- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 16 November 2010

சிருஷ்டிப்பின் நாட்கள் (அதி 1)

நூற்தலைப்பு : ஆதியாகமம்
ஆசிரியர் : சகோ. எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை)
வெளியீடு : இலங்கை வேதாகம கல்லூரி
 
( 6 நாட்களில் சிருஷ்டிப்பு நிகழ்ந்ததா? அல்லது அது நீண்டகாலப்பகுதியில் நடைபெற்ற ஒன்றா? தேவனின் படைப்பு பரிணாமத்தை ஆதரிக்கின்றதா? இக்கட்டுரையில் ஆசிரியர் மூலமொழிப்பதமான யொம் குறிப்பது நீண்ட காலப்குதியையா அல்லது 24 மணித்தியாலங்கள் கொண்ட நாளையா என்பதனை ஆராய்ந்துள்ளார்)
 
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிருஷ்டிப்பின் நாட்கள் சொல்லர்த்தமான 24 மணித்தியால நாட்களா இல்லையென்றால் அவை நீண்டகாலப்பகுதியைக் குறிக்கின்றனவா என்பது இன்று பெரும் சர்ச்சைக்குரிய விடயமாயுள்ளது. சிருஷ்டிப்பின் நாட்கள் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்களாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆதியாகம சிருஷ்டிப்பு விபரணத்தில் நாட்கள் “உருவக அல்லது அடையாள மொழியாகவே உள்ளது“ (01) என கூறுகின்றனர். அதேசமயம் அவற்றைச் சொல்லர்த்தமான நாட்களாக ஏற்றுக் கொள்பவர்களில் சிலர் அவற்றை சிருஷ்டிப்பு நாட்களாக அல்ல மாறாக சிருஷ்டிப்பு வெளிப்படுத்தப்பட்ட நாட்களாக கருதுகின்றனர். அதாவது தேவன் உலகைப் படைத்த 6 நாட்களில் ஆதியாகமத்தை எழுதியவருக்கு வெளிப்படுத்தியுள்ளார். அந்நாட்களே ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்கள்(2) என்பதே இவர்களது தர்க்கமாகும். எனினும் 6 நிமிடங்களுக்குள் வாசித்துவிடக்கூடிய ஆதியாகமத்தின் முதல் அதிகார விடயங்களை வெளிப்படுத்த தேவனுக்கு 6 நாட்கள் என்பது அர்த்தமற்ற விளக்கமாகும். பூமியினதும் உயிரினங்களினதும் இன்றைய நிலை கோடிக்கணக்கான ஆண்டுகால புவியியல் மற்றும் உயிரியல் மாற்றத்தினால் ஏற்பட்டது எனும் பரிமாணமக் கோட்பாட்டை ஆதரிக்கும் இறையியலாளர்கள் சிருஷ்டிப்பின் நாட்களை இந்த மாற்றத்தின் படிமுறைகளைக் குறிக்கும் காலப்பகுதிகளாகக் கருதுகின்றனர். “சிருஷ்டிப்பின் நாட்கள் ஒவ்வொன்றும் இலட்சக் கணக்கான ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியின் ஆரம்பத்தைக் குறிக்கின்றன. (03) என கூறும் இவர்கள் “ஒவ்வொரு நாளிலும் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளவைகள் உருவாகத் தொடங்கி இன்றிருக்கும் நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுத்தன(04). அக்கோடிக்கணக்கான ஆண்டுகளே ஆதியாகமத்தில் நாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன(05) என விளக்குகின்றனர். எனினும் இவ்விளக்கங்கள் பரிணாமக் கோட்பாட்டை ஆதியாகம விவரணத்திற்குள் விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட கருத்துக்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.


சிருஷ்டிப்பின் நாட்கள் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்கள் அல்ல எனும் கருத்துடையவர்கள் தமது கூற்றுக்கு பல காரணங்களைச் சுட்டிக் காட்டுவது வழமை. இவற்றுள் முக்கியமான “நாள்“ என்பதற்கு மூலமொழியான எபிரேயத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள “யொம்“ எனும் பதத்தின் அர்த்தம் பற்றிய விளக்கமாகும் “நாள்“(அதாவது 24 மணியத்தியாலம் கொண்ட ஒரு நாள்) அல்லது “காலம்“ (அதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதி) என இருவிதமாக மொழிபெயர்க்கப்படலாம் என கூறும் இவர்கள் “ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் இப்பதம் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்களாக இருக்க முடியாது(06) என கருதுகின்றனர்.
“யொம்“ என்னும் எபிரேய பதம் AV ஆங்கிலமொழிபெயர்ப்பில் 65 தடவைகள் காலம் என்றும் 1200 தடவைகள் “நாள்“ என்றும் “யாமின்“ எனும் அதன் பன்மை பதம் 700 தடவைகள் நாட்கள் என்றும்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது(07). எனவே “யொம்“ என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில நாள் என்றே மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் அதுவே அப்பதத்தின் சாதாரண அர்த்தம் என்பது தெளிவாகின்றது. அதேசமயம் எபிரேய மொழி பழைய ஏற்பட்டில் “யொம்“ எனும் பதம் ஒருமையில் எந்த இடத்திலும் காலம் எனும் அர்த்தத்துடன் உபயோகிக்கபடவேயில்லை. சில இடங்களில் பன்மையிலேயே இப்பதம் குறிப்பிட்ட காலப்பகுதியைக் குறிக்கிறது. (08) மேலும் இப்பதமானது இலக்கங்களுடன் சேர்ந்து வரும்போது நாள் எனும் அர்த்தந்தரும் வண்ணமே உபயோகிக்கப்பட்டுள்ளது. (09) அதாவது முதலாம் நாள், இரண்டாம் நாள் அல்லது பத்து நாட்கள் 40 நாட்கள் என்பன சொல்லர்த்தமான நாட்களையே குறிக்கின்றன எனவே சிருஷ்டிப்பின் நாட்கள் முதலாம் நாள், இரண்டாம் நாள், என ஆறாவது நாள் வரை குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து அவை 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்கள் என்பது தெளிவாகின்றது. மேலும் காலவரையறையற்ற நீண்ட காலப்பகுதியைக் குறிக்க எபிரேய மொழியில் “ஓலாம்“ எனும் பதம் உள்ளது. ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் இப்பதம் உபயோகிக்கப்படாமையால் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாளைக் குறிக்கும் “யொம்“ எனும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளமை சிருஷ்டிப்பின் நாட்கள் சொல்லர்த்தமான நாட்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. (09)
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் “யொம்“ என்னும் எபிரேயப் பதம் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்கள் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் ஒவ்வாரு நாளின் முடிவிலும் உபயோகிக்கப்பட்டுள்ள “சாயங்காலமும் விடியற்காலமும்“ எனும் சொற்பிரயோகமாகும். சிருஷ்டிப்பின் நாட்களை நீண்ட காலப்பகுதியாகக் கருதுபவர்கள் இப்பிரயோகத்தை ஆரம்பத்தையும் முடிவையும் குறிக்கும் உருவகமாகக் கருதுகின்றனர்.(04). அதாவது ஒரு யுகத்தின் அல்லது காலப்பகுதியின் ஆரம்பத்தையும் முடிவையுமே இச்சொற்பிரயோகம் குறிக்கின்றது என்பதே இவர்களது விளக்கமாகும் எனினும் இச்சொற்பிரயோகம் வேதாகமத்தில் எந்தவொரு இடத்திலும் இத்தகைய உருவகமாக உபயோகிக்கப்படவில்லை. மாறாக “நாள்“ எனும் அர்த்த்த்தையே இச்சொற்பிரயோகம் தருகிறது. உதாரணமாக தானியேல் 8:14 இல் இதை நாம் அவதானிக்கலாம். நம் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனத்தில் இராப்பகல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்பிரயோகம் மூலமொழியில் “சாயங்காலமும் விடியற்காலமும்“ என்றே உள்ளது. இவ்வசனத்தில் 2300 சாயங்காலமும் விடியற்காலமும் 2300 நாட்களையே குறிக்கின்றது. (01). எனவே ஆதியாகமத்திலும் இச்சொற்பிரயோகம் நாள் என்ற அர்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இச்சொற்பிரயோகம் எபிரேய மொழிவழக்கில் நாளைக் குறிக்கவே உபயோகிக்கப்படுவதனால் ஆதியாகம எழுத்தாளர் மட்டும் வழமையான உபயோகத்திற்கு முரணாக நீண்ட காலப்பகுதிக்கான உருவகமாகக் கருதியுள்ளார் என தர்கிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. சாயங்காலமும் விடியற்காலமுமாகி அடுத்த நாள் ஆயிற்று எனக் குறிப்பிடும் ஆதியாகம ஆசிரியர் இரவு பகல் அமைப்பையே கருதியிருக்க வேண்டும். அவருடைய காலத்தில் ஒரு நாள் 24 மணித்தியாலம் கொண்ட நாள் என்பதனாலேயே சாயங்காலமும் விடியற்காலமும் எனும் சொற்பிரயோகத்தை ஆதியாகமத்திலும் அதே அர்தத்துடனே அவர் உபயோகித்திருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் பொதுவாக “கவிதைப் பகுதிலேயே அதிகளவு உருவகங்கள் உபயோகிக்கப்படும் ஆதியாகம்ம் முதல் அதிகாரம் உரைநடையில் இருப்பதனால் அதன் சொற்பிரயோகங்களை உருவங்களாக அல்ல சொல்லர்த்தமாகவே விளங்கிக் கொள்ள வேண்டும் (11)
ஆதியாகமம் சிருஷ்டிப்பு நாட்கள் சொல்லர்த்தமான 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்கள் என்பதற்கான தெளிவானதும் உறுதியானதுமான ஆதாரம் யாத்திரகாமம் 20.8-11 இல் உள்ளது. இவ்வசனங்களில் இஸ்ரேல் மக்கள் 6 நாட்கள் வேலைசெய்தபின் 7 ஆவது நாளில் ஓய்ந்திருக்க வேண்டும். எனும்“ கட்டளைக்கு (20.9) கொடுக்கப்பட்டள்ள காரணம் கர்த்தர் ஆறு நாளைக்குள்ளே வானத்தையும், பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி ஏழாம் நாளில ஓய்ந்திருந்தார் என்பதாகும். (20:11) இதிலிருந்து இஸ்ரவேல் மக்கள் ஆறாம் நாள் வேலையையும் ஏழாவது நாளின் ஓய்வும் தேவனுடைய ஆறு நாள் சிருஷ்டிப்பையும் ஏழாவது நாள் ஓய்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை அறிகிறோம். இஸ்ராயேல் மக்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் கொண்ட காலப்பகுதியில் அல்ல மாறாக சொல்லர்த்தமான ஆறு நாட்கள் வேலை செய்தபின் ஏழாவது நாளில் ஓய்ந்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளமையால் அதற்கு அடிப்படையாக உள்ள தேவனுடைய சிருஷ்டிப்பு நாட்களும் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்கள் என்பது தெளிவாகின்றது. அப்படியிருந்தும் சிலர் ஆதியாகமத்தில் ஏழாவது நாளுக்கு சாயங்காலமும் விடியற்காலமும் என்னும் சொற்பிரயோகம் உபயோகிக்கப்படாதமையால் அந்நாள் இன்றுவரை நீடிக்கும் நாட்களாக இருக்கிறது எனக் கூறி இதனால் ஏழாவது நாள் நீண்ட காலப்பகுதி எனவே அதற்கும் முற்பட்ட ஆறு நாட்களும் நீண்ட காலப்பகுதிகளாகவே இருக்க வேண்டும் எனத் தர்கிக்கின்றனர். எனினும் ஆதியாகமம் 2:3 இல் தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அந்நாளை ஆசீர்வதித்து பரிசுத்தம் பண்ணியமையால் அது ஒரு தனியான நாள் என்பது தெளிவாகின்றது.“ (08). மேலும் இஸ்ரவேல் மக்கள் ஏழாவது நாளில் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது வாரத்தின் கடைசி நாள் என்பதால் இந்த நாளும் அதற்கு முன்னுள்ள ஆறு நாட்கள் போன்ற 24 மணித்தியாலங்கள் கொண்ட நாளாகவே உள்ளது.
 
Reference
1. The Meaning of Creation : Genesis and Modern Science by C, Hyers
2. Creation Revealed in Six Days by P.J. Wiseman
3. Genesis is one and he Origin of the Earth by R.C. Newman & H.J. Heckerman
4. The Christian View of Science and Scripture by Bernard Ramm.
5. The Bible in its Setting by Melvin G. Kyle.
6. Genesis in Space and Time by Francis A. Schaeffer.
7. How Old is the Earth by A. J. Monty White
8. The Genesis Debate: Persistent Questions about Creation and the Flood ed. by F. Young Blood.
9. The God of Creation Volume l(Genesis 1-3) by Theodore H. Epp.
10. The Rise and fall of Civilization from Creation through the Flood by
David Hocking.

11. The Sufficiency of Scripture by Noel Weeks.
12. Systematic Theology by Louis Berkhof.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment