- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 30 October 2010

காயீனின் காணிக்கை (ஆதி 4:2-5)

நூல் : ஆதியாகமம்

ஆசிரியர் : சகோ. எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் –இலங்கை)


வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி



(காயீனின் காணிக்கை தேவனால் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கு அநேக விளக்கங்கள் தரப்பட்டுகின்றன. இக்கட்டுரை ஆசிரியர் கிறிஸ்தவ உலகில் நிலவிவரும் பல வித்தியாசமான கருத்துக்களையெல்லாம் வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து எழுதியுள்ளார். இவற்றுள் எது சரியான விளக்கமாக இருக்கும்?....)


ஆதியாகமப் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களில் அதிக சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்று முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் என்போரது பிள்ளைகள் தேவனுக்கு செலுத்திய காணிக்கையோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஆதாம் ஏவாளின் பிள்ளைகளில் காயீன் ஆபேல் என்போர் கர்த்தருக்கு செலுத்திய காணிக்கைகளில் ஆபேலினுடைய காணிக்கை மட்டும் தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காயீனின் காணிக்கை அவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (ஆதி 4:2-5) எனினும் காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கான காரணம் பற்றி எதுவும் ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படாதமையால் அதற்கான காரணத்தை கண்டறிய முற்பட்டவர்கள் தமது ஊகங்களினால் பலவிதமான விளக்கங்களை உருவாக்கியுள்ளனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத வரலாற்றாசிரியரான ஜோசீப்பாஸ் என்பார் “மானிட முயற்சியினால் வளர்க்கப்படுவதை விட தானாக வளருவதே தேவனுக்கு உகந்தவைகள்” (01) என்னும் கருத்தினடிப்படையில் “காயீனின் காணிக்கை மானிட முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலத்தின் கனிகள் என்பதால் அவை தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை(01) எனக் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தைய யூத தத்துவஞானி பைலோ என்பார் காயீனின் காணிக்கை “முதற்பலன்“ அல்ல என்பதால் (ஆதி 4:2) ஆபேல் செலுத்திய மந்தையின் “முதற்பலன்“ (ஆதி 4:4 இல் மந்தையின் தலையீற்று என்று உள்ளது) காயீனுடைய காணிக்கையை விட மேலானதாய் உள்ளது.” (02) என விளக்கியுள்ளார். சில வேதவியாக்கியானிகள் மனிதன் ஓரிடத்தில் தங்கியிராமல் பூமியெங்கும் பரந்து வாழ வேண்டும் என்பதே தேவனின் நோக்கம் என்றும் பயிர்செய்கையானது மனிதனை பூகோள ரீதியாக குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வைத்திருப்பதனால் தேவன் காயீனின் பயிர்செய்கையை அங்கீகரிக்கவில்லை(03) என கூறுகின்றனர். வேறுசிலர் “ஆபேலின் காணிக்கை பலியாக செலுத்தப்பட்டபோது அதன் மணம் தேவனுக்கு சுகந்த வாசனையாய் இருந்தமையால் அவனது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது”(04) என விளக்குகிறனர். “காயீனின் காணிக்கை தேவனால் சபிக்கப்பட்ட நிலத்திலிருந்து பெறப்பட்டமையால் இருந்தமையினாலேயே அவை தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை”(05) என கருதுபவர்களும் நம் மத்தியில் இருக்கின்றனர். எனினும் பெரும்பாலான காயீனின் காணிக்கை இரத்தபலியாய் இராதபடியினாலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கருதுகின்றனர்.




காயீனுடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை ஏற்றுக்கொள்வதற்கு முன் வேதாகமத்தின் வேறு பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள தேவ வெளிப்படுத்தல்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். யூத வரலாற்றாசிரியர் ஜோசீபாஸ் கருதுவது போல மானிட முயற்சியினால் வளர்க்கப்படும் பயிர்களின் விளைச்சல் கர்த்தருக்கு உகந்த காணிக்கை அல்ல என்பதற்கு வேதாகமத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. மனிதன் தன் நிலத்தின் விளைச்சலிலும் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்படியாகவே வேதாகமம் அறிவுறுத்தியுள்ளது. (உப. 26:1-11, லேவி 1:1-3, 14-16)



யூத தத்துவஞானி பைலோ சுட்டிக் காட்டியது போல் காயீனின் காணிக்கை முதற்பலன் அல்ல என்பதனாலேயே அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கூறமுடியாது. ஏனென்றால் முதற்பலன்கள் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வேண்டும் என்பது மேசேயின் நீதிச்சட்டத்தின் அறிவுறுத்தலாகவே இருக்கிறது. “மேசேயின் காலத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு அச்சட்டங்கள் கொடுக்கப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முற்பட்ட சம்பவத்தை வியாக்கியானம் செய்வது தவறாகும்(06) அதேபோல் காயீனின் பயிர்செய்கையை தேவன் அங்கீகரிக்காதமையினாலேயே அவனது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனென்றால் வீழ்ச்சிக்கு முன்பும் அதற்கு பின்பும் பயிர்செய்கையே தேவனுக்கு கொடுக்கப்பட்ட தொழிலாயிருந்த்து. (ஆதி 2:15, 13:17-19). அதேபோல் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பலியின் சுகந்த வாசனையே தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டமைக்கான காரணம் என்பதற்கும் வேதத்தில் எவ்வித ஆதாரமுமில்லை. காயீனும் ஆபேலும் பலி செலுத்தியதாக 4ம் அதிகாரத்தில் குறிப்பிட வில்லை. இருவரும் காணிக்கையையே கொண்டு வந்தனர். ஆதி 4:2-5 இல் காணிக்கை என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பரிசு என்றே பொருள்படும்(07). எனவே தேவனுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆபேலினது காணிக்கையை பலியாகக் கருதமுடியாது. இத்தோடு பலிபொருள் தகனிக்கப்படும்போதே அதிலிருந்து மணம் வரும். ஆபேல் தன் காணிக்கையைத் தகனித்தாக ஆதியாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. காயீனின் காணிக்கை சபிக்கப்பட்ட நிலத்தின் கனிகள் என்பதனாலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனும் கருத்துக்கும் வேத ஆதாரம் இல்லை. பிற்காலத்தில் நிலத்தின் கனிகள் தேவ அறிவுறுத்தல்களின்படி அவருக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்டன. (உபா 26:1-11)



காயீனின் காணிக்கை இரத்தபலியாக இராதமையினாலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை(08) என்பதே இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களது கருத்தாய் உள்ளது. ஏனைய விளக்கங்களை விட இக்கருத்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளமைக்குக் காரணம் இவ்விளக்கம் ஸ்கோஃபீல்ட் ஆங்கில வேதாகமத்தின் விளக்கக் குறிப்புகளில் சேர்த்துக் கொள்ளட்டுள்ளமையாகும். “ஆபேலின் பலியில் இரத்தம் சிந்தப்பட்டமையே அவனது பாவ அறிக்கையாகவும் தனக்குப் பதிலாக செலுத்தப்படும் பலியின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்துவதாவும் உள்ளது. (09) என கூறும் ஸ்கோஃபீல்ட் வேதாகம விளக்கக்குறிப்பு, “காயீனின் காணிக்கை இரத்தபலியாக இராதமையால் தவறான பலியாக இருந்தது(09) எனக் கூறுகின்றது. உண்மையில் இவ்விளக்கமானது இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை(எபி. 9.22) எனும் உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் காயீனும் ஆபேலும் தங்கள் பாவங்களுக்காக பலி செலுத்தியதாக ஆதியாகமம் 4.2-5 இல் குறிப்பிடப்படவில்லை. “காயீனும் ஆபேலும் தேவனை வழிபடுவதற்காகவே காணிக்கையுடன் வந்தனர்(01) ஆதி. 4:2-5 இல் காணிக்கை எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மின்ஹா எனும் எபிரேய பதம் பரிசு என்றே பொருள்படும். இப்பதம் பலியிடப்படும் செயலை அல்ல மாறாக பரிசாகச் செலுத்தப்படுவதையே குறிக்கும். (06). எபி. 11:4 இல் “பலி“ என்னும் அர்த்தம் தரும் “தோசியா“ என்னும் கிரேக்க பதம் ஆபேலின் காணிக்கையைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டிருப்பினும் எபிரேயே நிருப ஆசிரியர் அதை இரத்தபலியாக கருதினர் எனக் கூறுவதிற்கில்லை. ஏனென்றால் எபி. 11:4 இல் காயீனுடைய காணிக்கையும் இதேவிதமாகவே “தோசியா“ எனும் கிரேக்க பதத்தினாலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் “தோசியா“ எனும் பதத்தை இரத்தபலியாக கருதமுடியாது“(11)



காணிக்கை பாவ மன்னிப்புக்காகச் செலுத்தப்பட்ட பலி என்பதற்கு சுட்டிக் கட்டுப்படும் ஆதாரமும் வேதாகம விஷயத்தை முரட்டுத்தனம் விளக்கமாகப் உள்ளது. “பாவத்திற்கும் பிராய்ச்சித்தமாக மிருகபலி செலுத்தப்படும் முறை ஆதி 3:21 இல் தேவனால் அறிமுகப்படுத்தப்பட்டது (12) எனக் கூறும் சில வேதவியாக்கியானிகள் இரத்தப்பலி மட்டுமே தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தர்க்கிக்கின்றனர். எனினும் பாவத்துக்காகச் செலுத்தப்படும் பலிமுறை அக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என கூறுவதற்கு ஆதி 3.21 இல் எவ்வித ஆதாரமுமில்லை. அவ்வசனம் ஆதாமுக்கு ஏவாளுக்கும் தேவன் தோலுடைகளைக் கொடுத்ததை பற்றியே அறியத்தருகின்றது. “உடைக்காக மிருகம் கொல்லப்படுவதற்கே ஆதி 3:21 இல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பாவத்துக்காக மிருகப்பலி செலுத்தப்பட்டதைப் பற்றி அவ்வசனத்தில் வாசிப்பதில்லை(06) மேலும் இரத்தம் பலியுடனான காணிக்கை மட்டுமே தேவன் ஏற்றுக் கொள்வார் எனக் கூறுவது வேதாகம சத்தியத்துக்கு முரணானது நிலத்தின் கனிகளும் பயிர்கள் விளைபொருட்களும் தேவனுக்குக் காணிக்கையாக செலுத்தப்படக்கூடியவை என்பதே மேசேயின் நியாயப்பிரமாணம் அறியத் தருகிறது. (உபா 26:1-11). எனவே இரத்தப்பலி செலுத்தப்படாதமையினாலேயே காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தர்கிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. உண்மையில் காயீன் இரத்தப்பலி செலுத்தப்பட்டிருந்தால் கூட அவனுடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காது. (13). ஏனென்றால் தவறு காணிக்கைப் பொருளில் அல்ல. மாறாக காணிக்கை செலுத்துபவனிலேயே இருந்தது. “காயீனின் காணிக்கை பொருளை வேதாகமம் குற்றப்படுத்தவில்லை. (19) காயீனும் ஆபேலும் தங்கள் தொழிலில் கிடைத்தவற்றையே தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வந்தனர். “நிலத்தின் கனிகள், மந்தையின் ஆடுகளை விட தாழ்வானவைகளாக இருக்கவில்லை“(11) ஆனால் இருவரது காணிக்கையினதும் வித்தியாசம் அவர்களது மனநிலையிலேயே இருந்தது. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் செழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தான். (ஆதி. 4:4). அவன் தன் மந்தையில் சிறப்பானவற்றை தேவனுக்கென்று தெரிந்தெடுத்துள்ளதை இதன் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் காயீன் தன் விளைப் பொருட்களில் இவ்விதமான சிறப்பானவைகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டுவரவில்லை. ஆதி. 4:3 இல் காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வந்தான். என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து தேவனுக்கு சிறப்பானவற்றையே கொடுக்க என ஆபேல் எண்ணியது போல் காயீன் சிந்திக்கவில்லை என்பது தெளிவாகின்றது, “வெளிப்பிரகாரமாக இருவரது செயல்களும் ஒரே மாதிரியானவையாகவே இருந்தன. தேவனால் மட்டுமே அவர்களது மனநிலையை பார்க்க கூடியதாயிருந்தது. அவருடைய பார்வையில் காயீனுடைய காணிக்கை ஏற்றுக் கள்ளக் கூடியதொன்றாக தென்படவில்லை(06).



தேவன் தனக்குக் கொடுக்கப்படும் காணிக்கையை அல்ல மாறாக அக்காணிக்கையை கொடுப்பவனுடைய மனநிலையையே பார்க்கின்றார். இதனால்தான் எருசலேம் தேவாலயத்துக் காணிக்கைப் பெட்டியில் அதிகளவு பணம் போட்ட மக்களை விட இரண்டு காசுகள் மட்டுமே போட்ட பெண் இயேசு கிறிஸ்துவால் புகழப்பட்டாள். இதேவிதமாக காணிக்கை செலுத்திய காயீன் ஆபேல் என்போரின் உள்ளங்களைப் பார்த்த தேவன் (1 சாமு) ஆபேலின் உள்ளமே தனக்கு உகந்ததாக இருக்கக்கண்டார். காயீனுடைய மனநிலை தேவனுக்கு ஏற்ற விதமாக இராதமையால் அவனது காணிக்கைகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வுண்மை எபி. 11:4 தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ”விசுவாசத்தினாலும் ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். தேனுடைய காணிக்கைகளை குறித்து தேவன் சாட்சி கொடுத்தார் என எபிரேய நிருப ஆசிரியர் அறியத் தருகிறார்.



விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்பதை அறியத் தரும் எபி. 11 ஆம் அதிகாரம் (11:6) ஆபேல் விசுவாசத்தினால் காயீனை விட மேலான காணிக்கையை செலுத்தியதாக கூறுகிறது. (எபி. 11:4) எபி. 11:4 இன்படி காயீன் விசுவாசமற்றவனாகவே இருந்துள்ளது தெளிவாகின்றது. (14). “காயீன் தன் மார்க்க கடமையை செய்யும் மனப்பங்குடனே தேவனுக்கு காணிக்கை செலுத்தியுள்ளான். ஆனால் ஆபேலின் காணிக்கை அவனது விசுவாசத்தின் வெளிப்பாடாய் இருந்தது. (06) உண்மையில் ஆபேலின் விசுவாசம் அவனது காணிக்கை காயீனுடைய காணிக்கையை விட மேலானதாய் இருப்பதற்காக காரணமாய் உள்ளது. (எபி. 11:4) ஆபேலின் விசுவாசம் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கும் காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டாமைக்கும் காரணம் எபி. 11:4 இல் குறிப்பிடப்பட்டுள்ளமையால் அவ்வசனம் அறியத்தரும் விடயத்தை விட வேறு காரணங்களை நமது ஊகத்தினடிப்படையில் உருவாக்குவது அர்த்தமற்றதும் அவசியமற்றதுமான கற்பனை விளக்கமாகவே இருக்கும். காயீனுடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததன் மூலம் உள்ளம் அவருக்கு உரித்தாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்து கொள்கிறோம். “கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்போது கொடுக்கும் பொருளை விட கொடுப்பவனின் மனநிலை முக்கியமானது“(13) ”காணிக்கை கொண்டுவருபவனுடைய உள்ளம் தேவனுக்கு உகந்ததாய் இராதுவிட்டால் அவனது காணிக்கை தேவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனென்றால் தேவன் காணிகையைப் பார்ப்பதற்கு முன்னர் காணிக்கை கொடுப்பவனையே பார்ப்பார்.” (07). எனவே, காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கு அவனது காணிக்கை பொருள் அல்ல. மாறாக அவனே காரணமாயிருக்கின்றான். 






Reference
1. Antiquities of the Jews Josephus
2. Sacrifices of Able and Cain by Cited by H. Victor Hamilton in Genesis Commentary
3. Legends of Genesis by Herman Gunkel
4. The more savory offering by Sauo Levin
5. Cited in the Rise and fall of Civilization by David Hocking
6. Genesis Vol 1 in the Bible Students Commentary by C.Ch. Alders
7. More hard saying of the Old Testament by Walter C. Kaiser
8. Hebrews : The Epistle of Warring by John Owen
9. Scuffled Reference Bible
10. Genesis in the New International Commentary on the OT by Victor Hamilton
11. Genesis in the Expositors Bible Commentary by John H. Sailhamer.
12. The Genesis Recorded by Henry M. Morris
13. The Interpretation of the Epistle to the Hebrew by R.C.H Lenski
14. Genesis in the Bible Knowledge Commentary
15. Hebrews in the New International Greek Testament Commentary by Paul Ellingworth
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment