- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 18 April 2013

பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; (மத். 11:12)

தேவனுடைய ராட்சியத்தைப் பற்றி இயேசுகிறிஸ்து அறிவித்தவைகளில் நம்மால் புரிந்துகொள்வதற்கு சிரமமாயிருக்கும் விடயங்களில் ஒன்று அவ்விராட்சியம் “பலவந்தம் பண்ணப்படுகின்றது.” என்று அவர் குறிப்பிட்டமையாகும். இதைப் பற்றி இயேசு மத்தேயு 11:12 இல் பின்வருமாறு கூறியுள்ளார். “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.“ இயேசு கிறிஸ்து இக்கூற்றின் மூலம் என்ன சொல்ல முற்படுகின்றார் என்பதை அறிந்து கொள்வதில் நமக்குள்ள சிரமத்தை விட, இக்கூற்றை எவ்விதம் மொழிபெயர்ப்பது என்பதில் உள்ள சிக்கல்கள் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம், மூலமொழியில் இக்கூற்றிலுள்ள இருசொற்பிரயோகங்களை. கிரேக்க மொழி இலக்கணத்தின்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதில் வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருப்பதேயாகும்.

கிரேக்க மொழி இலக்கணத்தின் இயேசுவின் கூற்றில் “பலவந்தம் பண்ணப்படுகின்றது” என்பதில் பயஸ்டாய் (biazetai) எனும் வினைச்சொல், “மிடில்வொய்ஸ்சில்” அல்லது செயற்பாட்டு வினையில் மொழிபெயர்க்கப்படலாம். இதன்படி இச்சொற்பிரயோகம் மிடில்வொய்சில் “வல்லமையோடு வருகின்றது” (1) என்றும் செயற்பாட்டுவினையில், “வன்முறைக்கு உள்ளாகின்றது(2) என்றும் மொழிபெயர்க்கப்படலாம். அதேபோல, “பலந்தம் பண்ணுகின்றவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்” எனும் வாக்கியத்தில் “பலவந்தம் பண்ணுகிறவர்கள்“ எனும் பெயர்ச்சொல்லானது, நேரிடையாகவும் எதிரிடையாகவும்,  உபயோகிக்கப்படலாம். இதன்படி “வல்லமையான மக்கள் அதைப் பிடித்துக் கொள்வார்கள்” என்றும் அல்லது எதிரிடையான அர்த்தத்தில் “வன்முறையாளர்கள் அதை சூறையாடுவார்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம்(3) இவ்வித்தியாசனமான மொழிபெயர்ப்புகளை அடிப்படையாய்க் கொண்டு இயேசுவினுடைய கூற்றின் அர்த்தமும் வேறுபடுகின்றது.

இயேசுவின் கூற்றில் “பலவந்தம் பண்ணப்படுகின்றது” எனும் சொற்பிரயோகத்தை “வல்லமையோடு வருகின்றது” எனும் அர்த்தத்தில் வியாக்கியானம் செய்பவர்கள் இயேசுவின் ஊழியத்தில் தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வந்ததைப் பற்றிய விபரணமாக இவ்வாக்கியத்தைக் கருதுகின்றனர்(4) இவ்வாக்கியத்திலுள்ள வினைச்சொல்லை செயற்பாட்டு வினையாக எடுத்து இயேசுவின் சொற்பிரயோகத்தை “வன்முறைக்கு உள்ளாகின்றது” என விளக்குபவர்கள், தேவராட்சியத்திற்கு ஏற்படும் எதிர்ப்புகளையும் உபத்திரங்களையும் பற்றிய விவரணமாக இதைக் கருதுகின்றனர்(5) எனினும் “புதிய ஏற்பாட்டில், இவ்வசனத்திலும் லூக்கா 16:16 லும் மட்டும் இடம் பெறும் “பயஸீட்டாய்” (biazetai) எனும் கிரேக்க வினைச்சொல் அக்கால கிரேக்க இலக்கியங்களில் மிடில்வொய்சிலேயே பொதுவாக உபயோகிக்கப்பட்டுள்ளது(6) எனவே, தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வந்ததைப் பற்றிய விவரணமாகவே இயேசுவின கூற்று உள்ளது. இயேசுவினுடைய ஊழியத்தில் “தேவராட்சியம் வல்லமையோடு முன்னேறிச் செல்கின்றது” என்பதே இயேசுவினுடைய கூற்றின் அர்த்தமாய் உள்ளது“(7)

இயேசுவின் கூற்றிலுள்ள சிக்கலான இரண்டாவது சொற்பிரயோகம், அதாவது, “பலந்தம் பண்ணுகின்றவர்கள் அதைப் பிடித்துக் கொள்வார்கள்” என்பதில் பலந்தம் பண்ணுகின்றவர்கள் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள (biastes) எனும் பெயர்ச்சொல்லை நேரிடையான அர்த்தத்தில் விளக்கும் வேத ஆராய்ச்சியாளர்கள் “தைரியத்துடனும் திடற்சங்கற்பத்துடனும் தேவராட்சியத்தைத் தமதாக்கிக் கொள்ளும் வலிமை பொருந்தியவர்களையே இயேசு பலவந்தம் பண்ணுகின்றவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்” என விளக்குகின்றனர். ஆனால், “பயஸ்டெஸ்” (biastes) எனும் பதம் மூலமொழியில் எப்போதும் எதிரிடையான அர்த்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது.(8) எனவே, இயேசுவின் கூற்றிலும் இதை எதிரிடையான அர்த்தத்தில், “வன்முறையாளர்கள் அதை சூறையாடுவார்கள்“ என்றே மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால், இப்பதத்தை வழமைக்கு மாறான அர்த்தத்தில் இயேசு உபயோகித்திருந்தால் அவர் சொல்ல முற்படுவதை நாம் சரியாக விளங்கிக் கொள்வதற்காக அவர் அது பற்றி நிச்சியம் குறிப்பிட்டிருப்பார்.
இயேசுவின் கூற்றிலுள்ள இரண்டாவது சொற்பிரயோகம் “வன்முறையாளர்கள் அதை சூறையாடுவர்கள்” எனும் எதிரிடையான அர்த்த்த்தில் உள்ளமையால் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இயேசுவின் கூற்றிலுள்ள முதலாவது சிக்கலான சொற்பிரயோகம் செயற்பாட்டுவினையில், எதிரிடையான அர்த்த்தில் “வன்முறைக்கு உள்ளாகின்றது“ என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும் எனத் தர்க்கிக்கின்றனர்.(9) இதன்படி தேவனுடைய ராட்சியத்திற்கு யோவான் ஸ்நானகனுடைய காலம் முதல் ஏற்பாட்டு வரும் எதிர்ப்பையும் தீயவர்கள் தேவராட்சியத்தை அழிக்க முற்படுவதையும் பற்றியே இயேசு மத்தேயு 11:2 இல் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதப்படுகின்றது.(10) எனினும் இயேசுவின் கூற்றில் இரண்டாவது சொற்பிரயோகம் எதிரிடையான அர்த்தத்தில் உள்ளமையால், முதல் சொற்பிரயோகமும் அவ்விதம் எதிரிடையான கருத்திலேயே உள்ளது எனக் கூறுவது நியாயமான ஒரு தர்க்கம் அல்ல. இயேசுவின் கூற்றிலுள்ள முதலாவது சொற்பிரயோகம் நேரிடையான அர்த்தத்துடன் தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு பரவிச் செல்வதைப் பற்றி அறியத்தருகையில், இரண்டாவது சொற்பிரயோகம் தேவராட்சியத்திற்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளையும் உபத்திரவங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.

குறிப்புகள்
(1) புதிய சர்வதேச புதிய (NIV) ஆங்கில வேதாகமத்தில் இவ்விதமாக இவ்வாக்கியம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  Kigdom of heaven has been forcefully advancing

(2) ஜேம்ஸ் அரசனின் பதிப்பு (KJV) ஆங்கில மொழிபெயர்ப்பில் இவ்வர்த்தத்துடன் The Kingdom of heaven suffereth violence என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(3) Donald A. Hagner, Matthew 1-13 in Word Biblical Commentary p. 306

(4) G.E. Ladd, The presence of the Future: The Eschatology of Biblical Realism. Grand Rapids: Eerdmans Publishing Company, 1974, pp-159-164

(5) R.T. France, Mathew in Tyndale New Testament Commentaries, p. 195

(6) D.A. Carson, Mathew in The Expositor’s Bible Commentary, p.266

(7) W. Bauer, F.W. Arndt, F.W. Gingrich and F.W. Danker, Greek-English Lexicon of the New Testament, Chicago : University of Chicago Press, 1979, pp. 140-141

(8) இப்பதம் பெயர்ச்சொல்லாகப் புதிய ஏற்பாட்டில் இவ்விடத்தில் மட்டுமே இடம்பெறுவதோடு ஆதிக் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மூன்று தடவைகள் மட்டுமே மனிதர்களைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இடங்களிலும் இப்பதம் எதிரிடையான அர்த்தத்திலேயே உள்ளது. (Bauer, Amdt, Gingrich and Danker, Greek-English Lexicon of the New Testament, p. 141)

(9) Donald A. Hagner, Mathew 1-13 in Word Biblical Commentary, pp. 306-307

(10) Ibid, p. 307 Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 104: R.T. France, Mathew in The Tyndale New Testament Commentaries p. 195.
    

நன்றி - சத்தியவசனம் சஞ்சிகை
கட்டுரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment