- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 21 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா? (3)

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க பகுதி 1, பகுதி 2  அழுத்துங்கள்

மத்தேயுவும் லூக்காவும் முரண்பாடான சம்பவங்களை எழுதியுள்ளார்கள் என வாதிடுவது அர்த்தமற்றது. ஏனெனில் முரண்பாடுகளையல்ல, ஒன்றுமைகளையே நாம் அதிகளவில் இரண்டிலும் காணலாம். மறைந்த இறையியலாளர் ஜேம்ஸ் ஓர் என்பார் கன்னிப்பிறப்பைப் பற்றி தான் எழுதிய நூலில், இரண்டு குறிப்புகளுக்குமிடையேயுள்ள 12 ஒற்றுமைகளை கூட்டிக் காட்டியுள்ளார். 

(1) ஏரோது ராஜாவின் இறுதிநாட்களில் இயேசு பிறந்தார் மத். 2:1,13 , லூக் 1:5

(2) அவர் பரிசுத்த ஆவியானாலேயே கர்ப்பந்தரிக்கப்பட்டார். மத்.1:18,20 , லூக் 1:35

(3) அவருடைய தாயார் ஒரு கன்னிப் பெண்  மத்.1:18,25,23 லூக் 1:27,34

(4) யோசேப்புக்கு அவள் மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தாள் மத்.1:18 லூக் 1:27, 2:4

(5) யோசேப்பு தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவன் மத்.1:16,20 , லூக் 1:27, 2:4

(6) இயேசு பெத்தலகேமில் பிறந்தார். மத்.2:1 , லூக் 2:4-6

(7) தேவ அறிவுறுத்தலின்படி அவருக்கு இயேசு எனும் பெயர் கொடுக்கப்பட்டது. மத்.2:1 , லூக் 1:31

(8) அவர் இரட்சகர் என அழைக்கப்பட்டார். மத்.1:21 , லூக் 2:11

(9) மரியாள் கர்ப்பவதியாயிருந்தது யோசேப்புக்கு தெரிந்திருந்தது. மத்.1:18-20 , லூக் 2:4

(10) அவள் கர்ப்பவதி என்று அறிந்து அவளை யோசேப்பு ஏற்றுக் கொண்டான். மத். 1:20,24,25 , லூக் 2:4

(11) தேவதூதன் மூலம் தகவல்கள் கொடுக்கப்பட்டன. மத். 1:20 , லூக் 1 :27, 28 

(12) இயேசுவின் பிறப்பின் பின் யேசேப்பும் மரியாளும் நாசரேத்தில் குடியிருந்தனர். -மத். 2:23, லூக் 2:39. 

உண்மையில் இத்தனை ஒற்றுமைகளைக் கொண்ட இரு குறிப்புகளும் முரண்பாடுடையது, நம்பகமற்றது என வாதிடுவது நியாயமற்றதும் அர்த்தமற்றதும், அறிவீனமானதுமான செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. 

மத்தேயுவினதும், லூக்காவினதும் ஆதாரக் குறிப்புகளிடையே எவ்விதமான முரண்பாடும் இல்லை என்பது உண்மையினும் இருவர் குறிப்பிடும் வம்சவராற்று அட்டவணைகளையும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், ஒருசில வித்தியாசங்களையும் அவதானிக்கலாம் என்பதும் உண்மையே. எனினும் ஒரு வம்சவரலாறு நம்பகமற்றது, பிழையானது எனும் முடிவுக்கு வ்நதுவிடும் அளவுக்கு மற்றறையது வேறுபட்டுவிடவில்லை. பொதுவான ஒற்றுமையே நாம் இரண்டிலும் காணலாம். மத்தேயுவின் வரலாற்று அட்டவணையில் பெண்களின் பெயர்களையும் வரலாறானது பதினான்கு தலைமுறைகளைக் கொண்ட மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். ஆனால் லூக்காவினது, வழமையான வம்சவரலாற்று அட்டவணையை போலல்லாது, பின்நோக்கிச் செல்கின்றது. ஜேம்ஸ் ஓர் குறிப்பட்டது போல “இயேசுவை தாவீதின் ராஜ பரம்பரையில் வந்தவராக காட்டுவதே மத்தேயுவின் நோக்கமாயிருந்தது. (1:1) லூக்காவோ தாவீதுக்கும் அப்பால் சென்று, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை அறியத் தருகிறார். (3:38) எனினும் அவ்வம்சவரலாற்று அட்டவணைகள் மத்தேயுவினாலும், லூக்காவினாலும் உருவாக்கப்ட்டவை அல்ல. அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த வரலாற்று அட்டவணைகளே இருவராலும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்பது தேவ ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். இவை பொய்த் தகவல்களைத் தருகின்றன என்பதற்கான சரித்திரபூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. 

மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்சவரலாற்று அட்டவணைகள் நம்பகமானவை. ஆதாரபூர்வமான என்பது உண்மையோயினும் இரண்டையும் கருத்தாய் ஆராய்ந்து பார்க்கும்போது ஒருசில வித்தியாசங்களை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக, தாவீத்துக்குபின் வம்சவரலாற்றில் பாரியதோர் வித்தியாசம் காணப்படுகின்றது. தாவீதுக்குப் பின் வேறுபட்ட இரண்டு வம்சவரலாறுகளை நாம் அவதானி்க்கலாம். மத்தேயுவின் வம்சவரலாறு தாவீதின் குமாரனான சாலமோனுடைய பரம்பரையை பற்றி குறிப்பிடுகையில் (1:6) லூக்காவினுடையது, தாவீதின் மற்றுமொரு குமாரனான நாத்தானுடைய பரம்பரையை பற்றி அறியத் தருகிறது. (3:31) தாவீதுக்குப் பின் ஒருசில இடங்களில் மட்டுமே வம்சவரலாறுகள் ஒன்றையொன்று சந்திப்பதாயிலுள்ளன. மற்ற இடங்களில் எவ்வித தொடர்பும் இல்லாமலிருப்பது, இவை எந்த அளவுக்கு நமபகமானது என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாயிலுள்ளது என அநேகர் வாதிடுகின்றனர். எனினும் ஜேம்ஸ்ஓர் இதைப் பற்றி எழுதும்போது, இதில் முரண்பாட்டையல்ல, எவ்வாறு இதை விளக்குவது என்பதே நாம் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். எனினும் மத்தேயு குறிப்பிடுவது யோசேப்பின் வம்சவரலாறு, லூக்கா குறிப்பிடுவது மரியாளின் வம்சவரலாறு எனும் முடிவுககு வருவதில் எவ்வித தவறுமில்லை. காரணம் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உளளன“ என்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயு யோசேப்பைப் பற்றியும் லூக்கா மரியாளைப் பற்றியும் எழுதியுள்ளனர் என்பதும் இதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. 

மத்தேயு சாலமோனின் பரம்பரையில் வந்த யேசேப்பின் வம்ச வரலாற்றையும், லூக்கா நாத்தானின் பரம்பரையில் வந்த மரியாளின் வம்ச வரலாற்றையும் குறிப்பிபட்டாலும் இது இரணடு வித்தியாசமான பரம்பரை எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. காரணம் சாலமோனும் நாத்தானும் பத்தேசபாளிடத்தில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகள் எனவே யோசேப்பும் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும், மத்தேயும் லூக்காவும் குறிப்பிட்டடுள்ள வம்சவரலாறுகளில் உள்ள முக்கியமான ஒரு வித்தியாசமும் இதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாயுள்ளது. எனினும் மேலோட்டமாக வாசிக்கையில் நமக்கு குழப்பதையே இது ஏற்படுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. யோசேப்பு ஏலியின் குமாரன் (3:23) என லூக்கா கூறுகின்றார். ஆனால் மத்தேயுவோ அவர் யாக்கோபின் குமாரன் என குறிப்பிட்டுள்ளார். (1:16) இதனால் யோசேப்புக்கு இரண்டு தகப்பன்கள் இருந்தார்களா எனும் கேள்வி நம்முள்ளத்தில் எழுந்து, எதை நம்புவது எனும் குழப்பத்தை ஏற்படுததி விடுகிறது. எனினும் ஹென்ரி ஜே. கைப்பரினால் தொகுக்கப்பட்ட, அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசங்கங்களுள், ஜோன் பொலின் கர்க் என்பாருடைய கன்னிப் பிறப்பைப் பற்றிய பிரசங்கம் இச்சந்தேகததை நீக்கி, “யோசேப்பின் தகப்பன் யாக்கோபு. ஏலி அவனுடைய மாமனார் அதாவது மரியாளின் தகப்பன்“ என அறியத் தந்துள்ளது. மத்தேயுவைப் போல (1:6-16) லூக்கா யோசேப்பின் பரம்பரையைப் பற்றி எழுதாமல், மரியாளுடைய வம்ச வரலாற்றை அவளுடைய தகப்பனான ஏலியில் ஆரம்பித்து நாத்தானினூடாக தாவீதுடன் தொடர்புபடுத்தியுள்ளார். (3:23, 31) வம்ச வரலாறு வித்தியாசமாயுள்ளதற்கு இதுவே காரணமாகும். யோசேப்பைப் போலவே மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். 

மரியாள் தாவீதினுடைய பரம்பரையில் வந்தவள் என்பதை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்னவென நாம் வினவலாம். உண்மையில் மரியாளின் மூலமாகவவே இயேசு தாவீதின் சிங்காசனத்திற்கு உரியவரானார். அவர் யோசேப்பின் குமாரனாயிருந்திருந்தால் தாவீதினுடைய சிங்காசனததிற்கு உரிமை பாராட்டியிருக்க முடியாது, கிறிஸ்தவ மார்க்கத்தின் நம்பகமான தன்மைக்கு பல ஆதாரங்களை திரட்டியுள்ள ஜோன் மெக்டோவெல் இதைப் பற்றி விளக்கும்போது “தாவீதின் வம்சத்தில் வந்த எகொனியாவின் பரம்பரையைச் சேர்ந்தவனாக யோசேப்பு இருந்தமையால், இயேசு இவனது மகனாக இருந்திருந்தால் தாவீதின் சிங்காகனத்திற்கு உரியவராக இருந்திருக்க மாட்டார். காரணம் எரேமியாவின் தீர்க்கத்தரிசனப் புத்தகத்தில், இவனுடைய வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். (22:28-30) எகொனியா என மத்தேயு 1:11 இல் குறிப்பிடப்பட்டவனும் கோனியா என எரேமியா 22:28 இல் குறிப்பிடப்பட்டவனும் ஒருவனே. இவனுடைய பரம்பரையில் வந்தவனே யோசேப்பு (மத். 1:11-16) என சுட்டிக் காட்டியுள்ளார். ஆர்.ஐ. ஹம்பர்ட் எனபார், “யோசேப்பின் பிள்ளைகள் மீதும்  இச்சாபம் இருந்தது.  இயேசு யோசேப்புக்கு பிறந்திருந்தால் அவரும் இச்சாபத்திற்கு உட்பட்டிருப்பார்“ என தெரிவித்துள்ளார். 

யோசேப்பின் பரம்பரையின் மீதிருந்த தேவசாபத்தை கருத்திற் கொள்கையில், இயேசு யோசேப்பின் மகனாக இருந்திருந்தால், காபிரியேல் எனும் தூதன் மரியாளிடம் கூறியது போல “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது“ லூக்கா 1:32-33) என கூறியிருக்க முடியாது. எனவே, ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக் காட்டியதுபோல “மரியாளின் பரம்பரை சபிக்கப்பட்ட எகொனியாவினுடைய வம்சமாய் இல்லாமலிருப்பதனாலும்,“ ஜேம்ஸ் ஓர் தெரிவித்ததுபோல “மரியாளும் தாவீதின் வம்சத்தில் வந்தவள்“ என்பதனாலும்ஈ ஜோன் பொவென்கர்க் விளக்கியது போல, “மரியாளின் தகப்பனான ஏலியினுடைய வம்சம் நாத்தான் மூலமாக தாவீதுடன் சேர்வதனாலும், “மரியாளின் மூலமாகவே இயேசு தாவீதின் குமாரனாக, தாவீதின் அரியணைக்குரிய தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை மட்டுமல்ல மத்தேயுவும் லூக்காவும் இயேசு யோசேப்பின் குமாரன் அல்ல என்பதை சுட்டிக் காட்டத் தவறவில்லை. (மத். 1:16, 20, 25 லூக்கா 3:23) என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் இவையனைத்தும் கன்னிப்பிறப்பிற்கான ஆதாரங்களாக உள்ளன. 

இயேசு யோசேப்பின் பிள்ளை அல்ல; அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்த தேவனுடைய குமாரன் என மத்தேயுவும் லூக்காவும் தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளபோதும், மத். 13:55 இல், இயேசு “தச்சனுடைய குமாரன்“ என்றும் யோவான் 6:42 இலும் 1:45 இலும் “யோசேப்பின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இயேசு யோசேப்பின் குமாரன் என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா இவை என வாதிடுவோரும் நம் மத்தியில் உள்ளனர். எனினும் இவ்வசனங்களை ஆராய்ந்து பார்க்கும்போது இவை மக்களுடைய கருத்தேயின்றி, யோசேப்பின் குமாரன் இயேசு என்பதற்கான சான்றுகள் அல்ல என்பதை அறிந்திடலாம். அதாவது மக்கள் இயேசுவைப் பற்றி கருதியதையே வேதாகம நூலாசிரியர்கள் இவ்விடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இயேசு வளர்ந்த ஊரைச் சேர்ந்தவர்களே அவரை “தச்சனுடைய குமாரன் அல்லவா“ என கூறியதாக மத்தேயு 13:54-55 இல் காணலாம். அதேபோல் யோவான் 6:42 இலும் இயேசுவின் பிரச்ஙகத்தைக் கேட்டவர்களே “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா... அப்படியிருக்க நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேனென்று இவன் எப்படி சொல்கிறான். யோவான் 1:45 இல் பிலிப்பே இயேசுவை யோசேப்பின் குமாரன் என கூறுகின்றான். இதற்குக் காரணம் மரியாள் யோசேப்பின் சட்டரீதியான மனைவியாயிருந்தமையினால் மரியாளுடைய குமாரனாகிய இயேசுவின் சட்ட ரீதியான தகப்பனாக யோசேப்பு கருதப்பட்டான். இதனாலேயே “அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். என 3:23 இல் லூக்கா குறிப்பிட்டுள்ளார். 


“கர்ப்பவதியாயிருந்த மரியாளை தன் மனைவியாக யோசேப்பு ஏற்றுக் கொண்டமையினாலேயே இயேசுவை அவனுடைய குமாரனாக மக்கள் கருதினார்கள். சமுதாயததின் பார்வையில் அவர் யோசேப்பின் குமாரனாகவே இருந்தார்.“ என ஹம்பர்ட் எனபார் அறியத் தந்துள்ளார். “இயேசு சிறுவனாக இருந்தபோது யோசேப்பை அப்பா என்றே அழைத்திருப்பார்“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனததிற்கு கொண்டு வந்துள்ளார். இதனடிப்படையிலேயே யோசேப்பையும் மரியாளையும் இயேசுவின் தாய் தகப்பன்மார் என லூக்கா 2:27 இலும் 2:41 இலும் எழுதியுள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் 2:33 இலும் 2:43 இலும் “யோசேப்பும் அவருடைய தாயாரும்“ என  இருவரையும் வேறுபடுத்தி, இயேசு யோசேப்பின் குமாரனல்ல மரியாளின் குமாரன் சுட்டிக் காட்ட லூக்கா தவறவில்லை என்பதையும் நாம் கருத்திற் கொள்ள மறந்துவிடக் கூடாது, மாற்கு மக்களின் அபிப்பிராயத்தை எழுதும்போது மிகவும் கருத்துடன் யோசேப்பின் பெயரைக் குறிப்பிடாது விட்டுள்ளார். பன்னிரண்டு வயதுடையவராயிருக்கும்போதேஈ இயேசு எருசலேம் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்ததிருக்கவும் அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்கள் வினவவும் கண்ட யேசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:46-48) அச்சமயத்தில் மரியாள் இயேசுவிடம் “ உன் தகப்பனும் நானும் உன்னைத் தேடினோமே“ என்று கேட்டதற்கு (2:48) “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா“ என்று யோசேப்பு தன்னுடைய தகப்பன் அல்ல என்பதை வெளிப்படுத்தியதோடு தேவனே தன்னுடைய தகப்பன் என்று பலமுறை தெரிவித்துள்ளதையும் நற்செய்தி நூல்களில் நாம் காணலாம். 

மத்தேயுவும் லூக்காவும், கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களைத் தநதாலும் 52 அதிகாரங்களைக் கொண்ட (இரண்டும் சேர்ந்து) இவர்களுடைய நூலில் 2 அதிகாரங்கள் மட்டுமே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று புதிய ஏற்பாட்டின் மற்றைய பகுதிகள் எதுவுமே இது பற்றி கூறாதிருப்பதால் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ள போதிய சான்றுகள் இல்லையென்றும் சிலர் வாதிடுகின்றனர. மற்றையவர்கள் இயேசுவின் பிறப்பை பற்றிய உண்மையை அறியாதிருந்தமையினாலேயே இதைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. இல்லையென்றால் எழுதியிருப்பார்கள் என்றும் தர்கிக்கின்றனர். ஆனால் மற்றைய நூலாசிரியர்கள் கன்னிப் பிறப்பைப் பற்றி அறியாதிருந்ததினால் அல்ல மாறாக அவர்களுடைய நோக்கத்திற்கு இது அவசியமாய் இராதமையினாலும், மத்தேயுவும் லூக்காவும் போதியளவு எழுதியிருந்தமையினாலும் அக்கால மக்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தமையினாலுமே, தங்களுடைய நூல்களில் நேரடியாக இதைப் பற்றி எழுதவில்லை. எனினும் மறைமுகமாக பல இடங்களில் இயேசுவின் பூலோகப் பிறப்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மட்டுமல்ல இறையியில் அகராதி அறியத்தருவது போல், “மரியாளுடைய அந்தரக வாழ்வு அம்பலத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஆதிச்சபையில் கன்னி்ப் பிறப்பைப் பற்றி எவரும் அதிகமாக கதைக்கவில்லை“ என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மத்தேயுவினதும் லூக்காவினதும் குறிப்புகள், இவ்வுபதேசத்தை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. 
(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment