- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 17 September 2012

இயேசு திருமணம் முடித்தவரா? பகுதி 2


அத்தியாயம் 1

சரித்திர ஆதாரம் இல்லாத நாவல்

இதன் முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்குங்கள் 

இயேசுகிறிஸ்து திருமணம்முடித்தவர் என்று கூறும்டாவின்சியின் இரகசியக் குறியீடுபோன்ற நாவல்கள் எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லாத புத்தகங்களாகும்.(1) The Davinci Code நாவலை எழுதிய Dan Brown என்பவர் தன்னுடைய நூலுக்கு சரித்திர ஆதாரம் இருப்பதாகக் கூறினாலும், (பக். 245) இவர் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த முதலாம் நூற்றாண்டு சரித்திரக் குறிப்புக்கள் எதையும் உபயோகிக்கவில்லை(2). சில காலங்களுக்கு முன்பு  வெளிவந்த சரித்திர ஆதாரமற்ற ஒருசில புத்தகங்களும், (இப்புத்தகங்கள் உபயோகித்துள்ள புராணக்கதைகளும், ஓவியங்களும்) கி.பி. 2ம் நூற்றாண்டுக்குப் பின்னர் வேதப்புரட்டுக் குழுக்களினால் (3) எழுதப்பட்ட நொஸ்டிக்க சுவிசேஷங்கள் என்னும் முழுமையற்றதும் சிதைவடைந்த நிலையில் உள்ளதுமான புத்தகங்களுமே டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலுக்கான ஆதாரங்களாக உள்ளன. மானிட கற்பனையில் உருவான இவற்றையெல்லாம் சரித்திர உண்மைகளாக இந்நாவல் உலகத்திற்கு அறிவிக்கின்றது. The Davinci Code நாவல் சரித்திர ஆதாரமற்ற கற்பனைக் கதை என்பதை அறிந்து கொள்வதற்காக இந்நாவல் உருவாக்குவதற்கு காரணமாய் இருந்த புத்தகங்களும், புராணக்கதைகளும் இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.

(அ) ஆதாரமாயுள்ள புத்தகங்கள்
இயேசுகிறிஸ்து திருமணம் முடித்தவர் எனக் கூறும் The Davinci Code நாவல் அண்மைக்காலங்களில் வெளிவந்த நான்கு புத்தகங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இத்தகைய புத்தகங்கள் பல இருப்பதாக இந்நாவல் கூறினாலும் (5) நான்கு புத்தகங்கள் மட்டுமே இந்நாவலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (பக். 253) உண்மையில், இந்நான்கு புத்தகங்களிலும் உள்ள விடயங்களே The Davinci Code நாவலில் உள்ளன. இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தவழி வம்சத்தைபற்றிய சரித்திர ஆவணங்கள்(பக். 253) என்று இந்நாவல் கூறுகின்றது. ஆனால், இது சரித்திரம் என்றால் என்ன என்பதை அறியாத ஒருவருடைய கூற்றாகவே உள்ளது. ஏனென்றால் இப்புத்கங்கள் சரித்திர ஆசிரியர்களினாலோ வரலாற்று ஆசிரியர்களினாலோ எழுதப்பட்டவைகள் அல்ல.

. டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலுக்கு ஆதாரமாயுள்ள நான்கு புத்தகங்களும் இயேசுகிறிஸ்துவையும் மகதலேனா மரியாளையும் திருமண உறவில் இணைத்தாலும் சில விஷயங்களில் முரணான விளக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டுள்ளன. இவை எவ்வித சரித்திர ஆதாரமும் மற்றவைகளாக இருப்பதனால், இவற்றில் எந்தப் புத்தகத்தில் உள்ள எந்த விடயத்தை நம்புவது என்னும் குழப்பம் வாசகர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. உதாரணத்திற்கு, இப்புத்தகங்களில் ஒன்று இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தவழி வம்சத்தினர் பிரான்ஸ்நாட்டில் இருப்பதாகக் கூறினாலும் இன்னுமொரு புத்தகம் இயேசுகிறிஸ்துவிற்கு பிள்ளைகளே இருக்கவில்லை என்று தெரிவிக்கின்றது. மேலும், இவற்றில் ஒரு புத்தகம் யோவான் 2ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவின் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறுகின்றது. ஆனால் இன்னுமொரு புத்தகம் இதை முழுமையாக மறுகின்றது. இதைப்போல பல முரண்பாடுகள் இப்புத்தகங்களுக்கிடையில் காணப்படுகின்றன. டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலோ இவற்றிலுள்ள சிலவற்றை முரண்படுத்தும் கதையாக உள்ளது. உண்மையில் இந்நாவல் எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லாத ஒரு கற்பனை கதையாகவே உள்ளது. இதை அறியத்தருவதற்காக டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலுக்கு ஆதாரமாகவுள்ள நூல்களும், இயேசுகிறிஸ்துவைப் பற்றி இவை கூறும் கதைகளும் இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.


(1) பரிசுத்த இரத்தமும் பரிசுத்த பாத்திரமும் (The Holy Blood and The Holy Grail)

டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலின் பெரும்பாலான பகுதிகள் 1982 இல் வெளிவந்த பரிசுத்த இரத்தமும் பரிசுத்த பாத்திரமும் (The Holy Blood and The Holy Grail)  என்னும் புத்தகத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இதனால் இந்நாவல் திரைபடமாக வெளிவரும் காலத்தில் (2006இல்) தங்களுடைய புத்தக விடயங்கள் அனுமதியின்றி திரைபைடத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன எனும் முறைபாடுடன் இப்புத்தகத்தை எழுதியவர்கள் நீதிமன்றம் வரை சென்றனர். (7)

இப்புத்தகம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பாரம்பரியக் குறிப்புகளையும் புராணக்கதைகளையும் கற்பனையினால் தொடர்புபடுத்தி, மகதலேனா மரியாள் இயேசுகிறிஸ்துவின் சந்ததியினரை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு சென்று, அந்நாட்டின் 'மெரோவின்ஜியின்“ (Merovingian) என்னும் அரச பரம்பரையின் தாயாக இருப்பதாகக் கூறுகின்றது. இப்புத்தகம் சரித்திர ஆதாரமற்றது என்றும், மானிட ஊகங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படி இருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் என்றே இதன் முடிவுரைகள் இருப்பதாகவும், பல சரித்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.(9) இதனால் இது எவ்விதத்திலும் சரித்திர உண்மைகளை அறியத்தரும் ஒரு புத்தகம் அல்ல. இப்புத்தகத்தில் உள்ளவைகளே டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலில் இருப்பதனால் இதுவும் ஒரு சரித்திர ஆதாரமற்ற நூலாகவே உள்ளது.

நேரடியான குறிப்புகள் இல்லை
இயேசுகிறிஸ்து திருமணம் முடித்தவர் என்பதற்கு வேதாகமத்தில் நேரடியான குறிப்புகள் எதுவும் இல்லை என்பதை இப்புத்தகம் ஒத்துக்கொண்டாலும், (10) அவர் திருமணம் முடிக்காதவர் என்றும் வேதாகமத்தில் எந்தவொரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதனால் அவர் திருமணம் முடித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால், ஒருவரின் வாழ்வுச் சரிதையில் குறிப்பிடப்படாதவைகளை அவர் செய்தார் எனக் கூறுவது எவ்விதத்திலும் நியாயமாகாது. ஒருவரது வாழ்வைப் பற்றி எழுதப்படாத விடயங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியாதிருப்பதனால், நாமாகவே ஊகித்து, அவர் அப்படி இருந்திருப்பார் அல்லது இப்படி வாழ்ந்திருப்பார் என்று சொல்வது சரித்திர ரீதியான உண்மையல்ல.

இயேசுகிறிஸ்து திருமணம் முடித்தார் என்னும் கதை இத்தகைய ஒரு ஊகமாகவே இருப்பதனால் இது உண்மையான சரித்திரம் அல்ல. இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்வுச் சரிதையை அறியத் தரும் சுவிசேஷப் புத்தகங்களில் மட்டுமல்ல, டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலும், இதற்கு ஆதாரமாகவுள்ள புத்தகங்களும் சுட்டிக்காட்டும் நொஸ்டிக்க சுவிசேஷங்களிலும் இயேசுகிறிஸ்து திருமணம் முடித்தவர் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. மேலும், இயேசுகிறிஸ்து திருமணம் முடித்திருக்கலாம் என்று ஊகிக்ககூடிய விதத்தில் எழுதப்பட்ட சரித்திரக் குறிப்புகளும் உலகில் இல்லை(12) இயேசுகிறிஸ்து திருமணம் முடித்தார் என்று கூறுவது நவீன காலத்தின் கற்பனையாகவே உள்ளது. “அரச வம்சத்தைப் பற்றிய இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக இயேசுகிறிஸ்துவின் திருமணம் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன(13) என்னும் சிலரது விளக்கம் இத்தகைய கற்பனையை உண்மையாக்குவதற்கான முயற்சியாகவே உள்ளது.

யூதர்களின் பொதுவான பழக்கம்
இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் யூத சமுதாயத்தில் மனிதர்கள் திருமணம்முடிப்பதே பொதுவான வழக்கமாக இருந்தமையால், இயேசுகிறிஸ்துவும் இக்கால மனிதர்களைப்போலத் திருமணம் முடித்திருப்பார்(14) என்று கூறுவதும் அர்த்தமற்ற ஒரு விளக்கமாகும். ஏனென்றால், இயேசுகிறிஸ்து இவ் உலகில் வாழும் நாட்களில் யூதர்களுடைய பாரம்பரிய கட்டளைகளையும், சடங்காசார சட்டங்களையும் எதிர்ப்பவராகச் செயற்பட்டாரே தவிர, அவற்றுக்கு ஏற்றவிதத்தில் அவர் வாழவில்லை. யூதமதத் தலைவர்களுடன் அவருக்கேற்பட்ட தொடர்ச்சியான கருத்து முரண்பாடுகள் இதை அறியத் தருகின்றன. (மத். 15:2-3, 23:23-27, மாற். 7:2-9, 7:13) இயேசுகிறிஸ்து யூதர்களின் போதனைகளையல்ல தேவனுடைய வார்த்தையையே முக்கியமானதாக கருதினார். (மாற். 14:21, மத். 26:53-54) எனவே யூதர்களுடைய அக்கால வாழ்க்கை முறையின்படி இயேசுகிறிஸ்துவும் திருமணம் முடித்திருந்தார் எனக் கூறுவது தவறாகும்.

பரிசுத்த இரத்தமும் பரிசுத்த பாத்திரத்தையும் பற்றிய புத்தகத்தைப்போலவே, யூத சமுதாயத்தில் மனிதர் திருமணம் முடிப்பது கட்டாயக் கடமையாக இருந்தது(பக் 245) என்று டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவல்  இயேசுகிறிஸ்து உண்மையிலேயே திருமணமாகாதவராக இருந்திருந்தால் வழக்கத்திற்கும் மாறான அவரின் பிரம்மச்சாரிய நிலைமைக்கான காரணம் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். (பக். 245) என்று கூறுகின்றது(15) சுவிஷேப் புத்தகங்களில் உள்ளவற்றை நம்பகமான சரித்திரமாக ஏற்றுக்கொள்ளாத இவர்கள் இவ்வாறு கூறுவது உண்மையிலேயே விசித்திரமாகவே உள்ளது. எனினும் யூத சமுதாயத்தில் மனிதர்கள் திருமணம் முடிப்பதே பொதுவான வழக்கமாக இருந்தாலும், அக்காலத்தில் எவருமே திருமணமாகாதவர்கள் எவருமே இருக்கவில்லை எனக் கூறுவது தவறாகும்.

அக்கால யூதர்களில் “எசீன்ஸ்“ என்னும் குழுவினர் திருமணம் முடிக்காதவர்களாகவே இருந்தார்கள்(16) இதைப்போலவே எகிப்திலிருந்த யூதர்களில் (Therapeutar) என்னும் குழுவினரும் பிரம்மச்சாரியத்தைக் கைக்கொண்டனர். மேலும் யூத தீர்க்கதரிசிகளில் எலியா, எலிசா, எரேமியா போன்றவர்களும், யூத வரலாற்றாசிரியர்  ஜோசீப்பஸ் என்பவரின் குருவானபானுஸ்என்னும் தீர்க்கதரிசியும் யோவான் ஸ்நானகனும் திருமணம் முடிக்காதவர்களாகவே இருந்தனர்(17) அக்கால யூத மதப் போதகர்களிலும் திருமணமாகாதவர்கள் இருந்தனர்(18) உண்மையில் அதிக பக்திமான்களாக வாழ விரும்பிய யூதர்கள், திருமணம் முடிக்காமல் இருப்பதையே விரும்பினர். எனவே இயேசுகிறிஸ்து திருமணமாகாமல் இமருந்திருந்தால் வழக்கத்திற்கு மாறான செயலாகவும், சுவிஷேசப் புத்தகங்களில் கட்டாயம் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் விஷயமாகவும் இருந்திருக்கும் எனவும் கூற முடியாது.

தனிவாழ்வைப் பற்றிய போதனை
இயேசுகிறிஸ்து திருமணம் முடித்தவர் என்பதற்குச் பரிசுத்த இரத்த்த்தையும் பரிசுத்த பாத்திரத்தையும் பற்றிய புத்தகம் சுட்டிக்காட்டும் இன்னுமொரு அர்த்தமற்ற விளக்கம், அவர் பிரம்மசாரியத்தைப் பற்றி போதிக்கவில்லை என்னும் தவறான கருத்தாகும். “திருமணத்தைப் பற்றி போதித்த இயேசுகிறிஸ்து, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரம்மசாரியத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பதனால் அவர் பிரம்மசாரியாக வாழ்ந்தார் என்று கருதமுடியாதுஎன்று இப்புத்தகம் கூறுகின்றது(20) ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு விளக்கமாகும். ஏனெனில் இயேசுகிறிஸ்து பிரம்மசாரியத்தைப் பற்றியும் போதித்துள்ளார். மத்தேயு 19:12 இல் திருமணமுடிக்காமல் வாழும் மூவகை மனிதர்கள் பற்றி கூறுமவர் பரலோக இராச்சியத்தின் நிமித்தம் திருமணம்முடிக்காமல் இருப்பவர்களைப் பற்றிகுறிப்பிட்டுள்ளார். உண்மையில் இத்தகைய பிரம்மச்சாரியாகவே இயேசுகிறிஸ்து பூமியில் வாழ்ந்தார். பாவிகளான மனிதருக்காக தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தமையால் அவர் திருமணம் முடித்து வாழக்கூடிய நிலையில் இருக்கவில்லை 

(வளரும்)

அடிக்குறிப்புக்கள்
  1. வேதாகம சத்தியத்தை முரண்படுத்தும் வித்த்தில் இயேசுகிறிஸ்து திருமணமானவர் என்று ஒருசில புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் N. Kzantzakis, The Lst Temptation of Christ (New York, Simon and Schuster, 1960) W.E. Phipps, Was Jesus Married?(New York: Harper & Row 1960) என்பவை முக்கியமானவை. ஆனால், இவையும் எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லாத நூல்களாகவே உள்ளன.
  2. புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிஷேசப் புத்தகங்களும் அப்போஸ்தல ருடைய நடபடிகளும் இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்வையும் ஆதிசபையின் வரலாற்றையும் அறியத் தரும் சரித்திர நூல்களாக உள்ளன. இதைத் தவிர முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத வரலாற்றாசிரியர் ஜோசீப்பாஸ் (F. Josephus, Antiquities of the Jews, XX 200, XVIII, 63-64) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம வரலாற்றாசிரியர்களான டசிட்டஸ் (Tacitus, Annals, XV 44) “சோட்டோனியஸ்(Suetonius, Clauduies, 25.4) மற்றும் ரோம ஆளுநர்களில் ஒருவரான ப்லினி (Pliny, Epistles, 10, 33-34, 10.96) என்பவர்களுடைய குறிப்புகளிலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், ஆதி சபையைப் பற்றி வாசிக்கலாம். இவற்றைத் தவிர சில யூத மத நூல்களிலும் வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத சில புத்தங்களிலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் நூல்களைப் பார்க்கவும்.  (F.F. Bruce, Jesus And Christian Origins Outside The New Testament(London: Hodder and Stoughton, 1984) R.T. France, The Evidence for Jesus(Downers Grove:Inter Varsity Press, 1986); J.MCDowell & B. Wilson, He Walked Among Us: Evidence for the Historical Jesus(San Berardino :Here’s Life Publishers, 1988)
  3. பாரம்பரிய கிறிஸ்தவப் போதனைகளை முரண்படுத்தும் கிறிஸ்தவக் குழுக்களை ஆங்கிலத்தில் Christian Cults என்று அழைக்கப்படுகின்றன. தமிழில் இவற்றை துர்உபதேசக் குழுக்கள் என்றும் கள்ளப் போதகக் குழுக்கள் என்றும் அழைக்கின்றனர். எனினும் பிழையான உபதேசங்கள் மூலம் கிறிஸ்தவ சபைகளைக் குழப்பியவர்கள் கிறிஸ்துவின் சுவிஷேசத்தைப் புரட்டுவதாகபவுல் குறிப்பிட்டுள்ளமையால்(கலா. 1.7) வேதாகம உபதேசத்தை முரண்படுத்தும் குழுக்கள் வேதப் புரட்டுக் குழுக்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன
  4. இச்சுவிசேஷங்களைப் பற்றி இரண்டாம் அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது,
  5.   விபரத்திற்கு www.danbrown.com என்னும் இணையத் தளத்திற்குச் செல்லவும்.

  6. (7)  www.cbc.ca/story/arts/nationa/2005/10/27/arts/davincisuit_051027.html; Sunday Telegraph. 2 October 2004, p.

  7. B, Kirkwood, Unveiling The Da Vinci Code pp. 24-25
  8. M. Baigent. R. Leighi& H.Lincoln, The Holy Blood and the Holy Grail, p. 3246
  9.      Ibid p. 347
  10.      H. Hanegraaff & P.L. Maier , The Davinci Code : Fact or Fiction? P.16
  11.      M. Starbird, The Woman with the Alabaster Jar, p. 50
  12.      M. Baigent, R. Leigh & H. Lincoln, The Holy Blood and the Holy Grail, pp. 346
  13.      M. Baigent, R. Leigh & H. Lincoln, The Holy Blood and the Holy Grail, pp. 347
  14.     F. Josephus, The Wars of Jews, 2.8.2; Antiquities of the Jews, 18.1.5; Philo, Hypothetica, 11.14-17
  15.     Hanegraaff & P.L. Maier , The Davinci Code : Fact or Fiction? P.17
  16.     L. Strobel & G. Poole, Exploring the Da Vinci Code, p. 64
  17.      D.L. Bock, Breaking the Da Vinci Code pp. 50-52
  18.      Baigent, R. Leigh & H. Lincoln, The Holy Blood and the Holy Grail, pp. 34


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment