- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 23 April 2014

வேதமும் விளக்கமும்- சில தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளில் தேவன் என்ற வார்த்தைக்குப் பதிலாக இறைவன் அல்லது கடவுள் எனும் வாரத்தையை உபயோகித்துள்ளனர் இது சரியானதுதானா?

சில தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளில் தேவன் என்ற வார்த்தைக்குப் பதிலாக இறைவன் அல்லது கடவுள் எனும் வாரத்தையை உபயோகித்துள்ளனர் இது சரியானதுதானா?(எம்.றொபர்ட், கண்டி, இலங்கை)
 
இது சரியானதா தவறானதா என்பதை அறிந்து கொள்வதற்கு நாம் தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை ஓரளவிற்காகவது அறிந்திருக்க வேண்டும். 1714 ஆம் ஆண்டு சீகன்பால்க் என்பவரினால் தமிழ் வேதாகமம் முதல் தடவையாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டபோது, கடவுளுக்கு “சருவேசுரன்” எனும் பதத்தையே அவர் உபயோகித்திருந்தார். இதற்கு காரணம் அக்காலத்தில் இந்தியாவில் பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் “சருவேசுரன்” எனும் பதத்தை உபயோகித்து வந்தமையாகும். அதன்பிறகு 1772 இல் வெளிவந்த பெப்ரீஷீயஸ் என்பார் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்தில் சருவேசுரன் என்பதற்குப் பதிலாக பராபரன் பதம் உபயோகிக்கப்பட்டது.
 
பராபரன் என்பது அக்காலத்தில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவ சமய புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது. இவர் பராபரக் கண்ணிகள் என்ற 389 பாடல்களைப் பாடியவராவார். இப்பாடல்களில் இந்து சமயக் கருத்துக்கள் அதிகம் புகுத்தப்படவில்லை. எனினும், இவை பக்திரசம் மிகுந்த பாடல்களாகும். இப்பாடல்கள் ஒவ்வொன்றும் பராபரமே என முற்றுப் பெற்றன. இப்பதம் இந்து சமய தெய்வமான சிவபெருமானுடன் அதிகமாகச் சேர்த்து உபயோகிக்கப்படாமையால் கடவுளைக் குறிக்க பொதுவான பெயராக இருக்கக் கூடியது என தரங்கம்பாடியிலிருந்த ஏர்னஸ்ட் வோல்டர் எனும் மிஷனரி கண்டு கொண்டார். இதனால்  தரங்கம்பாடியிலிருந்த மிஷனரிகள் கடவுளைக் குறிக்க பராபரன் எனும் பதத்தையே உபயோகித்தனர். மேலும், அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரியான கொன்ன்ஸ்டன்டைன் பெஸ்கி என்பார் சீகன்பால்கின் வேதாகமமொழிபெயர்ப்பு தரம் குறைவானது என ஏளனம் செய்தமையால் தங்களை ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் உபயோகித்த “சருவேசுரன்” எனும் பதத்தை விடுத்து, பராபரன் எனும் பதத்தை உபயோகித்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. 
 
பெ்ரீஷின் மொழிபெயர்ப்பை ரேனியஸ் என்பார் திருத்தி வெளியிட்டபோது (1827 இல் சுவிசேஷ புத்தகங்களும், அப்போஸ்தலர் நடபடிகளும் 1833 இல் புதிய ஏற்பாடு முழுவதும்) அவர் பராபரன் எனும் பதத்தையே பொதுவாக உபயோகித்திருந்த போதிலும், சில இடங்களில் தேவன் எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். எனினும் 1846 இல் யாழ்ப்பாணத்தில் சைவசமயப் புவலர் ஆறுமுகநாவலரது உதவியோடு பேர்சிவெல் என்பார் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்திலேயே, பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பில் பராபரன் எனும் பதம் இடம் பெற்ற இடங்களிலெல்லாம் தேவன் எனும் பதம் உபயோகிக்கப்பட்டது. இவ் யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சென்னை வேதாகமச் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதமையால், ஹென்றி பவர் என்பாரது தலைமையில் மறுபடியுமாக ஒரு புதிய தமிழ்மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டது. இக்குழுவினர் 1863 இல் புதிய ஏற்பாட்டையும் 1868 இல் பழைய ஏற்பாட்டையும் வெளியிட்டனர். பின்னர் யாழ்ப்பாணத்து மிஷனரிகளின் ஆலோசனையின்படி அம்மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டது. இதனால், அதிலும் தேவன் எனும் பதம் உபயோகிக்கப்படலாயிற்று தேவன் எனும்  பதம் அக்காலத்தில் இந்து சமயத்தில் உள்ள 33கோடி தேவர்களையும் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில் அத்தேவர்களில் ஏதாவது ஒரு தேவனைக் குறிக்கும்.எனினும் இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்கு தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவில்லைமுழு முதற் கடவுளுக்கு் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று இன்று கருதப்படுகின்றது. ஆறுமுகநாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. 
 
இதனால் தேவன் என கிறிஸ்தவர்களது கடவுளை அழைப்பது சரியல்ல என்று கருதப்பட்டு இன்று சிலமொழிபெயர்ப்புகளில் இறைவன் அல்லது கடவுள் எனும் பதங்கள் உபயோகிக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவன் எனும் பதத்தினை மாற்றக் கூடாது எனும் கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். (தமிழ் வேதகமத்தின் மொழிபெயர்ப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆசிரியரின் “புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு” எனும் நூலினைப் பார்க்கவும்) 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment