- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 25 May 2011

காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறான்றையும் தாமாய் செய்யமாட்டார்( யோவான் 5:19)



இயேசுக்கிறிஸ்துவின் சில கூற்றுக்கள் அவரது தேவத் தன்மையை முரண்படுத்தும் விதத்தில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். வேதபுரட்டர்கள் இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை தறுதலித்து வருகின்றனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் காணப்படும் இத்தகைய கூற்றுக்களில் ஒன்று 5ம் அதிகாரத்தில் உள்ளது(1) இயேசுக்கிறிஸ்து தம்மைத் தேவனுக்குச் சமனாக்குகின்றார் என்னும் யூதர்களின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கும்போது “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்“ என்று 5ம் அதிகாரம் 19ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள் அவர் கூற்றில் “தாமாய் செய்யமாட்டார்“ என்னும் சொற்பிரயோகத்திற்கு மட்டும் அழுத்தம் கொடுத்து, இயேசுக்கிறிஸ்துவினால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது என்று தர்க்கித்து வருகின்றனர். எனினும் இவர்கள் வாதிடுகின்ற விதமாக, “இயேசுக்கிறிஸ்துவினால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது“ என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல“ அதேபோல் இயேசுக்கிறிஸ்து பிதாவில் சார்ந்திருக்கும் அல்லது தங்கியிருக்கும் நிலையையே இவ்வசனம் அறியத் தருகிறது. (3) என்னும் சில வேத ஆராய்ச்சியாளர்களின் விளக்கமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. 

இயேசுக்கிறிஸ்து யோவான் 5:19 இல் சொல்லும் விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு இவ்வசனத்தை முழுமையாகப் பாரக்க வேண்டியது அவசியம். (4) வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியை கருத்திற் கொள்வதில்லை. இவ்வசனத்தின் இறுதிப் பகுதி “அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.“ என்று உள்ளது. அதாவது பிதா செய்பவற்றை குமாரனும் அதேவிதமாக செய்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும. உண்மையில் பிதா செய்பவைகளை தாமும் செய்வதாக இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் அறியத் தருகிறார். இது இருவரும் ஒரே தன்மையும் வல்லமையும் உடையவர்கள் என்பதை அறியத் தருகின்றது. இதனால்தான் இருவராலும் ஒரே காரியத்தைச் செய்யக் கூடியதாக உள்ளது. (5)

இயேசுக்கிறிஸ்துவினுடைய கூற்றில் “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ“ எனும் வாக்கியம் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள அந்நியோன்ய உறவைச் சுட்டிக் காட்டுகிறது. “இது இருவருக்கும் இடையில் எப்பொழுதும் இருக்கும் உறவாகும்“(6) உண்மையில் பிதா செய்கிறவைகளை குமாரனைத் தவிர வேறு எவராலும் பார்க்க முடியாது. (7). இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே பிதாவைப் பார்க்க முடியும் என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையிலுள்ள உறவு மிகவும் நெருக்கமானதும் அந்நியோன்ய சம்பந்தமானதுமாக உள்ளது. எனினும் பிதா செய்கிறவைகளைப் பார்த்து செய்யும் முறையைப் பற்றி இயேசுக்கிறிஸ்து இங்கு குறிப்பிடவில்லை. (8) என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். (9) இது இருவருக்கும் இடையேயுள்ள அந்நியோன்னிய சம்பந்தமான உறவையே சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பிதாவினால் செய்பவற்றைத் தன்னாலும் செய்ய முடியும் என்பதையே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பிதா செய்பவைகளைத் தாமும் செய்வதாக இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் குறி்ப்பிட்டாலும் “குமாரன் தாமாய் எதையும் செய்யமாட்டார்“ எனும் வாக்கியத்தின் மூலம் தாம் “தனித்து தன்னிச்சையாகச் செயற்படுவதில்லை“ என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது “அவர் பிதாவின் சித்தத்தை மீறி அதற்கெதிராகத் தனித்து செயற்படமாட்டார்“ என்பதே இயேசுக்கிறிஸ்துவினுடைய கூற்றின் அர்த்தமாகும். (11) இயேசுக்கிறிஸ்து  இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பிதாவின் சித்தத்தின்படியே செயல்பட்டு வந்தார். (யோவான் 6:38, 5:30) இதனாலேயே குமாரன் தாமாய் எதையும் செய்யமாட்டார் என்று அவர் கூறினார். “இயேசுக்கிறிஸ்து  செய்பவைகள், அவரும் பிதாவும் ஒன்றாகச் சேர்ந்து செய்பவைகள் ஆகும் (12). எனவே இங்கு ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர் என்ற எண்ணத்திற்கு எவ்வித இடமுமில்லை. எனவே, இயேசுக்கிறிஸ்து பிதாவின் சித்தத்திற்கு முரணாக எதுவும் செய்யாமல் இருப்பதனால் அவர் பிதாவை விடத் தாழ்வானவர் என்றோ, இல்லையென்றால் வல்லமை குறைந்தவர் என்றோ எண்ணுவது தவறாகும்

(இவ்வாக்கமானது சகோ வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக கல்லூரி)

Foot Note & Reference 
(1) ஏனைய சுவிசேஷங்களில் காணப்படும் இயேசுக்கிறிஸ்துவின் இத்தகைய கூற்றுக்களின் விளக்கங்களுக்கு ஆசிரியரின் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்“ மறறும் இயேசுக்கிறிஸ்து இறைவனா? எனும் நூல்களைப் பார்க்கவும்

(2) 38 வருடங்களாக வியாதியோடிருந்தவனைக் குணப்படுத்திய இயேசுக்கிறிஸ்து அதை யூதர்கள் எதுவும் செய்யாத ஓய்வுநாளில் செய்தமையால் அவர்கள் அவரைக் கொலைசெய்ய முற்பட்டார்கள். இதை அறிந்த இயேசுக்கிறிஸ்து என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்.“ என்று கூறினார். இதன் மூலம் ஓய்வு நாளில் செயல்படுவதற்கு, தேவனுக்குத் தடைகள் எதுவும் இல்லாதிருப்பது போலவே தமக்கும் எவ்வித தடையும் இல்லை என்பதை இயேசுக்கிறிஸ்து சுட்டிக் காட்டியுள்ளார். இதுவும் அவர் தம்மை தேவனுடைய சொந்தப் பிதாவாக குறிப்பிட்டதும், யூதர்களுக்கு அவர் தம்மைத் தேவனுக்குச் சமமானவராக்குவதாகத் தென்பட்டது. இதனால், நியாயப்பிரமாணத்தில் தேவனை நிந்திப்பதற்குக் கொடுக்கப்படும் தண்டனையான மரணதண்டனை கொடுப்பதற்கு யூதர்கள் வகை தேடினார்கள். (யோவா. 16-18) இதை அறிந்த இயேசுக்கிறிஸ்து தமது தேவத்துவதற்திற்கான ஆதாரங்களை சுட்டிக் காட்டுவதற்காகச் சொல்லும் விடயங்களில் ஆரம்ப வசனம் இதுவாகும். 

(3) G.L. Borchert, John 1-11: The New American Commentary, p 235; M.C. Tenny, The Expositor's Bible Commentary Volume 9, P. 64

(4) வேதப்புரட்டு உபதேசங்கள் கிறிஸ்தவ சபைக்குள் புகுவதற்கு முக்கிய காரணம் வேத வசனங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு அவ்வசனங்களை முழுமையாக நோக்காமல், அவற்றின் ஒரு பகுதிக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து வியாக்கியானம் செய்வதாகும். 

(5) L. Moris, John : The New International Commentary on the New Testament, p. 313

(6) Ibid, p312

(7) தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 1.18) அவர் மனுஷரில் ஒருவரும் கண்டிராத வரும் காணக்கூடாதவருமாய் இருக்கிறார் (1 தீமோ. 6:16)

(8) Schonfiled என்பாரின் ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பும் இயேசுக்கிறிஸ்துவின் இவ்வசனத்தை சரியான விதத்தில் மொழிபெயர்க்கவில்லை. 'What he does the son copies' எனும் மொழிபெயர்ப்பு மூலமொழியி்ன அர்த்தத்தை சரியான விதத்தில் ஆஙகிலத்தில் அறியத் தரவில்லை. 

(9) சில தேவ ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தில் ஒரு உவமை மறைந்திருக்கிறதாகக் கூறுகின்றனர். அதாவது, அக்காலத்தில் தகப்பனுடைய தொழிலை மகன் கற்றுக் கொள்ளும் முறை பற்றி இவ்வசனத்தில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு்ளளதாக இவர்கள் கருதுகின்றனர். (C.H. Dood, A Hidden Parable in the Fourth Gospel' in More New Testament Studies pp 30-40) தகப்பன் செய்கின்றவற்றைப் பார்த்தும் தகப்பன் சொல்கின்றவற்றைக் கேட்டுமே அக்காலத்தில் பிள்ளைகள் தகப்பனின் தொழிலைக் கறறுக் கொண்டனர். ஆனால் இயேசு இப்படிப்பட்ட நிலையில் இருந்தார் என்று கூறுவது அவரது தேவத்துவத்தை மட்டுப்படுத்தும் விளக்கமாகவே உள்ளது.

(10) W. Barclay, John 1-7: The Daily Study Bible, p 188

(11) D.A. Carson, John : The Pillar New Testament Commentary, p 251

(12) E.A. Blum, John : The Bible Knowledge Commentary, p 290

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment