- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 19 January 2012

திருமணமானவர்களுக்கான சில வழிகாட்டல் குறிப்புகள்



உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான நபர் உங்கள் துணைதான் என்பதை, அவர் அறிந்திருக்கிறார் என்பதை உறுதி செய்யுங்கள்.... தினமும் அன்பைக் கட்டியெழுப்புவதும், உறுதிசெய்வதுமாக உங்கள் நேரங்களை தரமுள்ளதாக்குங்கள். 

ஒரு சந்தோஷமற்ற திருமணம், பிழையான உறவை வைத்துக் கொள்வதற்கான சாட்டாக இருக்க முடியாது. ஆனாலும், சந்தோஷமான திருமணம் இப்படியான உறவகளைத் தவிர்க்க நிச்சியமாய் உதவும். எனவே, தேவனுடனான எமது உறவை வளர்த்துக் கொள்ளும் பணிக்கு அடுத்தாக. எமது துணையுடன் உள்ள எமது உறவை வளர்த்துக் கொள்ளும் பணியை எமது முக்கியமான திட்டமாகக் கொண்டிருக்க வேண்டும். வேதாகமம் குறிப்பிடும் இருவர் ஒருவராகுதல் (மத். 19:6) தானாகவே நடக்கின்ற ஒரு காரியம் அல்ல. அதற்கு கடினமான உழைப்பு அவசியமாகும்.

எமது துணையுடன் ஒன்றாவதற்கு நாம் எமது முயற்சிகளையும் சத்திகளையும் செலவிடவேண்டும். நாம் இந்தப் பணியைச் செய்ய ஆழ்ந்த அர்ப்பணிப்பும், மற்றைய காரியங்களை விட்டுவிட்டு இதற்கென்று நேரத்தைச் செலவிடுவதற்கான விருப்பமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சிலவேளைகளில், அவசரமான தேவைகளைச் சந்திப்பதில் நாம் உறுதியாயிருப்பதால் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள் எமது நாளாந்த நடவடிக்கையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது. இவ்வாறு தள்ளி வைக்கப்படும் காரியங்களில், நமது துணையுடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

உங்கள் துணையுடன் உள்ள உறவை வளர்த்துக் கொள்ள சில வழிகாட்டல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான நபர் உங்கள் துணைதான் என்பதை அவர்/அவள் அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் உறுதி  செய்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பணிகளைச் செய்கின்ற மருத்துவர், கிறிஸ்தவத் தலைவர்களைக் குறித்து அவர்களது துணைவர்கள் சொல்லுவது என்னவெனில், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தவிர்ந்த மற்ற மற்றை அனைவரையும் கவனிக்கிறார்கள் என்பதாகும். எம்முடைய துணைகளுக்கு ஒரு பிரச்சினை இருப்பின் அல்லது அவர்கள் சந்தோஷமற்று இருப்பின் அதனை மிகவும் முக்கியமான காரியமாக கருத்திற் கொண்டு, நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்பதை எமது துணைகள் அறிந்திருக்க வேண்டும். ஹெர்மஸ் எனப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுகால சபைத் தந்தை இப்படியாக சொன்னார். “உங்கள் கற்பைக் காத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்கள் மனைவியை நினைத்துக்கொண்டீர்களானால் நீங்கள் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டீர்கள். “பிள்ளைகளுடைய வளர்ச்சிக்கு ஒரு ஆரோக்கியமான சூழல் ஏற்படவேண்டுமானால், தங்களுடைய பெற்றோர் தமக்குள் ஆழமான அன்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பிள்ளைகள் அறிந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். இன்னொருவர் கூறியதுபோல “ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம். அவர்களுடைய தாயை நேசிப்பதாகும்“

2. உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் எமது துணையே எம்மால் அதிகம் விரும்பப்படுபவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வெளிப்படையான சரீரப்பிரகமான வெளிப்படுத்தல்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த திருமண ஆலோசகரான எச்.நோர்மன் ரைட் இவ்வாறாகச் சொல்லுகிறார் “உங்கள் துணையுடன் இருக்கும் முதல் நான்கு நிமிடங்களை (காலை, மாலை, மற்ற வேளைகள்) உங்கள் இடைவிடா அன்பையும், அதை உறுதிப்படுத்துவரையும் காட்டும் தரமான நேரங்களாகக் கட்டியெழுப்புங்கள். ஒரு நாளில் ஒரு முறையோ இரண்டு முறையோ எமது துணை எமக்கு முக்கியமானவரும், எம்மால் அன்பு செய்யப்படுபவரும் என்பதனை நாம் உறுதிப்படுத்தும்படி காரியங்களைச் செய்ய வேண்டும். ஒரு அரவணைப்பு, முத்தம், எமது துணையை கண்டவுடன் இன்பமான சில வார்த்தைகள் என்பன நாம் செய்யக்கூடிய சில காரியங்கள். கணவனும் மனைவியும் இரவில் ஒன்றாக உறங்குவது மிக முக்கியம் என்று நான் எண்ணுகிறேன். சிலர் குழந்தைகளை தமக்கிடையில் படுக்க வைப்பார்கள். அல்லது பெற்றோரில் ஒருவர் பிள்ளைகளுடன் இருக்கவேண்டும் என்பதால் இரண்டு பேரும் வேறு அறைகளி்ல் நித்திரை கொள்வார்கள். இவ்வாறான காரியங்கள் திருமணத்திற்கு பிரயோசனமற்ற அர்த்தங்களைக் கொடுப்பதாக நான் கருதுகிறேன். அதாவது புறம்மான தோழமை முக்கியமானதொன்றல்ல என்பதே என் கருத்து

3. நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நாட்களாக ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபடவில்லையெனில் மற்றைய காரியங்களுக்கு ஒதுக்கும் நேரங்களை புறமபே தள்ளி வைத்துவிட்டு, விரைவாய் அப்படியான ஒரு உரையாடலுக்கு நேரம் ஒதுக்குங்கள். நீண்ட உரையாடல் இல்லாத திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது, திருமணத்தின் முன் உரையாடலுக்கு அதிக நேரம் கொடுக்கும் தம்பதியினர் திருமணத்திற்குப் பின்னர் உரையாடலுக்கென்று நேரம் ஒதுக்குவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். உங்கள் துணையின்மேல் நீங்கள் வைத்திருக்கும் உண்மைத்துவத்திற்கு நீண்ட உரையாடல்கள் அடிக்கடி நிகழவேண்டியது இன்றியமையாத தாகும்.

4. நான் பிரயாணத்திலிருக்கையில் எப்படியும் எனது மனைவியுடன் ஒவ்வொரு நாளும் தொடர்புகொள்ள முயல்வேன். இன்றைய நாட்களில் கையடக்கத்தொலைபேசி மூலமாக மிகவும் குறைந்த செலவில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியுமாதலால், நான் வெளிநாட்டில் இருக்கும்போது ஒவ்வொருநாளும் இதனைப் பாவித்து நாம் உரையாடிக் கொள்வோம். இப்படியான உரையாடல்கள், நாம் எப்பொழுதும் எமது துணையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், அவர்களே எமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மனிதர்கள் என்பதையும் வெளிப்படுத்தும். இவை நாம் உதாசீனப்படுததக்கூடாத விடயங்கள். ஏனெனில், எமது திருமணத்தை முறிக்கத்தக்க அநேக காரியங்கள் எமது வாழ்வில் குறுக்கிட இடமுண்டு்.

5. ஜெபமானது சீமெந்தைப்போல தம்பதிகளையும் குடும்பங்களையும் கட்டி இணைக்கின்றது. அது கூடவே, குடும்பத்திற்கு வல்லமையையும் கிருபையையும் தருகின்றது. ஒன்றாகச் சேர்ந்த ஜெபிப்பதைத் தவிர்த்துக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் என்பதனை நான் கண்டுள்ளேன். அநேக தம்பதியினர் ஒன்றாக ஜெபிக்காமல் இருக்கும் வழக்கத்திற்கு பழகி விட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே, ஒன்றாக ஜெபிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டும். ஜெபிப்பது ஒரு ஒழுங்கான வழிமுறையாக மாறவேண்டும். குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது ஜெபிக்க வேண்டும். உதாரணமாக, பிறந்தநாள், பரீட்சை, விளையாட்டு நிகழ்வுகள், வியாதி போன்றவை. உங்கள் மனைவி கிரமமாக ஆலோசனை பணியாற்றச செல்லும்போதோ அல்லது உங்கள் கணவன் அலுவலகத்தில் ஒரு பிரச்சினையை எதிர்நோக்கும்போதோ ஜெபியுங்கள். இவை யாவும் தேவனைத் தலைமையாகக் கொண்ட வாழ்க்கையிலே நாமும் பங்களாளிகள் என்பதற்கு ஆதரவு கொடுப்பதாய் அமையும்.

6. உலகில் ஆராய்சிகளுக்கும், வேதவசனமும், பெண்கள் அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்றன. உன்னதப்பாட்டு இதற்கு நல்ல உதாரணமாயிருக்கிறது. எனவே, ஒரு கணவன் தன் மனைவிக்கு , அவள் உணரத்தக்க விதத்தில் அடிக்கடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் முன்னர் குறிப்பிட்டப்படி அணைத்தல், முத்தமிடல் போன்ற சரீரப்பிரகமான வெளிப்பாடுகளும், அன்பை வெளிப்படு்த்துவதும், மனைவியின் அழகை வர்ணிப்பதுமான வார்த்தைகளும் மகிழ்ச்சியான திருமணத்திற்கு முக்கியமானவை. சில கணவன்மார்கள் பாலுறவில் ஈடுபடும்போது மாத்திரமே சரீரப்பிரகாரமான அன்பை வெளிப்படுத்துவார்கள். இது மனைவியையும் அவளது உடலையும குறித்தான உண்மையான அன்பையல்ல, மாறாக கணவனது சுயநல நோக்கத்தையும் வெளிப்படுத்தும். தன்னுடைய கணவனுக்கு கவர்சிகரமாக இருக்கும்படி மனைவியும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

7. ஆராய்ச்சியும் வேதவசனமும் (உன்னதப்பாடு) ஆண்களுடைய உருவமைப்பு, அவர்கள் அடிக்கடி உறுதிப்படத்தப்பவேண்டிய தன்மையைக் கொண்டது எனச் சொல்லுகிறது. அவர்கள் தங்கள் மனைவிமாரால் பாராட்டப்படுபவர்களாயும் போற்றப்படுபவர்களாயும் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒரு கணவனில் பாராட்டப்படவேண்டிய விடயங்கள் எப்பொழுதும் இருக்கும். கவலைக்குரிய காரியம் என்னவெனில, சில மனைவிமார் கணவரில் காணப்படும் குறைகளையே எடுத்துச் சொல்வார்களேயன்றி அவர்களில் காணப்படும் நலமான காரியங்களை குறிப்பிடுவதே கிடையாது. நீதிமொழிகள் 27:15-16 இல், சண்டைக்கார மனைவி. மழை நாளில் தொடர்சியான ஒழுக்கைப் போலிருக்கிறாள். அவளை அடக்க முயல்வது காற்றை அடகக முயல்வது போலும். கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலும் இருக்கும் (புதிய தமிழ் வேதாகமம்) வீட்டில் மனைவியின் குற்றச்சாட்டுதல்களால் காயப்பட்டுள்ள, கேவலப்பட்டுள்ள கணவன், அலுவலகத்தில் தன்னைப் பாராட்டுகின்ற, போற்றுகின்ற ஒரு பெண்ணிடம் விழுந்துவிடக்கூடும்.  

8. தம்பதிகள் ஒருவரையொருவர் புகழ்ந்துரைப்பதில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்பது திருமணம் ஒன்றின் பொதுவான விதிமுறையாகும். (நீதிமொழிகள் 31:10-31 ஐக் கவனிக்க) தனது துணையின் ஆள்தத்துவத்தில் காணப்படும் பிரத்தியேகமான தன்மையைப் பாராட்டும்போது, தனது துணை தன்னை விளங்கிக் கொண்டுள்ளார் என்ற உணர்வு அவர்களிடையேயான உறவை ஆழமாக்க உதவும். புகழ்ச்சி மகிழ்ச்சியைப் பூரணமாக்கும். மகிழ்ச்சி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போதே முழுமையடைகிறது. தேவன் தம்மைப் போற்றும்படி சொல்வதற்கான காரணம் இதுவே என நம்புகிறேன். எனவே உங்களது துணையை ஒவ்வொரு நாளும் பாராட்ட நிச்சயித்துக் கொள்ளுங்கள். பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ எழுத்தாளரான சார்ளி செட், தனது இருபத்தைந்தாவது திருமண நாளன்று புல்லர் இறையில் கல்லூரி ஆலயத்தில் பேச நான் கேட்டேன். அப்போது, இருபத்தைந்து ஆண்டுகளாக நான் தன் மனைவியை ஒவ்வொரு நாளும் பாராட்டியதாகவும், ஒவ்வொரு கிழமையும் அவளைப் பாராட்டும்படி புதியதோர் காரியத்தைக் கண்டுகொண்டதாகவும் அவர் சொன்னார்.

9. தம்முடைய துணைகளைக் குறித்து சந்தேகங்கொண்டு இதனால் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில், ஒவ்வொரு நாளும் தமது துணையை சந்தேகங்களுடன் எதிர்கொள்வதைத் தவிர்த்து, தொடர்ச்சியாக தமது நேசத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தி, அவர்கள் எவ்வளவாய் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை வெளிப்படுத்துங்கள் என்பதாகும். எப்பொழுதும் குற்றஞ்சாட்டுவதன் மூலம் எமது துணைகளின் சுயகௌரவத்தை அழித்துவிடுவது எவ்வளவு இலகுவான காரியம். இது பிழையான உறவை ஏற்படுத்துவதற்கான சாட்டு அல்ல. ஆனாலும் வீட்டிலே ஒதுக்குதலை எதிர்கொள்ளும் ஒருவர் , தன்னைப் பாராட்டி அந்தப் பாராட்டுதலை வெளிப்படுத்தும் ஒரு எதிர்பாலாரோடு உறவினை ஏற்படுத்திக் கொள்வது மிகச் சுலபமாக நடந்துவிடக்கூடிய ஒரு காரியமாகும். தேவன் குடும்பத்தை ஏற்படுத்தியதன் நோக்கம், கலவரமான உலகிலிரந்து வரும் ஒருவர் தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்பதையும், அதற்கான உறுதிப்படுத்தல்களையும் பெற்றுக்கொள்வதற்காகவேயாகும். நாம் அதனை ஒரு குற்றஞ்சாட்டும் நீதிமன்றமாக மாற்றிவிடக்கூடாது.

10. உங்கள் துணையுடன் சேர்ந்து காரியங்களைச் செய்ய எத்தனியுங்கள். இது சிலருக்கு இயலாத காரியமாய் இருக்கலாம். ஆனால், இதுவே செய்யவேண்டிய சிறந்த காரியம். உங்கள் துணை உங்களுடன் ஊழியத்தில் ஈடுபடவில்லையெனில் நீங்கள் வேறு பிரதான பணிகளில் ஈடுபடுகிறீர்களெனில், உங்கள் பணிகளில் நடக்கிற காரியங்களை விளக்க நேரம் செலவிடுங்கள். அவனோ அவளோ முழுமையாக உங்கள் தொழிலுக்கு அந்நியராய் இருப்பின் அவருக்கு விளக்கம் சொல்வது கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கவேண்டுமெனில் அந்தக் கடினமான பணி செய்யப்பட்டே ஆக வேண்டும்.

11. திருமணமானவர்கள் அநேகமான நேரங்களில் பாலுறவைக் குறித்து வேதத்திற்கு புறம்பான சிந்தனையைக் கொண்டிருப்பதனால் அவர்கள் மத்தியில் திருப்தியற்ற பாலுறவு காணப்படுகின்றது. சிலர் பாலுறவிலுள்ள ஆபத்துக்களைப் பற்றி மட்டுமே உரையாடி அதிலுள்ள அழகைப் பற்றி உரையாடத மிகவும் சமய ரீதியான பின்னணியில் வளர்க்கப்படுகிறார்கள். இதனால் பாலுறவைக் குறித்ததான அவர்களது சிந்தனை தவறாகின்றது. இப்படி இருப்பதால், அவர்கள் அதனை சுந்தோஷமாக அனுபவிக்கத்தக்க சுயாதீனம் இருப்பதில்லை. சிலர் கிறிஸ்தவர்களாவதற்கு முன்பதாக பாலியல் ரீதியான பாவங்களுக்கு உட்பட்டிருந்த காரணத்தால் அவர்கள் பாலுறவை பரிசுத்தமாதாயும் நலமானதாயும் பார்க்கமாட்டார்கள். சிலர் சிறுபிள்ளைகளாயிருந்த வேளையில் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யபட்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு பாலுறவு வெறுப்பூட்டுகிறதாய் இருக்கிறது. தெற்காசியாவில் இப்படியான நிலைமைகள் மிகவும் அதிகமாய் இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும். சிலர் பாலுறவைக் குறித்து பிழையான இடங்களில் பிழையாக கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்டது பாலுறவைக் குறித்ததான வேதாகம படிப்பினையல்ல. இந்த நிலைமை, கிறிஸ்தவ பெற்றோரும், சபைகளும் பாலுறவைக் குறித்ததான சரியான வேதாகம போதனையைக் கிறிஸ்தவர்களுக்குக் கற்றுத்தருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

இவ்வாக்கமானது கலாநிதி அஜித் பெர்ணான்டோ (Director, Youth for Christ(Sri Lanka)) அவர்கள் எழுதிய “உணர்வு பூர்வமான நடத்தை : முன்யோசனையின்றி ஏற்படக்கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி?“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு  Youth for Christ Publication தமிழில் மொழிபெயர்த்தவர் கலாநிதி அன்பழகன் அரியதுரை)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment