- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 2 October 2011

தேவனுடைய ஒரே பேறான குமாரன் (யோவான் 3:16)




இயேசு கிறிஸ்து “தேவனுடைய ஒரேபேறான குமாரன்“ (45) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும், அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாக யெகோவா சாட்சிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது. எபிரேயர் 11:19 ஈசாக்கு ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் எனறு குறிப்பிடப்பட்டுள்ளமையால், ஆபிரகாம் ஈசாக்கை சரீரப்பிரகாரமாய் பெற்றது போலவே, யெகோவா தேவன் பெற்ற பிள்ளையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். என்றும், இதனாலேயே அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்று குறிப்பி்டப்பட்டுள்ளார்.“ என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (46) இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதனால் அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர், இதனால் அவரல் தேவனாக இருக்க முடியாது என்பதே இவர்களது தர்க்கமாகும். (47)

ஈசாக்கை ஆபிரகாம் பெற்றதுபோலவே தேவன் இயேசு கிறிஸ்துவைப் பெற்றார் என்றும் ஈசாக்கு ஆபிரகாமுக்கு குமாரனாய் இருப்பதைப் போலவே இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு குமாரனாய் இருக்கின்றார். என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது தேவனையே நிந்திக்கின்ற கூற்றுக்களாகும். இது இயேசு கிறிஸ்துவுக்கு “ஒரு பரலோகத் தகப்பன் இருப்பது போல பரலோகத்தாயும் இருக்கின்றாள் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. (48) இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் நிராகரித்து, யெகோவா தேவனைக் கனப்படுத்துவதாக நினைக்கும் யெகோவாவின் சாட்சிகள் இத்தகைய விளக்கங்களினால் யெகோவா தேவனையே நிந்திக்கிறவர்களாக இருக்கின்றனர். மேலும், “ஒரேபேறான குமாரன்“ எனும் சொற்பிரயோகத்தை பெற்றெடுத்த ஒரேயொரு பிள்ளை“ என்று யெகோவாவின் சாட்சிகள் விளக்குவது தவறாகும். ஏனென்றால், ஈசாக்கு ஆபிரகாமின் “ஒரேபேறான குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் அவன் ஆபிரகாமின் ஒரேயொரு பிள்ளையாக இருக்கவில்லை. ஆபிரகாமுக்கு வெறு பிள்ளைகளும் இருந்தார்கள். (ஆதி. 16:11, 25:1-6) ஆபிரகாமுடைய பிள்ளைகளில் ஈசாக்கு சிறப்பானவனாகவும், ஒப்பற்றவனாகவும் இருந்தமையினாலலேயே எபிரேயர் நிருபத்தில் அவன் ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் என்று குறிப்பிடப்டப்டிருப்பதற்கான காரணமாகும்.

வேதாகமத்தில் “ஒரேபேறான குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்தில்  இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்படவில்லை (49) “ஒரேபேறான“ எனும் வார்த்தை இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தையும் ஒப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. (50) அதாவது இயேசு கிறிஸ்துவைப் போல தேவனுக்கு வேறொருவரும் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதேபோல “குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்துடன் மட்டும் வேதாமக்கால மக்களால் உபயோகிக்கப்படவில்லை. உண்மையில் , இதை அறியாதவர்களே, இயேசு கிறிஸ்து தேவன் பெற்ற பி்ள்ளை என்றும், இதனால் , அவர் தேவனைவிட தாழ்வானவர் என்றும் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். (51)

வேதாகமத்தில் ஒருவருக்கு பிறக்காதவர்களும் அவருடைய பிள்ளையாகக் குறிப்பிடப்படடடிருப்பதை நாம் அவதானிக்கலாம். இதனால்தான் சாமுவேலை ஏலி “என் மகனே“ என்று கூப்பிட்டார். (1 சாமு 3:16) சவுல் தாவீதைத் தன் குமாரன் என்று அழைத்துள்ளார். (1 சாமு 26:17) (52) அதேபோல, ஆசிரியர் தன் மாணவரை “என் மகனே“ என அழைப்பதை நீதிமொழிகளில் நாம் அவதானிக்கலாம். (நீதி. 7:1) எனவே வேதாகமத்தில் “குமாரன்“ “மகன்“ எனும் பதங்கள் ஒருவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே உபயோகிக்க்பபட்டுள்ளது என்று கூறமுடியாது. இயேசு கிறிஸ்துவும் “தாவீதின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் தாவீதுக்குப் பிறந்தவர் என்பது இதனது அர்த்தமல்ல. (மத். 1:1)(53) வேதாகமத்திலுள்ள வம்சவரலாறு அட்டவணைகளிலும், இடைக்கிடையே சில தலைமுறைகள் விடப்பட்டுள்ள போதிலும், ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (54) மேலும், தீரக்ககதரிசியின் சீடர்கள் “தீர்க்கதரிசியின் புத்திரர்“ என்றும் (1 ராஜா 20:35) பாடகர் குழுவினர் “பாடகரின் புத்திரர்“ என்றும் (நெகே. 12:28) அழைக்கப்பட்டுள்ளனர். வேதாகமம் குமாரன் எனும் பதத்தை உருவகமாக உபயோகித்துள்ளதையும் நாம் அவதானிக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றினது தன்மை அல்லது குணத்தைக் குறிப்பிடுவதற்கு மகன் என்னும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, தீமையான மனிதன் “நியாயக்கேட்டின் மகன்“ (சங். 89:22) என்று குறிப்பிடப்பட்டுள்ளமயால், இவன் மனிதனுக்கல்ல. நியாயக்கேட்டுக்கு பிறந்தவன் என்று கூறமுடியாது. மேலும். யாக்கோபையும் யோவானையும் இயேசு கிறிஸ்து இடியின் புத்திரர் என்று அழைத்தபோது, இவர்களிருவரும் இடிக்குப் பிறந்தவர்கள் எனும் அர்தத்தில் அல்ல. மாறாக இவர்களது குணம் இடியின் தன்மையைக் கொண்டிருந்ததையே சுட்டிக் காட்டியுள்ளார். (மாற். 3;17) அதேபோல, பர்னபா “ஆறுதலின் மகன்“ என்று அழைக்கப்பட்டுள்ளமை (அப். 4:36) அவன் ஆறுதலுக்குப் பிறந்தவன் என்பதனால் அல்ல. மாறாக, அவன் மற்றவர்களுக்கு ஆறுதலளிப்பவனாக இருந்தமையினாலேயாகும். இதேவிதமாகவே இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று வேத்தில் குறிப்பிட்டிப்பட்டிருப்பற்குக் காரணம் அவர் தேவனுக்குப் பிறந்தவர் எனும் அர்த்தத்தில் அல்ல. மாறாக அவர் தேவத்தன்மையுடையவர் என்பதனாலேயாகும். 


கிரேக்க மொழியில் குமாரன் என்பதைக் குறிக்க பொதுவாக இண்டு வார்த்தைகள் உள்ளன. இவற்றில் ஒன்று சரீரப்பிரகாரமாகப் பிறக்கும் மகனை மட்டுமே குறிக்கும். ஆனால் மற்ற பதம், சரீரப் பிரகாரமான மகனை மட்டுமல்ல மற்றவர்களையும் மகனாக அழைக்க உபயோகிக்கப்படும் (55) புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று குறி்ப்பிடப்படும் இடங்களில். சரீரப் பிரகாரமான மகனை மட்டும் குறிக்கும் கிரேக்கப் பதம் அல்ல, மாறாக உருவகமாகவும் உபயோகிக்கப்படும் பதமே உள்ளது. இதிலிருந்து இயேசு கிறிஸ்து தேவத்தன்மையுடையவர் என்பதைக் குறிப்பிடவே அவர் தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதன் மூலம் “இயேசு கிறிஸ்துவின் வழமையான தேவத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (56) இயேசு கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானர் என்பதை இது எவ்விதத்திலும் காண்பிக்கவில்லை. அவர் தேவனுக்கு சமமானவராக, தேவத் தன்மையுடையவராக இருப்பதையே இவ்விவரணம் அறியத் தருகிறது. (57)

இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரனாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல (யோவான் 10:36) மற்றவர்கள் தம்மை இவ்விதமாக அழைத்தபோது அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. (மத். 26:63-64). தம்மைத் தேவனுடைய குமாரனாகவும் தேவனைத் தம்முடைய பிதாவாகவும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட போது அவர் தம்மைத் தேவன் என்று கூறுகிறார் என்றே யூதர்கள் விளங்கிக் கொண்டனர். “யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்று இயேசு கிறிஸ்துவின் மீது குற்றம் சாட்டினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து நேரடியாக, தாம் தேவன் என்று அவர்களிடம் கூறியிருக்கவில்லை. மாறாக, தம்மைத் தேவனுடைய குமாரன் என்றே அவர்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் யூதர்கள் இதன் மூலம் அவர் தம்மைத் தேவனாகக் காண்பிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். இதனால் தான் இயேசு கிறிஸ்து “நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே, தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?“ எனறு கேட்டார். (யோவான் 10:33-36) தேவனுடைய குமாரன் எனும் வார்த்தையின் மூலம்,  தம்மை தேவன் என்று கூறியமை, யூதர்களுக்கு தேவதூஷணமாக இருந்தமையினால் அதற்காக நியாய்பபிரமாணச் சட்டத்தின்படின் கல்லெறிந்து கொல்வதன மூலமாக அவருக்கு மரண தண்டனை கொடுக்க அவர்கள் முற்படடனர். (58தேவனுடைய குமாரன்“ என்னும் விபரணம் இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது. (59) 

Footnote and References 
(45) யோவானுடைய எழுத்துக்களில் ஐந்து தடவைகள் “மொனொஜெஸ்“ (monogenes) எனும் கிரேக்கப் பதம் இயேசு கிறிஸ்துவிற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. இது “ஒரேபேறான“ குமாரன் அல்லது “ஒரேயொரு குமாரன்“ என்று அர்த்தந்தரும் விதத்தில் ஆங்கில வேதாகமஙகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (யோவான் 1:14, 1:18, 3:18, 1 யோவான் 4:9) 

(46) Anonymous, Should You Believe in the Trinity, p.16

(47) Ibid, p16.

(48) R.M. Bowman, Why you Should You Believe in the Trinity?, p. 83

(49) L. Morris, Jesus is the Christ: Studies in the Theology of John, p. 92

(50) B.B. Warfield, The Persons and Work of Christ  p.56

(51) புராணங்களை அடிப்படையாகக் கொண்ட மதங்களில் இருக்கும் தகப்பன் பிள்ளை உறவு முறையை வேதாகமத்துக்குள் கொண்டு வருவது தவறாகும். 

(52) ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தான் அவனுடைய அடியானும் அவனுடைய குமாரனுமாயிருப்பதாக அறிவித்தான் (2 ராஜா  16:7)

(53) மத்தேயுவினுடைய சுவிசேஷத்தில் 9 தடவைகள் இயேசு கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மாற்குவிலும் லூக்காவிலும் மூன்று தடவைகளும் புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளில் மூன்று தடவைகளும் இப்பெயர் உள்ளது. “இப்பெயர் இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதை மட்டுமல்ல. அவர் மேசியா என்பதையும் சுட்டிக் காட்டும் பெயராய் இருந்தது. (G. Dalman, The Words of Jesus, pp 319-324) மக்கள் இப்பெயரில் அவரை அழைத்தபோது, மேசியாவாகச் செயற்படும்படியே அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது “மேசிய எதிர்பாரப்புடனேயே“ மக்கள் இப்பெயரை அக்காலத்தில் உபயோகித்துள்னர். (L. Morris, New Testament Theology p 126)

(54) உதாரணத்திற்கு மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் உள்ள வம்சவரலாறு அட்டவணை 14 தலைமுறைகள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு பிரிவிலும் 14 தலைமுறைகளைவிட அதிகத் தலைமுறைகள் இருந்துள்ளதை அறிந்திடலாம்.  தலைமுறைகள் விடுப்பட்டாலும் ஒருவன் இன்னுமொருவனைப் பெற்றான் என்றே மத்தேயு குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் யூதர்களுடைய மொழி வழக்கில் தகப்பன் பிள்ளை உறவுக்கு மட்டுமே வார்த்தைகள் இருப்பதேயாகும். தமிழில் இருப்பது போல பாட்டன், பூட்டன். பேரன், கொள்ளுப்பேரன் என்ற உறவுமுறைகளுக்கெல்லாம் தனியான வார்த்தைகள் அவர்களது மொழிவழக்கில் இருக்கவில்லை. “அவர்கள் அனைவருமே தகப்பன் மகன் உறவு முறையாலேயே குறிக்கப்பட்டனர். எனவே வம்சவரலாறு அட்டவணையில் பல தலைமுறைகள் விடுப்பட்டாலும், ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்று எழுதுவது அவர்களின் மொழிவழக்கில் தவறானதாக இருக்கவில்லை. (L. Morris, Mattew : The Pillar New Testament Commentary, p 22)

(55) இவற்றில் டெக்னொன்“ (teknon) எனும் பதம் சரீரப்பிரகாரமாக மகனை மட்டும் குறிக்கையில் “ஹூய்யெஸ்(huios) எனும் பதம் மகனாக வரும் ஏனைய உறவுகளையும் குறிக்கும். 

(56) J. McDowell, Jesus : A Biblical Defence of His Deity, p 75

(57) L. Boettner, Studies in Thelogy, pp 152-153

(58) லேவியராகமம் 24:16 இல இதைப்பற்றிய கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. 

(59) B.B. Warfield, The Person and Work of Christ p. 77


(இவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் எழுதிய யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)









        
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment