- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 20 April 2011

நாம் எப்பொழுது ஜெபிக்க வேண்டும்?

prayer ஜெபத்தைப்பற்றி நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு காரியம் நம்முடைய ஜெப நேரத்தைப் பற்றியது. அதாவது எப்பொழுது ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். எனினும், நாம் எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும் என வேதாகமம் குறிப்பிட்ட ஒரு காலத்தை வரையறை செய்யவில்லை வேதாகம காலத்தில் மனிதர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவிதத்தில் ஜெபிக்கும் நேரத்தை வைத்திருந்தனர். இதனால் சிலர் காலையில் ஜெபித்தனர். (சங். 5:3, 108:, 119:147, 143: மாலையில் சிலர் ஜெபித்தனர்.(சங். 141:2) சிலர் நள்ளிரவிலும் ஜெபித்தனர். (சங். 119:62). சிலர் நாளொன்றுக்கு ஏழுதடவைகள் ஜெபிப்பவர்களாவும் இருந்தனர் (சங். 119:164( நெருக்கடியான காலங்களில் மனிதர்கள் நாள் முழுவதும் ஜெபித்து வந்தனர்.
சங்கீதம் 55:17 “அந்தி சந்தி மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்“ என்று தாவீது குறிப்பிட்டுள்ளான். தாவீதின் கூற்றில்“அந்தி“ மாலைநேரத்தையும் “சந்தி“ காலை வேளையையும், “மத்தியானம்“பகற்பொழுதையும் குறிக்கின்றது. (யூதர்களுடைய நாட்கணிப்பீட்டு முறையின்படி மாலை 6.00 மணிக்கே புதிய நாள் ஆரம்பமாவதனாலேயே இவ்வசனத்தில் இவ்வசனத்தில் முதலில் மாலைவேளைளையும் அதன் பின்னர் காலையும் பகலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாக புத்தகத்தில் ஒருநாளின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.) ஆதியாகம புத்தகத்தில் ஒருநாளின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிப்பிட “சாயங்காலமும் விடியற்காலமுமாகி“ என்னும் சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டிருப்பதும் யூதர்களின் நாட்குறிப்பீட்டு முறையை அறியத் தருகிறது. (ஆதி 1:5,8, 13, 19, 23, 31). இதனால் தாவீது நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிப்பவனாக இருந்தான் என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டே தானயேலும் நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் பழக்கத்தை உடையவனாக இருந்தானென்று கருதப்படுகின்றது. (தானி. 6:10) எருசலேமின் பக்கமாக இருந்து ஜெபிக்கும் பழக்கம் சாலமோனுடைய காலத்திலிருந்து இயேசுவின் காலம்வரை இருந்தது. (2 நாளா. 6:34-39, யோவா. 4:20-24) எனினும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில், காலையும் மாலையுமாக நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிக்கும் பழக்கமே மக்கள் மத்தியில் இருந்துள்ளதை 1 நாளாகமம் 23:30 அறியத் தருகிறது. உண்மையில் கிறிஸ்துவுக்குப் பின் 2ம் நூற்றாண்டிலேயே நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் பழக்கம் யூதமார்க்கத்தில் உத்தியோகபூர்வமாக கட்டளையாக்கப்பட்டது. “மிஷ்னா’ (Mishnah) என்னும் யூத மத நூலில் “பெரேக்கா“ Berakah 4:1 என்னும் பகுதியில் இத்தகைய கட்டளையுள்ளது. அக்காலத்தில் கிறிஸ்தவர்களும், யூதர்களின் முறையைப் பின்பற்றிய நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “டிடாக்கி“ Didache 8:3 இல் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கீதம் 55:17, “அந்தி சாயும் மத்தியானம்“ என்னும் சொற்பிரயோகங்கள், நாளொன்றில் மூன்று தடவைகள் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தையல்ல “நாள் முழுவதும் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தைப் பற்றிய குறிப்பாகவே உள்ளது. எனவே தாவீது நெருக்கடியான சூந்நிலையில் நாள்முழுவதும் ஜெபிப்பவனாகவே இருந்துள்ளதை இவ்வசனம் அறியத்தருகிறது. ஏனைய நாட்களில் அவன் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஜெபிப்பவனாக இருந்திருக்க வேண்டும். வயோதிப காலத்தில் தாவீது அந்த நியாயப்பிரமாண கட்டளையை அடிப்படையாகக் கொண்டு ஆலயத்தில் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளமையால் ( 1 நாளா. 23:1,20 யாத். 29:38-39, எண் 28:3-8 இக்கட்டளைக் கொடுக்கப்பட்டுள்ளன) இதுவே இதுவே அவனுடைய தனிப்பட்ட பழக்கமாகவும் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மனிதர்கள் தாம் விரும்பி நேரங்களில் ஆலயத்தில் சென்று ஜெபிக்க கூடியதாக இருந்தாலும், காலையில் ஒன்பது மணியும் மாலையில மூன்று மணியுமே அவர்களுடைய ஜெப நேரங்களாக இருந்தன. (அப். 2:15, 3:1). யூதர்கள் சூரிய உதயத்திலிருந்தே நேரத்தை கணிப்பிட்டதினால் அப். 2:15ல் “பொழுது விடிந்து மூன்றாம் மணிவேளை“ காலை ஒன்பது மணியையும், அப் 3:1ல் ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணிநேரம“ மாலை மூன்று மணியையுமே குறிக்கின்றது.
சில கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகாலை நேர ஜெபமே தேவனால் கேட்கப்படும் என்றும், அதிகாலை ஜெபத்துக்கே வல்லமை அதிகம் என்றும் எண்ணுகின்றனர். நாம் ஒவ்வொரு நாளையும் ஜெபத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் ஏனைய நேரங்களில் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் கேட்கப்படமாட்டாது என்றோ, அல்லது அவைகளுக்கு வல்லமை குறைவு என்றோ எண்ணுவது தவறாகும். நாம் எந்த நேரத்தில் ஜெபித்தாலும் தேவன் நம்முடைய ஜெபங்களை கேட்கிறவராகவே இருக்கிறார். காலையிலேயே வேலைக்கு செல்பவர்களும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றவர்களும் அந்நாளுக்கான உணவினை காலையிலேயே தயாரிக்கவேண்டிய நிலையில் இருப்பவர்களும் காலை நேரத்தில் அதிக நேரம் ஜெபிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். இதனால் இவர்கள் காலையில் சிறியதொரு ஜெபத்துடன் அந்த நாளை ஆரம்பித்து பின்னர் மாலையில் வேதாகமத்தை வாசித்து, ஜெபிப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்கி வைத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை.ஜெபிப்பற்கு நேரம் முக்கியமானதல்ல. நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
வேதாகம கால மக்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிப்பதை தம் பழக்கமாகக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய வாழ்வின் சூழ்நிலைக்கேற்றவிதத்தில் ஏனைய நேரங்களிலும் ஜெபிப்பவர்களாக இருந்தனர். எனவே, ஜெபிப்பதற்கு என்று நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தாலும், ஏனைய நேரங்களிலும் நாம் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.
“நாம் மிகவும் அதிகமாக நேசிக்கும் ஒருவரோடு பிரயாணம் செய்யும்போது எப்படி நாம் அவரோடு எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்போமோ அவ்விதமாகநாம் எப்பொழுதும் தேவனோடு பேசுகின்றவர்களாக இருக்க வேண்டும்“ஜெபம் தேவைகளுக்கான மன்றாடுதலாக இராமல், தேவனோடு தினம் உறவாடுவதாக இருப்பதனால். நாம் வீட்டில் மற்றவர்களுடன் எப்படிப் பேசுகின்றோமோ,. அவ்விதமாகவே தேவனோடும் பேவேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடுமப அங்கத்தினர்களுடன் பேசுவதற்காக ஒதுக்கி வைத்திருப்போம். எனினும் சிலநேரங்களில் இதையும் மீறி சில விஷயங்களைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவோம். சில நேரங்களில் சுருக்கமாக ஒரு சில நிமிடங்களில் மாத்திரமே பேசுவோம். நாம் ஜெபிக்கும் நேரமும் இவ்விதமாக நாளுக்கு நாள் வித்தியாசப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும். அதிகளவு நேரம் கிடைக்கும் நாட்களில் நாம் அதிக நேரம் ஜெபிக்கலாம். எனினும், நாம் அன்றாடம் வேதம் வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பலநாட்கள் அல்லது பல மாதங்கள் ஜெபிக்காமலே இருந்து விடுவோம். “நம்மால் எப்பொழுதும் ஜெபிக்கக்கூடியதாயிருந்தாலும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிப்பதற்கென்று குறிப்பிட்ட நேரம் நமக்கு இருக்க வேண்டும்.
சோர்ந்து போகாகமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள் (லூக். 8:1) என்றும், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் ( 1தெச. 5:17, கொலோ. 4:2) என்றும் வேதாகமம் கூறுகின்றது. நாம் ஜெபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஜெபித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது இக்கட்டளைகளின் அர்த்தம் அல்ல. நாம் ஒருநாள் ஜெபித்துவிட்டு மறுநாள் ஜெபிப்பதை கைவிடுபவர்களாக இருக்கக் கூடாது என்பதையே இக்கட்டளைகள் அறியத் தருகின்றது. மேலும், நாம் ஜெபிப்பதற்கு ஒதுக்கி வைத்துள்ள நேரத்தில் மாத்திரம் ஜெபிப்பவர்களாக இராமல், ஜெபம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் விதத்தில் நம்முடைய அன்றாட வாழ்வின் சகல காரியங்களிலும் ஜெபத்தை உள்ளடக்கியவர்களாக நாம் வாழ வேண்டும். ஜெபிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் வார்த்தைகள் வெளிப்படும் விதததில் ஜெபிக்கும் நாம் ஏனைய நேரங்களில் மனதிற்குள் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும். உண்மையில் “நம்முடைய வாழ்வு ஒவ்வொரு நிமிடமும் தேவனிலேயே சார்ந்திருக்கின்றது என்பதையும், நம்முடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவாகவே இருக்கின்றது என்பதையும் உணர்கின்ற விதத்தில் எப்பொழுதும் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.“. இதனால் நாம் நாள் முழுவதும் நம்முடைய வாழ்வின் சகல காரியங்களையும் குறித்து தேவனோடு பேசுகின்றவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், “எந்த நேரமும் ஜெபத்திற்கு ஏற்ற நேரமாகவே இருக்கிறது“
 
 
நாம் எங்கிருந்து ஜெபிக்க வேண்டும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் ஜெபிக்க வேண்டுமென்ற வரையறை வேதாகமத்தில் இல்லாத்துபோலவே குறிப்பிட்ட இடத்திலிருந்து ஜெபிக்க வேண்டும் என்னும் கட்டளையும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரேல் மக்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்களுடைய் ஜெபம் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மையமாகக் கொண்டிருந்தது. அக்காலத்தில் உடன்படிக்கைபெட்டி தேவனுடைய பிரசன்னத்திற்கான அடையாளமாக இருந்தமையால் இப்பெட்டி இருந்த ஆசரிப்புக் கூடாரத்திலும், அதன் பின்னர் ஆலயத்திலும் மக்கள் ஜெபிப்பதற்காக கூடிவந்தார்கள். தேவனுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்தை விட்டு தூரமான இடங்களில் இருந்தவர்கள் ஆலயம் இருக்கும் அத்திசையை நோக்கியவாறு ஜெபித்தனர். ஆனால் ஜெருசலேம் ஆலயத்தை மையமாகக் கொண்ட ஜெபமுறை இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு முற்றுப்பெற்றது.அதன்பின்னர் மனிதர் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கக்கூடிய நிலைஏற்பட்டது. இயேசு இதைப்பற்றிக் கூறும்போது நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.“(யோவா. 4:21) என்று தெரிவித்தார். இத்தகைய காலம் இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு வந்தது. இதைப் பற்றி பழைய ஏற்பாட்டு கால தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்திருந்தனர். (செப். 2:11, மல். 1:11) எனவே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கக் கூடியதாகவுள்ளது.
தம்முடைய நாமத்தில் பக்தர்கள் எவ்விடத்தில் கூடி வந்தாலும், அவ்விடத்தில் தாம் இருப்பதாக இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார். (மத். 18:20) எனவே, நாம் ஜெபிப்பதற்காகச் சிறப்பான இடங்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. தற்காலத்தில் சிலர் ஜெபிப்பதற்காக சிறப்பான மண்டபங்களைக் கட்டிவைத்து , மக்களை அவ்விடத்தில் வந்து ஜெபிக்கும்படியும், அவ்விடத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபத்திற்கு தேவன் பதிலளிப்பாரென்றும் கூறி மக்களை வஞ்சித்து வருகின்றனர். நாம் இத்தகைய தவறான வழிநடத்துதல்களைக் குறித்து மிகவும் கவனமாயிருந்து, நாம் இருக்கும் இடங்களிலிருந்து அன்றாடம் ஜெபிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இதனால்தான் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பதிலளிப்பார். (மத் 6:6) என்று இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் “அறைவீடு“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் “தாமியொன்“ (tameion) என்னும் கிரேக்கச் சொல்லானது அக்காலத்தில் வீட்டின் உள் அறை“ பொருட்களை சேகரித்து வைக்கும் அறை“, “படுக்கையறை“ என்பவற்றைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டது மத்தேயு 12:26 24:26, லூக்கா 12:3, 12:24 போன்ற வசனங்களில் “வீட்டின் உள்அறை“ என்றும் லூக்கா 12:24 ல் “பொருட்களை சேகரித்து வைக்கும்அறை“ என்றும் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் ஏசாயா 26:20, 2 ராஜா 4:33 போன்ற வசனங்களில் “படுக்கை அறை“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெரும்பாலான மக்களுடைய வீடுகளில் ஒரேயொரு அறை மாத்திரம் இருந்தமையால் இயேசுக்கிறிஸ்து பொருட்களை சேகரித்து வைக்கும் அறை பற்றியே இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளதாக வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவ்வசனத்தில் அறையானது தனிமையிலும் இதயத்திலும் ஜெபிப்பதை குறிப்பிடும் உருவக விவரணமாக இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
அறைவீட்டுக்குள் பிரவேசித்து“ “கதவைப் பூட்டி“ எனும் சொற்பிரயோகங்கள்,வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறையைப் பற்றியே இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளாரென்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அக்காலத்தில் வீட்டுக்குள் கதவுடன் இருக்கும் ஒரேயொரு அறை பொருட்களைச் சேகரித்து வைக்கும் அறை மட்டுமே. இதுவே எவருக்கும் தெரியாமல் இரகசியமாக தனிமையில் ஜெபிக்க்க்கூடிய இடமாக இருந்தது. எனவே நம்முடைய வீட்டில் எந்த அறை அல்லது எந்த இடம் ஜெபத்திற்குப் பொருத்தமான என்பதை கண்டறிந்து, அந்த இடத்திலிருந்து அனுதினமும் ஜெபிக்க வேண்டும்.
நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கலாம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே தேவனை ஆராதிக்கலாம் என்று கருதலாகாது. தற்காலத்தில் சிலர் தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் ஆலயத்திற்கு செல்ல வேண்டியதில்லை என எண்ணுகின்றனர். ஆனால் கிறிஸ்தவராகிய நாம் சபையாகக் கூடி தேவனை ஆராதிப்பது அவசியம். இதனால்தான் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.(எபி. 10:25) என வேதாகமம் கூறுகிறது. கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நேசித்து, ஆவிக்குரிய பிரகாரம் வளர்வதற்கு ஒருவருவருக்கொருவர் உற்சாகமும் தைரியமும் அளித்து, ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதால் (எபி 10:24) சபை கூடிவருதலைக் கைவிட்டு வீடுகளிலேயே இருப்பவர்கள் தேவனுடைய கட்டளைகளை அவமதிப்பவர்களாகவே செயற்படுகின்றனர். நாம் சபை ஐக்கியத்தை தவிர்த்து கிறிஸ்தவ அன்பை நம்மால் அனுபவிக்க முடியாது. எனவே, நாம் இருக்கும் இடங்களிலிருந்த வண்ணம் அன்றாடம் ஜெபித்து வந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சபையாகக் கூடிவந்து தேவனை ஆராதிக்க வேண்டும்.
(நன்றி : சத்தியவசனம்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment