- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 26 December 2012

நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், ….. ,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.(மத்தேயு 10:5-6)



இயேசு கிறிஸ்து தன் சீடர்களை இறை பணிக்காக அனுப்பும் போது “நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.“ என்று கட்டளையிட்டார். (மத். 10:5-6) இயேசு உலக இரட்சகராக வந்த போதிலும் அவர் தனது இறைப்பணியை இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் வரையறை செய்யும் விதத்தில் புறஜாதியார் பட்டணங்களுக்குப் போகவேண்டாம் என சீடர்களுக்குக் கட்டளையிட்டமை அநேகருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இயேசுவும் கூட மத்தேயு 15.24 தன் பணியையும் இஸ்ரேலுக்கு மாத்திரம் வரையறை செய்துள்ளார். இதனால் சிலர் இவை இயேசு கிறிஸ்துவின் கூற்றுகள் அல்ல எனும் கருத்துடையவர்களாகவும் உள்ளனர். புறஜாதியினர் இரட்சிப்படைதை விரும்பாத யூத கிறிஸ்தவர் இவ்வாக்கியங்கள இயேசு கிறிஸ்துவின் கூற்றாக வேதத்தில் புகுத்தியுள்ளர்(1) என்பதே இவ்வசனங்களுக்கு கொடுக்கும் விளக்கமாகும். மேலும் இவ்வறிவுறுத்தல் மத்தேயுவின் சுவிஷேசத்தில் மட்டுமே இடம் பெறுவதால், யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூலில் இயேசுவின் மூலம் மக்களுக்கு கிட்டும் இரட்சிப்பு யூதர்களுக்கு மட்டும் உரியதாகவே காட்டப்பட்டுள்ளது என்றும் சில இறையியலாளர்கள் தர்க்கிக்கின்றனர். இதனால் புத்தகத்தின் இறுதியில் உள்ள சகல மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் எனும் இயேசுவின் கட்டளை மத்தேயுவின் எழுதப்பட்டவை அல்ல என்றும் அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்றும் இவர்கள் கருதுகின்றனர். (2)

இயேசுவின் கூற்றானது மானிட இரட்சிப்பைப் பற்றிய தேவனுடைய திட்டத்தின் காலக்கிரம முறையின்படி விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும். (3) சுவிஷேசமானது முதலில் யூதருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். இரட்சிப்பு யூதர்களின் வழியாக வந்துள்ளமையால்(யோவான். 4:22) முதலில் யூதர்களுக்கு அதைப் பற்றிய சுவிஷேச செய்தி அறிவிக்கப்பட்ட பின்பே புறஜாதியாருக்கு அறிவிக்கப்பட வேண்டியிருந்தது. (ரோமர் 1.16, 2.9-10) மத்தேயு 10ம் அதிகாரத்தில் இயேசு முதல் தடவையாகத் தன் சீடரைப் புறஜாதிப் பட்டணங்களுக்குப் போக வேண்டாம் என கட்டளையிட்டுள்ளார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளமையால் இயேசு தன் சீடர்களை முதலில் யூதர்களிடமே அனுப்பியுள்ளார். எனினும் பிற்காலத்தில் அவர் சகல இன மக்களுக்கும் சுவிஷேசத்தை அறிவிக்கும்படி கட்டளையிட்டார்(மத். 28.19-20) இவ்வித ஒழுங்கு முறையையே பிற்காலத்தில் ஆதிச் சபையினரும் அப்போஸ்தர்களும் பின்பற்றியுள்ளதை அப்போஸ்தலர்களுடைய நடபடிகளின் புத்தகத்தில் நாம் அவதானிக்கலாம். (அப். 1:8, 13:5, 44-48, 14:1) 

மத்தேயுவின் சுவிஷேசம் யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டது என்பது உண்மையாயினும் (4) இயேசுவின் சுவிஷேசம் யூதர்களுக்கு மட்டுமேயானது என மத்தேயு கூறவில்லை. சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஒரு யூத இனவாதியாக சித்தரித்துள்ள போதிலும்(5) அவரது சுவிஷேசத்தில் ஆரம்பத்திலிருந்து புறஜாதியாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இயேசுவை யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மெசியாகவாக காண்பிக்கும் மத்தேயு, அவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் என்று கூறவில்லை. நான்கு புறஜாதிப் பெண்களை இயேசுவின் வம்ச வரலாற்றில் உள்ளடக்கியுள்ள மத்தேயு, புறஜாதியரான சாஸ்திரிகள் அவரைத் தரிசிக்க வருவதையும் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். (மத். 1 :1-17, 2 :1-11) மேலும், இயேசு புறஜாதியாருடைய விசுவாசத்தைப் பாராட்டும் சம்பவங்களும் மத்தேயுவின் சுவிஷேசத்தில் உள்ளன.  (மத். 8 :10, 15 :28) சுவிஷேசம் சகல ஜாதியினருக்கும் அறிவிக்கப்படும் \என்பதும் (மத். 24 :14, 26 :13) புறஜாதியாரும் தேவனுடைய இராட்சியத்திற்குள் வருவார்கள் என்பதும் (மத். 8 :11, 21 :43) மத்தேயுவின் நூலில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் இறுதிக் கட்டளை சகல இன மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது. (மத். 28 :19-20)

இயேசு சகல இன மக்களினதும் இரட்சகராக வந்த போதிலும் அவர் யூதராக யூத மண்ணுக்கே வந்தார். “தேவனுடைய இரட்சிப்பின் செய்தியை உலகிற்கு அறிவிக்கும் மக்களாக  யூதர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். (ஆதி. 12 :3. ஏசா 60 :3) இதனால் இரட்சிப்பின் செய்தி முதலில் யூதர்களுக்கே அறிவிக்கப்பட்டது.(6) இயேசு யூத ஜனங்களை “காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்“ எனக் குறிப்பிட்டுள்ளார். (மத். 10 :6) இச்சொற்பிரயோகம் சிலர் தர்க்கிப்பது போல “இஸ்ரவேல் மக்களில் ஒரு பகுதியினரை மட்டும் குறிக்கும் விபரணம்“(7) அல்ல. ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் இச்சொற்பிரயோகம் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் குறிக்கும் விபரணமாகவே இருந்தது. இயேசுவும் இத்தகைய அர்த்தத்துடனே இச்சொற்பிரயோகத்தை உபயோகித்திருக்க வேண்டும். மேலும் “இஸ்ரவேலரின் வீடு எனும் சொற்பிரயோகம் யாக்கோபின் சந்ததியினர் அனைவரையும் குறிக்கும் விபரமாக இருப்பதும்“ (8) இதை உறுதிப்படுத்துகின்றது. இஸ்ரவேல் மக்கள் மேய்பனில்லாத ஆடுகளாக (மத். 9 :6) தொலைந்து போயிருந்தனர். (எரே. 50 :6, எசே. 34 :11,16) அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தி தேவனிடம் கொண்டு வருவதற்காக இயேசு முதலில் தன் சீடர்களை அவர்களிடம் அனுப்பினார். தேவனுடைய திட்டத்தில் யூதர்களுக்கு சிறப்பான இடம் இருந்தமையால் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.(9)


குறிப்புகள்      

(1) F.W. Beare, The Gospel According to Matthew, St. Francisco : Harper & Row, 1981, pp. 241-242.

(2) Adoff von Harnack, The Mission and Expansion of Christianity in the First Three Centuries, New York: Harper & Brothers, 1962, p.40.

(3) John P. Meier, Law and History in Matthew’s Gospel. Rome:BIP 1976, p. 27-30

(4) இயேசுவை பழைய ஏற்பாட்டு வாக்கியங்களின் நிறைவேறுதலாக வந்துள்ள மேசியாவாக மத்தேயு சித்தரித்துள்ளார். இயேசுவின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடும் மத்தேயு தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்டது நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது என பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளார். “மத்தேயுவில் மட்டும் 50 இற்கும் அதிகமான பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன. (Robert H. Mounce, New International Biblical Commentary : Mathew. P 3-4) ஏனைய சுவிஷேசங்களில் இந்த அளவு அதிகமான பழைய ஏற்பாட்டு குறிப்புகள் இல்லை. மேலும், லூக்காவைப் போல்லாது மத்தேயுவில் இயேசுவின் வம்ச வரலாறு அட்டவணை யூதர்களின் தப்பான ஆபிரகாமில் ஆரம்பிக்கின்றது. (மத். 1:1) இயேசுவை யூதர்களின் வம்சத்தில் வந்த தாவீதின் குமரனாக மத்தேயு சித்தரித்துள்ளார்.   “முதலாம் நூற்றாண்டில் இப்பெயரானது தாவீதின் வம்சத்தில் வந்தவர்களை மட்டுமல்ல தாவீதின் சிங்காசனத்தை மறுபடியும் யூதர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வரும் மேசியாவின் பெயராகவும் இருந்தது.” (Leon Morris, New Testament Theology p. 126) ஒன்பது தடவைகள் இயேசுவிற்கு இப்பெயரை உபயோகிக்கும் மத்தேயு (மாற்குவிலும் லூக்காவிலும் இப்பெயர் முறையே மூன்று தடவைகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது) அவரை யூதர்களின் மேசியாவாகக் காண்பித்துள்ளார். மேலும் அரமிக் வார்த்தைகளை மொழி பெயர்க்காமல் மத்தேயு அவற்றை அரமிக் வார்த்தையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதும் (5:22, 27:6) யூதக் கலாச்சாரப் பழக்க வழக்கங்களுக்கு விளக்கங்கள் கொடுக்காமலிருப்பதும் (மத். 15:2 ஐ மாற். 7:3-4 உடன் ஒப்பிடவும்) தேவனுடைய ராச்சியம் என்பதற்குப் பதிலாக யூதர்கள் உபயோகித்த பரலோக ராட்சியம் எனும் சொற்பிரயோகத்தை உபயோகித்துள்ளமையும், இயேசுவின் போதனைகளில் யூதர்களோடு தொடர்புள்ள பல விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதும் (மத். 6:16-18, 12:1-14, 24:20, 5:23-24, 17:24-27) மத்தேயுவின் சுவிஷேசம் யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. (R.T. France, Tyndale New Testament Commentaries: Mathew p. 17-18) 

(5) சிலர் மத்தேயு “மதம் மாறிய யூத மதப் போதகர் எனக் குறிப்பிடுகையில் (Pointed out in David J. Bosch, Transforming Mission p 59-60), ஏனையவர்கள் மத்தேயு தனக்கு கிடைத்த இயேசு பற்றிய விடயங்களை யூத மயப்படுத்தியுள்ளதாக கருதுகின்றனர். (Schuyler Brown, ‘The Two-Fold Presentation of the Mission in Matthew’s Gospel’ in Studia Theologica Vol 31[1977], p 21-32) மறுபுறத்தில் இயேசு யூதர்களைக் கடிந்து கொள்ளும் சம்பவங்களை சுட்டிக் காட்டும் வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தேயு யூதர்களுக்கு எதிரானதும் புறஜாதியினருக்கு சார்பானதுமான சுவிஷேசம் என்றும் கருதுவதோடு மத்தேயுவை ஒரு புறஜாதியானவாகவும் சித்தரித்துள்ளனர். (K.W. Clark, The Gentile Bias and Other Essays Leiden : Brill. 1980 p4)

(6) Louis A. Barbieri : The Bible Knowledge Commentary : Matthew, p. 41-42

(7) Krister Stendhal, The School of St. Mathew and its use of the Old Testament. Philadelphia: Fortress, 1968

(8) Leon Morris, The Gospel According to Mathew p. 246

(9) William Barclay, The Daily Study Bible : Mathew 1-10 p. 363 

இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 
















தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

4 comments:

  1. முதலில் புறஜாதியார் இயேசுவிடம் வருகிறார்கள் அப்புறம் "நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்" என்று சொல்கிறார் மீண்டும் சகல இன மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார் என்ன நண்பரே இது....

    குறிப்பாக சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாதீர்கள் என்று சொல்கிறார், சமாரியர் என்பது தாழ்த்தப்பட்டோரை குறிக்கக்கூடிய சொல் நண்பரே அப்படி ஏன் அவர் சொல்கிறார்...

    ReplyDelete
  2. இயேசுவின் கூற்றானது மானிட இரட்சிப்பைப் பற்றிய தேவனுடைய திட்டத்தின் காலக்கிரம முறையின்படி விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும். (3) சுவிஷேசமானது முதலில் யூதருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். இரட்சிப்பு யூதர்களின் வழியாக வந்துள்ளமையால்(யோவான். 4:22)

    மேலே முழுமையாக படித்துப் பாருங்கள். விளக்கம் புரியும் நீதிமான்களையல்ல பாவிகளையே தேடி வந்தேன் என்கிறார் ஆண்டவர்.
    யூதர்கள் வழியாகவே இரட்சிப்பு வருவதால் முதலில் யூதர்களுக்கும் பின்னர் மற்றவர்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்படுகின்றது.

    ReplyDelete
  3. அப்போ கீழே உள்ள வசனத்திற்கு என்ன பொருள்...
    மத்தேயு 15:24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

    ReplyDelete
  4. இயேசு ஊழியம் இஸ்ரவேல் உடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாடு நாடுகாக சுற்றித் திரியவில்லை. சுவிஷேசம் முதலில் யூதர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியிருந்தது. எனவே தான் மத்தேயு 15:24 அவ்வண்ணம் அறிவித்துள்ளார்.

    இயேசுவின் இறுதிக் கட்டளை சகல இன மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது. (மத். 28 :19-20)

    என்ற வசனத்தை மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete