- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 17 December 2010

மலை ஏறுவது!


சில இளைஞர்கள் மலைப்பிரதேசம் ஒன்றைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். மிக அருமையான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பிரதேசம் அது. அவர்கள் அழகான பூஞ்சோலைகளையும், மிகப்பெரிய மரங்களையும், எழிலான பள்ளத்தாக்குகளையும் பார்த்து சிந்தித்துக்கொண்டே வந்தார்கள். அப்போது, ஒரு காட்சி அவர்களுக்கு பெரிதும் வியப்பளித்தது. மிகவும் வயது முதிர்ந்த மனிதர் ஒருவர் பெரிய மூட்டை ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு மலைச்சரிவில் மேல் நோக்கி சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தார். இளைஞர்கள் அதைப் பார்த்து குழப்பமடைந்தார்கள். எந்த எடையையும் சுமக்காமல் சாதாரணமாக மலை ஏறுவதே சிரமமான காரியமாக இருக்கையில், இந்த முதியவரால் எப்படி இவ்வளவு பெரிய பாரத்தைச் சுமந்துகொண்டு மலை மீது ஏற முடிகிறது? அதுவும், மலைச்சரிவில் ஓடி ஏறிக்கொண்டிருக்கிறாரே!

இளைஞர்கள் அந்த முதியவரைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்கள். ஐயா, நாங்கள் இளைஞர்கள். நாங்கள் எந்த பாரமும் இல்லாமல்தான் மலை ஏறுகிறோம். ஆனாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களுக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கிறது. சற்று ஓய்வு எடுத்தால்தான் மேற்கொண்டு சிறிது தூரம் ஏற முடிகிறது. இப்படி இருக்கும்போது நீங்கள் இந்த முதிர்ந்த வயதில் இவ்வளவு பெரிய பாரத்துடன் எப்படி மலை மீது எளிதாக ஓடி ஏறுகிறீர்கள்?

அந்த முதியவர் சொன்னர்: """"தம்பிகளா, மலை மீது உள்ள கிராமத்தில்தான் நான் இருக்கிறேன். அடிவாரத்தில் சிறு நகரம் இருக்கிறது. எங்களுக்குப் பொருட்கள் எதுவும் தேவையென்றால் கீழிருந்து வாங்கித்தான் மேலே கொண்டு செல்ல வேண்டும். சிறுவயதியிலிருந்தே நான் சிறுசிறு பொருட்களை வாங்கி மேலே கொண்டு செல்வேன். நாளாக ஆக ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். பிறகு, பாரமுடைய மரக்கட்டைகளைச் சுமந்து சென்றேன். மலை ஏற முடியாத நோயாளிகளைக்கூட சுமந்து சென்றேன். இப்போது கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மனிதர்களுக்காக என்னால் முடிந்த உதவியைச் செய்வதற்காக சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறேன். இந்தப் பாரத்தைத் தூக்கிக்கொண்டு மலைமீது ஓடுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை!

அந்த முதியவரின் வார்த்தைகள் இளைஞர்களின் இதயத்தில் என்றும் அணையாத பிரகாசத்தை ஏற்படுத்தியது. அந்தப் பிரகாசம் இரண்டு உண்மைகளால் ஆனது. ஒன்று, தொடர் பயிற்சியின் மூலமும் ஆண்டவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமும் எதையும் எளிதாகச் சாதிக்க முடியும். இன்னொன்று மற்றவர்களுக்காக நாம் ஒரு நன்மையைச் செய்யும்போது நம்மையறியாமலேயே தேவன் நம் சக்தியை பன்மடங்காகப் பெருகச் செய்கிறார்.

ஆம் பிரியமானவர்களே! நம்முடைய வாழ்விலும் தேவன் நமக்கு கற்றுக்கொடுக்கின்ற காரியங்களும் அப்படித்தான்! அவர் ஒரேநாளில் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து நம்மேல் எல்லாவற்றையும் திணித்து நம்மை திணரச்செய்கிற தேவனல்ல. ஒவ்வொரு காரியத்திலும் நாம் மெதுமெதுவாக முன்னேறும்படி நம்மை பயிற்றுவிக்கிறவர். மற்றொரு காரியம் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் மற்றவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யும்போதும், நம்மிடத்திலுள்ளவைகளை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது அவர்கள் முகத்தில் மலர்ச்சியை காண்கிறோம். நமக்கென்று நாம் எவ்வளவுதான் செலவழித்துக் கொண்டாலும், தேவையில் இருப்போரின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உதவும்போது, அவர்கள் முகத்தில் காணப்படுகிற முகமலர்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் முன்பதாக வேறெந்த காரியமும் இணையாகாது. இப்படிப்பட்ட சந்தோஷத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமா? உதவிற்றோருக்கும், ஏழைகளுக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உதவுங்கள். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment