- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 13 May 2013

எவராவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் (மத். 12:32)



இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அநேகரால் கிரகித்துக் கொள்ள முடியாமலிருக்கும் வாக்கியம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவதைப் பற்றி அவர் குறிப்பிட்ட விடயமாகும். 'எந்தப் பாவமும் எந்தத் தேவ தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும் ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை“ என்று தெரிவித்த இயேசு “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை“ (மத். 12:31-32) என்று விளக்கினார். (1) இயேசுவின் இக்கூற்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளையும் வியாக்கியானங்களையும் உருவாக்கியுள்ளது. 

பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவது பாரதூரமான ஒரு குற்றம் என்பதைச் சகல கிறிஸ்தவர்களும் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இத்தகைய பாவத்தைச் செய்தவன் மனந்திருப்பினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்காதா? அல்லது இப்பாவத்தை மன்னிக்கக்கூடிய சக்தி இயேசுவின் சிலுவைப் பலிக்கு இல்லையே? என்பது ஒரு சாராரது கேள்வியாயிருக்கையில், மறுசாரார் மனுஷகுமாரனுக்கு விரோதமான பாவம் மன்னிக்கப்படும் எனக் கூறிய இயேசு, ஆவியானவருக்கு விரோதமான பாவம் மன்னிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தமையால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விட மேலானவரா? திரித்துவ நபர்கள் சம்மானவர்கள் என்றல்லவா? திரித்துவ நபர்கள் சமமானவர்கள் என்றல்லவா வேதம் போதிக்கின்றது. இயேசு இதை மறுதலிக்கின்றாரே எனக் குழப்பமடைந்துள்ளனர். 

உண்மையில் இயேசுவின் இக்கூற்றை சரியான வித்ததில் நாம் விளங்கிக் கொள்வதற்கு, இவ்வாக்கியம் எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அவரால் சொல்லப்பட்டது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்(2) இதற்கு இக்கூற்று இடம்பெறும் வேதப்பகுதியை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உண்மையில் இயேசு பிசாசுக்களைத் துரத்தியபோது மக்கள் மத்தியில் அவரைப் பற்றி ஏற்பட்ட உயர்வான அபிப்பிராயங்கள் பரிசேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இயேசு பிசாசுக்களின் தலைவனின் உதவியுடன் பிசாசுக்களைத் துரத்துகின்றார் எனக் கூறத் தொடங்கினார்கள் (மத். 12:22-24) ஆனால் இயேசுவோ தான் தேவனுடைய ஆவியினாலேயே பிசாசுக்களைத் துரத்துவதை அவர்களுக்கு அறிவித்தார்.(மத். 12:28)(3) உண்மையில் இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் செய்த செயலைப் பரிசேயர்கள் பிசாசினால் செய்யப்பட்டதாக தூற்றினர். இதனாலேயே இயேசு, ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார்(மத். 12:31-32) இதிலிருந்து ஆவியானவருடைய செயலைப் பிசாசின் செயல் எனக் கூறுவதே ஆவியானவருக்கு எதிரான பாவம் என தெளிவாகின்றது. 31ம் வசனத்தில் தேவதூஷணம் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 'ப்ளஸ்ஃ பீமியோ“ எனும் கிரேக்கப் பதம் “எதிராகப் பேசுதல்” என்னும் அர்த்தமுடையது. “ஒருவருக்கு கேடும் தீங்கும் அபகீர்த்தியும் அவமானமும் ஏற்படும் விதமாகப் பேசுதல், தூற்றுதல், இகழிதல் எனும் அர்த்தங்களை இப்பதம் கொண்டுள்ளது.“(4) இதனால்தான் ஆவியானவருக்கு விரோதமாக தூஷணம் என்பதை அடுத்த வசனத்தில் இயேசு பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசுதல்” எனக் குறிப்பிட்டுள்ளார். (மத். 12:32) எனவே, ஆவியானவரின் செயலை நிந்தித்து அதைப் பிசாசின் செயல் என அவருக்கு விரோதமாகப் பேசுதலே இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவமாக இயேசுவால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், இயேசுவின் இக்கூற்றானது, “பரிசேயர்களது குற்றச்சாட்டுக்கான பதிலாகவே சொல்லப்பட்டுள்ளது. (5)“ 

ஆவியானவரின் செயலை பிசாசின் செயல் எனக் கூறுவதே ஆவியினாவருக்கு விரோதமாக பேசுதல் என்பது உண்மையாயினும் இத்தகைய செயலை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவம் என இயேசு கூறியது நமக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம்.இயேசுவின் இக்கூற்றை பரிசேயர்களின் குற்றச்சாட்டை, அடிப்படையாகக் கொண்டே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசும் ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புகாக மன்றாடுகையில் அவனது பாவங்கள் நிச்சியமாக மன்னிக்கப்படும். ஆனால் இங்கு ஆவியானவருக்கு விரோதமாகப் பேசப்படும குறிப்பிட்ட ஒருவிதமான பேச்சைப் பற்றியே இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.(6) இதை அறியாத நிலையில் இயேசுவின் கூற்றை நிலையில் இயேசுவின் கூற்றை சரியான வித்த்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. 

உண்மையில் பிசாசுக்களை துரத்தும் இயேசுவின் செயலானது தேவனுடைய இராட்சியம் வந்துவிட்டது என்பதற்கான வெளிப்படையான அடையாளமாய் இருந்தது. (மத். 12:28)(7) பரிசேயர்கள் இயேசுவின் செய்தியை அதாவது தேவனுடைய இராட்சியம் வந்து விட்டது எனும் தேவ செய்தியை ஏற்றுக் கொள்ளாத்தோடு, அச்செய்தியை உறுதிப்படுத்தும்அவரது செயல்களை பிசாசின் செயல்களாகக் கருதி  அவரை நிராகரித்தனர். இதனால் அவர்களது விமர்சனமானது அதாவது அவர் பரிசுத்த ஆவியினால் செய்த செயலை பிசாசின் செயல் எனக் கூறியது, அவர்கள் தேவராட்சியத்தையே நிராகரிக்கும் செயலாக உள்ளது. அத்தோடு அவர்களது விமரச்சனமானது “அறியாமையினாலோ இல்லையென்றால் அவிசுவாசத்தினாலோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல(8) பரிசேயர்கள் இயேசுவை நிராகரிக்க வேண்டும் எனும் உறுதியான தீர்மானத்தோடேயே எதிர்த்து வந்தனர். இயேசுவினால் செய்யப்பட்ட செயல்கள் தேவராட்சியம் வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திய போதிலும் அவரை மேசியாகவாக ஏற்றுக் கொள்ள மனமற்றவர்களாகவே பரிசேயர்கள் இருந்தனர். பரிசேயர்களின் இத்தகைய மனப்பாங்கை யோவான் 9ம் அதிகாரம் தெளிவாய்க் காண்பிக்கின்றது. பிறவிக்குருடனை இயேசு குணப்படுத்திய செயல் அவர் தேவன் என்பதற்கு உறுதியான அடையாளமாயிருந்த்து.( 9:32-33). ஆனால் பரிசேயர்கள் இயேசு யார் என்பது பற்றி ஏற்கனவே தங்களுக்கிருந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள மனமற்றவர்களாக, அவர் எத்தகைய செயலைச் செய்தாலும் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனும் பிடிவாத்த்துடன் இருந்தனர். (9:13-41) இத்தகைய மனப்பாங்குடனேயே பரிசேயர்கள் இயேசு கிறிஸ்து ஆவியானல் செய்த செயலைப் பிசாசின் செயல் எனக் கூறினர். இயேசுவின் செயலை நிராகரித்து அதைப் பிசாசின் செயல் எனப் பரிசேயர்கள் கூறியது, தேவனுடைய ராட்சியத்தையே நிராகரிக்கும் செயலாய் இருந்தமையால்(9) அவர்களது பாவம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத நிலையில் இருந்தது

இவ்வசனத்தில் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இன்னுமொரு விடயம். இயேசு தனக்கு விரோதமாகப் பேசப்படுகனிறவைகள் மன்னிக்கப்படும் எனக் கூறியமையாகும். (10) இரட்சகரான இயேசுவுக்கு விரோதமாகப் பேசப்படுபவை மன்னிக்கப்படுகையில், ஆவியானவருக்கு விரோதமான விமர்சனம் மட்டும் எவ்விதத்தில் மன்னிக்கப்படமுடியாத பாவமாக இருக்கின்றது என்பது நம்முள் இயற்கையாகவே எழும் கேள்வியாக உள்ளது. உண்மையில் இயேசு இவ்வுலகில் இருந்த காலத்தில் அவரைப் பற்றிய முழுமையான அறிவு மக்களுக்கு இருக்கவில்லை. அவரைப் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்தன. “இயேசு உண்மையிலே யார் என்பது அக்காலத்தில் ஒரு மறைபொருளாகவே இருந்தது. (11) ஆனால் பரிசேயர்களினால் விமர்சிக்கப்பட்ட இயேசுவின் செயல், அதாவது அவர் தேவ ஆவியினால் பிசாசுக்களைத் துரத்தியமை தேவனுடைய ராட்சியம் வந்துவிட்டதற்கான வெளிப்படையான அடையாளமாக, எவராலும் மறுக்க முடியாத செயலாக இருந்தது. மக்கள் “அக்காலத்தில் இயேசுவுக்கெதிராகப் பேசியவைகள் அவர்கள் அறியாமையில் செய்தவைகளாக, அதாவது அவர் உண்மையிலேயே யார் என்பதை அறியாத நிலையில் இருந்தமையால் அவை மன்னிக்கப்படக் கூடிய பாவமாகவே இருந்தன. ஆனால் ஆவியானவரின் செயல் அப்படிப்பட்டதாயிருக்கவில்லை. அவை தேவன் செயல்படுவதற்கான வெளிப்படையானதும் தெளிவானதுமான அடையாளமாய் இருந்தன. இதனால் அவருக்கு விரோதமாகப் பேசப்பட்டவை, அறிந்து செய்யும் பாவமாக, தேவனை நிராகரிக்கப்பவையாக இருந்தன. இதனால் இவை மன்னிக்கப்படமுடியாதவை“ (12) என இயேசு தெரிவித்தார்.



குறிப்புகள்
(1) இயேசுவின் இக்கூற்று வேத்ததில் இடம்பெறாத தோமாவின் நற்செய்தி நூலிலும் உள்ளது. (44ம் கூற்று)

(2) இன்று வேதவசனங்களைத் பலர் தவறாகப் புரிந்து கொண்டு குழப்பங்களைப் போதித்து வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தாம் உபயோகிக்கும் வேதவசங்களின் சந்தர்ப்ப அமைப்பை, அதாவது குறிப்பிட்ட வேதவசனம் எந்த சந்தர்ப்பத்தில் எதற்காகச் சொல்லப்பட்டது என்பதை அறியாமலும், அறிந்து கொள்ள முற்படாமலும் இருப்பதாகும். 

(3) லூக்காவின் சுவிஷேசத்தில் தேவ ஆவியினாலே என்பது தேவனுடைய விரலினாலே என்று உள்ளது. “வல்லமை தேவனிடத்திலிருந்து வந்துள்ளதை இவ்விரு சொற்பிரயோகங்களும் சுட்டிக் காட்டுகின்றன. (Leon Morris, Gospel According to Matthew, p. 316) தேவனுடைய செயலை அவருடைய விரலினால் செய்யப்படுவதாக கூறுவது யூதர்களின் பேச்சு வழக்க முறையாகும். (யாத். 8:19, 31:18) John Calvin, A Harmony of the Gospels, Volume : 2, p. 43)

(4) Colin Brown, Dictionary of New Testament Theology Volume 3. P. 341

(5) Donald A. Hugner, Mathew 1- 13 p. 347

(6) Leon Morris, The Gospel According to Mathew, p. 318

(7) இயேசு கிறிஸ்து இவ்வசனத்தில் நான் வேனுடைய ஆவியினால் பிசாசுக்களைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கின்றதே எனக் குறிப்பிட்டுள்ளார். 

(8) D.A. Carson Mathew, p. 291

(9) இது தேவனருளும் இரட்சிப்பை அனுபவிப்பதையே நிராகரிக்கும் செயலாக உள்ளது. (Word p. 347)

(10) தன்னை மறுதலித்து சபித்த பேதுருவை இயேசு மன்னித்த செயல் இதற்கான ஆதாரமாயும் உள்ளது. 

(11) Word, p. 347

(12) Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 119


நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் :- Dr. M.S. வசந்தகுமார். 





தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments: