- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 9 February 2011

சங்கீதங்களின் (எபிரேய) கவித்துவம் - (2)


சமதன்மையின் மற்றுமொரு அம்சம் “ஒன்றுசேர்க்கும் சமதன்மை (Synthetic Parallelism) ஆகும். சங்கீதத்தின் முதல் வரியில் சொல்லப்பட்ட விடயத்தை இரண்டாவது வரியில் பூரத்தி செய்யும் விதத்தில்  எழுதப்படும் வசனங்கள் ஒன்றுசேர்க்கும்  சமதன்மையுடன் உள்ளவையாகும். 

கர்த்தரே மகா தேவனும், 
எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். (9)

ஒன்றுசேர்க்கும் சமதன்மையில் முதலாவது வரியில் சொல்லப்பட்டுள்ள விடயத்திற்கான காரணத்தை அல்லது நோக்கத்தை அல்லது முதல் வரியின் விளைவை இரண்டாவது வரி அறியத் தரும் (10). சங்கீதம் 95:3 உள்ள மேற்குறிப்பிட்ட வசனத்தில் முதல் வரியின் காரணம் இரண்டாவது வரியில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கர்த்தர் மகாதேவனாயிருப்பதற்கான காரணம் இரண்டவது வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சங்கீதம் 9.10 இல் “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை“ என்னும் முதல் வரியின் விளைவு இரண்டாவது வரியில் “ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எபிரேயக் கவிதைகளில் ஒன்றுசேர்க்கும் சமதன்மையானது, ஒரு வசனத்தின் இரு வரிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்புடன் சம்பந்தப்பட்டதாகும். ஆனால், சில சங்கீதங்களில் முதல் வரியில் சொல்லப்பட்ட விடயத்தின் தொடர்ச்சி இரண்டாம் வரியில் மட்டுமல்ல அதனைத்  தொடர்ந்து வரும் மூன்றாவது வரியிலும் சில சந்தர்ப்பங்களில் அதற்கும் மேலதிகமான வரிகளிலும் இருக்கும். சங்கீதங்களில் உள்ள இத்தகைய தொடர்பு விரிவுபடுத்தப்பட்ட சமதன்மை அல்லது உச்சநிலையடையும் சமதன்மை“ (Climactic Parallelism) என்று  என்று அழைக்கப்படுகிறது. சங்கீதம் 34:4 இல் இத்தகைய சமதன்மை உள்ளது. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனம் தனியொரு வாக்கியமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவிவிலியத்தில் இது மூன்று வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (11)

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்
எல்லாவகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார் (11)

எபிரேயக் கவிதைகளில் எழுதப்படும்போது உபயோகிக்கப்படும் இன்னுமொரு சமதன்மை உருவகச் சமதன்மை (Emblematic Parallelism) ஆகும். இத்தகைய வசனங்களில் ஒருவரியில் உபயோகிக்கப்பட்டிருக்கும் உருவகத்திற்கான விளக்கம் அடுத்த வரியில் இருக்கும். உதாரணத்திற்கு சங்கீதம் 21:16 இல் முதல் வரியில் உள்ள உருவக விபரணம் இரண்டாம் வரியில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. 

நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; 
பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது;

இவ்வசனத்தின் முதல் வரியில் “நாய்கள்“ என்னும் பதம் இரண்டாம் வரியிலுள்ள பொல்லாதவர்களை வர்ணிக்கும் விபரமாக உள்ளது. (12) இதேவிதமாக இச்சங்கீதத்தின் 6ம் வசனத்தில் “நானோ ஒரு புழு“ என்னும் உருவகம் அடுத்த வரியில் சொல்லப்பட்டதை விளக்கும் விதத்தில் உருவகச் சமதன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. உருவகச் சமதன்மையுள்ள வசனங்களில் ஒருவரி உருவகமாகவும் மற்றவரி சொல்லர்த்தமாகவும் இருக்கும் என்பதை கருதிற் கொண்டு இத்தகைய வசனங்களை வியாக்கியானம் செய்ய வேண்டும். மேலும், உருவகமானது சொல்லர்த்தமான வரியில் சொல்லப்பட்டுள்ளதை விளக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட விபரணமாகவே இருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. உருவகச் சமதன்மையுள்ள வசனங்களில் உருவக விபரணம் இருப்பதை கருத்திற்கொள்ளாதுவிட்டால் அவ்வசனங்களைத் தவறாகவே விளங்கிக் கொள்வோம். உதாரணத்திற்கு 60ம்  சங்கீதம் 3ம் வசனத்தின் இரண்டாவது வரியில் தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்க கொடுத்தீர்.“ என்னும் வாக்கியம், முதலில் சொல்லப்பட்ட விடயத்தை விளக்கும் உருவகமாக, உருவகச் சமதன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இதை அவதானிக்காவிட்டால் தேவன் மதுபானத்தைக் குடிக்க கொடுத்தார் என்னும் தவறான கருத்து உருவாகும்(13). எனவே, சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு நாம் அவற்றின் சமத்தன்மையை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை

(ஆ) முதலெழுத்தலங்காரம்

சமதன்மைக்கு அடுத்ததாக எபிரேயக் கவிதைகளில் உள்ள இன்னுமொரு சிறப்பம்சம் “முதலெழுத்தலங்காரம்“ (Acrosticism)  ஆகும். இது அரிச்சுவடியின் ஒழுங்கில் ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். முதல் வரி “அ“ என்ற எழுத்தில் இரண்டாவது வரி “ஆ“ என்ற எழுத்தில் மூன்றாவது வரி “இ“ என்ற எழுத்தில் என்று அரச்சுவடியின் ஒவ்வொரு எழுத்தையும் ஆரம்பமாகக் கொண்டு எழுதப்படும் முறை இதுவாகும். இஸ்ரவேல் மக்கள் ஞானப் போதனைகளைக் கற்பிப்பதற்கு இம்முறையில் பாடல்களை எழுதுவதைத் தங்களுடைய வழக்கமாக்க் கொண்டிருந்தனர். சங்கீதப் புத்தகத்தில் 9,10,25,34,37,111,112,119,145 என்னும் சங்கீதங்கள் மூலமொழியில் இவ்வாறே எழுதப்பட்டுள்ளன. (14)

119ம் சங்கீதத்தில் முதல் எட்டு வசனங்களும் எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்திலும் அடுத்த 8 வசனங்களும் இரண்டாவது எழுத்திலும் அதற்கடுத்த 8 வசனங்களும் மூன்றாவது வரியிலுமாக எபிரேய அரிச்சுடியிலுள்ள 22 எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் 8 வசனங்களைக் கொண்ட பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. (15) ஒரு மொழியிலுள்ள முதலெழுத்தலங்காரத்தை இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது முடியாத காரியமாக இருப்பதனால். எந்தவொரு மொழிபெரய்ப்பும் முதலெழுத்தலங்காரத்துடன் இச்சங்கீதங்களை மொழிபெயர்க்கவில்லை. இதேவிதமாக ஒரேவித ஓசையுடைய சொற்களை ஆரம்ப வார்த்தைகளாகக் கொணடு எழுதப்பட்டுள்ள சங்கீதங்களும் பிறமொழிகளில் கவித்தன்மை இழந்த நிலையிலேயே உள்ளது. (16)

F
Footnote & Citation
(9) இவ்வசனத்திலும் நாம் உபயோகிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பில் “உம்“ என்னும் வேற்றுமையுருப்பு சேர்க்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். திருவிவிலியத்தில் இவ்வசனம் பின்வருமாறு இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஏனெனில் ஆண்டவர் மான்புமிகு இறைவன்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்
(10) T.N. Stettett, How to Understand Your Bible p..123
(11) நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனம்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்“ என்று உள்ளது
(12) .N. Sterrett, How to Understand Your Bible p..124-125
(13) தேவனுடைய கரத்தில் உள்ள மதுபானத்தைக் குடிப்பது“ என்னும் உருவகம் தேவனுடைய கடுமையான தண்டனைக்கான உருவகமாக வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டிருப்பதை ஏசாயா 51:17-23 எரேமியா 25:15-16 என்னும் வசனங்களிலும் நாம் அவதானிக்கலாம். இது “அதிகளவு மதுவருந்தியனுடைய தடுமாற்றம் அடையும் தன்மையை விளக்க வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள உருவகமாகும்.“ (M.E. Tate, Psalms 51-100: Word Biblical Commentary Vol . 20 p. 105)
(14) ,இவற்றில் 9, 10ம் சங்கீதங்கள் ஆரம்பத்தில் தனியான ஒரு சங்கீதமாக இருந்ததாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இவ்விரு சங்கீதங்களும் தனியொரு சங்கீதமாகவே உள்ளது. பிற்காலத்தில் இதை இரு சங்கீதங்களாகப் பிரிக்கும்போது 10ம் சங்கீதத்தின் முதல் 6 வசனங்களிலும் முதலெழுத்தலங்காரம் இல்லாமல் போய்விட்டது.
(15) D.N. Freedman ‘Acrostic Psalms in the Hebrew Bible : Alphabetic and otherwise’ pp408-431 ; J.H. Walton, W.H. Matthew & M.W. Chavals, The IVP Bible Background Commentary – Old Testament p511
சங்கீதங்களைத் தவிர வேதாகமத்தில் புலம்பல் புத்தகமும் முதலெழுத்தலங்காரத்துடன் எழுதப்பட்டள்ளது. இதில் 3ம், 5ம் அதிகாரங்களைத் தவிர ஏனைய ஒவ்வொரு அதிகாரமும் எபிரேய மொழி அரிச்சுவடியுள்ள 22 எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் 22 வசனங்களைக் கொண்டுள்ளது. 3 ம் அதிகாரத்தில் 66 வசனங்கள் உள்ளன. இது 22இன் மூன்று மடங்காகும். இவ்வதிகாரத்தில் மும்மூன்று வசனங்களாக அரிச்சுவடியின் எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 31:10-31 இல் குணசாலியான பெண்ணைப் பற்றிய விபரணமும் முதலெழுத்தலங்காரத்துடன் எழுதப்பட்டுள்ளது.
(16) ஆஙகிலத்தில் இவை Alliterative Psalms
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment