- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 18 September 2012

நோவாவின் சாபம்




ஆதியாகமப் புத்தகத்தில் இன்னுமொரு சர்ச்சைக்குரிய விடயம் நோவாவின் சாபமாகும். (ஆதி. 9:24-25) உலகளாவிய ஜலப்பிரளயத்திற்கு தப்பிய நோவா, திராட்சை ரசம் குடித்து வெறிகொண்டு நிர்வாணமாய் படுத்திருப்பதைக் கண்ட அவனுடைய மகன் காம் அதைப் பற்றி தன் இரு சகோதரர்களுக்கும் அறிவித்தான். அவர்கள் ஒரு ஆடையால் தம் தகப்பனது நிர்வாணத்தை மூடினர். ஆனால் திராட்சை ரச வெறி தெளிந்து எழுந்த நோவா காம் தனக்குச் செய்ததை அறிந்து காமின் இளைய மகனான கானானைச் சபிக்கிறான். (ஆதி. 9:20-25) இச்சம்பவத்தில் மூன்று வகையான சிக்கல்கள் உள்ளன. இவற்றில் முதலாவது நோவாவின் மதுபோதையுடன் சம்பந்தப்பட்டது. இந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ஏனைய சம்பவங்கள் அனைத்திலும் நோவா நீதிமானாகவும் உத்தமனாகவும் விசுவாசமும் தேவபக்தி உடையவனாகவும் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தவனுமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். (ஆதி. 6:9, 7:1, எபி. 11:7) இதனால் நோவாவை இழிவான நிலையில் கற்பிக்கும் அவனது குடிபோதையும் நிர்வாண நிலை பற்றிய விபரணம் இச்சரிதைக்குள் புகுந்துவிட்டது என பெரும்பாலான வேதவியாக்கியானிகள் கருதுகின்றனர். எனினும் நீதியும் உத்தமுமான மனிதன் பாவமே செய்யமாட்டான் எனபதற்கு வேதாகமத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. “நோவா நீதிமானும் உத்தமனுமாக இருந்தாலும் (ஆதி. 6:9) அவன் பூரணமான மனிதன் அல்ல. அவன் மனிதனாக இருந்தமையால் பாவம் செய்யக் கூடியவனாகவே இருந்தான்(01) உலகளாவிய ஜலப்பிரளய அழிவின்  பின்பும் மனித இதயத்தின் நினைவுகள் பொல்லாதவைகளாகவே இருந்தன. (ஆதி. 8:21) எனவே நோவா குடித்து வெறித்து நிர்வாணமாய்க் கிடந்ததை நம்பமுடியாத ஒரு சந்தர்ப்பமாகக் கருதி அதை வேறு ஒரு நபரைப் பற்றிய சரிதையாக விளக்க முற்படுவது தவறாகும். “பரிசுத்தமான விசுவாசிகளும் பாவத்தில் விழுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. (02) என்பதற்கு நோவா சிறந்த உதாரணமாய் இருக்கிறான். 


ஆதியாகமம் 9.20-25 இல் சித்தரிக்கப்பட்டுள்ள இரண்டாவது சிக்கல் நோவா தன் மகனுடைய தவறுக்காக தன் பேரனை அதாவது தவறு செய்த தன் மகனுடைய மகனை சபிப்பதாகும். “நோவா திராட்சைரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:  “கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான்“ என்றான்.(ஆதி. 9.24-25) காம் என்பவனே நோவாவின் இளைய குமாரனாய் (ஆதி. 10:1,21)இருந்த போதிலும் நோவா காமை சபிக்காது காமின் மகனான கானானையே சபிக்கின்றான். (ஆதி 9:24) நோவாவின் பிள்ளைகள் ஆதியாகமத்தில்   சேம், காம், யாபேத் என்று குறிப்பிடப்பட்டிருப்பினும் இது வயதின் அடிப்படையிலான ஒழுங்குமுறை அல்ல. இம்மூவரில் யாபேத் என்பவனே  மூத்தவன் என்பதை ஆதி. 10:21 அறியத் தருகின்றது. அவ்வசனத்தில் சேம் யாப்பேத்தின் தம்பி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகம சரித்திரத்தில் சேமின் சந்ததியினரே முக்கியமானவர்களாக இருப்பதனாலேயே சேமின் பெயர் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கான காரணமாகும் அண்மைக்கால வேதாகம மொழி பெயர்ப்புகளில் ஆதி 10:21 இல் உள்ள சேம் மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பி எனும் வாக்கியம் யாப்பேத்தின் மூத்த சகோதரன் சேம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சேமே நோவாவின் மூத்த குமாரனாக இருக்கின்றான். ஆனால் “மெசோரெட்டிக்“ பிரதிகள் என அழைக்கப்படும் பழைய ஏற்பாட்டின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள் பழைய மொழிபெயர்ப்புகளில் உள்ளது போன்று யாப்பேத் என்பவனே நோவாவின் மூத்த மகன் என்பதை அறியத் தருகிறது. (03) எனவே இந்த இடத்தில் புதிய மொழிபெயர்ப்புகள் தவறானவையாகவே உள்ளன. 


உலகலாவிய ஜலப்பிரளயத்திற்கு முன்பு சேம் 97 வயதுடயவனாக இருந்தான். ஜலப்பிரளயத்திற்கு இரண்டு வருடத்திற்கு பின்பே சேமுக்கு 100 வயதாயிற்று (ஆதி. 11:10) ஜலப்பிரளய சம்பவங்கள் ஒரு வருடம் வரை நீடித்தன. 600 வயதுடையவனாக பேழைக்குள் சென்ற நோவா (ஆதி. 7:11) 601 வது வயதிலேயே பேழையிலிருந்து வெளியே வந்துள்ளான். (ஆதி. 8:13-16) எனவே ஜலப்பிரளயத்துக்கும் இருவருடங்களுக்குப்பின் 100 வயதுடையவனாக இருந்த சேம் ஜலப்பிரளயத்திற்கு முன் அந்த இரு வருடங்களும் பேழைக்குள் இருந்த ஒரு வருடமும் சேர்ந்து மொத்தம் 3 வயது குறைவுள்ளவனாக அதாவது 97 வயதுடையவனாகவே  இருந்தான். ஆனால் நோவாவின் மூத்த மகன் உலகளாவிய ஜலப்பிரளய அழிவிற்கு 100 வருடங்களுக்கு முன்பே பிறந்துள்ளான். பேழைக்குள் பிரவேசிக்கும்போது 600 வயதுடையவனாக இருந்த நோவா (ஆதி. 7:11) 500 வது வயதில். தன் முதல் மகனைப் பெற்றுள்ளான். (ஆதி 5:32) நோவா 500 வயதானபோது சேம், காம், யாபேத் ஆகியவர்களைப் பெற்றான் என்னும் வாக்கியத்தை இம்மூவரும் நோவா 500 வயதுடையவனாய் இருக்கையில் பிறந்தவர்கள் என விளக்க முடியாது. ஏனெனில் ஆதி. 11:10 இன்படி ஜலப்பிரளயத்திற்கு இரண்டு வருடங்களுக்கு பின்பே சேம் 100 வயதுடையவனான். ஜலப்பிரளயம் ஏற்பட்டபோது நோவாவின் வயது 600 (ஆதி. 7:11) இதன்படி சேமுக்கு 100 வயதாயிருக்கும்போது நோவாவின் வயது 602. எனவே சேம் பிறந்தபோது நோவாவின் வயது 502. உண்மையில் நோவா 500 வயதுடையவனாகிய பின்பே அவனுக்கு சேம், காம், யாபேத் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள் என்பதே ஆதி. 5:32 இன் சரியான அர்த்தமாகும். (04) எனவே ஜலப்பிரளயத்தின்போது சேம் 97 வயதுடையவனாயிருக்கையில் நோவாவின் மூத்த மகன் 100 வயதுடையவனாய் இருந்துள்ளமையினால் அவன் நோவாவின் மூத்த மகனாய் இருக்க முடியாது. ஆதி. 10:21 இன் பழைய மொழிபெயர்ப்பு அறியத் தருவதுபோல யாப்பேத் நோவாவின் முதல் மகனாகவும் சேம் அவனுடைய தம்பியாகவும் இருக்கின்றான். எனவே காம் என்பவன் நோவாவின் கடைசி மகன் என்று நம்ப்ப்படுகின்றது. ஆதி. 9:22 இல் குறிப்பிடப்பட்டுள்ள காமின் செயலை நோவா ஆதி 4:24 இல் தன் இளைய குமாரன் செய்தாதாக குறிப்பிடுவது காமே அவனது கடைசி மகன் என்பதை உறுதிப்படுத்துகின்றது. 


நோவா தன் இளைய மகன் காம் செய்த தவறுக்கு அவனது மகனான கானானைச் சபிக்கின்றான். ஒருவன் செய்த குற்றத்திற்காக இன்னுமொருவரை சபிப்பது அர்த்தமற்றது என கருதும் பலர் “இச்சம்பவமானது ஆதியாகமத்தில் எழுதப்பட்ட விதமாக இப்போது இல்லை. (05) எனக் கூறி சில விபரங்களை மாற்றியுள்ளனர். “சில யூத வேத வியாக்கியானிகள் 24ம் வசனத்திலுள்ள “இளைய குமாரன் என்னும் வார்த்தையை பேரன் என்று மாற்றியுள்ளனர்.(06) இதன்படி காமின் மகன் கானான் செய்த தவறுக்காக அவன் சபிக்கப்பட்டுள்ளான். எனினும் தவறு செய்தவன் காம் என்றே 22ம் வசனம் கூறுகின்றது. அதே சமயம் ஒரு வேதப் பகுதியின் சிக்கலைத் தீர்ப்பதற்கு அப்பகுதியிலுள்ள வார்த்தைகளை மாற்றுவது நியாயமானதும் சரியானதுமான முறை அல்ல என்பதனால் இப்பகுதிக்கான யூதர்களுடைய வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பும் யூதவியாக்கியானத்தைப் போலவே அப்பகுதியில் வார்த்தை மாற்றம் செய்துள்ளது. அம்மொழி பெயர்ப்பில் 25ம் வசனத்திலுள்ள கானான் என்பது காம் என்று மாற்றப்பட்டுள்ளது. செப்துவஜின்ட் என அழைக்கப்படும் அக்கிரேக்க மொழிபெயர்ப்பிலேயே 25ம் வசனம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கருதுபவர்கள் “ஆரம்பத்தில் காம் என்று இருந்த வார்த்தை பிற்காலத்தில் கானான் என்று மாற்றப்பட்டுள்ளதாக தர்க்கிக்கின்றனர்(07) எனினும் மாற்றம் கிரேக்க மொழிபெயர்ப்பிலேயே செய்யப்பட்டுள்ளது. மூலமொழியான எபிரேயத்தில் கானான் என்னும் பெயரே உள்ளது. 


அண்மைக்காலத்தில் பல வேத ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் கானான் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைப் பார்த்தான் என்றே இருந்த்து என தர்கிக்கின்றனர். எனினும் இது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது. உண்மையில் ஆதி 9:22 இல் காம் செய்த தவறுக்கு 25ம் வசனத்தில் அவன் மகன் கானானே சபிக்கப்பட்டுள்ளான் என்பதை எவ்விதத்திலும் மறுக்க முடியாது. எனவே நோவா தன் மகனுடைய தவறுக்கு தன் பேரனை சபித்தமைக்கான காரணத்தை நாம் கண்டறிய முற்படாமல் சம்பவத்தின் வார்த்தைகளை மாற்றுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை 

(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment