- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 27 December 2010

எபிரேய உருவக மொழிகளை அறிந்து கொள்ளுதல்

நூல்  :- வேதாகமப் பிண்ணனி
ஆசிரியர்கள்  :- யோசுவா போல், எஸ். பேர்னாட்ஷன்

வெளியீடு  :- இலங்கை வேதாகமக் கல்லூரி



எபிரேயருடைய பேச்சு வழக்கில் உருவக மொழிகள் முக்கியனமான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதை நாம் வேதாகமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வுருவக மொழிகளை எபிரேய பின்னணி என்பதன்டிப்படையிலும் அதனை அவர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டனர் என்பதன் அடிப்படையில் புரிந்துக்கொள்ளும்போது அவற்றின் சரியான அர்த்தத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம். எனும் உருவக மொழியினை தமிழ்ப்பின்னணியில் விளங்கிக் கொள்ளும்போதே அதன் சரியான அர்த்தம் கிடைக்கின்றது. அவ்வகையில் எபிரேய உருவக மொழிகளை எபிரேயப் பின்னணியில் விளங்கிக் கொள்ளும்போது சரியான அர்த்த்த்தினைப் பெற்றுக் கொள்வதோடு அவற்றைக் குறித்த தவறான எண்ண அலைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை மறுப்பதற்கில்லை.


1. மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு (நீதி 19.13)

பாலஸ்தீனாவில் வீட்டுக்குக் கூரை அமைக்கும் முறையை கவனத்திற் கொள்ள வேண்டியது  அவசியமாகும். அக்காலத்தில் பலஸ்தீனாவில் வீட்டுக்குக் கூரை அமைக்கும்போது நெடுக்காக மரக்கம்புகளை வைப்பதோடு  அதனிடையே களிமண் என்பவற்றை வைத்தே கூரைகளை அமைப்பர். “வெயில் காலத்தில் இதில் வெடிப்புகள் ஏற்படும். எனவே மழை பெய்யும்போது மழைநீர் மரக்கம்புகளிடையே சென்று கூரை ஒழுக்க்கூடிய சூழ்நிலை உருவாகத் தொடங்கும். இவ்வொழுக்கானது மழை பெய்யும்போது மட்டுமல்ல. மழை ஓய்ந்த பின்னரும் கூரையின் இடுக்குள்ளிருக்கும் மழைநீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். சண்டைக்காரியான மனைவியும் குடும்பவாழ்வில் ஓயாது ஒழுகும் கூரைக்கு சமனான இருக்கிறாள் என்பதே நிஜமாகும்.


2.ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்  (மத் 19.24, லூக் 18.25)


இது குறித்த இருவிதமான கருத்துக்கள் உண்டு.

1. ஒரு சாரார் கிறிஸ்து நேரடியாக ஒட்டகத்தையும் ஊசியையுமே குறிப்பிடுகின்றார் என்றனர். 

2. மற்றயை சாரார் கூறுவது யாதெனில் அக்காலப் பட்டண வாசல்களில் “ஊசியின் கண்“ எனப்படும் சிறிய வாசலும் காணப்படும். ஒட்டகத்தின் மீதேறி வருகின்றவர்கள் வந்த வண்ணமாகவே ஊசியின் கண்ணாகிய சிறிய வாசலினூடாக செல்ல முடியாது. ஒட்டகதினை அமரச் செய்து அதன் பின்னாக தள்ளியவாறே அச்சிறிய வாசலினூடாக ஒட்டகத்தினை கொண்டு செல்ல முடியும். எனவே கிறிஸ்து குறிப்பிடுகின்ற ஊசியானது இந்த ஊசியின் கண்ணாக இருக்க வேண்டும் என்கிறார்கள். 

கிறிஸ்து எதனை நினைவில் கொண்டு கூறினார் என்பதனை விட இதற்கூடாக என்ன கருத்தினை முன்வைக்கிறார் என்பதே அவசியமாகும். உண்மையில் நிஜமான ஊசியின் கண்ணின் ஊடாக ஒட்டகம் நுழைவது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது. அதாவது மனிதனால் இது கூடாது. ஆனால் தேவனால் எல்லாம் கூடும். (மத். 19.26) என்பதனை நாம் மறந்துபோக கூடாது. மனிதனால்(ஐசுவரியவானால்) தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாது. ஆனால் தேவன் அவனை இரட்சிப்புக்கு நேராக வழி ந்டத்துவாரெனில் அவனால் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். 
அவ்வாறே ஒட்டகம் ஊசியின் கண் எனும் சிறிய வாசலினூடாக செல்ல முடியாது. ஆனால் அதனை அமரச் செய்து பின்னிருந்து தள்ளும்போது அதாவது ஒரு மனிதனுடைய வாழ்வில் பின்னருந்து பரிசுத்த ஆவியானரான தேவன் கிரியை செய்யும்போது இரட்சிப்பென்னும் வாசலினூடாக அம்மனிதனால் செல்லமுடியும். மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்வதை அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, ஆனால் தேவனால் மட்டும் கூடும என்பதை மறுப்பதற்கில்லை. இதில் 2வது கருத்தினையே பொதுவாக ஏற்றுக்கொள்வர்.


3 குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர் களாயிருக்கிறீர்கள் (மத் 23.24)

அக்காலப்பகுதியில் மக்கள் திராட்சை ரசத்தினைக் குடிக்கும்போது அதற்குள் கொசுக்கள் காணப்பட்டால் அத்திராட்சை ரத்தினை வடிகட்டி கொசு இல்லாது குடிப்பது வழக்கமாகும். பரிசேயர் வேதபாரகரும் கூட இதற்கு விதி விலக்கில்லை. கிறிஸ்து இதற்கூடாக முன்வைப்பது என்னவெனில் பரிசேயர் ஒற்தலாம், வெந்தாயம், சீரகம் போன்றவற்றில் தசமபாகம் கொடுப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதேயளவு முக்கியத்துவத்தை ஏனைய கட்டளைகளுக்கும் கொடுக்க வேண்டும். தசமபாகத்தினை மட்டும் செலுத்துவதால் முழு நியப்பிரமாணத்யும் நிறைவேற்றிவிட்டோம் என காண்பித்த பரிசேயருக்கு கிறிஸ்துவின் செய்தி யாதெனில் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நிறைவேற்றியது கொசுவளவு நிறைவுற்றாத்து ஒட்டகத்தினளவு. எனவே, தேவநீதியையும் இரக்கத்தையும் விசவாசத்தினையும் கூட கைக்கொள்ள வேண்டும் என்பதனையும் கிறிஸ்து எடுத்துரைக்கிறார். 


4. நாளைக்கு அடுப்பில் போடப்படும் காட்டுப்புல்லுக்கு (மத் 6.30)


இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களிடையே அறிவீனமானதாக்க் கருதப்படுவது அவர் காட்டுப்புல்லைப் பற்றி கூறிய விடயமாகும். 

அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு  அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத் 6.30)
என்று வாசிக்கின்றோம். புற்களை எவரும் அடுப்பில் போடுவதில்லை எனக் கூறும் வேதவிமசகர்கள் அடுப்பைப் ப்ற்றி கூட சரியாக அறிந்திராத இயேசு புற்களை அடுப்பில் போடுவதாக அறிவீனமாக உளறியுள்ளார் எனக்கூறுகின்றனர். எனினும் இவர்களது விமர்சனமே அறிவீனமாக உள்ளது. ஏனென்றால் இயேசுவின் கூற்றுக்களை அறிவீனமானவை எனக் கூறுபவர்களே இயேசு வாழ்ந்த பிரதேசத்தைப் பற்றிய அறிவற்றவர்களாக அவரைப் பற்றி விமர்சித்துள்ளனர். இயேசு வாழ்ந்த பிரதேசத்தில் காயவைக்கப்பட்ட காட்டுப் புற்கள் அடுப்புகளுக்கு எரிபொருட்களாக உபயோகிக்கப்பட்டன. காய்ந்த புற்களையும் வாடிய மலர்களையும் சிறுகட்டுகளாக கட்டி அடுப்புகளுக்கு எரிபொருளாக அக்கால மக்கள் உபயோகித்தனர். முட்செடிகளும் சிறுகுச்சிகளும் இவ்விதமாக அடுப்புக்கான எரிபொருட்களாக உபயோகிக்கப்பட்டன. இன்றும்கூட மத்தியகிழக்கு நாடுகளில் வெதுப்பகங்களில் காட்டுப்புற்கள் எரிபொருட்களாக உபயோகிக்கப்படுகினறன. எனவே இயேசுவின் கூற்று அறிவீனமான தொன்றல்ல.  மாறாக அவர் காட்டுப் புற்களின் தற்காகலிக நிலையை அதாவது அவை கொஞ்சகாலம் மட்டுமே உலகிலிருக்கும் உண்மையை இக்கூற்றின் மூலம் தெரிவித்துள்ளார்.


5. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? (மத் 5.13, மாற் 9.50, லூக் 14.34)

உப்பானது சாரமற்றுப் போகாது என்பதால் இயேசு உப்பைப்பற்றி அறியாதவராக ஒரு தவறான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என இன்று பலர் கருதுகின்றனர். உண்மையில் இயேசு உப்பின் தன்மையை அறியாதவராக அப்படி கூறவில்லை. இன்று உற்பத்தி செய்யப்படுவதுபோல் இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனாவில் உப்பு தயாரிக்கப்படவில்லை. பாலஸ்தீனாவில் உப்பைப் பெறுவதற்கு கடல்நீரை ஆவியாக்க வேண்டியதாய் இருக்கவில்லை. ஏனென்றால் உப்பைப் பொறுக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு கடற்கரையில் உப்புக் கற்கள் இருந்தன. உண்மையில் கடற்கரையோரங்களில் இருக்கும் சதுப்புமண்ணில் அல்லது நிலத்திலிருந்தே உப்பு எடுக்கப்பட்டது. பலஸ்தீனாவுக்கு சாக்கடல் பிரதேசமே உப்பளமாக இருந்தது. இப்பகுதியில் பல உப்புமலைகளும் இருந்தன. எனினும் இப்பிரதேசத்து உப்பில் வேறு கனிமபொருட்களும் கலந்தே காணப்பட்டன. இத்தகைய கலப்பு உப்பில் பிற கனினப்பொருட்கள் அதிகமாக இருக்கும்போது நாளடைவில் உப்புத்தன்மையானது இல்லாமல் போய்விடும். அதாவது உப்பிலிருக்கும் சோடியம் குளோரைட் எனும் கனிப்பொருளானது ஏனைய கனிமப்பொருட்களினால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு உப்பு சாரமற்றுப் போய்விடும். இதனடிப்படையில் கிறிஸ்துவின் கூற்று சரியானதேயாகும். உப்பு சாரமற்றுப் போனால் அதனை மீண்டும் சாரமாக்க முடியாது. அதனால் அதனால்தான் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற் குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது என்றார். அத்தோடு அது நிலத்திற்கா கிலும் எருவிற்காகிலும்  உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார் (லூக் 14.35) இன்றும்கூட எகிப்தில் உப்பு ஒருவகையான எருவாக உபயோகிக்கப்படுகின்றது. உப்பானது உப்புத் தன்மையுடனே இருக்க வேண்டும். அது உப்பின் தன்மை இழந்துபோனால் பிரயோசனமற்றதாகிவிடும். இஸ்ராயேல் ராஜ்யம் ஏனைய ராஜ்யங்களுக்கு ஆசிர்வாதமாயிருக்கும் தன்மையை இழந்துபோனதை வர்ணிக்கும் ஒரு உருவகமாக சாரமற்ற உப்பை யூதமதப் போதகர்கள் உபயோகித்தனர். இதேவிதமாக உலகிற்கு உப்பாயிருக்கும் கிறிஸ்தவர்களும் தமது கிறிஸ்தவ தன்மையை இழந்துபோனால் எதற்கும் பிரயோசனமற்றவர்களாகவே இருப்பார்கள் என்பதையே இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் விளக்கியுள்ளார். மேலும் நீங்கள் உலகிற்கு உப்பாயிருக்கிறீர்கள் என்பதை உப்பின் குணங்களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.  உப்பு உணவினைச் சுவையூட்டக்கூடியது. எனவே நமது வாழ்க்கை கிறிஸ்துவை மற்றவர்கள் சுவைக்கும்படியாக காணப்படவேண்டும். உப்பு அழுகிப்போகும் பொருட்களை நீண்டநாட்கள்  பாவனைக்குரிய பொருட்களாக (கருவாடு, மரக்கரி வற்றல்) மாற்றுவது போல் நாமும் அழிந்துபோகும் மக்களை நித்தியத்திற்குள்ளாக ஆதாயப்படுத்த வேண்டும் அத்தோடு உப்பு தாகத்தை ஏற்படுத்துவதுபோல நாமும் கிறிஸ்துவைப் பற்றிய தாகத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 


(அடுத்த பதிப்பில் நிறைவுறும்)


கிறிஸ்மஸ் புறஜாதியாருடைய பண்டிகை நாளா?

புறஜாதியாருடைய பண்டிகை நாளான டிசம்பர் 25ம் திகதியையே கொன்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கினான். பல கிறிஸ்தவர்களும் புறமத தெய்வத்தின் பண்டிகை நாளே கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். உண்மையில் கிறிஸ்தவர்களின் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே புறஜாதி மக்கள் தங்களுடைய பண்டிகையை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடியுள்ளனர். எனவே. டிசம்பர் 25ம் திகதி பண்டிகை புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வந்த கொண்டாட்டம் அல்ல.

புறமதப் பண்டிகையின் நாளே கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றப்பட்டது என்னும் கருத்து முதற்தடவையாக கி.பி. 17ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே உருவானது. (1) ஆனால் கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மதமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது. (2). எனவே, கிறிஸ்மஸ் பண்டிகையின் நாள், புறமதப் பண்டிகை நாளின் கிறிஸ்தவ மாற்றம் அல்ல.

கொன்டஸ்டன்டைன் என்னும் அரசன் டிசம்பர“ 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. உண்மையில் இவ்வரசனுடைய மரணத்திற்கும் (கி.பி. 337) பின்பே. அதாவது கி.பி 379ம் ஆண்டே முதற்தடவையாக இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்பட்டது. எனவே, கொன்ஸ்டன்டைன் என்னும் அரசனே புறமதப் பண்டிகை நாளைக் கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றினான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

(இவ்வாக்கமானது சகோ. எம்.எஸ் வசந்தகுமார் அவர்கள் எழுதிய டாசின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மைச் சரித்தையா? என்னும் நூலிலிருந்து பெறப்பட்ட்தாகும்)
பின்குறிப்பு :- இத்தலைப்புக்கு ஏற்றவித்த்தில் மூலகருத்திற்கு எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் சிலவற்றை Edit செய்துள்ளேன்)

References :
(1) W.J. Tighe, : “Calculating Christmas’ in Touchstone, December 2003
(2) C.E. Olson & S. Miesel, The Da Vinci Hoax : Exposing the Errors in Da Vinci Code p, 162-163

Friday, 24 December 2010

எவ்விதப் பிழையுமற்ற வேதாகமம்


745 உலகப் புகழ்பெற்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் சேர் வில்லியம் ரம்சே என்பவராவார் (1851-1939) சிறந்த கல்விமானும் ஆராய்ச்சியாளருமான இவர் பிரித்தானிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 9 கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்தார். எனினும், இவர் புதிய ஏற்பாட்டுச் சம்பவங்கள் அனைத்தும் எதுவித சரித்திர ஆதாரமும் அற்ற கட்டுக்கதைகள் என்றே கருதி வந்தார்.


புதைபொருள் ஆராய்ச்சியாளரான இவர், லூக்கா சுவிஷேசத்திலும் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தவறானவை என்பதை நிரூபிப்பதற்காக சின்ன ஆசியா பகுதிக்கு (தற்போதைய துருக்கி நாடு) அனுப்பப்பட்டார். புதிய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இடங்களில் தான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள், புதிய ஏற்பாட்டு விடயங்கள் நம்பகமற்றவை என்பதற்கான ஆதாரங்களைத் தரும் எனும் நம்பிக்கையுடன் இருந்த வில்லியம் ராம்சே, தனது நோக்கத்திற்கு எதிரான ஆதாரங்களையே கண்டுபிடித்தார். அதாவது லூக்காவின் எழுத்துக்கள் (சுவிஷேசமும் அப்போஸ்தலர் நடபடிகளும்) சரித்திர ரீதியாக எவ்வித பிழையுமற்றவை என்பதை வில்லியம் ராம்சேயின் ஆராய்ச்சிகள் அவருக்குச் சுட்டிக் காட்டின.


லூக்கா தனது இரு நூல்களிலும் குறிப்பிடம்ட்டுள்ள சரித்திர விடயங்கள் குறிப்பாக நகரங்கள், ஆட்சியாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானவை ஒரு சிறிய விடயத்தில் கூட தனது கண்டுபிடிப்புக்கும் லூக்காவின் நூல்களுக்கும் விவரி முரண்பாடும் இல்லை என்பதை வில்லியம் ராம்சே கண்டுபிடித்தார். இது அவர் கிறிஸ்தவராகவதற்கும் புதிய ஏற்பாட்டுச் சரித்திரம் பற்றி சில நூல்களை எழுதுவதற்கும் காரணமாயிற்று. “லூக்கா எழுதியுள்ள விடயங்கள் அனைத்தும் உண்மையானவை“ என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.


இயேசுக்கிறிஸ்து தெரிவித்ததுபோல வேதவாக்கியங்கள் தவறாததாயிருக்கின்றது (யோவா 10.35) அதில் எவ்விதமான பிழையும் இல்லை. யூதபுதைபொருள் ஆராய்ச்சியாளரான நெல்சன் குலூயிக் என்பார் இதுவரையில் 25,000 இற்கும் அதிகமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளில் ஒன்று கூட வேதவசனத்தை முரண்படுத்துவதாய் இல்லை. அனைத்தும் வேதாகமச் உண்மை என்பதை நிரூபிப்பனவாகவே உள்ளன என்பதை அறியத்தருகிறார். எனவே, நம்மால் வேதவிடயங்களை முழுமையாக நம்பக்கூடியதாயுள்ளது

Tuesday, 21 December 2010

உலகை சிருஷ்டித்த தேவன்


புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சேர். ஐசக் நியூட்டன் எனும் விஞ்ஞானி ஒரு சமயம், சூரினைச் சுற்றி பல்வேறு கிரகங்கள் சுற்றுவது போன்ற ஒரு மாதிரி உருவம் ஒன்றைத் தன் மேசையின் மீது செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்த ஐசக் நியூட்டனின் உதவியாளர் ஒருவர் அவரிடம் “இதைச் செய்தது யார்? என்று கேட்டார். 

நாத்திகரான அவ்வுதவியாளருக்குச் சரியான பதிலொன்றைக் கொடுக்க்க்கூடிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ஐசக் நியூட்டன் “அந்த மாதிரி உருவத்தை யாரும் உருவாக்கவில்லை. அது தானாகவே வந்த்து“ என்று கூறினார். 
நியூட்டனின் வார்த்தைகளை நம்ப மறுத்த அவ்வுதவியாளர் “இவ்வளவு அழகான உருவம் எப்படி தானாகவே வந்திருக்க முடியும்?” என்று கேட்டார் 

“சாதாரண ஒரு மாதிரி உருவத்தை உருவாக்குவதற்கே ஒருவர் தேவை என்றால் சூரியனையும் கிரகங்களையும் உருவாக்கத் தேவன் என்றொருவர் இருந்திருக்க வேண்டும் அல்லவா?” என்று தன் நாத்தீக உதவியாளருக்கு பதில் அளித்தார் சேர் ஐசக் நியூட்டன்.

நாம் வாழும்உலகம் தானாக உருவானதொன்றல்ல. அது நம் தேவனால் சிருஷடிக்கப்பட்டது. இதைப்பற்றி வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது. 

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதி 1:1) சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3) 

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் (மூலமொழியில் பிரபஞ்சம்) தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (எபி. 11:3)

இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய சில சம்பவங்களில் சில சத்தியங்கள் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்

Friday, 17 December 2010

பாடல்!

சாயங்கால நேரம். ஜாரி தான் காலையிலிருந்து கஷ்டப்பட்டு செய்த அந்த அழகான கிறிஸ்துமஸ் தொழுவத்திற்கு முடிவு வடிவத்தை செய்து கொண்டிருந்தான். 

திடீரென்று எங்கிருந்தோ ஒரு சுண்டெலி பாய்ந்து வந்து தொழுவத்தின் கூரையில் போய் ஒரு துளையை தோண்டியவாறு நின்றது.

மிகவும் கோபமடைந்த ஜாரி, ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்துக்கொண்டு , அந்த சுண்டெலியை அடித்து நொறுக்க கட்டையை ஓங்கினான். அந்த வேளையில் அங்கு வந்த போதகர் பீட்டர் பெர்ணான்டஸ், ஜாரியின் தோளின் மேல் கையை வைத்து தடுத்தவராக அவனுக்கு ஒரு சிறுகதையை சொன்னார்.

""""ஓபன்டார்ஃப்"" என்று ஆஸ்திரியா நாட்டில் புனித நிக்கோலஸ் என்னும் ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. 1818- ஆம் ஆண்டு, போதகர் யோசேப்பு மேஹர், நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைக்காக பாடல் குழுவினரை தயார் செய்துகொண்டிருந்தார். ஆனால், இந்த நேரத்தில்தான், ஆலயத்திலுள்ள இசைக்கருவி, சத்தமே எழுப்பாமல், அமைதியையே வெளியிட்டது.

உடனடியாக ஏதோ ஒன்று செய்தாக வேண்டுமே என்று அவர் எண்ணியபோது, போதகர் மேஹருக்கு, பெத்லஹேமில் அன்று இரவு பிறந்த குழந்தை இயேசுவின் ஞாபகம் வந்தது. பாதிரியின் ஆன்மாவிலிருந்து ஒரு பாட்டு தோன்றியது. எந்தவித இசைக்கருவியுமின்றி, இன்றியமையாத ஒரு பாடலை உருவாக்கினார் பாதிரி மேஹர். அந்த பாட்டைத்தான் இன்றும் உலகெங்கிலும் உள்ள எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்துமஸ் இரவில் பாடுகிறோம். அதுதான் "சைலன்ட் நைட்" என்ற பாடல் . ""இத்தனை மகத்துவமான பாட்டிற்கு காரணம் யார் தெரியுமா?"" 

"அதோ அந்த எலிக்கூட்டத்தை சேர்ந்த ஒரு சுண்டெலிதான். கிறிஸ்துமஸ்ஸூக்கு சில நாட்களுக்குமுன் ஒரு சுண்டெலி ஆலயத்திற்குள் புகுந்து அந்த இசைக்கருவியின் காற்றழுத்த இடத்தில் ஒரு துளை போட்டுவிட்டது. ஆகவே தான் இசைக்கருவியில் நிசப்தம் உருவானது, இந்த மகத்துவமான பாடலும் உருவாக வழிவகுக்கப்பட்டது. ""

தொடர்ந்தார் போதகர், "நாமும் அந்த உபபோயகமற்ற எலியைப்போல்தான் இருந்தோம். இயேசு நம்மைதான் தம்மைபோல் மாற்றும்பொருட்டு, நம்மீது இரக்கம்கொண்டு நமக்காக ஒரு மனிதனாக பிறந்தார் .""

மலை ஏறுவது!


சில இளைஞர்கள் மலைப்பிரதேசம் ஒன்றைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். மிக அருமையான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பிரதேசம் அது. அவர்கள் அழகான பூஞ்சோலைகளையும், மிகப்பெரிய மரங்களையும், எழிலான பள்ளத்தாக்குகளையும் பார்த்து சிந்தித்துக்கொண்டே வந்தார்கள். அப்போது, ஒரு காட்சி அவர்களுக்கு பெரிதும் வியப்பளித்தது. மிகவும் வயது முதிர்ந்த மனிதர் ஒருவர் பெரிய மூட்டை ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு மலைச்சரிவில் மேல் நோக்கி சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தார். இளைஞர்கள் அதைப் பார்த்து குழப்பமடைந்தார்கள். எந்த எடையையும் சுமக்காமல் சாதாரணமாக மலை ஏறுவதே சிரமமான காரியமாக இருக்கையில், இந்த முதியவரால் எப்படி இவ்வளவு பெரிய பாரத்தைச் சுமந்துகொண்டு மலை மீது ஏற முடிகிறது? அதுவும், மலைச்சரிவில் ஓடி ஏறிக்கொண்டிருக்கிறாரே!

இளைஞர்கள் அந்த முதியவரைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்கள். ஐயா, நாங்கள் இளைஞர்கள். நாங்கள் எந்த பாரமும் இல்லாமல்தான் மலை ஏறுகிறோம். ஆனாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களுக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கிறது. சற்று ஓய்வு எடுத்தால்தான் மேற்கொண்டு சிறிது தூரம் ஏற முடிகிறது. இப்படி இருக்கும்போது நீங்கள் இந்த முதிர்ந்த வயதில் இவ்வளவு பெரிய பாரத்துடன் எப்படி மலை மீது எளிதாக ஓடி ஏறுகிறீர்கள்?

அந்த முதியவர் சொன்னர்: """"தம்பிகளா, மலை மீது உள்ள கிராமத்தில்தான் நான் இருக்கிறேன். அடிவாரத்தில் சிறு நகரம் இருக்கிறது. எங்களுக்குப் பொருட்கள் எதுவும் தேவையென்றால் கீழிருந்து வாங்கித்தான் மேலே கொண்டு செல்ல வேண்டும். சிறுவயதியிலிருந்தே நான் சிறுசிறு பொருட்களை வாங்கி மேலே கொண்டு செல்வேன். நாளாக ஆக ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். பிறகு, பாரமுடைய மரக்கட்டைகளைச் சுமந்து சென்றேன். மலை ஏற முடியாத நோயாளிகளைக்கூட சுமந்து சென்றேன். இப்போது கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மனிதர்களுக்காக என்னால் முடிந்த உதவியைச் செய்வதற்காக சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறேன். இந்தப் பாரத்தைத் தூக்கிக்கொண்டு மலைமீது ஓடுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை!

அந்த முதியவரின் வார்த்தைகள் இளைஞர்களின் இதயத்தில் என்றும் அணையாத பிரகாசத்தை ஏற்படுத்தியது. அந்தப் பிரகாசம் இரண்டு உண்மைகளால் ஆனது. ஒன்று, தொடர் பயிற்சியின் மூலமும் ஆண்டவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமும் எதையும் எளிதாகச் சாதிக்க முடியும். இன்னொன்று மற்றவர்களுக்காக நாம் ஒரு நன்மையைச் செய்யும்போது நம்மையறியாமலேயே தேவன் நம் சக்தியை பன்மடங்காகப் பெருகச் செய்கிறார்.

ஆம் பிரியமானவர்களே! நம்முடைய வாழ்விலும் தேவன் நமக்கு கற்றுக்கொடுக்கின்ற காரியங்களும் அப்படித்தான்! அவர் ஒரேநாளில் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து நம்மேல் எல்லாவற்றையும் திணித்து நம்மை திணரச்செய்கிற தேவனல்ல. ஒவ்வொரு காரியத்திலும் நாம் மெதுமெதுவாக முன்னேறும்படி நம்மை பயிற்றுவிக்கிறவர். மற்றொரு காரியம் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் மற்றவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யும்போதும், நம்மிடத்திலுள்ளவைகளை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது அவர்கள் முகத்தில் மலர்ச்சியை காண்கிறோம். நமக்கென்று நாம் எவ்வளவுதான் செலவழித்துக் கொண்டாலும், தேவையில் இருப்போரின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உதவும்போது, அவர்கள் முகத்தில் காணப்படுகிற முகமலர்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் முன்பதாக வேறெந்த காரியமும் இணையாகாது. இப்படிப்பட்ட சந்தோஷத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமா? உதவிற்றோருக்கும், ஏழைகளுக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உதவுங்கள். 

Wednesday, 8 December 2010

காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதா?

(இயேசுக்கிறிஸ்துவைக் குறித்து பலவிதமான கருத்துக்கள் பிறஇன, மத மக்களிடையே நிலவுகின்றன. அவற்றுக்கு ஆதாரபூர்வமான பதில்களை கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இக்கட்டுரையான காஷ்மீரில இயேசுவின் கல்லறை உள்ளதா? அகமதியா இயக்கதினர் கூறுவது உண்மைதானா என்பதை தர்க்க ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஆராய்கிறது)

இயேசுக்கிறிஸ்துவின் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அறியப்படாத வாழ்வைப் பற்றி கதையெழுதியவர்கள், அவர் இஸ்ரேலில் தமது ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து பௌத்த மற்றும் இந்து மத நூல்களைக் கற்றதாக கற்பனை செய்துள்ளனர். இக்கதைகளில் இயேசுகிறிஸ்துவின் வாழ்வு இஸ்ரேலிலேயே முற்றுப்பெறுகின்றது. ஆனால் சரித்திர ஆதாரமற்ற நம்பமுடியாத பலவிதமான பிழைகளும் முரண்பாடுகளும் உள்ள இக்கதைகளையே முரண்படுத்தும் வண்ணம் அகமதியா இயக்கத்தினரின் வர்ணனை உள்ளது. இவ்வியக்கத்தின் ஆரம்பகர்த்தாவான மிர்ஸா குலாம் அஹமட் என்பார் இயேசுக்கிறஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இந்தியாவிற்கு வரவேயில்லை என்று கூறுவதோடு “சிலுவையில் அறையப்பட்டு மயக்கமடைந்த இயேசு, கல்லறைக்குள் சுயஉணர்வு பெற்று, பின்னர் காணாமற்போன இஸ்ரவேலரைத் தேடி ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் வந்தார். வயதுமுதிர்ந்தவராக மரணமடைந்த அவருடைய கல்லறை இப்போது காஷ்மீரில் இருக்கிறது. என ஜீசன் இன் இன்டியா எனும் நூலில் எழுதியுள்ளார். (Jesus in India by Mizra Ghula Ahamd) இயேசுக்கிறிஸ்துப் பற்றி கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்களை அகற்றுவதற்காகவே தனது நூலை வெளியிட்டுள்ளதாகவும் மிர்ஸா குலாம் அஹமட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட அவருடைய நூல் பிற்காலத்தில் ஆங்கிலம, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


இயேசுக்கிறிஸ்துவின் இந்திய விஜயத்தை பற்றிய அகமதியா இயக்கதினரது கதையும் சரித்திர ரீதியாக நம்பகமற்றது எனபதை அறிந்து கொள்வதற்கு அவ்வியக்கம் எவ்வாறு உருவானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்திய இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமாக தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அகமதியா இயக்கம் Jesus in India எனும் நூலை எழுதிய மிர்ஸா குலாம் அஹமட் என்பாரிலேயே ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்து பலவிதமான தெய்வீக வெளிப்படுத்தல்கள் தமக்குக் கிடைத்தாக தெரிவித்த மிர்ஸா குலாம் அஹமட் 1880 இற்கும் 1884 இற்கும் இடைப்பட்ட காலத்தில் தனது மார்க்கக் கருத்துக்களை 4 புத்தகங்களில் வெளியிட்டார். இவை ஒரு புத்தகத்தின் நான்கு பகுதிகளாகும்). இவை பாரம்பரிய இஸ்லாமியரிடம் அதிக வரவேற்பைப் பெற்றாலும் கூட அகமதியா இயக்கத்தாரின் வித்துக்களை இதில் காணலாம். அதன் பின்னர் 1889 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி மதத்தலைவருக்குரிய மரியாதையை தன் சீடர்களிடமிருந்து பெறுவதற்கும் அவர்கள் தனக்கு விசுவாசமாயிருப்பதற்கான வாக்குறுதியைப் பெறுவதற்குமான தெய்வீக வெளிப்படுத்தல்கள் தனக்கு கிடைத்துள்ளதாக மிர்ஸா குலாம் அஹமட் அறிவித்தார். இது பாரம்பரிய இஸ்லாமிலிருந்து அகமதியா இக்கம் தனியானதொரு குழுவாகப் பிரிவதற்க வழிவகுத்தது அதன்பின் அகமதியா இயக்கத்தினர் மிர்ஸா குலாம் அஹமட்டைத் தமது இயக்கத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இவர் 1891 ஆம் ஆண்டு. தான் வாக்களிக்கப்பட்ட “மசீஹ“ (மேசியா) என்றும் இஸ்லாமியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “மஹ்தி“ என்றும்அறிவித்தார். . இதன்காரணமாக இஸ்லாமும் அகமதியா இயக்கமும் ஒன்றிணைக்கப்பட்ட முடியாதவாறு இரண்டாகப் பிரிவடைந்தன.


பாரம்பரிய இஸ்லாமிய நம்பிக்கையின்படி, வரவிருக்கும் மசீஹ் உம் மஹ்தியும் இரு வேறுபட்ட நபர்கள். மசீஹ் என்பார் உலக முடிவில் பரலோகத்திலிருந்து வந்து இஸ்லாமிய மாரக்கத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஈஸாநபி(இயேசு) ஆனால் மஹ்தி என்பர் உலக முடிவில் ஈஸா நபிக்கு வருவதற்கு முன்பு உலகிற்கு வந்து இஸ்லாமியர்களை அவர்களது விசுவாசத்திற்குள் கொண்டுவருவதோடு ஈஸாவுக்கு எதிரானவர்களை அழிப்பவர். இந்த பாரம்பரிய இஸ்லாமிய நம்பிக்கை முரணாக, தான் மசீஹ் ஆகவும் மஹ்தியாகவும் வந்தவர் என மிர்ஸா குலாம் அஹமட் கூறியமையால் இவர் இஸ்லாமிய மறுமலர்ச்சி தலைவராகவல்ல மாறாக இஸ்லாமுக்கு எதிரியாகவே வந்தவர் என்றே பெரும்பாலான இஸ்லாமியர்கள் எண்ணினர். அதேசமயம் அக்காலத்தில் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்து வந்தமையால், இந்தியர்களின் பார்வையில் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தவும் மிர்ஸா குலாம் அஹமட் முயற்சித்தார். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் அதுவரை காலமும் ஈஸாநபியைப் பற்றி இருந்த நம்பிக்கைகள் ஆதாரமற்றவை எனக் கூறத்தொடங்கினார். எனினும் மிர்ஸா குலாம் அஹமட் தன்னை அல்லாஹ்வின் தீரக்கதரிசியாக அறிமுகப்படுத்தியமையினால் முஹம்மது நபியே இறுதித் தீர்க்கதரிசி என நம்பிய பாரம்பரிய இஸ்லாமியர்கள் இவரைத் தம் தீர்க்கதரிசியாக ஏற்கவில்லை.
மிர்ஸா குலாம் அஹமட் தன்னை அல்லாஹ்வின் இறுத்தீரக்கதரிசியாகவும் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பார்ப்பின்படி வந்துள்ள மெசியாகவும் காண்பிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என சொல்லத் தொடங்கினார்.


பாரம்பரிய இஸ்லாமியர்கள் குர்ஆன் 3:157-158 அடிப்படையாக்க் கொண்டு இயேசுக்கிறிஸ்து சிலுவையிலறையப்படவில்லை, என்றும் அல்லாஹ்வினால் அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்டு அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் நம்புகின்றனர். இவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்ட ஈஸாநபி உலகமுடிவில் மீண்டும் வருவார் என்பது பாரம்பரிய இஸ்லாமியர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்க்கையும் எதிர்பார்ப்பும் தவறானது என்றும் தானே வரவிருக்கும் மெசியா என்றும் காண்பிப்பதற்காகவே மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்துவை இந்தியாவிற்கு கொண்டுவந்து விட்டார். இவருடைய கதையின்படி இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும் அவர் சிலுவையில் மரணமடையவில்லை. மாறாக அவர் மயங்கிய நிலையிலேயே சிலுவையில் இருந்துள்ளார். பின்னர் கல்லறைக்குள் அவரது சரீரம் வைக்கப்பட்டபோது கல்லறையின் குளிர்ச்சியான நிலை அவரது மயக்கத்தை தெளியவைத்துள்ளது. அதேசமயம் அவருடைய சீடர்கள் தேவனால் தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட மருந்தை உபயோகித்து, இயேசுக்கிறிஸ்துவைப் பூரணமாக குணமாக்கினார்கள். நாற்பது நாட்களுக்குப் பின் காணாமற் போன இஸ்ரேலியரின் பத்துக் கோத்திரங்களையும் தேடி கீழ்த்திசை செல்லும் பிரயாணத்தை இயேசு கிறிஸ்து ஆரம்பித்தார். முதலில் ஆப்கானிஸ்தானிலும் பின்னர் காஷ்மீரிலும் குடியிருந்த அவர் 120வது வயதில் மரணமடைந்தார். அவருடைய கல்லறை இன்றுவரை காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரிலுள்ள ஸ்ரீநகரிலுள்ள கான்யா வீதியில் உள்ளது.


மிர்ஸா குலாம் அஹமட் எத்தகைய நோக்கத்துடன் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என கதையெழுதினார் என்பதை அறிந்துகொண்டால் அவரது கதை வெறும் கற்பனைக் கதை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுக்காது. இஸ்லாமிய மக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பின்படி உலகமுடிவில் வரவிருக்கும் மெசியாவாக தான் வந்துள்ளதை காண்பிப்பதற்காகவே அவர் இவ்வாறு கதையை எழுதியுள்ளார். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இயேசுக்கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தால் அவர்கள் அவரையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று கருதிய மிர்ஸா குலாம் அஹமட் அவர் பரலோகத்திற்குச் செல்லவில்லை. அவர் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.. இதோ அவருடைய கல்லறை காஷ்மீரில் இருக்கிறது. எனவே அவர் பரலோகத்திலிருந்து வர முடியாது. என தெரிவித்த மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரமாட்டார். அவருடைய தன்மைகளுடைய ஒருவரே வருவார். அவ்வாறு அவருடைய ஆவியிலும் தன்மையிலும் இதோ நானே வந்திருக்கிற்றேன் என அறிவித்துள்ளார். “இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின்படி தோன்றியவரே மிர்ஸா குலாம் அஹமட் என்பதே அகமதியர்களின் நம்பிக்கையாகும். எனவே தன்னை வாக்களிக்கப்பட்ட மெசியாவாக காண்பிப்பதற்காகவே மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்துவிட்டார் என கூறியுள்ளமை அவரது கதை கற்பனையிலுருவானது . அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பது உறுதியாகின்றது.


இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்த்தைப்பற்றி மிர்ஸா குலாம் அஹமட் எழுதிய கதை அவரது கற்பனையில் உருவானதாயிருக்க இயேசுவின் கல்லறை எப்படி காஷ்மீரில் இருக்கமுடியும் என்று நாம் கேட்கலாம். மிர்ஸா குலாம் அஹமட் தனக்கு அற்புதமான முறையில் இயேசுக்கிறிஸ்துவின் கல்லறை வெளிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட மெசியாவான மிர்ஸா குலாம் அஹமட்டினால் இயேசுக்கிறிஸ்துவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி என்று அகமதியா இயக்கத்தினர் நம்புகின்றனர். எனினும் மிர்ஸா குலாம் அஹமட் கண்டுபிடித்த கல்லறை இயேசுக்கிறிஸ்துவினுடையதல்ல. ஏனென்றால் அதில் “யூஸ் ஆசாப்“ என்னும் பெயரே உள்ளது என்றும் காஷ்மீரிலிருந்தவர்கள் இயேசுக்கிறிஸ்துவையே “யூஸ் அசாப்“ என்று அழைத்தனர் என்று அகமதியா இயக்கதினர் தர்க்கிக்கின்றனர். யூஸ் அசாப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு தீரக்கதரிசி எனும் நம்பிக்கை காஷ்மீர் மக்கள் மத்தியல் இருக்கின்றமையால், அத்தீரக்கதரிசி இயேசுக்கிறிஸ்துவே என அகமதியா இயக்கத்தினர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மிர்ஸா குலாம் அஹமடே வரவிருக்கும் இயேசுக்கிறிஸ்துவாக வந்துள்ளார் என்பதை நிரூபிப்பதற்காக எவரோ ஒருவருடைய கல்லறையை இயேசுக்கிறிஸ்துவினுடையதாக கூறும் கதையை பக்கச்சார்பற்ற நிலையில் சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிர்ஸா குலாம் அஹமட் தானே வரவிருக்கும் மெசியா என்பதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் இயேசுக்கிறிஸ்துவாக வந்திருப்பவர் நானே என்று கூறிக்கொள்ளும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் தாங்களை மார்க்கத் தலைவர்களாக காண்பித்து தம்மை மக்கள் பின்பற்ற வேண்டும் என எதிர்பாரக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் மிர்ஸா குலாம் அஹமட் தான் மெசியாவான கிறிஸ்து என்பதைக் காண்பிப்பதற்காக இவர் இயேசுக்கிறிஸ்துவைப்பற்றிய கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதநூல்களில் உள்ள சரித்திரம் நம்பகமற்றது என்று கூறுகின்றனர். இதனால் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என்ற கதையை எவ்விதத்திலும் நம்ப முடியாதுள்ளது.

நன்றி : கிறிஸ்தியல் வெளியீடு : இலங்கை வேதாகம கல்லூரி

மனிதனிலிருக்கும் தேவஆவி (ஆதி 6.3)

நூற்தலைப்பு ஆதியாகமம்
ஆசிரியர் : சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை)
வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி


(ஆதி 6.3 அடிப்படையாகக் கொண்டு மனிதனின் ஆயுட்காலம் 120 என கூறுவது ஏற்படையதுதானா? 120 வயதைத் தாண்டியும் மனிதர்கள் இவ்வுலகதில் வாழ்ந்து வருகின்றனர். அப்படியால் அவ்வசனத்தின் உண்மையான அர்த்தம் என்ன? இக்கட்டுரை அதனை விளக்குகின்றது)

ஜலப்பிரளயத்தினால் உலககை அழிப்பதற்கு முன்பதாக தேவன் “என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். (ஆதி 6.3) தேவனுடைய இக்கூற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைச் சரியாக புரிந்து கொள்ளமுடியாதவாறு இவ்வசனமானது பலவிதமான முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அர்த்தவிளக்கம் செய்யப்பட்டும் வந்துள்ளது. உண்மையில் இவ்வசனத்தில் இருவிதமான சிக்கல்கள் உள்ளன. இவை அவ்வசனத்தின் இரு பகுதிகளிலும் சரியான அர்த்தம் பற்றியதாகும். முதலாவது ”என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை” எனும் வாக்கியத்தின் அர்த்தம் பற்றிய சிக்கல். இரண்டாவது மனிதன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் எனும் தேவனின் அறிவித்தல். தேவனுடைய கூற்றின் இவ்விரு விடயங்களின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள அவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்ப்போம்.

ஆதியாகமம் 6ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களை அர்த்தவிளக்கம் செய்யும்போது அவை ஜலப்பிரளயத்தினால் தேவன் அழிப்பதற்கு முன்பானவை என்பதை நாம் மறுக்கலாகாது. தேவன் உலகை ஜலப்பிரளயத்தினால் அழிப்பதற்கு முன்பே என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; என்று கூறியுள்ளார். எனினும் இவ்வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சர்ச்சைக்குரியனவாய் மாறியுள்ளன. எனவே இவ்வாக்கியத்தின் மூலம் தேவன் கூறும் விடயத்தை அறிந்து கொள்வதற்கு அதன் ஒவ்வொரு வார்த்தையும் எதைக் குறிக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாக்கியத்திலுள்ள முதல் வார்த்தை “என் ஆவி“ எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பலர் கருதுகின்றனர். எனினும் “என் ஆவி“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ருஆ“ எனும் எபிரேயப் பதம் “ஆவி, காற்று, சுவாசம்“ எனும் அர்த்தங்களையுடையது. அதேசமயம் இப்பதம் ஆவியைக் குறிக்கும் இடங்களில் அது ஒன்றில் பரிசுத்த பரித்த ஆவியைக் குறிக்கும்“ பழைய ஏற்பாட்டில் இப்பதம் 388 தடவைகள் உள்ளபோதும் இவற்றில் 97 தடவைகள் மட்டுமே பரிசுத்த ஆவியானவருக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. 84 தடவைகள் மானிட ஆவியைப் இப்பதம் குறிக்கின்றது. ஆதியாகமம் 6:3 இல் ஆவி என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக் கூறினால் ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட காலத்தில் எல்லா மனிதர்களுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருந்துள்ளார் எனும் தவறான ஒரு விளக்கத்திற்கு வழிவகுக்கும் (இவ்வாக்கியத்தின் இறுதி வார்த்தையான போராடுவதில்லை எனும் வார்த்தையின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளும்போது இவ்வுண்மை நமக்குப் புலப்படும்) எனவே ஆதியாகமம் 6:3 இல் “ஆவி என்பது மானிட ஆவியையே குறிக்கின்றது. அதாவது “மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஆவியாகும்(02). மானிட ஆவியைத் தேவன் “என் ஆவி“ என்று கூறுவது நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தேவன் மனிதனைச் சிருஷ்டித்த முறையைக் கருத்திற்கொள்ளும்போது இத்தகைய ஒரு குழப்பம் ஏற்பாடாது.

தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனது சரீரத்தை மண்ணினால் உருவாக்கி அதை உயிருள்ளதாக்குவதற்காகத் தன் ஜீவசுவாசத்தை அவனுக்குக் கொடுத்தார். (ஆதி 2.7) தேவனுடைய ஜீவ சுவாசமே மண்ணாயிருந்த மனிதனை உயிருள்ளவனாக்கியது. “தேவன் மனிதனுக்கு கொடுத்த ஜீவசுவாசமே அவனை உயிரோடு வைத்திருக்கும் ஜீவ ஆவியாகும். (3). இந்த ஆவியைப் பற்றியே தேவன் ஆதி 6.3 இல் “என் ஆவி“ எனக்குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விபரணத்தை எசேக்கியேல் 37.14 இலும் அவதானிக்கலாம். மரித்தவர்களை உயிர்ப்பிப்பதைப் பற்றித் தேவன் அவ்வசனத்தில் கூறும்போது “என் ஆவியை உங்களுக்குள்ளே வைப்பேன் நீங்கள் உயிரடைவீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்திலும் தேவன் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியல்ல மாறாக மனிதனை உயிருள்ளவனாக்குவதற்காக அவனுக்கு அவர் கொடுக்கும் ஜீவ ஆவியைப் பற்றியே கூறுகிறார். மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஜீவஆவியானது தேவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஆவியாக இருப்பதனாலேயே தேவன் அதை “என் ஆவி“ எனக் கூறுவதற்கான காரணமாகும்.

ஆதி. 6:3 இல் மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஆவியையே தேவன் “என் ஆவி“ என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அவ்வார்த்தை இடம்பெறும் வாக்கியத்தின் இறுதி வார்த்தையின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்வது அவசியம். எனினும் “போராடுவதில்லை“ எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “யாடொன்“ எனும் எபிரேயப் பதத்தின் சரியான அர்த்தம் என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருப்பதனால் அவர்கள் இவ்எபிரேயப் பதத்தினை வித்தியாசமான முறைகளில் மொழிபெயர்த்துள்ளனர். சிலர் இப்பதத்தின் அர்த்தம் தாழ்வடைதல் எனக்கூறுகின்றனர். இதன்படி “என்ஆவி எப்போதும் மனிதனிடம் அபகீர்த்தியடையாது“(05) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் மானிட பாவம் தேவனை இழிவுபடுத்தும் எனக் கூறும் இவ்விளக்கம் தவறானதாகவே உள்ளது. (06) இதனால் சிலர் இவ்வாக்கியத்தின் கடைசிவார்த்தையைத் தனிப்பட்ட பிரதியீடு எனும் அர்த்தத்தில் “என் ஆவி எப்போதும் மனிதனுக்கு பதில் அளித்துக்கொண்டிருக்காது(07) என மொழிபெயர்த்துள்ளனர். அதாவது இனிமேல் மனிதர்கள் தாங்களே பாவங்களின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் இவ்வசனத்தில் அறிவிப்பதாக இவ்விளக்கம் கருதுகிறது. எனினும் “ஆரம்பத்திலிருந்தே மனிதனின் பாவங்களுக்கு அவனே பொறுப்பாளியாக இருந்து வந்துள்ளமையால் அதுவரை காலமும் மனிதனுக்குப் பதிலாக தேவஆவி அவனுடைய பாவங்களுக்கான பொறுப்பை ஏற்று தேவனுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தது எனும் விளக்கம் அர்த்தம் அற்றதாகவே உள்ளது. (06). ஆதி. 6:3 இன் முதல் வாக்கியத்தின் இறுதி வார்த்தையை சிலர் வல்லமை என்றும் மொழிபெயர்த்துள்ளனர். (08) இதன்படி இவ்வாக்கியம் “என் ஆவி எப்போதும் மனிதனுக்கு வல்லமையளிப்பதில்லை“ எனும் அர்த்தமுடையது. எனினும் ஜலப்பிரளய அழிவு மனிதனில் இருக்கும் தேவஆவியின் வல்லமையை எவ்வாறு குறைக்கும் என்பதற்கு இவ்விளக்கத்தினால் எவ்வித பதிலும் கொடுக்கமுடியாதுள்ளமையினால் இவ்விளக்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

நாம் தமிழ் வேதாகமத்தில் இவ்வாக்கியம் என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் போராடுவதில்லை எனும் வார்த்தை பழைய கிரேக்க மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட வார்த்தையாகும். நம் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில் அதிகாரபூர்வமானதாகக் கருதப்பட்ட ஆங்கில வேதாகமத்தின் தமிழாக்கமே இதுவாகும். இதன்படி தேவன் இனிமேல் மனிதனுடைய பாவத்திற்கு எதிராகப் பேசி அவனோடு தர்கித்துக்கொண்டிருக்க மாட்டார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும். (02). அதாவது மனிதனுடைய பாவத்திற்கு எதிராகப் பேசுவதன் மூலமாக அதுவரைகாலமும் மனிதனோடு போராடி வந்தவர் இனிமேல் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாகும். இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கமாக தென்படுகின்ற போதிலும் இதுவும் ஏனைய விளக்கங்களைப் போலவே இவ்வாக்கியத்திலுள்ள ஆவியை பரிசுத்த ஆவியாகவே கருதுகின்றது. இதனால் இவ்விளக்கமும் சரியானதொன்றாக இல்லை.

அண்மைக்காலத்தில் எபிரேய மொழியிலாளர்கள் மூலமொழியில் இவ்வாக்கியத்தின் கடைசி வாரத்தையின் சரியான அர்த்தம் “இருப்பதில்லை“ என்பதை அறியத்தந்துள்ளனர். தற்போது ஆங்கில உலகில் உபயோகிக்கப்பட்டு வரும் புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு வேதாகமம் “இவ்வர்த்தத்துடனும் இவ்வார்த்தை மொழிபெயர்க்கப்படலாம்(09) என்பதை அறியத்தருகின்றது. “செப்துவஜின்ட்“ என அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் ஆரம்பகால அரபிக், லத்தீன், சிரிய மொழிபெயர்ப்புகளிலும் இவ்வர்த்தத்துடனே இவ்வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (02). மொழியியல் ரீதியாக இவ்வர்த்தமே சரியானது என்று சுட்டிக் காட்டுகின்றனர். (03). இவ்வாக்கியத்தின் ஆரம்ப வார்த்தையான “என் ஆவி“ என்பது மனிதனை உயிரோடு வைத்திருப்பதற்காகத் தேவன் அவனுக்கு கொடுத்துள்ள ஜீவ ஆவியாக இருப்பதனால் வாக்கியத்தின் இறுதி வார்த்தை “இருக்காது“ என்று மொழிபெயர்க்கப்பட்டாலே வாக்கியம் அர்த்தமுள்ளதாக இருக்கும். அதாவது ஜலப்பிரளயத்தினால் உலகை அழிக்கத் தீர்மானித்த தேவன் என் ஆவி மனிதனில் என்றென்றைக்கும் இருக்காது என்று கூறுகின்றார். மரணத்தின்போது ஜீவ ஆவி மனிதனை விட்டு செல்கின்றது. (லூக் 16.19-31) ஜலப்பிரளயத்தினால் மக்கள் மரிக்கப்போவதனால் அவர்களை உயிரோடே வைத்திருப்பதற்காகத் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஜீவஆவி எப்போதும் அவர்களில் இருக்காது என்றே தேவன் அறியத்தருகின்றார். “தேவன் தன் ஆவியை மனிதர்களிலிருந்து எடுப்பதன் மூலமாக அவர்களது வாழ்வு முடிவடைந்து விடுவது பற்றியே இவ்வாக்கியம் கூறுகிறது.

ஆதி 6.3 இன் ஆரம்பவாக்கியத்தின் இறுதி வார்த்தை “இருப்பதில்லை“ எனும் அர்த்தமுடையது. “என் ஆவி என்றென்றைக்கும் மனிதனில் இருப்பதில்லை“ எனக்கூறும் தேவன் அவன் இருக்கப்போவது நூற்றிருபது வருஷம் என்றார். அதாவது இன்னும் 120 வருடங்கள் மட்டுமே மனிதனுக்குத் தான் கொடுத்த ஜீவ ஆவி மனிதனில் இருக்கும் என்றே தேவன் அறிவித்துள்ளார். ஆதியாகமம் 6ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள் தேவன் ஜலப்பிரளயத்தினால் உலகை அழிக்கத் தீர்மானித்துள்ளதைப் பற்றியே அறியத்தருகின்றன. (ஆதி 6.1-8). அதேசமயம் தேவன் உலகை அழிக்கத் தீர்மானித்து 120 வருடங்களின் பின்பே உலகம் அழிந்தது. எனவே அவன் இருக்கப்போவது 120 வருடங்கள் தானே எனும் தேவ அறிவிப்பானது இன்னும் 120 வருடங்கள் மட்டுமே மனிதனை உயிரோடு வைத்திருக்கும் தேவனருளிய ஜீவஆவி அவனில் இருக்கும் என்பதை அறியத் தருகிறது.


அப்படியிருந்தும் சில கிறிஸ்தவர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக்கொண்டு “தேவன் மானிட ஆயுட் காலத்தை 120 வருடங்களாக வரையறை செய்துள்ளார். எனக் கருதுகின்றனர். அதாவது உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் 120 வருடங்கள் உயிர்வாழ்வான் என சிலர் போதிக்கின்றனர். ஆனால் ஆதியாகமப் புத்தகத்தில் இதற்குப் பின்னரும் பலர் 120 வருடங்களுக்கும் அதிகமாக வாழ்ந்துள்ளமையால் (ஆதி 11:10-26). ஆதி 6:3 இலுள்ள தேவ அறிவிப்பை மானிட ஆயுட் கால வரையறையாகக் கருதமுடியாது. அது தேவன் உலகை அழிப்பதாக அறிவித்ததற்கும் உலகை அழித்தற்கும் இடைப்பட்ட காலமாகும்(02). அந்த 120 வருடங்களே 1 பேதுரு 3.20 இல் பூர்வகாலத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த காலம்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கத் தீர்மானித்த தேவன், ஆதியாகமம் 6:3 இல் மனிதன் இருக்கப்போவது 120 வருடங்கள் என்பதனால் என் ஆவி என்றைக்கும் மனிதனில் இருப்பதில்லை எனக் கூறியுள்ளார்