- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 9 April 2014

வேதமும் விளக்கமும்-பிரசங்கி 1:9-11, 3:15 வசனங்களின் விளக்கம் என்ன?

பிரசங்கி 1:9-113:15 வசனங்களின் விளக்கம் என்ன? (ஆர். கோயில்பிள்ளை, ஆழ்வார்தோப்பு, இந்தியா)
 
சூரியனுக்கு கீழ் எல்லாம் மாயையானது எனக் கூறும் பிரசங்கி முதலாம் அதிகாரம் 1 முதல் 11 வசனங்களில் இவ்வுலகத்தை அவதானித்துப் பார்த்து எல்லாம் மாயையானது என்று கூறுகின்றார். 4 முதல் 7 வரை உலகம்மாற்றமடையாமல் ஒரேவிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்றார். 8 முதல்  10 வரையிலான வசனங்களில் இவ்வுலகம் மனதுக்கு திருப்திதராததொன்றாய் இருப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். மனித மனம் புதியவைகளை நாடுகிறது. ஆனால் உலகில் புதியவைகள் நாடும் மனிதமனம் திருப்தியடையாமல் இருக்கின்றது. இதையே 9ஆம் 10 வசனங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது” என்கிறார். 
 
உண்மையில் பிரசங்கி முதல் அதிகாரத்தின் 11 வசனங்களிலும் தான் வாழும் உலகில் புதியவை ஒன்றுமில்லை என்றே கூறுகின்றார். ஏற்கனவே இருந்தவைகளே இப்போதும் இருக்கின்றன. அவையே இனிமேலும் இருக்கும் இதனால் புதியவைகளை நாடும் மனம் திருப்தியடையாதுள்ளது என்பதே இவ்வசனங்களில் பிரசங்கி அறியத்தரும் உண்மையாகும். 4ம் வசனம் முதல் 7ம் வசம் வரை எதுவும் மாற்றமடையவில்லை என்று கூறிய பிரசங்கி 8 முதல் 10 வரையிலான வசனங்களில் இதனால் மனித மனம் திருப்பதியடையாமல் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். 4ம் வசனத்தில் மனிதர்கள் வந்து போய்க் கொண்டிருந்தும் உலகம் அப்டியே இருப்பதையும் 5ம் வசனத்தில் சூரியன் உதிப்பது அஸ்தமிப்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் செயலாக இருப்பதையும் 6ம் வசனத்தில் காற்று ஒரு சுற்று வட்டத்தில் வீசிக் கொண்டிருப்பதையும் 7ம் வசனத்தில் நீரின் சுற்றுவட்டத்தையும் குறிப்பிடும் பிரங்கி, உலகில் இவை எப்போதும் போலத் தொடர்ந்தும் ஒரே மாதிரியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் உலகம் மாற்றமடையாமல் இருக்கின்றது என்று கூறுகின்றார். இதனால், புதியவைகளை நாடும் மனித மனம் திருப்தியடையாமல் இருக்கின்றது என்று 8ம் வவனத்தில் கூறும் பிரசங்கி 9ம் 10ம் வசனங்களில் மாற்றமடையாதிருக்கும் உலகில் நூதனமானது அதாவது முன்பில்லாத புதியதொன்றும் இல்லை என்று கூறுகின்றார். இவ்விடயமே பிரசங்கி 3:15 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பிரசங்கி முதலாம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் சூரியனுக்குக் கீழே வாழ்வு மாயையாயிருப்பதற்கான இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைய மக்கள் கடந்த காலத்தை மறந்து விடுவது போல, வருங்கால சந்ததியினர் இப்போதிருப்பவைகளை மறந்து விடுவர் என்று பிரசங்கி கூறுகின்றார். இவ்வசனத்தில் ஞாபகம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் ஞாபகத்தில் வைத்திருந்து அதற்கேற்றபடி செயல்படுவதாகும். உண்மையில் கடந்தகால ஏற்பட்ட பிழைகளையும் தவறுகளையும் நாம் தவிர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் கடந்த காலத்தைப் பற்றிய அறிவு நிகழ்காலநிலைக்கான காரணத்தையும் அறியத் தரும். ஆனால் உலகம் கடந்த காலத்தை ஞாபகத்தில் வைத்திராதமையால், அதிலிருந்து எவ்வித பாடத்தையும் கற்க முடியாதுள்ளது. இதனால் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருப்பதாக பிரங்கி கூறுகின்றார். 
 
 
பிரசங்கி 1:9-11 
9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

11. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
 
பிரசங்கி  3:15 
முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். 
 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment