- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 28 December 2014

வேதமும் விளக்கமும் இயேசு கூற்று.. ஒவ்வொரு சுவிசேஷத்திலும் வித்தியாசமான முறையில் இருப்பது ஏன்?

73. இயேசுகிறிஸ்துவினுடைய கூற்றுக்களில் சில ஒவ்வொரு சுவிசேஷத்திலும் வித்தியாசமான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கான காரணம் யாது? (எம். சேகர். வவுனியா, இலங்கை)
 
 
 
 
இயேசுகிறிஸ்து ,இவ்வுலகில் வாழ்ந்தபோது, அக்காலத்தில் பாலஸ்தீனாவில் பேசப்பட்ட 'அரமிக்' மொழியிலேயே பேசினார். அவரது பிரசங்கங்கள் அரமிக் மொழியிலேயே செய்யப்பட்டன. ஆனால், புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இதனால் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவின் கூற்றுக்களை 'அரமிக்' மொழியிலிருந்து கிரேக்கத்திற்கு மொழிபெயர்த்து எழுதினர். குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை பலர் மொழிபெயர்க்கும்போது, வாக்கிய அமைப்பு முறை வித்தியாசப்படும். இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்கள் 'அரமிக்' மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு எழுதப்பட்டமையினாலேயே அவை வித்தியாசமான வாக்கிய அமைப்புடன் எழுதப்பட்டுள்ளன. எனினும் ,இவ்வத்தியாசம் இயேசுகிறிஸ்துவினுடைய கூற்றுக்களின் அர்த்தத்தை மாற்றிவிடவில்லை. 

Wednesday, 17 December 2014

வேதமும் விளக்கமும் ஏசாயா தீர்க்கதரிசனப் புத்தகம் இருவரால் எழுதப்பட்டதா?

72. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 1 முதல் 39 வரையிலான அதிகாரங்கள் ஒருவரினாலும் 40 முதல் 60 வரையான அதிகாரங்கள் வேறு ஒருவரினாலும் எழுதப்பட்டதாகச் சிலர் சொல்கின்றனர். இது உண்மையா? (ராஜேஸ்வரி, கொழும்பு – 10)
 
நவீன வேத ஆராய்ச்சிகளுடைய இக்கருத்து இன்று பிரபல்யம் பெற்று வருகின்ற போதிலும், இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. இது ஆராய்ச்சியாளர்களின் ஊகமே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. 
 
 
 
1947 ஆம் ஆண்டு சாக்கடலுக்கருகே கண்டெடுக்கப்பட்ட கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கும்ரான் எனும் சமூகத்தவரது ஏசாயா புத்தகச் சுருளில் 38:8 முதல் 40:2 வரையிலான பகுதி ஒரே பக்கத்திலேயே உள்ளது. 39 ஆம் அதிகாரம் வரை ஒருவர் எழுதியது என்றால் அது ஒரு பக்கத்தில் முடிவடைய 40 ஆம் அதிகாரம் இன்னுமொரு பக்கத்தில் ஆரம்பமாயிருக்க வேண்டும். அத்தோடு, பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழிபெயர்ப்பு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முழுவதும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவினால் எழுதப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூல்களும் இக்கருத்தையே கொண்டுள்ளன. மேலும், புதிய ஏற்பாட்டாசிரியர்கள் ஏசாயாவின் புத்தகத்திலிருந்து எடுத்த 22 மேற்கோள்கள் ஏசாயாவின் பெயர் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் இரு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட போதிலும் அனைத்தும் ஒரு ஏசாயாவினுடையதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இயேசுகிறிஸ்துவிடம் ஏசாயாவின் புத்தகச் சுருள் கொடுக்கப்பட்டபோது (லூக். 4:17-20) அவர் ஏசாயா 61:1-2 பகுதியை வாசித்தது, அப்பகுதியும் முதற் பகுதியை எழுதிய ஏசாயாவினுடையதே என்பதை உறுதிப்படுத்துகின்றது
 
ஏசாயா 61:1-2 
1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

2. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், 
 
 லூக். 4:17-20
17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:

18. கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,

20. வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

Saturday, 13 December 2014

வேதமும் விளக்கமும் நியாயாதி 16:7 இல் .. அகணிநார்க் கயிறு என்பது எத்தகையை கயிறு?

71. நியாயாதிபதிகள் 16:7 இல் குறிப்பிடப்பட்டுள்ள அகணிநார்க் கயிறு என்பது எத்தகையை கயிறு? (ஆர். ராஜேஸ்வரி, கொழும்பு – 10)
 





இவ்வசனத்தில் அகணிநார்க்கயிறு என தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள எபிரேய பதம் மிருகங்களின் குடலினால் செய்யப்படும் கயிற்றைக் குறிக்கும் பதமாகும். 
 

Tuesday, 2 December 2014

வேதமும் விளக்கமும் யூதா 9ன் மிகாவேல்..மோசேயின் சரீரத்தைக் குறித்து எதற்காக பிசாசுடன் தர்க்கித்தான்.?

70. யூதா நிருபத்தின் 9ம் வசனத்தின்படி மிகாவேல் தூதன் மோசேயின் சரீரத்தைக் குறித்து எதற்காக எங்கே பிசாசுடன் தர்க்கித்தான். வேதாகமத்தில் இதுபற்றி எங்காவது எழுதப்பட்டுள்ளதா? (எ. டேவிட், சென்னை 13, இந்தியா)
 
யூத கிறிஸ்தவர்களுக்கு தன் நிருபத்தை எழுதும் யூதா சில விடயங்ளை விளக்குவதற்காக அக்கால யூதர்கள் மத்தியில் பிரபல்யடைந்திருந்த சில புத்தகங்களின் விடயங்களை, தான்சொல்ல முற்படும் போதனைக்கான உதாரணங்களாக உபயோகித்துள்ளார். இத்கைய உதாரணங்களில் ஒன்றே 9ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதர்களுடைய புத்தகங்களில் ஒன்றான மோசேயின் பரமேறுதல் என்னும் புத்தகத்திலிருந்தே 9 ஆம் வசனத்தின் விடயம் பெறப்பட்டுள்ளதாக ஆதிச் சபைபிதாக்களான கிளமன்ட, ஒரிகன், டைடிமஸ் என்போர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் மோசேயின் பரமேறுதல் எனும் புத்தகத்தில் இன்றுரை இருக்கும் பிரதிகளில் யூதா 9 ஆம் வசனத்தின் விடயம் எதுவும் இல்லை. எனினும் வேறு சில நூல்களில் அவ்விடயம் உள்ளது. அவற்றிலிருந்து மோசே மரித்தபொழுது அவனது சரீரத்தை அடக்கம் பண்ணுவதற்காக தேவன் மிக்காவேலை அனுப்பியதாகவும், மோசே எகிப்தியனொவனைக் கொலை செய்தவன் என்பதால் அவனது சரீரம் தன்னுடையது என வாதிட்டதாகவும், அச்சமயம் மிகாவேல் சாத்தனை தூஷனமாய் குற்றப்படுத்த துணியாமல், கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்றும் மட்டும் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையே யூதா 9ம் வசனத்தில் எழுதியுள்ளார்.  
 
 யூதா 
9. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். 

Sunday, 23 November 2014

வேதமும் விளக்கமும் - வெளிப்படுத்தல் 12:1 இல் வரும் ஸ்திரீ யாரைக் குறிக்கின்றது. ?

வெளிப்படுத்தல் 12:1 இல் வரும் ஸ்திரீ யாரைக் குறிக்கின்றது. ? (ஆர். சரொஜா.  ஆனமடுவ இலங்கை
 
வெளிப்படுத்தல் 12ஆம் அதிகாரத்தில் வரும் பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. இப்பெண் மரியாள் என சிலர் கூறுகின்றனர். கர்ப்பவதியாயிருக்கும் இப்பெண் பெற்றெடுத்த பிள்ளை இயேசுகிறிஸ்துவாக 5ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால் அவள் மரியாள் என்பது இவர்களது கருத்தாக உள்ளது. எனினும் இப்பெண்ணைப் பற்றிய விவரணம் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு அல்ல, மாறாக இஸ்ரவேல் ராஜ்யத்திற்கே பொருத்தமானதாய் உள்ளது. ஆதி. 37:9-10 இல் யோசேப்பு கண்ட சொப்பனத்தில், சூரியன் சந்திரன் பதினொரு நட்சத்திரங்கள் என்பன இஸ்ரவேல் ராஜ்யத்தின் ஆரம்ப கர்த்தாக்களைக் குறிக்கும் விவரணமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தல் 12:1 இலுள்ள பெண் இஸ்ரவேல் இராஜ்யம் என்று கருதப்படுகின்றது. இயேசுகிறிஸ்து இஸ்ரவேல் மக்களது வம்சத்தில் வந்தபடியால், இஸ்ரவேலைக்கு குறிக்கும் வெளிப்படுத்தல் 12:1 இலுள்ள பெண் பெற்றெடுத்கும் ஆண்குழந்தை இயேசுகிறிஸ்து என்பதும் இதன்படி சரியான விள்கமாகவே இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ராஜ்யம் கரப்பவேதனைப்படும் பெண்ணாக உமிக்கப்பட்டிருப்பதும் (ஏசாயா. 54:5, 66:7,  எரேமியா. 3:6-10மீகா 4:10, 5:2-3) வெளிப்படுத்தல் 12:1-2 கர்ப்பவதியாக சித்தரிக்கப்பட்ட்டிருக்கும் பெண் இஸ்ரவேல் ராஜ்யத்தையே குறிக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. 
 
 
வெளிப்படுத்தல் 12:1  
1. அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 
 
 
வெளிப்படுத்தல் 12:5
5. சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
ஏசாயா. 54:5,
5. உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். 
 
ஏசாயா 66:7,, 
7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 
 
 
எரேமியா. 3:6-10,
 
6. யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.

7. அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

8. சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

9. பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

10. இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். 
 
 
மீகா 4:10,
10. சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். 
 
 
மீகா  5:2-3)
2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

3. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். 

Saturday, 15 November 2014

வேதமும் விளக்கமும். சங்கீதம் 129:6 இல் வீட்டின்மேல் முளைக்கும் புல் என குறிப்பிடப்பட்டுள்ள புல் எது?

68. சங்கீதம் 129:6 இல் வீட்டின்மேல் முளைக்கும் புல் என குறிப்பிடப்பட்டுள்ள புல் எது(ஆர். மோகன், கொழும்பு – 06)








இவ்வசனத்தை விளங்கிக் கொள்வதற்கு வேதாகம காலத்தில் வீடுகளின் கூரைகள் எத்தகையவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அக்காலத்தில் வீடுகளுக்கு கூரைபோடும்போது முதலில் ஓரளவு இடைவெளியில் இருபக்கச் சுவரின்மீதும் மரப்பாரலைகள் வைக்கப்படும். அதன் பின்னர் மரக்கிளைகள், புதர்களாக வளரும் செடிகள், நாணற்புற்கள் என்பவற்றில் ஏதாவதொன்றினால் பரப்பாராலைகள் இணைக்கப்படும். கடைசியில் இதன் மீது மண்ணும் சிறுகற்களும் சேர்கப்பட்ட கலவை போடப்பட்டு கல் உருளையின் மூலம் இறுக வைக்கப்படும். மண்ணில் புற்களின் விதைகள் இருப்பதனால், அவை முளைவிட்டு வளரத் தொடங்கும். இத்தகைய புற்களே வீட்டின் மேல் முளைக்கும் புல் என வேதாகமத்தில் குறிப்பிப்பட்டுள்ளது. அக்காலத்தில் வீட்டுக் கூரைகள் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டமையால் அவற்றில் முளைக்கும் புற்கள் விரைவில் அழிந்துவிடும். கூரையில் வளரும் புற்களின் இத்தகு தன்மையைக் கருத்திற் கொண்டே சங்கீதம் 129:6 இல் சிறிதுகாலம் மட்டும் இருப்பவர்களுக்கான உருவகமாக வீட்டின் மேல் முளைக்கும் புல் குறிப்பிப்பட்டுள்ளது. 
 
 
6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம். 

Saturday, 8 November 2014

வேதமும் விளக்கமும் - சங்கீதம் 75:8 கலங்கிப் பொங்குகிற மதுபானம் விளக்கம் என்ன?

சங்கீதம் 75:8 இல் கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். என்றுள்ளது இதன் அர்த்தம் என்ன? (கே. ராமலிங்கம், செங்கல்பட்டு, இந்தியா)
 
தேவனுடைய கடுமையான நியாத்தீர்ப்புக்கான உருவகமாக மதுப்பானப் பாத்திரம் வேதாகமத்தின் சில வசனங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 14:10 இல் இவ்விரணம் நமக்கு புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். என்று அவ்வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. துன்மார்க்கர் தேவனுடைய தண்டனையாகிய உக்கிரமான மதுவைக் குடித்து அதினால் வாதிக்கப்படுவார்கள் என்பதே சங்கீதம் 75:8 இன் விளக்கமாகும். இத்தகைய விபரணத்தை யோபு 21:20 ஏசாயா 51:17 எரேமியா 25:15போன்ற வசனங்களிலும் நாம் அவதானிக்கலாம். 
 
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். 
 
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான். 
 
 எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
 
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு, 

Thursday, 6 November 2014

:வேதமும் விளக்கமும் - இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

66. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? (ஏ. ராயப்பன், திருவரம்பூர், இந்தியா) 




அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை' (அப். 4:12) இல் நாம் வாசிக்கலாம். இயேசுகிறிஸ்துவும் யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.அறிவித்துள்ளார். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரட்சிப்படைய வேறுவழிகள் ஏதுவும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

Monday, 3 November 2014

வேதமும் விளக்கமும் மத்.2:3 இலும் அப்.12: 1 இலும் வரும் ஏரோது ராஜாக்கள் இருவரும் ஒருவரா?

65. மத்தேயு 2:3 இலும் அப்போஸ்தலர் 12: 1 இலும் வரும் ஏரோது ராஜாக்கள் இருவரும் ஒருவரா? (ஆர் தேவராஜ், கட்டுகஸ்தோட்டை) 
மத்தேயு 2ஆம் அதிகாரத்தில் வரும் ஏரோது ராஜா மகா ஏரோது என அழைக்கப்படுபவனாவான். இவன் கி.மு. 37 முதல் கி.மு. 4 வரை பலஸ்தீனாவை ஆட்சி செய்தவனாவான். அப்போஸ்தலர் 12:1 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோது, மகா ஏரோதுவினுடைய பேரனான முதலாம் ஏரோது அகரிப்பாவாகும். 
 
 
மத்தேயு
2 அதிகாரம் 3. 
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 
 
 
அப்போஸ்தலர்
12 அதிகாரம் 1.
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 

Thursday, 30 October 2014

வேதமும் விளக்கமும் - அப்.1:6இன் படி அக்காலத்தில் இஸ்ரவேல் நாடு இஸ்ரவேலுக்கு சொந்தமில்லையா?

64. அப்போஸ்தலர் 1:6 இல் ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று சீடர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கின்றனர். அக்காலத்தில் இஸ்ரவேல் நாடு இஸ்ரவேலுக்கு சொந்தமில்லையா? (எச்.டி. ராணி, வேதப்பட்டி, இந்தியா)  
அக்காலத்தில் பாலஸ்தீனா ரோம ராஜ்யத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது. இயேசுகிறிஸ்து பிறந்தபோது ஏரோது ராஜாவும் அதன்பின்பு அவனது பிள்ளைகளும் ரோமர்களுக்காகவே பாலஸ்தீனாவை ஆண்டனர். ரோம அரசின் ஆளுனராகவே பிலாத்து பணியாற்றினான். தேவனால் அனுப்பப்படும் மேசியா தம்மை ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் எனும் நம்பிக்கை அக்காலத்து யூதர்கள் மத்தியில் இருந்தது. இதனால்தான் இயேசுகிறிஸ்து பரமேறிச் செல்வதற்கு முன்பு சீடர்கள் இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திருப்பிக் கொடுப்பீர் எனக் கேட்டனர். 

Saturday, 11 October 2014

வேதமும் விளக்கமும் -சங்கீதம் 19:4-6, சங்கீதம் 104:19 இது உண்மை நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது தானே!

63. சங்கீதம் 19:4-6, இல் சூரியன் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் ஓடுவதாகவும் சங்கீதம் 104:19 இல் சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது உண்மை நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது. இதன் விளக்கத்தைத் தரவும்(கே. சுந்தரம், சேலம், இந்தியா)


வேதாகம ஆசிரியர்கள் தாங்கள் வாழும் உலகைப் பற்றி எழுதும்போது மானிட கண்களுக்குத் தென்படும் விதமாகவே காட்சிகளை வர்ணித்துள்ளனர். இதனால் அவர்கள் தம் கண்களுக்குத் தென்பட்ட விதமாக சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பற்றி வேதாகமத்தில் எழுதியுள்ளனர். சங்கீதப் புத்தகம் மூலமொழியில் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளமையால் சூரியன் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை ஓடுவதாகவும் தீவிரித்து செல்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வேதாகம ஆசிரியர்கள் புவிச் சுற்றுகையை அறியாதவர்களாக தவறான முறையில் சூரியனைப் பற்றி எழுதியுள்ளதாக நாம் கருதலாகாது. ஏனென்றால் இன்றைய 21ம் நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாமும் இதேவிதமாக, நம் கண்களுக்குத் தென்படும் வண்ணம் இயற்கைக் காட்சிகளை வர்ணிப்போம். பூமி தன்னைத் தானே சுற்றுவதனாலேயே இரவும் பகலும் மாறி மாறி வருகின்றது  என்பதை நாம் நன்கறிந்திருந்தாலும், காலையில் எழுந்த்தும் ஆகா என்ன அருமையான புவிச்சுற்றுகை என்று சொல்ல மாட்டோம்மாறாக என்ன அருமையான சூரியோதயம் என்றே சொல்வோம். சூரியன் உதித்து மறைந்தல் எனும் சொற்பிரயோகத்தை இன்று நாம் எவ்விதமாக உபயோகிக்கின்றோமோ அதேவிதமாகவே வேதாகம ஆசிரியர்களும் உபயோகித்துள்ளனர்
 
 
4. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
 
5. அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
 
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். 

6. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. 

Friday, 3 October 2014

வேதமும் விளக்கமும்-மாற்கு 10:39 இல் நான் குடிக்கும் ... நீங்கள் குடிப்பீர்கள். விளக்கம் என்ன?

62. மாற்கு 10:39 இல் நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று இயேசுகிறிஸ்து எதைப் பற்றி கூறுகின்றார்? (வி.சரோஜா, ஆனமடுவ, இலங்கை) 


இயேசுகிறிஸ்து தன் சீடர்களுக்கு கூறிய விடயமே மத்தேயு 10:39 இல் உள்ளது. இது அவர் சிலுவையில் மரிப்பதற்கு முன்னர் சொல்லப்பட்டது. இவ்வசனத்தில், தான் அடையப்போகும் பாடுகளையும் மரணத்தையுமே இயேசுகிறிஸ்து நான் குடிக்கும் பாத்திரம் நான் பெறும் ஸ்நானம் என்று கூறுகின்றார். இயேசுகிறிஸ்துவைப் போலவே அவருடைய சீடர்களும் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பதைப் பற்றிய தீரக்கதரிசனமாக இவ்வசனம் உள்ளது. இத்தீரக்க்தரிசனத்தின்படியே சீடர்களுக்கு நடைபெற்றதைப் பிற்கால சரித்திரம் நமக்கு அறித் தருகின்றது. 

Wednesday, 17 September 2014

வேதமும் விளக்கமும் 1 இராஜாக்கள் 1:31-32 - ஒரு கோத்திரம் யார்? அது என்னவாயிற்று?

61.   1 இராஜாக்கள் 1:31-32 இல் உள்ளபடி 10 கோத்திரங்கள் இஸ்ரவேல் ராஜ்யமாகவும் ஒரு கோத்திரம் யூதா ராஜ்யமாகவும் மாறியது. மீதம் ஒரு கோத்திரம் யார்? அது என்னவாயிற்று? யார் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது(நவமணி ஆபேல், இந்தியா)
 தென்ராஜ்யத்தில் யூதா, பென்யமீன் எனும் இரு கோத்திரங்களும் இருந்தன. இவ்விரு கோத்திரங்களும் பொதுவாக ஒரு கோத்திரமாக கருதப்பட்டமையினாலேயே 1 இராஜாக்கள் 1:31-32 ஒரு கோத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

31. யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
32. ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

Sunday, 14 September 2014

வேதமும் விளக்கமும்-நம்மால் சரியாக அறிய முடியாத தேவநீதியையும் தேவராஜ்யத்தையும் எப்படித் தேடுவது?

60. மத்தேயு 6:33 இற்கான விளக்கம் தேவை. நம்மால் சரியாக அறிந்துக் கொள்ள முடியாத தேவநீதியையும் தேவராஜ்யத்தையும் எப்படித் தேடுவது? (செல்வி, சிவன்குடியேற்று, இந்தியா) 
யூத மக்கள் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் நீதிமான்களாக வாழலாம் என எண்ணினர். எனினும் தேவனுக்கு முன்பாக நீதிமானாக நிற்பதற்கு இத்தகைய மனித நீதி போதுமானதாக இருக்கவில்லை. இதனால், தேவனுடைய நீதி மனிதனுக்கு அவசியப்பட்டது. இத்தேவநீதியானது இயேசுகிறிஸ்துவினால் மனிதனுக்குக் கொடுக்கப்படும் நீதியாகும். ஒரு மனிதன் இயேசுகிறிஸ்துவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு அவரைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்கையில், இயேசுகிறிஸ்து அவனுடைய பாவங்களை அவனிலிருந்து எடுத்துப் போட்டு, அவனுக்கு தன்னுடைய நீதியைக் கொடுக்கின்றார். இதுவே தேவநீதி. கிரியைகளின் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவன் இலவசமாய் அருளும் நீதியைத் தேடும்படியே மத்தேயு 6:33இல் அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.தேவனுடைய ராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையாகும். ராஜ்யம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “பசீலியா“ எனும் பதம் அரசாட்சி, ஆளுகை, ராஜரீகம் எனும் அர்த்தங்களைக் கொண்ட பதமாகும். இது அரசாட்சி செய்யும் இடத்தையல்ல வெறும் ஆட்சியையே குறிக்கின்றது. இது குறிப்பிட்ட ஒரு இடத்தின் ராஜ்சியத்தை அல்ல மாறாக எவ்விடத்திலுமுள்ள தேவனுடைய ஆளுகையை வர்ணிக்கும் பதமாக உள்ளது. ஒருவன் தேவனுடைய ஆளுகையின் கீழ் இருக்கும்போது அவன் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கின்றான். எனவே தேவனுடைய ராஜ்யத்தை தேடுவதென்பது அவருடைய ஆளுகையின் கீழானவாழ்வை நாடுவதாகும். அதாவது ராஜாவாகிய அவரது சித்தம் யாதென்பதை அறிந்து அதன்படி வாழ்வதாகும். 

Tuesday, 9 September 2014

வேதமும் விளக்கமும் மத்தேயு 5.43 அன்புள்ள தேவன் சத்துருவை பகைக்கும்படி எப்படிக் கட்டளையிடலாம்?

59. மத்தேயு 5.43 இல் உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். என்று இயேசுகிறிஸ்து கூறுகின்றார். அன்புள்ள தேவன் சத்துருவை பகைக்கும்படி எப்படிக் கட்டளையிடலாம்? (ஆர். டேவிட், கண்டி, இலங்கை)
 
இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டு வசனத்தையல்ல மாறாக, பழைய ஏற்பாட்டுக்கு அக்கால யூதமதப் போதகர்களும் வேதபாரகர்களும் கொடுத்த விளக்கத்தையே குறிப்பிடுகின்றார். சத்துருவை பகைக்கும்படி பழைய ஏற்பாட்டில் எதுவித கட்டளையும் இல்லை. சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் எதிரிகள் மீதான வெறுப்பும் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் வெளிப்படுவதை நாம் அவதானிக்கலாம். எனினும் இவை சங்கீதக்காரனின் மன உணர்வுகளே தவிர, கர்த்தரின் கட்டளைகள் அல்ல. யூதமதப் போதகர்கள் இத்தககு பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்கும் பொழுது எதிரிகளைப் பகைக்குபடி கூறினர். அக்கால யூதர்கள் புறஜாதியார் மீது பகைமையையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இதனால் அவர்களது போதனை அவர்களது பகைமையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் வண்ணம் சத்துருக்களைப் பகைக்கும்படி அறிவுறுத்தல்களைக் கொடுத்தது. இயேசுகிறிஸ்து இத்தகைய யூதமப் போதரக்களின் கட்டளையையே மத். 5:43 இல் குறிப்பிட்டுள்ளார். புதிய ஏற்பாட்டைப் போலவே பழைய ஏற்பாட்டிலும் சத்துருவை நேசிக்கும்படியான கட்டளைகளே உள்ளன. லேவியராகமம் 19:33-34 இல் “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக” என்று கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும் யாத்திராகம்ம் 23:4-5 இல் சத்துருவிற்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வசனங்களில் “உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக. என்று சொல்லப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 25:21 இல் சத்துருவை நேசிக்கும்படி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. இதிலிருந்து சத்துருவை பகைப்பாயாக என்பது தேவ கட்டளையல்ல என்பது தெளிவாகின்றது. அவ்வாறு செய்யாமல் சத்துருவை நேசிக்கும்படி மத்தேயு 5:44 இல் கூறுகின்றார். 
 
 மத்தேயு 5:44 
 44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Sunday, 31 August 2014

வேதமும் விளக்கமும்-இன்று நாம் ஏன் ஆலயத்திற்குள் செல்லும்போது பாதரட்சைகளை கழற்றுவதில்லை?

58. தேவன் மேசேயிக்கு தரிசனமான போது பாதரட்சைகளைக் கழற்றும்படி கூறப்பட்டது. அப்படியானால் இன்று நாம் ஏன் ஆலயத்திற்குள் செல்லும்போது பாதரட்சைகளை கழற்றுவதில்லை? (சில்வியா மினோலி, நாவலப்பிடிடிய, இலங்கை)

தேவன் தரிசனமளித்த இடம் பரிசுத்தமானது என்பதனாலேயே பாதரட்சைகளைக் கழற்றும்படி மோசேக்கு கூறப்பட்டது. இதேவிதமாக யோசுவா 5:15 இல் யோசுவாவுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. எஜமானின் முன்னிலையில் வேலைக்காரர்கள் பாதரட்சைகளைக் கழற்றி எஜமானுக்கு மரியாதை செலுத்தும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. அதேசமயம், பாதரட்சைகள் இல்லாமலிருப்பது ஒருவனை அடிமை எனக் காட்டும் அடையாளமாகவும் இருந்தது.  ஏனெ்னறால் அக்காலத்தில் அடிமைகள் பாதரட்சைகளை அணிவதில்லை. இதிலிருந்து, மோசே பாதரட்சைகளை கழற்றிய செயலானது அவன் தேவனுக்கு மரியாதை செய்யும் செயலாகவும் அவர் முன்பாக தான் ஒரு அடிமை என்பதை உணர்த்திடும் செயலாகவும் இருந்தது. நமது நாட்டில் பிறமத வழிபாட்டிடங்களில் மக்கள் பாதரட்சை இன்றியே ஆலயத்திற்குள் உட்செல்லுவதையே நாம் அவதானிக்கலாம். இது தெய்வத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. அதிக குளிரான பிரதேசங்களில் வெறுங்காலுடன் தரையில் இருப்பது சிரமமானதாய் இருந்தமையால் ஐரோப்பிய கலாசாரத்தில் பாதரட்சையுடனேயே மக்கள் ஆலயத்திற்குள் சென்றனர். ஐரோப்பியர்களே கிறிஸ்தவத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமையால், அவர்களுடைய கலாசாரத்தின்படி நம்நாட்டு கிறிஸ்தவர்களும் பாதரட்சைகளுடன் ஆலயத்திற்குள் செல்கின்றனர். விசுவாசிகள் தரையில் அமரும் சபையில் மட்டுமே மக்கள் பாதரட்சைகளைக் கழற்றிவிட்டு உள்ளே செல்கின்றனர். சில பிரதேசங்களில் பாதரட்சைகளை கழற்றுவது ஒரு பாரம்பரிய செயலாக மாறிவிட்டது. அதாவது, பாதரட்சைகளை கழற்ற வேண்டும் என்பதற்காக கழற்றப்படுகின்றதே தவிர தேவனுக்கு மரியாதை செலுத்தும் மனநிலை பலருக்கும் இருப்பதில்லைபலர் பாதரட்சைகளைக் கழற்றாமலேயே தேவனுக்கு மரியாதை செலுத்தும் மனநிலையில் ஆலயத்திற்குள் செல்கின்றனர். எனவே, இவ்விடயத்தில் கண்டிப்பான கட்டளைகள் எதுவும் இல்லை. தேவனுக்கு மரியாதையும் கனமும் செலுத்தும் மனநிலையே அவசியம்.
 
 
15. அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

Monday, 25 August 2014

வேதமும் விளக்கமும் மத்தேயு 12:43-45 அசுத்த ஆவி மறுபடியும் அவனுக்குள் வருவது எப்படி சாத்தியம்?

57. மத்தேயு 12:43-45 இல் ஒருவனிலிருந்து வெளியேறும் அசுத்த ஆவி மறுபடியும் அவனுக்குள் வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது, இது எப்படிச் சாத்தியமாகும்? (ஐசக் பிரான்சிஸ், கண்டி, இலங்கை)

 இயேசுகிறிஸ்து யூதர்கள் மத்தியில் வல்லமையான செயல்களைச் செய்தும் அவர்கள் அவரை மேசியாகவாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிசாசுக்கள் துரத்தப்பட்டன. வியாதியஸ்தர் குணமடைந்தனர்,  தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட்டது. மத்தேயு 12ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பரிசேயருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கங்கள், கருத்து முரண்பாடுகள் பற்றி நாம் வாசிக்கலாம்.  இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்கள் அவர் மேசியா என்பதற்கான அடையாளங்களாயிருந்தன. அப்படியிருந்தும் அவரக்ள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது செயல்களைத் தவறாகப் புரிந்து கொண்ட பரிசேயர்கள் அவர் மீது பல விதமான குற்றச் சாட்டுக்களைக் கொண்டுவந்தனர். அவர் ஓய்வுநாள் கட்டளைகளையும் முன்னோரின் பாரம்பரியங்களையும் மீறுகிறவர் என்றும், பிசாசுக்களைின் தலைவனைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறவர் என்றும் கூறினர். யூதர்களுடைய இத்தகைய தன்மையை அவர்களுக்குப் புரிய வைப்பதற்காகவே மத்தேயு 12:43-45 இலுள்ள விபரணம் சொல்லப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தில் 22ம் வசனத்திலிருந்து வாசிக்கும்போது இயேசுகிறிஸ்து தான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுக்களைத் துரத்துவதை அறியத் தருவதோடு, பிசாசைத் துரத்துவதற்குத் தேவவல்லமை அவசியம் என்பதை 43-45 வரையிலான வசனங்களில் கூறுகின்றார். ஒரு மனிதனிலிருந்து அசுத்த ஆவி துரத்தப்பட்டும் அம்மனிதன் தேவவல்லமையைப் பெறாதவனாய் இருந்தால், அவனுக்குள் மறுபடியுமாய் அசுத்தஆவி வரும் என்பதை இயேசுகிறிஸ்து அறியத் தருகிறார். ஒருதரம் தேவவல்லமையினால் அசுத்த ஆவி துரத்தப்பட்டமையினால் அதுமறுமுறை வரும்போது, தன்னைத் துரத்தமுடியாத அதிகபலத்தோடு இருப்பதற்காக மேலதிக ஆவிகளையும் கூட்டிக் கொண்டு வருகின்றது. எனவே ஒரு மனிதிலிருந்து அசுதத ஆவி துரத்தப்பட்டப்பின் அவ் ஆவி மறுபடியும் வராதபடிக்கு அம்மனிதனில் தேவவல்லமை இருக்க வேண்டும். தேவனருளும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலேயே அசுத்தஆவிகள் மறுமடியும் வராமல் தடுக்க முடியும். 
 
 
மத்தேயு 12:43-45  
43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:

44. நான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,

45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
 

Friday, 15 August 2014

வேதமும் விளக்கமும் - வெளிப்படுத்தல் 3:8 ல் விளக்கம் என்ன?

56. வெளிப்படுத்தல் 3:8 ல் இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.இதன் அர்த்தம் என்ன? (ஜே. சரோஜா, பதுளை, இலங்கை)
 
 
வேதாகம காலத்தில் மக்கள் தம் வீட்டு வாசல் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பர். வீட்டில் எவரும் இல்லாத சமயத்திலும் இரவு நேரத்திலும் மட்டுமே வாசற்கதவு மூடப்பட்டிருக்கும். ஒரு வீட்டில் வாசல் கதவு திறந்திருப்பது, வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களோடு பேசுவதற்காக வீட்டுக்குச் செல்லலாம் என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அடையாளமாய் இருந்தது. எனவே இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். எனத் தேவன் கூறுவது அவரிடம் எந்நேரமும் போகலாம். அவர் நம்மைச் சந்திப்பதற்கு எந்நேரமும் போகலாம் அவர் நம்சை் சந்திப்பதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவராய் இருக்கின்றார் என்பதையே அறியத் தருகின்றார். 

Sunday, 10 August 2014

:வேதமும் விளக்கமும்- ரோமர் நிருபத்தை எழுதியது யார்? (ரோமர் 16:22)- தெர்தியு, அப். பவுலா?


55. ரோமர் 16:22 இல் இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகின்றேன் என்று எழுதியிருக்கின்றதே. ஆனால் நிருபத்தின் ஆரம்பத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக உள்ளதே. இதைப் பவுல் எழுதவில்லையா? (என் அந்தோனிப்பிச்சை, மூக்கையூர், இந்தியா)
 
பவுலினுடைய நிருபங்களில் அநேகமானவை அவர் சொல்லச் சொல்ல அவருடைய உதவியாளர்கள் எழுதியவைகளாகும். அவ்வகையில் ரோமருக்கு பவுல் எழுதும் நிருபத்தை அவர் சொல்லச் சொல்ல தெர்தியு என்பவர் எழுதியேதோடு ரோமர் 16:22  இல் தனது வாழ்த்துதல்களையும் தெரிவித்துள்ளார். 

Wednesday, 6 August 2014

வேதமும் விளக்கமும்-உபாகமம் 33ஆம் அதிகாரத்தில் மோசே ... சிமியோன் கோத்திரத்தை ஆசீர்வதிக்கவில்லை ஏன்?

54.  உபாகமம் 33ஆம் அதிகாரத்தில் மோசே எல்லாக் கோத்திரங்களையும் ஆசீர்வதிக்கும்போது சிமியோன் கோத்திரத்தை ஆசீர்வதிக்கவில்லை ஏன்? (நவமணி ஆபேல்,நெய்வேலி, இந்தியா)

அக்காலத்தில் சிமியோன் கோத்திரத்தினர் தனியானதொரு கோத்திரமாக கருதப்படவில்லை. யோசுவா 19:1-19 இல் இக்கோத்திரத்தார் யூதா கோத்திரத்தோடு சேர்க்கப்பட்டுள்ளதை அறியத் தருகின்றது. அதேசமயம் யோசேப்பின் இருகுமாரரான எப்பிராயும் மனாசே என்போருடைய வம்சத்தினரும் தனிக்கோத்திரங்களாக கருதப்படாமையினால், மொத்தம் 12 கோத்திரங்கள் எனும் கணிப்பீட்டில் பிற்காலத்தில் யூதா கோத்திரத்தோடு இணையப்போகும் சிமியோன் கோத்திரம் அக்காலத்தில் தனியான கோத்திரமாகக் கருதப்படவில்லை. எனவே மோசே அக்கோத்திரத்தை தனியாக ஆசீர்வதிக்கவில்லை. எனினும் அவர்கள் யூதா கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

Tuesday, 29 July 2014

வேதமும் விளக்கமும்- அப். பவுல் திருமணம் முடித்திருந்தாரா?

53. பவுல் திருமணம் முடிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் திருமணம் செய்திருந்தார் என்று சிலர் சொல்கிறார்களே! இது பற்றிய விளக்கம் தேவை. (ஏ.ராயப்பன், திருச்சி, இந்தியா)

பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களை வாசிக்கும்போது அவர் அச்சமயம் தனி மனதராகவே இருந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. 1 கொரிந்தியர் 7 ஆம்     அதிகாரம் 7ம் 8ம் வசனங்களில் திருமணம் முடித்தவர்களும் தம் துணையை இழந்தவர்களும் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும் என பவுல் கூறுவது அவர் அச்சமயம் தனிமனிதராகவே இருந்துள்ளதை அறியத் தருகின்றது. அத்தோடு 1 கொரிந்தியர் 9:5 இல், மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? எனும் பவுலின் கேள்வியும் அவர் மற்றைய அப்போஸ்தலர்களைப் போல மனைவியுடன் ஊழியப்பிரயாணங்களை மேற்கொள்ளவில்லை என்பதை அறியத் தருகின்றது.

பவுல் தனது ஊழிய காலத்தில் தனி மனிராக இருந்தபோதிலும், அவர் ஆரம்பத்தில் திருமணம் முடித்திருந்தார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதலாவது பவுல் ஆரம்பத்தில் யூத ஆலோசனைச் சங்கத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தமையாகும். யூத ஆலோசனைச் சங்கத்தில் திருமணம் முடித்தவர்களே அங்கத்தினர்களாக இருந்தமையால் அச்சங்கத்தில் அங்கத்தினராக இருந்த பவுலும் திருமணம் முடித்தவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. இரண்டாவதாக பவுல் ஒரு பரிசேயனாகவும், யூதமதப் போதகராகவும் இருந்தமையாகும். யூதமதப் போதகர்கள் திருமணம் முடித்திருக்க வேண்டும் என்பது அக்கால யூதமதமார்க்க சட்டமாயிருந்தது. தான் யூதமார்க்க சட்ட திட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு வாழ்ந்தாகப் பவுல் கூறுவதிலிருந்து அவர் அச்சட்ட திட்டங்களின்படி ஆரம்பத்தில் திருமணம் முடித்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. இது உண்மையின் பவுலின் மனைவிக்கு என்ன நடந்தது என்பத பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இதனால் ஒன்றில் பவுலின் மனைவி மரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இரட்சிக்கப்பட்ட பின்பு அவரை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் பின்னர் பவுல் மறுவிவாகம் செய்யாமல் தனிமனிதராகவே வாழ்ந்துள்ளார்.

I கொரிந்தியர் 7 அதிகாரம் 7-8
7. எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

8. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்

5. மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

Tuesday, 22 July 2014

வேதமும் விளக்கமும்-வெளி. 7:4- பரலோகத்தில் 1,44,000 பேருக்கு மட்டும்தான் இடம் உள்ளதா?


52. வெளிப்படுத்தல் 7:4 இல் ”முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்”. என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியால் பரலோகத்தில் இத்தனை பேருக்கு மட்டும்தான் இடம் உள்ளதா? (எஸ். ஜோர்ஜ் விக்டர், ஜம்முகாஷ்மீர், இந்தியா)

வெளிப்படுத்தல் 7:4 இல் முத்திரைப் போடப்பட்டவ்கள் இஸ்ரவேல் மக்களாவர். இந்த இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர் இஸ்ரவேல் ஜாதியினரின் 12 கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவ்வதிகாரத்தின் 5 முதல் 8 வரையிலான வசனங்கள் அறியத் தருகின்றன. அதற்கடுத்த வசனத்தில், அதாவது 9ம் வசனத்தில் இவைகளுக்குப் பின்பு “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.” என யோவான் கூறுகின்றார். பரலோகத்தில் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்க்கும் அதிகமானோர் இருப்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்​

5. யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

6. ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

7. சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

8. செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

Sunday, 13 July 2014

தாலி கட்டி விவாகம் பண்ணுவதற்கு வேதாகமத்தில் ஆதாரங்கள் உள்ளதா?

51. தாலி கட்டி விவாகம் பண்ணுவதற்கு வேதாகமத்தில் ஆதாரங்கள் உள்ளதா? (எம்.பி. டேவிட், திருவேலூர், இந்தியா)


தாலிகட்டி விவாகம் பண்ணுவது இந்து மதத்தரது பழக்கவழக்கமாகும். திருமண வைபவங்களில் மணமகனும் மணமகளும் ஒன்றாக இணைந்ததிற்கு அடையாளமாக ஏதாவது ஒரு அடையாளச் செயல் இருக்கும். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மணமகன் மகளுக்கு தாலிகட்டும் முறையும் சிங்களவர் மத்தியில் இருவரது சுண்டுவிலல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அவற்றுக்கு நீர் வார்ப்பதும் பறங்கியர் மத்தியில் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தலும் உள்ளது. வேதாகம காலத்தில் மணமகன் தன் மேலாடையால் மணமகளைப் போர்த்தும் செயலே திருமணத்தில் தம்பதியினர் இணைவதற்கான அடையாளச் செயலாக இருந்தது. இது மணமகன் மணமகளைத் தன் பாதுகாப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அடையாளச் செயலாகும். வேதாகமக்கால மக்களது இம்முறையை நாம் கைக்கொள்வதில்லை. மாறாக நாம் வாழும் பிரதேசத்துக் கலாச்சார முறையின்படி திருமண வைபவங்களை நடத்துகிறோம். இத்தகைய விடயங்களில் கிறிஸ்தவர்களளாகிய நாம் பிறமததெய்வங்கள் மற்றும் பிறமத நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட வைபவ முறைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, 9 July 2014

வேதமும் விளக்கமும் - மத்.27:5, அப். 1:18 யூதாஸ் எப்படி மரித்தான்? நான்றுகொண்டா? குடல்சரிந்தா?


50. மத்தேயு 27:5 இல் யூதாஸ் நான்றுகொண்டு சொத்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்போஸ்தலர் 1:18 இல் அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” என்று கூறப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டிற்கான காரணம் யாது? (எஸ். சரோஜா, கண்டி)





இவ்விரு வசனங்களிலும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. யூதாசின் மரணத்தைப் பற்றியே இவ்விரு வசனங்களும் கூறுகின்றன. மத்தேயு பாலஸ்தீனாவில் வாழ்ந்த யூதர்களுக்கே தன் சுவிஷேசத்தை எழுதியமையால், அப்பிரதேச மக்கள் அறிந்திருந்த யூதாசின் மரண சம்பவத்தை விபரமாக எழுதாமல், ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கே லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதியமையால், அவர் யூதாஸின் மரணம் பற்றி பேதுரு கூறியவற்றை விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் யூதாஸ் தற்கொலை செய்வதற்காகக தூக்குப் போட்டுக் கொண்ட இடம் குத்துப்பாறைகளுடனான இடமாகும். அவன் தூக்குப் போட்டுக் கொண்ட சமயம், தூக்குக் கயிறு கட்டப்பட்டிருந்த மரத்தின் கிளை முறிந்தமையால் அவன் தலைகீழாக கீழே விழுந்தான். இதனால் அவனது வயிறு வெடித்து குடல்களெல்லாம் சரிந்து போயிற்று. அப்போஸ்தலர் லூக்காவைப் போல மத்தேயு விபரமாக எழுதாமல் சுருக்கமாக ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எக் குறிப்பிட்டுள்ளார்.  

  மத்தேயு 27:5- அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
அப்போஸ்தலர் 1:18  - அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

Sunday, 22 June 2014

யோவான் 14:2 இன் விளக்கம் என்ன?

யோவான் 14:2 இன் விளக்கம் என்ன? (எஸ். ஜோர்ஜ் விக்டர், ஜம்முகாஷ்மீர், இந்தியா)

'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்'. என்று இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் தன் சீடர்களி்டம் கூறினார். பரலோகத்தையே இயேசுகிறிஸ்து பிதாவின் வீடு என்று குறிப்பிட்டுள்ளார். வாசஸ்தலங்கள் என்பதற்கு மூலமொழியில உபயோகிக்ப்பட்டுள்ள கிரேக்கப் பதத்தின் அர்த்தம் நிரந்தரமான இருப்பிடங்கள் என்பதாகும். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும்  தேவனோடு இருக்கக்கூடிய அளவு பரலோகத்தில் இடமிருப்பதையே இயேசுகிறிஸ்து நமக்கு அறியத் தருகிறார். எனினும், கிறிஸ்தவ்களுக்கான இருப்பிடத்தை பற்றி ஆயத்தம் செய்யும் செயல் எத்தகையது என்பது பற்றி இயேசுகிறிஸ்து எதுவும் கூறவில்லை. இயேசுகிறிஸ்து தனது சிலுவை மரணத்திற்குச் சற்று முன்பே இவ்வாறு கூறியமையால், அவரது மரணம் உயிர்தெழுதல் என்பன மீட்கப்பட்ட ஜனங்களுக்குப் பரலோகத்தில் இருப்பிடத்தை ஆயத்தம் செய்யும் செயலாகக் கருதப்படுகின்றது. இயேசுகிறிஸ்து சிலுவையில் செய்த செயலே ஒருவன் பரலோகத்திற்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியமையால் பரலோகத்தில் நமக்கு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணும் செயலாக அவருடைய மரணம் உயிர்தெழுதல் என்பவைகள் உள்ளன.

Sunday, 15 June 2014

வேதமும் விளக்கமும் -பெரிய வெள்ளி மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. அது ஏன்?

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25ம் திகதி தவறாமல் வருகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து மரித்த தினமான பெரிய வெள்ளி மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. அது ஏன்? ஏன் இந்த மாற்றம். பிறந்த நாளும் இறந்தநாளும் ஒவ்வொரு நாளும் ஒரே நாளில் தானே வர வேண்டும்? (W.அல்பிரட் கோதாவாரி கிழக்கு, இந்தியா)

இயேசுவின் பிறப்பை டிசம்பர் மாதம் 25ம் திகதி நினைவு கூறும் கிறிஸ்தவ சபை ஒவ்வொரு வருடமும் அவது மரணம் வெள்ளிக்கிழமையும், உயிர்தெழுதல் ஞாயிற்றுக்கிழமையும் வரும்விதமாக நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, அச்சம்பவங்களை நினைவு கூர்வதற்கான நாட்களை தெரிவு செய்கின்றது. இயேசுவின் மரண தினம் ஒவ்வொரு வருடமும் வெள்ளிக்கிழமை வருகின்றமையே திகதி வித்தியாசப்படுவதற்கான காரணமாகும்.

Sunday, 8 June 2014

வேதமும் விளக்கமும் சங்கீதம் 19:6 - உண்மையில் சூரியன் சுற்றுகின்றதா?

வேதாகமத்தில் சில வசனங்களை வாசிக்கும்போது சூரியன் சுற்றுவதாக வேதாகமம் கூறுவதாக தெரிகின்றது. உண்மையில் சூரியன் சுற்றுகின்றதா? (ஆர். ஸாம் ஜெயபால், சோத்துப்பாறை, இந்தியா)





சங்கீதம் 19:6 இல் சூரியன் வானங்களின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகின்றது. அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. புவிச் சுற்றுகையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சங்கீதம் 19:6 இல் சூரியன் சுற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என வாதிட்டனர். ஆனால் அண்மைக்காலத்தில் சங்கீதக்காரனின் கூற்று புதுவடிவம் பெற்றது. சூரியனானது கோள்மண்டலத்துடன் சேர்ந்து அண்டவெளியில் சுற்றுகின்றது என்று சமீபகால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம்முடைய சூரியக்குடும்பமானது மணிக்கு 72,000 மைல்கள் வேகத்தில் செல்கின்றது என்றும் இதன் சுற்றுவட்டம் பூர்த்தியடைய இரண்டு மில்லியன் நூற்றாண்டுகள் தேவை என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. 

Thursday, 5 June 2014

வேதமும் விளக்கமும்நெகேமியா 9:3 - 1 ஜாமம் தற்போதைய மணியில் கிட்டத்தட்ட எவ்வளவு மணித்தியாலம்?

நெகேமியா 9:3 இல் கூறப்பட்டுள்ள 1 ஜாமம் தற்போதைய மணியில் கிட்டத்தட்ட எவ்வளவு மணித்தியாலம்? (ஜோசப், சுவிட்சர்லாந்து)

அக்காலத்தைய நேரக்கணிப்பீட்டில் ஒரு ஜாமம் 3 மணித்தியாலங்களைக் கொண்டிருந்தது. அக்கால மக்கள் பகலை 4 ஜாமங்களாகவும் இரவை 4 ஜாமங்களாகவும் பிரித்திருந்தனர். எனவே, ஒரு ஜாமம் என்பது ஒரு பகலின் அல்லது இரவின் நான்கின் ஒரு பகுதியாகும். இதனால் புதிய வேதாகம மொழி பெயர்ப்புகளில் இவ்வசனத்தில் ஜாமம் என்பது, பகலில் நான்கில் ஒரு பங்கு நேரமளவும் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நெகேமியா 9:3 (பழைய மொழிபெயர்ப்பு)
3. அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

நெகேமியா 9:3 (திருவிவிலியம்)
3 ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர். 

Sunday, 1 June 2014

வேதமும் விளக்கமும் பிரசங்கி 1:7 இற்கான விளக்கம் என்ன?

பிரசங்கி 1:7 இற்கான விளக்கம் என்ன? எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். என்று சொல்லப்பட்டுள்ளது. (ஜெரால்ட் ஜோர்ஜ், ஊட்டி, இந்தியா)

பிரசங்கி முதல் அதிகாரத்தில் 4 முதல் 1 வரையிலான வசனங்களில் மனிதன் வாழ்ந்திடும் உலகம் மாயையானது என்பதற்கு மூன்று காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவது காரணம் 4 முதல் 7 வரையிலான வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனங்களில் உலகம் மாற்றமடையாமல் எப்போதும்போல, ஒரே விதமாக இயங்கிக் கொண்டிருப்பதனால் உலகம் மாயையானது என்பதை நிரூபிப்பதற்காக 4 உதாரண விடயங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மூன்றாவது விடயமே 7ம் வசனத்தில் உள்ளது. பிரசங்கி இவ்வசனத்தில் நீரின் சுற்றுவட்டத்தை அறியத் தருகின்றார். இது விஞ்ஞான ரீதியாக இன்று கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. பூமியிலுள்ள நீரே ஆவியாகி மேலே சென்று பின்னர் பூமியின் மீது மழையாக பொழிகிறது என்பதை நாம் அறிவோம். இதைத்தான் பிரசங்கி 1:7 இல், எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது. தாங்கள் உற்பத்தியான இடத்திற்கு நதிகள் மறுபடியும் திரும்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோபு 36:27 இலும் இதைப் பற்றி நாம் வாசிக்கலாம். “அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.” என அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நதிகள் கடலிலே தண்ணீரைக் கொட்டினாலும் கடல் ஒருநாளும் நிரம்பாது. கடல் நீர் ஆவியாகச் சென்று நதிகள் உற்பத்தியாகும் இடங்களில் மழையாக பொழிகிறது என்ப பிரசங்கி 1:7இன் விளக்கமாகும்.

Wednesday, 28 May 2014

வேதமும் விளக்கமும்-வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சேக்கல் எத்தனை ராத்தல்?

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சேக்கல் என்பது தற்கால நிறையளவில் கிட்டத்தட்ட எத்தனை ராத்தல்? (ஜோசப், சுவிட்சர்லாந்து)

கி.மு. 7ஆம் நூற்றாண்டில் நாணயம் தயாரிக்கும்முறை உருவாகும் வரை பணமாக உபயோகிக்கப்பட்ட உலோகங்கள் அவற்றின் நிறையை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடப்பட்டன. ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம்ஸ் அல்லது 0.4 அவுன்ஸ் நிறையுடையது.

Sunday, 25 May 2014

வேதமும் விளக்கமும் - பேதுரு தலைகீழாக சிலுவையில் மரித்தது உண்மையா? பைபிளில் இது பற்றி ஏன் இல்லை?

அப்போஸ்தலானாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்ததாக கூறுகிறார்கள். இது உண்மையா? அப்படியாயின் இதுபற்றி ஏன் வேதாகமத்தில் குறிப்பிடப்பிடப்படவில்லை? (கென்னடி, சார்ள்ஸ் டேவிட், பூனா-19, இந்தியா)





வேதாகமத்தில் சீடர்களுடைய வாழ்வில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் குறிப்பிடப்பட்டவில்லை. இதனால் பேதுருவின் மரணம் பற்றி வேதாகமத்தில் நாம் வாசிப்பதில்லை. ஆயினும், முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திர மற்றும் பாரம்பரியக் குறிப்புகள் மூலம் பேதுருவின் மரணம் பற்றி நம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது. அதன்படி பேதுரு கி.பி. 64ஆண்டு இரத்த சாட்சியாக மரித்தார். இயேசுகிறிஸ்துப் போல மரிக்கத் தான் தகுதியற்றவர் என்பதை உணர்ந்தவராக பேதுரு தன்னைத் தலைகீழாக சிலுவையில் அறையும்படி கேட்டுக் கொண்டமையால் அவரை அவ்விதமாக சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.
 

Monday, 19 May 2014

வேதமும் விளக்கமும்-இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் என்ன?

42. இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் என்ன? (ஆர். டேவிட். கண்டி, இலங்கை)
 
 
 
யோவான் ஸ்நானகன் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தையே கொடுத்தான். இயேசுகிறிஸ்து பாவமற்றவராக இருந்தமையால், மற்றவர்களைப் போல அவர் பாவங்களிலிருந்து மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கவில்லை. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மற்றவர்களைப் போல பாவஅறிக்கை செய்யவில்லை. இதனால், பாவங்களிலிருந்து மனந்திருப்பியவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தை இயேசுகிறிஸ்து பெற்றமைக்கான காரணம் என்ன என நாம் வினவலாம். இயேசுகிறிஸ்து  மக்களுடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக வந்தார். இப்பணி அவருடைய ஞானஸ்நானத்தின்போதே ஆரம்பமானது. இயேசுகிறிஸ்து யாருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக வந்தாரோ அவர்களோடு தன்னை அடையாளங் காண்பிப்பதற்காக அவதாவது பாவிகளை பிரதிநிதிப்படுத்துவதற்காக, யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். எந்தப் பாவத்திலிருந்தும் மனந்திரும்பவேண்டியிராத இயேசுகிறிஸ்து, தான் யாருடைய பாவங்களை சுமந்து தீரக்க் வந்தாரோ அவர்களோடு தன்னை அடையாளங் காணப்பதற்காகவே ஞானஸ்நானம் பெற்றார். 
 
இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறவந்தபோது ஆரம்பத்தில் அவருக்கு ’ஞானஸ்நானம் கொடுக்க யோவான் மறுத்தான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ “இப்பொழுது இடம் கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கின்றது என்று சொன்ன பின்பே யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். எல்லா நீதியையும் என இயேசுகிறிஸ்து கூறுவது அவரது பூலோக ஊழியத்துக்கான முழுமையான திட்டமாகும். தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகுக்கு வந்தார். இதனால் அவர் தேவனுடைய நியமங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியவராக இருந்தார். இதில் ஒரு அம்சம் அவர் பாவிகளோடு தன்னை அடையாளங்காணுதலாகும். இதை அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் செய்துள்ளார். பாவிகள் பெற வேண்டிய ஞானஸ்நானத்தைப் பெற்று தன்னை அவர்களோடு இயேசுகிறிஸ்து அடையாளங் கண்டார். ஞானஸ்நானத்தில் ஆரம்பமான இந்த அடையாளங் காணுதல் சிலுவை மரணத்தில் அதன் உச்ச நிலையை அடைந்தது.