- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 27 May 2013

என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். (மத்தேயு 15:13)



இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் கடுமையான வார்த்தைகளாகத் தென்படுவதும், கிறிஸ்தவர்களால் வித்தியாசமான முறைகளில் விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பதுமான வாக்கியங்களில் ஒன்று மத்தேயு 15:13 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில்  “என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார். மத்தேயுவினுடைய சுவிஷேசத்தில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வாக்கியத்தில், பரமபிதா நடாத நாற்றாக இயேசு யாரைக் கருதியுள்ளார் என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 

சில தேவ ஆராய்ச்சியாளர்கள், இயேசுகிறிஸ்து தானியத்தையும் களைகளையும் பற்றி கூறிய உவமையை ஆதாரமாகக் கொண்டு, இரட்சிக்கப்படாதவர்கள் அதாவது அவிசுவாசிகளே பிதாவால் நடப்படாத நாற்றுகள் என விளக்குகின்றனர். இயேவின் உவமையில் (மத். 13:24-30) தானியம் ராட்சியத்தின் புத்திராகளையும், களைகள் சத்துருவினால் விதைக்கப்பட்ட பொல்லாங்கனுடைய புத்திரர்களையும் குறிக்கின்றது. (மத். 13:25,38) இதன்படி பிதாவினால் நடப்பட்டவர்கள்அவருடைய வசனத்தின்படி வாழும் மெய் விசுவாசிகள்“ என்றும், “அவரால் நடப்படாதவர்கள், மனிதர்களுடைய உபதேசங்களைப் பின்பற்றும் விசுவாசமற்றவர்கள்“ என்றும் கருதப்படுகின்றது. மனிதனுடைய இரட்சிப்பில் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலுக்கு(2) முக்கியத்துவம் கொடுக்கும் இறையியலாளர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களே அவரால் நடப்பட்டவர்கள் என்றும், தெரிந்து கொள்ளப்படாதவர்களையே இயேசு பிதாவினால் நாட்டப்படாதவர்கள் என்க குறிப்பிட்டுள்ளார் என்றும் விளக்குகின்றனர்.(3) இவர்களைப் பொறுத்த வரையில் “பிதாவினால் நடப்படாதவர்கள் சாத்தானால் நடப்படப்பட்டவர்கள், அவர்கள் வேரோடு பிடுங்கப்பட்டு அக்கினியில் வீசப்படுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.“(4) 


இயேசு கிறிஸ்துவின் தானியத்தையும் களையையும் பற்றிய உவமை தேவராட்சியத்தின் புத்திரர்களையும் இவ்விராட்சியத்திற்குட்படாத அவிசுவாசிகளையும் பற்றிய விபரணமாயுள்ள போதிலும் (மத். 13:37-43) அவர் மத். 15:13 இல் இந்த உவமையை அடிப்படையாகக் கொண்டே பிதாவினால் நடப்படாதவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுவதற்கில்லை. ஏனென்றால் இயேசு இங்கு சீடர்கள் தன்னிடம் தெரிவித்த ஒரு விடயத்திற்கான பதிலாகவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.(5) மத்தேயு 15ம் அதிகாரத்தில் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதற்காகப் பரிசேயர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். ஆனால் இயேசுவோ, தன் சீடர்களின் செயலை நியாயப்படுத்தியோது, பரிசேயர்கள் மானிட பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய கட்டளைகளை அவமதிக்கின்றார்கள் என்று அவர்களைக் கடிந்து கொண்டார். (மத். 15:1-9) இயேசுவின் வார்த்தைகள் பரிசேயருக்கு இடறலாயிருப்பதைப் பற்றி சீடர்கள் தெரிவித்தபோதே அவர் “என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். (7) தேவனுடைய ராட்சிய
தைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கும் நியாயப்பிரமாணத்தின் போதகர்களாகத் தாம் இருப்பதாக்க் கூறி வந்த பரிசேயர்கள் “தேவனுடைய ராட்சியத்திற்குள் இல்லை“(8) எனும் உண்மையை இயேசு இக்கூற்றின் மூலம் அறியத் தருகின்றார். பரிசேயர்களின் இத்தகைய நிலை ஏற்கனவே மத்தேயுவின் சுவிஷேசத்தில் 3:9, 8:11-12 போன்ற வசனங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு பரிசேயர்களை அல்ல மாறாக அவர்களது உபதேசத்தையே பிதாவினால் நடப்படாத நாற்றாக வர்ணித்துள்ளார் எனக் கருதுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை “பிழையான உபதேசங்கள் தேவனிடத்திருந்து வருபவை அல்ல. அவற்றை நாம் பிடுங்கி எறிய வேண்டும் என்று இயேசு இவ்வசனத்தில் அறிவுறுத்துகின்றார்(9) எனினும் இயேசு உபதேசத்தை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. பிழையான உபதேசங்களைக் கொண்டு வருபவர்களையும் சேர்த்துத்தான் இவ்வாறு கூறியுள்ளார். பரிசேயர்களின் உபதேசம் பிழையாதாகாகவே இருந்தது. இதனால் அவர்கள் தேவனால் நடப்படாதவர்கள் எனும் உண்மையை இயேசு வெளிப்படுத்தியுள்ளார். இயேசுவைப் போல் பரிசேயர்கள் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். இயேசுவைப் போல் அவர்களால் தேவனைப் பிதா(10) என்று அழைக்க முடியாது(11) அவர்கள் இயேசுவை விசுவசிப்பதன் மூலமே தேவனுடைய பிள்ளைகளாக முடியும். (யோவான் 1:12) எனினும் இயேசுவின் வார்த்தைகளால் பரிசேயர்கள் இடறலடைந்தார்கள் என சீடர்கள் தெரிவித்தமை (மத். 15:12) அவர்கள் இயேசுவை நிராகரித்த்தையே சுட்டிக் காட்டுகின்றது. ஏனென்றால் இயேசுவிடம் இடறலடைதல் எனும் சொற்பிரயோகம் இத்தகைய அர்த்ததுடனேயே புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது. (12) பரிசேயர்கள் தேவனுடைய ராட்சியத்திற்குள் மக்களைக் கொண்டு செல்லும் இயேசுவை நிராகரித்தமையால், பிதாவினால் நடப்படாதவர்களாக இருந்தனர். அவர்கள் வேறோடே பிடுங்கப்படுவார்கள் என இயேசு குறிப்பிட்டது “அவர்களுக்கு ஏற்படும் அழிவைப் பற்றிய விவரணமாயுள்ளது”(13) எனவே பரிசேயர்களைப் போல அழிந்து போகாதபடி நாம் இன்றே இயேசுவை விசுவசித்து தேவனுடைய பிள்ளைகளாக மாறுவோம். 

குறிப்புகள்
(1) R.C.H. Lenski, The Interpretation of St. Mathew’s Gospel, Minneapolis: Augsburg Publishing House, 1961, p. 590

(2) இரட்சிப்புக்காக தேவன் மக்களைத் தெரிந்து கொண்டுள்ளார் என்பது வேதத்தின் தெளிவான ஒரு போதனையாகும். எனினும்இத் தெய்வீகத் தெரிந்து கொள்ளுதல் எதை அடிப்படையாக்க் கொண்டது என்பது பற்றி கிறிஸ்தவர்களிடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இறையியலாளர் ஜோன் கல்வினுடைய உபதேசத்தைப் பின்பற்றும் கிறிஸ்வர்கள்  தேவன் தனது சித்த்த்தின்படி உலகத் தோற்றத்திற்கும் முன்பே இரட்சிப்புக்காக குறிப்பிட்ட மக்களைத் தெரிந்தெடுத்துள்ளார் என நம்புகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, தேவனால் தெரிந்து கொள்ளப்பமாதவர்கள் அனைவரும் அவரால் கைவிடப்பட்டவர்கள் ஆவர். (Louis Berkhof systematic Theology, Edinburgh: The Banner of Truth Trust1, 109-125) இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆர்மீனியஸ் எனும் இறையிலாளரது கருத்தின்படி உலக மக்கள்ட அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருப்பதனால், தேவன் இவ்வாறு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிந்தெடுத்து மற்றவர்களை கைவிட்டிருக்க மாட்டார் எனத் தர்கிக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சகலமுமறிந்த தேவன் எவர்களை விசுவாசிப்பார்கள் என்பதை முன்னறிந்து (ரோமர் 8:29) அவர்களை இரட்சிப்புக்காக தெரிந்து கொண்டுள்ளார். (Henry C. Thiessen Introductory Lectures in systematic Theology, Grand Rapids: Eerdmans Publishing company, 1949, p. 157)

(3) John Calvin, A Harmony of the Gospels: Mathew, Mark & Luke Vol. II pp. 163-164

(4) William Hendriksen, New Testament commentary: The Gospel of Matthew, Edinburgh: The Banner of Trust, 1982, p. 617\

(5) வேத வசனங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ள முற்படும்போது குறிப்பிட்ட அவ்வாக்கியம் இடம் பெறும் சந்தர்ப்பத்தைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது மட்டுமே குறிப்பிட்ட அவ்வசனத்தின் அர்த்த்தை சரியான வித்த்தில் அறிந்து கொள்ள முடியும். 

(6) Donald A. Hagner, Mathew 14-28 in Word Biblical Commentary, Dallas: Word Books, 1995, p. 436

(7) மத்தேயு 15:13 அதற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்கள் இரண்டும், பிதாவினால் நடப்படாத நாற்று என்ற இயேசு பரிசேயர்களைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

(8) Leon Morris p. 398

(9) J.C. Ryle, Expository Thoughts on Mathew, Edinburg: The Banner of Truth Trust, 1986, p. 176

(10) சுவிசேஷப் புத்தகங்களில் மொத்தம் 44 தடவை தேவன் பிதா என அழைக்கப்பட்டுள்ளார். இயேசு தேவனைத் தன்னுடைய பிதா என அறிமுகப்படுத்தியது அவருக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள அந்நியோன்னிய உறவை வெளிப்படுத்துகின்றது. 

(11) H.N. Ridderbos, Mathew in Bible Students Commentary, Grand Rapids: Zondervan Publishing House, 1987, p. 284

(12) Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 151

(13) L. Morris Ibid 396




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment