- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 25 June 2012

என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது (யோவான் 5:31)


இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களில் அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்  வாக்கியம். “அவர்  தமது சாட்சி  மெய்யாயிராது“  என்று கூறியமையாகும். இயேசுகிறிஸ்துவே  சத்தியமாக  இருப்பதனால்,  அவர் தமது சாட்சி மெய்யாயிராது என்று கூறியது உண்மையிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியாத கடினமான ஒரு கூற்றாகவே உள்ளது. “என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது“ என்று யோவான் 5:31 இல் இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரது சாட்சி பொய்யானதா என்னும் அதிர்ச்சிமிகு கேள்வியே எம்முள் எழுகிறது. உண்மையில், இயேசுகிறிஸ்துவின் கூற்றை அக்கால யூதக்கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு புரிந்து கொண்டால் அவரது கூற்றைநாம் தவறாக விளங்கிக் கொள்ள மாட்டோம்.

யூதர்களுடைய கலாசாரத்தில் ஒருவனுடைய சுயசாட்சியை எவரும் உண்மையானதாக ஏற்றுக் கொள்வதில்லை. “அதை ஒரு சாட்சியாகவே கருத மாட்டார்கள்(1) இதனால்தான் இயேசு கிறிஸ்துதம்மைப் பற்றிய விடயங்களைக் கூறியபோது பரிசேயர்கள் “உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடையசாட்சி உண்மையானதல்ல என்றார்கள்“ (யோவான் 8:13) எனினும் இயேசு கிறிஸ்துவின் இக்கூற்றானது அவருடைய சாட்சி பொய்யானது எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. “என் சாட்சி மெய்யாயிராது“ எனும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் “அவருடைய சாட்சி யூத சமுதாயத்தில் மெய்யானதாயிராது எனும்அர்த்தமுடையது(2) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, ஒருவனுடைய கூற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு இன்னுமொருவனுடைய சாட்சியும் அவசியமாயிருந்தது. (உபா. 19:15) யூதர்கள் ஒருவனுடைய சுயசாட்சியை மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளாதமையால், தம்மைப்பற்றித் தாம் கொடுக்கும் சுயசாட்சி யூதர்களுக்கு மெய்யானதாயிராது என்பதையே இவ்வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அறியத் தருகிறார். தம்மைப் பற்றி தாம் கொடுக்கும் சாட்சி உண்மையானது என்பதை யோவான் 8:14 இல் இயேசு கிறிஸ்து சுட்டிக் காட்டினாலும் 5ம் அதிகாரத்தில் தாம் கொடுக்கும் மெய்யான சாட்சி, யூத சமுதாயத்தில் மெய்யானதாயிராது என்பதையே அறியத் தருகிறார்.

யூத சமுதாயத்தில் உண்மைக்கு இரு சாட்சிகள் தேவைப்பட்டமை யினாலேயே, இயேசு கிறிஸ்து ஊழியத்திற்குத் தம் சீடர்களை யூதப் பட்டணங்களுக்கு அனுப்பும்போது அவர்களை  தனியாக அனுப்பாமல் இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். (லூக். 10.1) சுவிசேஷம் மெய்யான நற்செய்தியாக இருந்தாலும், அதை ஒருவன் மட்டும் சொல்லும்போது யூதர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, இரண்டு பேரை அனுப்புவது அவசியமாயிருந்தது. இயேசு கிறிஸ்துவும் யூதர்களுடன் பேசும்போது தம்மைப் பற்றி பிதாவும் சாட்சி கொடுக்கிறார் என்று அடுத்து வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். (யோவான் 5.31) இயேசு கிறிஸ்துவினுடைய சுயசாட்சி மெய்யானதாக இருந்தபோதிலும் யூதசமுதாயத்தில் அது மெய்யானதாக அது கருதப்படவில்லை. இதனால் தம்மைப் பற்றி பிதாவும்சாட்சி கொடுப்பதை சுட்டிக்காட்டுகிறார். யோவான். 8:17-18 அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“இரண்டு பேருடையசாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத் திலும் எழுதியிருக்கிறதே .நான் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிற வனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறார்“ பிதா வானத்திலிருந்து பேசியதன் மூலம் மட்டுமல்ல (யோவான் 12.28, மாற்கு 1.11) இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு செயலிலும்அவர் யார் என்பதைப் பற்றி சாட்சி கொடுப்பவராக இருந்தார்.

Footnote and References
(1)    F.F. Bruce, The Gospel of John. P. 134

(2)    L. Morris, John : The New International Commentary on the New Testament

(3) இயேசுகிறிஸ்து பிதாவின் சாட்சியைப் பற்றியல்ல. யோவான் ஸ்நானகனுடைய சாட்சியைப் பற்றியே யோவான் 5:32 இல் குறிப்பிட்டுள்ளதாக  சிலர் கருதுகின்ற போதிலும் (J. Marsh, Gospel of St. John, p. 268) 33 முதல் 37 வரையிலான வசனங்கள், அவர் யோவானுடைய சாட்சியைப் பற்றியல்ல, பிதாவினுடைய சாட்சியைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார்  என்பதை அறியத் தருகின்றன.

(இவ்வாக்கமானது. Dr. M.S. வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment