரணம் தேவ இராச்சியத்தைப் பற்றிய தனது செய்தியை முழு உலகிற்கும் அறிவிப்பதற்காக அவர் அந்தப் பன்னிரு சீடர்களையும் தெரிவு செய்திருந்தமையாகும். உண்மையில் இயேசுவிற்கு அநேகச் சீடர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் அவர் பன்னிருவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு அப்போஸ்தலர்(20) என்று பெயரிட்டு, அவர்களை எப்போதும் தன்னோடு வைத்திருந்தார். இந்தப் பன்னிரு அப்போஸ்தர்களுமே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பன்னிரு சீடர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர். இயேசு இவ்வுலகில் அவர்களோடு வாழ்ந்த காலத்தில் தேவராட்சியத்தைப் பற்றிய பல விடயங்களை வெளிப்படுத்தியதோடு, தான் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் வரவிருக்கும் பரிசுத்த ஆவியானவர் ஏனைய விடயங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் வாக்களித்தார். (லூக். 6:13-16, மாற்கு 3:13-15, 4:10-1, லூக்கா 24:25-27,44 அப். 1:3, யோவான் 16:12-13, மத். 28:19-20, அப். 1:8) உண்மையில் இவர்களே முழு உலகிற்கும் இயேசுவின் செய்தியை அறிவிக்கும் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையால் இயேசு மற்றவர்களுக்குப் போதித்ததைவிட அதிகமான விடயங்களை அவர்களுக்குக் கற்பித்தார். இதனால் அவர் சில சந்தர்ப்பங்களில் மறைபொருள் கதைகளான உவமைகள் மூலமாக அவர்களுக்குத் தேவ இராட்சியத்தின் இரகசியங்களைப் போதித்துள்ளார். 

இயேசு இவ்வசனத்தில் “தேவ இராட்சியத்தின் இரகசியங்கள்” என எதைக் கருதியுள்ளார் என்பது பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அக்கால யூதர்கள் தேவனுடைய பெயரை உச்சரிப்பதைத் தவிர்த்து வந்தமையால்(21) மாற்குவிலும் லூக்காவிலும் இடம்பெறும் தேவராட்சியம் என்பது மத்தேயுவில் பரலோக ராட்சியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது(22). தேவ ராட்சியம் அல்லது ரலோக ராட்சியம் என்பது “பூலோக ரீதியாக ஒரு இடத்தில் இருக்கும் இராட்சியத்தை அல்ல மாறாக தேவனுடைய ராஜரீக ஆளுகையையே குறிக்கின்றது.(23) எனவே மானிட வாழ்வில் தேவனுடைய ஆளுகையோடு சம்பந்தமான இரகசியங்களையே இயேசு தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். “இரகசியம்” என்னும் பதம் பவுலினுடைய நிருபங்களில் சிறப்பான அர்த்தமுடையது. மத்தேயு இவ்விடத்தில் மட்டுமே இப்பதத்தினை உபயோகித்துள்ளார். பவுலின் நிருபங்களில் இரகசியம் என்பது யூதரும் புறஜாதியினரும் உடன் சுதந்திரத்தாரராக தேவனுடைய இராட்சியத்தில் இருப்பதைப் பற்றிய சத்தியமாகும். இது இயேசு சிலுவையில் செய்த செயலை அடிப்படையாகக் கொண்டது என்றும், இவ்விடயம் ஆதியிலே தேவனால் திட்டமிடப்பட்டிருந்தும் பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் இதைப் பற்றி முழுமையாக அறியாதிருந்தனர் என்றும் இப்பொழுது தேவனுடைய அப்போஸ்தலருக்கு இத்தெய்வீக இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பவுல் விளக்கியுள்ளார். (ரோமர் 16:24-26, எபே. 3:1-12) அதாவது மானிட இரட்சிப்பைப் பற்றிய தேவனுடைய சுவிஷேசம் இதுவாகும். இதை முழு உலகிற்கும் அறிவிப்பதற்காக இயேசு தன் சீடர்களுக்கு அதன் இரகசியங்களை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தியுள்ளார். (மத். 16:17, லூக். 10:21, 23-24, 12:32) இதனாலேயே தேவ இராட்சியத்தைப் பற்றி அறியும்படி அவர்களுக்கு அருளப்பட்டுள்ளதாக இயேசு குறிப்பிட்டுள்ளார். தேவ இராட்சியத்தின் சில இரகசியங்களை மறைபொருட்கதைகளான உவமைகளின் மூலம் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். 

Reference and Footnotes 
(1) William Barclay, And Jesus Said: The Parables of Jesus p. 4 எனினும் இயேசுவின் சகல உவமைகளையும் கதைகள் எனக் கூறமுடியாது. பெரும்பாலான உவமைகளில் ஒரு கதையின் அம்சங்கள் இல்லை. அத்தோடு அநேகமான உவமைகளில் பரலோக சத்தியங்கள் அல்ல. மாறாாக பூலோக வாழ்வுக்கு அறிவுறுத்தல்கள் உள்ளன. 

(2) Warren W. Wiersbe, Meet Yourself in the Parables p. 10

(3) F.V.Filson, Harper’s New Testament Commentaries: Gospel According to St. Mathew p.160
(4) Ibid p. 5 யூதர்கள் மத்தியியில் உமைகள் மூலம் போதிக்கும் முறை இருந்தமையால் அது கூறுகின்றனர். (William Barclay, And Jesus Said: The Parables of Jesus p. 1-4)

(5) “அவர்களுக்கு” என்பது மாற்குவில் “புறம்பே இருக்கிறவர்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (மாற் 4:1, லூக். 8:10) இச்சொற்பிரயோங்கள் அனைத்தும் இயேசுவின் சீடர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராதவர்களையே குறிக்கின்றது.

(6) Pointed out in David Wenham, The Parables of Jesus p. 240

(7) D. Patte. The Gospel According to Mathew: S Structural Commentary on Mathew’s Faith. Philadelphia, Fortress 1987 p. 186 

(8) இரட்சிப்பிற்காகத் தேவன் மக்களைத் தெரிந்து கொண்டுள்ளார் என்பது வேத்தின் தெளிவான போதனையாகும். எனினும் இத்தெய்வீக தெரிந்து கொள்ளுதல் எதை அடிப்படையாகக் கொண்டது என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இறையியலாளர் ஜோன் கால்வினுடைய உபதேசத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், தேவன் தனது சித்தத்தின்படி உலகத்தோற்றத்திற்கும் முன்பே இரட்சிப்புக்காகக் குறிப்பிட்ட மக்களைத் தெரிந்தெடுத்துள்ளார் என நம்புகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை தேவனால் தெரிந்து கொள்ளப்படாதவர்கள் அவரால் கைவிடப்பட்டவர்கள் ஆவார்.(Louis Berkhof, Systematic Theology p. 109-125) இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆர்மினியஸ் எனும் இறையியலாளரது கருத்தின்படி உலக மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருப்பதால் தேவன் இவ்வாறு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிந்தெடுத்து மற்றவர்களைக் கைவிட்டிருக்க மாட்டார் என தர்க்கிக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சகலமுமறிந்த தேவன் எவர்கள் விசுவாசிப்பார்கள் என்பதை முன்னறிந்து (ரோமர் 8:29) அவர்களை இரட்சிப்பிற்காகத் தெரிந்து கொண்டுள்ளளார். (Henry Thiesen, Introductory Lectures in Systematic Theology, p. 157) 

(9) John Calvin, A Harmony of the Gospels: Mathew, Mark & Luke Volume II p. 64)

(10) Leon Morris, The Gospel According to Mathew p. 339

(11) Donald A. Hanger, Word Biblical Commentary Mathew p. 372

(12) William Hendriksen New Testament Commentary Mathew p. 553

(13) D.A. Carson, The Expositor’s Bible Commentary Mathew p. 307

(14) இக்கிரேக்கச் சொல்லிலிருந்தே உவமையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான parable எனும் பதம் வந்துள்ளது. 

(15) Lawrence O. Richards, Expository Dictionary of Biblical Words p. 477

(16) F.Brown S.R. Driver & C.A. Briggs, Hebrew-English Lexicon of the Old Testament, 1965 p. 605

(17) Gordon D.Fee& Douglas Stuart, How to read the Bible for all its worth. P.124-125

(18) David Wenham, The parables of Jesus p. 225

(19) இத்தகைய கதைகளின் மூலம் இயேசு ஒரு குறிப்பிட்ட சத்தியத்தையே விளக்கியுள்ளார். எனினும் ஆதிச்சபைப் பிதாக்கள் கிரேக்க மற்றும் லத்தீன் மொழி வேதாகமங்களையே உபயோகித்தமையால் அவர்கள் இயேசு பேசியி அரமிக் மொழியில் உவமையைக் குறிக்கும் பதத்திற்குள்ள பல்வகைப்பட்ட அர்த்தங்களையும் கருத்திற்கொள்ளாதவர்களாக, மறைபொருட் கதைகளைப் போலவே ஏனைய உவமைகளையும் வியாக்கியானம் செய்துள்ளனர். உதாரணத்திற்கு “நல்ல சமாரியன்” உவமையின் மூலம் இயேசு, தன்னிடத்தில் கேள்வி கேட்ட நியயாஸ்திரிக்குப் “பிறன் யார்? என்பதைக் காண்பித்துள்ளார். என்பதை அறியாமல், கதையின் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்களைக் கொடுத்துள்ளார். இவ்வுவமையைப் பற்றி இன்றுவரை பிரபல்யமாயிருக்கும் இத்தகைய விளக்கமுறை கி.பி. 3ம் நூற்றாண்டில் ஒரிகன் என்னும் சபைப் பிதா கொடுத்த விளக்கமாகும். 

(20) “அப்பொஸ்டொலொஸ்” எனும் கிரேக்க பதமே தமிழில் “அப்போஸ்தலன்” என எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் “அனுப்பப்பட்டவன்” அல்லது “செய்தியாளன்” என்பதாகும் எனவே, இயேசுவின் அப்போஸ்தல்கள் அவரைப் பிரதிநிதித்துவம் வகிக்கும் அவரது செய்தியாளர்களாய் இருந்தனர். 

(21) யூதர்கள் பபிலோனிய சிறையிருப்பின் பின்னர் நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். “உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணில் வழங்காதாயிருப்பாயாக” என்னும் இரண்டாம் கற்பனையைக் கைக்கொள்வதற்காக அவர்கள், தேவன் என்னும் பெயரை உச்சரிப்பதையும் தவிர்த்து வந்தனர். “பரலோக ராட்சியம் என்பதில் பரலோகம் என்பது தேவனை மரியாதையுடனும் பக்தியுடனும் அழைப்பதைக் குறிக்கிறது. (Leon Morris, The Gospel According to Mathew p. 53)
(22) Joel Marcus, ‘Entering into Kingly Power of God” in the Journal of Biblical Literature. Vol 107 107. P. 663-675



கட்டுரையாசிரியர் Dr. M.S. வசந்தகுமார்.
நன்றி - சத்தியவசனம் 
  


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment