- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 1 December 2012

கர்த்தர் வெறுக்கும் காயீனின் வழி


வேதப் பகுதி: ஆதியாகமம் 4:1
    
உலகின் ‘முதல் கொலைகாரனான'  காயீனின் வாழ்வு, கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்றக் கூடாத ஒரு வழியாகப் புதிய ஏற்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்’ (1யோவா.3:12), என்று அறிவுறுத்தும் புதிய ஏற்பாடு, தேவனை மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள் செல்லும் வழியாகக் காயீனின் வழி உள்ளதாகக் கூறுகிறது (யூதா.11). 

(1). அது அவிசுவாசத்தின் வழி (ஆதி.4:1)    
கிறிஸ்தவம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். காயீனின் வழி விசுவாசமுள்ளதாக இருக்கவில்லை. அவன் அவிசுவாசத்துடன் தேவனிடம் வந்தமையால் தேவன் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.    

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி அல்லது ‘காணப்படாத வைகளின் நிச்சயம்’  ஆகும் (எபி.11:1). விசுவாசத்தைக் குறிப்பிடும் ‘பிஸ்டிஸ்’  (pistis) என்னும் கிரேக்கப்பதம், ‘அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை’  என்னும் அர்த்தமுடையது. கண்களினால் காணாததையும், வேதாகமம் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு உறுதியாக நம்புவதே விசுவாசமாகும் (எபி.11:6). காயீனின் வழி இத்தகைய விசுவாசமுடையதாக இருக்கவில்லை.  

தேவனுக்கு காணிக்கை செலுத்தும்போது ஆபேல் தன்னுடைய மந்தையில் ‘முதற் பிறந்தவைகளில் கொழுமையானவைகளைத்’ தெரிவுசெய்ததை (ஆதி.4:4) வேதாகமம் அவனுடைய ‘விசுவாசச் செயல்’ என்று கூறுகிறது (எபி.11:4). ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருந்த காலத்திலும், அதன் பின்பும், தேவனை வழிபடுகிறவர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், காயீன் பிறந்தபொழுது, ‘கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்“ (ஆதி.4:1) என்னும் ஏவாளுடைய கூற்று அர்த்தமற்றதாகவே இருக்கும். எனவே, காயீனும் ஆபேலும், தங்களுடைய பெற்றோரிடமிருந்தே தேவனுக்கு காணிக்கை செலுத்தி அவரை வழிபடும் முறையை அறிந்திருக்கவேண்டும். ஆதாம் கூறியவற்றை ஆபேல் விசுவாசித்துள்ளான். ஆனால் காயீனோ, கடமைக்காகத் தேவனுக்கு காணிக்கை செலுத்தியுள்ளான்.   

ஆபேல் விசுவாசத்துடன் காணிக்கை செலுத்தியமையால், அவன் நீதிமான் என்று தேவனால் நற்சாட்சி பெற்றான் (எபி.11:4). ஆதாமின் மூலமாகத் தேவ னைப் பற்றி அறிந்துகொண்ட காரியங்களை ஆபேல் விசுவாசித்து அதன்படி செயற்பட்டமையால், அவன் தேவனுடைய பார்வையில் நீதிமானாக இருந்தான். வேதாகமப் போதனையின்படி, தேவனைப் பற்றி அறிந்து கொள்வதை, அல்லது தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதே அவருடைய பார்வையில் நீதிமானாக இருப்பதற்கான வழியாக உள்ளது (ஆதி.12:5-6, ரோ.4:1-25).      

கிறிஸ்தவர்களாகிய நாம் காயீனின் அவிசுவாச வழியில் செல்கிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனைப் பற்றி வேதாகமம் கூறும் காரியங்கள் உண்மை என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நாமும் ஆபேலைப் போல தேவனுடைய பார்வையில் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.     

காயீனுடைய காணிக்கை “இரத்தம் சிந்தும் பலியா“  இராதமையினாலேயே தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், காயீனும் ஆபேலும் தங்களுடைய பாவங்களுக்குப் பலி செலுத்தியதாக ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு காணிக்கை செலுத்தினார்கள் என்றே இவ்வதிகாரம் கூறுகிறது (ஆதி.4:3-4). ஷகாணிக்கை| என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “மின்ஹா“(minha) என்னும் எபிரேயப் பதம் தேவனைக் கனப்படுத்துவதற்காக அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பதையே குறிக்கின்றது. இரத்தப் பலியைக் குறிப்பிடும் “ஸீபாஃ“(zebah) என்னும் எபிரேயப் பதம் இவ்வதிகாரத்தில்  உபயோகிக்கப்படவில்லை. எபிரேயர் 11:4ல், ஆபேலினுடைய காணிக்கையைப் “பலி“ என்று குறிப்பிட்டுள்ளது தவறாகும். இங்கு “தைசியா“(thysia)என்னும் கிரேக்கப் பதம் இரத்தப் பலியைக் குறிப்பிடும் சொல் அல்ல. இரத்தமற்ற காணிக்கைகளைத் தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறுவது வேதாகமப் போதனையை முரண்படுத்தும் கருத்தாகவே உள்ளது (யாத்.23:16, உபா.26:2-4). காயீன் இரத்தப் பலியையே செலுத்தியிருந்தாலும் தேவன் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால், தேவன் தமக்கு கொடுக்கப்படும் காணிக்கைப் பொருளையோ, அல்லது அது கொடுக்கப்படும் சடங்காசார செயல்முறைகளையோ அல்ல, மாறாக அதைக் கொடுப்பவனுடைய உள்ளத்தின் நிலைமை எப்படி இருக்கின்றது என்பதையே பார்க்கிறவராக இருக்கின்றார் (ஆமோ.5:21-24, ஓசி.6:6, ஏசா.1:11-17, மீகா.6:6-8, எரே.7:19-20, லூக்.21:1-4). 


(2) அந்தகார ஆதியாகமம் 4:5ஆ
காயீனுடைய வழி அவிசுவாசத்தின் வழியாக மட்டுமல்ல, அது அந்தகார வழியாகவும் இருந்தது. அவிசுவாசியாக இருந்த காயீன் மனந்திரும்பி வெளிச் சத்திற்கு வர மனமற்றவனாக இருளிலேயே இருந்தான். மனிதர்கள் மனந்திரும்பி தம்மிடம் வருவதற்குத் தேவன் பல சந்தர்ப்பங்களை அவர்களுக்கு கொடுக்கிறவராக இருக்கின்றார். தேவன் காயீனுடைய காணிக்கையை நிராகரித்த போதிலும், அவனுடைய உள்ளத்தின் நிலைமை மாற்றமடைவதற்காக அவனோடு பேசினார்.  

தேவன் தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதது காயீனுக்கு நியாய 
மானதாகத் தென்படவில்லை. தேவன் என்ன காரணத்திற்காகத் தன்னுடைய 
காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவன் ஆராய்ந்து பார்க் காமல், தேவனுடைய செயல் நியாயமற்றது என்னும் எண்ணத்தில் இருந்தான். 

இவ்வசனங்களில் “எரிச்சல்“  என்பது மூலமொழியின்படி “கோபம்“ என்றே இருக்க வேண்டும். காயீன் தேவன்மீதும் தன் சகோதரன் மீதும் கடும் கோபத்துடன் இருந்தான். அந்தகாரத்தில் இருந்த காயீனின்  உள்ளத்தின் நிலையை மாற்றமடைந்த அவனுடைய முகபாவம் வெளிப்படுத்தியது. 

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, தேவன் எவ்வாறு அவர்களைத் தேடி 
வந்தாரோ, அதேவிதமாக கோபத்தோடு இருந்த காயீனையும் தேவன் தேடி வந்தார். தேவன் காயீனிடம் கேட்ட கேள்விகள், அவன் எதற்காகக் கோபமாக இருக்கிறான் என்பதை அறியாத நிலையில் கேட்கப்பட்டவைகள் அல்ல. மாறாக, காயீன் தான் இருக்கும் நிலையை அறிந்துகொள்வதற்காகவே தேவன் அவனிடம் நீ ஏன் கோபமாயிருக்கிறாய்? உன் முகம் மாற்றமடைந்ததற்கான காரணம் என்ன என்று அவனிடம் கேட்டார். காயீன் தான் எதற்காகக் கோபமாயிருக்கின்றேன் என்பதை ஆராய்ந்து பார்த்து, தன்னுடைய கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப் பார்ப்பதற்காகத் தேவன் அவன் கோபமா யிருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.     

தேவனுடைய கூற்று 7ம் வசனத்தில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. இதற்குக் காரணம், மூலமொழியில் இவ்வசனம் தெளிவற்றதாக இருப்பதோடு, பிற்காலத்தில் திருத்தப்பட்டும் உள்ளது. எனினும், “நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ“  என்னும் வாக்கியத்தில் “நன்மை செய்தால்“ என்பது “சரியானதைச் செய்தால்“ என்றும், “மேன்மையில்லையோ“ என்பது நீ “ஏற்றுக் கொள்ளப்படுவாய்“ அல்லது “மன்னிக்கப்படுவாய்“  என்றும் அர்த்தமுடையது. அதாவது, அவன் மனமாற்றம் அடைந்தவனாக சரியான நோக்கத்துடன் இன்னுமொரு காணிக்கையைச் செலுத்தினால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றே தேவன் அவனிடம் கூறியுள்ளார்.  

காயீன் தன்னுடைய மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்“  என்கிறார் தேவன். “பாவம் இரைக்காகக் காத்திருக்கும் பயங்கரமான ஒரு மிருகமாக இங்கு உவமிக்கப்பட்டுள்ளது. 7ஆம் வசனத்தின் கடைசி இரண்டு வாக்கியங்களிலும் “அவன்“ என்பது “அது“ என்றும் “அவனை“  என்பது  “அதை“ என்றும் இருக்க வேண்டும். அதாவது “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்“. அதன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அதை ஆண்டுகொள்வாய் என்பதே சரியான  மொழிபெயர்ப்பாகும். பாவம் காயீனைத் தன்னிடமாய் வைத்திருக்க விரும்பும். ஆனால் அவன் அதை மேற் கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும். பாவம் செய்யும் ஆசை காயீனை ஆட்கொள்ளலாம். அதை அவன் மேற்கொள்ள வேண்டும்.      

(இ) அன்பற்ற வழி (ஆதி.4:8). 

அந்தகாரத்திலிருந்த காயீன் வெளிச்சத்திற்கு வராதிருந்தமையால், அவனுடைய வழி அன்பற்றதாக இருந்தது. தன் சகோதரன்மீது கோபம் கொண்ட காயீனின் உள்ளத்தில் பகை காணப்பட்டது. உள்ளத்திலிருக்கும் பகை கொலைக்கு சமமானது என்று வேதம் கூறுகிறது (மத்.5:21-22, 1யோவா.3:15). காயீனின் அன்பற்ற வழி இது உண்மை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தன் சகோதரன் மீது கோபப்பட்ட காயீன் அவனைக் கொலை செய்தான் (ஆதி.4:8). இத்தகைய காயீனின் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதம் கூறுகிறது (1யோவா.3:12). 

(கட்டுரையாசிரியர் Dr.M.S. வசந்தகுமார் (தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம்)



தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

1 comment: