- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 3 February 2011

சங்கீதங்களின் (எபிரேய) கவித்துவம்

நூற்தலைப்பு : சங்கீதங்களின் சத்தியங்கள்
நூலாசிரியர் : சகோ. எம்.எஸ்.வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

சங்கீதங்கள் இஸ்ரவேல் மக்களின் பாடல் புத்தகமாக இருப்பதனால் இவை, எபிரேய மொழியில் கவிதைகளுக்கு உள்ள சிறப்பான தன்மைகளுடன் எழுதப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் மரபுக்கவிதைகள் “எதுகை, மோனையுடன்யுடன் எழுதப்பட்டிருப்பது போலவே, வேதாமத்திலுள்ள சங்கீதங்கள், எபிரேய மொழியில் உள்ள கவிதைகளின் சிறப்பம்பங்களுடன் எழுதப்பட்டுள்ளன. இதனால் இவற்றை அறியாத நிலையில் சங்கீதங்களைச் சரியான விதத்தில் வியாக்கியானம் செய்ய முடியாது. எபிரேயக் கவிதைகளில் இரண்டு முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இவை இவ்வித்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன.


(அ) சமத்தன்மை

எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சம் அவற்றில் காணப்படும் சமத்தன்மை (Parallelism) ஆகும். இஸ்ரவேல் மக்கள் கவிதைகள் எழுதும்போது சமத்தன்மையுடனேயே எழுதுவது வழக்கம். சமதன்மை என்பது சங்கீதத்தின் வசனங்களில் இரண்டு வரிகளுக்கிடையில் இருக்கும் சிறப்பான தொடர்பாகும். (1) இத்தொடர்பினை அறியாத நிலையில் சங்கீதங்களை வியாக்கியானம் செய்வது பிழையான கருத்துக்கள் நமது உபதேசத்திற்குள் வருவதற்கு வழிவகுக்கும். “தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டுள்ள போதிலும், அது மானிட மொழியிலேயே நமக்குத் தரப்பட்டுள்ளமையால், மானிட மொழியின் தன்மைகளை அறிந்து தேவனுடைய வார்த்தையை நாம் வியாக்கியானம் செய்ய வேண்டும்.(2) மேலும், சங்கீதங்கள் மனிதர்கள் தேவனோடு பேசிய வார்த்தைகளாகவே இருப்பதனால், அவர்கள் தங்களுடைய மொழியில் கவிதைகள் எழுதப்படும் மொழியில் சங்கீதங்களை எழுதியுள்ளார்கள். எனவே. சங்கீதங்களை வியாக்கியானம் செய்வதற்கு எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எபிரேயக் கவிதைகள் தனி ஒரு வரியில் ஒரு விடயத்தை சொல்லாமல் அதை இரண்டு அல்லது மூன்று தடவைகள் திருப்பிச் சொல்வது வழமை. எனினும், ஒரு வரியில் சொல்லப்பட்டதை அடுத்த வரியில் திருப்பிச் சொல்லும்போது அது முதல் வரியில் குறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளினாலேயே மறுபடியும் சொல்லாமல், வேறு வார்த்தைகளினால் எழுதப்படும். இவ்வாறு எபிரேயக் கவிதைகளில் முதல் வரிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் இடையில் இருக்கும் சிறப்பான தொடர்பே சமதன்மை(3) ஆகும். இத்த்தைய தொடர்பைக் கருத்திற் கொள்ளாத நிலையில் சங்கீதங்களை வியாக்கியானம் செய்பவர்கள் முதல் வரிக்கும் அதனைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை அறியாதவர்களாக ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு புதிய விடயங்கள் இருப்பதாகக் கருதி சங்கீதங்களின் கருத்தைச் சிதைத்து விடுகின்றனர். உதாரணத்திற்கு சங். 1:1 (துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்) இல் மூன்றுவிதமான மனிதர்களைப் பற்றி அல்ல. நீதிமான் எப்படிப்பட்டவனாக இருக்க மாட்டான் என்று என்று மூன்று விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எனவே, சங்கீதங்களை சரியான வித்த்தில் புரிந்து கொள்வதற்கு எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையில் சில அம்சங்கள் உள்ளன. இவை சங்கீதத்தின் வரிகளுக்கிடையிலான தொடர்பை அடிப்படையாக்க கொண்டு வித்தியாயப்படுகின்றன. எனினும். பெரும்பாலான சங்கீதங்கள் “ஒத்தகருத்து சமதன்மை (Synonymous Parallelism) என்பது முதலாவது வரியில் எழுதப்பட்டுள்ள விடயம் இரண்டாவது வரியில் (சில நேரங்களில் மூன்றாம் நான்காம் வரிகளிலும்) வேறு வார்த்தைகளில் எழுதப்பட்டிருப் பதாகும். இது முதல் வரியில் சொல்லப்பட்டதை வலியுறுத்திக் கூறுவதற்காக அதை மறுபடியுமாக, ஆனால் வேறு வார்த்தைகளில் இரண்டாவது வரியில் எழுதும் முறையாகும். (4) (உறுதிப்படுத்தும் சமதன்மை (Affirming Parallelism எனவும் சில ஆய்வாளர்கள் கொள்வர்) (உதாரணத்திற்கு 49ம் சங்கீதத்தின் முதலிரு வசனங்களில், முதல் வசனத்தில் சொல்லப்பட்ட விடயம் இரண்டாவது வசனத்தில் வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். (49:1)
பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும்
ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள்
எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். (49:2) 

இதில் முதலாம் வசனத்திலுள்ள “ஜனங்கள்“ என்பதே இரண்டாம் வசனத்தில் “பூமியின் குடிகளே“ என்று வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் முதலாம் வசனத்திலுள்ள “நீங்கள் எல்லோரும்“ என்பதே இரண்டாம் வசனத்தில் “, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும்“ என்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலாம் வசனத்திலுள்ள “இதைக்கேளுங்கள்“ என்பது இரண்டாம் வசனத்தில் “ஏகமாய் செவிகொடுங்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு வசனங்களிலும் ஒரு விடயமே இரண்டு தடவைகள், ஆனால் வித்தியாசமான வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு விடயம் இரண்டு வரிகளில் அல்லது இரண்டு வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதே “ஒத்த கருத்துச் சமதன்மை“ ஆகும். அதை அறியாத நிலையில். இரண்டு வசனங்களிலும் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுவது தவறாகும். எபிரேயக் கவிதைகளில், “சொல்லப்படும் விடயத்தை விளக்குவதற்காகவும் வலியுறுத்திச் சொல்வதற்காகவும் இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது(5) ஒரு வசனத்திலேயே இரு தடவைகள் ஒரு விடயம் வித்தியாசமான வார்த்தைகளில் ஒத்தக்கருத்துச் சமதன்மையுடன் எழுதப்பட்டிருப்பதற்கு 3ம் சங்கீதம் 1ம் வசனம் ஒரு உதாரணமாக உள்ளது.

கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்!
எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.


இவ்வசனத்தில்முதலாம் வரியிலுள்ள , என் சத்துருக்கள் என்பதே இரண்டாவது வரியில் “எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, “பெருகியிருக்கிறார்கள்!“ என்று முதல் வரியில் உள்ளதே இரண்டாம் வரியில் “அநேகர்“ என்று உள்ளது. சங்கீதங்களில் உள்ள இத்தகைய ஒத்த கருத்துச் சமதன்மை பெரும்பாலான வசனங்களில் தெளிவாக தென்படும் விதத்தில் நம் தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் ஒத்தக்கருத்துச் சமதன்மை உள்ள பல வசனங்களில் இரண்டு வரிகளும் “உம்“ என்னும் வேற்றுமையுருப்பினால் ஒன்றாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சங்கீதப் புத்தகத்திற்கு வெளியில் வேறு புத்தகங்களில் இருக்கும் கவிதைகளில் ஏசாயா 1:3 இல் உள்ள ஒத்தகருத்துச் சமதன்மை உள்ள வசனம் இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் வந்த திருவிவிலியத்தில் மூலமொழியில் உள்ள ஒத்தக் கருத்துச் சமதன்மை தெளிவாகப் புலப்படும் வித்த்தில் இவ்வசனம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை
என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை


இம்மொழிபெயர்ப்பில், முதலாம் வரியிலுள்ள “இஸ்ரயேல்“ (6) என்பது இரண்டாவது வரியில் “என் மக்கள்“ என்றும் முதல் வரியிலுள்ள “அறிந்து கொள்ளவில்லை“ என்பது இரண்டாவது வரியில் “புரிந்து கொள்ளவில்லை“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சங்கீதங்களை வாசிக்கும்போது, மூலமொழியில் இவை சமதன்மையுடனே எழுதப்பட்டுள்ளன என்பதை கருத்திற் கொண்டவர்களாக, ஒவ்வொரு வசனத்தையும் நாம் வாசிக்க வேண்டும். அப்போது சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் சொல்லப்பட்டுள்ள விடயத்தை நம்மால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

சமதன்மையில் ஒத்தகருத்து சமதன்மை மட்டுமல்ல இன்னும் சில அம்சங்களும் உள்ளன. பெரும்பாலான சங்கீதங்கள் ஒத்தகருத்துச் சமதன்மையுடன் எழுதப்பட்டிருக்கையில் சில சங்கீதங்களிலும், கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நீதிமொழிகள் புத்தகத்தில் சமன்மையின் இன்னுமொரு சம்சமான “எதிர்கருத்துச் சமதன்மை (Antithetic) உள்ளது. எதிர்கருத்துச் சமதன்மையில் முதலாவது வரியில் சொல்லப்பட்டதற்கு எதிரான விடயம் இரண்டாவது வரியில் குறிப்பிடப்பட்டிருக்கும். சங்கீதம் 37:21 இத்தகைய எதிர்க்கருத்தச் சமதன்மையை அவதானிக்கலாம்.

துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்;
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.


முதலாம் சங்கீதத்தில் முதல் 3 வசனங்களும் ஒத்தக்கருத்துச் சமதன்மை எழுதப்பட்டுள்ள போதிலும் 4ம் 5ம் வசனங்கள் 5ம் வசனங்கள முதல் மூன்று வசனங்களுடன் எதிர்கருத்துச் சமதன்மையில் உள்ளன. எபிரேயக் கவிதைகளில் எதிர்கருத்துச் சமதன்மையுடன் எழுதப்படும்போது, வசனங்களின் இருவரிகளில் ஒரு வரிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே சங்கீதக்காரன் இரண்டு வரிகளிலும் இரண்டு விடயங்களை எழுதியுள்ளான் என கருதலாகாது. இவ்வாறு “எழுத்தாளர் தான் சொல்ல முற்படுவதை அதற்கு எதிரானதுடன் முரண்படுத்திக் காட்டும்போது சொல்லப்படும் விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (7) மேலும் இரு விடயத்தின் இரு எதிரிடையான விளைவுகளும் இதில் காட்டப்பட்டுள்ளமையால், இரண்டில் எது சிறந்தது என்பதை அறிந்து சரியானதன்படி செயற்படுவதற்கு வாசகருக்கு ஆலோசனையளிப்பதற்கும் எதிர்கருத்து சமதன்மை முக்கியமாக உள்ளது.( உதாரணத்திற்கு நீதிமொழிகள் புத்தகத்தில் இத்தகைய எதிர்கருத்து சமதன்மையில் நீதியானதும் அநீதியானதுமான வழிமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.

(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Footnote & Citation
(1) G.B. Gray, The Forms o Hebrew Poetry P. 236
(2) W.A. VanGemeren, Psalms : The Expositor’s Bible Commentary P.8
(3) R. Alter. The Art Biblical Poetry. Pp-26, 62-84, ‘The Psalms-Beauty Heightened Through Poetic Structer’ pp 28-41; R. Lowth, Lectures on the Sacred Poetry the Hebrew Volume 1. pp. 68-69
(4) இதனால்தான் சில வேதஆராய்ச்சியாளர்கள் இதனை “உறுதிப்படுத்தும் சமதன்மை (Affirming Parallelism) என்று அழைப்பதே பொருத்தமானது என்று கூறுகின்றனர்
(5) T.N. Strrertt, How to Understand Your Bible, pp. 122-123
(6) இஸ்ரவேல் என்பதே “இஸ்ரயேல்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(7) T.N. Strrertt, How to Understand Your Bible, p. 123
(8) G.H. Wilson, Psalms Vol 1: The NIV Application Commentary P. 42

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. மிக மிக ப்யனுள்ள கட்டுரை பதித்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete