- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 9 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா?


இக்கட்டுரை
  • கன்னிப் பிறப்பின் அவசியம்
  • கன்னிப்பிறப்பிற்கான சாத்தியபாடுகள்  
  • மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்ச அட்டவணைகளில் காணப்படும் முரண்பாட்டிற்கான விளக்கங்களையும் அலசுகிறது 




கிறிஸ்தவ மார்க்கத்தின் மூலஉபதேசங்களில் மாம்சமாகிய இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பும் ஒன்றாகும். ஆதிச் சபையினது விசுவாசப் பிரமாணங்கள் அனைத்திலும் இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்தவ சபைகளில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. சபைப் பிதாக்களும் (Church Fathers) தங்கள் எழுத்தாக்கங்களில் இவ்வுபதேசத்தின் சத்தியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வந்தனர். கன்னிப் பெண்ணான மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து, பாவமற்ற தெய்வீகக் குழந்தையாக இயேசு பிறந்தார் என்பதை மறுத்துரைக்கவோ, எதி்ர்த்துப் பேசவோ எவரும் துணியவில்லை. இவ்வுபதேசத்திற்கு முரணமாக பேசுவது , பரிசுத்தாவியானவருக்கு விரோதமான பாவமாகவும் கருதப்பட்டது. ஒருசில வேதப்புரட்டர்களும் இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமலிருந்தனர். 

இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் ப்றறிய தன்னுடைய 397 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலில் 43 பக்கங்களை 2ம் நூற்றாண்டில் இவ்வுதேசத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைப் பற்றி ஆராய்வதற்கு ஜே.ஜி. மெக்ஹேன் என்பார். இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கையாக கன்னிப் பிறப்பு உபதேசம் சகல சபைகளினாலும் கருதப்பட்டது.  என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. தத்துவங்கள், கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையினாலன்றி சரித்திர பூர்வமான பாரம்பரியங்களின் அடிப்படையில், எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.“ என அறியத் தந்துள்ளார். மற்றைய உபதேசங்களைப் போலல்லாது. கன்னிப்பிறப்பு உபதேசமானது அதிக சர்ச்சைகள் இன்றி கி.பி. 381 ல் நெறிப்படுத்தப்பட்ட நைசீய விசுவாசப் பிரமாணத்திலும் (Nicene Creed) கி.பி. 390 இன் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்திலும் (Apostle's Creed) கி.பி. 451 இல் சால்சிடோன் விசுவாசப் பிரமாணத்திலும் (Chacedon Creed) திருச்சபையின் பொதுவான நம்பிக்கைகளுள் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, இன்றுவரை திருச்சபையால் உபயோகிக்கப்பட்டும் வருகிறது. 1909 இற்கும் 1915 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படட மூலஉபதேசங்கள் (Fundamentals), “உண்மையான திருச்சபையின் நம்பிக்கைகளுள் கன்னிப்பிறப்பு உபதேசமும் இருக்க வேண்டும்“ என வலியுறுத்தியது. 

இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பானது, ஆதிகாலமுதலே திருச்சபையால் ஏகமானதாக எற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், அண்மைக்காலங்களில், இவ்வுபதேசத்தை முழுமையாகவும், சொல்லத்தத்தினடிப்படையிலும் (literally) நம்பாதவர்களாகவே அநேக இறையியலாளர்கள் (Theologians) இருக்கின்றனர். என்பதை அவர்களது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன. கன்னிப்பெண் கர்ப்பிணியாக இருக்க முடியாது என வாதிடும் அறிவியலாளர்கள் (Intellectuals) இயேசுகிறிஸ்துவின் பிறப்பிலுள்ள இயற்கைக்கும் அப்பாற்பட்ட “அற்புத தன்மையை“ ஏற்க மறுப்பவர்களாக,, இவ்வுபதேசம் கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனும் முடிவிற்கு வந்துவிட்டனர். சிலர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளையே இயேசு என எண்ணுகின்றனர். அநேக கிறிஸ்தவர்கள், உருவக மொழியின் (Figure of Speech) அடிப்படையிலேயே இவ்வுபதேசத்தை விளக்க வேண்டும் என வாதிடுகின்றனர். 

விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதனுடைய அறிவு அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளமையால். எதற்கும் காரணகாரியங்ளைக் கண்டறிந்து, தனது அறிவுக்கு ஏற்புடையதாய் இரு்பபவைகள் மட்டுமே உண்மை, மற்றையவை அனைத்து் கற்பனைக் கதைகள், மூடக்கொள்கைகள் எனும் முடிவுக்கு மனிதன் வந்துவிட்டமையே, கன்னிப்பிறப்பு உபதேசத்தை நம்பாமல் இருப்பதற்கான காரணமாகும். உண்மையில் இவவுதேசம் மானிட அறிவுக்கு முரணாகவும் எதிராகவுமே உள்ளது. காரண காரியங்களின் அடிப்படையிலோ அல்லது ஆராய்ச்சி பரிசோதனை என்பவைகளின் முடிவின்படியோ விளங்கிக்கொள்ளக்கூடிய உபதேசமல்ல. இது மாறாக, பொய்யுரையாத தேவனுடைய (தீத். 1:3) ஆவியினால் அருளப்பட்ட தேவவார்த்தைகளை (2 தீமோ. 3:16) விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சத்தியமாகும். எனினும் இவ்வுபதேசதம் புராணக்கதையல்ல. இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்புவது அறிவீனமான செயல் அல்ல. ஏனெனில் இது பின்தங்கிய மூடக்கொள்கைகளுடைய விஞ்ஞான அறிவற்ற காலத்து மனிதனுடைய கற்பனையல்ல. மாறாக மானிட சரித்தரத்தில், குறி்ப்பிட்ட காலத்தில் நடைபெற்ற மனிதனுடைய அறிவுக்கு எட்டாத உண்மைச் சம்பவமாகும். 

(அ) உபதேசத்தின் அர்த்தம்

கன்னிப்பிறப்பு உபதேசம் அநேகரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு போதனையாக, சில சமயங்களில் பிழையாக விளங்கிக் கொள்ளும் போதனையாக இருப்பதற்குக் காரணம், இதன் அர்த்தம் சரியான விதத்தில் வரையறுக்கப்படாமலிருப்பதேயாகும். கன்னிப்பிறப்பு எனும்போது, இயேசு பிறப்பு ஏதோ அசாதாரணமானதும், அசாத்தியமானதுமான முறையிலான பிறப்பு என அநேகர் எண்ணிக் குழம்புகின்றனர். உண்மையில், இயேசு பிறந்த விதம் அற்பதமானது என்பது இவ்வுபதேசத்தின் அர்த்தமல்ல. மறைந்த இறையிலாளர் ஜோன் மரே(John Murry) குறிப்பிட்டது போல, கன்னிப்பிறப்பொன்று கூறும்போது, மரியாளின் வயிற்றிலிருந்து குழந்தை வெளிவந்த விதம் அற்புதமானது என்றோ அல்லது மரியாளின் கருவறையில் குழந்தை வளர்ச்சியடைந்த முறை இயற்கைக்கும் அப்பாற்பட்டது, அசாதாரணமானது நாம் கருதுவதில்லை. ஏனெனில் மரியாள் குறிப்பிட்ட காலம்வரை குழந்தை இயேசுவை தன் வயிற்றில் சுமந்தாள். இயற்கையான முறையிலேயே அவளுக்கு பிரசவமும் ஏற்பட்டது.

கன்னிப்பிறப்பு உபதேசமானது, கன்னிப் பெண்ணான மரியாள் இயேசுவைக் கருத்தரித்த முறையே அசாதாரணமானது; இயற்கைக்கும் அப்பாற்பட்டது; அற்பதமானது என்று போதிக்கின்றது. ஜோன் மரே(John Murry) சுட்டிக்காட்டியது போல், “ஆண்விந்து மூலமாக மரியாள் கருத்தரிக்கவி்லை. மானிட தகப்பன் இன்றியே அவள் தாயானாள். இது சாதாரண இனவிருத்தி முறைக்கு முரணானது மட்டுமல்ல. சாத்தியமற்றதும் கூட. இதுவே அற்புதமான செயல். இதையே கன்னிப்பிறப்பு உபதேசம் (Doctrine Virgin Birth) வலியுறுத்துகிறது, மத்தேயு இதைப் பற்றி எழுதும்போது “இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.(1:18) என்று குறிப்பிட்டுள்ளார். 

பெண் கருத்தரிக்க வேண்டுமாயின், ஆணுடன் பாலியலுறவு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். இல்லாவிட்டால் இது நடைபெறாத காரியம் என்பதை அறிந்திருந்த மரியாள, தேவதூதனிடம்  “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே“ எனக் கேட்டதற்கு தூதன், பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்;... தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக் 1:30-37) என்றான். மானிட தகப்பினின்றியே “கன்னிப் பெண்ணான மரியாள் (லூக். 1:27) கர்ப்பவதியானதே இவ்வுபதேசம் கற்பிக்கும் சத்தியமாகும். எனினும் ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியதுபோல, “பரிசத்தவியினால் கர்ப்பந்தரித்த இயேசு பிறக்கையிலும், மரியாள் கன்னிப்பெண்ணாகவே இருந்தாள்“ என்பதையும் நாம் மறந்துவிடக்கூ்டாது. மத்தேயுவும் கூட “மரியாள்  தன் முதற்பேறான குமாரனைப் அவளுக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பு  அவளை அறியாதிருந்தான். (1:25) என இதை உறுதிப்படுத்துகிறார். (அறிதல் என்னும் பதத்திற்கு ஆதி 4:1 ஐ பார்க்கவும்)


(ஆ) உபதேசத்தின் ஆதாரம் 

கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்ட நாம், அதற்கான ஆதாரங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை மறுப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் தகுந்த பதில்களைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். மட்டுமல்ல இவ்வுபதேசத்தைப் பற்றி போதிய அறிவற்றவர்களுக்கும் ஏற்ற விளக்கங்களையும் கொடுக்க முடியும். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமான ஆதார விளக்கங்கள் எதற்கு, இயேசு கன்னி மரியாளிடத்தில் பிறந்தார் என்று அறிந்திருந்தால் போதும் சில சமயம் நாம் எண்ணலாம். ஆனால் பேதுருவின் கட்டளை இத்தகைய பரந்த அறிவு தேவையென்றே கூறுகிறது,  “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15) என நாம் அறிவுறுத்தப்பட்டுள்ளமையால் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பற்றி நம்மிடம் விசாரிப்பவர்கள் இச்சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் கொடுக்க நாம் தயாரியிருக்க வேண்டும். எனவே, இவ்வுபதேங்களுக்கான ஆதாரங்களை விபரமாக ஆராய்ந்து பார்ப்போம். (எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன என்பதை கருத்திற் கொண்டு வாசிக்கவும்)
(வளரும்)
பகுதி 2 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் எழுதிய கன்னிப்பிறப்பு கற்பனையா? - “சத்தியவசனம்” கார்த்திகை-மார்கழி 88, தை-மாசி 89 இதழிலிருந்து பெறப்பட்டதாகும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. // கன்னிப்பிறப்பு உபதேசம் அநேகரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு போதனையாக, சில சமயங்களில் பிழையாக விளங்கிக் கொள்ளும் போதனையாக இருப்பதற்குக் காரணம், இதன் அர்த்தம் சரியான விதத்தில் வரையறுக்கப்படாமலிருப்பதேயாகும்.//
    நண்பர் கொல்வின் அவர்களே, நம் இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பைப் பற்றி அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறிர்கள். அருமை நன்றி. பொதுவாக கிறிஸ்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்தவ மார்க்கத்தை சாராதவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அடிப்படையான வேத அறிவோ அல்லது அதை நண்பும் தேவையும் அவர்களுக்கு கிடையாது. அவர்களின் பார்வையில் இது ஒரு கற்பனைக் கதைகளின் விளைவினால் வந்த வரலாறாகவே இன்றுவரை நம்புகிறார்கள். அந்த வகையில் இவர்போன்றவர்களுக்கு இறை வேதமே பதில் கொடுக்கும். நன்றி

    ReplyDelete
  2. கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. ஆங்கிலத்தில் இவ்வுபதேசத்தைக் குழப்பக்கூடிய ஏராளமான ஆக்கங்கள் வெளிவருகின்றன. தமிழில் குறைவுதான் என்றாலும் சில துர்உபதேசக்குழுக்கள் இதுவும் கற்பனையே என போதிக்கின்றன. வேதாகம சத்தியத்தில் இவற்றை ஆராய வேண்டியது அவசியம். அதுவே இக்கட்டுரையின் நோக்கம். God Bless you

    ReplyDelete