- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 17 May 2013

பழையதை எறிதலும் புதியதை ஏற்றுக்கொள்ளுதலும் (மாற்கு 2:18-22)


இயேசுகிறிஸ்து புதிய ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்தார். இது பாவிகளான மாந்தர் தங்களுடைய பாவ வாழ்க்கையை முழுமையாகக் கைவிட்டு, அவர் தரும் பரிசுத்தமான புதிய வாழக்கை முறைக்குள் வருவதாகும். “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின (2கொரி.5:17).   


(1).  யூதமார்க்கத்தவரின் கேள்வி (மாற்.2:18)

யோவானுடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் உபவாசம் பண்ணாதிருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டனர். யோவான் ஸ்நானகன் இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக மக்களை  ஆயத்தப்படுத்துவதற்காகத் தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் (யோவா.1:6-8). ஆனால் சிலர் யோவானே வரவிருக்கும் மேசியா என்னும் எண்ணத்துடன் இருந்தனர். 

பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் இருந்த யூதமார்க்கத்  தலைவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் மக்காபியருடைய புரட்சிக் காலத்தில் அதாவது கி.மு.168ல் உருவானவர்கள். பரிசேயர் என்னும் வார்த்தை “வேறுபிரிக்கப்பட்டவர்கள்” என்னும் அர்த்தமுடையது. இவர்கள் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கைக்கொள்வதற்காக ஏனைய அலுவல்களிலிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டவர்கள். யூதமார்க்கத்தில் வேறு மதம் மற்றும் கலாசாரங்களின் செல்வாக்கு ஏற்படுவதை கடுமையாக எதிர்த்தவர்கள். கி.பி.66-70ல்  யூதேயா அழிவுற்ற பின்னர் யூதமார்க்கத்திற்குப் புத்துயிர் கொடுத்து, அது இன்றுவரை நிலைத்திருப்பதற்குக் காரணமாயிருந்தவர்கள் பரிசேயர்களே.  

பரிசேயர்களுக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் இடையில் மார்க்கம் சம்பந்தமான பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இங்கு உபவாசம் பற்றிய சர்ச்சை உள்ளது. நியாயப்பிரமாணச்  சட்டத்தின்படி வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே உபவாச நாளாக இருந்தது (லேவி.16:29-30). இதைத்தவிர யூதமார்க்கச் சட்டம் மூன்று விதமான உபவாசங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. ஒன்று, தேசியரீதியான அழிவுகளுக்காகப் புலம்பும் காலத்திலும் (சக.7:3-4, 8:19), இரண்டு, யுத்தம் வாதை வறட்சி பஞ்சம் போன்ற நெருக்கடியான காலத்திலும், மூன்று சுயவிருப்பத்தின் அடிப்படையில் விரும்பிய காலங்களிலும் செய்யும் உபவாசம். பரிசேயர்கள் கிழமையில் இரண்டு நாட்கள் அதாவது திங்களும் வியாழனும் உபவாசமிருந்தார்கள்.  

இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் மார்க்க சம்பந்தமான அர்ப்பணிப்புக்கு அடையாளமாக உபவாசம் இருந்தமையால், அவருடைய சீடர்கள் உபவாசம் பண்ணாமல் இருந்தது, அவர்களுடைய மார்க்கப் பற்றின் மீது சந்தேகத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியது.   


(2). இயேசுகிறிஸ்துவின் பதில் (மாற்.2:19-20)     

உபவாசத்தைப் பற்றிய கேள்விக்கு இயேசுகிறிஸ்து, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு உதாரணத்தைக் காண்பிக்கின்றார். யூதத் திருமணங்கள் ஒருவார காலத்திற்கு விருந்துண்ணும் மகிழ்ச்சிகரமான வைபவங்களாக இருந்தன. இவ்வசனத்தில் மணவாளனின் தோழர் திருமணவிருந்துக்கு வந்தவர்களாகவே உள்ளனர். எனவே, இவர்கள் திருமண வீட்டில் ஆடல் பாடலுடன் புசித்து குடித்து சந்தோஷமாக இருப்பார்களே தவிர, அக்காலத்தில் உபவாசம் இருந்தவர்கள்போல அழுது புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள். 

இயேசுகிறிஸ்து தம்முடைய இவ்வுலக ஊழிய காலத்தைத் திருமண விருந்துக்கு ஒப்பிட்டுள்ளார். இது மகிழ்ச்சியோடு செய்யப்படும் பணியாக உள்ளது. இயேசுகிறிஸ்து யார் என்பதைப் பரிசேயர் அறிந்திருந்தார்கள் என்றால், அவரோடு இருக்கும் காலம் உபவாசத்துடன் அழுது புலம்பும் காலம் அல்ல, அது விருந்துண்டு மகிழும் காலம் என்பதை அறிந்துகொண்டிருப்பார்கள்.       உபவாசம் தேவையில்லை என்று இயேசுகிறிஸ்து இங்கு போதிக்கவில்லை. தம்முடைய சீடர்கள் உபவாசிக்கும் காலம் வரும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  



(3). இயேசுகிறிஸ்துவின் விளக்கம் (மாற்.2:21-22)     

இயேசுகிறிஸ்து தாம் சொல்வதை இரு உவமைகளில் விளக்கியுள்ளார். ஒன்று பழைய ஆடையில் இருக்கும் கிழிசலை அல்லது ஓட்டையை மறைப்பதற்குப் புதிய துணி உபயோகப்படாது. இவ்வாறு செய்தால் ஏற்கனவே இருக்கும் கிழிசல் அல்லது ஓட்டை பெரிதாவது மட்டுமல்ல, புதிய துணியையும் துண்டு போட்டு வீணாக்கப்படும். 21ம் வசனத்தில் “கோடித்துண்டு”  என்பது “சுருங்கக்கூடிய புதிய துணித்துண்டு” ஆகும். 

22ம் வசனத்தில் “துருத்தி” என்பது “தோலினால் செய்யப்பட்ட போத்தல்கள்” ஆகும். புதிய தோற்குடுவைகள் இழுபடக்கூடியவைகளாக இருப்பதனால் புதிய திராட்சை ரசத்தில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் அவற்றைப் பாதிக்காது. ஆனால் பழைய குடுவைகளில் தோலானது காய்ந்துபோன நிலையில் இருப்பதனால், திராட்சை ரசத்தில் ஏற்படும் இரசாயன மாற்றம் அவற்றை வெடிக்க வைத்துவிடும். இதனால் தோற்குடுவை வீணாவது மட்டுமல்ல, ரசமும் வீணாகிப்போகும்.  

இவ்விரு உவமைககளின் மூலம் இயேசுகிறிஸ்து, தமது மார்க்கத்தைப் பற்றிய முக்கியமான காரியத்தை அறியத்தருகின்றார். அவர் இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தது புதியதோர் மார்க்கம். நம்முடைய பழைய மார்க்கத்திலிருக்கும் கிழிசல்களையும் ஓட்டைகளையும் மறைப்பதற்கு இயேசுகிறிஸ்துவின் புதிய மார்க்கத்திலிருந்து சில துண்டுகளை வெட்டியெடுத்து நம்முடைய பழைய மார்க்கத்திற்கு ஒட்டுப் போடமுடியாது. கிழிந்துபோன நம்முடைய பழைய ஆடையை  முழுமையாக வீசிவிட்டு, அவர் தரும் புதிய ஆடையை நாம்  அணிந்துகொள்ளவேண்டும். பழையதையும் வைத்துக்கொண்டு புதியதில் நமக்கு விருப்பமானவைகளை மட்டும் வெட்டியெடுத்துக் கொண்டு இரண்டுடனும் வாழமுடியாது.  

இரண்டாவது உவமையில், இயேசுகிறிஸ்துவின் மார்க்கம் என்னும் புதிய ரசத்தை, நம்முடைய பழைய மார்க்கங்களுக்குள் வைத்திருக்க முடியாது. அதற்கு அவர் தரும் புதிய பாத்திரம் தேவை. நம்முடைய பழைய மார்க்கங்களுக்குள் இயேசுகிறிஸ்துவின் புதிய ரசத்துளிகளை வைத்திருக்க முற்படுவது அறிவீனமானது.   

நாம் பழையதையும் புதியதையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது. இரண்டுமே பிரயோஜனமற்றதாகிவிடும். பழையதை எறிந்துவிட்டு புதியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இருப்பதை மேம்படுத்தும் புதிய ஒட்டாக இயேசுகிறிஸ்து வரவில்லை. அவர் நமது பழைய வாழ்க்கை முறையை ஒட்டுப்போடுகிறவர் அல்லை. மேலும், ஏற்கனவே இருக்கும் அமைப்புகளுக்குள் அவரைக் கொண்டு வரமுடியாது. நாம் பழையதை எறிந்துவிட்டு அவர் தரும் புதியதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  

இயேசுகிறிஸ்து பழையதை சீர்திருத்துவதற்காக அல்ல, புதியதை சிருஷ்டிப்பதற்காக வந்தவர். 

அப்போஸ்தலர் 19:18-20, 1தெசலோனிக்கேயர் 1:9, எபேசியர் 4:22-24. 

கட்டுரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்
நன்றி : தமிழ் வேதாகம ஆராய்சி மையம்

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment