- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 24 November 2013

பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” (மத். 15:25-26) (மாற்கு 7:24-30)




இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே யூத இனவாதத்தை வலியுறுத்தும் ஒரு வாக்கியமாக இன்று அநேகரால் விமர்சிக்கப்படும் பிசாசினால் கொடிய வேதனைப்படும் தன் மகளைக் குணப்படுத்தும்படி மன்றாடிய ஒரு கனானியப் பெண்ணுக்கு அவர் கொடுத்த பதிலாகும். அந்தக் கானானியப் பெண்(1) “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்“ என்று இயேசுவைப் பணிந்துகொண்டபோது அவர் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்று அவளுக்கு கூறினார். (மத். 15:25-26) மாற்கு எழுதிய சுவிஷேசத்திலும் இச்சம்பவத்தை நாம் வாசிக்கலாம். (மாற்கு 7:24-30). (2)இஸ்ரவேலர் பாலஸ்தீனாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அப்பிரதேசத்தில் கானானியர்களே குடியிருந்தமையால் அப்பெண் யூதர்களுடைய ஆரம்பகால எதிரியின் பரம்பரையில் வந்தவளாக இருந்தாள். (3) இயேசுவினுடைய காலத்தில் தீரு சீதோன் பகுதிகளில் வாழ்ந்த கானானியர்கள், யூதர்களுடன் பகைமை கொண்டவர்களாகவே இருந்தனர்.(4) யூதப் போதகர்கள் யூதரல்லாதவர்ககளைக கானானியர் என்றே அழைத்தனர்(5) இதனால் அக்காலத்தைய யூத இனவாதிகளைப் போல இயேசுவும் கானானியப் பெண்ணுக்கு உதவி செய மறுத்துள்ளார் என்பது அநேகரது தர்க்கமாகவுள்ளது.(6)

உண்மையில் இயேசு கானானியப் பெண்ணோடு நடந்து கொண்ட முறை நமக்கு அதிக குழப்பத்தையே ஏற்படுத்துகின்றது. இயேசு தன் ஊழிய காலத்தில் யூத எல்லையைத் தாண்டி புறஜாதி நாட்டுக்குப் போகவில்லை என்பதையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் அவதானிக்கலாம். அவர் தீரு சீதோன் பட்டணங்கள் இருந்த திசையில் சென்றதாகவே மத்தேயு குறிப்பிட்டுள்ளார். (மத். 15:21) இயேசு தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளுக்குப் போனதாகக் கூறும் மாற்கு (7:24) இச்சம்பவத்தின் பின், அப்பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டாகவே அறியத்தருகின்றார். (மாற். 7:31) இதிலிருந்து இயேசு தீரு சீதோன் பகுதியில் யூதேய எல்லை வரையிலுமே சென்றுள்ளார் என்பதும் “கானானியப் பெண் இயேசுவை யூத மண்ணிலேயே சந்தித்துள்ளாள்.(7). என்பதும் தெளிவாகின்றது. இது இயேசு புறஜாதி மண்ணை மிதிப்பதற்கும் விரும்பாத கடுமையாக இனவாதியாக இருந்துள்ளதைக் காண்பிக்கின்றது என்பது வேதவிமசகர்களது கருத்தாகும்(8). மேலும் இயேசு ஆரம்பத்தில் அப்பெண்ணுக்கு பதிலொன்றும் கூறாமல் அவளை அசட்டை செய்துள்ளார். ““ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்“  என அவள் மன்றாடிய போதும் (10) அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.(மத்.15:22-23) “ இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே“ எனும் சீடர்களின் வார்த்தைகள் (மத். 15:23) மூலமொழியில் “அவளது வேண்டுதலை அருளச் செய்த விண்ணப்பமாகவே உள்ளது.(12) ஆனாலும் இயேசுவோ, கானானியப் பெண்ணுக்கு உதவி செய்யாமல் தன் சீடர்களிடம் 'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்(மத். 15:24) (13) இதனால், இயேசு புறஜாதியாருக்கு உதவி செய்ய மனமற்றவராக இருந்துள்ளதாகப் பலர் கருதுகின்றனர். (14)

இயேசுவின் வார்த்தைகள் அதாவது தான் இஸ்ரவேல் மக்களிடத்திற்கே அனுப்பப்பட்டேன்“ எனும் அறிவிப்பு, கானானியப் பெண்ணுக்கல்ல  மாறாக சீடர்களுக்கே சொல்லப்பட்டது(15) என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இயேசு ஏற்கனவே அவர்களை ஊழியத்திற்கு அனுப்பும்பொழுது இஸ்ரவேல் மக்களிடத்திற்கே போகும்படி அறிவுறுத்தியிருந்தார். (மத். 5-6) இதற்குக் காரணம் வேததிட்டத்தின்படி முதலில் இஸ்ரவேல் மக்களுக்கே சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியிருநத்து. (16) தேவனுடைய திட்டத்தின் இந்தக் காலக்கிரம ஒழுங்கு முறையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனினும், இயேசு இஸ்ரவேல் மக்களுக்காக மட்டுமே உலகிற்கு வந்தார் எனக் கருதுவது தவறாகும். அவர் முழு உலகினருக்காகவும் வந்துள்ள போதிலும் சரீரப்பிரகாரமான அவரது ஊழியம் இஸ்ரவேலுக்கு மட்டுமானதாகவே இருந்தது. “இஸ்ரவேல் மக்களிடத்திற்கே தான் பிதாவினால் அனுப்பப்பட்டதை அறிந்திருந்த இயேசு அதைப் பற்றி இங்கு தெரிவித்துள்ளார். (17) இதனால், புறஜாதியாருக்குச் சுவிஷேசத்தை அறிவிக்க தன் அப்போஸ்தலர்களை நியமித்த இயேசு தனது ஊழியகாலத்தில் தன் பணியை இஸ்ரவேலில் மாத்திரமே செய்து வந்தார். 

சீடர்களுக்கு சொல்லப்பட்ட இயேசுவின் வார்த்தைகள் கானானியப் பெண்ணின் மனதைத் தளர்த்து விடவில்லை. இயேசுவால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்பதை நன்கறிந்திருந்த அவள்(18) ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள். (மத். 15:25) ஆனால் இயேசுவோ மறுபடியும் அவளது வேண்டுகோளை நிராகரித்ததுடன் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல (மத். 15:25-26) மாற்குவின் சுவிஷேசத்தில் இக்கூற்றானது “முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; எனும் வாக்கியத்தையும் உள்ளடக்கியுள்ளது. (மாற். 7:27) உண்மையில் ஒருவனை நாய் எனக் கூறுவது அவனை நிந்தித்து இழிவுபடுத்தி அழைக்கும் முறையாகும். யூதர்கள் புறஜாதியாரை நாய்கள் என்றே அழைத்தனர். (19) இயேசுவும் இனவாத யூதர்களைப் போல தம் இனத்தவர்களை பிள்ளைகளாகவும் புறஜாதியாரை நாய்களாகவும் குறிப்பிட்டுள்ளதாக வேத விமர்சகர்கள் அவர்மீது குற்றம் சாட்டுகின்றனர்(20) எனினும் இயேசு குறிப்பிட்டது “தெருநாய்களை” அல்ல. மாறாக வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளையே. என்பதையே மூலமொழியில் நாம் அவதானிக்கலாம். (21). மூலமொழியில் 7:6 இல் நாயைக் குறிக்க உபயோகிக்கப்பட்ட பதம் இவ்விடத்தில் உபயோகிக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் “நாய்கள்” என்றல்ல “நாய்க்குட்டிகள்” என்றே இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “தெருநாய்களை, வீட்டில்  பிள்ளைகள் சாப்பிடும் இடத்திற்கு அக்காலத்தில் எவரும் கொண்டுவர மாட்டார்கள்.” (22). எனவே அசுத்தமானவையாகக் கருதப்பட்ட தெருநாய்களை வீடுகளில் பிள்ளைகள் சாப்பிடும் மேசையின் கீழ் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. (23) மேலும் இயேசுவின் வார்த்தைகள் கடுமையான முறையில் சொல்லப்படவில்லை. அவர் நாய்களை எனும் பதத்தை உபயோகித்தாலும் இந்த உதாரணத்தின் மூலம் தான் சொல்ல முற்படுவதை அறிவத்துள்ளாரே தவிர அதைக் கடுமையான முறையில் புறஜாதியரை  இழிவுபடுத்தும் முறையில் அவர் கூறவில்லை. (24)

இயேசுவின் கூற்றில் பிள்ளைகள் இஸ்ரவேலரையும் நாய்கள் புறஜாதியாரையுமே குறிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் நாய்கள் எனும் பதத்தால் இயேசு புறஜாதியாரை இழிவுபடுத்திக் கூறவில்லை. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக அக்கால வீடுகளில் சாப்பாட்டு வேளையின்போது காணக்கூடிய ஒரு காட்சியை உதாரணமாகக் காண்பித்துள்ளார். 

தன்னுடைய ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதை பழமொழி போன்ற ஒரு உதாரணத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். தேவனுடைய திட்டத்தின்படி சுவிஷேசம் முதலாவது இஸ்ரவேல் மக்களுக்கே அறிவிக்கப்பட வேண்டியதாயிருந்த்து. (ரோமர். 1:16, 2:9, அப். 3:26, 13:46) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் அவர்களையே தன் பிள்ளைகளாகத் தெரிந்தெடுத்திருந்தார். (யாத். 4:22, உபா. 14:1, 32:6, ஏசா. 1:2, எரே. 31:9, ஓசி. 11:1, ரோமர் 9:5)மேசியாவை பற்றிய வாக்குத்தத்தங்களும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தன. (26) இதனால் அவர்களிடத்தே மெசியா அனுப்பப்பட்டிருந்தார். (யோவான் 1:1, ரோமர் 15:8) இஸ்ரவேல் மக்களுக்கான இயேசுவின் ஊழியம், தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை உறுதிப்படுத்தும் பணியாய் இருந்ததை ரோமர் 15:8 அறியத் தருகின்றது. இதனால் தேவனுடைய ராட்சியத்தின் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதையே இயேசு பிள்ளைகளின் அப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்ப்பட்டுள்ள போதிலும். அதில் புறஜாதியினருக்கு இடமில்லை எனக் கருதலாகாது. இயேசு சுட்டிக்காட்டியதை.அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்ட கானானியப் பெண். அச்சந்தர்ப்பத்திரலேயே புறஜாதிகளும் மேசிய யுகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினாள். இது ”நோவாவின் மூலம் தேவன் சகல மக்களோடும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலான நம்பிக்கை” என்பதே சில தேவ ஆராய்ச்சியாளர்களின் விளக்கமாகும். (27) தேவன் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களுடனான அவரது செயல்பாடுகளை உள்ளடக்கிய தாயிருக்கையில், அவர் நோவாவின் மூலம் செய்து கொண்ட உடன்படிக்கை சகல இனமக்களையும் உள்ளடக்கியுள்ளது. (28). எனினும் இத்தகைய இறையியல் கருத்துக்களை அக்கால கானானியப் பெண் அறிந்திருந்தாள் எனக் கூறமுடியாது. அவள் இயேசுக் கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்தே புறஜாதியான தனக்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். கானானியப் பெண்ணின் இத்தகைய விசுவாசத்தைப் பாராட்டிய இயேசு, அவளது வேண்டுகோளின்படியே அவளது மகளைக் குணப்படுத்தினார். 


குறிப்புகள்
(1) மாற்குவின் சுவிஷேசத்தில் இவர் “சீரோபேனிக்கியா தேசத்தவனாகிய கிரேக்க ஸ்திரி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளாள்(மாற். 7:26) புதிய ஏற்பட்டுக்காலத்தில் “பேனிக்கியா” என்பது சிசிலிய மற்றும் ரோம அரசாட்சியத்தின் மாகாணங்களின் பகுதியாகும். இதில் சிகிரியாவையும் தீரு சீதோன் பட்டணங்களையும் உள்ளடக்கிய பகுதி சீரோபேனிக்கியா என அழைக்கப்பட்டது. காத்தேஜ் எனும் பிரதேசத்தில் வாழ்ந்த பேனிக்கியர்கள் லிபோனிக்கேயர்கள் என அழைக்கப்பட்டனர். (John J. Bimson, Ed, Illustrated Encyclopedia of Bible Places p. 292) மத்தேயுவின் சுவிஷேசத்தில் பேனிக்கியானர்களின் பழைய பெயரான கானானியர் என்பது உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் இவள் கிரேக்கப் பெண் (மாற். 7:26) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்குக் காரணம் அவள் கிரேக்க கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டவளாய் இருந்தமையாகும். 

(2) மாற்குவில் கானானியப் பெண்ணின் மகளில் இருந்த பிசாசைத் துரத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கையில் மத்தேயுவில் இத்தகைய முக்கியத்துவத்தை நாம் அவதானிப்பதில்லை. மாறாக இயேசு யூதர்களுக்கு முதலில் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் எனும் இயேசுவின் கூற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

(3) எனினும் கானானியர்கள் கி.மு 3000 வரை பழமை வாய்ந்த ஜாதியினராக இருந்ததோடு அவர்களது கலாச்சாரம் மிக உயர்வானதாக இருந்தது. உலகிலேயே மிக பழைமை வாயந்த முதலாவது அறியப்பட்டுள்ள)அரிச்சுவடி கானானியருடையதாகவே உள்ளது. (Leon Morris, p 401)

(4) William Barclay ‘The Daily Study Bible : Mathew Vol II p. 121

(5)  யூதமதநூலான மிஷ்னாவில்  Qiddusin 1:3 லும் பாபிலேனியத் தல்மூட் சோட்டா 35லும் இத்தகைய குறிப்புகளை நாம் அவதானிக்கலாம்

(6) F.W. Bearer, The Gospel According to Matthew: A Commentary. P. 432

(7) Donald A . Hagner : World Biblical Commentary: Mathew p. 441

(8) சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு இந்த ஒரு சந்தர்ப்பத்தில் யூத எல்லையைத் தாண்டி புறஜாதி நாட்டக்சகுச் சென்று வந்தார் எனக் கருதுகின்றனர். (William Barclay, The Daily Study Bible: Mathew Vol II p. 120 W.F. Albright & C.S. Mann, The Anchor Bible Commentary: Mathew p. 187, D.A. Carson, The Expositor’s Bible Commentary: Mathew p. 354) எனினும் மூலமொழியில் மத்தேயு 15:22 இவ்வாறு  கூறவில்லை. எனினும் அவர் யோவான் 4ம் அதிகாரத்தில் சமாரியப் பட்டணங்களுக்குச் சென்றதை அவதானிக்கலாம். திருமணத்தில் இணைந்த்தன் மூலம் உருவான கலப்பினத்தவராக இருந்தனர். சமாரியர்கள் அக்காலத்தில் முழுமையான புறஜாதியராக அல்ல மாறாக பாதி இஸ்ரவேலராகக் கருதப்பட்டனர்.   

(9) இயேசு தாவீதின் வம்சத்தில் வந்த யூதர்களுடைய மேசியா என்பதே இதன் அர்த்தமாகும். 

(10) 22ம் வசனத்தில் கூப்பிட்டாள் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “கத்தினாள்” “அழுதாள்” “சத்தமாக ”கதைத்தாள்” எனும் அர்த்தங்களைக் கொண்டது. அவள் தனக்கு உதவி செய்யும்படி கதறியுள்ளாள். 

(11) சீடர்களுக்கு தொந்தரவாயிருக்குமளவிற்கு அவள் மன்றாயுள்ளாள். Donald A. Hangner, Word Biblical Commentary: Mathew p. 441

(12) Ibid p. 441

(13) இயேசுவின் இக்கூற்றில் அவர் அனுப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவானின் சுவிஷேசத்தில் இடம்பெறும் கூற்றுக்களில் அதாவது இயேசுதான் பிதாவினால் அனுப்பபட்டதாக்க கூறும் வாக்கியங்களின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளதாகக் சில இறையியியலாளர்கள் மத்தேயுவில் இடம்பெறும் இக்கூற்றை இயேசுவால் சொல்லப்பட்டதாக ஏற்றுக் கொள்வதில்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வாக்கியம் எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். (Rudolf Bultmann, The History of Synoptic Tradition. Oxford: Blackwell, 1963, p. 155) எனினும் இவ்விளக்கம் யோவானினுள்ள இயேசுவின் கூற்றுக்களையும் அவரால் சொல்லப்பட்டவைகள் அல்ல எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதாயுள்ளது. மேலும் “கிறிஸ்தவ சபையானது பவுலினுடைய ஊழியக் காலத்திற்கும் முன்பே புறஜாதியினருக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையால் இயேசு தான் இஸ்ரவேல் மக்களுக்கு வந்ததைப் பற்றிய இக்கூற்றை சபை உருவாக்கியிருக்க முடியாது. (J. Jeremias Jesus : Jesus Promise to the Nation London: SCM Press, 1962, p. 26-28) எனவே இது இயேசுவினால் சொல்லப்பட்ட கூற்றாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

(14) F.W. Beare, The Gospel According to Mathew : A Commentary. P. 432

(15) Donald A. Hagner, Word Biblical Commentary : Mathew p. 441

(16) மாற்கு இக்கூற்றைக் குறிப்பிடவில்லை. மேசியா இஸ்ரவேல் மக்களிடத்தில் அனுப்பப்பட்டார் என்பதை யூதர்கள் புரிந்து கொண்டாலும் போதியளவு விளக்கம் இன்றி இக்கூற்றை புறஜாதியினரால் கிரகிக்க முடியாதென்பதனால் மாற்கு இதைத் தவிர்த்திருக்கலாம்  

(17) D.A. Carson, The Expositor’s Bible Commentary: Mathew. P. 355

(18) இயேசு கலிலேயா நாடுகளில் செய்த அற்புதங்களை இவள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் தன் மகளைக் குணப்படுத்தும்படி அவள் அவரிடம் மன்றாடினாள். 

(19) William Barclay, Mathew Volume 2. P. 122

(20) F.W. Beare, The Gospel According to Mathew: A Commentary p. 342

(21) William L. Lane. The New International Commentary on the NT: Mark p. 261 E. Schweizer, The Good News According to Mark : Richmond: John Knox Press 1970, p 386

(22) Leon Morris : The Gospel According the Mathew p 404

(23) R.C.H. Lenski, The Interpretation of S. Mathews Gospel p. 598

(24)  William Barclay

(25) Robert H. Mounce, The New International Commentary: Mathew 442

(26) இது பற்றி மேலதிக விபரங்களுக்கு யோவான் 5:39 இற்கான விளக்கத்தைப் பார்க்கவும்

(27) Donald A. Hanger: World Biblical Commentary: Mathew p. 442

(28) W.J. Covenant and Creation p. 11


கட்டுரையாசிரியர் Dr. M.S. வசந்தகுமார்
நன்றி - சத்திய வசனம்



   





  

  

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

1 comment: