- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 15 October 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 5 -முழுக்கருத்தையும் மறவாதீர்(2)

 

3.    ஒத்த வாக்கியங்களைக் கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும். (ஒத்த வாக்கிய அகராதியின் பயனை அறிந்து கொள்ளுதல் நன்று)


(அ) சொல் ஒற்றுமை

(i)   ’கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி (1 சாமு. 13:14) தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாக்க் கண்டேன். (அப். 13:22) கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்பதற்கு பொருள் என்ன? ஒத்த வாக்கியமாகிய 1 சாமு. 2:25 ஐப் பார்த்தால் நன்கு விளங்கும் “நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவேன்”.


(ii)   “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” கலா. 6:17
இந்த அச்சடையாளரங்கள் என்ன? சிலுவை ஆணிகளால் உண்டான தழும்புகள் என்று சிலர் வாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “ இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” (2 கொரி. 4:10) அதாவது அதிகமாய் அடிப்பட்டவன். (2 கொரி. 11:23-27)


(iii)   என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங். 7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் சங். 16:9, 30:11, 108:1 ஆகிய வசனங்களை அடிப்படையாகக் கொண்டு.. ஆனால் செப்டுவஜின்ட் (Septugint) என்ற பழைய கிரேக்க மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு சங்கீதம் 16:9ஐ மேற்கோள் கூறியபோது “என் நாவு களிகூர்ந்தது” எனக் கூறியிருக்கின்றார். ஆகவே சங்கீதம் 16:9, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் “என் மகிமை” என்பதற்கு “நாவு” என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவே மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ.

 

(ஆ) பொருள் ஒற்றுமை


(I) நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:27)
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டும்தான் பாத்திரத்தில் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரமே ரோமன் கத்தோலிக்க சபையின் பழக்கம் சரிதானா? ஒத்த வாக்கியத்தைப் பாருங்கள்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் (1 கொரி. 11:26) “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1 கொரி. 11:28)

(ii)  நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையாயையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும் பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் பாறை என்று அழைத்தனர். (உபா. 32:4, 15, 18; சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும் ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே. (ஏசா. 28:16; 1 பேதுரு 2:4-8 ரோமர் 9:33, 1 கொரி. 3:11)

(iii) “புது சிருஷ்டி காரியம்” (கலா. 6:15) புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமலாமையும் ஒன்றுமில்லை என்’று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்” (கலா. 5:6) அதாவது புது சிருஷ்டியின் பண்பாகும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவனே புது சிருஷ்டியாவான் என்பது தெளிவாகும்.

(iv) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்கள் மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பே சகல பாவங்களையும் மூடும். (நீதி 10:12) அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை.

 

4.    ஒத்த வரலாறுகள்.
சொல்லொத்த வாக்கியங்களும் பொருளொத்த வாக்கியங்களும் ஆங்காங்கு பொருளொத்த வரலாறுகள் உண்டு.


(அ) இறை மக்களின் வரலாற்றுக்களைக் காட்டும் ஒத்த வரலாறுகளும் பழைய ஏற்பாட்டிலிருக்கின்றன.
(i) இராஜாக்களின் இரு நூல்கள் (சாமுவேலின் இரு நூல்களும்) தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டன. அரசு முறையின் வரலாற்றைக் கூறுவதே இவ்வாகமங்களின் நோக்கம்)
அரச முறையின் துவக்கம்   – தாவீது
அரச முறையின் முடிவு       – நேபுகாத்நேச்சார்
அரசர்களின் துவக்கம்            – சாலோமோனின் மகிமை
அரசர்களின் முடிவு                – யோயாக்கீமின் சிறைவாசம்

யூதா நாட்டின் 19 அரசர்களுள் 8 அரசர்கள் மட்டும் “கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தனர்” இஸ்ரவேல் நாட்டின் 19 அரசர்கள் (9 அரசர்கள் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) எல்லோரும் “கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தனர்)


(ii) நாளாகம நூல்கள் இரண்டும் மக்களின் வரலாற்றையோ அரசர்களின் வரலாற்றையோ குறிப்பிடுபவதில்லை. தேவாலயத்தின் வரலாற்றையே குறிப்பிடுகின்றன. இவைகள் ஆசாரியர்கள் மூலம் (ஒருவேளை ஆசாரியனும் வேதபாரகனுமாகிய எஸ்றாவின் மூலம்) எழுதப்பட்டிருக்கலாம். ஆகவே தேவாலயத்தைப் புறக்கணித்துப் பிரிந்துபோன இஸ்ரவேல் நாட்டு மக்களின் வரலாறுகள் நாளாகமத்தில் சேர்க்கப்படவில்லை
நாளாகமத்தின் தொடக்கம் – சாலமோன் கட்டின ஆலயம்
நாளகமத்தின் முடிவு – சுட்டெரிக்கப்பட்ட பழைய ஆலயத்திற்குப் பதிலாகப் புது ஆலயத்தைக் கட்ட கோரேஸ் பிறப்பித்த ஆணை

 

(ஆ) இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அறிவிக்கும் நற்செய்தி நூல்கள் நான்குண்டு முதல் மூன்று நற்செய்தி நூல்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒற்றுமை உடையனவாகும்.
    ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்ட வரலாறு இயேசுவின் மரணம், இயேசுவின் உயிர்தெழுதல் ஆகியவைகள் நற்செய்தி நூல்கள் நான்கிலும் கூறப்பட்டுள்ளன.
i.    மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும் தம் நற்செய்தி நூலில் இயேசு தம் சீடர்களைத் தமக்கு முன் போகும்படி துரிதப்படுத்தினதாகவும் பின்பு மக்களை அனுப்பி விட்டு தனியாக மலைமீது ஏறி ஜெபிக்கச் சென்றதாகவும் கூறுகின்றனர். (மத்.14:22,23) மாற்கு 6:45,46) ஆனால் காரணத்தைக் கூறவில்லை. யோவான் 6:15 இல் காரணத்தைக் கூறுகின்றார். சீடர்கள் பொதுமக்களின் புரட்சி செயலில் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி இயேசுவால் அனுப்பப்பட்டனர். எனவே அவர்களைத் துரிதப்படுத்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவானது என்பது யோவானது நற்செய்தி நூலில் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே நற்செய்தி நூலிலிருந்து ’ஏதாவது ஒரு பகுதியை நீங்கள் செய்திக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டால் மற்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அதையொத்த வரலாறுகள் உண்டா என்று ஆராய்ந்து அப்படியிருக்கும் ஒத்த வரலாறுகளையெல்லாம் படித்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.


ii.    சிலுவையில் இயேசு அருள்மொழிகள் ஏழு என்பது யாவருக்கும் தெரிந்ததாகும். ஆனால் எந்த நூலிலும் இந்த ஏழும் ஒருங்கே கூறப்படவில்லை. லூக்கா மூன்றையும் யோவான் வேறு மூன்றையும் குறிப்பிட்டுள்ளனர். “தேவனே தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்ற நான்காம் மொழியை அறிவிக்கின்றவர்கள் மத்தேயுவும் மாற்கும். இந்த ஒரு வார்த்தை மட்டும் இரண்டு நற்செய்தி நூல்களில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.


iii.    உயிர்தெழுதலின் விளக்கங்கள் ஆங்காங்கு நற்செய்தி நூல்கள் நான்கிலும் சிதறிக் கிடக்கின்றன. கிறிஸ்து இயேசு தம்மை உயிருள்ளவராய் கண்பித்த வரலாறுகள் கீழ்க்காணுமாறு

மகதலேனா மரியாள் மாற்கு 16:9-11; யோவான் 20:11-18
மற்றப்பெண்கள் மத்தேயு 28:9-10
சீமோன் பேதுரு லூக்கா 24:33-35, 1 கொரிந்தியர் 15:5
எம்மாவூருக்கு செல்லும் சீடர் மாற்கு 16:12,13 லூக்கா 24:13-22
அப்போஸ்தலர் பத்து பேரும் வேறு சில சீடரும் மாற்கு 16:14, லூக்கா 24:13-22

மேற்கண்ட ஐந்தும் நிகழ்ச்சிகளும் இயேசு உயிர்த்தெழுந்த அன்றே நடந்தன.

அப்போஸ்தலர் பதினொருவரும்
(தோமாவுடன்)
யோவான் 20:26,31
1 கொரிந்தியர் 15:5
கலிலேயா கடல் ஓரமாயுள்ள எழுவர்
யோவான் 2:11-25
500 பேருக்கு அதிகமான சகோதரர் மாற்கு 16:15-18,
1 கொரிந்தியர் 1:6
ஆண்டவருடைய சகோதரன் யாக்கோபு
1 கொரிந்தியர்15:7, லூக்கா 24:44-53
பரமேறுதல் அப்போஸ்தலர் 1:3-12, மாற்கு 16:19-20


(இ) பவுல் அடியார் குணப்படுத்தல் மூன்றுமுறை நடபடிகளின் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. (அப். 9:1-22; 22:11-16;26:1-20) நடபடிகளின் நூலையும் பவுல் இயற்றிய நிருபங்களையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்

 

5.    வேதநூலின் முழுக்கருத்து
திருமறையின் மொத்தக் கருத்துக்கு முரண்படுகின்ற முறையில் நாம் எந்த வாக்கியத்தையும் விளக்கம் செய்யக்கூடாது. உதாரணமாக சில வசனங்கள் கடவுளுக்கு உடலுறுப்புகள் இருக்கின்ற வண்ணமாகப் பேசுகின்றன. “தேவன் ஆவியாயிருக்கின்றார்” என்ற வசனத்திற்கொத்த (யோவான் 4:24) விதமாய் நாம் இந்தப் பகுதிகளை விளக்கஞ் செய்தல் வேண்டும்

நான்காம் விதி நமக்கு கற்றுத் தருவது
திருமறையின் முழுக்கருத்திற்கேற்றவாறு வேதத்தின் எந்தப் பகுதியை வியாக்கியனம் செய்தல் வேண்டும்

(அத்த்தியாயம் 5 முற்றிற்று)

(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment