- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 22 August 2011

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.....(யோவான் 20:23)


இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு, பிழையான வேதப் புரட்டு உபதேசங்களின் உருவாக்கம் என்றால் அது மிகையாகாது. வேதவசனங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதன் மூலமும், தவறாக வியாக்கியானம் செய்வதன் மூமும் பல தவறான விளக்கங்கள் கிறிஸ்தவ உலகில் உருவாகியுள்ளன. அவ்வகையில், யோவான் எழுதியுள்ள சுவிஷேசத்தில உள்ள இயேசுகிறிஸ்துவின் கடினமான கூற்றுக்களில் கடைசியாக உள்ள வசனமும் பாரியதோர் வேதப்புரடடு உபதேசத்தை உருவாக்கியுள்ளது. யோவான்  20:23 இல் இயேசுகிறிஸ்து  “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய  பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் “  என்று அறிவித்துள்ளார். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு ரோமன் கத்தோலிக்க சபையும், சில வேதப்புரட்டு குழுக்களும் தங்களுடைய மதத் தலைவர்களிடம் (குருவானவரிடம் அல்லது பாஸ்டரிடம்) மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி போதித்து வருகின்றன. (1)

இயேசு கிறிஸ்துவின் கூற்றிலுள்ள “மன்னித்தலும்“, “மன்னியாதிருத்தலுமே” மத்தேயுவின் சுவிசேஷத்தில் “கட்டுதலாகவும்“ “கட்டவிழ்க்கப்படுதலாகவும்“ குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தேயு 18:18 இல் இயேசுக்கிறிஸ்து தமது சீடர்களிடம் “ 'பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்“ என்று கூறினார். இதில் “கட்டுதல்“ என்பது மன்னியாதிருப்பதையும், “கட்டவிழ்ததல்“ மன்னித்தலையும் குறிக்கும் உருவக விபரணங்களாக உளளன. (2) யூதமதப் போதகர்கள் மத்தியில் “கட்டுதல்“ “அவிழ்த்தல்“ எனும் பத்ங்கள் ஒரு காரியத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் உபயோகிக்கப்படும் வார்த்தைகளாக இருந்தன. எனினும், ஆரம்பத்தில் இப்பதங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருந்தன. அதாவது, ஒருவனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டினால் அவன் கட்டப்பட்டிருக்கிறான். அல்லது அதிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டுள்ளான் என்று அறிவிக்க இப்பதங்கள் உபயோகிக்கப்பட்டன. (3) மத்தேயு 16:19 இல் பேதுருவிற்குக் கொடுக்கப்பட்ட இவ்வதிகாரம் மத்தேயு 18:18 இலும், யோவான் 20:23 சகல சீடர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “மத்தேயுவில் இக்கட்டளை சபை ஒழுக்க நடவடிக்கை எடுப்பதோடு தொடர்புள்ள அறிவுறுத்தலாக உள்ளது. ஆனால் யோவானில், சீடர்களின் சுவிசேஷப் பணியோடு தொடர்புற்றுள்ளது“ (4)  

இயேசுக்கிறிஸ்துவினுடைய வார்த்தைகள், பாவங்களை மன்னிக்கும் அல்லது மன்னியாதிருக்கும் ஆற்றல் சீடர்களுக்கு அருளப்பட்டுள்ளது என்ற அர்த்தமுடையவைகள் அல்ல. “மக்களுடைய பாவஙகள் மன்னிக்கப்பட்டுள்ளது. அல்லது மன்னிக்கப்படவில்லை“ என்று அறிவிக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது(5) என்பதையே இவ்வசனம் அறியத்தருகிறது. இது சீடர்களின் சுவிசேஷப் பிரசங்கத்தோடு இணைந்துள்ள ஒரு வி்டயமாக இருப்பதனால், இயேசு கிறிஸ்துவின் இக்கூற்றை சுவிசேஷப் பிரசஙகத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சீடர்கள் அறிவிக்கும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷப் பிரசங்கம் மக்களின் பாவ மன்னிப்பையு்ம் உள்ளடக்கிய செய்தியாகவே உள்ளது. இயேசுக்கிறிஸ்துவின் சிலுவைப் பலி மக்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு மெய்வாழ்வை அளிக்கும் நற்செய்தியாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே, சீடர்களின் சுவிசேஷப் பிரசங்கத்திற்கு மக்கள் சரியான விதத்தில் ஏற்றுக்கொண்டு, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, அவற்றுக்கு இயேசுக்கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலமே மன்னிப்புக்கிடைக்கும் என்று விசுவாசிக்கும்போது, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று அறிவிக்கும் அதிகாரத்தையே இயேசுக்கிறிஸ்து சீடர்களுக்குக் கொடுத்துள்ளார். அதேசமயம், ஒருவன் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நிராகரித்தால், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கக்கூடிய அதிகாரம் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டது (6). “சீடர்களின் விருப்பதிற்கும், தீர்மானத்திற்கு் ஏற்றப்படி தேவன் மக்களுடைய பாவங்களை மன்னிக்கிறவரக இருக்கவில்லை. மாறாக, தேவன் மக்களுக்கு அருளும் மன்னிப்பை அறிவிப்பவர்களாகவே சீடர்கள் இருந்தனர். (7) இதனால்தான் சீடர்கள் “என்னில் பாவத்தை மன்னிக்க முடியும்.“ என்று பிரசாரம் பண்ணிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் இயேசுக்கிறிஸ்து அருளும் பாவ மன்னிப்பின் செய்தியையே அறிவித்துக் கொண்டிருந்தார்கள். (8). உண்மையில், “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து, ஏற்றுக்கொள்பவர்களின் பாவங்களை அவர் மன்னிக்கிறார்“ என்று அறிவிக்கும் அதிகாரமே சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. (9). இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷம் மக்களுடைய மன்னிப்பைப் பற்றியதாக இருந்தமையால், தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி அச்செய்தியை ஏற்றுக்கொள்பவர்களை இயேசுக்கிறிஸ்து மன்னிக்கிறார் என்பதை அறிந்திருந்த சீடர்கள் அதை அவர்களுக்கு அறிவிக்கக்கூடியவர்களாக இருந்தனர். (10)

பாவங்களை மன்னிப்பதற்கு மனிதனுக்கும் ஆற்றல்  இல்லை என்பதை வேதாகமம் அறியத்தருகின்றது. தேவனால் மட்டுமே பாவங்களை மன்னிக்கமுடியும் என்பதே வேதாகமம் அறியத்தரும் சத்தியமாகும் (மாற். 2:7) இயேசுக்கிறிஸ்து தேவனாக இருக்கின்றமையால் அவர் மக்களின் பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார். (மத். 9:6) இதனால“ நம்முடைய பாவங்களை இயேசுக்கிறிஸ்துவிடம் அறிக்கையிடும்படியே வேதாகமம் அறிவுறுத்துகிறது. (1 யோவான் 1:9) எனவே, குருவானவர்களுக்கும் பாஸ்டர்மார்களுக்கும் மக்களின் பாவங்ளை மன்னிக்கும் ஆற்றல இருக்கிறது என்ற போதனை வேதப்புரட்டு உபதேசம் ஆகும். மேலும், சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் மனந்திரும்பும் மனிதனுடைய பாவங்களைத் தேவன் மன்னித்துள்ளார் என்று அறிவிக்கும் அதிகாரத்தையே இயேசுக்கிறிஸ்து சீடர்களுக்கும், சுவிசேஷசத்தைப் பிரசங்களிக்கும் ஊழியர்களுக்கும் கொடுத்துள்ளமையால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் மூலம் பாவம் மன்னிப்பைப் பெற்று இரட்சிக்கப்பட்டவன், அதன் பின்னர் தான் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்ப பெறுவதற்காக ஊழிய்காரரிடம் தனது பாவத்தை அறிக்கையிட வேண்டிய அவசியமில்லை. அவன் தன் பாவத்தை நேரடியாக இயேசுக்கிறிஸ்துவிடமே அறிக்கையிட்டு அதற்கான மன்னிப்பைப் பெற்றிடலாம். “இயேசுக்கிறிஸ்துவினுடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7) என்று கூறும் வேதாகமம், நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் (1 யோவான் 1:9) என்னும் சத்தியத்தை அறியத்தருகிறது. “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறமையால் (1 யோவான் 2:1) நாம் அவரிடமே நம் பாவங்களை அறிக்கையிட வேண்டும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இயேசுகிறிஸ்து மட்டுமே மத்தியஸ்தராக இருக்கின்றமையால் (1 தீமோ. 2:5-6) நாம் மனிதர்களிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டால் அவற்றுக்குத் தேவனிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காது. எனவே, தேவன் அருளும் பாவ மன்னிப்பையும் மெய்வாழ்வையும் பெற்றுக்கொள்வதற்கு மனிதர்கள் இயேசுக்கிறிஸ்துவிடமே தங்களுடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும். 

Footnote & Reference
(1) Brown, R. 'The Kerygma of the Gospel According to John : The Johnnie View of Jesus in Modern Studies; in Interpretation p. 391 
ரோமன் கத்தோலிக்க சபையில் பாவ அறிக்கை முக்கயமான விடயமாக உள்ளது. பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்காக, அவற்றை சபையினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குருவானவர்களிடம் அறிக்கை செய்ய வேண்டும் என்பது ரோமன் கத்தோலிக்க சபையின் உபதேசமாகும். அறிக்கையிடப்படும் பாவத்தை செவிமடுக்கும் குருவானவர், அதற்காகச் செய்ய வேண்டிய பரிகாரச் செயல்களையும் அறிவிப்பதற்கு அதிகாரம் உண் என்றும் ரோம சபை கூறுகிறது, (L. Boettner, Roman Catholicism, pp196-197)

(2) J.R. Michaels, John : New International Biblical Commentary, pp-349-359)

(3) G.R.Beasley-Murray, John : World Biblical Commentary Vol. 36, p. 383)

(4) D.A.Carson, John : The Pillar New Testament Commentaries, p 655

(5) L. Morris, John : The New International Biblical Commentary on the New Testament, p. 847)

(6) H.J. Cadbury, 'The Meaning of John 20:23, Mathew 16:10 and Matthew 18:18' in Journal of Biblical Literature, pp 251-254, Mantey, J.R. 'The Mistranslation of the Perfect Tense in John 20:23, Mathew 10:19 and Matthew 18:18; in Journal of Biblical Literature, pp 243-249)

(7) M.C.Tenney, John : The Expositor's Bible Commentary Volume 9, p 193

(8) அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே (இயேசு கிறிஸ்து) பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.(லூக். 24:47) என்று அறிவிக்கப்பட்டபடியே, சீடர்கள் “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களே பாவ மனனிப்பைப் பெறுவார்கள் (அப். 10:43) என்னும் சத்தியத்தை அறிவித்து வந்தனர். 

(9) H.M. Woods, Our Priceless, Heritage, P. 118

(10) W. Barclay, John Volume 2: The Daily Study Bible, P 274.


(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கர்ததரின் வார்த்தைகளில் கடின வரிகள் (யோவான் சுவிசேஷத்திற்கான விளக்கவுரை) எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு இலங்கை வேதாகமக் கல்லூரி)












தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment